கருணாநிதியின் அரசியல் சாதுர்யமும், முதிர்ச்சியும், சமயோசிதமும், இந்தியாவில் உள்ள எந்த அரசியல்வாதிக்கும் வராது என்பதை அவர் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள்.
“மதுரை மாவட்டத்திற்குள் டாக்டர் ராமதாஸ் அவர்களை நுழையக் கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, நேற்றைய தினம் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த மாவட்டத்திற்குள் அவரை நுழையக் கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளார். டாக்டர் ராமதாஸ் கொஞ்சம் வரம்பு கடந்து பேசக் கூடியவர் என்பது உண்மையென்றாலும், அதற்காக ஒரு மாவட்டத்திற்குள்ளேயே நுழையக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பிப்பது என்பது கண்டிக்கத்தக்கது. அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக மாவட்ட ஆட்சியர்கள் அப்படிப்பட்ட உத்தரவினைப் பிறப்பித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான் ! இதைப் பார்க்கும்போது சுதந்திரம் பெற்ற இந்தியாவிலே இருக்கிறோமா – இந்திய அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பேணப்படுகின்றனவா என்பதே ஐயப்பாடாக உள்ளது. இந்த ஆட்சியில் தான் எதற்கெடுத்தாலும் “அவதூறு வழக்கு” “குண்டர் சட்டம்” என்று பிடிக்காதவர்கள் மீதெல்லாம் வழக்கு தொடுத்து வருகிறார்கள். அதுவும் போதாதென்று இப்படியொரு நடவடிக்கை எடுப்பது சரியா என்று ஜனநாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒருவேளை வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டு, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக இப்படியொரு நடவடிக்கையா என்பதும் புரியவில்லை! எனினும் ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரத்திற்கெதிராக மாவட்ட ஆட்சியர்களே சட்டத்தை கையிலே எடுத்துக் கொண்டு குறிப்பாக சில கட்சிகளின் தலைவர்களை மாவட்டத்திற்குள்ளே நுழையக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிப்பது முறையல்ல. இந்த ஜனநாயக விரோதச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.”
இதுதான் கருணாநிதியின் அறிக்கை. இந்த அறிக்கை இன்று வெளியானதும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகின. திமுகவும், பாமகவும் கூட்டணி சேரப்போகிறது என்று ஒரு கருத்து. இல்லை, ராமதாஸுக்கு ஏற்பட்டதுபோல, தனக்கும் தடை விதித்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வு காரணமாக கருணாநிதி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று ஒரு கருத்து. எது எப்படியிருந்தாலும், கருணாநிதியின் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்னவோ உண்மை.
“டாக்டர் ராமதாஸ் கொஞ்சம் வரம்பு கடந்து பேசக் கூடியவர் என்பது உண்மையென்றாலும், அதற்காக ஒரு மாவட்டத்திற்குள்ளேயே நுழையக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பிப்பது என்பது. கண்டிக்கத்தக்கது.” என்ற வாசகத்தில் உள்ள எள்ளலைப் பாருங்கள். ராமதாஸுக்கு வாய் அதிகம் என்பதை எவ்வளவு சாதுர்யமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு அரசியல் தலைவர், பேசுகையில் கவனமாகப் பேச வேண்டும் என்பது அடிப்படையான விதி. தேவையற்ற முறையில் பேசினால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். அப்படிப் பேசிய காரணத்தினாலேயே தலித்துகளை தீண்டத்தகாதவர்களாக சித்தரித்த ராமதாஸ் இன்று தானே ஒரு தீண்டத்தகாதவராக மாறிப்போயுள்ளார். இது போல சாதிக் கலவரத்தையும், வன்முறையையும் தூண்டி விடும் பேச்சுக்களை கருணாநிதி ஒருபோதும் அனுமதிப்பவரும் அல்ல…. ஆதரிப்பவரும் அல்ல. அப்படிப்பட்ட கருணாநிதி வெளிப்படையாக சாதிக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிவரும் ராமதாஸை ஆதரிக்கிறார் என்றால் அதற்கு பல உள் அர்த்தங்கள் உள்ளது. சவுக்கில் பல முறை சொன்னது போல, கருணாநிதி தும்மினால் கூட அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அப்படிப்பட்ட, அரசியல் சாதுர்யம் மிக்க கருணாநிதி, பச்சையாக சாதிக்கலவரத்தைத் தூண்டும் ஒரு சமூக விரோதியை ஏன் ஆதரிக்க வேண்டும் … ?
திமுக – பாமக கூட்டணி ஏற்படப்போகிறதா… ?
ராமதாஸ் அழித்து ஒழிக்கப்படவேண்டிய தீய சக்தி என்பதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் எப்போதோ உணர்ந்து விட்டார்கள். இதன் காரணமாகவே, 2009 பாராளுமன்றத் தேர்தல் முதல், பாட்டாளி மக்கள் கட்சியை இரண்டு கட்சிகளுமே திட்டமிட்டு மண்ணைக் கவ்வ வைத்துள்ளன. 2011 சட்டமன்றத் தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு பழைய அலுமியின பத்து காசு என்பதை உணர்த்தியது. 2014க்குள் தன்னை ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவாக்கிக் காட்டி, எப்படியாவது ஒரு இரண்டு சீட்டாவது பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே ராமதாஸ், மனவளர்ச்சி குன்றியவன் கவிதை வாசிப்பது போல பேசி வருகிறார். இந்த விபரங்கள் நமக்கே தெரியும்போது கருணாநிதிக்குத் தெரியாதா என்ன ? நன்றாகத் தெரியும். மீண்டும் ராமதாஸை கூட்டணிக்கு அழைத்து, அவரை வளர்த்து விட்டு, வேலியில் செல்லும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட கருணாநிதி அப்படி ஒரு முட்டாளா என்ன ? ஆறு பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க, வரும் பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களுக்கே பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ள வேண்டும் என்பதே, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் விருப்பமாக இருக்க முடியும். ஆகையால், கருணாநிதியின் இந்த அறிக்கை கூட்டணிக்காக என்ற கூற்று சரியல்ல.
தன்னையும் இது போல மாவட்ட ஆட்சியர்கள் தடை செய்து விடுவார்கள், அதனால் அதை இப்போதே தடுக்க வேண்டும் என்ற அச்சமா ?
திமுகவின் அமைப்பு பலம் என்பது வேறு, பாமகவின் அமைப்பு பலம் என்பது வேறு. மாவீரன் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் அட்டக்கத்தி காடுவெட்டி குருவை, கைது செய்தால், வட தமிழகம் கொந்தளிக்கும், கொதித்துப் போகும் என்றெல்லாம் இல்லாத பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தனர் பாமகவினர். குருவை திமுக அரசு கைது செய்தபோது, அங்கங்கே பேருந்துகளின் மீது கல்வீச்சு சம்பவங்களைத் தவிர்த்து, ஒன்றும் நடக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் குரு மீதான தேசியப் பாதுகாப்புத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நீதிமன்றம் செவிசாய்க்காததோடு மட்டுமல்ல… அவ்வாறு கைது செய்தது சரியே என்று தீர்ப்பளித்தது. இப்போது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸை கைது செய்தால், இதே போல ஓரிரண்டு கல்லெறி சம்பவங்களைத் தவிர்த்து, ஒன்றும் நடக்காது. அவர் மகன் அன்புமணி கூட, பெருசு ஒழிஞ்சுச்சு என்று நிம்மதியாக குறும்பாட்டுக் கறிக் கொழம்பு தின்று விட்டு ஓய்வெடுப்பார்.
ஆனால் திமுக அப்படியல்ல… கருணாநிதி உள்ளே நுழையக்கூடாது என்ற தடை விதித்தால், திமுகவின் தொண்டரணியும், வழக்கறிஞர் அணியும் கொதித்தெழும். கருணாநிதியே தடையை மீறிக் கைதாவார். கருணாநிதிக்கு தடை விதித்தால் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய வலிமை திமுகவுக்கு உண்டு.
இதைத் தவிர்த்து, கருணாநிதி இப்படிப் பேசுபவர் அல்ல. பி.டி.அரசக்குமார் போன்ற அல்லுசில்லுகளையெல்லாம் அருகில் வைத்துக் கொண்டு, காதல் தவறு, கல்யாணம் தவறு, முதலிரவு தவறு என்று பேசுபவர் அல்ல கருணாநிதி. சாதி ஒழிப்பு பேசும் பல வாய்ச்சொல் வீரர்களைப் போல அல்லாமல் உண்மையாகவே தலித் வீட்டில் பெண் எடுத்தவர். தலித்துகளை இழிவு படுத்தி ஒரு நாளும் பேசக்கூடியவர் அல்ல கருணாநிதி. அவருக்கு தடை விதிக்க வேண்டிய தேவை ஒரு நாளும் ஏற்படாது. அதனால் தனக்குத் தடை விதிப்பார்களோ என்று பயந்து இப்படி ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் என்று சொல்ல முடியாது.
மேலும் அவர் அறிக்கையில் உள்ள அடுத்த பகுதி சுவையானது.
“அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக மாவட்ட ஆட்சியர்கள் அப்படிப்பட்ட உத்தரவினைப் பிறப்பித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான் ! இதைப் பார்க்கும்போது சுதந்திரம் பெற்ற இந்தியாவிலே இருக்கிறோமா – இந்திய அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பேணப்படுகின்றனவா என்பதே ஐயப்பாடாக உள்ளது”
சாதிக் கலவரத்தைத் தூண்டுவதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் உரிமை அளிக்கவில்லை என்பது கருணாநிதிக்கு நன்கு தெரியும். தெரிந்தும் ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ?
அந்த ஒன்பது மாங்காய்கள் என்ன தெரியுமா ?
இந்த அறிக்கையால், ஜெயலலிதா கடும் கோபம் அடைவார். கருணாநிதி எந்த அறிக்கை வெளியிட்டாலும், அதற்கு ஜெயலலிதாவிடமிருந்து Kneejerk ரியாக்ஷன் வரும் என்பது கருணாநிதிக்கு தெரியும். இப்படி ஒரு அறிக்கை நிச்சயமாக ஜெயலலிதாவை கோபப்படுத்தும், இதனால் கோபமடைந்து மேலும் ராமதாஸை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்குவார். ஒரு வேளை நடவடிக்கைகள் குறைந்தால், நான் அறிக்கை விட்டதால்தான், ஜெயலலிதா அரசு, ராமதாஸ் மீதான நடவடிக்கைகளை குறைத்துள்ளது என்று மார்தட்டிக் கொள்ளலாம்.
இரண்டாவது மாங்காய். ஜெயலலிதாவோடு பாராளுமன்றத் தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ராமதாஸுக்கு இந்த அறிக்கை ஒரு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாகவே எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் ஜெயலலிதா கருணாநிதியின் இந்த அறிக்கையை கடுமையான சந்தேகத்தோடு பார்ப்பார் என்பதில் சந்தேகமில்லை. கருணாநிதி இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறார் என்றால், ராமதாஸ் கருணாநிதியோடு ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாரோ என்ற சந்தேகம் ஜெயலலிதாவின் மனதில் ஆழமாக விதைக்கப்படும்.
மூன்றாவது மாங்காய். பாட்டாளி மக்கள் கட்சியோடு தேவை ஏற்பட்டால் கூட்டணி அமைக்கலாம் என்று தனது கடையைப் பரப்பி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த அறிக்கை ஒரு மறைமுக எச்சரிக்கை. தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணியை நான்தான் தீர்மானிப்பேன். எனக்குத் தெரியாமல் ராமதாஸோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினால், அது நான் மனது வைத்தால்தான் நடக்கும் என்ற எச்சரிக்கையை இந்த அறிக்கை காங்கிரஸுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
நான்காவது மாங்காய். சமீபத்தில் தருமபுரியில் ஏற்பட்ட சாதிக்கலவரத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர்களுமே காரணம் என்ற நிலைப்பாட்டை திமுக ஏறக்குறைய எடுத்து விட்டது. விடுதலைச் சிறுத்தைகளும், திமுக கூட்டணியில் இருப்பது, திமுகவின் இந்த நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக, சாதி இந்துக்களுக்கு திமுக மீது பெரிய அளவில் வெறுப்பு ஏற்படவில்லை என்றாலும் ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் முழுமையாக தலித்துகளின் பக்கம் சாய்ந்து விடவில்லை ராமதாஸின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளேன் என்பது இந்த அறிக்கை வெளியிடும் மற்றொரு கருத்து.
ஐந்தாவது மாங்காய்.
அரசின் அனுமதியின்றி அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பார்களா என்று எழுப்பியுள்ள கேள்வி, அதிகாரிகள் அத்தனை பேரும், ஜெயலலிதாவின் அடிமைகளாக செயல்படுகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லும் குறிப்பு. 144 தடை உத்தரவு என்பது, ஒரு மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக எடுக்க வேண்டிய முடிவு. அப்படிப்பட்ட ஒரு முடிவை, அரசியல் காரணத்துக்காக ஜெயலலிதா எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களை எடுக்க உத்தரவிடுகிறார் என்பதையும் இந்த அறிக்கை உணர்த்துகிறது.
ஆறாவது மாங்காய்
தருமபுரி சாதிக்கலவரத்துக்கும் திமுகவுக்கும், கருணாநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அந்தக் கலவரம் முழுக்க முழுக்க, ராமதாஸ் வகையறாக்களால் தூண்டி விடப்பட்டது என்பதும் உண்மை. ஆனால், சம்பந்தமே இல்லாமல் கருணாநிதியை வம்புக்கிழுத்தார். இப்படி வம்புக்கிழுத்த காரணத்தாலேயே கருணாநிதி திமுக தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நேரில் விசாரணை நடத்தி, கலவரத்துக்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியே என்று அறிக்கை வெளியிட்டார். இப்படி தேவையில்லாமல் தன்னை வம்புக்கிழுத்த ராமதாஸை பழி வாங்கியது ஆறாவது மாங்காய்.
ஏழாவது மாங்காய்
கருணாநிதியே நம்மை ஆதரிக்கிறாரே… அதனால், பேசாமல் திமுக பக்கம் சாய்ந்து விடலாமா என்று ராமதாஸுக்கு சபலம் ஏற்படாமல் இருக்காது. கருணாநிதி மீது என்னதான் கோபம் இருந்தாலும், 2014 பாராளுமன்றத் தேர்தலில் எங்கே தனியாக, அனாதையாக விட்டு விடுவார்களோ என்ற அச்சம் ராமதாஸுக்கு உண்டு. கடைசி நேரத்தில் திமுகவோடு சேர்ந்து கொள்ளலாமா என்ற சபலத்தில், ஜெயலலிதாவை ராமதாஸ் ஒரு வேளை பகைத்துக் கொண்டாரேயானால், கடைசி நேரத்தில் அவரைக் கழற்றி விட்டு, நடுத்தெருவில் விடக் கருணாநிதி தயாராக இருக்கிறார். இப்படி ஒரு சபலத்தை ராமதாஸுக்கு ஏற்படுத்தியது ஏழாவது மாங்காய்.
எட்டாவது மாங்காய்
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக இப்படி ஒரு நடவடிக்கையில் ஜெயலலிதா ஈடுபடுகிறாரா என்று கருணாநிதி தனது அறிக்கையில் எழுப்பியுள்ள சந்தேகம், சாதாரண பொதுமக்கள் மத்தியிலும், வன்னியர்கள் மத்தியிலும், ஜெயலலிதாவின் நடவடிக்கைகளில் சந்தேகத்தை ஏற்படுத்தும். ஜெயலலிதா அரசியல் கணக்குக் காரணமாகவே இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறாரோ என்று பொதுமக்கள் மனதில் சலசலப்பை உருவாக்கியது எட்டாவது மாங்காய்.
ஒன்பதாவது மாங்காய்.
மாவட்ட ஆட்சியர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு என்ற வார்தைப் பிரயோகம், அரசு அதிகாரிகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கை. ஒரு மாவட்ட ஆட்சியருக்கு 144 தடைச் சட்டம் பிறப்பிக்க எல்லா உரிமைகளும் உண்டு. அது தவறாக இருந்தால் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் சட்டத்தைக் கையில் எடுக்காமல், வேறு யார் எடுப்பார்கள் ? மவாட்ட ஆட்சியர் என்பவர் மாவட்டத்தின் நீதிபதி. அவருக்கு இல்லாத அதிகாரம் வேறு எந்த அதிகாரிக்கு உள்ளது ? அப்படி இருக்கையில் கருணாநிதி இப்படிக் குறிப்பிட்டுள்ளார் என்றால், இது அதிகாரிகளுக்கு மறைமுகமாக விடப்பட்டுள்ள மிரட்டலே. நான் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன்…. உங்கள் அதிகாரத்தை ராமதாஸோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்ற மறைமுக எச்சரிக்கையே ஒன்பதாவது மாங்காய்.
கருணாநிதியைப் பற்றி, தினமணி நாளேட்டில் அஜாதத்ரு என்பவர் 2010ல் எழுதிய கட்டுரையின் பகுதிகளை எடுத்தாளுவது, மிகப் பொருத்தமாக இருக்கும்.
“மாஸ்டர் ஸ்டேரோக்
அரசியல் ராஜதந்திரத்துக்கு இலக்கணம் படைத்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் இருவர். ஒருவர் மாக்கியவல்லி. மற்றொருவர் சாணக்கியர். இந்த இருவரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாக கோபாலபுரத்தில் தவமிருந்து முதல்வர் கருணாநிதியிடம் அரசியல் பாடம் கற்றுக் கொள்ள விழைந்திருந்தால்கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
கடந்த சில ஆண்டுகளில் இந்திய அரசியலில் மிகவும் சாதுர்யமாகக் கையாளப்பட்ட ராஜதந்திர நகர்வு எது என்று கேட்டால், பாட்டாளி மக்கள் கட்சியை மையப்படுத்தி திமுக எடுத்திருக்கும் முடிவு என்றுதான் சரித்திரம் பதிவு செய்யும்.
சமீபத்தில் நடந்து முடிந்த பென்னாகரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில்கூட, திமுகதான் என் முதல் எதிரி என்றும் அதைப் பூண்டோடு அழிப்பதுதான் என் தலையாய வேலையென்றும் வீரமுழக்கம் செய்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கூற்றை, சற்றும் அலட்டிக் கொள்ளாமல் அவர்மீதே திருப்பி இருக்கும் முதல்வரின் அரசியல் சாதுர்யம் உண்மையிலேயே பிரமிக்க வைத்திருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறுவதும், தேர்தல் முடிந்து விரலில் உள்ள அடையாளம் அழியும் முன் திமுகவுக்கு எதிராகக் குரலெழுப்புவதும் சகஜமாகிவிட்டது. இதைப் பலரும் பாமகவின் அதிகப்பிரசங்கித்தனம் என்றும் சுயநல அரசியல் என்றும் விமர்சிப்பதுண்டு. உண்மையில், பாமகவின் அரசியல் அடித்தளத்தைப் பாதுகாக்க டாக்டர் ராமதாஸ் கையாளும் யுக்திதான் அது என்பது பலருக்கும் தெரியாது.
வயது பலருக்கும் பலவீனத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தும். முதல்வர் கருணாநிதியைப் பொறுத்தவரை, நேர் விபரீதம்.
முன்எப்பொழுதையும்விட புத்திக்கூர்மையும், ராஜதந்திரமும் அவரிடம் காணப்படுகிறது என்பதை, பாமக பற்றிய திமுகவின் முடிவு தெளிவுபடுத்துகிறது. பாமகவுக்குக் கருணாநிதி வைத்திருப்பது வெறும் “செக் அண்ட் மேட்’ அல்ல. அவரது அரசியல் நகர்வுகளின் “மாஸ்டர் ஸ்ட்ரோக்’!
ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து வீழ்த்தி இருப்பது மட்டுமல்ல, திமுகவைப் பலவீனப்படுத்தி வந்த சக்தியை, பலவீனமான இடத்தில் பக்குவமாகத் தாக்கித் திகைப்பில் ஆழ்த்தி விட்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. “பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு’ என்கிற குறளுக்கு இனி யாரும் விளக்கம் தேடி அலைய வேண்டியதில்லை. ஒரே வார்த்தையில் “கருணாநிதி’ என்று கூறி முடித்துவிடலாம்.”
கருணாநிதியைப் பற்றி இப்போது தினமணி இப்போது எழுதுமா என்பது எழுதுமோ என்பது சந்தேகமே… இருப்பினும், தினமணி 2010ல் கருணாநிதியைப் பற்றி எழுதியது முழுக்க முழுக்க பொருந்தும்.
இவ்வளவு அரசியல் முதிர்ச்சியும், சாதுர்யமும், அறிவு கூர்மையும் இருந்தும், குடும்பம் என்ற ஒரே விஷயம் அவரின் அத்தனை திறமைகளையும், மழுங்கடிக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம்.