1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் தி மாஸ்க். பிரபலமாக காமிக்ஸ் கதையாக வெளிவந்து கொண்டிருந்த தி மாஸ்க் என்ற கேரக்டரை, திரைப்படமாக எடுத்தார் சக் ரஸ்ஸல் என்ற இயக்குநர். ஹாலிவுட் நட்சத்திரம் ஜிம் கேர்ரி இந்தப் படத்தில் மாஸ்க் கேரக்டரை ஏற்று நடித்திருப்பார்.
படத்தின் கதை என்னவென்றால், ஒரு வங்கியில் க்ளெர்க்காக இருக்கும் ஜிம் கேர்ரிக்கு, அவர் வங்கிக்கு வாடிக்கையாளராக வரும் கேமரூன் டயஸை காதலிக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு பணம் வேண்டும். சாதாரண க்ளெர்க்காக இருக்கும் தன்னை கேமரூன் டயஸ் காதலிப்பாரா என்று ஏக்கத்தோடு ஜிம் கேர்ரி இருக்கும் வேளையில் அவருக்கு ஒரு முகமூடி கிடைக்கும். அந்த முகமூடியை முகத்தில் வைத்ததும், அவருக்கு நினைத்ததையெல்லாம் செய்யும் சக்தி கிடைக்கும். அந்த சக்தியை வைத்து, அவர் வில்லனை பந்தாடுவார், தன் காதலியைக் கைபிடிப்பார். வில்லனின் வங்கிக் கொள்ளையைத் தடுப்பார். அந்த முகமூடியை கைப்பற்ற வில்லன் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் முறியடிப்பார். ஜிம் கேர்ரி மிகவும் அற்புதமாக நடித்திருந்த இந்தப்படம் 1994ம் ஆண்டு வெளியானது. கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் அவ்வளவாக வளர்ச்சியடையாத அந்த நாளில், மிகச் சிறப்பாக கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ்களால் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.
கடந்த புதன் அன்று (23.01.2013) லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் ஏராளமான ஊழல் நடைபெற்றுள்ளதாக வந்தத் தகவலை அடுத்து, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சைதை துரைசாமி என்பவர், மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி என்ற ஒரு பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தப் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வரும் முன்னாள் எம்.எல்.ஏவான சைதை துரைசாமி தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் மற்றும் அப்போது தலைவராக இருந்த காசி விஸ்வநாதன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, தனது மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமிக்காக முறைகேடுகளில் ஈடுபட்டார்.
16.12.2007 அன்று க்ரூப் 1 பதவிக்கான பூர்வாங்கத் தேர்வு நடைபெற்றது. இந்தப் பூர்வாங்கத் தேர்வையடுத்து, 16 மற்றும் 17.08.2008 ஆகிய நாட்களில் மெயின் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மெயின் தேர்வின் கேள்வித்தாள் வடிவத்தை (pattern) பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக வைத்திருந்தது. அது என்ன வடிவம் என்றால், 12 முதல் 15 கேள்விகள் விரிவான பதில் எழுதும் வகையில் கேட்கப்படும். அந்தக் கேள்விகளுக்கு 5 முதல் 15 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும். இந்தக் கேள்வித்தாள் வடிவத்தை 2008 மெயின் தேர்வில், தேர்வாணையம், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென்று மாற்றியது.
16 மற்றும் 17.08.2008 ஆகிய நாட்களில் தேர்வெழுதிய மாணவர்கள், முதல் கேள்வித்தாளில் 99 கேள்விகளும், இரண்டாவது கேள்வித்தாளில் 104 கேள்விகளும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தக் கேள்விக்கான மதிப்பெண்கள் 1 மதிப்பெண் முதல் 15 மதிப்பெண் வரை பிரிக்கப்பட்டிருந்தன. திடீரென்று ஏற்பட்ட இந்தக் கேள்வித்தாள் மாற்றம் காரணமாக, அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பலர் தேர்ச்சியடையவில்லை.
ஆனால் சைதை துரைசாமி என்பவர் நடத்தும் மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி நடத்தும் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள், இந்த வினாத்தாள் வடிவ மாற்றத்தால் எந்த அதிர்சியும் அடையாமல் சிறப்பாக தேர்வெழுதியுள்ளனர். இவர்கள் அதிர்ச்சியடையாமல் சிறப்பாக தேர்வெழுதியதற்கான காரணம், மாற்றப்பட்ட புதிய வினாத்தாள் வடிவமைப்பில், மனிதநேயம் பயிற்சி மையத்தில் மட்டும் 5 முறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த ஆண்டு நடந்த க்ரூப் 1 தேர்வில், மொத்தம் உள்ள 128 இடங்களில், மனிதநேய பயிற்சி மையத்தின் மாணவர்கள் 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் தேர்ச்சியடைந்துள்ளது, ஒரு பெரிய ஊழலுக்கான தன்மையைக் கொண்டுள்ளது.
விசாரணையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் முன்னளாள் தலைவர் காசி விஸ்வனாதன் சைதை துரைசாமி நடத்தும் பயிற்சி மையத்துக்கு மட்டும், கேள்வித்தாள் மாற்றப்பட்ட விபரத்தை முன்னதாகவே தெரிவித்ததால், அந்தப் பயிற்சி மையத்தின் மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு நடத்த முடிந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
ஆகையால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை, சைதை துரைசாமியின் பயிற்சி மையத்தின் முறைகேடுகளையும், காசி விஸ்வநாதனுக்கு அதில் உள்ள பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்தப் புகார், லஞ்ச ஒழிப்புத் துறையின் காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக வழங்கப்பட்டது. ஏற்கனவே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், புதிதாக வழக்கு பதிவு செய்ய, அரசின் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள அதிகாரிகள், இந்தப் புகார் குறித்தும் விசாரணை நடத்துவார்கள் என்று நம்புவோம். இந்த வழக்கு தொடர்பாக, தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளின்போதே, மனிதநேயம் அறக்கட்டளையின் பங்கு குறித்து சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் அந்த ஆதாரங்களின் மீது நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்று லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுக்காமல் இருந்தது என்று தகவல்கள் கூறுகின்றன. தற்போது இந்தப் புகாருக்குப் பிறகாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம். அப்படி எடுக்கவில்லையென்றால், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பது, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு தெரியும்.
இந்தப் புகார் குறித்து பத்திரிக்கைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இது குறித்து எந்தச் செய்தியையும் வெளியிடமாட்டார்கள் என்ற விபரம் சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.
பத்திரிக்கைகளுக்கு இந்த விபரம் தெரியப்படுத்தப்பட்டதுமே, சைதை துரைசாமிக்கும் இந்த விபரம் தெரிந்தது. தெரிந்ததும் அவருக்கு வந்ததே கோபம்…. கொலைவெறியாகி விட்டார்….. “இந்தப் பொறம்போக்குப் பய சும்மாவே இருக்கமாட்டான் போலருக்கே… இவனை ஒரு வழி பண்ணாத்தான் அடங்குவான்…. நான் யாருன்னு இவனுக்கு காட்றேன்…. ஒவ்வொரு வருஷமும் 60 கோடி ரூபாய்க்கு மேல என் சொந்தப்பணத்தை செலவு பண்ணி இவ்வளவு உதவிகள் பண்ணிக்கிட்டு இருக்கேன்…. எவ்வளவு திமிரு இருந்தா என் மேலயே கம்ப்ளெயின்ட் கொடுப்பான்” என்று ஏகவசனத்தில் 15 நிமிடங்களுக்கு திட்டியுள்ளார்.
திட்டியதோடு நிற்காமல், தப்பித்தவறி ஏதாவது ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டு விடப்போகிறார்கள் என்பதால் ஊடக முதலாளிகளிடம் பேசியிருக்கிறார்.
தி மாஸ்க் படத்தில் ஜிம் கேர்ரிக்கு கிடைத்த முகமூடி போன்றதுதான் சைதை துரைசாமியின் புரவலர் வேடம். ஜிம் கேர்ரிக்கு முகமூடி போட்டதும் கிடைக்கும் அசாத்திய சக்தியைப் போல, முகமூடி போட்டதும் சைதை துரைசாமி கல்வித்தந்தை, மாநகரத் தந்தை, அதிகாரிகளின் தந்தை, கொடை வள்ளல் கர்ணனின் தந்தை போன்ற பல்வேறு அவதாரங்களை எடுக்கிறார். முகமூடியைக் கழற்றினால் என்ன ஆகும் என்பதுதான், புகார் குறித்து தகவல் தெரிந்ததும் சைதை நடந்து கொண்ட முறை. முகமூடியை கழற்றியதும் சைதை துரைசாமியின் அசல் முகம் வெளி வந்து விடுகிறது. அசல் முகம் என்பது என்ன ? அசல் முகம் என்பது, கரூரிலிருந்து சென்னைக்கு காகிதம் பொறுக்கியாக வந்திறங்கி, புறம்போக்கு நிலங்களை வளைத்து, ஆக்ரமித்து, முன்னாள் அதிமுக பிரமுகர் ஜேப்பியாரின் அடியாளாக இருந்ததுதான இவரது அசல் முகம். புறம்போக்கு நிலங்களை வளைத்த பழக்கத்தில்தான், புகார் கொடுத்தவரை புறம்போக்கு என்று திட்டியிருக்கிறார்.
அந்த வகையில், சைதை துரைசாமியின் முகமூடியை கழற்றிய பெருமை நம்மையே சாரும். சவுக்கு தளம், சைதை துரைசாமியை குறி வைத்து தொடங்கப்பட்டதல்ல. சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் ஊழல்களையும் அம்பலப்படுத்துகையில், சைதை துரைசாமியைப் பற்றிய விபரங்களும் தெரிய வந்ததால், நீண்ட விசாரணைக்குப் பிறகு, துரைசாமி குறித்த ஊழல்கள் குறித்தும் எழுதப்பட்டது.
அந்தக் கட்டுரை துரைசாமி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே… அதை விடுத்து, நோட்டீஸ் அனுப்புவது, மிரட்டுவது, புறம்போக்கு என்று திட்டுவது என்று சைதை இறங்குவாரேயானால், அதைச் சந்திக்க இந்தத் தளம் தயாராகவே இருக்கிறது. சிகப்பு விளக்கு வைத்த காரில், மாநகரத்தந்தையாக வலம் மனிதரின் முகமூடிக்குப் பின்னால் இப்படி ஒரு காகிதம் பொறுக்கி இருக்கிறார் என்பதை நாம்தான் அம்பலப்படுத்தியுள்ளோம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.
சைதை துரைசாமியைப் பற்றி விசாரித்தால், அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பத்து தொடர் கட்டுரைகள் எழுதும் அளவுக்கு தகவல்கள் வந்துள்ளன. அந்தத் தகவல்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. விசாரித்து உண்மையறிந்தவுடன், துரைசாமி தனது முகமூடியை நிரந்தரமாக கழற்றும் அளவுக்கு கட்டுரைகள் வெளியிடப்படும். தயாராக இருங்கள் சைதை துரைசாமி.