சினிமாவுக்குப் போன சித்தாளு. இது ஜெயகாந்தனின் மிகப் பிரபலமான நாவல். சினிமா எப்படி உழைப்பாளி மக்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பதையும், கதாநாயக வழிபாட்டின் தீமைகளையும் மிக அழகாக உணர்த்தியிருப்பார்.
இந்தப் பதிவுக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்ததற்கான காரணம், இன்று சினிமா பார்க்கச் சென்று, பலர் சித்தாளாக மாறியதுதான்.
அந்த சினிமா வேறு எதுவும் அல்ல. ராகுல் காந்திதான். ஆனால், சினிமா பார்க்க போன சித்தாள்களின் பட்டியல் தான் ஆச்சர்யத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
சவுக்கு மிகுந்த மரியாதையையும், அன்பையும் வைத்திருக்கும் பத்திரிக்கையாளர், டி.என்.கோபாலன், ஞானி, இந்தப் பூமியை நம் அனைவரையும் விட அதிகமாக நேசிக்கும் நித்யானந்த் ஜெயராமன் கவிஞர் மற்றும் பத்திரிக்கையாளர் கவிதா, நல்ல மொழிபெயர்ப்பாளர் முரளிதரன் போன்றவர்கள் சித்தாள்கள் பட்டியலில் இருப்பதுதான்.
சவுக்குக்கு அதிக கோபம் வருவதற்கான காரணம், இவ்வாறு மிகவும் மதிக்கும் இந்த நபர்கள், ஒரு அரைவேக்காடு அரசியல்வாதியை சந்திக்க மணிக்கணக்கில் காத்துக் கிடந்ததுதான்.
ராகுல் காந்தி என்ற நபர் யார் ?
ராஜீவ் சோனியா தம்பதியினருக்கு பிள்ளையாகப் பிறந்ததை விட ராகுல் என்ன சாதனையை புரிந்து விட்டார். இன்று சித்தாளாக போனவர்களுள் முக்கிய சிலர், வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களையும் தாண்டி, நேர்மை ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வருபவர்கள். எப்படியாவது இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று தவிப்பவர்கள்.
ஆனால் ராகுல் காந்தி என்ன செய்து விட்டார். ராகுல் காந்தியின் பெரிய கொள்ளுத் தாத்தா மோதிலால் காங்கிரஸ் கட்சியின் தலைவர். தாத்தா இந்தியாவின் பிரதமர். பாட்டி இந்தியாவின் பிரதமர். அப்பா இந்தியாவின் பிரதமர். அம்மா, காங்கிரஸ் கட்சியின் தலைவர்.
வறுமை என்னவென்றோ, சாதிய ஒடுக்குமுறை என்னவென்றோ, பசி என்றால் என்னவென்றோ, ராகுல் அறிவாரா ?
ஏதாவது முக்கிய விஷயத்தைப் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறாரா ராகுல் ?
தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, க்யூ பிரிவு காவல்துறையும், கருணாநிதி அரசின் இதர ஏவல் படைகளும், ஈழத் தமிழர்களைப் பற்றியோ, விடுதலைப் புலிகளைப் பற்றியோ பேசினால், வளைத்து வளைத்து வழக்கு போடும் காலம் அது. அப்போது, தங்களை தமிழ் இன உணர்வாளர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சில கவிஞர்களை கூட்டத்தில் பேசுவதற்கு அழைத்தால், “தோழர், ஈராக்கில் இசுலாமியர்கள் அமேரிக்காவால் கொடுமை படுத்தப் படுவது பற்றி ஒரு கூட்டம் போடுங்களேன்“ என்று அறிவுரை கூறுவார்கள். ஏனென்றால் அமெரிக்காவை திட்டினால் ஒரு பயல் கேள்வி கேட்க மாட்டான் அல்லவா ? காங்கிரசையும் கருணாநிதியையும் திட்டினால் காவல்துறை வருமே ?
அதே போலத்தான் ராகுல். இந்தியாவில் நடக்கும் ஊழலைப் பற்றி பேசுய்யா என்றால், பொதுவாக ஊழல் மிகவும் கெட்டது என்பார். வேதாந்தா நிறுவனம் மலைவாழ் மக்கள் வாழ்வை அழித்து, இயற்கை வளங்களை சூறையாடுவதைப் பற்றி பேசுங்கள் என்றால், வெறுமனே இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பார்.
காவல்துறை ஒடுக்குமுறையால் மலைவாழ் மக்கள் பாதிக்கப் படுவதைப் பற்றி பேசுங்கள் என்றால், காங்கிரஸ் ஆளாத மாநிலங்களில் நக்சலைட் தீவிரவாதம் அதிகமாக இருக்கிறது என்பார்.
ஊழலைப் பற்றிப் பேசும் ராகுல், போபர்ஸ் ஊழலில் சம்பந்தப் பட்ட, அவர்கள் குடும்ப உறுப்பினர் கொத்ரோக்கியின் வங்கிக் கணக்குகள், அவர் தாயால், தந்திரமாக விடுவிக்கப் பட்டதைப் பற்றிப் பேசுவாரா ?
இந்து தீவிரவாதத்தை பற்றி பேசும் ராகுல், அவர் பாட்டி இறந்த காரணத்தை வைத்து 3000 சீக்கியர்களை கொன்றழித்த அயோக்கிர்களை கட்சியை விட்டு நீக்குவாரா ?
ராகுலுக்கு ஆதரவாக பேசும் சிலர், அவர் இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும் என்கிறார்கள். ஏழு கழுதை வயது என்று பொதுவாக அழைக்கப் படும், நாற்பது வயதை அடைந்து விட்டார் ராகுல். தனது 40வது வயதை அவரின் மனதுக்கு நெருக்கமான ஸ்பெயின் நாட்டில் சென்று கழித்து விட்டு வந்தார்.
இவர் வயதில் இவர் கொள்ளுத் தாத்தா பல ஆண்டுகளை சிறையில் கழித்திருந்தார். 34 வயதில் காங்கிரஸ் தலைவரானார். வெளிநாட்டில் படித்ததையும், இந்தியாவை அரசு பாதுகாப்போடு சுற்றிப் பார்த்ததையும் தவிர என்ன செய்து விட்டார் ராகுல் ?
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும், காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ராகுல், ஒன்றரை லட்சம் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் ? தமிழர்களை கொன்று குவிக்க, அவரது தாயார், இலங்கை அரசோடு ரகசிய உறவு கொண்டு ஆயுதங்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் ராகுல் ?
ஒட்டு மொத்த தமிழகமே கதறியதே…. “போரை நிறுத்து. போரை நிறுத்து“ என்ற குரல் தமிழகமெங்கும் ஒலித்ததே…. இன்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரசை வளர்க்கத் துடிக்கும் ராகுல் என்ன செய்து கொண்டிருந்தார் ?
ஆக ராகுலுக்கு பிரதமர் பதவி மட்டும் வேண்டும். எவன் செத்தாலும், எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் கவலையில்லை என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும் ?
சர்ச்சைக்குரிய எந்தப் பிரச்சினையிலும் நான் நுழைய மாட்டேன். கருத்துக் கூற மாட்டேன். ஆனால் என்னை பிரதமர் ஆக்குங்கள் என்று அலையும் ஒரு அரை வேக்காட்டு அரசியல்வாதிதான் ராகுல்.
நாளையே ராகுல் பிரதமரானால், “தியாகத் திருவிளக்குக்குப் பிறந்த குலவிளக்கு“ என்று புகழ்ந்து விட்டு, சிங்கள கடற்படையால் தாக்கப் படும் மீனவர்களை காப்பாற்றுமாறு கருணாநிதி வேண்டுமானால் ராகுலுக்கு உருக்கமாக கடிதம் எழுதலாம்.
ஆனால், இன்று ராகுலை பார்க்கச் சென்றவர்கள் …… …… ……
ராகுலை பார்க்க அழைக்கப் பட்ட அறிவு ஜீவிகளில் ஆடி வெள்ளி என்ற உலக சினிமா எடுத்த ராமநாராயணன் மட்டுமே பொருத்தமான நபர் என்று சவுக்கு பார்க்கிறது. அந்த படத்தை ரசித்துப் பார்க்கும் அளவு மட்டும் பக்குவம் படைத்த ராகுலும் அவரைச் சந்திக்க தகுதியானவரே….
மற்றவர்கள் சினிமாவுக்குப் போன சித்தாள்கள்தான்.