சவுக்கு இன்று பத்து லட்சம் ஹிட்டுகளை தொட்டிருக்கிறது.
சவுக்கு என்ற ஒன்று எதற்காக உருவானது ? ஆறு மாதங்களுக்கு முன்பு நிலவிய தமிழகத்தின் ஊடகச் சூழலே சவுக்கு உருவாகக் காரணம்.
சவுக்குக்கு, இது போல ஒரு வலைத் தளத்தை துவக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆர்வமெல்லாம் இல்லை. ஊழல் தொடர்பான செய்திகளையும் மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகளையும் வெளிக் கொணர வேண்டும் என்பது மட்டுமே சவுக்கின் விருப்பம்.
ஆனால், இதற்காக ஆதாரங்களோடு, செய்தி வெளியிடுங்கள் என்று கோரி, ஊடகங்களை சவுக்கு அணுகிய போது, அதிமுக ஊடகங்களைத் தவிர, அனைத்து ஊடகங்களுமே, கருணாநிதியின் கோரப்பிடியில் இருந்ததை உணர முடிந்தது.
இப்போது வெளி வந்திருக்கும் வீட்டு வசதி வாரிய விருப்புரிமை ஒதுக்கீடு தொடர்பான ஆதாரங்கள் சவுக்கு வசம் இருந்த காலம் 2008 ஜுன் மாதம்.
ட்ராலி பாய்ஸ் என்று அன்போடு அழைக்கப் படும், கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப் பட்டதையும், அவர்கள் அந்த வீட்டு மனையை விற்று விட்டதையும் மக்கள் தொலைக்காட்சி வெளியிட்டது மே 2008ல்.
சென்னை முகப்பேர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் சவுக்கு சென்று, விருப்புரிமை ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு பெற்றவர்களின் விபரங்களையும், ஆவணங்களையும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கிய காலம் அக்டோபர் 2008.
ஆனால், ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கழித்தே, இப்போது இந்த வீட்டு வசதி வாரிய ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுதான் மூன்று ஆண்டுகளாக தமிழக ஊடகம் இருந்து வந்த நிலை.
இந்தச் சூழலில் ஆதாரங்களோடு, ஊழல்களை அம்பலப் படுத்த வேறு வழியே இல்லாமல் தொடங்கப் பட்டதுதான் சவுக்கு.
தொடக்கத்தில் சவுக்குக்கு அவ்வளவாக ஆதரவு இல்லாமல் இருந்தாலும், ஆதாரத்தோடு ஊழல்களை தொடர்ந்து அம்பலப் படுத்த, படுத்த, வாசகர்களின் ஆதரவு பெருகியது. சவுக்குக்கு தொடர்ந்து தகவல்களும் வர ஆரம்பித்தன.
ஓரளவுக்கு சுமாரான ஆதரவுடன் நடத்தப் பட்டுக் கொண்டிருந்த சவுக்கு பிரபலமானது அருமை நண்பர் ஜாபர் சேட்டால் தான். முதன் முதலில், அவர் மனைவி பெயரில் வீட்டு மனை ஒதுக்கீடு பெற்று, அந்த மனையை லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷ்ன்ஸ் என்ற நிறுவனத்தோடு வியாபாரம் செய்து, பல கோடி ரூபாய் லாபம் பார்த்த விவகாரத்தை, சவுக்கு வெளியிட்ட போது, கடும் கோபம் அடைந்த ஜாபர், உடனடியாக சவுக்கை ஒரு பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
அது வரை சவுக்கு வெளிப்படையாக செயல்பட்டது கிடையாது. தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளவும் முயன்றது கிடையாது. ஆனால், அந்தக் கைது, சவுக்கை பல்லாயிரம் வாசகர்களை சென்றடைய உதவியது. சவுக்குக்கு ஆதரவும் கண்டனங்களும் பெருகின.
சவுக்கை ஒரு சக்தியாக பாவித்து, சவுக்கோடு பேரம் பேசவும், ஒத்து வராததால் மிரட்டவும் முயன்றன சில சக்திகள். சிறைக்கு அனுப்பியும் சவுக்கு அடங்காததைக் கண்டு, மீண்டும் சவுக்கை பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கி சவுக்கை எப்படியாவது முடக்க வேண்டும் என்று ஜாபர் சேட் முயன்றார். அவரோடு சேர்ந்து பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்த பத்திரிக்கையாளர் காமராஜும் இயங்கினார். ஆனால் அவர்கள் போடும் திட்டங்களை உடனுக்குடன் சவுக்கு அம்பலப் படுத்தியதில், ஜாபர் சேட் ஆடிப்போனார் என்பதுதான் உண்மை.
அடுத்து கமிஷனர் கண்ணாயிரம், சவுக்கை எப்படியாவது சைபர் க்ரைம் வழக்கில் கைது செய்து தளத்தை முடக்க வேண்டும் என்று முயன்றார். ஆனால், அதற்கு சட்டம் இடம் தராதது மட்டுமல்ல, ஒரு சில நேர்மையான அதிகாரிகள், பொய் வழக்கு போடுவதற்கு கண்ணாயிரத்திற்கு ஒத்துழைப்பு தர மறுத்தனர் என்பதுதான் உண்மை.
சவுக்கை எது நடத்துகிறது ? எது இந்த உத்வேகத்தை தருகிறது ? தந்தை இறந்து சவுக்கு அரசுப் பணியில் சேரும் போது சவுக்குக்கு வயது 16. சவுக்கு ஏறக்குறைய லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே வளர்ந்தது எனலாம்.
சி.எல்.ராமகிருஷ்ணன், ஆர்.கே.ராகவன் போன்ற பல நேர்மையான அதிகாரிகளைப் பார்த்து, சவுக்கு உத்வேகப் படுத்தி வளர்ந்திருக்கிறது.
2001க்குப் பிறகு, அதே லஞ்ச ஒழிப்புத் துறையில், ராதாகிருஷ்ணன் போன்ற அயோக்கியத்தனமான ஊழல் பேர்விழிகளையும் சவுக்கு பார்த்திருக்கிறது. நாஞ்சில் குமரன், திலகவதி, கே.நடராஜன் போன்ற மோசமான அதிகாரிகளையும் சவுக்கு பார்த்திருக்கிறது.
ஒரு உயர் போலீஸ் அதிகாரியோடு சவுக்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது, அந்த போலீஸ் அதிகாரியை கருணாநிதியே நேரில் அழைத்து, அப்போது உயிரோடு இருந்த தா.கிருஷ்ணன், மு.க.ஸ்டாலின், போன்ற பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஒரு வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மிரட்டினார். கருணாநிதி சொன்ன அதே வார்த்தை “யோவ்…. போலீஸ்ல பொய்க் கேஸ் போட்டதேயில்லையாய்யா ? மரியாதையா போய் சார்ஜ் ஷீட் போடு“. இன்று கருணாநிதியிடம் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு எத்தனை அதிகாரிகள் காத்துக் கிடக்கிறார்கள் பாருங்கள். ஆனால் அந்த அதிகாரி சொன்னதைச் செய்யாவிட்டால் பணி இடை நீக்கம் செய்யப் படுவார் என்ற சூழல் உருவானது. அந்த அதிகாரி என்ன சொன்னார் தெரியுமா ?
இந்த வேலைக்கு வருவதற்கு முன், நான் இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு வரப்பில் வேலை செய்தவன். இந்த வேலை இல்லையென்றால் நான் செத்து விடுவேனா என்ன ? மீண்டும் அரிவாளை எடுத்துக் கொண்டு வயல் வேலைக்குப் போகிறேன். இந்த மிரட்டலுக்காக நான் பயந்து கொண்டு என் மனசாட்சிக்கு விரோதமாக வேலை செய்ய முடியாது. என்ன கழுத்தையா சீவி விடுவார்கள். பார்த்து விடுவோம் என்றார். கடைசி வரை அந்த அதிகாரி மிரட்டலுக்குப் பணியவேயில்லை. இன்றும், அதே நேர்மையோடுதான் இருக்கிறார் அந்த அதிகாரி.
அந்த அதிகாரியைப் பார்த்து உருவகப் படுத்திக் கொண்டு வளர்ந்ததுதான் சவுக்கு. சவுக்கு இந்த மிரட்டலுக்கு அஞ்சுமா என்ன ?
இப்படிப் பட்ட உத்வேகத்தோடு தான், சவுக்கு முதலில் ப்ளாகாக தொடங்கப் பட்டு தளமாக மாறி இன்று பத்து லட்சம் ஹிட்டுகளைத் தொட்டிருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சவுக்கின் ஆசை என்ன தெரியுமா ? இந்த ஆண்டு டிசம்பர் 31க்குள், ஒரு லட்சம் ஹிட்டுகளை தொட்டு விட வேண்டும். தினமும் காலை தளத்தைப் பார்த்து எத்தனை ஹிட்டுகள் என்று பார்ப்பதில் அத்தனை ஆர்வம்.
ஆனால் இன்று பத்து லட்சம் ஹிட்டுகளை தொட்டிருப்பது உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
மகிழ்ச்சி அளிக்கும் அதே நேரம், பொறுப்பு மிக மிக கூடியிருக்கிறது. மிகவும் கவனமாக எழுத வேண்டும். உண்மையை விட்டு எக்காரணம் கொண்டும் வழுவக் கூடாது. இன்னும் நன்றாக எழுத வேண்டும். எத்தனை சிரமங்கள் வந்தாலும், சிறப்பான செய்திகளை முதலில் வாசகர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற உத்வேகம் தோன்றுகிறது. இந்தத் தளத்தை நடத்துவதில் எந்த விதமான பொருளாதார லாபமும் கிடையாது என்பது சவுக்கு வாசகர்களுக்கு நன்கு தெரியும்.
ஆனாலும், சவுக்கு இன்று ஆயிரக்கணக்கான வாசகர்களின் நம்பிக்கையை பெற்ற ஊடகமாக மாறியிருப்பதால், மேலும், மேலும் உழைத்து பல்வேறு செய்திகளை வாசகர்களுக்குத் தர வேண்டும் என்ற உத்வேகம் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது.
பல்வேறு வாசகர்கள் எழுப்பும் ஒரு சந்தேகம், சவுக்கு அதிமுக ஆதரவாளரா என்பது. சவுக்கு அரசுப் பணியில் சேர்ந்த ஆண்டு 1991 என்பதால், அப்போதைய அரசியல் சூழல் நன்கு நினைவில் இருக்கிறது.
1991 முதல் 1996 வரை நடந்த அதிமுக ஆட்சியைப் போன்ற அராஜக ஆட்சியைப் பார்க்கவே முடியாது. வாயைத் திறந்தால், தடா சட்டம். சட்டம் வரவில்லையெனில் ஆட்டோவில் ரவுடிகள் வருவார்கள். தலைமை தேர்தல் ஆணையரையே ரவுடிகளை விட்டு அடித்த ஆட்சி அது. ஊழல் என்றால் ஊழல், அப்படி ஒரு ஊழல்.
மக்கள் அதற்கான தண்டனையாக அதிமுக ஆட்சியை தூக்கி எறிந்தார்கள். மீண்டும் திமுக ஆட்சி வந்த போது நம்பிக்கை பிறந்தது. ஓரளவுக்கு ஆட்சியும் பெரிய அளவில் குறைகள் சொல்ல முடியாத அளவுக்குத் தான் இருந்தது. ஜெயலலிதா மீது பல்வேறு வழக்குகள் பதியப் பட்டன. ஆனால் அவ்வாறு பதியப் பட்ட வழக்குகளில் சிக்கியவர்கள், பலரை, கருணாநிதி திமுக பக்கம் வருவதற்காக மிரட்டுவதற்காக பயன்படுத்தினார் என்ற தகவல் அறிந்த போது, அதிர்ச்சி ஏற்பட்டது. திமுகவின் அதிகார மையத்தில் இருந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மீதான ஊழல் வழக்குகள், சத்தம் போடாமல் ஊத்தி மூடப்பட்டன.
மீண்டும் அதிமுக ஆட்சி 2001ல் வந்ததும் அராஜகம் என்றால் அராஜகம். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அப்படி ஒரு அராஜகம். இந்த காலத்தில் புதிதாக கிடைத்த ஆயுதம் போட்டா. இந்த போட்டா சட்டத்தினால் தெருவில் போவோர் வருவோரெல்லாம் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்கில் சிறை வைக்கப் பட்டனர். அரசு ஊழியர்கள் சொல்லொன்னாத் துன்பத்திற்கு ஆளாக்கப் பட்டது மட்டுமல்லாமல், ஒன்றரை லட்சம் பேர் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். இவையெல்லாம் சகித்துக் கொள்ளக் கூடியதா என்ன ? சரி அந்த அராஜக ஆட்சியும் முடிவுக்கு வந்தது. 2006ல் மீண்டும் வந்த திமுக ஆட்சி எப்படி இருக்கிறது ? முதல் நாளில் இருந்தே பாருங்கள். 1991 முதல் 1996 வரை இருந்த அதிமுக ஆட்சியை விட பத்து மடங்கு அராஜகங்கள் நடைபெறவில்லை ? ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்தார் என்று கூறப்பட்ட சொத்து மதிப்பு 66 கோடி. இன்று சிஐடி காலனிக்குச் சொந்தமான வோல்டாஸ் கட்டிடம் மட்டுமே 300 கோடியைத் தொடுமே… ? சவுக்கு ஆதாரங்களை திரட்டிக் கொண்டிருக்கும் சிஐடி காலனி குடும்பத்தின் சொத்துக்கள் மட்டும் 1000 கோடியைத் தாண்டும்.
இத்தனை கோடிகளும் யார் பணம் ? மக்கள் பணம் தானே… ? இந்த ஆட்சியை அனுமதிக்கலாமா ? இதைச் சுட்டிக் காட்டினால், உடனே அதிமுக காரன் என்ற முத்திரையை குத்தலாமா ? கருணாநிதியை குறை கூறினால் அதிமுக காரன். ஜெயலலிதாவை குறை கூறினால் திமுக காரன் என்ற பார்வையே, இரண்டு திராவிடக் கட்சிகளைச் சேராதவன் எவனுமே இருக்க முடியாது என்பதுதானே… ?
சவுக்கின் இந்த வளர்ச்சிக்குக் முழுமுதல் காரணம், ஏசியும், பாராட்டியும் தொடர்ந்து ஆதரவு தரும் அன்பு வாசகர்கள் தான். அவர்களுக்குத் தான் முதல் நன்றி.
சிறையிலிருந்து 2008ம் ஆண்டு வெளியில் வந்து, 18 ஆண்டுகளாய் பழகிய அலுவலக நண்பர்கள் பேச அஞ்சி ஓடிய நேரத்தில் சவுக்கை அள்ளி அரவணைத்த வழக்கறிஞர் தோழர்களுக்கு, சவுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்கள். சண்முகம் நடத்திய ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, பத்திரிக்கையாளர் நண்பர்கள் சவுக்குக்கு அளித்த ஆதரவு இருக்கிறதே…. அப்பப்பா வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அத்துனை அன்பு. அத்துனை ஆதரவு. அவர்கள் சவுக்கின் உறவுகள் என்பதால் அவர்களுக்கு நன்றி கூற முடியாது.
சவுக்கை இரவு முழுவதும் லாக்கப்பில் வைத்து நிர்வாணப் படுத்தி, லத்தியாலும், பூட்ஸ் காலாலும் அடித்து வடபழனி சிக்னர் அருகே, ஜீப்பில் இருந்து இறக்கி விட்டு, என்கவுண்டரில் சுட்டு விடுவேன் என்றும், லாக்கப்பின் வெளியே துப்பாக்கி வைத்திருந்த காவலரிடம் “இவன் லாக்கப்ப விட்டு வெளில வந்தா சுடு“ என்று மிரட்டி சவுக்கின் தைரியத்தை மேலும் அதிகப் படுத்திய சிபிசிஐடி டிஎஸ்பி பாலு, இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், வேல்முருகன் ஆகியோருக்கும் சவுக்கின் நன்றிகள்.
சவுக்கு கைது செய்யப் பட்ட போது, ஆதரவு நல்கிய இணைய உறவுகளுக்கு சவுக்கின் நன்றிகள் என்றென்றும் உரியன.
சவுக்குக்கு கிடைக்கும் அத்தனை வெற்றிகளும் சவுக்கின் தாய்க்கே உரியன.
என் அன்பு உறவுகள் அனைவருக்கும், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நன்றிகளை தருவது, இந்த நேரத்தில் பொருத்தம் தானே…. ?
சவுக்கு நேர்மை விரும்பும் தேவ தூதன்.