ஓர் இரவு… அறிஞர் அண்ணா எழுதிய நாடகம். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமையக கட்டிடத்தின் பெயர் என்பிகேஆர்ஆர் மாளிகை. இதன் விரிவாக்கம் என்னவென்பது பலருக்குத் தெரியாது. என்பிகேஆர்ஆர் என்பதன் விரிவாக்கம், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி. அந்த கே.ஆர்.ராமசாமிக்காக அறிஞர் அண்ணா எழுதிய இந்த நாடகம், பின்னாளில் ஏவிஎம் நிறுவனத்தால் படமாக்கப்பட்டது. ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் ஆரம்பத்தில் இளைஞராகவும், பின் வயோதிகராகவும் வரும் வேடத்தில் டி.கே.சண்முகம் நடித்தார். அவருக்கு ஜோடி பி.எஸ்.சரோஜா. இளம் ஜோடியாக ஏ.நாகேஸ்வரராவ் _ லலிதா நடித்தனர். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை வைத்து இந்நாடகத்தை எழுதினார் அண்ணா.
பல திருப்பங்களைக் கொண்டிருந்த அந்த நாடகத்தைப் போலத்தான் கமல்ஹாசனுக்கு கடந்த செவ்வாய் இரவு, ஓர் இரவாக அமைந்தது. சென்னை உயர்நீதிமன்றம் மாலை 6.30 மணிக்கு நடத்தி முடித்த விசாரணையின் இடைக்காலத் தீர்ப்பு இரவு 10.10க்கு வழங்கப்பட்டது.
விஸ்வரூபம். தமிழகமெங்கும் ஒரு வாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த விஸ்வரூபம், இன்று தேசிய செய்தி ஊடகங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக இஸ்லாமியர்கள் பிறப்பித்திருக்கும் இந்த நெருக்கடி நிலை குறித்தும், தமிழக அரசின் அடாவடிப் போக்கு குறித்தும், தேசிய அளவில் விவாதிக்கப்படுவது, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுப்பதோடு, தமிழக முஸ்லீம்களின் மரித்துப் போன சகிப்புத்தன்மையும் விவாதிக்கப்படும்.
நீதிமன்றத்தில் விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு, கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் நடைபெற்ற சுவராசியமான சம்பவங்களை சவுக்கு வாசகர்கள் அறிந்துகொண்டே ஆக வேண்டும்.
வியாழனன்று விசாரணை தொடங்கியதும், அரசுத் தலைமை வழக்கறிஞர் வண்டு முருகன் தன் வாதத்தை தொடங்கினார். வண்டு முருகன் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அரசியல் ரீதியாக ஒப்பிடுகையில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரும் சம வாய்ப்பு உள்ளவர்கள் என்றே சொல்ல வேண்டும். ”தீவார்” என்பது அமிதாப் பச்சன் நடித்த இந்திப் படம். அந்தப் படத்தில் மிகப் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. மேரே பாஸ், காடி ஹை, பங்களா ஹை, பைசா ஹை……. தும்ஹாரே பாஸ் க்யா ஹை என்று கேட்பார். மேரே பாஸ் மா ஹை என்பார் ரிஷி கபூர். இதன் பொருள் என்னவென்றால் என்னிடம் கார் உள்ளது, பங்களா உள்ளது, பணம் உள்ளது.. உன்னிடம் என்ன உள்ளது ? என்பதற்கு சஷி கபூர், என்னிடம் அம்மா இருக்கிறாள் என்று பதில் சொல்லுவார். இந்த வசனம், மிக மிக பிரபலமான வசனம்.
அந்த வசனத்தைப் போல, கருணாநிதியும் ஜெயலலிதாவும் பேசினால், ஜெயலலிதா இறுதியாக என்னிடம் வண்டு முருகன் உள்ளார் என்று கூறுவார். வண்டு முருகனைப் போன்ற அசாத்திய திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் ஜெயலலிதா அரசின் தலைமை வழக்கறிஞர்களாக இருப்பது, ஜெயராமும், சந்தியாதேவியும் செய்த பூர்வஜென்ம புண்ணியம். அப்பப்பப்பப்பா என்ன திறமை.. என்ன திறமை…
வழக்கின் விசாரணை தொடங்கியதும் தன் வாதத்தை தொடங்கினார் வண்டு.
நீதிபதி: விஸ்வரூபம் திரைப்படம் குறித்து ஏதாவது புகார்கள் வந்துள்ளனவா ?
வண்டு முருகன்: ஆம் உள்துறைச் செயலாரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி: அந்தப் புகாரில் இந்தத் திரைப்படத்தால் வன்முறை ஏதாவது ஏற்படும் என்று குறிப்பாக ஏதாவது உள்ளதா?.
வண்டு முருகன்: இதோ!! [ இணை ஆணையரின் அறிக்கை அளிக்கப்பட்டது ].
நீதிபதி: இது காவல்துறையின் அறிக்கை. எனக்கு குறிப்பாக ஏதாவது புகார்கள் உள்ளவா என்று தெரிய வேண்டும்.
வண்டு முருகன்: உயிரிழப்பையும், சொத்துக்களுக்கான சேதத்தையும் தடுப்பதற்காகவே இந்தத் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
நீதிபதி: உயிர்ச்சேதம் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களா.??
வண்டு முருகன்: ஆமாம் எதிர்ப்பார்க்கிறோம்.
நீதிபதி:எப்படி உயிர்ச்சேதம் ஏற்படும் என்று உறுதியாகக் கூறுகிறீர்கள்??.
வண்டு முருகன்:படத்தின் ரிலீஸ் தேதி மிலாடி நபி அன்று உள்ளது. அன்று வெளியிட்டால் பாதிப்பு ஏற்படும்.
நீதிபதி: இது நான் கேட்ட கேள்விக்கு பதில் அல்ல.
வண்டு முருகன்: “23 இஸ்லாமிய அமைப்புகள் மனு கொடுத்துள்ளன. இது சாதாரண பிரச்சினை இல்லை. பெரிய பிரச்சினை. இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.”
நீதிபதி: இதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா?
வண்டு முருகன்: சென்னை மாநகர ஆணையரைத் தவிர்த்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், தனித்தனியே ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
(என்று சென்னை மாநகர ஆணையரின் அறிக்கையை அளித்தார்.)
நீதிபதி: இது ஆணையரின் அறிக்கை. மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை எங்கே??
வண்டு முருகன்: அதை பின்னர் வரவழைத்துத் தருகிறேன். டேம் 999 என்ற திரைப்படத்துக்கு இதே போலத்தான் தடை விதித்தது. அதை எதிர்த்து தயாரிப்பாளர் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால் உச்சநீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்து விட்டது.இந்த 144 தடைச்சட்டம் பொது அமைதியை காப்பதற்காகவும், உயிர் சேதத்தை தடுப்பதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளையாமல் தடுப்பதற்காகவுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி: இந்த தடை உத்தரவு நீக்கப்பட்டால் அடிப்படைவாதிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்று கூறுகிறீர்களா?.
வ.மு: ஆமாம்.
நீதிபதி: இப்படி வாதிடாதீர்கள். உங்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். எனக்கு அவர்கள் மீது நம்பிக்கை உண்டு. சட்டத்தில் நம்பிக்கை இருப்பதால்தான், அவர்கள் மனு அளித்துள்ளார்கள். அவர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். இப்படிச் சொல்லாதீர்கள். இது தமிழகத்தில் நடக்காது.
சரி என்ற வண்டு, தன் வாதத்தை தொடர்ந்தார்.
வ.மு: 144 தடை உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வர முடியும். இவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.. அதனால் வர முடியாது. இந்த மனுவை விசாரணைக்கே ஏற்றுக் கொள்ள முடியாது.
நீதிபதி: ராஜ்கமல் பிக்சர்ஸ் என்ற இந்த மனுதாரர்கள், நீங்கள் பிறப்பித்த தடை உத்தரவால் பாதிக்கப்படவில்லை என்கிறீர்களா?.
வ.மு: பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும்.
நீதிபதி: நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. 144 தடை உத்தரவால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்களா?
வ.மு:இந்த மனு விசாரணைக்கு உகந்ததே அல்ல.
நீதிபதி:நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வது சற்று சிரமம்தான். ஆனால், நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால், உங்களிடம் பதில் சொல்ல வில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறாதீர்கள். மனுதாரர்கள் எப்படி பாதிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்கள்??.
இந்தக் காட்சியை விளக்க கவுண்டமணியின் இந்த வீடியோவை பார்த்து விட்டு கட்டுரையைப் படியுங்கள்.
வண்டு முருகன்:இந்தப் படம் வெளியாக வேண்டும் என்று தீர்மானித்த நாள் வேறு. டிடிஎச் பிரச்சினையால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அப்போது ஏற்படாத பாதிப்பு தற்போது தடை செய்ததால் எப்படி ஏற்படும்?
வண்டு முருகனின் வாதத்திறமையைப் பார்த்து, வாசகர்களுக்கு ஆனந்தம் மற்றும் பெருமையில் கண்ணீர் வரும். துடைத்துக் கொண்டு மேலே படியுங்கள். இன்னும் பல ஐட்டங்கள் இருக்கின்றன.
வண்டு முருகன்:மை லார்ட்.. தமிழகத்தில் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. போலீஸ் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள். இந்தப் படம் குறித்து எஸ்எம்எஸ்கள் அனுப்பப்படுகின்றன. மனுதாரர், தடையுத்தரவின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வக்கீல் வண்டு முருகன்
நீதிபதி: இந்த மனுவில் அவர்கள் என்ன கேட்டுள்ளார்கள் என்று பாருங்கள். அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான தொழில் செய்யும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்கள். இதற்கு தடை உத்தரவின் நகலை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்றார்.
வண்டு: அவர்கள் தடை உத்தரவைத்தான் இந்த மனுவில் ரத்து செய்ய கேட்டிருக்க வேண்டும். இந்த மனுவே ஏற்கத்தக்கதல்ல. ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் தனித்தனியே உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். அதனால் அது குறித்துத்தான் தனியே மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
கமல்ஹாசன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்றம் பிரகாஷ் ஜா என்ற வழக்கில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி, ஒரு திரைப்படத்தை தடை செய்யக் கூடாது என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழகத்தில் அத்தனை மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான தனித்தனியான முடிவை, தலைமையிடத்திலிருந்து உத்தரவு வராமல் எப்படி எடுக்க முடியும் ? சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று சொல்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சமாளிப்பது ஒரு அரசின் கடமை இல்லையா ? இப்படத்திற்காக 500 திரையரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. திரையிடப்படவில்லை என்றால்தான் குழப்பம் ஏற்படும். இந்த மனு தாக்கல் செய்யப்படும் வரை, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என்ற விபரமே எங்களுக்குத் தெரியாது. மனு விசாணையின்போதுதான் அரசு வழக்கறிஞர் இப்படிக் கூறுகிறார். அந்த உத்தரவுகளை நாங்கள் தனித்தனியே ஒரு மனு மூலமாக ரத்து செய்யக் கோருகிறோம் என்றார். சட்டம் ஒழுங்கைக் கூட பேண முடியாத நிலையில் அரசு உள்ளது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.
உடனே வந்ததே கோபம் வண்டு முருகனுக்கு…. அரசைக் குறை சொல்லாதீர்கள்… அரசைக் குறை சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கத்தினார்.
நீதிபதி… “மிஸ்டர் அட்வகேட் ஜென்ரல்.. எதற்காக குரலை உயர்த்துகிறீர்கள்.??. அவர் என்ன கூறினாரோ அதற்கு குரலை உயர்த்தாமலேயே பதில் சொல்லலாமே” என்றார்.
“சாரி மை லார்ட்” என்று அமர்ந்தார் வண்டு.
மீண்டும் தொடர்ந்த பி.எஸ்.ராமன், தொலைக்காட்சி செய்திகளில், விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இரண்டு வாரங்களுக்கு தமிழக அரசு தடை என்று செய்தி வந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தனித்தனியே உத்தரவு பிறப்பித்தனர் என்கிறார்கள். ஒவ்வொரு தியேட்டர் உரிமையாளருக்கும் தனித்தனியே எப்படி இவ்வுத்தரவின் நகலை வழங்கியிருப்பார்கள் என்றார்.
இதன் பிறகு, இவ்வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சனிக்கிழமை, நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர்கள் திரைப்படத்தைப் பார்த்தனர். மீண்டும் திங்கட்கிழமைக்குப் பதிலாக செவ்வாயன்று இவ்வவழக்கு தொடங்கியது.
அன்று கமல் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதத்தை தொடங்கினார். 31 மாவட்ட ஆட்சியர்கள் சட்டம் ஒழுங்கை நிர்ணயிப்பதில் பிரச்சினை இருக்கிறது என்று சொல்வார்களேயானால், ஏதோ பெரிய சிக்கல் இருக்கிறது என்று தானே அர்த்தம் ? ஒரு திரைப்படம் காரணமாக சட்டம் ஒழுங்கைக் கூட இந்த அரசால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியவில்லையா ? திரைப்படத் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கிய பிறகு, ஒரு திரைப்படத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. திரைப்படச் சட்டம் என்ற மத்திய அரசின் சட்டம் (Cinematograph Act) திரைப்படம் தொடர்பான உரிமைகளை மாநிலங்களுக்கு வழங்கவில்லை. அது பாராளுமன்றம் இயற்றிய சட்டம். நேரடியாக செய்ய முடியாத ஒரு விஷயத்தை மறைமுகமாகச் செய்வதே இந்த 144 தடைச் சட்டம். இப்படி மறைமுகமாக ஒரு அதிகாரத்தின் மூலம், திரைப்படத்தை தடை செய்வதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. இத்திரைப்படம் இந்திய முஸ்லீமைப் பற்றிப் பேசவில்லை. இத்திரைப்படத்தில் உள்ள ஒரே முஸ்லீம், கதாநாயகன் மட்டுமே.. அவன் நல்லவன். ஆரக்ஷன் என்ற இந்தித் திரைப்படம் குறித்து இதே போல உத்தரப்பிரதேச அரசு தடை உத்தரவு பிறப்பித்த போது, அதில் தலையிட்ட உச்ச நீதிமன்றம் அது போல தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆரக்ஷன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று அளித்த குழுவில் கூட கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று அளித்த குழுவில், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.
கமல் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்
அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காகவும் வழங்கப்பட்ட 144 தடைச் சட்டத்தில் உள்ள அதிகாரத்தை ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய மாவட்ட ஆட்சியர்கள் பயன்படுத்துவதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என்றார்.
கமல்ஹாசன் தனது வாழ்நாள் சம்பாத்தியம் முழுமையையும் இப்படத்தில் முதலீடு செய்துள்ளார். இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.
மீண்டும் தன் வாதத்தை தொடங்கினார் வண்டு முருகன். மை லார்ட்… நான் சொல்வது சரியாகவும் இருக்கலாம்.. தப்பாகவும் இருக்கலாம் என்று தொடங்கினார். நம்பிக்கையோடு வாதத்தை தொடங்குங்கள்…. சரியா தப்பா என்று சந்தேகத்தோடு தொடங்காதீர்கள் என்றார் . லார்ட்ஷிப் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் (Lordship is always right) என்றார்.
மை லார்ட்… இந்த படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழே செல்லாது. தணிக்கை குழு சான்றளித்துள்ளது. இது சட்டப்படி செல்லாது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
உடனே குறுக்கிட்ட பி.எஸ்.ராமன், தலைமை வழக்கறிஞர் சொல்வதை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தணிக்கை குழு அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில்தான் எல்லா திரைப்படங்களும் வெளியாகிறது. இது மிக மிக சீரியசான குற்றச்சாட்டு என்றார்.
எங்களுக்கு யாரிடமும் பயம் கிடையாது. ஆண்டவனுக்கு மட்டுமே பயப்படுவோம் என்று ஒரு பன்ச் டயலாக் பேசினார் வண்டு முருகன்.
அப்பொழுது நீதிபதிகளைப் பார்த்துக் கூட பயம் கிடையாது இல்லையா … நீதிபதிகளைப் பார்த்து பயப்படவேண்டியதில்லை.. நீங்கள் தொடருங்கள் என்றார். மீண்டும் இதில் விசாரணை நடத்த வேண்டும் என்றார். அப்போது நீதிபதி குறுக்கிட முனைந்தார். உடனே வண்டு முருகன்… நான் சொல்வதை ஒரு நிமிடம் கேளுங்கள் என்றார்.
கோபமடைந்த நீதிபதி நான் சொல்வதைக் கேட்கக் கூட உங்களுக்கு பொறுமை இல்லையா.?. பதில் சொல்வதற்கென்று ஒரு முறை இருக்கிறது. இப்படியா நான் பேசும்போது என்னைத் தடுப்பீர்கள்.. என்றார். ஐ யம் சாரி மை லார்ட் என்று வேண்டா வெறுப்பாக ஒரு சாரி சொன்னார். (மனதுக்குள்.. நானும் ஜட்ஜ் ஆயிக்காட்றேனா இல்லையா பார் என்று நினைத்திருப்பார்)
ஒரு திரைப்படத்தைத் தடை செய்வதையும், 144 தடைச் சட்டத்தையும் ஒப்பிட முடியாது. இரண்டும் வேறு வேறு. உயிர் சேதத்தை தடுப்பதற்காகத்தான் 144 தடைச் சட்டம் என்றார். பொது அமைதியை நிலைநாட்டுவது அரசின் கடமை என்றார். 31 மாவட்ட ஆட்சியர்கள், தனித்தனியாக தீர ஆராய்ந்த பிறகு, இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். இப்படி ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால்தான் தமிழகம் இன்று அமைதியாக இருக்கிறது. அவர் கமல் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் என்றார். எத்தனை கோடி கொடுத்தாலும் உயிரிழப்பை அது ஈடு செய்யாது என்றார்.
அப்போது நீதிபதி இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டதா என்றார். இல்லை என்றார் வண்டு முருகன். நீதிபதி, எனக்கு உடல் நிலை வேறு சரியில்லை என்றார். உடனே, அதை கவனிக்காத வண்டு முருகன், இல்லை என்றார். உடனே நீதிபதி, நகைச்சுவையாக, நான் எனக்கு உடல்நிலை சரியில்லை என்கிறேன்… அதை நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்கள் என்றார்.
நாங்களெல்லாம் அடிமைகள் மை லார்ட் இல்லை (We are all slaves) என்று சொல்லிப் பழகி விட்டது என்றார். நீங்கள் அடிமை இல்லை. எஜமானர் என்றார் நீதிபதி (You are not slave. You are a master now) அதற்கும் இல்லை என்றார் வண்டு. இந்த தடை உத்தரவால் மனுதாரர் பாதிக்கப்படவேயில்லை என்றார் வண்டு. எப்படிச் சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டதும், அவர்கள்தான் படத்தை விற்று விட்டார்களே… விநியோகஸ்தர்கள்தானே பாதிப்படைவார்கள். இவர்கள் தயாரிப்பாளர்கள்தானே என்றார். நீதிபதி, இந்த விபரங்களெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்றதும், விசாரித்து அறிந்து கொண்டேன் என்றார்.
144 தடை உத்தரவு தவறென்றால், அவர்கள் மாவட்ட ஆட்சியர்களைத்தான் அணுகியிருக்க வேண்டும். நீதிமன்றத்துக்கு வரக்கூடாது என்றார்.
உடனே நீதிபதி, 144 தடை உத்தரவே சட்டவிரோதம் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அப்போது மாவட்ட ஆட்சியரை எப்படி அணுகுவார்கள் என்றார். அனைத்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இந்த தடை உத்தரவின் நகல் வழங்கப்பட்டுள்ளது என்றார் வண்டு. மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்றார் நீதிபதி. அவர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தியேட்டர் உரிமையாளர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்றார் வண்டு. உத்தரவின் நகலையே அவர்களுக்கு வழங்காமல், அவர்கள் எப்படி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவார்கள் (மாட்னியா.. மாட்னியா…) என்றார் நீதிபதி. அது வந்து மை லார்ட்… என்று அதை அப்படியே விட்டு விட்டு, உச்சநீதிமன்றம், சட்டம் ஒழுங்கு, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ளது என்றார் வண்டு.
அதை அடுத்து வண்டு முருகன் பேசிய வாதத்திற்காக, அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவே ஆக்கி விடலாம். மை லார்ட்… இன்று உலகமே.. ஒரு கிராமம் என்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லீமைத் தீவிரவாதியாகக் காட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதியை முஸ்லீமாகக் காண்பித்தால், இந்தியாவில் உள்ள முஸ்லீம் பாதிக்கப்படமாட்டாரா ? என்று கேட்டதும் நீதிபதியே அசந்து போனார் வண்டு முருகனின் வாதத்திறமையைப் பார்த்து.
நாங்கள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்கிறோம் என்றார் வண்டு. நீங்கள் வியாழனன்று வாதிட்டீர்கள், இன்றும் வாதிட்டீர்கள். எழுத்துபூர்வமான பதில் மனு தாக்கல் செய்வதாக இருந்தால் நான் உங்கள் வாதத்தை கேட்டிருக்கவே மாட்டேனே… என்றார் நீதிபதி. இல்லை மைலார்ட்… நாங்கள் பதில் மனு தாக்கல் செய்தே ஆவோம் என்றார்.
அதையடுத்து, மத்திய தணிக்கைக் குழுவின் சார்பாக வாதிட்டார் கூடுதல் மத்திய அரசு வழக்கறிஞர் வில்சன். வண்டு முருகன், தணிக்கை சான்றிதழே தவறு, அதில் பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று கூறியதற்கு, படிப்படியாக பதில் அளித்தார். சினிமாட்டோக்ராஃப் சட்டம் என்ன சொல்கிறது… அதில் அதிகாரங்கள் எப்படிப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. வண்டு முருகன் எப்படி முட்டாள்த்தனமாக பேசினார் என்று தெளிவாக விளக்கினார்.
அதன் பிறகு, இஸ்லாமியர்கள் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதிட்டார். இந்தப் படத்தில் பல காட்சிகள் ஆட்சேபகரமாக உள்ளன என்று கூறியதும், நீதிபதி, உங்களைப் பொறுத்தவரை, மொத்த படமுமே ஆட்சேபகரமான படம் தானே என்றார். ஆமாம், ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர, மொத்த படமுமே ஆட்சேபகரமான படம் என்றார். அப்போது எதற்காக தனித்தனியே வாதிடுகிறீர்கள்.. போதும் என்று நீதிபதி கூறியபோது மணி 6.00. எனக்கு உடல் நிலை சரியில்லை. எப்படியாவது இன்று இரவு 8.00 மணிக்கு இடைக்காலத் தீர்ப்பு வழங்க முயற்சிக்கிறேன் என்று கூறினார். இரவு 10.30 மணிக்கு சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கினார் நீதிபதி வெங்கட்ராமன்.
சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 144 பிரிவில் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், சமுதாயத்தில் ஒரு பிரிவு, அதைப் பயன்படுத்தி, ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை பறிக்க முடியாது. ஒரே நேரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், ஒரே மாதிரியான முடிவை எடுத்திருப்பது விசித்திரமாக உள்ளது. மனுதாரர் திரைப்படத்தை திரையிடுவதை, அரசு தடை செய்யக் கூடாது. இந்த மனு மீது விரிவான விசாரணை நடத்தப்படும், இது வெறும் இடைக்கால உத்தரவு மட்டுமே என்று கூறினார்.
உயர்நீதிமன்றங்களின் முக்கியமான கடமை, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவது. அந்த உரிமைகள் பறிக்கப்படுகையில், நீதிமன்றங்கள் தலையிட்டு, அதை சீர்செய்ய வேண்டும். அதற்காகத்தான், அதற்காக மட்டும்தான் உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அப்படி ஒரு அடிப்படை உரிமை பறிக்கப்பட்ட ஒரு நிகழ்வில், தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது, இரவு 10.30 மணி வரை கடுமையாக உழைத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி வெங்கட்ராமன் மற்றும், அவர் இத்தீர்ப்பை வழங்க பின்னணியில் கடும் உழைப்பைச் செலுத்திய அவரது சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர்களுக்கு சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்ப்பு வழங்கியதும் வண்டு முருகன் முகத்தில் ஒரே அதிர்ச்சி. என்ன இது… இப்படி நீதிபதி, நீதிபதி போல தீர்ப்பு வழங்கியுள்ளாரே… அனைத்து நீதிபதிகளும், நம்மைப் போலவே அம்மாவின் அடிமைகள் என்று நினைத்தால் இவர் நீதிபதி போல நடந்து கொள்கிறாரே என்று கடும் அதிர்ச்சி…
அசருவாரா… வண்டு முருகன்… எட்றா வண்டிய என்றார். வண்டு முருகன், மற்ற இரு அதிமுக அடிமைகளான வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன் மற்றும் இன்பதுரை ஆகியோர் கிளம்பினர். இரவு நேரத்தில் எங்கே கிளம்புகிறார்கள் என்ற அதிர்ச்சியடையாதீர்கள்… நேரே தலைமை நீதிபதி பொறுப்பு எலிப்பி தர்மாராவ் வீட்டுக்கு சென்றார்கள்…..
அய்யா….. அட்வகேட் ஜென்ரல் வந்துருக்கேன்யா… கதவத் தொறங்கய்யா….. அர்ஜென்டா ஒரு ஆர்டர் வாங்கனும்யா… ஆறு மணியிலேர்ந்து சாப்பிடலய்யா….. அய்யா கதவத் தொறங்கய்யா… என்று பேசினாரா என்று தெரியாது. இரவு தூக்கத்தைக் கெடுத்து விட்டார்களே என்று கடுப்பில் வந்த நீதிபதி, வண்டு முருகனைப் பார்த்து, என்ன இந்த நேரத்தில் என்று கேட்டிருக்கிறார். விஷயத்தைச் சொன்னதும்….. இதெல்லாம் ஒரு அவசரம்னு ராத்திரில வர்றியே… அறிவிருக்காய்யா உனக்கு…… என்றும், இது பத்தாது என்று மேலும் …………………. …………………….. ………………………….. ………………… (கோடிட்ட இடத்தில் வார்த்தைகளை நிரப்புக் கொள்ளுங்கள்) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியிருப்பார் என்ற சிலர் தவறாக எண்ணக் கூடும். நீதிபதியாக இருந்தால் எலிப்பி தர்மாராவ் திட்டியிருப்பார்.. இவர் நீதி அரசர். அதனால் அப்படியெல்லாம் திட்டவில்லை. நாளைக் காலை வாருங்கள் என்று கூறி விட்டார்.
மறுநாள் காலை என்பது மதியம் 2.15க்கு தொடங்கியது. செவ்வாயன்று, தன் வாதத்திறமையால் பிளந்து கட்டிய வண்டு முருகன், இன்று வெறும் 3 நிமிடம் மட்டுமே பேசினார். நேற்று பேசியதில் அங்கொன்றும், இங்கொன்றுமாக தொட்டு விட்டு அமர்ந்து விட்டார். அவர் நீதிபதியோடு கண்ணாலே பேசினாரா என்பதை தூரத்தில் இருந்ததால் கண்டுபிடிக்க இயலவில்லை.
மீண்டும் பேசிய பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக் காட்டி வாதிட்டார். அனைவரது வாதத்தையும் கேட்ட நீதிபதி எலிப்பி தர்மாராவ், ராமனைப் பார்த்து, 144 தடை உத்தரவை எதிர்க்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரையல்லவா நீங்கள் அணுக வேண்டும்…. எப்படி நீதிமன்றத்துக்கு வருகிறீர்கள்…. என்றார் நீதிபதி.
. ராமன், இந்த உத்தரவே சட்டவிரோதமானது. திரைப்படத்தின் வெளியீட்டை இந்த உத்தரவு நேரடியாக பாதிக்கிறது என்றார். நீங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைத்தான் அணுக வேண்டும் என்றார் நீதிபதி. இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும். அந்த 144 தடை உத்தரவு குறித்து நீங்கள் தாக்கல் செய்த வழக்கை அதே நீதிபதி விசாரிப்பார். வழக்கை அடுத்த புதன் கிழமைக்கு தள்ளி வைக்கிறேன் என்றார்.
உடனே பி.எஸ்.ராமன், இந்த தடை உத்தரவே இரண்டு வாரங்களுக்குத்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளியன்று இத்தடை உத்தரவு காலாவதியாகி விடும் என்றார்.
பிறகென்ன.. வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள் என்றார் நீதிபதி.
வெள்ளிக்கிழமை வேறு திரைப்படங்கள் வந்து விடும். திரையரங்குகள் கிடைக்காது என்றார்.
சரி… உங்களுக்காக திங்கட்கிழமை இந்த வழக்கை விசாரணை செய்ய உத்தரவிடுகிறேன். நேற்று நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்கிறேன் என்றார் நீதிபதி .
நீதிபதி எலிப்பி தர்மாராவ் தெரிவித்த ஆலோசனையின் படி என்ன செய்திருக்க வேண்டுமென்றார், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்த தடை உத்தரவுக்கு எதிராக, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை பரிசீலிக்கும் மாவட்ட ஆட்சியர்கள் தடை இருக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்று தீர யோசித்து ஒரு உத்தரவு போடுவார்கள். அந்த உத்தரவின் நகலைப் பெற்ற சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள், அதன் பிறகு நீதிமன்றத்துக்கு வர வேண்டும். எப்படிப்பட்ட ஆலோசனை பார்த்தீர்களா ? இதனால்தான் இவரை மன்ச்சி ஜட்ஜு என்று அழைக்கிறார்கள்.
ஜெயலலிதாவைப் போல ஒரு முட்டாளைப் பார்க்கவே முடியாது. ஒன்றுமில்லாத ஒரு விவகாரத்தில் மூக்கை நுழைத்து, தேவையில்லாமல் குட்டுப்படப் போகிறார். ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளால் அகமகிழ்ந்து இருப்பவர் கருணாநிதி மட்டுமே. 2002ல், ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார் ஜெயலலிதா. அப்போது வேலை நிறுத்தத்தில் இருந்த அரசு ஊழியர்கள், நீதிமன்றம் சென்றார்கள். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி, இந்த டிஸ்மிஸ் உத்தரவுக்கு தடை பிறப்பித்தார். அந்தத் தீர்ப்பும் மாலை ஏழு மணிக்கு வெளியானது. இதை எதிர்த்து இரவோடு இரவாக, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சுபாஷன் ரெட்டி என்ற ஒரு ……………………………….. இந்தத் தீர்ப்புக்கு தடை விதித்து, டிஸ்மிஸ் செய்தது சரி என்று உத்தரவிட்டார்.
இரவு நேரத்தில் நீதிபதியை எழுப்பி, அவர்கள் வீட்டில் விசாரணை நடத்தும் அளவுக்கு ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு அவ்வளவு அவசரமா ? உயிரா போய்விடப் போகிறது ? ஆனால் ஜெயலலிதா அதைத்தான் செய்தார். அந்த ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்ததன் விளைவு….. 2004 பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதிலும் நாமம்.
தற்போது, சிறுபான்மை மக்களின் உணர்வுகள் புண்படுகிறது என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ஜெயலலிதா. கரசேவையை ஆதரித்த, மோடியின் கூட்டாளியான ஜெயலலிதாவை இஸ்லாமியர்கள் என்றும் நம்ப மாட்டார்கள். ஆனால் விஸ்வரூபம் விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்காக, பெரும்பான்மை இந்துக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் இந்த முடிவு உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது, அதனால் இது நியாயமான முடிவு என்று சோ போன்றவர்கள் சொல்வதை, அவர் மகனே கேட்கமாட்டார். பெரும்பான்மை மக்கள் எப்படிக் கேட்பார்கள் ? ஒரு சாதாரண திரைப்படத்தில் தவறான அணுகுமுறையைக் கையாண்டதால், 2014லிலும், ஜெயலலிதா நாற்பதிலும் நாமம் என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.
தன் தனிப்பட்ட ஈகோவை, ஆட்சி நிர்வாகத்தில் செலுத்தும் ஆட்சியாளர்களுக்கு, வரலாறு எப்போதுமே தக்க பாடத்தை புகட்டியுள்ளது. ஜெயலலிதாவுக்கும் நிச்சயம் புகட்டும்.