அரசியல் என்றாலே, பொய் புரட்டு, வஞ்சகம், சூது இவை எல்லாமும் அடக்கம். தமிழக அரசின் முன்னணித் தலைவர்களாக உள்ள கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் இதற்கு சற்றும் விதிவிலக்கல்ல. ஆனால், கருணாநிதியைப் போல, சுவையாக, இலக்கிய ரசனையோடு, நயமாக பொய் சொல்ல ஜெயலலிதாவுக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு பொய்யுரைதான் ஜெயலலிதாவின் விஸ்வரூபம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு.
விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக, அதிசயமாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ஒரு முழு விளக்கத்தை அளித்துள்ளார். ஆட்சிக்கு வந்த முதல் வாரத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், நான் வாராவாரம் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பேன் என்றார். அதற்குப் பிறகு பல வாரங்கள் கடந்து விட்டன. ஜெயலலிதா எப்போதெல்லாம் டெல்லி அல்லது வேறு மாநிலங்களுக்கு விமானத்தில் செல்கிறாரோ, அல்லது முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றனவோ, அப்போதெல்லாம் பத்திரிக்கையாளர்களும், வடை சட்டியைப் போல இருக்கும் ஓ.பி.வேன்களும், போயஸ் தோட்டத்து வாசலில் காத்திருப்பது வழக்கம். ஆனால், அம்மாவின் வாகனம், ஒரு நிமிடம் கூட நிற்காமல் வேகமாக விரையும். எப்போதாவது. அம்மாவுக்கு மனம் இரங்கினால், காரின் கண்ணாடி இறக்கப்பட்டு, ஓரிரு நிமிடங்கள் பேசுவார். அந்த வகையில், விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக, தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு விளக்கம் கொடுத்ததற்காக, தமிழக அரசுக்கு “கோட்டானு கோட்டி நன்றி ஆண்டவரே”
ஜெயலலிதாவின் விளக்கத்துக்கு வரிக்கு வரி பதிலை சவுக்கு அளிக்கிறது.
“கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளதை சிலர் அரசியலாக்குகிறார்கள். தொலைக்காட்சி ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தில் உள்ள பிரச்னையை முழுமையாக புரிந்து கொள்ளாமல் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக விளக்கம் அளிப்பது அவசியம் என்று கருதுகிறேன். சட்டம் , ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமையாகும்.”
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் தடை செய்யப்பட்டுள்ளது அரசியலேயன்றி வேறு அல்ல. படத்தில் உள்ள பிரச்சினையை முழுமையாக புரிந்து கொள்ளாமல் யாரும் பிரச்சினை செய்யவில்லை. படத்தில் பிரச்சினையே இல்லை. திரைப்படங்களில் உள்ளவற்றையெல்லாம் ஒரு அரசு ஆராய்ந்து கொண்டிருந்தால், ஆட்சி நடத்த முடியாது. எது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டுகிறதோ, எது மக்களுக்கு தீமை பயக்கிறதோ அதில் நீங்கள் உங்கள் கவனத்தை செலுத்தவேயில்லை. ராமதாஸ் என்ற ஒரு சமூக விரோதி, ஊர் ஊருக்குச் சென்று சாதிக்கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசி வருகிறார். அவருக்கு மதுரை மாவட்டத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் நீங்கள் தடை விதிக்கவில்லை. ராமதாஸின் விஷம் கக்கும் பேச்சுக்களைத் தொடர்ந்து, சாதி மற்றும் காதல் அடிப்படையில் வட தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்து கொலைகள் நடந்துள்ளன. ஆனால், நீங்கள் ராமதாஸை கட்டுப்படுத்தாமலும், தருமபுரி கலவரத்துக்கு காரணமானவர்களை இது வரை கைது செய்யாமலும் இருக்கிறீர்கள். ஆகையால் சட்டம் ஒழுங்கு என்று நீங்கள் பேசுவது, வெறும் நடிப்பும் நாடகமுமே.
தமிழகத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 718 காவலர்கள் உள்ளனர். இவர்களில் பாதுகாப்பு பணி, உளவுப்பிரிவு பணி, முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு என பல்வேறு பணிகளில் ஈடுபடுபவர்கள் போக 87 ஆயிரத்து 226 பேர் மட்டுமே சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 524 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு தியேட்டருக்கு ஒரு ஷிப்டுக்கு 20 பேர் வீதம் மூன்று சிப்டுக்கு 60 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மேலும் 10 பேட்ரோல் வண்டிகளிலும் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும். தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மட்டுமே 65,440 போலீசார் தேவை உள்ளது.
பாதுகாப்பு அளிக்க போதிய காவலர்கள் இல்லை என்று நீங்கள் சொல்வது நியாயமான காரணமே. பல்வேறு பணிகளில் காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுவதால், போதிய காவல்துறையினர் இல்லை என்கிறீர்கள். நியாயமான வாதமே. நீங்கள் போயஸ் தோட்டத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியெங்கும், கொளுத்தும் வெயிலில் எதற்காக காவலர்களை நிற்க வைக்கிறீர்கள். உண்மையிலேயே, காவல்துறையினரின் பற்றாக்குறையைப் பற்றிக் கவலைப்படும் நீங்கள், முதலில் சாலையில் நிற்க வைக்கப்படும் இந்தக் காவலர்களை அல்லவா வேறு பணிக்கு பயன்படுத்த வேண்டும் ?
ஒவ்வொரு தியேட்டருக்கும் 60 பேர், பேட்ரோல் வண்டிகள் ஆகியவற்றில் அனைத்து தியேட்டருக்கும் பாதுகாப்பு அளிக்க மட்டுமே 65,440 காவல்துறையினரின் தேவை இருக்கிறது என்கிறீர்கள். ஜெயலலிதா அவர்களே…. இஸ்லாமியர்கள் இத்திரைப்படத்துக்கு எதிராக வன்முறையில் எத்தனை தியேட்டர்களில் இறங்குவார்கள் ? அனைத்து தியேட்டர்களிலுமா ? அவர்களைக் கட்டுப்படுத்தவது என்ன அத்தனை கடினமா ? அனைத்து அமைப்புகளிலும், வன்முறைகளில் ஈடுபடுவது யார், யார் பிரச்சினை செய்வார்கள் என்ற விபரங்கள், உளவுத்துறை வசம் உள்ளது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். வன்முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால், எத்தனை நாட்களுக்கு வன்முறையில் ஈடுபடுவார்கள் ? வன்முறையைத் தூண்டும் அமைப்புகளின் தலைவர்களை சிறையில் ஒரு வாரத்துக்கு அடைத்துப் பாருங்கள். யார் கலவரம் செய்கிறார்கள் என்று பார்ப்போம். இந்த எண்ணிக்கை கணக்கையெல்லாம், உங்களின் அமைச்சரவை அடிமைகள் கூட நம்பமாட்டார்கள்.
இப்படம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 24 பிரிவினர் அரசிடம் மனு கொடுத்து அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றனர். இதற்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். படம் திரையிடப்பட்டால் வன்முறை ஏற்படும் என்று உளவுத்துறை மூலம் அறியப்பட்டது. இதன் காரணமாகவே கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பிரச்னையில் சில அரசியல் தலைவர்கள் தலையிட்டு தூண்டி விடுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமே வன்முறை போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்பதால் கலெக்டர்கள் மூலம் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாட்டில் கலவரம் ஏற்படாமல் தடுப்பது என்பது அரசு எந்திரங்களின் கடமையாகும். அந்த கடமையைத்தான் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இத்திரைப்படம் குறித்து மனு கொடுத்த பிறகு, ஆர்ப்பாட்டம் போராட்டம் நடந்தது என்று அம்புலிமாமா கதையெல்லாம் சொல்லாதீர்கள். இந்த மனு அளிக்கப்பட்ட பிறகு, கமல்ஹாசன் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது, இந்திய தேசிய லீக்கின் ஒரு பிரிவு. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 18 பேர். அதில் 8 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். அன்று வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் மட்டும் 40 பேர். இந்த அமைப்பு மட்டும் தனியே ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு காரணம், அந்த 24 கூட்டணியில் இந்த அமைப்பு இல்லை. இதைத்தவிர வேறு எந்த இடத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. இப்பிரச்சினையை சில அரசியல் தலைவர்கள் தூண்டி விடுகின்றனர் என்று சொல்வதே தவறு. தடை விதிக்கப்படும் வரை, இஸ்லாமிய அமைப்புக்களைத் தவிர வேறு எந்த அரசியல் தலைவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமே நாட்டில் கலவரங்களைத் தடுத்து நிறுத்தமுடியும் என்றால், தருமபுரி கலவரத்தை தடுக்கத் தவறிய காரணம் என்ன ? காதல் திருமணம் நடந்து ஒரு மாதத்துக்கு மேலாக, அந்தப் பகுதியில் பதற்றம் நிலவிய நிலையில், உங்கள் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது ? ஒரு திருமணமான இளம் காதல் ஜோடியை பிரிப்பதற்காக, அப்பகுதி வன்னியர்கள் கட்டப்பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருந்தபோது, உங்கள் காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது. உங்கள் அதிகாரிகள் கடமையை சரிவர ஆற்றத் தவறியதால்தான், தருமபுரி கலவரமே நடந்தது. நீங்கள் முன்கூட்டியே கலவரங்களைத் தடுக்கும் லட்சணம் நன்றாகத் தெரியும். ஆகையால், உங்களின் இந்தப் பொய்கள் எடுபடாது.
தனியார் டி.வி.க்கு படத்தை விற்பதில் பிரச்னை என்றும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக ஜெயா டி.வி.க்கு விற்பதில் பிரச்னை ஏற்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. ஜெயா டி.வி. என்பது அதிமுக ஆதரவு தொலைக்காட்சிதான். அந்த டி.வி.க்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் நான் பங்குதாரரும் இல்லை. ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் விஸ்வரூபம் படத்தை குறைந்த விலைக்கு கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நீங்கள் சொல்லியதிலேயே மிகப்பெரிய பொய் எது தெரியுமா ? உங்களுக்கும் ஜெயா டிவிக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான். ஜெ.ஜெ.டிவி என்று தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சேனலில் முதல் அலுவலகம் எது என்று உங்களுக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது. ஜெ.ஜெ.டிவியின் முதல் அலுவலகம் இருந்த இடமே உங்கள் வீடுதான். தற்போது மினி தியேட்டராக மாற்றப்பட்டுள்ள இடத்தில்தான் ஜெயா டிவியின் அலுவலகம் இயங்கியது. 1996ல் அதிமுகவின் படுதோல்விக்குப் பின், ஜெஜெ டிவி நிறுத்தப்பட்டது. மீண்டும் சில காலம் கழித்து ஜெயா டிவி என்று தொடங்கப்பட்டது. 2006ம் ஆண்டு வரை, போயஸ் தோட்டத்தில்தான் ஜெயா டிவி இயங்கியது. தற்போது அது இயங்கி வரும் ஈக்காட்டுத்தாங்கல் கட்டிடமும் உங்கள் பெயரில்தான் உள்ளது.
1991-1996 ஆண்டு ஆட்சிக் காலத்தில், அப்போது சூப்பர் ஹிட்டான ஒரு மொக்கைத் திரைப்படம் நாட்டாமை. அந்த நாட்டாமை திரைப்படத்தை நீங்களும், உடன் பிறவா சகோதரியும் பார்க்க வேண்டும் என்பதற்காக, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அப்படத்தின் மாஸ்டர் கேசட்டை உங்களுக்கு கொடுத்தனுப்பினார். அந்தப் படம் ஒரு சில நாட்களில் எவ்வித வியாபார ஒப்பந்தமும் இல்லாமல் ஜெஜெ டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அப்படிப்பட்ட நேர்மையாளர் நீங்கள். விஸ்வரூபம் திரைப்படத்தை ஜெயா டிவிக்காக விலைபேசவில்லை என்று நீங்கள் சொல்வதை நம்புவதற்கில்லை. தனிப்பட்ட முறையில் திரைப்படம் பார்ப்பதற்காக வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் மாஸ்டர் கேசட்டை ஜெயா டிவியில் ஒளிபரப்பிய நேர்மையாளர் நீங்கள். ஜெயா டிவிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
ஜெயா டிவியின் தொழில் ரீதியான பெயர், மேவிஸ் சேட்காம் ப்ரைவேட் லிமிட்டெட். இதன் பதிவு முகவரி, 79, போயஸ் தோட்டம், சென்னை 79. இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர், பிரபா சிவக்குமார். இந்த பிரபா சிவக்குமார் என்பவர் யார் ? இவர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள். இவர்தான் மேவிஸ் சாட்காமின் பங்குகளை வைத்துள்ளார். டிசம்பர் 2011ல் சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்படும் வரை, ஜெயா டிவியின் அனைத்து நிர்வாகங்களையும் கவனித்து வந்தது, அனுராதா. இவர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மற்றொரு மகள். இவர் இவரது அக்காள் மகன் டிடிவி.தினகரனை திருமணம் செய்துள்ளார். இந்த அனுராதாதான் டிசம்பர் 2011 வரை, ஜெயா டிவியின் மேலாண் இயக்குநராக இருந்தார். இவரன்றி, ஜெயா டிவியில் ஒரு அணுவும் அசையாது. தற்போது தற்காலிகமாக இவர் வெளியேறி இருக்கிறார். வெகு விரைவில், இவர் மீண்டும் ஜெயா டிவியின் அதிகார மையத்திற்கு வரவிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராதா வெளியேறினாலும், பிரபா சிவக்குமார் பெயரில் உள்ள ஜெயா டிவியின் பங்குகள் இந்நாள் வரை வேறு யார் பெயருக்கும் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயா டிவியின் மேலாண் இயக்குநர் பிரபா சிவக்குமார் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
சசிகலா உங்கள் உடன்பிறவா சகோதரி என்பதை நாடே அறியும். சவுக்கு சொல்ல வேண்டியதில்லை. அப்படி இருக்கையில் சசிகலாவின் அண்ணன் மகள் பெயரில் இருக்கும் ஜெயா டிவிக்கும் உங்களுக்கும் எப்படித் தொடர்பில்லை என்று சொல்கிறீர்கள்…. ? நீங்கள் சொல்வது உங்களுக்கே சிரிப்பை வரவழைக்கவில்லையா ? அடுத்து சசிகலாவுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லப்போகிறீர்களா ?
ஜெயா டிவி என்பது, அதிமுக ஆதரவு தொலைக்காட்சி என்கிறீர்கள். சன் டிவி கூட சில ஆண்டுகள் முன்பு வரை, திமுக ஆதரவு தொலைக்காட்சியாகத்தான் இருந்தது. ஆனால் சன் டிவி ஒரு நாளும் கருணாநிதியின் அறிக்கையை அரைப்புள்ளி, காற்புள்ளி கூட விடாமல் படித்ததில்லை. ஆனால் ஜெயா டிவி மட்டும் ஏன் இப்படி உங்கள் அறிக்கைகளைப் படிக்க வேண்டும் ? ஒரு தனியார் நடத்தும் ஒரு சேனல், எதற்காக எவ்வித லாபநோக்கமுமின்றி, உங்களின் மொக்கை அறிக்கைகளை 24 மணி நேரமும் படிக்க வேண்டும் ? மேலும், சசிகலாவின் அண்ணன் மகள்கள் அனுராதாவோ, பிரபா சிவக்குமாரோ, பரம்பரைப் பணக்காரர்களோ, செல்வச் சீமாட்டிகளோ அல்ல. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்தான். எவ்வித முதலீடும் இல்லாமல், அவர்கள் எப்படி ஜெயா டிவியை தொடங்க முடியும் ? அப்படியே தொடங்கினார்கள் என்று வைத்துக் கொண்டாலும், எவ்வித லாபமும் இல்லாமலேயே ஜெயா ப்ளஸ், ஜெயா மேக்ஸ், என்று எப்படி வளர்ந்து கொண்டே போக முடியும் ?
1991-1996 ஆட்சிக் காலத்தில், டான்சி நிலத்தையும், பல சொத்துக்களையும், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் வீச்சு தெரியாமல் நீங்களும் உங்கள் உடன் பிறவா சகோதரியும் வாங்கிக் குவித்தீர்கள். அதன் தாக்கம், உங்கள் மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் தெரிய வந்ததால், உங்கள் பெயரில் எந்த முதலீட்டையும் நீங்கள் செய்வதில்லை. சசிகலாவும், இளவரசியும், உங்கள் பினாமிகளாக இருப்பதாலேயே, அவர்கள் இருவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டார்கள். டிடிவி தினகரன், உங்கள் வீட்டில் வசித்த காரணத்தாலேயே, அவர் லண்டனில் வாங்கிய ஹாப்ஸ்க்ராப்ட் ஹில் என்ற ஹோட்டலுக்காக, நீங்கள் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா ?
இப்போதும் எனக்கும் ஜெயா டிவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சாதிக்கிறீர்களா ? இதற்கு பதில் சொல்லுங்கள். ஜெயா டிவியின் மேலாண் இயக்குநராகவும், பங்குதாரராகவும் இருக்கும், பிரபா சிவக்குமார், உங்களோடே உங்களின் இல்லமான, வேதா நிலையம், 36, போயஸ் தோட்டத்தில் வசிக்கிறாரே…. ஏன் ? வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறீர்களா ? அந்த அளவுக்கா வறுமையில் இருக்கிறீர்கள் ?
உங்களின் அம்புலிமாமா கதையையெல்லாம், வேறு யாரிடமாவது சென்று கூறுங்கள்.
“மேலும் கமல்ஹாசனுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனிப்பட்ட பகையும் எங்கள் இருவருக்கும் இல்லை. கமல் பற்றி எம்.ஜி.ஆருக்கு நான் கடிதம் எழுதியதாக கூறியுள்ளனர். கடிதம் எழுதும் நிலை எனக்கு வரவில்லை. காரணம் அப்போது நான் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் என்பதால், தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு அப்போது நாள்தோறும் செல்வேன். எம்.ஜி.ஆருடன் அமர்ந்து உணவு உண்ணுவேன். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கொடுக்கும் கடிதங்களை படிப்பேன். அவற்றின் மீது தேவையான நடவடிக்கைகள் எடுப்பேன். இப்படி நாள்தோறும் சந்தித்து பேசும் நிலையில் உள்ள நான், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுத வேண்டிய தேவையும் இல்லை. அப்படிப்பட்ட நிலையும் எனக்கு வரவில்லை. கருணாநிதி அறிக்கைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடருவேன். அதை பிரசுரித்த பத்திரிகைகள் மீதும் சட்டரீதியாக வழக்கு தொடருவேன்.”
எம்.ஜி.ஆர் உங்களை எப்படி நடத்தினார், எந்த நிலையில் வைத்திருந்தார் என்பதையெல்லாம் எழுத விரும்பவில்லை. அந்தச் செய்திகள் வெளிவந்து விடக் கூடாது என்ற காரணத்தாலேயே, வாசந்தி எழுதிய உங்களின் சரிதையை வெளியிட விடாமல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றீர்கள். எம்ஜிஆருக்கு நான் கடிதம் எழுதவேயில்லை, வழக்கு தொடருவேன் என்று நீங்கள் கூறியதற்கு கருணாநிதி, வழக்கு தொடருங்கள், ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் என்று கூறிவிட்டார். பொதுக்கூட்டத்தில் உங்கள் ஆட்சியை யாராவது குறை கூறினால், மைக் செட்டை கழற்றுவதற்குள் அவதூறு வழக்கு தொடரும் நீங்கள், இது வரை ஏன் மவுனம் காக்கிறீர்கள் ஜெயலலிதா ? ஆர்.எம்.வீரப்பனை அடக்குவதற்காகவே உங்களை கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆக்கினார் எம்ஜிஆர். உங்களின் அரசியல் அறிவால் அல்ல என்பதை மற்றவர்கள் அறியமாட்டார்கள். நீங்கள் அறிவீர்கள்தானே ? அப்படி இருக்கையில் எம்.ஜி.ஆரிடம் நீங்கள் அனைத்து விஷயங்களையும் விவாதித்தீர்கள் என்று சொல்வதும் நம்பவது போல இல்லை. ஒரு விஷயத்தை மறந்து விடுகிறீர்கள் ஜெயலலிதா. 1996ம் ஆண்டு உங்கள் வீடு லஞ்ச ஒழிப்புத் துறையால் சோதனையிடப்பட்டபோது, நீங்கள் நுழைந்தது முதல் எழுதிய அனைத்துக் கடிதங்களையும் பல கோப்புகளாக வைத்திருந்தீர்கள் தெரியுமா ? அதன் அத்தனை நகல்களும் உளவுத்துறை வசம் சென்றது. அந்த நகல்களை கருணாநிதி பத்திரமாக வைத்திருக்கிறார். அவரிடம் மோதுவதற்கு முன் கவனமாக மோதுங்கள்.
“24 முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை கேட்டு தலைமை செயலரிடம் மனு கொடுத்தனர். அந்த மனு உள்துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு இரு தரப்பினரும் படத்தை பார்க்கும் வகையில் திரையிட வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன் ஒத்துழைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சட்டம் , ஒழுங்கை பாதுகாத்து வன்முறையை தடுக்கும் வகையில் படத்துக்கு தடை விதிக்க முடிவு செய்தோம்.”
முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகள் விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்த பிறகுதான் படத்துக்கு தடை கோரினார்கள். அதற்குப் பிறகுதான் உள்துறைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தார்கள். இரு தரப்பினரும் பார்க்கும் வகையில் படத்தை கமல்ஹாசன் திரையிடவேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லீமுக்கும் போட்டுக் காட்ட வேண்டும். அதற்கு முடிவே கிடையாது. படத்துக்கு தடை கேட்டு முஸ்லீம் அமைப்புகள் உங்களிடம் வந்தால், ஒரு முதலமைச்சராக நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் ? அந்தத் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடருங்கள் என்றல்லவா அறிவுரை வழங்கியிருக்க வேண்டும் ? உடனே திரைப்படத்தை தடை செய்து விடுவீர்களா ?
அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை, மதுக்கடைகளையும், மதுக்கூடங்களையும் மூட வேண்டும் என்பது. இதே 24 முஸ்லீம் அமைப்புகள் ஒன்றாக வந்து, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மனு அளித்தால் மூடி விடுவீர்களா ? சட்டம் ஒழுங்கு கெட்டு விடும், என்று அடிக்கடி கூறும் உங்களுக்கு, மதுக்கடைகளால்தான், சட்டம் ஒழுங்குக்கு சீர்கேடு ஏற்படுகிறது என்பது தெரியாதா ? மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் எத்தனை விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது தெரியுமா தெரியாதா ? பாலியல் வன்முறைகள், சிறு தகராறுகள், பெரிய சண்டைகள், கொலைகள், போன்ற பல குற்றங்களுக்கு மது ஒரு காரணம் என்பது உங்களுக்குத் தெரியாதா ? இத்தனைக் குற்றங்களுக்கு காரணமான நீங்கள் மதுக்கடைகளை ஏன் மூட மறுக்கிறீர்கள் ? மதுக்கடைகளை மூடினால், விபத்துக்களும் குறையும், குற்றங்களும் குறையுமே… அது பற்றி ஏன் வாய்த்திறக்க மாட்டேன்கிறீர்கள் ஜெயலலிதா அவர்களே ?
“ஆனால், ஒரு விழாவில் கமல் பேசும்போது, ‘வேட்டி கட்டிய தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்று பேசியதாகவும், அதனால்தான் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அது சரியல்ல. கமல் பேசியது அவரது கருத்து. நான் 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். கமலுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. கமல்ஹாசனால் சொல்லப்படுபவர்கள் ஒன்றும் பிரதமராகிவிடப் போவதில்லை.”
கமலுக்கும் உங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டால் எதற்காக கமலை இந்தப் பாடு படுத்துகிறீர்கள் ஜெயலலிதா ? விஸ்வரூபம் பிரச்சினையில், உங்கள் அரசு தலையிடாமல் இருந்திருந்தால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஓடுவது போன்றே படம் அமைதியாக ஓடியிருக்குமே… 30 ஆண்டுகள் அல்ல… 300 ஆண்டுகள் நீங்கள் அரசியலில் இருந்தாலும், அரசியலையும் கற்றுக் கொள்ள மாட்டீர்கள். கமல்ஹாசனால் சொல்லப்படுபவர்கள் பிரதமராவார்கள் என்று அவரும் சொல்லவில்லையே… வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் என்று சொன்னார். அது அவரது விருப்பம். கமல்ஹாசன் சொல்லும் நபர்கள் பிரதமர் ஆவதில்லை என்பதே, அந்த கமலின் அந்த வார்த்தை உங்களை எவ்வளவு உறுத்தியிருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.
“விஸ்வரூபம் படத்தை தடை செய்வது குறித்த தனிப்பட்ட எண்ணம் எதுவும் அரசுக்கு கிடையாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், வன்முறையை தடுக்கவுமே இப்படத்துக்கு தடை விதிக்க முடிவு செய்தோம். 1955 தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 7,ன் படி ஒரு படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதை கையாளவில்லை. 144 சட்ட பிரிவின்கீழ் மட்டுமே தடை விதிக்கப்பட்டது. இப்போது இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் கட்டத்துக்கு வந்துள்ளோம்.”
விஸ்வரூபம் படத்தை தடை செய்வது குறித்து தனிப்பட்ட எண்ணம் இல்லாவிட்டால், தடை செய்வதற்கு முன், ஏன் கமல்ஹாசனை அழைத்துப் பேசவில்லை. கமல்ஹாசனை அழைத்து, உங்கள் படத்தின் மீது இஸ்லாமிய அமைப்புகள் புகார் கூறியுள்ளன. இது குறித்து அரசு முடிவெடுக்க உள்ளது என்று உங்கள் உள்துறைச் செயலாளர் பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் ? 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னரே, எப்படி முதல் நாள் இரவு ஊடகங்களுக்கு “இரண்டு வாரங்களுக்குத் தடை” என்ற செய்தி வெளியானது ? வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுத்த உங்கள் அரசு, புதனன்று, சென்னையில் 15 தியேட்டர்கள் மீது தாக்குதலும், ராமநாதபுரத்தில் இரண்டு தியேட்டர்கள் மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டதை தடுக்கத் தவறியது ஏன் ?
படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சொல்வது உங்கள் அறியாமையைக் காட்டுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, திரைப்படங்களை தணிக்கை செய்யவும், தடை செய்யவும், மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. நீங்கள் குறிப்பிடும் தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 7, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இது வரை யாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காத காரணத்தாலேயே, அது உயிரோடு இருக்கிறது. அப்படியே நீங்கள் குறிப்பிடும்படி அதிகாரம் இருந்தால், எதற்காக, 144 தடைச்சட்டம் ? அதுவும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், தாங்களாகவே ஆராய்ந்து, இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று சட்டம் தெளிவாகக் கூறியும், தலைமைச் செயலகத்திலிருந்து வந்த உத்தரவை பின்பற்றச் சொல்லும் கொல்லைப்புற வழி ஏன் ?
“கமல் தனது எல்லா சொத்துகளையும் வைத்து ரூ.106 கோடி செலவிட்டு படத்தை தயாரித்ததாகவும், இப்படம் ஓடாவிட்டால், அவர் எல்லா சொத்தையும் இழந்து விடுவார் என்றும் கூறுகிறார்கள். அவர் தனது பொறுப்புடன் திட்டமிட்டு செயல்படவேண்டும். இவர் செய்யும் செயலுக்கெல்லாம் அரசு எப்படி பொறுப்பாகும். இப்போதெல்லாம் எனக்கு சினிமாவில் ஆர்வம் கிடையாது. படம் பார்க்கவும் எனக்கு நேரம் கிடையாது. அந்த படத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதும் எனக்கு தெரியாது.”
அன்பார்ந்த ஜெயலலிதா அவர்களே… உங்கள் வாழ்க்கையில் பல சம்பவங்களை வசதியாக மறந்து விடுகிறீர்கள். நீங்கள் திரைப்படத்துறையில் இருந்தபோது, மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், சென்னையிலிருந்து பெங்களுர் செல்ல, பணமில்லாமல் அவதிப்பட்டபோது, ஒரு தயாரிப்பாளர் தன் வீட்டை அடமானம் வைத்து உங்களுக்கு உதவினார். பின்னாளில் நீங்கள் முதல்வரான பிறகு, அவரை உங்கள் உடன்பிறவா சகோதரியின் பேச்சைக் கேட்டு விரட்டியடித்தீர்கள். நீங்களும் பண நெருக்கடியைச் சந்தித்திருக்கிறீர்கள் என்பதை மறந்து விடுகிறீர்கள். இன்று உங்களிடம் ஆட்சியும் அதிகாரமும் இருக்கிறது என்பதற்காக, ஒருவரின் வாழ்க்கையை அழிக்கலாம் என்று நினைப்பது, மனிதாபிமானமற்ற செயல். கமல்ஹாசனுக்கு 58 வயதாகிறது… அவர் ஏன் அப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பது அவருடைய முடிவு. இப்படி ஒரு நெருக்கடி உருவாகியிருப்பதே, உங்களது அடாவடியான முடிவால் என்பதை ஒப்புக்கொள்ளாமல், ஏதோ இந்த முடிவுக்கும், உங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போலப் பேசுகிறீர்கள். உங்களை யாரும் விஸ்வரூபம் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை.
“இந்த படம் தமிழகத்தில் மட்டும் தடை செய்யவில்லை, அரபு நாடான கத்தாரில், சிங்கப்பூரில், ஸ்ரீலங்காவில், மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடகம், ஆந்திரம், கேரளம்,புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கலவரங்கள் நடந்துள்ளது.”
அரபு நாடான கத்தாரிடல் இப்படம் தடை செய்யப்படலாம். ஒரு ஜனநாயக நாடான இந்தியாவில் ஏன் என்பதுதான் இப்போது விவாதப்பொருளே…. சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலெல்லாம் தடை என்பதே, தமிழக அரசு விதித்த அடாவடியான தடைக்குப் பிறகுதான். மலேசியா சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டதால், நீங்கள் செய்த அடாவடித்தனம் நியாயமாகிவிடாது.
“நடிகர் கமல்ஹாசன் மற்றும் எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் அமைப்புகள் அவர்களுக்குள் பேசி சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவது குறித்தும், சமரச தீர்வு மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் ஒரு மனதாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்கும். கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கு நான் தடையாக இருந்ததில்லை.”
நடிகர் கமல்ஹாசன் மற்றும் எதிர்ப்புத் தெரிவித்த முஸ்லீம் அமைப்புகள் பேசி, சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவது குறித்துப் பேச வேண்டும் என்றால், இந்த ஆலோசனையை தடை செய்வதற்கு முன்பல்லவா நீங்கள் செய்திருக்க வேண்டும் ? இஸ்லாமிய அமைப்புகள் உங்களிடம் அளித்த மனுவைப் பாருங்கள். ஒட்டு மொத்த படத்தையும் அல்லவா தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்…. ? ஒட்டு மொத்த படத்தையும் தடை செய்ய வேண்டும் என்று சொல்பவர்களிடம் என்ன பேச முடியும் ?
உங்களுக்குள் இவ்வளவு நகைச்சுவை உணர்வு ஒளிந்திருக்கும் என்பதை யாருமே நம்ப முடியாது ஜெயலலிதா அவர்களே… “கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கு நான் தடையாக இருந்ததில்லை” வைகோவையும், நெடுமாறனையும் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்… நீங்கள் ஒரு கருத்துச் சுதந்திரக் காவலர் என்பதை தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிப்பதற்கு, கழக அரசே ஏற்பாடு செய்யலாம்.
இத்தனை நாட்களாக இல்லாமல், இந்த விஸ்வரூபம் படம் தொடர்பாக, நீங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது, தேசிய ஊடகங்களில் உங்கள் அரசை நாலாபுறமும் விமர்சிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தினால்தான். வேறு வழியில்லாமலேயே, இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினீர்கள். ஆனால், இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பு, கமல்ஹாசனை மிரட்ட பயன்படுமே ஒழிய, உங்கள் மீது மக்கள் வைத்துள்ள கருத்தை மாற்ற உதவாது.
கருணாநிதி அவரிடம் உள்ள ஜெயலலிதா எழுதிய கடிதங்களின் நகலை வெளியிடாமல் பதுக்கி வைத்து இருபதின் பின்னணி என்ன? வீட்டை விற்று ஜெயலலிதாவிற்கு உதவிய தயாரிப்பாளர் யார்? கமலஹாசன் குறித்து ஜெயலலிதா எம்ஜிஆர் இடம் என்ன புகார் கூறினார். ரஜினிகாந்த் மீது புகார் கூறி, ரஜினி பயந்து இமயமலையில் தஞ்சம் அடைந்தார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். கமல் மீது புகார் என்று இப்பொழுது இங்கே கேள்வி படுகிறேன்.அதையும் வெளிபடையாக எழுதலாம். இவர் ஒரு ?