டெசோ – என்றே ஆகிவிட்டது பெருமைக்குரிய அந்த அமைப்பின் பெயர். 1985ல் ஆரம்பிக்கப்பட்டபோது, ‘தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு’ என்கிற முழுமையான பெயர் அதற்கு. அந்தப் பெயரே அதன் நோக்கம் என்ன என்பதை அழுத்தந்திருத்தமாகப் பறைசாற்றியது. இப்போது, அதன் பெயரைச் சுருக்கிவிட்டவர்களின் நோக்கம் என்ன என்பது வரலாற்றின் பக்கங்களில் அழுத்தந்திருத்தமாகப் பதிவாகிவருகிறது.
சென்ற ஜூலையில் கம்பி வேட்டி கலையாமல் கோபாலபுரத்துக்கு வந்துசென்ற ஒருவரும், கரை வேட்டி கலைஞரும் டெசோ பற்றித்தான் பேசியிருப்பார்கள் என்று உலகே நினைத்தது. ஆனால், அவர்கள் அதைப்பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை. இதை நாம் சொல்லவில்லை – கருணாநிதி தான் அழுத்தந்திருத்தமாகச் சொன்னார். பகுத்தறிவுவாதியாக மட்டும் இல்லாமலிருந்தால், கோபாலபுரம் கிருஷ்ணன் கோயிலில்போய் கற்பூரம் ஏற்றி சத்தியமே செய்யும் அளவுக்கு அடித்துச் சொன்னார்.
அப்பாவி ஆட்டுக்குட்டிகளான நாமும், ‘கோபாலபுரத்திலும் சி.ஐ.டி.காலனியிலும் மாதம் மும்மாரி பொழிகிறதா’ என்று விசாரிக்கவோ, ‘கீர்த்தி சிறிதெனினும் கார்த்தி பெரிது’ என்பதை எடுத்துச் சொல்லவோதான் கம்பிவேட்டிக்காரர் வந்துபோயிருப்பார் என்று நம்பினோம். நாம் மட்டுமில்லை, நாம் இப்போதும் நம்புகிற அண்ணன் சுப.வீ. போன்ற உண்மையான தமிழீழ ஆதரவாளர்கள் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டனர். இப்படி ஆளுக்கொன்று நினைத்துக்கொண்டிருந்தால், அதற்குக் கருணாநிதி எப்படிப் பொறுப்பாவார்? அடுத்த நாளே, நம்பிக்கொண்டிருந்தவர்களை எல்லாம் இருட்டுக்கடை முன் கியூவில் நிற்கவைத்துவிட்டு கம்பிநீட்டினார் கருணாநிதி.
‘டெசோ மாநாட்டில் தமிழ் ஈழம் பற்றி அழுத்தந்திருத்தமாகப் பேசமாட்டோம்’ என்று அறிவாலயம் அழுத்தந்திருத்தமாக அறிவித்தபோதுதான், மடியில் மறைத்துவைத்திருந்த பூனைக்குட்டி வெளியில் வந்தது. மறுநாள் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில், மாநாட்டை நடத்துகிற அமைப்பின் பெயரே ‘டெசோ’ என்று சுருக்கப்பட்டு, ‘தமிழீழ ஆதரவாளர் அமைப்பு’ என்கிற பெயரையே நமது மெமரி கார்டிலிருந்து நீக்கும் முயற்சி விரிவுபடுத்தப்பட்டது.
டெசோவுக்கு நிரந்தரத் தலைவர் கருணாநிதியாகவும், நிரந்தரத் தளபதி வீரமணியாகவுமே இருந்துவிட்டுப் போகட்டும். டெசோ என்று பெயரைக் குறுக்கியபிறகு அதன் நிழலில் வந்து நெருக்கியடித்துக்கொண்டு நிற்க போட்டிக்கு யாரும் வந்துவிடப்போவதில்லை. நமக்கிருக்கிற ஆதங்கமெல்லாம், அதன் பெயரை முழுமையாக உச்சரிக்காதே – என்று எச்சரிப்பவர்களைப் பார்த்து நடுநடுங்கும் வீராதிவீரர்களுக்கும் திருவாரூர்த் தீரர்களுக்கும் அந்தப் பெயரை வைத்துக்கொள்ள என்ன தகுதி இருக்கிறது என்பதுதான்! எதற்காக அந்தப் பெயர் வைக்கப்பட்டதோ, அதையே அழுத்தந்திருத்தமாகச் சொல்ல மாட்டார்கள் என்றால், எதற்காக அந்தப் பெயரைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்? இரண்டுகைகளாலும் கிரீடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதால்தான் இடுப்புத்துணி உருவப்படுவதைத் தடுக்கமுடியவில்லை என்கிறார்களா?
ராஜபட்சே கும்பல் நமது ஒன்றரை லட்சம் உறவுகளை ஓடஓட விரட்டிக்கொன்று வாய்க்கரிசி போட்ட வரை, ஒரு ஓட்டை நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருந்த மாமனிதர் கருணாநிதி. சொந்த ரத்தம் ஈழத்தில் செத்தபோது சத்தமேயில்லாமல் சுருண்டு படுத்துக்கொண்டது அந்த ராஜநாகம். பாய்ந்து பிடுங்கவேண்டும் என்றுகூட நாம் சொல்லவில்லை, சினந்து சீறுவார் என்று எதிர்பார்த்தோம். ஒரு ‘புஷ்’ சத்தம் கூட வெளிவரவில்லை.
‘தி.மு.க. எம்.பி.க்கள் பதவிவிலகியிருந்தால் மட்டும், போர் நின்றிருக்கும் என்று நினைக்கிறீர்களா’ என்று அலைபேசியில் என்னை அழைத்து பரிதாபமாகக் கேட்கிற தி.மு.க. நண்பர்களைப் பார்த்தால் இப்போதெல்லாம் கோபம்கூட வருவதில்லை எனக்கு! இப்போது இவர்களுக்குத் தெரிவது, ‘ராஜினாமா செய்வோம்’ என்று மிரட்டினாரே… அப்போது கருணாநிதிக்குத் தெரியவேயில்லையா! அல்லது, இந்த அறிவாளிகளிடம் ஆலோசனை கலக்காமலேயே அப்போது அப்படிப் பேசிவிட்டாரா! இப்போது இவர்களுக்குத் தெரிவது அப்போதே கருணாநிதிக்குத் தெரியுமென்றால், வேறென்ன உள்நோக்கத்துடன் அந்த ராஜிநாமா நாடகம் நடத்தப்பட்டது.. அவசர அவசரமாக கனிமொழியிடம் கடிதம் வாங்கப்பட்டது? அவருக்கும் இவர்களுக்குமே வெளிச்சம்.
தன்னையும் தன் பதவியையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றவே, இனப்படுகொலை நடந்த சமயத்தில் மௌனமாய்க் கிடந்தார் கருணாநிதி – என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதைவிட கடுமையான குற்றமாக நான் நினைப்பது, விரட்டி விரட்டி இனம் படுகொலை செய்யப்பட்டபோதும், அந்த அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதில் முழுமையான அக்கறை காட்டாமல், மத்திய அரசைக் காப்பாற்றுவதிலேயே – கலகலத்திருந்த காங்கிரஸ் கட்டடத்துக்கு முட்டுக் கொடுப்பதிலேயே முழுமூச்சாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது ஏன் – என்பதைத்தான்!
தன்னுடைய அறிவை, தன் அயோக்கியத்தனத்தை மறைக்கப் பயன்படுத்துபவர்கள் ஒரு ரகம். ‘கூடாநட்பு கேடாய் முடியும்’ என்பது தெரிந்தும், தன் அறிவாற்றலை தன்னுடைய நண்பர்களின் அயோக்கியத்தனத்தை மறைக்க முயற்சிப்பது இன்னொரு ரகம். கருணாநிதி இதில் இரண்டாவது ரகம். எதற்காக காங்கிரஸைக் காப்பாற்றியே தீருவது என்று இவர் ஒற்றைக்காலில் நிற்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அண்ணன் சுப.வீரபாண்டியனுடன் டெல்லிக்குப்போய் மனுகொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கும் கூட இந்த ரகசியம் தெரியாது என்றே நினைக்கிறேன் நான்.
சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட கேள்வி – பதில் அறிக்கையை மின்னஞ்சல்மூலம் சகோதரர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்திருந்தார். அது, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கருணாநிதி வெளியிட்டதல்ல, காங்கிரஸைக் காப்பாற்றுவதற்காக அவரால் வெளியிடப்பட்டது என்பது படித்தவுடனேயே புரிந்தது. இன்னுமா இவர் திருந்தவில்லை – என்கிற வருத்தத்தை மேலும் மேலும் அதிகரித்தது.
கருணாநிதியின் கேள்வி பதில் அறிக்கையின் ஒரே நோக்கம், காங்கிரஸைக் காப்பாற்றுவதுதான் என்பதைப் பளிச்சென்று பறைசாற்றும் ஒரே ஒரு வரியைமட்டும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தைப் பற்றி அறிக்கையில் குறிப்பிடுகிறார் கருணாநிதி. இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை “நமது வற்புறுத்தலினால் இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றினார்கள்” என்கிறார் முத்தமிழறிஞர். தன்னுடைய தமிழறிவை, தன்னுடைய கேடுகெட்ட நண்பர்களைக் காப்பாற்ற எப்படியெல்லாம் அவர் பயன்படுத்த முயல்கிறார் என்பதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது.
கருணாநிதி சுயம்பு. அவரது தமிழ் அவரிடமிருந்தே எழுந்தது. உறங்கிக் கொண்டிருந்தவர்களைக் கூட உலுப்பி எழுப்பியது அந்த ஆவேசத் தமிழ். அவருடைய பேனா முனையிலிருந்து தீப்பிழம்பு வெளியாவதைப் பார்த்து, ஒரு சமயத்தில் சிலிர்த்துப் போனவன்தான் நானும். இன்று அவரது பேனா முனையிலிருந்து காங்கிரஸ் என்கிற சீழ்பிடித்துப் போன புண்ணுக்குப் பூசுகிற களிம்பு வெளியாவது காலத்தின் கொடுமை. ஆவேசத் தமிழ் போய், பட்டுத்துணிக்காகப் பலவேசக்காரன் பாடுகிற பாட்டாகத் தேய்ந்துபோய்விட்டது திருவாரூர்.
கருணாநிதி மாதிரி சுயம்பாக இல்லாவிட்டாலும், அவரால் பெரிதும் மதிக்கப்பட்ட பேராசிரியர் மெ.சுந்தரத்திடமும், எங்களுடைய ஆதர்ச சக்தியாக இன்றைக்கும் திகழும் பேராசிரியர் இரா.இளவரசு அவர்களிடமும், எங்களைத் தட்டிக்கொடுத்துத் தயார் செய்த பொன்.செல்வகணபதியிடமும் தமிழ் கற்றவன் என்பதால், கருணாநிதியின் இந்த அறிக்கையைக் கவலையுடன் கவனிக்கிறேன் நான்.
சென்ற ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்கமுடியாது என்று இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு – எப்படியெல்லாம் அடம்பிடித்தது என்பது ஊரறிந்த ரகசியம். கோபாலபுரத்துக்கு மட்டும் எப்படி அது தெரியாமல் போயிருக்கும்! கொல்லப்பட்ட ஈழத்துச் சொந்தங்களுக்கு நியாயம் கிடைக்கக் கூட மன்மோகன் அரசு முட்டுக்கட்டை போட முயல்வதைப் பார்த்து தமிழகமே கொதித்து எழுந்தபிறகுதான் பணிந்தது மத்திய அரசு… பணிந்தது – என்று கூட சொல்லக்கூடாது… பணிந்ததைப் போன்று நடித்தது.
தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டு, அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகவைக்கும் அத்தனை அன்டர்கிரவுண்ட் வேலைகளையும் ராஜபட்சே அரசுடன் கூட்டுசேர்ந்தே இந்தியா செய்தது என்பதை, கருணாநிதியாலேயே கூட மறுக்க முடியாது. அவரால் மட்டுமல்ல, டெல்லியில் முகாமிட்டிருக்கும் ஸ்டாலின் கோஷ்டியால் கூட…. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் – விவரம் தெரிந்த அண்ணன் சுப.வீரபாண்டியனால் கூட மறுக்கமுடியாது.
உண்மையைப் பேசவேண்டுமென்றால், எப்படிப் பேசியிருக்க வேண்டும்! “அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு முதலில் தயங்கியது. தி.மு.க.தான் அதை ஆதரிக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னது. அதையடுத்து, தீர்மானத்தை இந்தியாவும் ஆதரித்தது. அதனால்தான் தீர்மானம் நிறைவேறியது. ஆகமொத்தத்தில் தீர்மானம் நிறைவேறியதே எங்களது முயற்சியால்தான்” என்று சொல்லியிருக்கவேண்டும். இதில் ஓரளவு உண்மையும் இருந்திருக்கும்… சுய தம்பட்டத்தையும் அப்பட்டமாக இல்லாமல் அமுக்கி வாசித்திருக்கமுடியும்.
காங்கிரசுக்கு வலிக்காமல் சொல்ல வேண்டிய நிலையில் கருணாநிதி இருக்கிறாரென்பதால், தீர்மானத்தை நீர்த்துப் போகவைக்க இந்தியா அன்டர்கிரவுண்ட் வேலை செய்தது என்பதை வேண்டுமானால் சொல்லாமல் விட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, தீர்மானத்தை ஆதரிக்கவே முரண்டுபிடித்த மன்மோகன் அரசின் அடாவடித்தனத்தை மூடிமறைக்க முயல்கிறாரே கருணாநிதி….. எதற்காக? ஏன் இந்த வேண்டாத வேலை? தமிழினத் தலைவர் – இமேஜைக் காப்பாற்றவே தலைகீழாய் நிற்கவேண்டிய நிலையில் இருக்கிற ஒருவர், காங்கிரசுக்கும் சேர்த்து பங்கர் கட்டுவேன் என்று அசட்டுப் பிடிவாதம் பிடிப்பதற்கு என்ன அர்த்தம்!
தமிழினத்துக்குத் துரோகம் செய்துவிட்டார் – என்கிற குற்றச்சாட்டிலிருந்தே விடுபடமுடியாத கருணாநிதி, ஒரு தமிழின விரோத இயக்கத்தைக் காப்பாற்ற தன்னை வாழவைத்த தமிழைத் தவறாகப் பயன்படுத்தி, தமிழ் மொழிக்கும் துரோகம் செய்ய முயலலாமா?
தீர்மானத்தை ‘நமது வற்புறுத்தலினால் இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றினார்கள்’ என்கிற சொற்றொடர் மோசடியா இல்லையா என்பதை முத்தமிழறிஞரின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். தெரியாமல் எழுதிவிட்ட வார்த்தையா, தெரிந்தே எழுதப்பட்ட வார்த்தைப் புரட்டா என்பதை அவர் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளட்டும்.
26 மைலில் நடந்தது, இனப்படுகொலை தான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமேயில்லை. அதை மூடிமறைக்க போர்க்குற்றம் என்கிற வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு தரப்புமே போர்க்குற்றத்தில் ஈடுபட்டது – என்று சொல்வது சரியான பம்மாத்துவேலை. இந்தப் பம்மாத்து வார்த்தையிலிருந்து கூட விடுபட்டுவிட முயல்கிறது இலங்கை. கற்றுக்கொண்ட பாடம் நல்லிணக்க ஆணையம் – என்றெல்லாம் மோசடி வேலையில் இறங்குகிறது. அந்த மோசடி முறியடிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான், சேம் சைடு கோல் போட கடைசி நிமிடத்தில் இந்தியாவைக் களத்தில் இறக்குகிறது. இந்த மோசடியை மூடிமறைக்க, தமிழையே மோசடியாகப் பயன்படுத்துவது, பெற்ற தாயையே இழிவுபடுத்துவதன்றி வேறென்ன!
இன்று மீண்டும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரப் போகிறது ஜெனிவாவில். இந்தியாவையும் அருகில் வைத்துக்கொண்டு அந்தத் தீர்மானத்தைத் தயாரிப்பது என்பது, ஓநாயை அருகில் வைத்துக்கொண்டு ஆட்டுக்குட்டிக்கு அபிஷேகம் செய்வதைப் போன்றது. இலங்கையைக் கண்டிக்கிற தீர்மானத்தை, இலங்கையிடம் கையேந்துகிற தீர்மானமாக இந்தியா மாற்றிவிடும் என்பதில் சந்தேகமேயில்லை.
கருணாநிதி சொல்வதைப் போல், தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கட்டும்! தீர்மானத்தை அங்கீகரிக்கிற தகுதி அதற்கு இல்லை என்பதால், அந்த விஷயத்தில் அது தலையிடக்கூடாது என்று கறாராகச் சொல்லட்டும் கருணாநிதி. ‘சென்ற தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததைப் போல் இந்தத் தீர்மானத்தையும் இலங்கைப் பாதுகாப்புத் தீர்மானமாக மாற்றிவிடாதீர்கள்’ – என்று மனசாட்சியுடன் அவர் பேசினால், இழந்த மரியாதையில் ஒன்று ஒன்றரை சதவிகிதத்தையாவது மீட்கமுடியும் அவரால்!
‘இலங்கை ஆட்டுக்குட்டியல்ல – ஓநாய்’ என்பது சர்வதேசத்தாலும் அது அம்மணமாக்கப்படும்போதுதான் அம்பலமாகிறது. இறையாண்மையுள்ள இந்தியாவோ அது ஆடு தான் என்று அடித்துச் சொல்ல தொடர்ந்து முயல்கிறது. அதற்காக சிங்கள அரசின் அடிமை மாதிரி இந்தியா செயல்படுகிறது. இதைப்பற்றி இன்னும் விரிவாகப் பேசவேண்டும்.
அதற்குமுன், 2009 தொடக்கத்திலேயே ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைத் தடுக்கக் கிடைத்த ஓர் அற்புதமான வாய்ப்பை கோபாலபுரம் எப்படித் தட்டிக்கழித்தது என்கிற விவரத்தையும் விளக்கவேண்டும். அண்ணன் சுப.வீரபாண்டியன் போன்ற உன்னதமான உணர்வாளர்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த உண்மையையும் உரக்கப் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது இப்போது!
புகழேந்தி தங்கராஜ்
நன்றி தமிழக அரசியல்