மக்கள் வரிப்பணத்தை விரயமாக்குவதில், கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, மாறி மாறி ஆட்சி செய்த இரு திராவிடக் கட்சித் தலைவர்களுமே தங்கள் ஈகோவை திருப்தி செய்வதற்காக, இப்படி போட்டா போட்டிகளில் ஈடுபட்டு, மக்களின் வரிப்பணத்தை கபளீகரம் செய்திருக்கிறார்கள். ஒரு சிறந்த உதாரணம், புதிய தலைமைச் செயலக கட்டிடம். புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்ட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, கருணாநிதியின் நேரடியான மேற்பார்வையில் அக்கட்டிடம் கட்டப்பட்டது.
அக்கட்டிடத்தின் கட்டுமானப்பணிகளை கருணாநிதி ஏறக்குறைய தினந்தோறும் சென்று பார்வையிட்டு, அங்கே அமைந்திருந்த மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு உணவிட்டு, கட்சித் தலைவர்களுடன் குடும்ப பிரச்சினை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை விவாதிப்பது வழக்கம். எப்படியாவது அந்த தலைமைச் செயலகத்தை ஆட்சி முடிவதற்குள் திறந்து விட வேண்டும் என்பதற்காக, தோட்டா தரணி வடிவமைப்பில் ஒரு செட் அமைத்து, அவசர அவசரமாக சட்டமன்றக் கூட்டத்தொடரையும் நடத்தினார். அந்தக் கட்டுமானப் பணிகள் நடைபெறும் சமயத்தில் வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 சிமென்ட் மூட்டைகள் மழையில் நனைந்து அப்படியே வீணானது. ஆனால் அது பற்றி துளியும் கவலைப்படாமல் மீண்டும் சிமென்ட் மூட்டைகள் வாங்கப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடர்ந்தன. ஆனால், காலம் அவரை மீண்டும் முதலமைச்சராக அக்கட்டிடத்தினுள் நுழைய விடவில்லை.
மீண்டும் முதலமைச்சரான ஜெயலலிதாவுக்கு அக்கட்டிடத்திலிருந்து செயல்பட விருப்பமில்லை. இதற்கு ராசி இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அக்கட்டிடம் கட்டும் தருவாயிலேயே, பல இடங்களில் ஒட்டுக் கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டு, ஜெயலலிதாவின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வகை செய்யப்பட்டிருந்தது என்ற ஒரு தகவலும் காரணம். இந்தக் காரணங்களினால், ஜெயலலிதா பழைய புனித ஜார்ஜ் கோட்டையிலேயே முதலமைச்சராக தொடர்ந்தார். தலைமைச் செயலகத்தை மாற்றும் திட்டத்தையும் கைவிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது. அக்கட்டிடத்தை என்ன செய்யலாம் என்று பல்வேறு தரப்பிலிருந்து ஆலோசனைகள் வந்தன. சவுக்கு தளத்தில் கூட, சென்னை நகரில் பல்வேறு இடங்களில் இருக்கும் துறைத் தலைமை அலுவலகங்களை பொதுமக்களின் வசதி கருதி, ஒரே இடத்தில் மாற்ற அந்த கட்டிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில், சென்னையில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களையும், அந்தக் கட்டிடத்துக்கு மாற்றலாம் என்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், நல்ல ஆலோசனைகளை ஏற்பவரா ஜெயலலிதா ? தான்தோன்றித்தனமாக முடிவெடுப்பதில் ஜெயலலிதாவுக்கு நிகர் யார் ? அரசு அலுவலகங்கள் மற்றும், சட்டசபைக்காக கட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தை பன்நோக்கு மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டார் ஜெயலலிதா. அப்படி உத்தரவிட்டதோடு நிற்காமல், அந்தக் கட்டிடத்தைக் கட்டியதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, ஒரு விசாரணை ஆணையத்தையும் நியமித்தார். (ஓய்வு பெற்ற அதிமுக நீதிபதிகளுக்கு மறு வேலை வாய்ப்பு தர வேண்டாமா ?) அரசின் இந்த முடிவால், கடந்த திமுக ஆட்சியில் சட்டமன்றப் பேரவைக்காக நிறுவப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குளிர்சாதனக் கருவிகள் அத்தனையும் பாழாயின. அலங்கார விளக்குகள், இதர பொருட்கள் என்று அத்தனையும் தூசு படிந்து பாழாகத் தொடங்கியிருந்தன.
அதிமுகவை ஒப்பிடும்போது, திமுகவின் வழக்கறிஞர் அணி வலுவானது. அதிமுகவில் உள்ள அடிமைகள் போன்றவர்கள் அல்ல அவர்கள். சட்டம் அறிந்தவர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்து ஜெயலலிதாவின் முடிவுக்கு தடை விதிக்கக் கோரினார்கள். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த வழக்கு சில டெக்னிக்கல் காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும் பால் வசந்தகுமார் ஆகியோரால் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா அரசின் முடிவு சரியா, தவறா என்று தீர்ப்பளிக்க வேண்டிய நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் கிட்டத்தட்ட, ஜெயலலிதாவுக்காவின் தொலைநோக்குப் பார்வையை மறைமுகமாகப் புகழ்ந்திருந்தார்கள். “சென்னையில் ராஜீவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும், ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை நகருக்கு அது போதாது. (ஒரு கோடி மக்களுக்கு இப்போது இருக்கும் கழிப்பிடங்கள் கூடத்தான் போதாது. சென்னை நகர் முழுக்க கக்கூஸ் கட்டிவிடலாமா ) சென்னையில் அகில இந்திய மருத்துவமனைக்கு (AIIMS)க்கு நிகரான மருத்துவமனை ஒன்று கூட இல்லை. ஆகையால் இந்தக் கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றும் முடிவு பொது நலன் சார்ந்ததே. அந்த முடிவு, விளிம்பு நிலை மக்களுக்கான சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட முடிவு. அரசு, இந்த மருத்துவமனையை தொடங்குவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கலாம்” என்று தீர்ப்பளித்தனர்.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் 24 ஜனவரி 2013. இதையடுத்து இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிப்ரவரி 1 அன்று இவ்வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று தெரிவித்தது.
இதற்கிடையே, இக்கட்டிடம் தொடர்பாக வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தடையில்லா சான்று தலைமைச் செயலகத்துக்கானது. மருத்துவமனைக்கான தடையில்லா சான்று பெறாமல், இக்கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது என்று அதை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தீர்ப்பாயம் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற தீர்ப்பாயம், தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்யக் கூறி உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 2012.
இதற்கிடையே ஜனவரி 24 அன்று சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவமனைக்கு எதிரான பொதுநல வழக்கை தள்ளுபடி செய்த உடனேயே பொக்லென் எந்திரங்கள், லாரிகள் ஆகியன உள்ளே சென்றன. நூற்றுக்கணக்கான பணியாளர்கள் உள்ளே நுழைந்து மருத்துவமனையாக மாற்றுவதற்கான வேலைகளைத் தொடங்கினார்கள்.
தலைமைச் செயலகம் செயல்படுவதற்காக தடையில்லா சான்று வழங்கப்பட்ட ஒரு கட்டிடம் மருத்துவமனையாக மாற்ற தடையில்லா சான்று பெறாமல் செயல்படத் தொடங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருந்தபொழுதே, தடையில்லா சான்று பெறப்பட்டது. அந்த தடையில்லா சான்று சட்டரீதியாக சரியானதன்று என்றும், பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்திருந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே இந்த மருத்துவமனையை அவசர அவசரமாக திறந்தார் ஜெயலலிதா. அரசு அலுவலகங்களுக்காக கட்டப்பட்ட ஒரு கட்டிடம்… இரண்டு ஆண்டுகளாக பூட்டப்பட்டுக் கிடந்த ஒரு கட்டிடம். அந்தக் கட்டிடத்தில் உரிய மாறுதல்களைச் செய்து, மருத்துவமனையை திறந்தால் என்ன குடி முழுகிவிடும் ? அப்படி என்ன அவசரம் ஜெயலலிதாவுக்கு ?
இப்படி அவசர அவசரமாக திறக்கப்பட்ட மருத்துவமனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இவ்வாறு மருத்துவமனை திறக்கப்பட்டது, தீர்ப்பாயத்தை அவமதிக்கும் செயல் என்றும் திமுக சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் இன்று விசாரணை நடைபெற்றது. அரசுத் தரப்பில் ஆஜரானவர் யார் தெரியுமா ? வேறு யார்…. “ வண்டு முருகன்தான். விசாரணை தொடங்கியதும், மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தன் வாதத்தைத் தொடங்கினார்.
பசுமைத் தீர்ப்பாயமானது உயர்நீதிமன்றத்துக்கு நிகரான அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு. அந்த அமைப்பில், நிலுவையில் இருக்கும் வழக்கானது அந்த கட்டிடம் மருத்துவமனை அமைக்கப்பட ஏற்றதா, அந்த தடையில்லா சான்று சட்டபூர்வமாக சரியானதா, என்பன போன்ற விஷயங்களை முடிவு செய்வதற்காக. அந்த வழக்கு நிலுவையில் இருக்கையில், அரசு இந்த மருத்துவமனையை தொடங்கியுள்ளது சட்டவிரோதமானது. இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மருத்துவமனைக்கான தடையில்லா சான்று கோரி அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில், இந்த மருத்துவமனைக்காக கட்டிடத்தில் என்ன மாறுதல்கள் செய்யப்போகிறார்கள் என்ற விபரம் கூட இல்லை. மேலும், இது கடலுக்கு அருகே அமைந்துள்ள கட்டிடம் என்பதால், இக்கட்டிடத்துக்கு தடையில்லா சான்று வழங்க மத்தி அரசுக்கு மட்டுமே அதிகாரம் எள்ளது என்றார்.
நீதிபதி சொக்கலிங்கம், வண்டு முருகனைப் பார்த்து, இந்தக் கட்டிடம் மருத்துவமனைக்கு ஏற்றதா இல்லையா என்பதை முடிவுசெய்யவே இத்தீர்ப்பாயம் உள்ளது. இங்கே இந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது உங்களுக்கு என்ன அவசரம் என்று கேட்டார் ? உயர்நீதிமன்றம் மருத்துவமனைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ததுமே, 500 பணியாட்கள் மருத்துவமனை வேலைகளைத் தொடங்கினார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளதே இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்.
உடனே வண்டு முருகன், மை லார்ட்.. அந்தப் பணியாளர்கள் மெட்ரோ ரயில் வேலைக்காக வந்தவர்கள். மருத்துவமனை பணிக்காக வரவில்லை என்றார். ஆக, அந்த இந்து பத்திரிக்கையின் செய்தியாளர் மருத்துவமனைப் பணியாளர்கள் யார், மெட்ரோ ரயில் பணியாளர் யார் என்பதை சரியாகத் தெரியாமல் செய்தி வெளியிட்டார் என்று கூறுகிறீர்களா என்றார் நீதிபதி.
ஆமாம் மைலார்ட். அவர் தவறாக செய்தி வெளியிட்டுள்ளார் என்றார். மருத்துவமனை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. அது தொடர்பான வழக்கு முடிந்தபிறகு மருத்தவமனையைத் தொடங்கியிருக்கலாமே… ஏன் உங்களுக்கு அவசரம் ? என்று கேட்டார் நீதிபதி.
மை லார்ட். இந்த மருத்துவமனையைத் திறக்க வேண்டுமென்று பொதுமக்கள் தரப்பிலிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்தன. அதனால்தான் மருத்துவமனை திறக்கப்பட்டது என்றார். அப்படியென்றால் பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் பரவாயில்லை. மருத்துவமனையைத் திறங்கள் என்று உங்களிடம் சொன்னார்களா என்றார் நீதிபதி. ஆமாம் மைலார்ட் என்றார் வண்டு.
இது ஒன்றும் பெரிய மருத்துவமனை இல்லை மைலார்ட். பத்துக்கு பத்து அறையில் அமைந்துள்ள சிறிய மருத்துவமனை. தீவிரமான நோய் காரணமாக அவதிப்படும் நோயாளிகளை கவனிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனை. அவர்களை சமாதானப்படுத்தி, வேறு மருத்துவமனைக்கு அனுப்பும், மாற்று மைய மருத்துவமனையாகவே (Referral Unit) இது செயல்படுகிறது. நோயால் அவதிப்படும் பொதுமக்களுக்கு எப்படியாவது சிகிச்சை அளிக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் இது திறக்கப்பட்டுள்ளது என்றார்.
அந்த பத்துக்கு பத்து மருத்துவமனையை வேறு எங்கு வேண்டுமானாலும் திறந்திருக்கலாமே… ஏன் இந்த இடத்தில் திறந்தீர்கள் என்று கேட்டார்.
மீண்டும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. அவர்களின் நோயை கண்டறிந்து சிகிச்சை வழங்குவதற்காக இது திறக்கப்பட்டது. நோய் என்ன என்று கண்டறிந்ததும், அவர்கள் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள் என்றார் வண்டு.
மொத்தம் எத்தனை பேர் அங்கே பணியாற்றுகிறார்கள் என்றார் நீதிபதி. மொத்தம் 6 டாக்டர்கள் உள்ளிட்ட 20 பேர் பணியாற்றுகிறார்கள் என்றார் வண்டு. பெரிய அளவில் சிகிச்சை ஒன்றும் வழங்கவில்லை மைலார்ட் என்று தொடர்ந்தார்.
சிகிச்சை வழங்கவில்லை என்பது வெளியே தெரிந்தால் எந்த நோயாளியும் அங்கே வராமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார் நீதிபதி.
இல்லை மைலார்ட்… ஏராளமான நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்றார். 24 ஜனவரிக்கு முன் அந்த ஏராளமான நோயாளிகள் எங்கே சென்றார்கள். அவர்களுக்கு இப்படி ஒரு மருத்துவமனை இருக்கிறது என்று எப்படித் தெரியும் என்றார் நீதிபதி.
தமிழர்கள் மிக மிக அறிவாளிகள் என்றார் வண்டு முருகன். அவர்கள் செய்திகளை கூர்ந்து கவனிக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுமே உடனே மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள். சென்னை மெடிக்கல் டூரிஸத்தில் முதலிடத்தில் இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக சென்னைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் தனியார் மருத்தவமனைகளில் சிகிச்சை எடுக்கிறார்கள். ஆனால் ஏழைகள் எங்கே போவார்கள்… ? அப்படி சிகிச்சைக்காக வரும் ஏழைகளை பிரித்துப் பார்த்து, யாருக்கு என்ன நோய் என்று கண்டறிந்து அவர்களுக்கு அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சென்னை பொது மருத்துவமனையை எடுத்துக் கொண்டால், இதய நோயாளியாக வருபவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்கிறது. நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள். ஒருவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் பல நாட்கள் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி காத்திருக்கும் அந்த நாட்களில் சிலர் இறந்து கூடப் போய் விடுகிறார்கள். அப்படி நெருக்கடியில் இருக்கும் அந்த நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகவே இம்மருத்துவமனை திறக்ககப்பட்டது. அரசு ஏழைகளுக்கு உதவக்கூடாது என்பதற்காகவே அரசில் உள்நோக்கத்தோடு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகருக்கு சிகிச்சைக்காக உகாண்டா, ஜெர்மனி, போன்ற நாடுகளில் இருந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் பணம் இருப்பதால் தனியார் மருத்துவமனைக்கு சென்று விடுகிறார்கள். ஏழைகள் எங்கே போவார்கள் ? ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் அப்பாய்ன்ட்மென்ட் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. உரிய நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. அதனால்தான் இந்த மருத்துவமனையைத் திறந்தோம் என்றார் வண்டு முருகன்.
அவர் பேசி முடித்ததும், நீதிபதி தீர்ப்பை வழங்கினார். “சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மருத்துவமனை தொடர்பாக இருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டவுடன், மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதை செய்தித்தாள் வாயிலாக அறிகிறோம். இந்தத் தீர்ப்பாயத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள அரசு, மருத்துவமனை திறக்க இத்தீர்ப்பாயத்தின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். அந்தக் கட்டிடத்தில் மாறுதல் செய்வது, இடிப்பது, புதிய கட்டுமானம் செய்வது என்று எதுவாக இருந்தாலும், இந்தத் தீர்ப்பாயத்ன் முன் நிலுவையில் உள்ள வழக்குக்கு எதிராகவே அமையும். தடையாணை இல்லை என்று சொல்லப்படும் விளக்கம் ஏற்புடையதல்ல. அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூட, பெரிய அளவில் மாறுதல்கள் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளதே ஒழிய, மாறுதல்களே செய்யப்படவில்லை என்று கூறப்படவில்லை. எங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மருத்துவனை இயங்குவதை தெரிவிக்கின்றன. அரசு வழக்கறிஞரே, 6 மருத்துவர்கள் மற்றும் 14 பணியாளர்களோடு புதிய மருத்தவமனை செயல்படுவதை ஒப்புக் கொண்டுள்ளார். நோயாளிகளுக்கு உள்ள நோயைக் கண்டறிந்து பொது மருத்துவமனைக்கு அனுப்புவதற்காகவே இந்த மருத்துவமனை செயல்படுகிறது என்று சொல்வது ஏற்புடையதல்ல. பெரிய அளவில் மருத்துவமனையின் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது இது மருத்துவமனைதான் என்பதையும், அரசின் அவசரத்தன்மையையும் காட்டுகிறது. இந்த வழக்கின் விசாரணை முடியும்வரை, இந்த மருத்துவமனை செயல்படுவது நிறுத்தப்பட்டே ஆக வேண்டும். ஆகையால் இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, இந்த மருத்துவமனை செயல்படுவதற்கு தடை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டார்.
இதற்குப் பிறகு மீண்டும் தன் வாதத்தை தொடங்கினார் வண்டு முருகன். தீர்ப்பு முடிந்தபிறகு எப்படி வாதிட முடியும் என்று வியப்பாக இருக்கும். அதுதான் வண்டு முருகன்.
தடை உத்தரவை நீக்கி விடுங்கள் மை லார்ட் என்றார். ஒரு வாரத்துக்குள் என்ன ஆகி விடப்போகிறது என்றார். அதையேதான் நாங்களும் கேட்கிறோம். ஒரு வாரத்திற்குள் என்ன ஆகி விடப்போகிறது… நீங்கள் அவசரப்படாமல் இருந்திருந்தால் இந்த மனுவே தாக்கல் செய்யப்பட்டிருக்காதே… என்றார் நீதிபதி. இல்லை மைலார்ட்… ஏராளமான நோயாளிகள் இருக்கிறார்கள் என்றார். அந்த நோயாளிகள் 24.01.2013 வரை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றார் நீதிபதி. உடனே வண்டு முருகன், ஒரு வாரத்துக்குள் சிகிச்சை இல்லாமல் சில நோயாளிகள் இறக்க நேரிடும், அவர்கள் உயிரை அரசுதான் காக்க வேண்டும் அதனால் தடை உத்தரவை ரத்து செய்யுங்கள் என்றார்.
இந்த மருத்துவமனை கட்டுவதற்கு 100 அளவுகோல்கள் இருக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 50 அளவுகோல்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படி இந்த மருத்துவமனையை செயல்பட அனுமதிக்க முடியும்… அதுதானே இந்த வழக்கின் விவாதப்பொருளே என்றார். மேலும், மருத்துவமனை செயல்படுகிறது என்பதை நீங்களே உங்கள் பதில் மனுவில் பத்தி நாலில் ஒப்புக் கொண்டுள்ளீர்கள் என்றார்.
பதில் மனு தப்பாக தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அது அவசரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் வண்டு முருகன். மேலும் தொடர்நது நூறு நோயாளிகள் பொது மருத்துவமனைக்கு வந்தால் ஒரு பத்து பேருக்கு இடமில்லாமல் போய் விடுகிறது. அவர்களுக்கு இடம் கொடுப்பதற்காவே இந்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய குற்றமா.. அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21ல் உத்தரவாதப்பட்டுள்ள வாழும் உரிமையில் மருத்துவ சிகிச்சையும் அடக்கம். அதை இந்த அரசு செய்தது ஒரு தவறா…. இந்த மருத்துவமனை என்ன அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதா ? மனிதாபிமான அடிப்படையில் இந்த மருத்துவமனையை செயல்பட அனுமதியுங்கள் என்றார் வண்டு முருகன்.
இந்தப் புகைப்படத்தில் உள்ள மருத்துவமனையின் பெயர்ப்பலகையைப் பாருங்கள். அதில் தெளிவாக மருத்துவமனை என்று உள்ளது என்றார் நீதிபதி.
அது அடையாளம் காட்டுவதற்காக மட்டும் வைக்கப்பட்டுள்ளது மை லார்ட் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றார்.
நீதிபதி, தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. நீங்கள் கேட்டுக் கொண்டபடி 13ம் தேதி உள்ள விசாரணையை நாளைக்கே விசாரிக்கிறேன். அவ்வளவுதான் செய்ய முடியும் என்றார்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்ன கொடுங்குற்றமா…. இது என்ன சட்டவிரோதமான காரியமா என்று கோபமாக கத்தினார் வண்டு. உச்ச நீதிமன்றம் செல்வோம் என்றார் வண்டு.
இதைக்கேட்டதும் நீதிபதி அவசரப்பட்டு தடையுத்தரவு பிறப்பித்து விட்டோமோ…. புள்ளைப் பூச்சிக்கெல்லாம் மீசை மொளைக்கும்னு கனவா கண்டேன் என்று நினைத்தது போலவே குழப்பமாக பார்த்தார்.
உடனே சுதாரித்துக் கொண்டார். உங்கள் இஷ்டத்துக்கு இந்த நீதிமன்றம் செயல்பட முடியாது மிஸ்டர் ஏ.ஜி. உச்ச நீதிமன்றம் போகவேண்டுமென்றார் தாராளமாக போங்கள். உச்ச நீதிமன்றம் செல்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. வழக்கின் விசாரணைத் தேதியை முன்கூட்டியே எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்றார்.
அதன் பிறகு, திமுக வழக்கறிஞர் வில்சன், நான் நாளை வர இயலாது என்றார். அவர் வந்தாலும் வரவில்லை என்றாலும் நான் வாதிடுகிறேன் என்றார் வண்டு. வழக்கை நாளை ஒத்தி வைத்தார் நீதிபதி.
இன்று காலை, வண்டு முருகன் சொன்னபடி இந்த வழக்கு நடைபெறுகிறதா என்ற நேராகச் சென்று பார்த்த விடுவோம் என்று அந்த பன்நோக்கு மருத்துவமனைக்கு செல்ல முடிந்தது. அந்தக் கட்டிடம், அரசு அலுவலகங்களை மனதில் வைத்துக் கட்டியிருந்தது தெளிவாகத் தெரிந்தது. பெரிய சிலின்டர் போன்ற அமைப்பில் இருந்த கட்டிடத்தின் உள்ளே நுழைந்தால் ஒரு பக்கம் நோயாளிகளைப் பார்க்கும் அறை. மற்றொரு பக்கம் மருந்துகள் வழங்கும் அறை. இரண்டு டேபிள்களும், இரண்டு நாற்காலிகளும் போட்டு அமர்ந்திருந்தார்கள். ஒரு நாளைக்கு எத்தனை நோயாளிகள் வருகிறார்கள் என்றால், சராசரியாக 180 நோயாளிகள் வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதய நோயாளிகள் பிரிவும், நரம்பியல் நோயாளிகள் பிரிவும் செயல்படுவதாக பெயர்ப்பலகை கூறியது. இதய நோய் உள்ளவர்களுக்கு இந்த இடத்தில் எல்லா சிகிச்சையும் உள்ளதா என்ற கேட்டால், வந்தவர்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு வாசலில் தயாராக நிற்கும் 108 ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
முக்கால் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அரசுப் பொதுமருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்புவதற்கு பதிலாக நேராக பொது மருத்துவமனைக்கே அனுப்பி விடலாமே…. இப்படி அவசர அவசரமாக மருத்துவமனையைத் திறந்து, எவ்வித உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல், அரசு டீசலைப் போட்டு, பொது மருத்துவமனைக்கு அனுப்புவதால், ஜெயலலிதாவுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது… ? இப்படி அவசரமாக மருத்துவமனையைத் திறந்து, நீதிமன்றத்திடம் குட்டுப்படும் ஜெயலலிதாவின் அரசு முட்டாள் அரசா இல்லையா ?
மருத்துவமனைக் காட்சிகள்
குறிப்பு : இந்தக் கட்டுரை சீரியசாக எழுதப்பட்ட கட்டுரை. இதைப்படித்து விட்டு சிரித்தால், சிரிப்பவர்கள் மீது, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்படும்.