சகலகலா வல்லவன் திரைப்படம் 1982ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம். தமிழ்த்திரையுலகின் போக்கையே அப்படம் மாற்றியமைத்தது என்றால் மிகையாகாது. 176 நாட்கள் ஓடி வசூலில் சாதனை அமைத்தது அப்படம். அதற்குப் பிறகு, அந்தப் படத்தைப் போலவே, பழிவாங்கும் கதைகளோடு பல மசாலாப் படங்கள் வெளியாக அப்படம் ஒரு காரணியாக அமைந்தது.
கமலுக்கு மிக மோசமான தோல்விப்படமாக அமைந்தது ஹே ராம் திரைப்படம். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஹே ராம் படத்துக்கு, விமர்சகர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், வசூலில் படு பயங்கரமான தோல்வியைச் சந்தித்த படம் ஹே ராம்.
ஒரு ஹே ராம், சகலகலா வல்லவன் ஆக்கப்பட்ட கதைதான் விஸ்வரூபம். விஸ்வரூபம் திரைப்படம் எழுப்பியுள்ள எதிர்ப்பார்ப்பு, திரைப்படம் வெளியான பிப்ரவரி 7 அன்று மக்களை திருவிழாவைக் காணச் சென்றவர்கள் போல செல்லவைத்துள்ளது. ஏறக்குறைய தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் கலைஞானி என்ற பெயருக்கு முழுக்க முழுக்க தகுதியானவர் என்பதை விஸ்வரூபம் படத்தின் மூலம் நிரூபித்து விட்டார். தமிழ்ப் படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்தியதன் மூலம் ஒவ்வொரு தமிழனும் நெஞ்சை நிமிர்த்தி இறுமாப்போடு நடக்க வைத்துள்ளார். கமல்ஹாசனின் இந்த அற்புதத் திறமைக்கு தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல், தமிழகமே கடமைப்பட்டுள்ளது என்றெல்லாம் எழுதவேண்டும் என்று ஆசைதான். ஆனால் விஸ்வரூபம்……..??!!??
பெரிய ஸ்டார்களின் பிரச்சினை என்னவென்றால், ஒரு திரைப்படத்தில் மொத்த படத்தையும் அவர்களே ஆக்ரமிப்பது போன்ற திரைக்கதை அமைப்பது. இதற்கு கமல்ஹாசன் எந்த விதத்திலும் விதிவிலக்கல்ல. அந்தப்படத்தின் அத்தனை ப்ரேம்களிலும் அவரே தோன்றுவது போல கதை அமைப்பார். தப்பித்தவறி வில்லனைக் காட்டினாலும், அவரும் கதாநாயகனைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். அந்த விதிக்கு சற்றும் மாறாமல், விஸ்வரூபம் அமைந்துள்ளது.
கதை நாயகனின் மனைவியாக வரும் நிருபமா ஒரு மனவியல் ஆலோசகரிடம் ஆலோசனை பெறும் காட்சியில் படம் தொடங்குகிறது. நிருபமா பிஎச்டி நியூக்லியர் ஆன்க்காலஜி முடித்த ஒரு ஆராய்ச்சியாளர். அமெரிக்காவில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென்ற கனவில், கமல்ஹாசனை திருமணம் செய்து கொள்கிறார். கமல்ஹாசன் அமெரிக்காவில் ஒரு கதக் நடன ஆசிரியர். என் கணவர் என்னைக் கண்டு கொள்வதே இல்லை, ஆனால் எனக்கு நான் பணியாற்றும் நிறுவனத்தின் முதலாளி மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார் நிருபமா. நியூக்ளியர் ஆன்காலஜி படித்த ஆராய்ச்சியாளரான நிருபமா, சென்னைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவியை விட முதிர்ச்சி குறைவானவராக காட்டப்பட்டுள்ளார். இது ஒரு வித்தியாசமான பாத்திரப்படைப்பு என்று விமர்சகர்களால் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக இப்படிப்படைக்கப் பட்டாரா என்பது தெரியவல்லை.
உங்கள் கணவர் எப்படிப்பட்டவர் என்று அந்த மனவியல் மருத்துவர் கேட்டதும், மாணவிகளுக்கு கமல் கதக் நடனம் சொல்லிக் கொடுக்கும் பாடல். சங்கர் மஹாதேவனின் அற்புதமான பாடல் அது. அமெரிக்காவில் ஆண்கள் யாருமே கதக் நடனம் கற்றுக் கொள்ள மாட்டார்களா என்று தெரியவில்லை. அழகான பெண்கள் மட்டுமே கமலிடம் நடனம் பயில்கிறார்கள். பாடலின் இடையே, மைக்ரோ வேவ் அவனில் இருக்கும் சிக்கனை எடுக்கிறார் கமல். கமலின் மாணவியாக வரும் ஆன்ட்ரியாவைப் பார்த்து, ஏய் பாப்பாத்தி நீ உப்புப் பாத்து நல்லா இருக்கான்னு சொல்லு என்கிறார் கமல். நீங்க அசைவம் சாப்பிடமாட்டேள்… ஆனா இவ்ளோ நல்லா சமைக்கிறேளே…. என்று கேட்கிறார்கள் மாணவிகள். ஆம்படையாளுக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு வைக்கறதுதானே புருஷ லட்சணம் என்று பஞ்சர் ஆன டயலாக் பேசுகிறார் கமல். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப் காட்ட வேண்டுமென்பது கமலைப் பொருத்தவரைக்கும் விதி அல்லவா… அதனால் இந்தப் படத்திலும் கதக் நடனக் கலைஞராக வரும் பாத்திரம், பாப் வெட்டிக்கொண்ட ஆங்கிலோ இந்தியப் பெண்மணி போன்ற ஹேர்ஸ்டைல் வைத்திருக்கிறார். உரத்த குரலில் பேசுகிறார். பேச்சு, நடை உடை பாவனை அத்தனையிலும் பெண்மை நளினம் தெரியும் வகையில் பேசுகிறார். இதற்குள், கமலின் மாமா என்று கூறி, சேகர் கபூர் வருகிறார். இரவு உணவுக்கு வா என்று கமல் நிருபமாவை அழைத்துதும், நிருபமாவை கரெக்டிங் செய்து கொண்டிருக்கும் அவர் நிறுவனத்தின் முதலாளி சலீம் வா டின்னர் சாப்பிடலாம் என்று அழைக்கிறார். அதற்கு முன்னதாக நிருபமாவை அவருடைய அறைக்கு அழைத்து, கத்தை கத்தையாக பணத்தை ரகசிய அறையில் வைக்கிறார். அப்போது நிருபமாவிடம் அவர் கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டை சொல்லி அதை திறக்குமாறு சொல்கிறார். அணு சக்தி தொடர்பாக ஆராய்ச்சி செய்யும் கம்பெனியின் முதலாளி பாஸ்வேர்டை அவர் கரெக்டிங் செய்யும் பெண்ணிடம் எப்படி சொல்வார் என்று நீங்கள் கேள்வி கேட்டால் நீங்கள் கலை ரசனை இல்லாதவர். பணத்தை உள்ளே வைப்பதை எதற்காக இந்த இடத்தில் முக்கியமான காட்சியாக வைக்கிறார் என்ற பார்வையாளர்கள் பதைபதைப்படைகிறார்கள். அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை பின்னால் கமல் அற்புதமாக கையாள்கிறார். நைஜீரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் எனக்கு க்ளையன்டுகள் உள்ளார்கள், அவர்கள் வங்கிகளை நம்புவதில்லை. அதனால்தான் நான் பணத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் என்கிறார் சலீம். நைஜீரியா எப்போது மத்திய கிழக்கு நாடானது என்பதையெல்லாம் கேட்காதீர்கள்.
நிருபமா கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும் மனவியல் ஆலோசகர், பிடிக்கவில்லையென்றால் விவாகரத்து கேட்டு பிரிந்து விட வேண்டியதுதானே என்று கூறுகிறார். அதற்காகத்தானே நான் ஒரு தனியார் டிடெக்டீவை வைத்து அவரைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன் என்று கூறுகிறார் நிருபமா. அந்த தனியார் டிடெக்டீவ், சௌகார்பேட்டையில் பானி பூரி விற்பவரைப் போலவே இருக்கிறார். அது அமெரிக்காவில் நடப்பது என்பதால், குளிருக்கு ஜெர்க்கினையெல்லாம் போட்டுக் கொண்டு கமலை பின்தொடர்கிறார். கமல், அமெரிக்காவில் உள்ள ஒரு மசூதிக்குள் நுழைந்து தலையில் தொப்பி போட்டுக்கொண்டு தொழுகை நடத்துவதை பார்த்து நிருபமாவிடம் போன் பண்ணி தெரிவிக்கிறார். அமெரிக்காவில் உள்ள அந்த மசூதியில் வித்யாசமாக, ஷோகேஸில் துணிகளை மாட்டி வைத்திருப்பது போல கண்ணாடிக்கு அருகிலேயே அமர்ந்து தொழுகை நடத்துகிறார்கள்.
அதைப் பார்த்ததும் நிருபமா அவன் பின்னாடியே போ என்கிறார். இதற்கிடையே கமல் சேகர் கபூரிடம் போன் செய்து, நிருபமா அனுப்பிய குண்டன் என் பின்னாடியே வர்றான் மாமா என்கிறார். அவனை உடனடியாக கழற்றி விடு என்கிறார் சேகர் கபூர். கமல், அவரை ஒரு வேர்ஹவுஸ் இருக்கும் கோடவுன் வரை அழைத்துச் சென்று, கழற்றி விடுகிறார். அந்த வேர்ஹவுசுக்குள் அந்த பானிபூரி வியாபாரி நுழைய முயற்சிக்கையில், அதன் கதவு திறந்து, ஆறடி உள்ள வில்லன் போல முகத்தை இறுக்கமாக வைத்திருக்கும் ஒருவர் வந்து, அந்த ஆளை தலைமேலேயே கம்பியால் அடிக்கிறார். அமெரிக்காவில் தீவிரவாதச் செயலில் ஈடுபடும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்த அந்த நபர், வெகு சாதாரணமாக கொலை செய்து அந்த நபரை தூக்கி குளிர்பதன அறைக்குள் வைத்திருக்கிறார்.
இதற்கு நடுவே, நிருபமாவின் கம்பெனி முதலாளி சலீமுக்கும், வேர்ஹவுசில் உள்ள வில்லனுக்கும் தொடர்பு உள்ளது என்கிற திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை சீட் நுனிக்கு வரவைக்கிறார் கமல். கொல்லப்பட்ட அந்த ப்ரைவேட் இன்வெஸ்டிகேட்டர் தன் பாக்கெட்டிலேயே நிருபமாவின் விசிட்டிங் கார்டை வைத்திருப்பது அடுத்த திருப்பம். அந்த விசிட்டிங் கார்ட் இல்லாவிட்டால் எப்படி வில்லன் கூட்டம் நேரடியாக நிருபமாவின் ஆபீசுக்கு வர முடியும் ?
நிருபமாவின் பாஸ் மற்றும் நிருபமா
சலீமைத் தொடர்பு கொள்கிறார்கள் வில்லன் கூட்டத்தினர். அந்த வில்லன் கூட்டத்துக்கு அணு ஆயுதம் செய்ய கச்சாப் பொருட்களை சப்ளை செய்பவர்தான் சலீம் என்பது அடுத்த திடுக்கிடும் திருப்பம். ஒரு ஃபிகரை கரெக்டிங் செய்வதற்காக, தனது கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டையே அந்த ஃபிகரிடம் சொல்லும் அளவுக்கு ஒரு டெர்ரரான வில்லன், அணு ஆயுதங்களுக்கான யுரேனியம் போன்ற பொருட்களை சப்ளை செய்கிறான் என்பது உலகத் திரையுலக வரலாற்றிலேயே ஒரு அற்புதமான காட்சியமைப்பு.
துணை வில்லன் மற்றும் நிருபமாவின் முதலாளி சலீம்
நிருபமாவின் முதலாளி சலீமும், வில்லன் க்ரூப்பும், கதக் நடனக் கலைஞரான கமலையும் அவர் மனைவியையும் கடத்தி அதே வேர்ஹவுசுக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே கமலை அடி அடியென்று அடிக்கிறார்கள். போதாத குறைக்கு சலீம் வேறு, அவர் கரெக்டிங் செய்து கொண்டிருந்த நிருபமாவை அறைகிறார். நான் ஒரு முஸ்லீம் என்று கமல் கதறியும், அவரின் முஸ்லீம் சகோதரர்கள் அவரை அடிப்பதை நிறுத்தவில்லை.
இதற்கு நடுவே படத்தின் மெயின் வில்லன் முல்லா ஓமர் ஒரு கைதேர்ந்த திரைப்பட எடிட்டரைப் போல, ஒரு ஜிகாதி வீடியோவின் எடிட்டிங் பணியில் இருக்கிறார். அந்த ஜிகாதி வீடியோவில், அணு ஆயுதத்துக்கான கெமிக்கல் ஃபார்முலா என்னவென்று விளக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் பல மொழிகளில். ஸ்ரீகர் பிரசாத்தை விட தீவிரமான எடிட்டிங் பணியில் முல்லா ஓமர் ஈடுபட்டிருக்கும்போது, கமலையும், அவர் மனைவியையும் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ள தகவல் முல்லா ஓமருக்கு தெரிய வருகிறது. அப்போது முல்லா ஓமர் இருவரின் புகைப்படத்தையும் அனுப்பி வை என்று கூறுகிறார். தன்னைப் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் கமல், புகைப்படம் எடுக்க விடாமல் முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொள்கிறார். அப்படி ஒரு அஷ்டகோணல் புகைப்படம் முல்லா ஓமருக்கு அனுப்பப்படுகிறது. அந்தப் புகைப்படத்தில் தெரிந்த கமலின் பாதி முகத்தைப் பார்த்த முல்லா ஓமர், கமலை அடையாளம் கண்டு கொள்கிறான். உடனே, கமலின் இரண்டு முட்டியிலும் சுட்டு, பத்திரமாக வைத்திருக்குமாறு கூறுகிறான்.
இதற்கு நடுவே தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு, பழைய எம்.ஜி.ஆர் படங்களில் வருவது போல, ரத்தம் வந்ததும் கோபம் வருகிறது. என்னைக் கொல்வதற்கு முன், என் கைக்கட்டை அவிழ்த்து விடுங்கள், நான் கடவுளைக் கும்பிட வேண்டும் என்கிறார். சரி என்று அவிழ்த்து விட்டதும், மேட்ரிக்ஸ் படத்தில் வருவது போல எதிரிகளைப் பந்தாடுகிறார். முதலில் சாதாரணமாக காட்டப்படும் சண்டைக் காட்சி, ஸ்லோ மோஷனில் வேறு மீண்டும் காட்டப்படுகிறது. இது எதற்கென்றால், கமல் எவ்வளவு டெர்ரர் என்பதை சரியாக விளங்கிக்கொள்ளாத மரமண்டைகளுக்காக. மெயின் வில்லனாக வரும் முல்லா ஓமர், தொண்டையில் மீன் முள் மாட்டியவர் போலவே பேசுகிறார். அவர் அப்படிப் பேசுவதால், அவரின் டெர்ரர்தனம் மேலும் அதிகரித்து, பார்வையாளர்கள் அவரைக் கண்டு பயந்து, பாப்கார்னையெல்லாம் கீழே கொட்டுகிறார்கள்.
முல்லா ஓமர் கமல் இருக்கும் வேர்ஹவுசுக்கு வருவதற்குள், கமலும், அவரின் மனைவி நிருபமாவும் தப்பித்து விடுகிறார்கள். அந்த இடத்துக்கு வரும் முல்லா ஓமரின் அல்லக்கை, என்ன பாஸ் எல்லாத்தையும் கொன்னுட்டான் என்று வியப்பாக கேட்கிறார்… அப்புறம் கொல்ல மாட்டானா….. அவன் அல்கொய்தாவுக்கே ட்ரெயினிங் கொடுத்தவன் ஆயிற்றே என்கிறார் முல்லா ஓமர். இந்த இடத்தில் கமலின் கேரக்டரின் பன்முகப் பரிமாணங்களைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து வாயடைத்துப் போகிறார்கள். ப்ளாஷ் பேக்கில் படம் ஆப்கானிஸ்தானுக்குப் போகிறது. அங்கே ஆப்கானிஸ்தானையே கண் முன் நிறுத்தும்படி, அற்புதமான செட் போடப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் ஓசாமா பின் லேடன் தங்கியிருக்கிறார். நாசர் கையில் துப்பாக்கியைக் கொடுத்து, அவரை அரபு மொழி பேசும் தீவிரவாதியாகக் காண்பித்திருக்கிறார்கள். கமல் அந்த இடத்துக்குப் போனதன் பின்னணி என்னவென்றால், அவர் காஷ்மீரில் மிகச் சிறந்த தீவிரவாதி விருது பெரும் வகையில் சிறப்பாக செயல்பட்டார் அதனால்தான், இப்படிப்பட்ட தீவிரவாதி அல்கொய்தா ஆட்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அவரை இங்கே அழைத்து வந்தேன் என்கிறார் முல்லா ஓமர்.
வீட்டுக்கு திரும்பும் கமல் சேகர் கபூரிடம் சார் நாம் கிளம்பவேண்டிய நேரம் வந்து விட்டது. உடனே போகலாம் என்றதும், டெஸ்ட்ராய் ஆல் எவிடென்ஸ் என்கிறார்.அனைத்து எவிடென்ஸ்களையும் அவர்கள் தீயிட்டு அழித்து விட்டு கிளம்புகிறார்கள். அந்த இடத்தில் மேலும் ஒரு திருப்பத்தை வைத்திருக்கிறார் கமல். கமலின் மாணவியாக வரும் ஆன்ட்டிரியாவும் அவரைப் போலவை உளவாளி என்பதுதான் அந்தத் திருப்பம். பார்வையாளர்கள் திரைக்கதையுல் உள்ள இந்தத் திருப்பங்களைக் கண்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகிறார்கள். பார்வையாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சி, கமலின் விஸ்வரூபம்… அந்தக் காட்சியை கமல் கையாண்டிருக்கும் விதம் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு திருப்புமுனை. கேமரா தரையைக் காட்டுகிறது… தரையில் தலைமுடி விழுகிறது. அடுத்த காட்சியில் கமல், அவரது வழக்கமான கெட்டப்பில், முகத்தில் இரண்டு பேண்டேஜ் போட்டுக் கொண்டு வருவதைக் கண்டதும், கமல் ரசிகர்கள் சாமியாடுகிறார்கள்.
கமலும், அவர் உளவாளி டீமும் தப்பிக்கும் நேரத்தில், அமெரிக்க எஃப்பிஐ போலீஸ் கமலின் வீட்டை சுற்றி வளைக்கிறது. சுற்றி வளைத்து கமல் எங்கே சிக்கி விடுவாரோ என்று நாம் பதைபதைத்து சீட்டின் நுனிக்கு வரும் நேரத்தில், ஒரு சாதாரண காரை வைத்து, கல் சுவரை சாதாரணமாக உடைத்து தப்பிக்கிறார் கமல்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் ஹெலிகாப்டரில் குண்டு போடும் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளன. அந்த குண்டுகள் நம் தலை மீதே விழுவது போல இருக்கிறது. அமெரிக்க ராணுவம் குண்டு போடத் தொடங்கியதும், அங்கே தங்கியிருந்த ஓசாமா பின் லேடன், ரகசிய நிலவறை வழியாகத் தப்பிக்கிறார். அவரைப் போலவே மற்றொரு தீவிரவாதியான முல்லா ஓமர் ஏன் அந்த வழியாகத் தப்பிக்காமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் என்பதைக் கேட்டால் நீங்கள் கலை ரசிகர் அல்ல.
படத்தின் நடுவே பல்வேறு தீவிரவாதிகள் லூசான கருப்பு சுடிதார் போன்ற கருப்பு உடைகள் அணிந்து கமலிடம் பயிற்சி எடுக்கிறார்கள். இந்தப் பயிற்சிகளைப் பார்த்து, இந்திய ராணுவம், கமலுக்கு சிறப்பு கர்னல் பதவி கொடுத்தே ஆக வேண்டும். பல்வேறு தீவிரவாதிகளை சர்வசாதாரணமாக ஒரே ஆளாக உருவாக்குகிறார் கமல். கருப்பு சுடிதார் அணிந்த காமெடியன்கள் என்று பார்வையாளர்களுக்குத் தோன்றி விடுமோ என்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் படத்தை வைத்து அதை சுடுகிறார்கள். அந்தக் காட்சி வந்ததும், பார்வையாளர்களுக்கு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.
இப்போது கமலும், அவர் மனைவியும், உளவுத்துறை குழுவும் நிருபமாவின் அலுவலகத்துக்கு செல்கிறார்கள். அங்கே வில்லன் பணத்தை வைத்தாரே…. அதே லாக்கரை கமல் திறக்கிறார். அப்போது உங்களுக்கு பாஸ்வேர்ட் எப்படித் தெரியும் என்றதும், எங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிறார் ஆன்ட்ரியா… அப்போது கமலிடம், நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று கேட்கிறார் கமலின் மனைவி பூஜா குமார். நான் நல்லவன் மற்றும் கெட்டவன் என்று ஒரு நீண்ட பன்ச் டயலாக்கை பேசி விட்டு கமல் அந்த லாக்கரில் இருந்த பணத்தை எடுத்து மேலே விசிறியடிக்கிறார். அந்தக் காட்சி அப்படியே ஃப்ரீஸ் ஆகிறது. இதற்காகத்தான் அந்த லாக்கரில் பணம் வைக்கும் காட்சி..
மீண்டும் ப்ளாஷ் பேக்கில், ஆப்கானிஸ்தான். அங்கே தாலிபான்கள், தங்களைக் காட்டிக் கொடுத்து விட்டான் என்று சந்தேகப்படும் ஒருவனை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடுகிறார்கள். அந்தக் காட்சியில் நல்லவரான கமல், கண்ணீர் விடுகிறார். தாலிபான்கள் தூக்கிலிடுவது போன்ற நாகரீகமான தண்டனையை எங்கே விதிக்கிறார்கள். பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டுவது அல்லது, கரகரவென்று தலையை அறுப்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் தண்டனைகள் தரப்படுவதில்லை. இதற்குப் பிறகு நடக்கும் குண்டுவீச்சில் கமல் எப்படித் தப்பிக்கிறார் என்பதையெல்லாம் விளக்கவில்லை.
மீண்டும் அமெரிக்க எஃப். பி. ஐ அலுவலகம். கமல் ஒரு இந்திய உளவுத்துறை அதிகாரி என்பதை, சேகர் கபூர் வந்து விளக்குகிறார். விளக்கியதும், அமெரிக்க அதிகாரிகள் வாய் பிளக்கிறார்கள்.
ஒரு நீக்ரோ, தன் உடலில் உள்ள ரோமங்கள் அனைத்தையும் மழிக்கிறார். அந்தரங்கப் பகுதியில் உள்ள ரோமங்களை மழிக்கும் முன் ஒரு மரப்பெட்டியின் பின்னால் நின்று கொண்டு மழிக்கிறார். இந்த இடத்தில் தீவிரவாதத்தைப் பற்றிய தனது ஆழ்ந்த அறிவை கமல் வெளிப்படுத்துகிறார். அந்த நபர், பார்வையாளர்களான நாம் பார்க்கக் கூடாது என்று, பெட்டியால் நமக்குத் தெரியாமல் மறைத்து விட்டு, அடுத்த கட்டிடத்தில் இருந்து பார்த்தால் எல்லாம் தெரியும்படி, ஜன்னல் அருகே நிர்வாணமாக நின்று அந்தரங்கப் பகுதிகளை ஷேவ் செய்கிறார். அந்தத் தீவிரவாதியையும் ஜன்னல் வழியாக அமெரிக்க காவல்துறை சுடுகிறது. நான்கு குண்டுகள் பாய்ந்தும், அந்த நபர் குண்டுக்கான ரிமோட்டை அழுத்த தன் கைகளை நகர்த்தும் நேரம் அதை சரியாக கவனித்த கமல், அந்த நபரை நெற்றியில் சுட்டு, அமெரிக்காவையே காப்பாற்றுகிறார். இந்த தீவிரவாதச் சம்பவத்தைத் தடுத்த கமல்ஹாசனை, இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலமாக அழைத்து, பாராட்டுகிறார். அது மன்மோகன் சிங்கின் குரல் போல இருக்கிறது. இந்தப் பாராட்டுதலைக் கேட்டதும், அமெரிக்காவையே காப்பாற்றும் கமல்ஹாசனை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் தியேட்டரிலேயே எழுந்து ஜெய் ஹிந்த் சொல்லியிருக்க வேண்டும். என்ன செய்வது.. தேசபக்தி இல்லாத பயல்கள்.
அடுத்ததாக கமல், இனி தாமதிப்பதற்கு நேரமில்லை. இன்னொரு குண்டு இருக்கிறது அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியதும், வெடிகுண்டு நிபுணர்கள் யாரையுமே அழைக்காமல், கமல் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கமலின் மனைவியையும் அழைத்துக் கொண்டு குண்டு இருக்கும் இடத்துக்குச் செல்கிறார்கள். அப்போது அந்த குண்டு, அணு வெடிகுண்டு, ஒரு செல்போன் மூலமாக வெடிக்க இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். என்ன செய்வது என்று அனைவரும் திகைத்து நிற்கையில், மைக்ரோ வேவ் அவனை அந்த குண்டின் மீது கவிழ்த்து வைத்தால் செல்போனில் சிக்னல் வராது என்று கமலின் மனைவி கூறுகிறார். உடனே அவ்வாறே செய்கிறார்கள். செல்போன் மூலமாக அந்த நம்பருக்கு அழைக்கும் முல்லா ஓமர், நாட் ரீச்சபிள் என்று வந்ததும் தன்னுடன் இருக்கும் அல்லக்கையிடம் என்ன இது என்று கூறுகிறார். இதுக்குதான் பாஸ் ஏர்டெல் வாங்குங்கன்னு சொன்னேன்… டாடா டோகோமால சிக்னல் ப்ராப்ளம் இருக்கு என்று சொல்வதற்கு பதிலாக அவர்கள் இருவரும்… ச்சே ப்ளான் வேஸ்டா போயிடுச்சே என்று அலுத்துக்கொண்டு, தனி விமானத்தில் தப்பித்துச் செல்கிறார்கள்.
நியூயார்க் நகரமே அழியும் வகையில் ஒரு அணுகுண்டு நியூயார்க் நகரத்தில் இருப்பது என்பது அமெரிக்காவையே ஸ்தம்பிக்கச் செய்யும் ஒரு விவகாரம். ஆனால் அமெரிக்க அதிகாரிகள் சற்றும் கவலைப்படாமல் கமல் மனைவியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, எப்படி அசால்டாக இருக்கிறார்கள் என்று கேட்டாலும் நீங்கள் ரசனையற்றவர்.
நம்ப ஊரில் கூட, வெடிகுண்டு என்று யாராவது போனில் போலியாக மிரட்டினால் கூட, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களோடு காவல்துறை வருகிறது. ஆனால் அமெரிக்காவில் ஏன் கமலின் பொண்டாட்டியை மட்டுமே நம்பி ஜாலியாக இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பக் கூடாது. அமெரிக்காவில் அணு ஆயுதம் வருவதை அமெரிக்க காவல்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து விடக்கூடாதே என்பதற்காக, புறாக்களின் காலில், அணு ஆயுதம் செய்யும் பொருளான சீசியெத்தைக் கட்டி அமெரிக்காவில் பறக்க விடுகிறார்கள். இதன் காரணமாக வரும் கதிர்வீச்சைக் கண்டு அமெரிக்க காவல்துறையினர் குழம்புகிறார்கள் என்று அமைக்கப்பட்டிருக்கும் காட்சியமைப்பு, அமெரிக்க காவல்துறை மற்றும் அணு ஆயுதங்கள் குறித்த கமலின் ஆழ்ந்த அறிவைக் காட்டுகிறது. அணு ஆயுதத்தை கண்டு பிடிக்க வேண்டிய வெடிகுண்டு நிபுணர்கள், செத்துப் போன புறாக்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இது தீவிரவாதிகள் அரசாங்கத்தை ஏமாற்றினாலும், தன்னை ஏமாற்ற முடியாது என்பதை அற்புதமாக விளக்கியிருக்கிறார் கமல். இந்தக் காட்சியில் ரசிகர்கள் அழுதே விட்டார்கள். அணுக் கதிர்வீச்சை வெளிப்படுத்தக் கூடிய சீசியத்தை கையாண்ட தீவிரவாதிகளில் சிலர், நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கையில் ஒரு சாதாரண புறா, காலில் சீசியத்தைக் கட்டிக் கொண்டு, அமெரிக்கா வரை எப்படிப் பறக்கும் என்று கேள்வி கேட்கும் அறிவுஜீவிகள் மீண்டும் மீண்டும் அலெக்ஸ்பாண்டியன் திரைப்படத்தைப் பார்க்கக் கடவது என்று சபிக்கப்படுவார்கள்.
அமெரிக்க அரசாங்கம் ஓசாமா பின் லேடன் எங்கிருக்கிறார் என்று தேடி அலைந்து கொண்டிருக்கையில், சர்வ சாதாரணமாக ஓசாமா பின்லேடனை கமல் பார்த்துக் கொண்டிருப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள், ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்துகிறது.
தன் கணவனை ஒரு உஸ் என்று நினைத்துக் கொண்டிருந்ததற்காக கமலின் மனைவி நிருபமா வெட்கப்பட்டு, அவர் மீது காதலாகி கசிந்துருகுகிறார். எல்லாம் முடிந்து விட்டதா என்று நிருபமா கேட்கையில், ஒன்று ஓமர் உயிரோடு இருக்க வேண்டும் இல்லை நான் இருக்க வேண்டும்… …. அது வரை இது முடியாது என்கிறார். அந்த இடத்தில் விஸ்வரூபம் பாகம் 2 என்று போட்டு பயமுறுத்துகிறார்கள்.
திரைப்படம் எப்படி இருக்கிறது என்று படித்து விட்டீர்களா ? இதற்கு எதற்காக இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்?. இதில் இஸ்லாமியர்களை இழிவு படுத்த என்ன இருக்கிறது ? படம் வெளிவந்து ஒரு வாரம் கழித்து திரைப்படம் பார்க்கும் அனைவரையும் இப்படம் இழிவு படுத்தியிருக்கிறது என்று இப்படத்தை தடைசெய்திருந்தால் கூட வரவேற்கலாம். அப்படி ஒரு சிறப்பான திரைப்படம் இது. தீவிரவாதம் என்றால் என்ன… அவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்ற எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமல் எடுக்கப்பட்ட துப்பாக்கித் திரைப்படத்துக்கு சற்றும் குறைவில்லாதது விஸ்வரூபம்.
இஸ்லாமிய அமைப்புகள் இத்திரைப்படம் குறித்து எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாமல், சாதாரணமாக இப்படம் வெளியாகியுருக்குமேயானால், ஹே ராமை விட மோசமான தோல்வியை சந்தித்திருக்கும். ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும், இப்படத்தை கிழித்து தொங்க விட்டிருப்பார்கள். இஸ்லாமிய அமைப்புகள் செய்த பிரச்சினையால் இப்படம் சகலகலா வல்லவன் போன்ற வெற்றியை அடைந்திருக்கிறது. தியேட்டருக்கு திருவிழாவுக்குச் செல்வது போலச் செல்கிறார்கள். குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில் என்று கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஆப்கானிஸ்தானில் நடப்பது போன்று ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் முல்லா உமரின் மனைவிக்கு சிகிச்சை அளிக்க ஒரு பெண் மருத்தவர் வருவார். அந்த பெண் மருத்துவரைப் பார்த்து முல்லா உமர், பர்தா அணியாமல் சுற்றுகிறாயே… உனக்கு வெட்கமாக இல்லை.. முதலில் என் வீட்டை விட்டு வெளியேறு என்கிறார். அந்தக் காட்சிதான் இஸ்லாமிய மதத் தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். தங்கள் வீட்டில் உள்ள பெண்களை, முக்காடிட்டு மூலையில் அமரவைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களே இந்த இஸ்லாமிய மதவாதிகள். இதை இவர்கள் தங்கள் வீட்டில் செயல்படுத்துவதால்தான் இவர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.
இந்த வீடியோவைப் பாருங்கள்.
பெப்சி அமைப்பின் தலைவராக இருக்கும் பிரபல இயக்குநர் அமீர், பெண்கள் புர்கா அணிவது தொடர்பாக விஜய் டிவியில் நீயா நானாவில் வந்த ஒரு நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெய்னுல்லாபுதீனிடம் சொல்லி அந்த நிகழ்ச்சியை நிறுத்தியதை அவர் வாயாலேயே சொல்கிறார் பாருங்கள். இயக்குநர் அமீர் யார் என்பதை ஜெய்னுலாப்பிதீன் வெளிப்படுத்தி விட்டார். அமீர் அவர்களே… நீங்கள் யார் என்பதை உலகம் அறியாமல் இருக்கலாம். விபரம் அறிந்தவர்கள் அறிவார்கள். மதுரையில் 1994 அக்டோபர் மாதம் நடந்த இந்து முன்னணித் தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கில் உங்களுக்கு என்ன தொடர்பு, அப்போது நீங்கள் வைத்திருந்த லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் அந்த கொலையில் எப்படிப் பயன்பட்டது என்ற விபரங்கள் யாருக்கும் தெரியாது என்று நினைக்காதீர்கள். பலருக்குத் தெரியும்.
கமல்ஹாசன் வீட்டுக்குச் சென்று முதலைக்கண்ணீர் வடித்துவிட்டு போஸ் கொடுக்கும் அமீர்
ஒன்று, எனக்கு மதமும் மதவெறியும்தான் முக்கியம் என்று விலகி நில்லுங்கள். அல்லது மதவெறியை விட திரையுலகம்தான் முக்கியம் என்ற மதவெறியிலிருந்து விலகி நில்லுங்கள். ஒருபுறம், ஜெய்னுல்லாபிதீன் போன்ற மதத்தலைவர்களை ரகசியமாக தூண்டி விடுவதும், மற்றொரு புறம், கமலோடு சேர்ந்து முதலைக் கண்ணீர் வடிப்பதும், நீங்கள் அல்லாவுக்குச் செய்யும் துரோகம். இப்படி இரட்டை வேடம் போடச் சொல்லி அல்லாவா சொல்லிக் கொடுத்தார் ? முதலில் உங்களுக்கு உண்மையாக இருங்கள். மனசாட்சியை விட பெரிய கடவுள் கிடையாது. பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுவது, பச்சை அயோக்கியத்தனம்.
மதத்தலைவர்கள் எழுப்பிய மற்றொரு குற்றச்சாட்டு பொதுவெளியில் தூக்கிலிட்டு அப்போது குரான் படிக்கிறார்கள் என்பது. பொதுவெளியில் தாலிபான்கள் தூக்கிலிடுவது என்ன ஆப்கானிஸ்தானில் நடக்காத செயலா ? கழுத்தை அறுக்கும் வீடியோக்கள் மட்டும் எத்தனை இருக்கிறது தெரியுமா ? அவன் குரான் படித்து விட்டு குண்டு வைப்பதாகக் காட்டினால், இங்கே உள்ள மதவாதிகளுக்கு ஏன் வலிக்கிறது ? குரான் வாசகங்களை படித்து விட்டு குண்டு வைக்கும் வீடியோக்களை, தாலிபான்களே இணையத்தில் வெளியிடுகிறார்களே… ஆயிரக்கணக்கான வீடியோக்கள் உலவிக்கொண்டிருக்கின்றனவே… அந்த வீடியோக்கள் எல்லாம் பொய்யா ? மனிநேயம் உள்ள இஸ்லாம் மதத்தலைவர்கள், குரானில் இப்படிக் கொலை செய்யச் சொல்லி யாரையும் சொல்லவில்லை. அவர்களோடு நாங்கள் உடன்படவில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்…. ? தாலிபான்களை தீவிரவாதிகளாக காண்பித்தால் இந்த மதவாதிகளுக்கு ஏன் வலிக்கிறது ? ஒன்றுமில்லாத ஒரு குப்பைப் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்கிய இஸ்லாமிய மதவெறியர்கள் மிகப்பெரிய முட்டாள்கள்.
உன்னைப் போல் ஒருவன் திரைப்படம், கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இஸ்லாமியரை சிறையில் வைத்து சோறு போடுவது, அரசாங்கத்துக்கு தேவையற்ற செலவு…. அவனை குண்டு வைத்துக் கொல்ல வேண்டும் என்று காட்டும் திரைப்படம். குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கியவர்களுக்குக் கூட, மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று பேசும் மனித உரிமையாளர்களை எள்ளி நகையாடுகிறது இஸ்லாமிய மதவெறியர்களின் விஸ்வரூபம் குறித்த நிலைபாடு. இந்த முட்டாள் மதவெறியர்களிடம் இஸ்லாமிய மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஒன்றும் இல்லாத ஒரு வீணான திரைப்படத்துக்காக இத்தனை போராட்டங்கள் நடத்தி பெரும் மோசடியை அரங்கற்றியிருக்கிறார்கள் இஸ்லாமிய மதவெறியர்கள். ஜெயலலிதாவின் துணையோடு இந்த நாடகம் அரங்கேறியிருக்கிறது. இந்த நாடகத்தால், பெரும் பண நஷ்டத்தைச் சந்தித்திருக்க வேண்டிய கமல்ஹாசன் ஆனந்தமாக வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறார். ஏ சென்டர் ஆடியன்ஸை மட்டுமே கவர்ந்திருக்கக் கூடிய இத்திரைப்படம் இன்று தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது.
கமல்ஹாசனுக்கு, தீவிரவாதத்தைப் பற்றியும் காவல்துறை, குறிப்பாக அமெரிக்க காவல்துறை எப்படிச் செயல்படுகிறது என்பது பற்றியும் துளியும் அறிவு கிடையாது என்பதையே இத்திரைப்படம் காட்டுகிறது. ஹாசன் என்று பெயரில் இருக்கும் ஒரே காரணத்தாலேயே அவரின் உள்ளாடைகள் வரை அவிழ்த்து சோதனை செய்தவர்கள் அமெரிக்க காவல்துறையினர்… முன்னாள் ஜனாதிபதி என்று கூறியும், அப்துல் கலாமைக் கூட விட்டுவைக்கவில்லை. அப்படிப்பட்ட காவல்துறையினரா அமெரிக்காவில் அணுக் கதிர்வீச்சோடு கூடிய புறாக்களை துரத்திக் கொண்டிருப்பார்கள் ? குறைந்தபட்சம் வெடிகுண்டு நிபுணர்களைக் கூட சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லமாட்டார்களா ? ஹாலிவுட் திரைப்படங்களை கமல்ஹாசன் பார்த்திருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. ரசிகர்களின் ரசனையை குறைத்து மதிப்பிட்ட கமல்ஹாசனின் அகம்பாவம் மட்டுமே இப்படத்தில் தெரிகிறது.
விஸ்வரூபம் திரைப்படம் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக ஷுட் செய்யப்பட்டு, பிறகு அளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள பகுதிகளே, இரண்டாம் பாகமாக வெளிவர இருக்கிறது என்றும் திரையுலகத்தில் தகவல்கள் உலவுகின்றன. இப்படித் தொடர்ந்து திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தால், கமல்ஹாசன் வெளிநாடு செல்ல வேண்டியதில்லை. தமிழக மக்களே அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
விஸ்வரூபம் படத்தின் உண்மையான பிரச்சினை என்ன தெரியுமா ? அகந்தையில் பெரியது ஜெயலலிதாவுடையதா… கமல்ஹாசனுடையதா என்பதே. இறுதியில் ஜெயலலிதாவின் அகந்தையே பெரியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.