இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட இருக்கும் நிலையில், மீண்டும் சூடுபிடிக்கிறது ஜெனிவா. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்கப்போகிறது பிரிட்டன். இந்தியாவும் ஆதரிக்கும் என்று நம்புகிறது அமெரிக்கா. இந்தியாவின் நம்பகத்தன்மை குறித்துத் தெரிந்து வைத்திருப்பவர்கள், இந்த ஆதரவு குறித்து கவலைப்படுகிறார்கள். கூட இருந்தே குழிபறிப்பதில் கைதேர்ந்த காங்கிரஸ் கோழைகள் தீர்மானத்தின் அஸ்திவாரத்தை அசைத்துவிடக்கூடாதே என்று நாமும் அஞ்சுகிறோம்.
இன்று நேற்றல்ல, 1984ல் இருந்தே, நம்பவைத்துக் கழுத்தறுக்கும் துரோகத்தைக் கூச்சநாச்சமில்லாமல் அரங்கேற்றி வருகிறது இந்தியா. பாரத தேசமென்று நாம் தோள்கொட்டிக் கொண்டிருக்கிறோம், அவர்கள் சத்தமேயில்லாமல் தேள்மாதிரி கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைக்கூட முத்துக்குமார் ஒருவன்தான் தெளிவாகக் கேட்டான்.
“சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ, இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல், கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாக செய்யவேண்டியதுதானே! ஏன் திருட்டுத்தனமாக செய்யவேண்டும்?” என்றான் முத்துக்குமார். காங்கிரஸில் இருக்கிற 420 கோஷ்டிகளில் எந்த கோஷ்டியாலும் இன்றுவரை அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை,
காங்கிரஸ் என்றில்லை… ஒட்டுமொத்த ஐக்கிய முன்னணியும் ஒரு வினோதமான ஜந்துமாதிரிதான் நடந்துகொள்கிறது. மன்மோகன்சிங் என்கிற மனிதர்தான் இந்தக் கூட்டணி அரசின் பிரதமர். அவர் ஆட்சியில் விலைவாசி கடுமையாக ஏறிவிட்டது – என்று நாடே குற்றஞ்சாட்டுகிறது. என்ன செய்யவேண்டும் அவர்? விலையைக் கட்டுப்படுத்தவேண்டும், முடியாவிட்டால் காரணம் சொல்லவேண்டும். இரண்டுமே செய்யாமல், நிலக்கரியை அரைத்துக் குழைத்து நம் முகத்தில் பூசுகிறார் அந்த மனிதர். ‘விலைவாசி உயர்வு பற்றி ஒரு சாமானியனைப்போல் நானும் கவலைப்படுகிறேன்’ என்று கண்ணீர் மல்கச் சொல்வதன்மூலம் நம் முகத்தில் பூசியதில் மிச்சம் இருக்கும் கரியை எடுத்துத் தன் முகத்திலும் பூசிக்கொள்கிறார்.
அவரே இப்படியென்றால், இங்கேயிருக்கிற மூத்த தலைவரைப் பற்றிச் சொல்லவேண்டுமா என்ன! அதே கூட்டணியில் மூத்தவரையும் மற்றவர்களையும் அமைச்சர்களாகவும் வைத்துக்கொண்டிருப்பார். ‘இலங்கையில் தமிழருக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டும் காணாததுபோல் மௌனம் சாதிக்கலாமா’ என்று அவர்கள் அமைச்சர்களாக இருக்கிற மத்திய அரசைக் கேட்கிற வசனத்தை ஒரு காகிதத்தில் எழுதி நான்காக மடித்து சட்டைப்பையிலும் வைத்துக்கொண்டிருப்பார். அவ்வப்போது அதை எடுத்துப் படித்துவிட்டு, மீண்டும் மடித்து வைத்துக்கொள்வார். கோபாலபுரம் வீட்டுக் கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வியை, யாரைப் பார்த்துக் கேட்கிறார் இவர் – என்று நமக்கு ஆச்சரியமாயிருக்கும். என்ன செய்வது….. சோனியாஜியின் தயவில் சர்தார்ஜியின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், சர்தார்ஜியின் தயவில் கருணாஜியின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவியைப் போலே – என்றான் எட்டயபுரத்து முண்டாசுக் கவிஞன். அப்படி எல்லாவற்றையும் உதறிவிட்டு நிற்க, இன்றைய தேதிக்கு கோபாலபுரம் ஒன்றும் சிட்டுக்குருவியல்ல… குருவி! ‘பதவி எங்களுக்குத் தோளில் போட்டிருக்கிற துண்டைப் போன்றது’ என்று எப்போதோ பேசிய வசனத்தையே இப்போதும் அவர்கள் பேசவேண்டும் என்று நினைப்பது நியாயமில்லை. துண்டே மஞ்சள் துண்டாக மாறியபிறகு, வசனம் மட்டும் மாறாமலேயே இருக்குமா?
சமீபத்தில் முத்தமிழறிஞரின் ‘காங்கிரஸ் பாதுகாப்பு வசனம்’ ஒன்றை இதே பகுதியில் கண்டித்திருந்தோம். தமிழக அரசியல் – இதழ் வெளியானவுடனேயே, முதல் ஆளாக, சிறுத்தை மாதிரி சீறினார் ஒரு நண்பர். ‘புரூப் ரீடர் வேலையைச் சரியாச் செய்றீங்க’ என்ற கிண்டல்வேறு! “புரூப் திருத்த அது ஒன்றும் எழுத்துப் பிழை அல்ல, கருத்துப் பிழை” என்று விளக்கியபோது, அவர் அதைப் புரிந்துகொள்ளக்கூட இல்லை. கோபாலபுரத்தின் தாழ்வாரத்திலேயே நின்றுகொண்டிருந்தால் உண்மை எப்படி விளங்கும் அவர்களுக்கு!
வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று கேட்ட நண்பர்களுக்குச் சொல்கிறேன்….. அது வெறும் வார்த்தையல்ல. திட்டமிட்டே செய்யப்பட்ட கருத்துப் பிழை. அதனால்தான், சுட்டிக்காட்டிய மறுநாளே அந்த வசனம் மூத்த தலைவரால் மாற்றப்பட்டது.
சென்ற ஆண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தபோது அதை ஆதரிக்கமுடியாது என்று முரண்டுபிடித்தது இந்தியா. இந்தியாவின் இந்தத் திமிர்த்தனத்தை எதிர்த்துப் பொங்கி எழுந்தது தமிழகம். தங்களது பல கோடி ரூபாய் இழப்பைப் பற்றிக்கூட கவலைப்படாமல் ஒட்டுமொத்தமாகக் கடைகளை அடைத்துப் போராடிய கோயம்பேடு வியாபாரிகளில் தொடங்கி, ஒவ்வொரு தமிழனும் தன்னெழுச்சியோடு போராடிய உன்னதமான தருணம் அது. மன்மோகன் அரசின் கோரமுகத்தில், ஒன்றுபட்டு நின்ற தமிழகம் ஓங்கிக் குத்தியதன் விளைவாகத் தான், அந்தத் தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்தது இந்தியா. ஆதரிக்கிறேன் பேர்வழி – என்கிற பெயரில் தீர்மானத்தை அது எப்படி நீர்த்துப் போக வைத்தது என்பது தனிக் கதை.
இந்தியா முரண்டுபிடித்ததையும், தமிழ்நாடு அதை வழிக்குக்கொண்டு வந்ததையும் மூடி மறைக்கும் விதத்தில் – “நமது வற்புறுத்தலினால் இந்தியாவின் ஆதரவோடு (தீர்மானத்தை) நிறைவேற்றினார்கள்” என்று எழுதியவர் சாதாரண தமிழறிஞராயிருந்தால், போனால் போகிறது என்று விட்டிருக்கலாம்… அவர் முத்தமிழறிஞர் என்பதால், திட்டமிட்டே இந்த மூடிமறைப்பு வேலை நடைபெறுகிறதோ என்கிற ஐயத்தில்தான் அதைக் கண்டித்தோம்.
4ம் தேதி டெசோ கூட்டத்தில், அந்த கருத்துப் பிழை திருத்திக் கொள்ளப்பட்டது. “தமிழகத்தின் வற்புறுத்தலினால் (அந்தத் தீர்மானத்தை) இந்தியாவும் ஆதரித்து அத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்கிற வாசகம் இடம்பெற்றது. சிறுத்தை ‘போல’ என்னிடம் சீறிய நண்பருக்கு, 2 வாக்கியங்களுக்கும் இடையிலான வித்தியாசம் இப்போதாவது புரிகிறதா இல்லையா? தவறுகளைச் சுட்டிக் காட்டாவிட்டால், உண்மைகளைத் தலையில் தட்டி உட்காரவைத்துவிட்டு, காங்கிரஸின் தலையில் தங்கக் கிரீடம் சூட்டிவிடுவார்கள் தங்களது வழிகாட்டிகள் என்பதை அந்த ‘நல்ல’ நண்பர் நினைவில் கொள்ளவேண்டும்.
தட்டிக்கேட்காவிட்டால், காங்கிரஸைக் காப்பாற்ற, தமிழுக்கு மட்டுமில்லை, தங்களுக்கும் சேர்த்து மஞ்சள் தண்ணீர் தெளித்துவிடுவார் தலைவர் – என்பதை என்னுடைய அன்புக்குரிய ‘தோழர்கள்’ இனியாவது அறிந்துகொள்ளவேண்டும். புலிகளுக்கும் கழுதைப்புலிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எப்படி அடங்க மறுக்க முடியும்? வார்த்தைகளில் விஷம் இருக்கிறதா, விஷமம் இருக்கிறதா என்பதையெல்லாம் பார்க்காமல், கூட்டம் சேர்ந்துவிட்டால் கோஷம் போடுவதற்கு நான் ஒன்றும் கூலிப்படையில்லை என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
மகிந்த ராஜபட்சேவின் புத்த கயா மற்றும் திருப்பதி வருகையை எதிர்த்து கருணாநிதியின் டெசோ ஸ்டாலின் தலைமையில் சென்னையில் போராடுகிறது. (டெசோவுக்கும் இளைய சன்னிதானம் ஸ்டாலின் தான் – என்று அறிவித்துவிட்டார்களா என்ன?) காமன்வெல்த் போட்டிகளுக்கு அந்த மிருகத்தைக் கூட்டிவந்து பரிவட்டம் கட்டி அன்னை சோனியாக்கள் அழகு பார்த்தபோது, இவர்களெல்லாம் எங்கேயாவது தூரதேசத்துக்குப் பாத யாத்திரை போயிருந்தார்களா… தெரியவில்லை. ஒருவேளை, நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை என்கிற செய்தி அறிவாலயத்துக்கு ஆர்டினரி தபாலில் தாமதமாகப் போய்ச் சேர்ந்ததா – அதுவும் தெரியவில்லை.
நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் பார்க்காமல், கருணாநிதியின் டெசோவால் இப்போது வெளியிடப்பட்ட அறிக்கையைப் படிக்க வேண்டியிருக்கிறது.
“இலங்கை இனவாத அரசின் அதிபர் மகிந்த ராஜபட்ஷே தமிழினப் படுகொலையில் ஈடுபட்டவர்” என்று குற்றஞ் சாட்டுகிறது டெசோ அறிக்கை. ‘சர்வதேச அரங்கில் மானுடத்துக்கே எதிரான ஒரு கொடுங்கோலனாகவும் பெருங்குற்றவாளியாகவும் (ராஜபட்ஷே) பார்க்கப்படுகிறார்’ என்று சுட்டிக்காட்டுகிறது. இவ்வளவையும் தெரிவித்தபிறகு, அந்த ராஜபட்ஷேவைக் காப்பாற்ற சகல வழிகளிலும் முயலும் இந்தியாவுக்கு கருணை மனு அனுப்புகிறது டெசோ. “இந்தியத் திருநாடு நட்புறவுடன் நீட்டும் அன்புக் கரத்தையும், மரபு வழியிலான விருந்தோம்பல் உணர்வையும் இந்தியாவின் பலவீனம் என்றே கருதக்கூடியவர் (ராஜபட்ஷே). சிங்களப் பேரினவாதத்தின் சின்னமாகவே உலவிவருபவர் அவர். இந்தியத் திருநாட்டுக்கு அவர் வருவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது” என்கிறது டெசோ பரிதாபமாக!
லட்சோபலட்சம் தமிழ் மக்கள் மீதான போரை, இனப்படுகொலையை ஊக்குவித்த இந்தியா, ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் சேர்த்து விற்க முயன்றுகொண்டிருக்கிறது. அந்தத் திமிரில்தான், தமிழ் ஈழத்தின் தலைநகரான திருகோணமலையில் நின்று, ‘கொடுக்கிற சுண்டலை கியூவில் நின்று வாங்கிக் கொண்டு போ’ என்று கிண்டல் செய்துகொண்டிருக்கிறது சிகப்புத் துண்டு மிருகம். இதுகூடப் புரியாமல், ‘ஊக்குவிக்காதீர்கள்’ – என்று மன்மோகனிடம் மகஜர் கொடுக்கிறது டெசோ. ‘தமிழின உணர்வுகளை மழுங்கடித்து ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றிவிட்டார்கள்’ என்கிற முத்துக்குமாரின் குமுறல் எவ்வளவு நியாயமானது என்பது இப்போதுதான் புரிகிறது.
எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதர் தான் இலங்கையின் கோரமுகத்தை முழுமையாகப் புரிந்துகொண்டிருந்த முதல் தமிழகத் தலைவர். எம்.ஜி.ஆருக்கு எப்போதோ புரிந்த அந்த உண்மை, இப்போதுதான் புரிகிறது மார்க்சிஸ்ட் தலைவர் ஜி.ஆருக்கு. ‘அரசியல் தீர்வே கிடையாது – என்று அறிவிப்பது நியாயமா’ என்று ராஜபட்சேவைப் பார்த்துக் கேட்கிறார் ஜி.ராமகிருஷ்ணன். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்துதரப்படும் என்று யாரைக் கேட்டு இவ்வளவு நாளாக நம்பிக்கொண்டிருந்தார் இவர்…. ஜே.வி.பி.யைக் கேட்டா! அது சொன்னதைக் கேட்டுத்தானே ‘அங்கே நடந்தது இனப்படுகொலை அல்ல, போர்’ என்று மார்க்சீயப் பித்தாந்தத்தில் – மன்னிக்கவும் – சித்தாந்தத்தில் மயங்கிக் கிடந்தீர்கள்… உங்களது மயக்கம் முழுமையாக எப்போது தெளியப்போகிறது தோழர் ஜி.ஆர்.?
இன்னொருபுறம், கமலாலயத்துக்குள் இருந்து ஈழ மக்களுக்காக தமிழும் இசையுமாகக் கேட்ட ஒற்றைக்குரலுடன், அதன் தேசியத் தலைவர் ராஜ்நாத்தின் குரலும் இணைந்துகேட்கிறது இப்போது. ராஜபட்சே என்பவன், ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்து ஒழித்துவிட்டுத் தான் ஓய்வான் – என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்துகொண்டு பேசவேண்டும் அவர்கள். அப்போதுதான், நடந்த இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் எழுப்பத் தடையாய் இருக்கும் மன்மோகனையும் சோனியாவையும் அவர்களால் தேசிய அளவில் அம்பலப்படுத்த முடியும். இன்னும் சொல்லப்போனால், சுஷ்மா வாங்கிவந்த பரிசுப்பொருளை ராஜபட்சேவுக்குத் திருப்பி அனுப்பி, நடந்த தவறுக்குப் பிராயச்சித்தம் தேடவும் அவர்கள் முயலலாம். இதனால் மரியாதை குறைந்துவிடாது. மாறாக, மரியாதை கூடும். ராஜ்நாத்திடம் இதை எடுத்துச் சொல்வார்களா தமிழிசைகள்?
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வரும் ராமகிருஷ்ணன்களும் ராஜ்நாத்களும், ஜெனிவா மாநாட்டுக்குமுன் களத்தில் இறங்கினால்தான் அவர்கள் பேசிய வார்த்தைகள் அவர்களது இதயத்திலிருந்து வெளியானவை என்று நம்பமுடியும். அமெரிக்கத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யாமலேயே இந்தியா ஆதரிக்க வேண்டுமென்றால், அதற்கு அவர்கள் கொடுக்கும் அழுத்தம்தான் காரணமாயிருக்கும். ஆட்சி அதிகாரத்தில் மன்மோகனின் பக்கத்து சீட்டில் உட்கார்ந்துகொண்டு, கருணாநிதியால் சாதிக்க முடியாததை எதிர் நிலையிலிருந்து இவர்களால் சாதிக்க முடியும். தாங்கள் பேசுவது வெறும் வாய்ச் சவடால் இல்லை என்பதை அவர்கள் தான் நிரூபிக்கவேண்டும்!
புகழேந்தி தங்கராஜ்
நன்றி தமிழக அரசியல்