நல்ல செய்தியோ, கெட்ட செய்தியோ, தமிழக ஊடகங்களுக்கு செய்திகளை அள்ளி வழங்குவதில் திமுகவை விஞ்ச வேறு எந்தக் கட்சியும் இல்லை. தினந்தோறும் அப்படி செய்திகளை வழங்கும் திமுக பற்றி கடந்த வாரம் வந்த செய்தி, குஷ்பூ வீட்டில் நடந்த தாக்குதல் குறித்தது. குஷ்பூ வீட்டில் தாக்குதல் நடைபெறக் காரணம், குஷ்பூ ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டி. அந்த பேட்டி என்ன என்பதைப் பார்த்து விடுவோம்.
தளபதிதான் அடுத்த தலைவரா இருக்கணும்னு அவசியம் இல்லை !
தடாலடி குஷ்பு
சின்னச் சின்ன தும்மல், களைப்பான கண்கள், சோர்வு ததும்பும் குரல்… குஷ்பு இஸ் நாட் ஃபீலிங் வெல்! ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் பாய்ந்து வந்த பதில், அதிரடி!
ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, தி.மு.க-வில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு.
”தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?”
”நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க. தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக்கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். ‘யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.”
”ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?”
”’நான் இதை ஏத்துக்க மாட்டேன்’னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ… யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்னைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.”
”சரி… நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க… ஸ்டாலின், அழகிரி, கனிமொழி… தி.மு.க. தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?”
”திரும்பவும் சொல்றேன்… அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும். தலைவர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப்பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க – வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!”
”அதான் ‘எனக்குப் பிறகு ஸ்டாலின்’தான்னு தி.மு.க. தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?”
”எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனாஇருப்ப வங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டா ரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமாஇருப்பாங் களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத் தித் தேர்ந்தெடுப்பாங்க.”
”சமீப காலமா தி.மு.க-வில் இருந்து உங்களை ஒதுக்கிவெச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே?”
”சம்பந்தம் இல்லாம யாரோ பேசுற பேச்சுக்குஎல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்? இந்தப் பேச்சு எப்படி வந்திருக்கும்னு நான் சொல்லவா? தி.மு.க-வின் வீர வணக்க நாள் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. அன்னிக்கு எங்க வீட்ல முக்கிய மான விசேஷம் ஒண்ணு இருந்துச்சு. இந்த விஷயத்தைத் தலைவர்கிட்ட யும் தளபதிகிட்டயும் நேர்லயே சொல்லிட்டு வந்துட்டேன். உலகத் துக்கே தெரியும்… எனக்குக் கட்சி, சினிமாவைவிடக் குடும்பம்தான் முக்கியம்னு. அன்னிக்கு என் பொண்ணுக்கு ஒரு விசேஷம். அதனால, அந்தக் கூட்டத்தில்நான் கலந்துக்கலை. இதை மட்டுமே வெச்சு என்னைக் கட்சியில ஒதுக் கிட்டாங்கன்னு சொன்னா, அதை ஏத்துக்கவே முடியாது. முன்னாடி வள்ளுவர் கோட்டத்துல மின்வெட் டுக்கு எதிரா நடந்த கண்டனஆர்ப் பாட்டத்துல தலைவர் முன்னிலை யில் பேசினப்ப, சிறப்பு முக்கியத்து வம் கொடுக்குறாங்கன்னு பேசு னாங்க. இப்ப, ஒரே ஒரு கூட்டத்துக் குப் போகாததால், ஒதுக்கிவெச்சுட் டாங்கன்னு சொல்றாங்க. குட் ஜோக்!”
”நீங்க கோபாலபுரத்துக்கே வரக் கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கறதா…”
(கேள்வி முடிவதற்குள்ளாகவே) ”இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரம் இல்லை.”
” ‘விஸ்வரூபம்’ பட விவகாரத்தின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லைனு நம்புறீங்களா?”
” ‘விஸ்வரூபம்’ பத்தி இனிமே நாம பேசினா, அது கமல் சாருக்குத்தான் பிரச்னையா முடியும். கமல் சாரைப் பாதிக்கும்கிறதால அதைப் பத்தி நான் எதுவும் பேச விரும் பலை. அதான் அரசாங்கம் சார்பிலேயே பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களே!”
”அது தொடர்பான விவாதத்தில், ‘ஜெயா டி.வி-க்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை’னு ஜெயலலிதா சொல்லியிருக்காங்களே?”
”அதை நீங்க நம்புறீங்களா ? சம்பந்தம் இல்லைனு சொல்றாங்க. ஆனா, அந்தப் பேட்டி கொடுத்தப்ப, ஜெயா டி.வி. மைக் மட்டும்தான் அவங்க முன்னாடி இருக்கு. எல்லா உண்மையும் புரியுற அளவுக்கு மக்கள் தெளிவா இருக்காங்க.”
”நாடாளுமன்றத் தேர்தலுக்காக விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு வரப்போறதா பேச்சு அடிபடுதே?”
”எதிர்காலத்துல நடக்கப்போறதைப் பத்தி இப்பவே ஏன் பேசணும்? வரட்டும். அப்புறம் பார்க்கலாம். தலைவரோ, விஜயகாந்தோ அதி காரப்பூர்வமா அறிவிக்கிற வரை பொறுமையா இருப்போம். விஜயகாந்துடனான கூட்டணிபத்தி தளபதி எதுவுமே பேசலை. ஜனநாயகரீதியாக எதிர்க் கட்சித் தலைவருக்குத் துணையா இருப்போம்னு மட்டும்தான் சொன்னார்.”
”நாடாளுமன்றத் தேர்தலில் நீங்க போட்டியிடுவீங்களா?”
”தெரியலையே! இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கே. கட்சித் தலைமை தான் இதை முடிவு பண்ணணும். ஒருவேளை நான் போட்டியிடலைன்னா, ‘குஷ்பு கேட்டாங்க… ஆனா, தலைமை மறுத்திடுச்சு’னு எழுதுவாங்க. போன சட்டமன்றத் தேர்தல் சமயமே எல்லாமே பார்த்துட்டேன். சேலம், ஆயிரம் விளக்குனு பல தொகுதிகளில் நான் போட்டியிடப் போறதாச் சொன்னாங்க. நான் தேர்தல்ல நிக்கணும்னு கட்சியில் சேரலை. யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தா சரியா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும்.”
”உட்கட்சிப் பூசல் பழிவாங்கும் கொலைகளில் முடியும் விபரீதப்போக்கு தி.மு.க.-வில் அதிகரிச்சுட்டே இருக்கே?”
”சும்மா… பரபரப்புக்காக அப்படி வர்ற செய்திகள் உண்மை ஆகிடாது. ஒன் ப்ளஸ் ஒன்… பதினொண்ணுனு எழுதுவாங்க. ஆனா, எனக்கு ஒன் ப்ளஸ் ஒன் ரெண்டுனு நல்லாவே தெரியும்.உட்கட்சிப் பிரச்னை ஏன் வருது? தி.மு.க. ஜனநாயகரீதியில் செயல்படும் கட்சி. மத்த இடங்களில் கட்சித் தலைமைக்குப் பயந்து கிட்டே செயல்பட வேண்டிய கட்டாயம். ஜன நாயக மரபுகளைக் கடைப் பிடிக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரியுது. இதை விட அதிகமான உட்கட்சிப் பூசல்கள் மத்த கட்சிகளில் இருக்கும். ஆனா, அதெல் லாம் வெளியே தெரியாது. ஏன்னா பயம்!
இன்னொரு விஷயம்,உட் கட்சிப் பூசல்கள் ஒரு கட்சி யின் வளர்ச்சிக்கு மைனஸ் கிடையாது. ஒரு குடும்பமா செயல்படும்போது, அதுல இருக்கிறவங்க தங்களோட வருத்தங்கள், கோபங்களை உள்ளேயே வெச்சுட்டு இருக்கிறது நல்லது இல்லையே. ஓப்பனாப் பேசினாத்தானே பிரச்னைக்கு ஒரு முடிவு வரும்.”
”எப்பவும் ஏதாவது ஒரு சர்ச்சை உங்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கே… சமீபத்தில், ராமர் படம் போட்ட புடவை. ஒருவேளை பரபரப்புக்காகவே இப்படிப் பண்றீங்களா?”
”யாரை விமர்சிச்சா லாபம் கிடைக்குமோ, அவங்களைத்தானே தொடர்ந்து குறிவைப்பாங்க. ஆனா, ஒண்ணே ஒண்ணு மட்டும் அவங்களுக்குப் புரியவே மாட்டேங்குது. அது, குஷ்பு யாருக்கும்பயப்பட மாட்டா!
என் டிக்ஷனரியில் பயம்கிறதே கிடையாது. அன்பு, பாசத்துக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். அச்சுறுத்தல், மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன். எனக்குப் பயம்னா என்னன்னே தெரியாது!”
ஆனந்த விகடன்
இதுதான் குஷ்புவின் பேட்டி. வாரிசு மோதல் : கருணாநிதி யார் பக்கம் என்ற கட்டுரையில், தன் பிள்ளைகளுக்கு இடையிலேயே கருணாநிதி எப்படி அரசியல் செய்வார் என்பது குறித்து எழுதப்பட்டிருந்தது.
குஷ்பு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, திருச்சி சிவாவின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட குஷ்பு மீதும், திருச்சி திமுகவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத்தாக்குதலில், குஷ்பு மீது செருப்பு வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திமுகவை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம், கருணாநிதியின் சம்மதம் இல்லாமல் குஷ்பு இந்தப் பேட்டியை அளித்திருக்க வாய்ப்பு துளியும் இல்லை. திமுகவின் மூத்த தலைவர்களான, அன்பழகன், துரைமுருகன் போன்றவர்களிடம் திமுகவின் அடுத்த தலைமை குறித்து கருத்து கேட்டால் கூட, தலைவர் இருக்கும் வரை, அடுத்தது யார் என்ற கேள்விக்கே இடமில்லை என்றுதான் பதில் சொல்வார்கள். அவர்களிடம் குறிப்பாக ஸ்டாலின் குறித்து கேட்டாலும், பதில் சொல்லாமல் மழுப்புவார்களே ஒழிய, நேரடியாக எந்த பதிலும் அளிக்க மாட்டார்கள். அப்படி மூத்த தலைவர்களே கருத்து சொல்ல அஞ்சி ஓடி ஒளியும் ஒரு சூழலில், அடுத்த தலைவர் ஸ்டாலினா இல்லையா என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்று தைரியமாக பேசியிருக்கிறார் குஷ்பு.
குறிப்பாக கருணாநிதியே ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று சொல்லி விட்டாரே என்று கேட்டதற்கு, “தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க – வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!” என்று பதில் கூறியிருக்கிறார் குஷ்பு.
இப்படியெல்லாம் குஷ்பு தேவையில்லாமல் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனந்த விகடனில் வந்த இந்த பேட்டியே கூட, கருணாநிதியின் கைவண்ணமாகத்தான் இருக்கும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் குஷ்புவுக்கு, இந்த பொதுக்குழு, உயர்மட்ட செயற்குழு, உயர்மட்ட அறிவுஜீவிக் குழு, அறிவில்லாத முட்டாள்கள் குழு போன்ற அத்தனை குழுக்களும், கருணாநிதியின் கைப்பாவைகள் என்பது நன்றாகவே தெரியும். அவருக்குத் தெரிந்தது போலவே, திமுகவில் உள்ள அத்தனை பேருக்கும், பொதுக்குழு என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும். தவிரவும், திமுக என்றாலே அது கருணாநிதியின் குடும்ப சொத்து என்பது திமுகவில் உள்ள அத்தனை பேருக்கும் தெரியும்.
மகன் எம்.எல்.ஏ. மகள் எம்.பி. மற்றொரு மகன் மத்திய அமைச்சர். பேரன் முன்னாள் அமைச்சர், இன்னாள் எம்.பி. ஒரு மகன் பொருளாளர். மற்றொரு மகன் தென் மண்டல அமைப்புச் செயலாளர். மற்றொரு மகள், மற்ற மகன் ஆகியோர், ஆட்சியில் இருக்கையில், வசூல் வேட்டைகளைக் கையாளும் பொறுப்புகளில் உள்ளவர்கள். இவர்களெல்லாம் போட்ட மிச்சமும், மீதியும்தான், மற்றவர்களுக்குக் கிடைக்கும் கட்சியின் பொறுப்புகள், பதவிகள் எல்லாமும்.
இந்த உண்மைகளை குஷ்பு அறியாதவர் அல்ல. அப்படி இருந்தும் குஷ்பு இப்படியொரு பேட்டியை ஆனந்த விகடனில் ஏன் அளிக்க வேண்டும் ? முழுக்க முழுக்க கருணாநிதியின் அறிவுறுத்தலின்படியே இந்தப் பேட்டியை குஷ்பு அளித்திருப்பார். இந்தப் பேட்டி வருவதால், கருணாநிதிக்கு என்ன நன்மை ? எதற்காக இப்படியொரு பேட்டி ? ஏற்கனவே இது குறித்து எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது போல, கல்யாண வீடென்றால் கருணாநிதிக்கு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். இழவு வீடென்றால் பிணமாக இருக்க வேண்டும். எல்லாமே தன்னைச் சுற்றியே நடக்க வேண்டும், அவற்றில் பெரும்பாலானவற்றை தான் தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கும் நார்சிஸ்ட் கருணாநிதி.
தற்போது குஷ்புவின் பேட்டியைத் தொடர்ந்து அவர் வீடு தாக்கப்பட்டதையடுத்து, குஷ்பு வீட்டின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பே, இந்த விவகாரத்தில் கருணாநிதியின் பங்கு என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
திமுகவில் சகோதர யுத்தம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதுவும், நான் ஸ்டாலினைத் தலைவராக முன்மொழிவேன் என்ற கருணாநிதியின் அறிவிப்பை அடுத்து, அழகிரி முண்டா தட்டிக் கொண்டு மோதலுக்கு தயாராகி வருகிறார். மற்றொரு வாரிசான கனிமொழி, அண்ணன் ஸ்டாலின் அணியில் ஐக்கியமாகி விட்டதாகவும், அதற்குக் கைமாறாக, அவரை 2ஜி வழக்கிலிருந்து விடுவிக்க உதவி செய்வதாக ஸ்டாலின் வாக்களித்திருப்பதாகவும் தெரிகிறது. கனிமொழி ஸ்டாலின் அணியில் இணைந்துள்ள நிலையில், வாரிசு மோதல் ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு இடையே என்று எல்லைக்கோடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த போட்டியில் நடுவராக இருக்க வேண்டிய கருணாநிதி, தானும் ஒரு அறிவிக்கப்படாத போட்டியாளராக இருந்து வருகிறார்.
பாஞ்சாலி சபதத்தில் சூதாட மறுக்கும் தர்மனிடம் சகுனி
அச்சமிங் கிதில்வேண்டா,-விரைந்
தாடுவம் நெடும்பொழு தாயின தால்;
கச்சையர் நாழிகை யா-நல்ல
காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்!
நிச்சயம் நீவெல் வாய்;-வெற்றி
நினக் கியல் பாயின தறியா யோ?
நிச்சயம நீவெல் வாய்;-பல
நினைகுவ தேன்களி தொடங்கு கென்றான்
அப்படி சகுனியைப் போல சகோதரர்களிடையே உனக்குத்தான் திமுக, நீதான் அடுத்த தலைவர் என்று தூண்டி விட்டு, அதன் மூலம் இருவருக்குமிடையே பகையை வளர்த்து அந்தப் பகையில் குளிர் காயும் வேலையைத்தான் கருணாநிதி செய்து வருகிறார்.
குஷ்புவின் இந்தப் பேட்டியால், ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொதிக்கிறார்களா… கலவரத்தில் ஈடுபடுகிறார்களா… அப்படி ஈடுபட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் ஆர அமர இருந்து ரசிக்கலாம் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார் கருணாநிதி. யாருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும், இறுதியாக பஞ்சாயத்து செய்து வைப்பதற்கு அவரிடம்தான் வர வேண்டும் என்பது கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்.
முதல்வராக இருந்தால், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், கருணாநிதியின் வீட்டில் பிச்சைக்காரர்களைப் போல காத்திருந்து அய்யா… தர்மம் பண்ணுங்கய்யா… என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். திரையுலகினர் வாரத்திற்கு ஒரு முறை விழா எடுத்து, தமிழ் மொழியைக் கண்டு பிடித்தவரே கருணாநிதிதான் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். கலைஞானி கமல்ஹாசன், நான் பராசக்தி பார்க்காவிட்டால், எனக்குத் தமிழே தெரியாமல் போயிருக்கும் என்பார். ரஜினிகாந்த், கலைஞர்ஜி இல்லேன்னாக்கா… தமிழ்நாடே இல்லை என்று கூறியிருப்பார்.
இந்தப் புகழாரங்களெல்லாம் இல்லாத காரணத்தால்தான், கருணாநிதி இப்படி ஒரு அற்பத்தனமாக காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
குஷ்பு அவர்களுக்கு… தமிழ்த் திரையுலகில் கோவில் கட்டி வழிபடும் அளவுக்கு வெற்றிகரமான நடிகையாக இருந்தவர் நீங்கள். ஒரு நடிகையாக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற நீங்கள், அரசியலிலும் அதே வெற்றியைப் பெறலாம் என்று கனவு காணாதீர்கள். நீங்கள் நினைப்பது போல அரசியல் எளிதல்ல. பெரியார் படத்தில் நடித்த ஒரே காரணத்தினாலேயே நீங்கள் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராகி விட மாட்டீர்கள் என்பதை உங்கள் நினைவில் கொள்ளுங்கள். திமுகவில் நீங்கள் சேர்ந்தது ஒரு விபத்து என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். உச்சநீதிமன்றத்தில் உங்கள் வழக்கு முடிந்ததும், காங்கிரஸ் கட்சியில் சேர முடிவெடுத்திருந்த உங்களை இறுதி நேரத்தில் திமுகவுக்கு அழைத்து வந்தது, ஜாபர் சேட்டின் சாகசம். யதேச்சையாக நேர்ந்த காரணங்களால் திமுகவில் சேர்ந்து, வாரிசு மோதலில் சிக்கிக்கொள்ளும் வகையில் ஏன் அறிவிழந்து போனீர்கள் என்று புரியவில்லை.
சினிமா தெரிந்த அளவுக்கு உங்களுக்கு அரசியல் தெரியவில்லை. கருணாநிதி யார், அவர் குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம் என்பதை உணர்த்த நீங்கள் வாழ்ந்த காலத்திலேயே பல்வேறு சான்றுகள் உள்ளன. குடும்ப சண்டை காரணமாக, மூன்று அப்பாவி இளைஞர்களைக் கொலை செய்து விட்டு, அந்தச் சந்தடியே இல்லாமல் ஒன்று சேர்ந்து மீண்டும் கொள்ளையைத் தொடங்கிய குடும்பம் கருணாநிதி குடும்பம்.
குடும்பத்துக்குள் இன்று ஆயிரம் மோதல்கள் இருந்தாலும்… குடும்பம் குடும்பம்தான். கருணாநிதி குடும்பத்தை விட்டுக் கொடுத்ததாக வரலாறே கிடையாது. அப்படிப்பட்ட கருணாநிதியின் பேச்சைக் கேட்டு நீங்கள் அவர்களின் குடும்பச் சண்டைக்குள் மூக்கை நுழைப்பது உங்கள் அறிவீனத்தைக் காட்டுகிறது. கருணாநிதி என்னதான் மூத்த தலைவராக இருந்தாலும், கட்சியும், குடும்பமும் அவரது முழுமையாக கட்டுப்பாட்டில் இல்லை. வயதானவர்… இன்னும் எத்தனை நாளைக்கு இப்படிப் பேசிக்கொண்டிருப்பார் என்ற அடிப்படையிலேயே, கருணாநிதியின் அற்பத்தனங்களை அவர் குடும்பத்தினர் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதே பொறுமையை அவர்கள் உங்கள் விஷயத்தில் காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்.
அன்புன்னா உயிரக் குடுப்பேன், அடாவடின்னா உயிரை எடுப்பேன் என்று ரஜினிகாந்த் போல பன்ச் டயலாக் பேசுவது சினிமாவுக்கு மட்டுமே சரிப்படும் என்பது உங்களுக்குத் தெரியாதது அல்ல. பயம்னா என்னன்னே எனக்குத் தெரியாது என்று பேட்டியளித்த நீங்கள், திருச்சி ஃபெமினா ஓட்டலில் வீசப்பட்ட செருப்புகளுக்குப் பயந்து மீண்டும் ஓட்டலுக்குள் தஞ்சம் புகுந்தீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் மீது நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலுக்கு போலீஸ் புகார் கூட கொடுக்க முடியாதபடி ஒரு நெருக்கடியில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். உங்களைத் தாக்கிய ஸ்டாலின் ஆதரவாளர்களை கைது செய்யுங்கள் என்று போலீசில் புகார் கொடுத்து விட்டு நீங்கள் கட்சியில் இருந்து விட முடியுமா ? திமுக கூட்டங்களுக்குப் போனால், மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது போல, “எக்ஸலன்ட் பெர்பார்மன்ஸ்… ஹேட்ஸ் ஆஃப்….” என்றும், “தலீவர் இருக்கறதாலேதான் டமிளர்கள்ளாம் உயிரோட இருக்காங்க… தலீவர் டமிளினத்தின் ஒரே தலீவர்” என்று பேசுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
திமுகவில் இப்படியே இருந்து, கருணாநிதிக்குப் பிறகு ஜெயலலிதாவாகலாம் என்று கற்பனை செய்யாதீர்கள். ஜெயலலிதா அதிமுகவில் இருந்ததற்கும், நீங்கள் திமுகவில் இருந்ததற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. எம்ஜிஆருக்கு வாரிசே இல்லை. கருணாநிதிக்கு ஊரெங்கும் வாரிசுகள். திமுக, அதிமுக சமன்பாடுகள் வேறு வேறானவை. நீங்கள் ஒரு காலத்திலும் ஜெயலலிதா ஆக முடியாது.
“மேம்… வி ஸ்டேன்ட் பை யு மேடம்… யு ஆர் வெரி போல்ட் மேடம்… வி சல்யூட் யுவர் கரேஜ் மேடம்” என்று ட்விட்டரில் உங்களை உசுப்பேற்றுபவர்கள், உங்கள் வீட்டில் கல்லெறியப்படும்போதும், உங்கள் மீது செருப்பு வீசப்படும்போதும் இருக்க மாட்டார்கள். நிஜ வாழ்வில் ஏற்படும் வன்முறையை நீங்கள் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். இந்த யதார்த்தத்தைப் பரிந்து கொண்டு நடந்து கொள்ளுஙகள்.
கருணாநிதி அவர்களே… நீங்கள் வாழ்வின் இறுதிப் படிக்கட்டில் இருக்கிறீர்கள். இன்னும் ஐம்பது ஆண்டுகள் அல்ல… இருபது ஆண்டுகள் இருப்பீர்களா என்பதே சந்தேகம்தான். நீங்கள் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினாலும், இயற்கை அதற்கு ஒத்துழைக்காது. ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் செய்த துரோகங்கள் என்றுமே மறக்கப்படாது. தமிழனத்தின் துரோகி என்றே வரலாறு உங்கள் பெயரைப் பதிவு செய்யும். இன்னும் உங்களை எப்படியாவது தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று, உங்கள் உடன்பிறப்புகள் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது, பெருந்தன்மையோடு நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களை தலைவனாக அல்லாவிடினும் மனிதனாகவாவது வரலாறு நினைவில் கொள்ள வேண்டும். சகுனியாக அல்ல.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
என்கிறார் வள்ளுவர். குறளோவியம் தீட்டிய உங்களுக்கு விளக்கம் வேண்டியதில்லை.