கருத்துச் சுதந்திரம் – பத்திரிகைச் சுதந்திரம் என்பவை ஜனநாயக நாட்டில் எந்த அளவுக்கு முக்கியமானவையோ; அதே அளவுக்கு முக்கியமானவை சமூகப் பொறுப்பு – பத்திரிகாதர்மம் ஆகியவை என்பதை ஜனநாயக உரிமைகளிலும் – கடமைகளிலும் நம்பிக்கையுள்ள எல்லோரும் ஏற்றுக் கொள்வர்.
சமூகப் பொறுப்பு என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், அதைக் காற்றில் பறக்க விடும் பத்திரிகைச் சுதந்திரம்; பத்திரிகைகளுக்கான நெறிகளை அதாவது பத்திரிகா தர்மத்தைக் கிஞ்சிற்றும் பேணாத பத்திரிகைச் சுதந்திரம்; படிப்போர் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலக்கவும், ஜனநாயக சமூகத்தின் ஆணி வேரை அரிவாள் கொண்டு அறுக்கவும் பயன்படுமே அல்லாமல்; ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்தவோ, சமூகத்தை ஆரோக்கியப் படுத்தி ஆக்கப் பூர்வமான பாதையில் அழைத்துச் செல்லவோ, அணுவளவேனும் பயன்படாது.
பத்திரிகை உலகின் வியாபாரப் போட்டியில் வருமானமே முதன்மையானது என்ற குறுகிய நோக்கம் ஆட்கொள்ளும்போது, சமூகப் பொறுப்பும் – பத்திரிகா தர்மமும் இற்று விழுந்து காய்ந்து போகத் தான் செய்யும். இப்படித் தான் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று நியதியை விதித்துக் கொள்ளாமல்; எப்படியாவது வருவாயைப் பெருக்கிக் கொண்டே போக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி விடுமானால், பொறுப்புணர்வும் – தர்ம சிந்தனையும் கடைசி இடத்துக்குப் போய் விடும்.
தமிழகத்தில் சில குறிப்பிட்ட ஏடுகளும், இதழ்களும் தாங்கள் வெளியிடும் செய்திகளும் – செய்திக் கட்டுரைகளும் எப்படிப்பட்ட தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி எள்ளளவும் கருதிப் பார்க்காமல்; அப்படிக் கருதிப் பார்த்தால் தாங்கள் செய்து வரும் வியாபாரம் அடிபட்டுப் போய் விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, எதையும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று; கனி இருப்பக் காய் கவர்ந்து முகம் சுளிக்கும் காரியத்தைச் செய்து வருகின்றனர். இப்படிச் செய்வதால், விற்பனையாகும் பிரதிகளின் எண்ணிக்கை கூடலாம். ஆனால் அது தற்காலிகமானது தான் என்பதையும்; அவர்கள் வெளியிடும் செய்திகள் ஏற்படுத்துவது ஒரு வகை மயக்கமே – அந்த மயக்கம் மறு நொடியில் தெளிந்து விடும் என்பதையும்; கடைசியில் அவர்களுக்கே அது பாதகமாகி விடும் என்பதையும்; “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்” என்பதையும் அவர்கள் உணராமல் இருப்பதுதான், வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட வேண்டுமானால்; 2011 பொதுத் தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்து, மூன்றாவது இடத்துக்கு வந்ததற்குப் பிறகு; “நல்ல சமயமடா நழுவ விடாதே” – என்று திமுகவுக்கு “ஜென்ம விரோதிகள்” எனத் தம்மைத் தாமே நினைத்துக் கொண்டிருக்கும் ஒருசில பத்திரிகையாளர்கள் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி, திமுகவை ஒழித்துக் கட்ட இதுவே சிலாக்கியமான தருணம் என்று முடிவெடுத்து காரியத்தில் இறங்கி இருப்பது கண்கூடு. இதற்கு மேலிடத்து ஆசீர்வாதமும் அரவணைப்பும் அறிவுரைகளும் உண்டு என்பதை அனைவரும் அறிவர்.
தீட்டப்பட்ட சதித் திட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் – திமுகவினரைக் காயப்படுத்தி, கலகமூட்டிக் குழப்பம் ஏற்படுத்திடும் கற்பனையான செய்திகள், என்னைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றியும் இட்டுக் கட்டிய பொய்யுரைகள் அபாண்டமான முறையிலும், அதிர்ச்சியூட்டத் தக்க வகையிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. நமது கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே வெளியிடப்படும் அந்தச் செய்திகளை அவ்வப்போது மறுத்து விளக்கமளிப்பதும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதும் கால விரயத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றைப் பெரிதாக எண்ணி அலட்டிக் கொள்ளாமல், அமைதியாக அலட்சியப்படுத்தப்பட்டன. அலட்சியம் செய்ததையே ஆதாயமாகக் கருதி, “ஆட்டைக் கடித்து . . . . .மாட்டைக் கடித்து …….” என்பார்களே அதைப் போல, அருவருக்கத்தக்க கட்டுக்கதைகளை, எவ்வித நாகரிகமுமின்றி வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். என்னைப் பற்றிக் கூட நான் எப்போதும் கவலைப்படுவதில்லை, ஆனால் ஒரு பெண்மணியைப் பற்றி, அதுவும் கணவனுடனும், குழந்தைகளுடனும் குடும்பம் நடத்தி வாழ்ந்து கொண்டு, கட்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவரைப் பற்றி நாராச நடையில் கொச்சைப்படுத்தி எழுதுவது முறை தானா? தமிழ்நாட்டு மக்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொள்கிறார்களா? அந்தப் பத்திரிகையாளர்கள் தங்களுக்கும் குடும்பம் – பிள்ளை குட்டிகள் இருப்பதை மறந்து, சேற்றை அள்ளி வீசுகிறோமே, அதனால் கைகள் கறை ஆவதோடு, மற்றவர் மனம் எப்படியெல்லாம் வேதனைப்படும் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றால், அவர்களுக்குப் பணம் தான் எல்லாம்; பண்பாடு – பத்திரிகா தர்மம் போன்ற நெறிமுறைகள் பழங்குப்பை தான்!
நான் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகையாளனாகவே வளர்ந்து வந்திருக்கிறேன். எனது கைகளைக் கொண்டே என்னை அடிப்பதா என்ற தயக்கத்தில் இதுவரை அமைதியோடு பொறுமை காத்து வந்தேன்.
பத்திரிகையாளர்கள் சிலர், என்னைப் பொறுமையின் விளிம்பிற்கே தள்ளிக் கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. எனவே சேற்றை வாரி வீசுவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று அமைப்பு ரீதியாக முடிவெடுத்து அறிவிக்கலாமா அல்லது கட்சி ரீதியாக அந்தப் பத்திரிகை அலுவலகத்தின் முன்னாலேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாமா என்றிருக்கிறேன்.
கட்சித் தோழர்கள், உள்நோக்கம் கொண்ட இத்தகைய செய்திகளைப் பற்றிக் கவலைப்படாமல் – சதித் திட்டத்தை நிறைவேற்ற இறுக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கும் “இனவெறிக்” கூட்டத்தின் செய்திகளையும், ஏடுகளையும் புறந்தள்ளி விட்டு – என்றும் போல் கட்சிப் பணி – மக்கள் பணி ஆற்றி, வெற்றி காண வேண்டும் என்று விரும்புகிறேன்.