ஒரு காகிதம் பொறுக்கி கல்வித்தந்தை ஆன கதையை ஏற்கனவே சவுக்கு வாசகர்கள், அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும், ஐ யம் வெரி ஹேப்பி ஸ்டார்ட் ம்யூசிக், மற்றும் முகமூடி ஆகிய கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். சரி.. சைதை துரைசாமிதான் இப்படி என்றால், அவர் மகன் சைதை துரைசாமியை விஞ்சி விடுவார் போலிருக்கிறது.
வெற்றி நாளிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில், ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற இருந்த நாய் கண்காட்சி இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அந்தக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டதற்கு, ஒரு முக்கியப் பிரமுகரின் மகன் வளர்த்த நாய்க்கு முதல் பரிசு கொடுக்காததுதான் காரணம் என்று கூறப்பட்டிருந்தது. இதன் முழு விபரங்கள் என்னவென்று விசாரித்தால், சைதை துரைசாமிக்கு அவரைப் போல அல்ல… அவரையே விஞ்சி விடும் வகையில் ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு சவுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
வெற்றி துரைசாமி. பெயரிலேயே வெற்றி இருப்பதாலோ என்னவோ இவர் வெற்றியைத் தவிர வேறு எதையுமே விரும்புவதில்லை. தாம்பரத்தை அடுத்த படைப்பையில், ஆனந்த விகடனின் முன்னாள் ஆசிரியர் பாலசுப்ரமணியத்துக்கு சொந்தமான ஒரு பண்ணை வீடு இருக்கிறது. பாலசுப்ரமணியம் ஒரு பறவைப் பிரியர். விதவிதமான பறவைகளை வளர்த்து வருவார். எம்.எல்.ஏ சைதை துரைசாமியின் மகன் என்ற அறிமுகத்தில் ஒரு நாள் பறவைகளை பார்க்க வேண்டும் என்று சிறுவனாக இருந்த வெற்றி துரைசாமி கேட்கவும், அவரும் அனுமதித்துள்ளார். உள்ளே சென்று பறவைகளைப் பார்வையிட அனுமதித்தால், மெக்காவ் எனப்படும் பஞ்சவர்ணக்கிளி ஒன்றை திருடியுள்ளார் வெற்றி. இந்தத் தகவல் அறிந்ததும், வெற்றியைப் பிடித்து நையப்புடைத்துள்ளனர். பெரிய மனிதர் வீட்டுப் பையன் (இவங்க அப்பன் இவனை விட பெரிய சில்லரை என்பது பாலசுப்ரமணியத்துக்குத் தெரியவில்லை) என்பதால் விட்டு விட்டார்கள். இந்தப் பறவைகளின் ஒரு ஜோடியின் விலை என்ன தெரியுமா ? இன்றைய சந்தை மதிப்பு 3 லட்சம்.
அப்படிப்பட்ட பண்பாளரும் சிறந்த மனிதருமானவர்தான் வெற்றி துரைசாமி. இவர் சட்டம் படித்தவர். சட்டம் படித்து விட்டு, வழக்கறிஞராக தொழில் செய்யாமல், BPO போல LPO (Legal Process Outsourcing) என்ற நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது இவரோடு நெருக்கமானவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கண்ணதாசன். இந்த கண்ணதாசன் பின்னாளில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். சைதை துரைசாமியின் மகனோடு நல்ல நீதிபதிகள் சகவாசம் வைத்துக் கொள்வார்களா என்ன ?
குதிரை வளர்ப்பது, தபால் தலைகள் சேகரிப்பது, நாணயங்கள் சேகரிப்பது போல, நாய்கள் வளர்ப்பது பல பெரிய மனிதர்களின் ஹாபி. இது ஒரு தனி உலகம். அழகான, விலை உயர்ந்த நாய்களை வளர்ப்பது, நாய்க் கண்காட்சிகளில் அந்த நாய்களை கலந்து கொள்ள வைப்பது என்று அந்த தனி உலகத்தில் ஜீவிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படி நாய் வளர்ப்பதற்கென்று கென்னல் க்ளப் ஆப் இந்தியா என்று ஒரு தனி சங்கமே உள்ளது. இந்த சங்கத்தின் தலைமையகம் சென்னையில் இயங்குகிறது. இந்த கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்கள் நாய்கள் பிறந்தது முதல் அத்தனையையும் பதிவு செய்ய வேண்டும். இந்த சங்கம் சான்றிதழ் அளித்தால்தான் நாய் எப்படிப்பட்ட தரம் வாய்ந்தது என்று உரிய விலைக்கு வாங்குவார்கள். அப்படிப்பட்ட ஒரு க்ளப்தான் கென்னல் க்ளப் ஆப் இந்தியா.
நீண்ட நாட்களாக வட இந்தியாவில் செயல்பட்டு வந்த இந்த க்ளப்பின் தலைமையகத்தை சென்னைக்கு மாற்றினர். சென்னைக்கு மாற்றி இந்த க்ளப் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ரேஸில் ஓடும் குதிரைகள் எப்படி கோடிக்கணக்கில் விலை போகின்றனவோ, அது போல அரிதான வகையைச் சேர்ந்த நாய்கள் 2 லட்சம் முதல் 30 லட்ச ரூபாய் வரை விலை போகும்.
வழக்கமாக நாய்க் கண்காட்சிகளில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அப்படி பரிசுகள் வழங்கையில் அரிதான வகையைச் சேர்ந்த நாய்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குவர்.
இந்தச் சூழலில் 2005ம் ஆண்டு வாக்கில், இந்த நாய் உலகத்தில் இறங்குகிறார் வெற்றி துரைசாமி. இந்த க்ளப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர், சுதர்சன் என்பவர். நாய்க்கண்காட்சிகளில் நீதிபதியாக இருப்பதில் இவர் நிபுணர். ஏறக்குறைய 100 நாடுகளுக்கும் மேல் நாய்க்கண்காட்சிகளில் நீதிபதியாக இருந்துள்ளார். இவரோடு வெற்றி துரைசாமி நெருக்கமாகிறார். சரி… ஆளுங்கட்சிப் பிரமுகரின் மகனாயிற்றே என்று சுதர்சனும் இவரோடு நெருக்கமாகப் பழகுகிறார்.
இந்த நாய்களின் உலகத்தின் ஜாம்பாவன்கள் நிறையபேர் உண்டு. நாய் வளர்ப்பதற்கென்று லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, போட்டிகளில் அந்த நாய்களை பரிசு பெற வைத்து, அதில் பெருமையடைபவர்கள் பலர் உள்ளனர். இப்படிப்பட்ட ஒருவர்தான் நாகராஜ் ஷெட்டி என்பவர். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பேச்சு, மூச்சு, சிந்தனை எல்லாமே நாய்கள்தான். பெங்களுரில் உள்ள இவரது வீட்டில், நாய்களுக்கென்று தனித்தனி ஏ.சி அறைகள், அந்த நாய்களைப் பராமரிக்க ஒவ்வொரு நாய்க்கென்றும் தனித்தனி பராமரிப்பாளர்கள், அந்த பராமரிப்பாளர்களுக்கு தங்கும் விடுதி என்று இவர் ஒரு நாய் பக்தர். இந்த நாகராஜ் நாய்க் கண்காட்சிகளில் வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.
சென்னை கென்னல் க்ளப் என்ற நாய் வளர்ப்போர் சங்கத்துக்கென்று பெரிய அளவில் நிதி ஆதாரங்கள் கிடையாது. ஒரு கண்காட்சி நடத்துவதென்றால் குறைந்தது 3 முதல் 5 லட்சம் வரை ஆகும். டிக்கெட்டுகள், விளம்பரங்கள் என்று வசூல் செய்தது போக துண்டு விழும் தொகையை இந்த நாகராஜ் ஷெட்டி ஒரே செக்கில் வழங்குவார். இப்படி இவர் வழங்குவதால், போட்டிகளில் முதலிடம் வழங்குவதில் இவருக்கு முன்னுரிமை கொடுப்பது வழக்கம். முதலிடம் பெறுகிறார் என்பதற்காக, இவரது நாய்கள் தகுதியற்றவை என்று பொருள் அல்ல. 20 முதல் 25 லட்சம் வரை செலவு செய்து, வெளிநாட்டிலிருந்து மிக மிக சிறப்பான அரிய வகை நாய்களை இறக்குமதி செய்து கண்காட்சிக்கு கொண்டு வருவார். இவர் கொண்டு வரும் நாய்கள், இந்தியாவில் எங்குமே இருக்காத வகையில் சிறப்பாக இருக்கும்.
இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாய்களின் சங்கமும், நாய்க் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான், வெற்றி துரைசாமி போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்குகிறார். இவர் தன் பங்குக்கு க்ளப்புக்காக பணத்தை செலவு செய்வதோடு, தனது அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி, தனது நாய்தான் முதல் பரிசு வாங்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். அரசியல் பிரமுகரின் மகனாயிற்றே என்று, இவரது நாய்க்கு முதல் பரிசை தொடர்ந்து வழங்குகிறார்கள். நாய் வளர்ப்பில் தனக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்த வெற்றி துரைசாமி கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களில் உள்ள நாய் வளர்ப்புச் சங்கங்கள் நடத்தும் போட்டியிலும் கலந்து கொண்டு முதல் பரிசை பெறுகிறார். தமிழ்நாடு சங்கத்துக்கே நிதி நெருக்கடி என்றால் மற்ற தென்மாநில சங்கங்களை கேட்கவா வேண்டும் ? அந்த மாநிலங்களில் உள்ள சங்கங்களுக்கு நிதி உதவி கொடுத்து, முதல் பரிசை பெறுகிறார். தென் மாநிலங்களில் முதல் பரிசைப் பெறும் வெற்றி துரைசாமி, வட இந்தியாவுக்கு ஏன் செல்லவில்லை என்றால், வட இந்தியாவில் இது போல திருட்டுத்தனம் செய்தால், கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதால்தான்.
2006, 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து கண்காட்சிகளிலும் வெற்றி துரைசாமியின் லசாப்சோ வகை நாய் முதல் பரிசைப் பெறுகிறது. இப்படி வெற்றியின் நாய்களுக்கு முதல் பரிசு வழங்கப்படுவதால், வழக்கமாக சிறப்பான நாய்களைக் கொண்டு வந்து பரிசு பெறும், நாகராஜ் ஷெட்டி எரிச்சலடைகிறார். ஒரு கட்டத்தில், சென்னையில் உள்ள கண்காட்சிகளில் பங்கெடுப்பதையே தவிர்க்கிறார். சென்னைக்கு வருவதில்லையே தவிர, நாகராஜ் ஷெட்டியின் நாய்கள், தென்அமேரிக்க நாடுகளிலும், அமெரிக்காவிலும் பல பரிசுகளை வெல்கின்றன.
இதற்கிடையே மற்றொரு பூதாகரமான ஊழல் புகார் வெற்றி துரைசாமி மீது விழுகிறது. அது என்னவென்றால், நாய்களை சொந்தமாக வளர்க்காமல், தாய்லாந்திலிருந்து வாடகைக்கு எடுத்து வந்து கண்காட்சியில் கலந்து கொள்ள வைத்து, கண்காட்சி முடிந்ததும் திருப்பி அனுப்பி விடுகிறார் என்ற விபரம், நாய் வளர்க்கும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தெரிய வருகிறது. இவர்கள் வெற்றியின் வெற்றி ரகசியத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். லசாப்சோ வகை நாயை பராமரிப்பது மிக மிக கடினம். அந்த நாயின் முடிகளை பத்து பத்து முடிகளாக பிரித்து, அதன் மீது மெல்லிய காகிதத்தை வைத்து, ரப்பர் பேன்ட் போட்டு, ஒரு நாள் கழித்து அவற்றை பிரிக்க வேண்டும். ஏராளமான செலவு பிடிக்கும் நாய் இது. இந்த சிரமத்துக்காக, வெற்றி துரைசாமி, தாய்லாந்திலிருந்து நாய்களை வாடகைக்கு எடுத்த போட்டியில் கலந்து கொள்கிறார் என்ற விபரம் தெரிய வந்ததும், இனி வெற்றிக்கு முதல் பரிசு கொடுக்கக் கூடாது என்று க்ளப் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.
நாய்க்கண்காட்சியில் நாய்…..மற்றும் வெற்றி துரைசாமி
இதன் நடுவே நாய் வளர்ப்புச் சங்கத்தின் சார்பில், மாதந்தோறும் கென்னல் கெஸட் என்ற பத்திரிக்கை வருகிறது. இந்தப் பத்திரிக்கையில் அரிய வகை நாய்கள், போட்டிகளில் வென்றது போன்ற செய்திகள் வெளிவரும். போட்டிகளில் வென்ற நாய்களின் உரிமையாளர்கள், தங்கள் நாய்களைப் பற்றி விளம்பரங்களும் கொடுப்பார்கள். இப்படி போட்டிகளில் வென்ற நாய்களைப் பற்றி விளம்பரங்கள் கொடுக்கையில், சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகள், அதற்கு சான்றிதழ் அளிக்க வேண்டும். அப்படி சான்றளித்தால்தான், விளம்பரங்களே ஏற்றுக் கொள்ளப்படும். வெற்றி துரைசாமி, போட்டியிலேயே வெல்லாத நாய்களைப் பற்றியெல்லாம் விளம்பரங்கள் கொடுக்க முயற்சித்தார். சங்க நிர்வாகி சுதர்சன், ஏற்கனவே நமது பெயர் ரிப்பேராகி இருக்கிறது. இனியும் பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று இப்படி பொய்யான விளம்பரங்கள் கொடுக்க முடியாது என்று மறுக்கிறார்.2009ம் ஆண்டு நடந்த கண்காட்சியில் மீண்டும் நாகராஜ் ரெட்டி கலந்து கொள்கிறார். அவரது நாய் அந்த ஆண்டு சிறந்த நாயகாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவ்வளவுதான்… வந்ததே கோபம் வெற்றிக்கு… உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கருவுகிறார்.
சைதை துரைசாமிக்கு எப்படி அற்ப புத்தியோ, அதை விட அற்ப புத்தி படைத்தவராக இருக்கிறார் வெற்றி துரைசாமி. தனது பொய் விளம்பரத்தை ஏற்க மறுத்ததால், அற்பத்தனமாக நடந்துகொள்கிறார். மெட்றாஸ் கேனைன் க்ளப் என்பதன் பெயரைப் பதிவு பதிவாளர் அலுவலகத்தில் புதுப்பிப்பதில் தாமதம ஏற்படுகிறது. இந்தத் தாமதத்தைப் பயன்படுத்தி, மெட்றாஸ் கேனைன் க்ளப் என்று தன்னுடைய பினாமி பெயரில் ஒரு சங்கத்தைப் பதிவு செய்து கொள்கிறார் வெற்றி துரைசாமி. இந்த விபரமே தெரியாமல், அடுத்த நாய்க் கண்காட்சியை டெல்லியில் நடத்திக் கொண்டிருக்கையில், டெல்லிக்குச் சென்று நீதிமன்றத்தில் கண்காட்சி மெட்றாஸ் கேனைன் க்ளப் பெயரில் வேறு ஒருவர் கண்காட்சி நடத்துகிறார் என்று தடை உத்தரவு பெற்று, கண்காட்சி தொடங்கிய பத்தாவது நிமிடம் தடை உத்தரவை வழங்க ஏற்பாடு செய்கிறார் வெற்றி துரைசாமி. கண்காட்சி தொடங்கிய பிறகு எப்படி நிறுத்துவது ? ஏறக்குறைய 600 நாய்கள் கண்காட்சியில் பங்கேற்றிருந்தன. வெளிநாட்டிலிருந்தெல்லாம் பல நாய்கள் வந்திருந்தன. அந்த வெளிநாட்டு நாய் வளர்ப்பவர்களிடம், சென்னையில் சைதை துரைசாமி பெற்ற தறுதலை ஒன்று இப்படி ஒரு தடை உத்தரவை பெற்று வந்திருக்கிறது என்று சொல்லவா முடியும் ? போடா வெண்ணை என்று சொல்லிவிட்டு, நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதன்பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கிறார் வெற்றி.
வெற்றி துரைசாமியின் நாய் மற்றும் பயிற்சியாளர்
உண்மையான மெட்றாஸ் கேனைன் க்ளப் நிர்வாகத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில், கீழ் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை தடை செய்யக் கோரியும், போலியாக பதிவு செய்த பதிவை ரத்து செய்யக் கோரியும் தொடுத்த வழக்கை விசாரித்த நீதியரசர் கே.வெங்கட்ராமன், சமீபத்தில்தான் போலி சங்கத்தின் பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி கண்காட்சி சிறப்பாக நடைபெற்றதால், கடும் ஆத்திரமடைகிறார் வெற்றி துரைசாமி. சங்கத்தின் நிர்வாகி சுதர்சனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று முனைகிறார். சுதர்சனின் வீட்டில், புதுக்கோட்டையிலிருந்து வந்த பெண் ஒருவர் வேலையாளாக பணியாற்றி வருகிறார். அந்தப் பெண்ணை அவர் வீட்டிலேயே பணியாற்றிய மற்றொரு வேலைக்காரப் பையன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி விட்டான் என்றும், அந்த பையன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதற்கு, சுதர்சன் உடந்தையாக இருந்தார் என்றும் அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார். அந்த பாதிக்கப்பட்ட பெண் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதும், விசாரித்து விட்டு, இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது என்று எப்ஐஆர் பதிவு செய்யாமல் விட்டு விடுகிறார்கள். உடனே, 200 பேரை ஏதோ ஒரு டுபாக்கூர் தலித் சங்கத்திலிருந்து அண்ணா நகர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, அந்த வேலைக்காரப் பையனை மட்டும் பொய்ப்புகார் என்று தெரிந்தே, கைது செய்கிறது காவல்துறை. சுதர்சனை விசாரித்து விட்டு, தினந்தோறும் காவல்நிலையத்துக்கு வந்து செல்லவேண்டும் என்று அலைக்கழிக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வந்த அந்தப் பெண்ணின் வீட்டார், தங்களை புகார் கொடுக்கச் சொல்லி கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக உண்மையை வெளிப்படையாகச் சொல்லி விட்டனர்.
2010ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் கண்காட்சி நடந்து வருகிறது. அப்போது வெயில் கடுமையாக இருந்ததால், ஒரு நாய் இறந்து போகிறது. இதை எப்படியாவது பெரிய செய்தியாக்கி, கண்காட்சிக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் கெட்டபெயர் வாங்கித் தரவேண்டும் என்று நினைத்த வெற்றி துரைசாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் நிருபராக இருந்த குஹாம்பிகா என்பவரை அழைத்து, பிரத்யேக செய்தி… சென்னை நாய்க் கண்காட்சியில் கலந்து கொண்ட நான்கு நாய்கள் இறந்து விட்டன என்று கூறுகிறார். சைதை துரைசாமியைப் போலவே, அவர் மகனும் ஒரு பொய்யர் என்பதை குஹாம்பிகா உணர்ந்திருக்க வேண்டும். உணரத் தவறி, அந்தச் செய்தியை அப்படியே அலுவலகத்துக்குத் தந்தார். அப்போது எடிட்டராக இருந்த ஆதித்ய சின்ஹா, அச்செய்தியை முதல்பக்கத்தில் வெளியிட்டார். செய்தி வெளியான அன்றே, மெட்றாஸ் கேனைன் கிளப்பிலிருந்து மறுப்பு அளித்தார்கள். இறந்தது ஒரே ஒரு நாய்தான்… அதுவும் நோய் வாய்ப்பட்டிருந்தது என்று கூறியதும், குஹாம்பிகா ஒரு வாரத்துக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
2012ம் ஆண்டு வழக்கம் போல நாய்க்கண்காட்சி சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங்க் சாலையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருந்தது. நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டன. இந்த நேரத்தில் சென்னை மாநகரத் தந்தையும், ஒரு ரூபாய் இட்லி வியாபாரியுமான சைதை துரைசாமியின் அலுவலகத்திலிருந்து சென்னை பல்கலைக்கழக நிர்வாகிக்கு சென்னை மாநகராட்சி விழா ஒன்று அந்த மைதானத்தில், நடைபெற உள்ளதால், நாய்க் கண்காட்சியை ரத்து செய்யுமாறு உத்தரவிடப்படுகிறது. இட்லி வியாபாரியும், மாநகரத்தந்தையுமான சைதை துரைசாமியின் உத்தரவை மறுக்க முடியுமா ? கண்காட்சிக்கு முதல் நாள், இடம் வழங்க முடியாது என்று ரத்து செய்கின்றனர். அந்த ஆண்டு கண்காட்சி நடக்காமலேயே போய் விட்டது.
ujமூன்று மாதங்களுக்கு முன், ஐந்து வழக்கறிஞர்கள் காலை 8 மணிக்கு சுதர்சன் வீட்டுக்கு சென்றுள்ளனர். அவரிடம் சென்று, நாங்கள் உங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்தோமே… ஏன் வாங்கவில்லை என்று கேட்டுள்ளனர். யாருக்கு கொடுத்தீர்கள் என்றதும், சங்கத்துக்குத்தான் கொடுத்தோம் என்றதும், சங்க அலுவலகத்துக்கு வந்து பேசுங்கள். வீட்டில் சங்க விவகாரங்களை பேச இயலாது என்று கூறியுள்ளார். அவர்கள் அமைதியாக சென்று விட்டனர். மறுநாள் அண்ணா நகர் காவல்நிலையத்திலிருந்து சுதர்சனுக்கு அழைப்பு. என்ன என்று தெரிந்த காவல்துறை அதிகாரி மூலமாக விசாரித்தால், ஐந்து வழக்கறிஞர்களை ஜாதிப்பெயரைச் சொல்லி நேற்று திட்டியதாக புகார் வந்துள்ளது. விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தெரிந்த காவல்துறை அதிகாரியிடம் பேசியதும்… அந்த வக்கீல்களிடம், அவருக்கு நீங்கள் இந்த ஜாதிதான் என்று எப்படித் தெரியும் என்று வக்கீல்களைக் கேட்டதும், ஆளுக்கு ஒரு பதிலைச் சொல்லியுள்ளார்கள். போலீஸ் பிறகு அவர்களை விரட்டி விட்டது.
சரி.. சென்ற ஆண்டுதான் இப்படி ஆகி விட்டது. இந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தை நம்ப முடியாது. அதனால் வேறு இடத்தைப் பார்க்கலாம் என்று இவர்கள் தேர்ந்தெடுத்த இடம், சென்னை ஐசிஎஃப் விளையாட்டு மைதானம். அந்த விளையாட்டு மைதானத்தை பேசி முடிவு செய்து, அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. கண்காட்சி 24 பிப்ரவரி அன்று ஐசிஎப் மைதானத்தில் நடந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பாக ஐசிஎப் அதிமுக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு மனோஜ் என்ற பாடி பில்டர் சங்க நிர்வாகிகளை அணுகுகிறார். நிகழ்ச்சி நடக்க வேண்டுமென்றால் எங்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்கிறார். ஏற்கனவே, பணம் இல்லாத காரணத்தால் பணம் கொடுப்பவருக்கு முதல் பரிசை வழங்கும் சங்கம் 10 லட்ச ரூபாய்க்கு எங்கே போகும்… எங்களால் தர இயலாது என்றதும், அந்த மனோஜ், நீங்கள் தராவிட்டால் எங்களுக்கு தரத்தயாராக இருக்கிறார்கள். கொடுக்கவில்லையென்றால், கடும் சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளனர். சங்க நிர்வாகிகளோ, எங்களைப் புரட்டிப் போட்டாலும் 10 லட்ச ரூபாய் கிடையாது என்று கூறியுள்ளனர்.
சரி போங்கள் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிய மனோஜ், நேற்று நீதிமன்றத்தில் பெற்றதாக ஒரு தடை உத்தரவை பெற்று நிகழ்ச்சி நடத்துவதை ரத்து செய்துள்ளார்.
400 நாய்கள் பங்கெடுக்க வேண்டிய இந்த ஆண்டு கண்காட்சி, வெற்றி துரைசாமியின் தலையீட்டால் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான நாய் வளர்ப்பாளர்களும், கண்காட்சியைக் காண இருந்த குழந்தைகளும், சைதை துரைசாமி பெற்ற தறுதலையால் கண்காட்சியை காண இயலாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சரி வெற்றி துரைசாமி இந்த விஷயத்தில்தான் இப்படி நடந்து கொள்கிறாரா என்று பார்த்தால் எல்லா விஷயத்திலும் இப்படித்தான். கடந்த ஆண்டு, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வளர்ப்புப் பிராணிகள் கண்காட்சி நடந்துள்ளது. இதை நடத்துபவர் யார் என்பதே வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. கண்காட்சி வெற்றிகரமாக நடந்து, 40 லட்ச ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதில் வட இந்தியாவிலிருந்து உயர்வகைப் பறவைகளை எடுத்து வந்து விற்றவர்களை 5 முதல் 10 லட்ச ரூபாய் வரை ஏமாற்றியுள்ளார் வெற்றி துரைசாமி. பணத்தைக் கொடுங்கள் என்று கேட்ட வியாபாரிகளிடம், தமிழ்நாட்டிலேயே கால் வைக்க விடமாட்டேன் என்று மிரட்டியுள்ளார் வெற்றி துரைசாமி.
சென்னை தாம்பரத்தை அடுத்து, வெற்றி துரைசாமிக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று இருக்கிறது. இந்தப் பண்ணை வீட்டில், ஏராளமான பஞ்சவர்ணக் கிளிகளை வளர்த்து வருகிறார் வெற்றி துரைசாமி. இன்று ஆசியாவிலேயே அதிக அளவில் பஞ்சவர்ணக் கிளிகள் வைத்திருப்பவர் என்று பெயரெடுத்திருக்கிறார். (இதுல என்னென்ன தில்லுமுல்லோ, எங்க திருடுனதோ) இந்த பண்ணை வீட்டுக்கு, அஜீத் சென்னையில் ஓய்வில் இருக்கும்போதெல்லாம் தன் குழந்தையோடு செல்லுவது வழக்கம். அஜீத் போன்ற வெளிப்படையான நபர்கள், இப்படி ஒரு திருட்டுப்பயலோடு எப்படி நட்பாக இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
தல மற்றும் தறுதல
ஒரு நண்பரிடம் பேசுகையில் வெற்றி துரைசாமி சொன்னது. “எங்க அப்பா பண்ண இன்வெஸ்ட்மென்ட்லயே பெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் மனிதநேயம் அறக்கட்டளைதான். ஒரு வருஷத்துக்கு நம்ப இன்ஸ்ட்யூட்ல படிச்ச 50 பேர் சர்வீஸ்க்கு போறாங்க. ஒரு வருஷத்துக்கு 50 பேர்னா பத்து வருஷத்துல 500 பேர். இதுல 250 பேரை விட்டுட்டாக் கூட 250 பேர் அப்பாவுக்கு விசுவாசமா இருப்பாங்க. என்ன காரியம் வேணாலும் சாதிச்சுக்கலாம்” இதைச் சொன்ன நண்பரிடம் இது ஏற்கனவே சவுக்கில் அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும், என்ற கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது என்று கூறியபோது, நண்பர் ஆச்சர்யப்படடார்.
சைதை துரைசாமி ஒரு பெரிய தீயசக்தி என்று பார்த்தால் அவர் வாரிசு அவரை விட பெரிய தீயசக்தியாக உருவெடுத்திருக்கிறார். இந்த தீயசக்திகளையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய ஜெயலலிதா, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்பதுதான் வேதனை.
எத்தனையோ உண்மையான அதிமுக தொண்டர்களின் திருமணத்துக்கெல்லாம் செல்லாத ஜெயலலிதா, இந்தத் தறுதலையின் திருமணத்திற்கு சென்று வாழ்த்தியுள்ளார்
அடுத்த முறை நாய்க் கண்காட்சியில் பரிசு கிடைக்கவில்லையென்றால் வெற்றி துரைசாமி வருத்தப்படக் கூடாது. கழுத்தில் ஒரு பேட்ஜை அணிந்து கொண்டு இவரே நாய்களோடு நாயாக அமரலாம். அதற்கு இப்போதிலிருந்தே குரைத்துப் பழகுவது நல்லது.
ultimate article..so funny style of expressing the views.