படிச்சவன் சூதும் வாதும் பண்ணா போவான் போவான்…
அய்யோன்னு போவான்… என்றான் பாரதி. இப்படி சூதும் வாதும் செய்த இரண்டு படித்தவர்களைப் பற்றித் தான் இந்தப் பதிவு.
நாரணமங்கலம். சமீபத்தில் செய்திகளின் இந்தப் பெயர் அடிப்பட்டிருப்பதை கண்டிருப்பீர்கள். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தது இந்த ஊர். வழக்கமாக பெரம்பலூர் வறட்சியான மாவட்டம் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், இந்த மாவட்டத்தில் காய்த்துக் குலுங்கும் தென்னை மரங்களும், பணத்தை அள்ளித் தரும் எலுமிமச்சைச் செடிகளும் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
இருந்தது என்று குறிப்பிட காரணம் இருக்கிறது. அவைகள் இன்று இல்லை. அந்த இடத்தில் பல அடி ஆழத்திற்கு பொக்லைன் எந்திரங்கள் பள்ளம் நோண்டிப் போட்டிருக்கின்றன.
பரம்பரை பரம்பரையாக நீங்கள் விவசாயம் செய்து வரும் நிலத்தை, சொற்ப விலைக்குக் கேட்டு, நீங்கள் மறுத்ததால், உங்களை சிறையில் பொய் வழக்கு போட்டு அடைத்து, அதையும் மீறி நீங்கள் நிலத்தை விற்க மறுத்ததால், உங்கள் மனைவி, தாய், தமக்கை ஆகிய அனைவரையும் சிறையில் தள்ளுவேன் என்று மிரட்டியதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
இப்படிப் பட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு சூதையும் வாதையும் செய்த படித்தவர்கள் இருவர்… ஒருவர் பெயர் அனில் மேஷராம், ஐஏஎஸ்.
கூலி கொடுக்கும் முதலாளி அருகில் அமர்ந்திருக்கும் கூலித் தொழிலாளி அனில் மேஷராம்
மற்றொருவர் ப்ரேம் ஆனந்த் சின்ஹா, ஐபிஎஸ்.
பணத்தின் மீது மட்டும் பிரேமை கொண்ட பிரேம் ஆனந்த் சின்ஹா. (உங்களுக்கு ஒரு தனிப் பதிவு இருக்கு ப்ரேம்)
இருவரும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராகவும், எஸ்பி யாகவும் இருந்த போது தான் இந்த அக்கிரமங்கள் நடந்தேறின. இவர்களின் நேரடி மற்றும் மறைமுக ஆசியோடு, நடந்தேறிய அக்கிரமங்களை பாருங்கள்.
இந்த அக்கிரமத்தில் நேரடியாக, முக்கியமாக ஈடுபட்டவர்கள் இருவர். செல்வராஜ் மற்றும் செந்தில் இந்த செந்தில் குமாரும், செல்வராஜும் யார் என்றால், தொழில் அதிபர் சாதிக் பாட்சா இருக்கிறார் அல்லவா ? அவரது பிரோக்கர்கள். இந்த செல்வராஜ், சாதிக் பாட்சா பெரம்பலூரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கினார் அல்லவா ? அந்த ரியல் எஸ்டேட் இருக்கும் இடத்துக்கு கீழே சாந்தி டிபன் சென்டர் என்ற ஒரு கடை உண்டு. அந்தக் கடையில் வேலை செய்து வந்தவர். செந்திலும் இதே போல ஒரு சாதாரண தொழில் தான் செய்து வந்தார். இன்று செல்வராஜுக்கு இரண்டு புதிய டாடா சுமோ ஓடுகிறது. சொந்தமாக ஒரு ஏக்கர் 50 லட்சம் விற்கும் இடத்தில் 70 ஏக்கர் நிலம் இருக்கறிது. ரொக்கமாக 2 கோடி வைத்திருக்கிறார்.
பெரம்பலூரில் உள்ள சாதிக் ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் சாந்தி டிபன் சென்டர்
செந்தில் முருகன் சொந்தமாக ஹிட்டாட்சி பொக்லேன் எந்திரம் இரண்டு. 60 ஏக்கர் நிலம். மனைவி பெயரில் 60 லட்சம் டெப்பாசிட். ரொக்கம் 2 கோடி.
இவ்வளவு கோடீஸ்வரராக இருக்கும் செல்வராஜ் தொடக்கத்தில் எங்கு வேலை செய்தார் என்று பார்த்தீர்களா ?
இவருக்கும் சாதிக்குக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்றால், சாதிக், அவரின் அலுவலகத்திற்கு கீழே இருக்கும் சாந்தி டிபன் சென்டரில் டீ குடிக்க வருவார். அப்போது, செல்வராஜைப் பார்த்து, நீ ஏன் இப்படி டீ ஆத்திக் கொண்டு இருக்கறாய்,… வீடு வீடாக புடவை வியாபாரம் பார்த்த நான் எவ்வளவு பெரிய தொழில் அதிபர் ஆகி விட்டேன் பார்த்தாயா ? அதே போல நீயும் தொழில் அதிபராக வேண்டுமென்றால், நான் சொல்கிறபடி கேள் என்று கூறுகிறார். அதன் படியே செல்வராஜ் மற்றும் செந்தில் முருகன் கேட்கிறார்கள்.
சாம, பேத, தான, தண்ட முறைகள் அனைத்தையும் பிரயோகித்து நாரணமங்கலத்தின் மக்களை தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
இவ்வாறு இவர்கள் தெருவுக்கு கொண்டு வந்து மக்களை நிறுத்தியது எதற்காக தெரியுமா ? எம்ஆர்எப் நிறுவனம், நாரணமங்கலத்தில் ஒரு தொழிற்சாலை தொடங்கப் போகிறது. அதற்கான நிலத்தைத் தான் இவர்கள் பெற்று தந்தார்கள்.
முதலில் தொழில் அதிபர்கள் செல்வராஜும் செந்தில் முருகனும் நாரணமங்கலத்தின் மக்களை அணுகிப் பார்த்தார்கள். ஒருவரும் மதித்து நிலத்தை விற்பதாக இல்லை. சரி, அதிரடி ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று முடிவு செய்கிறார்கள்.
அதற்கு முதல் பலிகடா. உமாசங்கர் என்பவர். இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. இவரது அக்காள் பெயரில் 12 ஏக்கர் இருக்கிறது. இவரது அக்கா மலேசியாவில் இருக்கிறார். அக்காள் நிலத்தையும் சேர்த்து உமாசங்கர் விவசாயம் செய்து வருகிறார். இவரிடம் நிலத்தை விற்பதற்காக அணுகிய போது, என் பெயரில் 2 ஏக்கர்கள்தான் இருக்கின்றன, அக்காள் பெயரில்தான் 12 ஏக்கர்கள் இருக்கின்றன, ஆகையால் தர முடியாது என்கிறார். மேலும், நான் அடுத்த வாரம் மலேசியா செல்ல இருக்கிறேன் என்பதையும் தெரிவிக்கிறார்.
அடுத்த வாரம் மலேசியா செல்ல இருப்பவர் மீது திடீரென ஒரு புகார். சேகர் என்ற அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர். இந்த சேகரை உமாசங்கர் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக புகார். வழக்கமாக, கொலை நடந்தாலே சாவகாசமாக நகரும் போலீசார், இந்தப் புகாரின் மீது மின்னல் வேகத்தில் எப்ஐஆர் பதிவு செய்து உமாசங்கரை ஜெயிலில் அடைக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து உமாசங்கர் சிறையில் இருந்து வெளியில் வருகிறார்.
அக்கா மலேசியாவில் இருப்பதால், உமாசங்கர் ஓரளவுக்கு வசதியானவர். ஊரில் பணம் படைத்தவர் என்ற பெயர் எடுத்தவர். அப்படிப்பட்ட உமாசங்கருக்கே இந்த கதி என்றால், நமக்கு என்ன கதி என்று பயந்து போன ஊர் மக்கள், செல்வராஜ் மற்றும் செந்தில் முருகன் சொன்ன விலைக்கு நிலத்தை விற்கிறார்கள்.
இது போல விற்காமல் எதிர்த்து நின்றது இரண்டே இரண்டு பேர். அவர்கள் கதையைப் பார்ப்போம்.
செந்தில். இவர் நாரணமங்கலத்தில் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று மூத்த சகோதரிகள். அனைத்து சகோதரிகளுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இவர் தாத்தாவுக்கு முந்தைய காலத்திலிருந்து, இவர்கள் நாரணமங்கலத்தில் மூன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். இவரின் இந்த நிலத்தில் ஒரு புறம் 100 எலுமிச்சை செடிகளும், 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் இருந்தன. அந்த மண் அப்படி ஒரு விளைச்சலைத் தரும் என்று கூறுகிறார் செந்தில். அந்த மண்ணை தெய்வமாக வணங்குவோம் என்கிறார்.
நாரணமங்கலம் செந்தில்
இந்த செந்திலுக்கும் அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. செந்தில் குமாருக்கு 50,000 ரூபாய் வட்டிக்கு கொடுக்கிறார். மூன்று மாதத்தில் திருப்பித் தருவேன் என்று சொன்ன செந்தில் ஒரு வருடம் ஆகியும் தரவில்லை. இதனால், செந்தில் குமாரிடம் சென்று எப்போதுதான் பணத்தை தரப் போகிறாய் என்று ஒரு நாள் கோபமாக கேட்கிறார். இதைப் பார்த்து பயந்து போன குமார், உடனடியாக காவல்துறைக்கு போன் செய்கிறார். காவல்துறை இருவரையும் அழைக்கிறார்கள்.
பாடாலூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த அங்குசாமி என்ற உதவி ஆய்வாளர், இந்தப் புகாரை விசாரிக்கிறார். விசாரித்து விட்டு, புகார் செய்த குமாரிடம் “பணத்தை குடுத்தவன் திருப்பி கேக்க மாட்டானா ? பணத்தை வாங்கிட்டு திருப்பிக் கொடுக்காம கம்ப்ளெய்ன்ட் பண்ற ? “ என்று சத்தம் போட்டு இருவரையுமே விரட்டி விடுகிறார்.
மறுநாள், காலை செந்திலை காவல்துறை ஆய்வாளர் அழைப்பதாக கூறுகிறார்கள். எதற்கு என்று செந்தில் கேட்டதற்கு, குமார் அவருக்கு தர வேண்டி பணத்தை காவல்நிலையத்தில் கொடுத்து விட்டதாகவும், வந்து பெற்றுக் கொள்ளும் படியும் தெரிவிக்கிறார்கள். செந்தில் உடனடியாக காவல்துறைக்கு செல்லவும், அங்கிருந்து அவரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரேம் ஆனந்த் சின்ஹா அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொள்வதால், செந்திலுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், தனக்கு பணம் திருப்பித் தரப் போவதில்லை, இது வேறு ஏதோ வழக்கு என்று மட்டும் புரிகிறது.
மீண்டும் பாடாலூர் காவல்நிலையத்திற்கு செந்தில் அழைத்து வரப்படுகிறார். அந்த காவல்நிலையத்திற்கு தொழில் அதிபர்கள் செல்வராஜ் மற்றும் செந்தில் முருகன் ஆகியோர் வந்து செந்திலை சந்திக்கிறார்கள். “பேசாம அந்தக் காட்டக் குடுத்துடேன்பா. ஏன் வீணா பிரச்சினை பண்ற… குடுத்துட்டன்னா, இங்கேர்ந்தே நீ வீட்டுக்கு போயிடலாம். உன்னை எஸ்பியே கைது பண்ண சொல்லியிருக்கிறார். காட்ட கம்பெனிக்கு குடுத்துடு, உன்ன யாரும் ஒண்ணும் பண்ண மாட்டாங்க. என்ன சொல்ற “ என்று கேட்டிருக்கிறார். அதற்கு செந்தில், “போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் என்ன இழுத்துட்டு வந்துட்டீங்க, இதுக்கப்புறம் நான் காட்ட எதுக்கு குடுக்கணும். குடுக்க மாட்டேன்“ என்று கூறி விடுகிறார்.
இந்த செந்தில் ஒரு வழக்கறிஞரை வைக்கிறார். அந்த வழக்கறிஞர் எதிர்த்தரப்பில் பணத்தை வாங்கிக் கொண்டு ஜகா வாங்கி விடுகிறார். மீண்டும் செல்வராஜும், செந்தில் முருகனும், “இதோ பாரு செந்தில், ஆயுசுக்கும் ஜெயில்ல இருக்கனுமா, இல்ல குடுக்கற பணத்த வாங்கிக்கிட்டு போறியா “ என்று மீண்டும் மிரட்டுகின்றனர். செந்தில் மறுத்து விடுகிறார்.
சனிக்கிழமையான அன்று மாலை, மாஜிஸ்த்திரேட்டின் வீட்டில் ரிமாண்ட் செய்யப் பட்டு செந்தில் சிறையில் அடைக்கப் படுகிறார்.
திங்கட்கிழமை, மீண்டும் செல்வராஜ் மற்றும் செந்தில் முருகன் வருகின்றனர். “இப்போ என்ன சொல்ற செந்தில் ? குடுக்கறயா, பர்மனென்ட்டா உள்ளயே இருக்கறயா ? “
“நான் பொம்பளைய கையப் புடிச்சு இழுத்துக்கிட்டு வரல, திருடிட்டு உள்ள வரல. என் மேல பொய்க் கேசு போட்டு நீங்கதான் உள்ள தள்ளியிருக்கீங்க. என்ன ஆனாலும் சரி, என் காட்ட உங்களுக்கு விக்கவே மாட்டேன். போங்கடா “ என்கிறார் செந்தில்.
மன உறுதி குலையாமல், தைரியமாக, துணிச்சலாக, கயவர்களை சந்தித்த செந்திலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
சூதும் வாதும் நாளையும் தொடரும்.