இந்தியாவிலேயே தலைச்சிறந்த அடிமைகள் எங்கிருக்கிறார்கள் என்று யாரிடம் கேட்டாலும் தமிழகத்தில் என்று தயங்காமல் சொல்லுவார்கள். அந்த அடிமைகள் எங்கே என்று கேட்டால் அதிமுகவில் என்று யாரைக்கேட்டாலும் சொல்லுவார்கள். வழக்கமாக யாரையாவது பார்த்து அடிமை என்று சொன்னால் யாரைப்பார்த்தடா அடிமை என்கிறாய் என்று கோபப்படுவார்கள். ஆனால் அதிமுகவில் உள்ளவர்களைப் பார்த்து அடிமை என்றால் “போங்க சார் ரொம்ப புகழாதீங்க” என்பார்கள். அந்த அளவுக்கு விசுவாசமான அடிமைகள் அதிமுகவில் உண்டு.
அந்த அடிமைகளின் தலைமையகம் எங்கே இருக்கிறது என்றால், சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ளது. அங்கேதான் அதிமுக அலுவலகம் இருக்கிறது. வழக்கமாக எம்.ஜி.ஆர் பிறந்தநாள், அதிமுக உருவாகிய நாட்களில், அடிமைகள் அந்த இடங்களில் கூடி, தாங்கள் அடிமைகளாக உருவானதை இனிப்புகள் பரிமாறிப் பகிர்ந்து கொள்வது வழக்கம். 1991ல் ஜெயலலிதா முதல்வரானதில் இருந்து, அவர் பிறந்தநாளை அடிமைகள் வெகு உற்சாகமாக கொண்டாடுகிறார்கள்.
1991-1996 ஆட்சி காலத்தில் இந்த அடிமைகள் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடியதைக் காண கண் இரண்டும் போதாது. ஒரு சில அடிமைகள் மண் சோறு சாப்பிடும். ஒரு சில அடிமைகள் பால் குடம் எடுக்கும். ஒரு சில அடிமைகள் தீ மிதிக்கும். ஒரு சில அடிமைகள் அங்கப்பிரதட்சனம் செய்யும். ஒரு சில அடிமைகள் ஜெயலலிதா படத்தையும், அவர் பெயரையும் பச்சை குத்திக் கொள்ளும். அனைத்து அடிமகளும் தவறாமல் செய்யும் செயல் கட்அவுட் வைப்பது. தொண்ணூறுகளில் ப்ளெக்ஸ் போர்டு விஞ்ஞான வசதிகள் வளராத காலம். அதனால் ஓவியர்கள் வரையும் கட்அவுட்டுகளை மூலைக்கு மூலை வைப்பார்கள். திமுகவினர் ஜெயலலிதாவுக்கு அந்தக்காலத்தில் கட்அவுட் ராணி என்றே பெயர் வைத்தார்கள். அந்த அளவுக்கு அடிமைகள் வைக்கும் கட்அவுட்டுகள் பிரபலம்.
அந்த காலகட்டத்தில் அப்படி அவர் படத்தைப் பச்சைக் குத்திக் கொண்ட ஒரு முக்கியமான அடிமை, அப்போது சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திராகுமாரி. அவரை விட விசுவாசமான அடிமையாகத் திகழ்ந்தவர் சேடப்பட்டி முத்தையா. ஆனால் இந்திரா குமாரி, சேடப்பட்டி முத்தையா ஆகியோர், பின்னாளில் திமுகவில் இணைந்தது காலத்தின் கோலம்.
நேற்றைய ஜெயலலிதாவின் பிறந்தநாளை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அதிமுக அடிமைகள் இன்று விமர்சையாகக் கொண்டாடின. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை உயர்நீதிமன்றத்தையே அடிமைகள் மன்றமாக மாற்றி விட்டன.
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் அதிமுகவின் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் பலூன்கள் கட்டப்பட்டிருந்தன. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இன்று வருகை தந்தவர்கள், சென்னை உயர்நீதிமன்றம் அடிமைகள் மன்றமாக மாற்றப்பட்டதோ என்று வியப்படைந்திருப்பார்கள்.
உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் ப்ளெக்ஸ் போர்டுகள். உயர்நீதிமன்றத்தின் முக்கிய நுழைவாயிலில் அமைந்திருந்த ப்ளெக்ஸ் போர்டு அரசுத் தலைமை வழக்கறிஞரான வண்டுமுருகன் இன்று புடவைகளை இழுப்பார்… மன்னிக்கவும் புடவைகளை வழங்குவார் என்று அறிவித்தது. புடவைகளோடு, வேட்டிகளை உருவுவார் மீண்டும் மன்னிக்கவும். வேட்டிகள் வழங்குவார் என்று அறிவித்தது.
அரசுத் தலைமை வழக்கறிஞர் அல்லது அட்வகேட் ஜெனரல் என்ற பதவி என்பது அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ள பதவி. அந்தப் பதவிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையான தகுதி உண்டு. அரசுத் தலைமை வழக்கறிஞரை வழக்கறிஞர்களின் தலைவர் (Leader of the Bar) என்று அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட பதவியில் இருக்கக் கூடிய வண்டு முருகன் இன்று புடவை வழங்கிக் கொண்டு இருக்கிறார்.
அதிமுகவில் உள்ள மற்ற வழக்கறிஞர் அடிமைகள் போட்டி போட்டுக் கொண்டு ப்ளெக்ஸ் போர்டுகளை வைத்து, தங்களது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டு உள்ளன. இந்த அடிமைகள் இப்படி போட்டி போட்டுக் கொண்டு ப்ளெக்ஸ் போர்டுகள் வைப்பதன் நோக்கம் என்ன தெரியுமா ? இப்படி விசுவாசமான அடிமையாக இருக்கிறானே… இவனை எப்படியாவது நீதிபதியாக ஆக்கி விடலாம் என்று ஜெயலலிதா முடிவு செய்வாராம். இதில் உள்ளவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.
இப்படிப்பட்ட அடிமைகள் நீதிபதியானால், எப்படிப்பட்ட நீதிபரிபாலனம் நடைபெறும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
1962ம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில் நீதிபதி பி.என்.பகவதி இவ்வாறு கூறுகிறார்.
He must remember that the Court is a temple of justice and the advocate at the bar as well, as the Judge upon the bench are equally ministers in that temple.
நீதிமன்றம் நீதியின் கோயில் என்பதையும், வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகள் அந்தக் கோயிலில் சம அந்தஸ்து உடைய அர்ச்சகர்கள் என்று கூறுகிறார்.
இப்படி நீதி வழங்கப் படவேண்டிய கோயிலை எப்படி அதிமுகவின் கூடாரமாக்கியிருக்கிறார்கள் பார்த்தீர்களா ? சென்னை உயர்நீதிமன்றம் இன்று அடிமைகள் மன்றமாக மாறியதற்குக் காரணம், அதிமுக அடிமைகள் அல்ல….. நீதிபதிகளே… இந்த நீதிபதிகள், அதிமுக அடிமைகளைப் பார்த்து பம்முவதுதான் இந்த அடிமைகளை இப்படி கொட்டமடிக்க வைக்கிறது.
காலையில் நீதிமன்றத்துக்கு வரும் 40க்கும் மேற்பட்ட நீதிபதிகள் அத்தனை பேரும், இந்த அலங்கார வளைவுகளையும் ஆடம்பரங்களையும் பார்த்துதான் வருகிறார்கள். ஒரே ஒரு நீதிபதிக்குக் கூட, வண்டு முருகனை அழைத்து இது நீதிமன்றமா இல்லை கட்சி அலுவலகமா ? உடனடியாக அந்த ப்ளெக்ஸ் போர்டுகளை அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க நேரிடும் என்று கூறத் துணிச்சல் இல்லாமல் போனது வேதனையிலும் வேதனை.
ஏப்ரல் 2008ல் சென்னையில் உள்ள சட்டவிரோதமான ப்ளெக்ஸ் போர்டுகள் தொடர்பாக ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இவ்வாறு தெரிவித்தது.
10.2 Rules 6(3) and 6(4) of the Chennai City Municipal Corporation Licensing of Hoardings and Levy and Collection of Advertisement Tax Rules, 2003, being relevant, are extracted hereunder :-
“6(3) No hoarding shall be permitted on both sides of the roads with a footpath of less than ten feet width. In roads with no separate footpath, a minimum of ten feet width shall be available between the road margin and the hoarding for use of pedestrians.
If any digital banner is erected without permission, even temporarily, it is the duty of the concerned authorities to take appropriate action including removal of such unauthorised digital banner as well as launching of prosecution against the violators.
சென்னை மாநகராட்சி விதிகளில், முன் அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கக் கூடாது என்று விதிகள் இருப்பதால், சட்டவிரோதமான பேனர்களை உடனடியாக அகற்றுவதோடு இவ்வாறு பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
பேனர்கள் தொடர்பாக மாநகராட்சி விதிப்படி, பத்து அடிக்கும் குறைவான நடைபாதையில், தனியாக நடைபாதை இல்லாத இடங்களில், பேனர்களே வைக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது.
பேனர்களே வைக்கக் கூடாது என்ற தெளிவாக விதி இருக்கையில், அந்த விதிகளை, சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், உறுதி செய்துள்ள நிலையில், உயர்நீதிமன்ற வாசலிலேயே பேனர் வைக்கும் ஒரு அரசுத் தலைமை வழக்கறிஞரை என்னவென்று சொல்வீர்கள்…
பேனர் வைத்து, வேட்டி புடவைகளை வினியோகிக்கும் ஒரு அரசுத் தலைமை வழக்கறிஞர் … …..
சென்னை உயர்நீதிமன்றம் Sengkodi Vs State of Tamil Nadu இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
When Rule 36 mandates that the sign-board or nameplate or stationery of the Advocate should not indicate that he is or has been associated with any person or organisation or with any particular cause or matter etc., it is rather paining to note that some members of the noble profession are printing their photographs in the huge hoardings of the political leaders, virtually at the feet of such political leaders, thus indicating that they are associated with such political leaders, further more amounting to publicity, which is prohibited under Rule 36. This violation of the mandatory provisions of the Bar Council of India Rules should be viewed seriously and the State Bar Councils should not allow such practices to be carried and should come out with strict action against such advocates, so as to maintain the dignity and decorum of the noble profession. Therefore, the Chairman, Bar Council of Tamil Nadu, is directed to take all steps to implement the Bar Council of India Rules strictly, in their true letter and spirit, so as to uphold the dignity and decorum of the noble profession of advocacy. For all the above reasons, this Habeas Corpus petition is dismissed.
பார் கவுன்சில் விதி 36 வழக்கறிஞர்களின் பெயர்ப்பலகையோ, முகவரிப்பலகையோ, இதர பொருட்களோ, அவர் ஏதாவது ஒரு அமைப்புடனோ, ஒரு நபருடனோ சார்ந்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரிவது போல உருவாக்கக் கூடாது எனன்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், வழக்கறிஞர் போன்ற புனிதமான தொழில்களில் உள்ளவர்கள் பெரிய விளம்பரப்பலகைகளில் அரசியல் தலைவர்களின் படங்களோடு, அரசியல்தலைவர்களின் கால்களுக்குக் கீழே தங்கள் புகைப்படங்களைப் போட்டு, தாங்கள் அந்த அரசியல் தலைவர்களோடு இணைந்திருப்பதாகக் காட்டிக் கொள்வது மேலும் விளம்பரப்படுத்திக் கொள்வது வேதனை அளிக்கிறது. இது விதி 36ல் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில வழக்கறிஞர் சங்கங்கள் (State Bar Councils) வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தையும், நாகரீகத்தையும் காக்கும் வகையில் இது போன்ற நடவடிக்கைகளை தடுப்பதோடு இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பார் கவுன்சிலின் தலைவர் அகில இந்திய பார்கவுன்சிலின் விதிகளை உறுதியாக அமல்படுத்தி வழக்கறிஞர் தொழிலின் மேன்மையை பாதுகாக்க வேண்டும்.
இந்தத் தீர்ப்பை வண்டு முருகன் படித்திருப்பாரா என்று தெரியவில்லை…அவர் நமது எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எதையும் படிப்பதாகத் தகவல்கள் இல்லை.
சரி… வண்டு முருகனுக்குத்தான் அறிவில்லை. உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் இப்படி நீதிமன்ற வாசலிலேயே பேனர்கள் வைத்திருக்கிறார்களே என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரே ஒரு நீதிபதிக்குக் கூடவா தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு (suo motu contempt) வழக்கு எடுக்கத் துணிவில்லை…. ?
வெட்கம்….. சென்னை உயர்நீதிமன்றத்தின் வாசலிலேயே நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் காற்றில் பறக்கவிடுவ்தைக் கண்டு கொள்ளாத நீதிபதிளுக்கு, தங்களின் மற்ற தீர்ப்புகளை மதிக்காமல் அவமதிப்பு செய்யும் அதிகாரிகளை தண்டிக்க என்ன அருகதை இருக்கிறது ?
இதை நீதிமன்றம் என்று அழைப்பதை விட, அடிமைகள் மன்றம் என்று அழைப்பதே பொருத்தம்.