சவுக்கு இன்று 4 லட்சம் ஹிட்டுகளை அடைந்திருக்கிறது. குறுகிய காலத்தில் தொட்டுள்ள இந்த சாதனை சவுக்கின் சாதனையா ? இல்லவே இல்லை.
சவுக்கு இன்று பலரால் கவனிக்கப் படவும், சிலரால் மதிக்கப் படக்கூடிய நிலையை அடைந்திருக்கிறது என்றால் அதற்கு பின்புலமாக இருப்பவர்கள் கணக்கிலடங்கா.
யாரை குறிப்பிட்டுச் சொல்வது ? யாருக்கு நன்றி சொல்வது ? கழுத்தை அறுத்தாலும், உயிரே போனாலும், நேர்மை தவறக் கூடாது என்று சவுக்குக்கு 20 வயதிலேயே கற்றுக் கொடுத்து, சவுக்கை ஊரே ஒதுக்கித் தள்ளிய போது, இன்றும் சவுக்கை கட்டி அணைத்து வரவேற்று ஆசியையும் அன்பையும் வழங்கும், இன்று வரை நேர்மை தவறாமல் வாழ்ந்து வரும் பெயர் வெளியிட விரும்பாத அந்த காவல்துறை உயர் அதிகாரிக்கா ?
சவுக்கின் உயர்விலும் தாழ்விலும் கூடவே இருந்து இன்றும் ஊக்கப் படுத்தும் சவுக்கின் தாய்க்கா ?
சவுக்குக்கு ப்ளாக் என்றால் என்ன, எப்படி ப்ளாக் ஓபன் பண்ணுவது என்று கற்றுக் கொடுத்து, இன்றும் தனது அன்பையும் ஆதரவையும் நல்கும் அந்த நண்பருக்கா ?
இரண்டு மாதங்கள் சிறையில் இருந்து, உற்றார், உறவினர், அனைவரையும் இழந்து, நடுத் தெருவில் நின்ற போது அள்ளி அரவணைத்த நண்பர் புகழேந்திக்கா ?
எழுத தொடங்கிய போது, ஊக்கப் படுத்தி, பல்வேறு விஷயங்களை சொல்லிக் கொடுத்து, தவறு செய்யும் போது கண்டித்து, சவுக்கின் மீதுள்ள வழக்குகள் அனைத்தையும், தன்னுடைய சொந்த வழக்காக பாவித்து சவுக்கை நீதிமன்றச் சிக்கல்களில் இருந்து காப்பாற்றி, அன்பை பொழியும் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனுக்கா ?
சவுக்கு என்ற பெயரில் யாரோ ஒரு கிறுக்கன் எழுதுகிறான் என்று நினைக்காமல், சவுக்கின் மீது அன்பை பொழிந்து, தன்னை சொந்த சகோதரனாக பாவிக்கும் தமிழ் கூறும் நல்லுலகின் பத்திரிக்கையாளர்களுக்கா ?
20 வருடங்களாக சவுக்கோடு பழகிய காவல்துறை உயர் அதிகாரிகள், சவுக்கோடு தொலைபேசியில் பேசுவதற்கே அஞ்சி நடுங்கி இணைப்பை துண்டிக்கும் போதும், சவுக்கை சந்தித்தால் பணி இட மாற்றம் வரும் என்பது நன்கு தெரிந்தும், சவுக்கை சந்தித்து அன்போடு உரையாடும் அந்த காவல்துறை உயர் அதிகாரிக்கா ?
ரகசிய நிதியை பங்கு போட்டுக் கொள்வதும், அரசுப் பணியில் அரசே வழங்கும் சட்ட விரோத நிதியை பயன் படுத்திக் கொள்வதும் தவறே இல்லை என்று அனைவரும் கட்டியம் கூறும் போது, அதுவும் தவறே, அரசு செலவிடும் ஒவ்வொரு பைசாவும், ஏழைகளின் வரிப்பணம் என்று சொல்லிக் கொடுத்த அந்த காவல்துறை உயர் அதிகாரிக்கா ?
வளரும் வயதில் அரசு ஊழியர் சங்கத்தில் சேர்த்து, மனித நேயம், நேர்மை, மார்க்சியம், என பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திற்கா ? அல்லது தவறுகளை கண்டும் காணாமல் இருப்பவர்களை மட்டும் தான் ஏற்றுக் கொள்வோம், மற்றவர்களை புறந்தள்ளுவோம் என்று சொல்லிக் கொடுத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கா ?
நான்கு பேருக்கு மட்டும் தெரிந்த சவுக்கை நானூறு பேருக்கு தெரியும் வண்ணம் கைது செய்து ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நக்கீரம் காமராஜுக்கா ? அல்லது அவர் பேச்சைக் கேட்டு பொய் வழக்கு போட நடவடிக்கை எடுத்த உளவுத் துறையின் ஐஜி ஜாபர் சேட்டுக்கா ?
பொய் வழக்கு போட்டதும், துடி துடித்து அன்பையும் ஆதரவையும் பொழிந்த இணையத்தில் உள்ள அன்பு நெஞ்சங்களுக்கா ? பதறித் துடித்த பத்திரிக்கை நண்பர்களுக்கா ?
இது போன்ற அநியாயங்களை இனியும் பொறுத்துக் கொள்ள இயலாது என்று சவுக்கை துடிதுடிக்க வைத்து களத்தின் இறங்க வைக்கும் அளவுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே பல்வேறு அயோக்கியத்தனங்களை அரங்கேற்றிய ராதாகிருஷ்ணனுக்கா ?
இவரைப் போல நேர்மையாக இருக்க வேண்டும் என்று சவக்கு பல காலமாக உருவகப் படுத்தி, வியந்து பார்த்து, உண்மை சொரூபம் தெரிந்தவுடன், சவுக்கை மனம் உடைய வைத்த ராமானுஜத்திற்கா ?
17.07.2008 அன்று மாலை 6 மணி முதல் மறு நாள் காலை வரை சிபி.சிஐடி லாக்கப்பில் வைத்து, இரவு முழுவதும் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கி, சவுக்கை இன்னும் உறுதியுடன் போராட வேண்டும் என்று தூண்டிய சைபர் க்ரைம் டிஎஸ்பி பாலு மற்றும் ஆய்வாளர்கள் சரவண குமார் மற்றும் வேல் முருகனுக்கா ? அல்லது, அந்த சித்திரவதைகளை அமைதியாக அங்கீகரித்த அர்ச்சனா ராமசுந்தரத்துக்கா ?
உண்மை என்னவென்று தெரிந்தும் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சவுக்கை சிக்க வைத்து கைது செய்யப் படுவதற்கு ஏற்பாடு செய்த நீதியரசர் சண்முகத்திற்கா ? அல்லது சத்தமில்லாமல் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டு, ஆண்டெனாவோடு திரியும் ஐஜி சங்கர் ஜிவாலுக்கா ?
இருபது ஆண்டுகளாக சகோதரன் போல பழகி, பல உதவிகளை பெற்றிருந்தும், ஒரு பிரச்சினை என்றதும் இடம் தெரியாமல் ஓடிப் போய், போனில் பேசக் கூட அஞ்சி, நட்பை விட வேலைதான் முக்கியம் என்று சவுக்குக்கு உணர்த்திய லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்கா ?
யாருக்கு நன்றி சொல்ல ? ஆனால் இவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லத் தானே வேண்டும்… … ? இவர்கள் இல்லாவிடில், சவுக்கு என்பது ஏது ?
நான்கு லட்சம் ஹிட்டுகளை எட்டியிருக்கும் இந்த நேரத்தில், நேர்மை தவறாமல் எழுதும் ஒவ்வொரு எழுத்திலும் உண்மையை மட்டுமே எழுத வேண்டும் என்றும், எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை சந்திக்க வேண்டும் என்றும், துணிந்து உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என்ற உறுதியும், தவறாமல் எழுத வேண்டும் என்றும், பொறுப்போடு எழுத வேண்டும் என்றும், வாசகர்கள் காட்டும் அன்புக்கும் நேசத்துக்கும் கைமாறாக எத்தனை சிரமங்கள் இருப்பினும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதியே தீர வேண்டும் என்ற வைராக்கியம் வருகிறது.
இத்தனை வாசகர்களின் அன்பும் ஆதரவும் இருக்கையில் சவுக்குக்கு வேறு என்ன வேண்டும் ?
GO ahead….but the distance too long. but never tired.only few get the chance like this. keep it up. best wishes.
சவுக்கு , படிக்கும் போதே கண்கள் பணிக்கிறது. உம் பணிகள் சிறக்கட்டும்.நீர் ஒருவர் இருக்கும் பொருட்டாவது மழை பொழியட்டும்.