உயர்நீதிமன்ற நீதிபதி ஆக வேண்டும் என்பது ஒவ்வொரு வழக்கறிஞரின் கனவு. கையைப் பிடிப்பது, காலைப் பிடிப்பது, தரகு (தரகு என்பதில் “எல்லா” விதமான தரகுகளும் அடக்கம்) வேலை செய்வது, முறைவாசல் செய்வது, என்று பல்வேறு வேலைகளிலும் ஈடுபட்டு, எப்படியாவது நீதிபதி ஆக வேண்டும் என்று பல வழக்கறிஞர்கள் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது உயர்நீதிமன்ற வட்டாரத்தில் அத்தனை பேரும் அறிந்த ஒரு விஷயம்.
சரி… அப்படி என்னதான் இருக்கிறது நீதிபதி பதவியில் ? எதற்காக நீதிபதி ஆக வேண்டும் என்று துடிக்கிறார்கள்…. ? அப்படியே ஆகி விட்டாலும் சிறந்த நீதிபதியாவது எப்படி ?
உயர்நீதிமன்ற நீதிபதி வாழ்க்கை என்பது சொர்கம் என்றால் என்ன என்பதை இந்த பூலோகத்திலேயே உணர்த்தும். கிட்டத்தட்ட கடவுளாகவே மாறி விடுவீர்கள். ஆத்தல், அழித்தல், கிழித்தல், மழித்தல், உள்ளிட்ட எல்லா அதிகாரங்களும் நீதிபதி வசம் வந்துவிடும். இப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய ஒரு நபராக மாறுவதற்கு யாருக்குத்தான் கசக்கும் ? நீங்களே சொல்லுங்கள்.
நீதிபதியாவதற்கு அடிப்படையான தகுதி வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே. வழக்கறிஞராக இருந்தால் போதுமா …. சட்டம் தெரிய வேண்டாமா என்று கேட்டீர்கள் என்றால் நிச்சயமாக வேண்டாம். மற்ற ப்ரொபஷனல் படிப்புகளைப் போல சட்டப்படிப்புக்கு 90 சதவிகிதமோ, 80 சதவிதமோ வருகைப் பதிவேடு அவசியம் இல்லை. உதாரணத்துக்கு 85 விழுக்காடு வருகை இல்லாமல், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், சட்டக்கல்லூரி மாணவர்கள் பெரும்பாலான நேரங்களில் போராட்ட களத்தில்தான் இருப்பார்கள். சமூக அவலங்களுக்கெதிராக சாலையில் போராடிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாது. தமிழ்நாட்டில் இப்படி என்றால், ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் நிலைமை இன்னும் மோசம். வருடத்துக்கு ஒரு முறை தேர்வெழுத மட்டும் சென்றால் போதும். இப்படிப்பட்ட சூழல்களில் படிக்கும் மாணவர்களே வழக்கறிஞர்களாக தொழில் செய்ய வருகிறார்கள். இவர்களுக்கு சட்டம் எப்படித் தெரியும் ? இது மட்டுமன்றி, கல்லூரியில் படிக்கும் ஏட்டுப் படிப்புக்கும், நீதிமன்றத்தில் நடப்பதற்கும், ஏராளமான வேறுபாடுகள் உண்டு.
சட்டம் என்பது ஒரு பெருங்கடல். வரி விதிப்பு, கிரிமினல் வழக்குகள், சிவில் வழக்குகள், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகள், மான நஷ்டஈடு வழக்குகள், விவாகரத்து வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், சர்வதேச சட்டம் தொடர்பான வழக்குகள், பணி தொடர்பான வழக்குகள் (Service matters), தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், என்று பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவும் ஒரு குட்டிக் கடல். இதில் ஏதாவது ஒரு கடலில் மூழ்கி முத்தெடுப்பது எளிதான காரியம் அல்ல. இப்படி பல்வேறு பிரிவுகள் இருக்கையில், ஒரு நீதிபதி, எல்லா பிரிவுகளிலும், பரிச்சயம் மட்டுமல்ல, ஓரளவு தேர்ச்சியும் அடைந்திருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஆன பிறகு, எனக்கு இந்தப் பிரிவு சட்டம் குறித்துதான் நன்றாகத் தெரியும்… மற்ற பிரிவுகள் குறித்துத் தெரியாது என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நபர்கள் நீதிபதிகளானால்தான் வழக்கு விபரங்களை எளிதாகப் புரிந்து கொண்டு விரைவாகத் தீர்ப்பு வழங்க முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தையே எடுத்துக் கொண்டீர்கள் என்றால், விரல் விட்டு எண்ணக்கூடிய நீதிபதிகள் மட்டுமே பல்துறை விற்பன்னர்களாக உள்ளார்கள். இவர்களும், நீதிபதியாகும்போதே, அனைத்துத் பிரிவுகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்ல… நீதிபதியான பின்பு, கடுமையான உழைப்பு காரணமாக பல துறைகளில் திறமையானவர்களாக ஆனார்கள். அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய நீதிபதிகளைத் தவிர, மற்ற நீதிபதிகளுக்குத் சட்டம் தெரியுமா என்றால் …. ஏதோ கொஞ்சம் தெரியும்…. ஆனால் அவர்கள் பேசுவதைப் பார்த்தீர்கள் என்றால்… வானத்தையும், பூமியையும் கரைத்துக் குடித்தவர்கள் போல பேசுவார்கள். பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒரு உதாரணமாக, தற்போது மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பாக ஒரு வழக்கு. ஒரு வழக்கில் சிடி, டிவிடி மற்றும் ஹார்ட் டிஸ்க் வழக்கு ஆவணமாக உள்ளது. அந்த ஆவணங்களின் நகல் வேண்டும் என்று குற்றவாளி தாக்கல் செய்த மனு அந்த நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது. அப்போது அந்த நீதிபதி இதை எப்படி நகல் எடுக்க முடியும் ? இந்த கோரிக்கையே முட்டாள்த்தனமாக இருக்கிறதே என்றார். இல்லை நீதிமான் அவர்களே…. இதன் நகலை கொடுத்துதான் ஆக வேண்டும் அது குற்றவாளியின் உரிமை என்றால், எப்படி நகல் கொடுக்க முடியும் ? ஒரு வழக்கில் ஒரு லாரி சம்பந்தப்பட்டிருக்கிறது. குற்றவாளி கேட்டால் அதற்காக அந்த லாரியை எப்படி நகல் எடுக்க முடியும் ? என்று கேட்டார். எப்படி அவரின் ஆழ்ந்த அறிவு பார்த்தீர்களா ? இந்த நீதிபதி நீதிமன்றத்தை நடத்தும் விதமே அலாதியானது. தனக்கு மட்டுமே அறிவும், திறமையும் உண்டு என்றும், வழக்கறிஞர்கள் அனைவரும் அவரை ஏமாற்றி தீர்ப்புப் பெற முயற்சிக்கிறார்கள் என்பது போலவும் நீதிமன்றத்தில் கர்ஜிப்பார். இந்த கர்ஜிப்பெல்லாம் இளம் வழக்கறிஞர்களிடம்தான். மூத்த வழக்கறிஞர்கள் வந்தால், அப்படியே பம்முவார்.
இதுபோல உங்களுக்கு சட்டம் முழுமையாகத் தெரிந்திருக்கும் அவசியமே இல்லாமல் நீங்கள் நீதிபதியாகி விட முடியும். இது முதல் சிறப்பு.
உயர்நீதிமன்ற நீதிபதியானால் உங்களுக்கு கிடைக்கும் இரண்டாவது சிறப்பு “சூ” சொல்வது. நீங்கள் நடந்து செல்லும்போது, உங்களுக்கு முன்னால், வெள்ளைச் சீருடையும், சிகப்பு தொப்பியும் அணிந்த ஒரு நீதிமன்ற ஊழியர் சூ சொல்லிக் கொண்டே நடப்பார். அந்த சூ சத்தத்தைக் கேட்டு, நீதிபதிக்கு முன்னால் நடந்து செல்பவர்கள் விலகி ஓரமாக நின்று, திருப்பதியில் வெங்கடாஜலபதியை வணங்குவது போல வணங்குவார்கள். காக்காயை விரட்டக் கூடத்தான் சூ சொல்கிறார்கள்.. இதில் என்ன சிறப்பு என்று கேள்வி எழும். இது சாதாரண காக்காய் சூ. அது நீதித்துறையின் சூ. காக்காய் விரட்டும் சூவைத் விமர்சனம் செய்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், நீதிபதிக்கான சூ வை விமர்சனம் செய்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும்.
உங்களை எப்போதும் எல்லோரும் லார்ட்ஷிப் என்றே அழைப்பார்கள். லார்ட்ஷிப் என்றதும், ஏதோ டைட்டானிக் ஷிப் போன்ற ஒரு கப்பல் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. லார்ட்ஷிப் என்றால் கடவுளே…. தேவனே… என்று பொருள். லார்ட்ஷிப் வர்றார்… லார்ட்ஷிப் நிக்கறார். லார்ட்ஷிப் உக்கார்றார். லார்ட்ஷிப் பாத்ரூம் போறார். லார்ட்ஷிப் சாப்ட்றார். லார்ட்ஷிப் தும்மறார். லார்ட்ஷிப்புக்கு உடம்பு சரியில்லை… லார்ட்ஷிப் உக்கார்ற எடத்துல கட்டி இப்படித்தான் பேசுவார்கள். இதைக் கேட்டுப் பழகிவிட்டீர்கள் என்றால், காதில் கோழி இறகை வைத்துக் குருடுவது போல மிக மிக சுகமாக இருக்கும். தப்பித் தவறி யாராவது ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் லார்ட்ஷிப் என்பதற்கு பதிலாக யுவர் ஹானர் என்றோ, ஹானரபிள் கோர்ட் என்றோ சொல்லி விட்டால் அவர் வழக்கை காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்து நீங்கள் நீதியையும், நீதிமன்றத்தின் மாண்பையும் நிலைநாட்ட முடியும். அதற்குப் பிறகு யாராவது லார்ட்ஷிப் என்று சொல்லாமல் இருக்கிறார்களா என்று பாருங்களேன்..
அடுத்தது உங்களுக்கு ஒதுக்கப்படும் சொகுசு பங்களா. லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகங்கள் தற்போது இயங்கி வரும் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பங்களாக்கள் உங்களுக்கு ஒதுக்கப்படும். உங்களுக்கு சென்னையில் சொந்த வீடு இருந்தாலும், அதை வாடகைக்கு விட்டு விட்டு, இந்த வீடுகளில் குடியேறலாம். உங்களுக்கு மாதந்தோறும் 10 ஆயிரம் யூனிட்டுகள் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும். 3800 லிட்டர்கள் தண்ணீர் இலவசம். அந்த வீட்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை, ஃபர்னிச்சர்கள் வாங்கிக் கொள்ளலாம். வாசலில் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புக்கு இருப்பார். இவையெல்லாம் சட்டபூர்வமாக வழங்கப்படும் சலுகைகள். நீதிபதியின் சாமர்த்தியத்தைப் பொறுத்து, இதற்கென்றே உள்ள ப்ரோக்கர்களை அணுகும் பட்சத்தில் வீட்டையே பொன்னாலும், மணியாலும் இழைப்பார்கள்.
எந்த மாநிலத்துக்குச் சென்றாலும், விமானத்தில் முதல்வகுப்பில் பிரயாணம் செய்யலாம். சிகப்பு விளக்கு சுழலும் காரில், பாதுகாவலரோடு பயணம் செய்யலாம்.
அலுவலகம் மற்றும் வீட்டுக்கென்று, மொத்தம் 8 அலுவலக உதவியாளர்களை வைத்துக் கொள்ளலாம். இது பத்தாது என்று, மேலும் சிலரை நியமித்துக் கொண்டாலும், உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. நீதிமன்றத்தில் வழங்கப்படும் அலுவலக உதவியாளர்கள் திருப்திகரமாக பணியாற்றவில்லையா… நீங்கள் சொந்தமாக ஒரு உதவியாளரை நியமித்து, பின்னர் அவரை நீதிமன்ற ஊழியராக மாற்ற முடியும். இப்படி நீதிமன்ற ஊழியர்களாக சட்டவிரோதமாக நியமனம் செய்வதை, சில திமிர் பிடித்த தறுதலைகள் இணையதளத்தில் விமர்சனம் செய்து எழுதுவார்கள். சில வேலையில்லாத வழக்கறிஞர்கள் இதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடர்வார்கள். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தால் யாரும் கேள்வி கேட்க முடியாது. தமிழகத்தில் மட்டுமல்ல, பீகார், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கூட, அலுவலக உதவியாளர்களை நியமனம் செய்யலாம்… ஒரு பயல் உங்களைக் கேட்க முடியாது.
மருத்துவ சிகிச்சை போன்ற விவகாரங்களைப் பற்றிக் கவலையே பட வேண்டியதில்லை. அரசு நீதிபதிகள் செய்யும் மருத்துவ செலவுகளை முழுமையாக திருப்பித் தரும் என்றாலும், அந்த செலவைக் கூட எதற்காக நீதிபதிகள் செய்ய வேண்டும் ? பிரதாப் சி.ரெட்டி என்ற ஒரு பெரிய மருத்துவத் திருடர் இருக்கிறார். அவர், வாரத்துக்கு மூன்று முறை, அனைத்து நீதிபதிகள் வீட்டுக்கும் ஆட்களை அனுப்பி, நீதிபதிகளுக்கு என்ன பரிசோதனைகள் வேண்டும், என்ன மருந்துகள் வேண்டும் என்பதை வீட்டிலேயே செய்து தருவார். நீங்கள் வீட்டை விட்டு காலடி கூட எடுத்து வைக்க வேண்டியதில்லை. இதற்குக் கைமாறாக நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அப்போல்லோ மருத்துவமனை தொடர்பாக வழக்குகள் வந்தால் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டும். அவ்வளவே… இது என்ன பெரிய கஷ்டமா ?
உங்கள் வீட்டில் வேலை செய்யும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் சமையல் செய்பவர்களை அடிமைகள் போல நடத்தலாம். சாதாரண மேஜிஸ்ட்ரேட்டுகளே நடத்துகையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு உரிமை இல்லையா என்ன ? ஒரு சாதாரண மேஜிஸ்ட்ரேட் தன் அலுவலக உதவியாளரை மீன் குழம்பு சரியாக வைக்கவில்லை என்பதற்காக பணி இடைநீக்கம் செய்கிறார். அதை எதிர்த்து வழக்கு போட்டால், அதை விசாரிக்கும் நீதிபதி, நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வந்து விட்டால் வீட்டில் யார் சமைப்பார்கள் என்று கேட்டார். மற்றொரு நீதிபதி… ஒரு நீதிபதிக்கு பழம் வேண்டுமென்றால் அவராகவே கடைக்குச் சென்று பழம் வாங்க வேண்டுமா என்று கேட்டார்கள் அல்லவா…. அது போன்ற ஒரு தலைக்கனம் உங்களுக்குத் தானாகவே வந்து விடும்.
அலுவலக உதவியாளர்கள்தான் என்றில்லை. உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களையும் இஷ்டத்துக்கு அடிமைகள் போல நடத்தலாம். உதாரணத்துக்கு ஒரு நீதிபதியின் அந்தரங்கக் காரியதரிசியைப் பிடித்துப் போய் விடுகிறது. இவ்வளவு விசுவாசமான அடிமையாக இருக்கிறானே… இவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைத்தால், உடனடியாக அந்த ஊழியரை விட பணியில் மூத்தவர்கள் அனைவருக்கும் முன்பாக உங்களுக்கு பிடித்த ஊழியருக்கு பதவி உயர்வு வழங்கலாம். அந்த ஊழியர் சட்டவிரோதமாக சட்டப்படிப்பு படித்திருந்தாலும் கூட. இதையும் எதிர்த்து ஒரு சில தறுதலைகள் இணையதளத்தில் எழுதக்கூடும். அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் நீங்கள் இருக்கலாம். அதையும் மீறி, ஏற்கனவே குறிப்பிட்ட, அதே வேலையில்லாத வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடுப்பார்கள். முழு நேர ஊழியர்களாக பணியாற்றிக் கொண்டே, எப்படி சட்டப்படிப்பு படித்தார்கள்… அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்தது சட்டவிரோதம் என்று கேள்வி எழுப்புவார்கள்.
அப்படி தொடுக்கப்படும் வழக்கில், இந்த பதவி உயர்வு ஆணை மனுதாரருக்கு எப்படி கிடைத்தது… ? (வாட் ய ப்ரில்லியன்ட் கொஸ்டின்) இந்த மனுதாரரை, நீதிமன்ற ஊழியர்களில் சிலர் தூண்டி விட்டிருக்கிறார்கள். இது உள்நோக்கத்தோடு தொடுக்கப்பட்டது. அதனால் தள்ளுபடி செய்கிறேன் என்று மனம்போன போக்கில் வழக்கை தள்ளுபடி செய்யலாம்… ஒரு பயல் கேட்க முடியாது. பதவி உயர்வு கிடைக்காத, பணியில் மூத்த ஊழியர்கள், அதிகபட்சம், முணுமுணுப்பார்கள். அந்த முணுமுணுப்பு கூட எப்படி இருக்கும் தெரியுமா…
“ரூல்ஸ் எதையும் ஃபாலோ பண்ணாம இப்படி இஷ்டத்துக்கு ப்ரொமோஷன் போட்றாங்களே… அயோக்கியப்பசங்க… இவனுங்க ரூல்ஸை ஃபாலோ பண்றதில்ல… ஆனா ஊர்ல உள்ளவனுங்க ரூல்ஸை ஃபாலோ பண்றதில்லன்னு நொட்ட சொல்வானுங்க…” என்று ஊழியர்கள் புலம்புவார்கள் என்று நினைத்தீர்கள் என்றால் தவறு. அந்தப் புலம்பல் எப்படி இருக்கும் என்றால் “லார்ட்ஷிப் இப்படிப் பண்ணிட்டாரே… எப்படியாவது லார்ட்ஷிப்பைப் பாத்து எனக்கு ப்ரோமோஷன் குடுங்க லார்ட்ஷிப் என்று கேட்க வேண்டும்.” இதுதான் அதிகபட்ச புலம்பல்.
நீதிபதியான உங்களுக்கு சரக்கு போடும் பழக்கும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சரக்கு… சுவையான சைட் டிஷ் எல்லாவற்றையும் அலுவலக உதவியாளர் வாங்கி வைத்து விடுவார். வைத்து விட்டால் போதுமா… கண்ணாடி க்ளாஸில் ஒவ்வொரு லார்ஜாக ஊற்றிக் கொடுப்பார். நாலு லார்ஜ் போனதும் தலை கிறுகிறுவென்று இருக்கும். ஏற்கனவே நீதிபதியான தலைக்கனத்தில் தலை கிறுகிறுவென்று இருக்கும். இதில் சரக்கு வேறு சேர்ந்து கொண்டால் கேட்க வேண்டுமா ? அந்த அலுவலக உதவியாளரை அழைத்து, என்னைப் பற்றி நீதிமன்ற ஊழியர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கலாம். அந்த அலுவலக உதவியாளர், அவருக்குப் பிடிக்காத ஒரு ஊழியரை மனதில் வைத்து, “அய்யா… இங்க்லிஷ் ரெக்கார்ட் செக்சன்ல ஒரு செக்சன் ஆபீசர் இருக்காருய்யா… அவரு உங்களைப் பாத்து, இந்த ஆளெல்லாம் நீதிபதியாயிட்டாருன்னு சொன்னாருங்கய்யா” என்று சொன்னதும், அவனுக்குப் போனப் போடு என்று சொல்லலாம். போனில் அந்த ஊழியர் வந்ததும் “என்னைப் பத்தி கமென்ட் அடிச்சியாமே… அவ்வளவு தைரியமா…” என்று கேட்கலாம். எதிர் முனையில் ஊழியர், “லார்ட்ஷிப் இல்லை லார்ட்ஷிப்.. நான் அப்படியெல்லாம் பேசவில்லை” என்று சொல்லுவார். நீங்கள் ”நான் உன்னை இப்போவே டிஸ்மிஸ் பண்றேன்… காலையில ரிஜிஸ்ட்ராரைப் பாத்து டிஸ்மிஸ் ஆர்டரை வாங்கிக்கோ… நாளைலேர்ந்து வேலைக்கு வராதே என்று சொல்லலாம். அந்த நீதிமன்ற ஊழியர் மறுநாள் ரிஜிஸ்ட்ராரைப் பார்த்துக் கேட்டால், நீ நீதிபதியைப் பார் எனக்குத் தெரியாது என்று கூறுவார். அந்த ஊழியர் உங்கள் அறை வாசலிலேயே என்னை டிஸ்மிஸ் செய்து விடாதீர்கள் லார்ட்ஷிப் என்று காத்துக் கிடப்பார்.. நீங்கள் எகத்தாளமாக இனிமே ஒழுங்க வேலையைப் பாரு… போ போ… என்று கூறலாம்.
சில அகராதி பிடித்த வழக்கறிஞர்கள், நீங்கள் நீதியின் மதிப்பை உயர்த்தும் நோக்கில் பல லட்சங்களை வாங்கிக் கொண்டு நீதி வழங்கியதற்கான ஆதாரங்களை பிடித்து புகாராக அனுப்பி விடுவார்கள். உங்கள் நேரம், அந்த தலைமை நீதிபதி நேர்மையான ஆளாக இருந்தால், உங்களை விடுப்பில் போகச் சொல்லலாம். உடனே பயந்து விடாதீர்கள். நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது… நான் ஒரு தலித்… என்னோடு பணியாற்றும் சக நீதிபதிகள் என்னைப் பார்த்து தலையைக் குனிந்து கொள்கிறார்கள்… ஒரு விழாவில் அமர்ந்திருந்தபோது, என் அருகில் இருந்த வேறு சாதி நீதிபதி, என்னைப் பார்த்து தும்மினார். ஒரு தலித்தைப் பார்த்துத் தும்முவது தலித் சமூகத்துக்கே செய்யப்படும் பெரும் அவமானம், இப்படி என்னைப் பார்த்துத் தும்மியதன் மூலம், என்னை மட்டுமல்ல… அரசியல் சட்டச் சிற்பி அம்பேத்கரையே அவமானப்படுத்தி விட்டார்கள் என்று அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு புகார் அனுப்பலாம். உங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்த தலைமை நீதிபதி அப்படியே பம்முவார். நீங்கள் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த நீதிமன்றத்தை விட, அதிக வருமானம் வழங்கும் ஒரு நீதிமன்றத்தில் உங்களை நீதிபதியாக நியமிப்பார். ஒரு நீதிபதி இப்படிப் புகார் அனுப்பி இருக்கிறாரே… அந்தப் புகார் என்ன ஆனது.. பொய்ப்புகார் கொடுத்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றெல்லாம் பயப்படாதீர்கள்.. யாரும் இந்தப் புகாரை கண்டுகொள்ள மாட்டார்கள். உங்களுக்கு நல்ல துறை ஒதுக்கப்பட்டதும், நீங்களும், தலித் விரோத தும்மலை மறந்து வசூலைத் தொடரலாம்.
தீர்ப்புகள் வழக்குகளைப் பொறுத்தவரை நீங்கள்தான் ராஜா.. உங்களை ஒரு பயல் கேள்வி கேட்க முடியாது. முட்டாள்த்தனமாக ஒரு தீர்ப்பை நீங்கள் வழங்கினால், அதை எதிர்த்து மேல் முறையீடுதான் செய்ய முடியும். மேல்முறையீட்டில் நீங்கள் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டால் கூட, அதிக பட்சம்…. அந்த கற்றறிந்த நீதிபதி, வழக்கின் விபரங்களை சரியாக ஆராயாமல் தீர்ப்பு வழங்கி விட்டார் (The learned Judge has failed to properly appreciate the facts) என்றுதான் குறிப்பிடுவார்கள். இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்கலாம்.
மிக மிக முக்கியமான விஷயம் நீங்கள் அரசியல் சார்பில்லாமல் இருக்க வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதென்று பாரபட்சம் பார்க்காமல், கண்ணை மூடிக்கொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதராக இருப்பது மிக மிக அவசியம். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதே நல்ல நீதிபதியாக நீங்கள் பரிணமிக்க உதவும்.
உதாரணத்துக்கு, திமுக ஆட்சியில் இருந்தால், நீங்கள் கருணாநிதிக்கு கடிதம் எழுதி, எனக்கு திருவான்மியூரில் ஒரு வீட்டு மனை வழங்குங்கள் என்று கூச்ச நாச்சமே இல்லாமல், ஒரு அலுவலக உதவியாளர் எழுதுவதைப் போல எழுதிக் கேட்கலாம். கருணாநிதி வீட்டுமனை வழங்குவார். (இதையும் சில தறுதலைகள் இணையத்தில் எழுதுவார்கள். போடா வெண்ணை என்று அதை கண்டு கொள்ளக் கூடாது) கருணாநிதியிடம் வீட்டு மனை வாங்கும் விசுவாசம், கருணாநிதி முதல்வராக இருக்கும் வரைதான். ஜெயலலிதா முதல்வராகி விட்ட பின்னர், பழைய விஷயங்களை நினைவில் வைத்திருக்கக் கூடாது. ஜெயலலிதா முதல்வராக இருக்கையில் யாரோ அனுப்பிய மூன்று லட்சம் டாலர்களை தன் சொந்தக் கணக்கில் போட்டுக் கொண்டது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும். அந்த வழக்கு சொத்துக் குவிப்பு வழக்கை விட, சிக்கலான வழக்காக இருக்கும். இந்த நேரத்தில் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக இருப்பதை மட்டும்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி கவனத்தில் கொண்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தைப் பார்க்கையில், இந்த வழக்கை ரத்து செய்தே ஆக வேண்டும் என்று தீர்ப்பெழுதலாம். அந்தத் தீர்ப்பை எப்படி விரிவாக எழுதுவது என்று உங்களுக்கு தெரியாமல் இருந்தால், நல்ல தீர்ப்பெழுதத் தெரிந்த நீதிபதியிடம் கேட்டால் எழுதித்தருவார்.
ஜாமீன் வழங்கும் பிரிவில் உங்களை நீதிபதியாகப் போட்டால் மிக மிக கவனமாக இருப்பது அவசியம். திருட்டு வழக்கு, அடிதடி வழக்கு, கொலை வழக்கு, போன்ற வழக்குகளில் ஜாமீனே கொடுக்கக் கூடாது. ஜாமீனும் தரக்கூடாது, முன்ஜாமீனும் தரக்கூடாது. கூடுதலாக, தீர்ப்பெழுதுகையில் வழக்கின் தன்மையைப் பார்க்கும்போது, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் புலன்விசாரணை கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதனால் ஜாமீனை மறுக்கிறேன் என்று கூறலாம். முன்ஜாமீன் வழக்குகளில், காவல்துறை, குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோருவதில் நியாயம் உள்ளது. குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தாவிட்டால், புலன் விசாரணை பாதிக்கும், அதனால் முன்ஜாமீன் வழங்க இயலாது என்று தீர்ப்பெழுத வேண்டும். இந்தத் தீர்ப்புகள், சாதாரண பாமர மக்கள் தொடர்பானது.
மேல்மருவத்தூரில் கோயில் வைத்து வசூல் செய்யும் திருட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எப்போதாவது சிக்குவார்கள். அவர்களை வெறும் ஆன்மீக வாதிகளாகப் பார்க்காமல், அவர்களின் செல்வாக்கை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளையும் கவனத்தில் கொள்வதோடு, இது தொடர்பாக உங்களிடம் யார் யார் பேசினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி அனைத்தையும் கவனத்தில் வைத்து தீர்ப்பெழுதப் போகும் நேரத்தில், அரசு வழக்கறிஞர் குற்றவாளிகளை கைது செய்து விசாரித்தால்தான் புலனாய்வு செய்ய முடியும் என்று கூறுவார். நீங்கள் சாதுர்யமாக, “புலன்விசாரணைதானே செய்ய வேண்டும்… ? குற்றவாளி இரண்டு நாட்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராவார். அப்போது விசாரித்துக் கொள்ளுங்கள். கைது செய்வது அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் சொல்லியிருக்கிறது” என்று உங்களுக்கு சாதகமாக உள்ள வரிகளை மட்டும் எடுத்துப் போட்டு தீர்ப்பு வழங்க வேண்டும். இது போன்ற வழக்குகளில் என்ன குற்றம் என்பதை நீங்கள் பார்க்கவே கூடாது… யார் குற்றவாளிகள் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.
70 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு குற்றவாளி, முன் ஜாமீன் கோரினால் கண்ணை மூடிக்கொண்டு, சட்டத்தை மதிக்காத நபருக்கு முன்ஜாமீன் வழங்க இயலாது என்று கூறி விடக்கூடாது. குற்றவாளி யார் என்பதைப் பார்த்தால், அவர் திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சரும், அஞ்சா நெஞ்சனின் மகன் குஞ்சா நெஞ்சனாக இருக்கலாம். அதைப் பார்த்ததும், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக முன்ஜாமீன் வழங்க வேண்டும்.
இந்த வழக்குகள் கூட பரவாயில்லை… சில வேலையில்லாத அதே வழக்கறிஞர்கள், பொது நல வழக்குகள் என்ற பெயரில் தொல்லை கொடுப்பார்கள். அவர்களிடத்தின் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தொடுக்கும் பெரும்பாலான வழக்குகள் அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக இருக்கும். அந்த வழக்குகளை உடனடியாக தள்ளுபடி செய்யவும் கூடாது. அரசுத் தரப்பு பதில் சொல்லவும் என்று உத்தரவிட வேண்டும். அரசுத் தரப்பு அடுத்த கும்பமேளா நடைபெறுகையில் பதில் சொல்லுவார்கள். அதுவரை வழக்கை ஒத்தி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
சில நேரங்களில் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் நினைவுச் சின்னங்களில் கட்சி சின்னத்தை நிறுவி விடுவார்கள். அது இரட்டை இலையாக இருக்கும். அதோடு சேர்த்து ஒரு குதிரை சிலையும் வைத்து விடுவார்கள். அதை எதிர்த்து வழக்கு வரும். அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு இது இரட்டை இலை என்பது பளிச்சென்று தெரியும். அதற்காக உடனே முடிவெடுத்து விடக் கூடாது. அரசு வழக்கறிஞரை கேட்க வேண்டும். அவர் உடனே, இது பறக்கும் குதிரையின் சிலை… குதிரை பறந்து கொண்டே சாணி போட்டதால், இலை வடிவத்தில் விழுந்து விட்டது. இது கட்சி சின்னம் அல்ல என்று கூறுவார். அவர் கூறியதைக் கேட்டு விட்டு, வழக்கை எட்டு வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும். வேறு எந்த நீதிபதியாவது அந்த சாணியை அள்ளட்டும் என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் இது சாணி அல்ல.. சின்னம்தான் என்று தீர்ப்பு எழுதி விட்டால் தேவையில்லாமல் அரசை பகைத்துக் கொள்ள நேரிடும். கவனமாக இருத்தல் மிக மிக அவசியம்.
சில நேரங்களில் தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றக் கூடாது என்று வழக்கு தொடுப்பார்கள். அந்த வழக்கை தள்ளுபடி செய்வதோடு நின்று விட்டீர்கள் என்றால் நீங்கள் சிறந்த நீதிபதியாக முடியாது. சென்னையில் மருத்துவமனை இல்லாத காரணத்தால் பல நோயாளிகள் அவதிப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் அரசு சிறப்பான ஒரு மருத்துவமனையை உருவாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு திட்டம், ஒரு தொலை நோக்குத் திட்டம் என்றெல்லாம் தீர்ப்பில் பாராட்ட வேண்டும்.
உங்களுக்கு கடவுள் பக்தி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதுவும் தீவிரமான முருகபக்தி. நீதிமன்றத்தில் அமர்ந்து கொண்டு “லார்ட் முருகா ஈஸ் க்ரேட்” என்று மற்ற மதத்தினர் இருப்பார்களே என்று கவலையே படாமல் சொல்லிக் கொண்டே இருக்கலாம். உங்களுக்கு ஜோசியம், ஜாதகம் நல்ல நேரம் இதெல்லாம் உண்டென்றால், 10.30க்கு நீதிமன்றம் தொடங்கினால் கூட, நீங்கள் சாவகாசமாக 11.30க்கோ, 12 மணிக்கோ நல்ல நேரம் தொடங்கிய பிறகு வரலாம். இப்படி லேட்டாக வந்து விட்டு, மதிய உணவு இடைவேளை கூட விடாமல், தொடர்ந்து நீதிமன்றத்தை நடத்தினாலும், உங்களை யாரும் கேட்க மாட்டார்கள். இப்படி ஒரு நாள் கூட 10.30க்கு வராமலேயே நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றால், உங்களின் நேரம் தவறாமையைப் பாராட்டி பசுமைத் தீர்ப்பாய நீதிபதியாக நியமிப்பார்கள். பசுமைத் தீர்ப்பாய சட்டத்திலேயே 10.30க்கு தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தாலும், அங்கேயும் அதே போல 11.30க்கு நீங்கள் வந்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள்.
உங்கள் வீட்டில் ஏதாவது விழா… திருமணமோ… காதுகுத்தோ… வளைகாப்போ எது நடத்தினாலும், ஊரே பார்த்து வியக்கும் வண்ணம் நடத்த முடியும். நீதிபதி வீட்டி விழா என்றால் சும்மாவா… சாதாரணமாக நடத்தி விட முடியுமா என்ன ?
உங்கள் வீட்டு மருமகளுக்கு வளைகாப்பு என்று வைத்துக் கொள்ளுங்களேன்… சாதாரணமாக மற்றவர்கள் வீட்டில் 4 வகை சோறு செய்து வளைகாப்பு நடத்துவார்களே.. அப்படியெல்லாம் நடத்தக் கூடாது. பத்திரிக்கை அடித்து, முக்கிய நபர்களையெல்லாம் அழைத்து, விலை உயர்ந்த பரிசு தருபவர்களை காலையில் வீட்டுக்கு வரச் சொல்லி விட்டு, மற்றவர்களை மாலையில் ஹோட்டல் சவேராவுக்கு வரச் சொல்லாம். சவேராவில் மொத்த பில் 3 லட்சத்து 24 ஆயிரம் ஆவதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. அப்போல்லோ ரெட்டி போன்றவர்களை காலையில் வீட்டிலேயே சந்தித்து விடுவது நல்லது.
ஒரு நீதிபதி வீட்டில் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது. சிறந்த நீதிபதியாக ஆவது எப்படி என்பதற்கு இந்தத் திருமணம் ஒரு கையேடு.
நீதியரசர் தனபாலன் அவர்களின் மகனின் திருமணம் அது. பத்திரிக்கை அடிப்பதிலேயே தான் ஒரு நீதிபதி என்பதை நிரூபித்தார் நீதியரசர். மொத்தம் மூன்று வகையான பத்திரிக்கைகள். மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கு முதல் வகை. ஒரு கடினமாக ஜிகு ஜிகு அட்டை. அதற்குள், ரவிக்கை போல இன்னொரு அட்டை. அதற்குள் திருமணப் பத்திரிக்கை. இது முதல் வகை. இரண்டாவது வகை, கொஞ்சம் முக்கியப் பிரமுகர்களுக்கானது. இதில் அட்டை சற்று சன்னமாக இருக்கும். முதல் பத்திரிக்கையில் உள்ளே வைக்கும் அதே பத்திரிக்கை இந்த இரண்டாவது வகையில் உறையில் போட்டு வழங்கப்பட்டது. மூன்றாவது வகை சுத்தமாக முக்காத அல்லது முக்கத் தெரியாத பிரமுகர்களுக்கானது. தமிழில் பத்திரிக்கை ஒரு சாதாரண உறையில் போட்டு அனுப்பப்பட்டது. அழைப்பிதழ்கள் மட்டும் 12 ஆயிரம் அச்சடிக்கப்பட்டது.
மத்திய அரசு வழக்கறிஞர்கள், மாநில அரசு வழக்கறிஞர்கள், முக்கிய வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள், வழக்கறிஞர்களின் உதவியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழில் அதிபர்கள், 2ஜி வழக்கின் குற்றவாளிகள், ஆளுங்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் விநியோகித்தார் நீதியரசர்.
திருமணத்துக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியை ஹாஜா மொஹிதீன் கிஸ்தி என்ற மத்திய அரசு வழக்கறிஞர் பார்த்துக் கொண்டார். சேகர் எம்போரியம் நிறுவனத்தின் முதலாளியின் மகனான மற்றொரு வழக்கறிஞர் இன்னொரு பகுதியைப் பார்த்துக் கொண்டார். இவர்கள் இருவரையும் நீதிபதியாக்கி விட்டுத்தான் மறுவேலை என்று நீதிபதி தனபாலன் உறுதியளித்துள்ளார்.
பெரும்பாலான திருமண ஏற்பாடுகளைச் செய்தவர், தமிழக நீதித்துறையை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கே.பி என்கிற கலியபெருமாள். இவரின் பெருமைகளைப் பற்றி சவுக்கு வாசகர்களுக்கு விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையின் மூலமாக தெரிவிக்கப்படும். இந்த கே.பி பல நீதிபதிகள், மற்றும் உயர் அதிகாரிகள் வீட்டுத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவர். சிபிஐயின் இணை இயக்குநர் வீட்டுத் திருமணத்தையே நடத்தி வைத்தவர் இந்த கே.பிதான். கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரனின் மகள் திருமணத்தை பெங்களுரில், இந்தியாவே வாய் பிளக்கும் அளவுக்கு நடத்தி வைத்தவர் இந்த கே.பிதான்.
இந்த கே.பிதான் நீதியரசர் தனபாலன் வீட்டுத் திருமணத்தையும் நடத்தி வைத்தவர். கே.பி திருமணத்தை நடத்திய விதத்தைக் கேட்டீர்களென்றால் அசந்து போய் விடுவீர்கள்.
திருமணம் நடந்தது ஹோட்டல் லீலா பேலஸில். சென்னையின் பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டல்களில் இது ஒன்று. இந்தத் திருமணத்துக்கு காலை சிற்றுண்டிக்கு ஒரு நபருக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா ? 2000 ரூபாய். முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்காக, இந்த ஹோட்டல்களில் பல்வேறு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.
மறுநாள் திருமண வரவேற்பு எம்ஆர்சி அரங்கம் எனப்படும் மேயர் ராமநாதன் செட்டியார் ஹால். இந்த வரவேற்பில் இரவு உணவுக்கு ஒரு நபருக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா ? 4000 ரூபாய். மொத்தமாக திருமணம், வரவேற்பு இரண்டும் சேர்த்து 7000 பேர் வந்திருந்தனர் என்கிறது உளவுத்துறை அறிக்கை.
சரி…பத்திரிக்கை அடித்தாயிற்று… ஏற்பாடுகள் செய்தாயிற்று… நீதிபதிகள் அனைவரும் வரவேண்டும் அல்லவா… ? தமிழகத்தில் உள்ள அத்தனை கீழ் கோர்ட்டு நீதிபதிகளும் எப்படி சொந்தக் காசை செலவு செய்து சென்னைக்கு வர முடியும் ? அவர்களாவது பரவாயில்லை… எப்படியாவது வந்து விடுவார்கள்… உச்சநீதிமன்ற நீதிபதிகள் வர வேண்டாமா ? அவர்கள் விமானத்தில் முதல் வகுப்பில் வந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வேண்டாமா ? அவர்கள் என்ன சாதாரண அரசு அதிகாரிகளா … … அரசு விருந்தினர் இல்லத்தில் தங்க… ?
இதற்காகத்தான் சென்னை ஜுடிஷியல் அக்காடமியில், திருமண வரவேற்பு நடந்த சனிக்கிழமை அன்று, கீழ்க் கோர்ட்டு நீதிபதிகளுக்கான பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியை அளிப்பதற்காக, உச்சநீதிமன்ற நீதிபதிகள், சதாசிவம், இக்பால், மற்றும் இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் வந்திருந்தனர். தமிழகம் முழுக்க நீதிபதிகள் வந்துள்ள நிலையில் பயிற்சி மாலை வரையல்லவா நடைபெற்றிகுக்க வேண்டும் ? இந்தப் பயிற்சி பிற்பகல் 3 மணியோடு நிறைவடைந்தது. அனைவரும் அறைக்குச் சென்று, மேக்கப் போட்டுக் கொண்டு நீதியரசர் வீட்டுத் திருமணத்துக்குச் செல்ல வேண்டாமா ? ஒரு சாதாரண நபர் வீட்டுத் திருமணத்துக்காகவே ஒரு பயிற்சி அரங்கு நடத்த முடியுமா ? ஆனால் நீதிபதியானால் என்னவெல்லாம் செய்ய முடிகிறது பார்த்தீர்களா ? இதுதான் நீதிபதிகளின் சிறப்பு. வந்த நீதிபதிகள் போட்டி போட்டுக் கொண்டு, அய்யாவை குளிரவைக்க போதுமான பரிசுகளை அளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பரிசுகளில் ஒரு சிறப்பம்சமும் உண்டு. மீன் குழம்பு வைக்காததற்காக ஒரு அலுவலக உதவியாளரை பணி இடைநீக்கம் செய்தாரல்லவா வள்ளியூர் நீதிமன்ற நடுவர் கிறிஸ்டல் பபிதா ? அது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கின் காரணமாக, அவர் மீது துறை விசாரணை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்ட நீதித்துறைக்கு பொறுப்பான உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன். இவர் வீட்டுத் திருமணத்துக்கு கிறிஸ்டல் பபிதா எப்படிப்பட்ட பரிசை அளித்திருப்பார் என்பது உங்கள் ஊகத்துக்கே விடப்படுகிறது.
இப்போது யார் சிறந்த நீதிபதி என்பது புரிகிறதா ? நீதிபதியாவது விளையாட்டான விவகாரம் அல்ல. அதிலும் சிறந்த நீதிபதியாவது, மிக மிக கடினமான காரியம். சவுக்கு வாசகர்களாக இருக்கும் வழக்கறிஞர்கள், இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி முன்னேறுவார்கள் என்று நம்புகிறோம்.
கட்டுரை நீளமாக இருக்கிறதல்லவா…. ஒரு மாற்றத்துக்காக ஒரு கதை படிக்கலாமா ? எழுத்துலகின் பீஷ்மன் ஜெயகாந்தன் எழுதிய கதை. நீதியரசர் தனபாலன் வீட்டுத் திருமணம் எவ்வளவு சிறப்பாக நடந்தது என்பதைப் பார்த்தீர்கள் அல்லவா ? இந்தக் கதையைப் படியுங்கள்.
தாம்பத்யம் – ஜெயகாந்தன்
தலைச்சுமைக்கார மருதமுத்துவுக்கும் ரஞ்சிதத்துக்கும் அவர்கள் தலைவிதிப்படி அன்று மாலை கலியாணம் நடந்தேறியது. அதாவது அரையணா கதம்பம், ஓரணா மஞ்சள் கயிறு, காலணா மஞ்சள், மூணு ரூபாய்க்கு ஒரு புடவை, இரண்டணாவுக்கு வளையல் – ஆக ஐந்து ரூபாய் செலவில் ரிக்ஷாக்கார – கூலிக்கார ஏழைக் கடவுளின் சந்நிதானத்தில் ரஞ்சிதத்தை மருதமுத்து கண்ணாலம் கட்டிக் கொண்டான்.
அந்த ஐந்து ரூபாயைச் சேர்ப்பதற்கு அவன் ஒரு மாதம் முழுவதும் சிரமப்பட வேண்டியிருந்தது. தனக்குக் கிடைக்கும் கூலிக் காசில் தினந்தோறும் இரண்டணா மூன்றணாவாகச் சேர்த்தான். தன் கையிலிருந்தால் செலவாகி விடும் என்று பயந்து மூலைக்கடை சாயபுவிடம் கொடுத்துச் சேமித்தான். அதற்குள்தான் அந்த ரஞ்சிதத்துக்கு என்ன அவசரம்.
முதலில் மருதமுத்து கலியாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. அது அவசியம் இல்லையென்று கருதினான். அங்கு வாழ்ந்தவர்களின் வளமுறை – பூர்வீகமாகவே அல்ல – தற்காலிகமாக சந்தர்ப்பவசமாக அப்படித்தான்!
ஆனால் அதற்குப் பட்டிக்காட்டுப் பெண்ணான ரஞ்சிதம் ஒப்பவில்லை. “மேளதாளம் இல்லாட்டியும், கூறையும் தாலியுமாவது கட்டிக்க வேணாமா? சாமி முன்னாலே நின்று சத்தியம் செஞ்சுக்குவோம், இதுகூட இல்லாட்டி கட்டிக்கறத்துக்கும், ‘சேத்து வெச்சிக்கிறதுக்கும்’ என்னா மச்சான் வித்தியாசம்?” என்று தர்க்கம் புரிய ஆரம்பித்தாள். மருதமுத்துவுக்கும் அவள் சொல்வது சரியென்று படவே ஒப்புக் கொண்டான். ரஞ்சிதத்துக்குத் தன் மச்சான் ஒப்புக் கொண்டதில் பரம சந்தோஷம். பாவம், அவளும்தான் யாருமற்ற அனாதையாக எத்தனை காலம் இருப்பது?
அவள் பட்டணத்துக்கு அனாதையாகவா வந்தாள்? அவள் அப்பன் பட்டணத்தில் கை வண்டி இழுத்துப் பிழைத்துக் கொண்டிருந்தபொழுது அவள் திண்டிவனத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில் தன் தாயுடன் ‘பயிர் வேலை’ செய்து கொண்டிருந்தாள். அவள் தாய் இறந்த செய்தி கேட்டுப் பட்டணத்திலிருந்து ஒரு வாரத்துக்குப் பின் வந்த அவள் தகப்பன் திரும்பிப் போகும்போது ரஞ்சிதத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். பட்டணத்தில் தகப்பனும் மகளும் வாழ்க்கை நடத்த… இருக்கவே இருந்தது பிளாட்பாரம்… கந்தல் பாய், மண் சட்டிகள்! கை வண்டி ஓட ஓட வாழ்க்கையும் நகர்ந்தது… ஒருநாள் அவனால் நகர முடியவில்லை.
அவன் நகராவிட்டால் நகரம் நகராமலா இருந்து விடும்?… அது நகர்ந்தது!
பிளாட்பாரத்தில் கிடக்கும் கூலிக்காரனின் சவத்தைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் அது நகர்ந்தது!…
நாகரிகம் நௌ¤ந்து நகர்ந்து கொண்டிருந்த அந்த வீதியில் நாலு பேர் தோள் மீது கடைசிப் பிரயாணத்தைத் தொடங்கி விட்ட அப்பனின் பிரிவைச் சகிக்க முடியாத அனாதை ரஞ்சிதம் புலம்பிப் புரண்டு கதறிக் கொண்டிருந்தாள்!
“நான் அனாதை ஆயிட்டேனே…” என்று கதறிக் கொண்டிருந்த ரஞ்சிதத்தின் செவிகளில் “அழாதே, நான் இருக்கிறேன்” என்ற கனிவுமிக்க ஒரு குரல் ஒலித்தது. ரஞ்சிதம் திகைத்தாள். திரும்பிப் பார்த்தபொழுது தன் மச்சான் மருதமுத்து நிற்பதைக் கண்டவுடன் ‘கோ’வென்று கதறினாள்; அவன் அவளைத் தேற்றினான்.
வரவர அவள் தன் அப்பனை நினைத்து அழுவதையே நிறுத்தி விட்டாள். அதற்குத்தான் அவன் அவசியம் இல்லாதபடி செய்து விட்டானே. அப்படி என்ன செய்தான்? ஒரு வார்த்தைதான் சொன்னான்.
“நீ எதுக்கும் கவலைப்படாதே. நான் உன்னைக் கண்ணாலம் கட்டிக்கிறேன். வீணா அழாதே!” என்று அவன் ஆறுதல் சொன்னதும் அழுது கொண்டிருந்த அவள் அவனை ஏறிட்டு நோக்கினாள். கலங்கிய விழிகள் பரவசத்தால் படபடத்தன. ” என் கண்ணான…. உன்னை நான் கண்ணாலம் கட்டிக்குவேன்” என்று கூறி அவன் லேசாகச் சிரித்தான். அவள் உதடுகளில் மகிழ்ச்சி துடிதுடிக்க நாணத்தால் தலை குனிந்தாள்.
அதன் பிறகு தினந்தோறும் அவள்தான் அவனுக்குச் சோறு பொங்கிப் பரிமாறினாள். அவளும் அவனும் கண்ணாலம் கட்டிக் கொள்ளப் போகிறார்கள் என்று அடுத்த ‘அடுப்புக்காரி’களெல்லாம் (அடுத்த வீட்டுக்காரர்கள் என்று சொன்னால் சரி வராது… பிளாட்பார வாசிகளின் குடும்பங்களைப் பிரித்துக் காட்டுவது அடுப்புகள்தான்!) பேசிக் கொண்டார்கள்.
மருதமுத்து கொத்தவால் சாவடியில் தலைச்சுமைக் கூலி! தினசரி கிடைக்கும் ஆறணா எட்டணா வருமானத்தில் இரண்டணா ஓரணா எப்படியோ மீதம் பிடித்துக் கொண்டு மிகுதியை ரஞ்சிதத்திடம் கொடுத்து விடுவான். பகலெல்லாம் கூலி வேலை… மாலை நேரங்களில் அவளிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதன் விளைவாய் இரவு நேரங்களில் அவன் மனம் அவளை எண்ணித் தவியாய்த் தவிக்கும்; எதிர்கால இன்பத்திற்காக நிகழ் காலத்திலேயே துடியாய்த் துடிக்கும். ஆனால் ரஞ்சிதம் அதற்கெல்லாம் மசிபவள் அல்ல; ஏனென்றால் அவள் பட்டணத்திற்கு வந்து அதிக நாளாகிவிடவில்லை; இன்னும் ‘பட்டிக்காட்டுத்தனம்’ இருந்தது.
“சாமி முன்னாடி நின்னு சத்தியம் பண்ணித் தாலி கட்டினாத்தான்…” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.
கடைசியில் எப்படியோ காசு சேர்ந்து விட்டது.
சோறு விற்கும் கிழவி ஒருத்தி மருதமுத்துவையும் ரஞ்சிதத்தையும் பார்த்து “மவராசியா வாழணும்…” என்று ஆசிர்வதித்தாள்.
“என்ன மச்சான், கண்ணாலச் சாப்பாடு எப்போ?…” என்று பரிகாசம் பேசி மகிழ்ந்தான் அவன் சகாக்களில் ஒருவன்.
சிறுவர்கள் சிலர் அவனிடம் ‘வெகுமானம்’ கேட்டனர்.
அவனும் சிரித்துக் கொண்டே இரண்டு மூன்று காலணாக்களை ‘வெகுமானம்’ அளித்தான்.
லோன்ஸ்குயர் பார்க்கின் கம்பி வேலியின் ஓரமாக எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரின் புறாக் கூண்டு போன்ற மகா சன்னிதானத்தில் அவன் ஏற்றி வைத்த தரும விளக்கு ஜோதியாய், சுடராய், ஒளியாய், மஹா ஹோமமாய் எரிந்து கொண்டிருந்தது.
ஓரணா கடலை எண்ணெய் அல்லவா ஊற்றியிருக்கிறான்.
பார்க்குக்கு எதிரே, மாதா கோயில் சுவர் ஓரமாகக் கட்டை வண்டி, கை வண்டி, குப்பைத் தொட்டி முதலியவற்றின் இணைபிரியா ஒட்டுறவுடன் நிலைத்து விட்ட அடுப்பில் மீன் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. கஞ்சி மொடமொடக்கும் புதுப்புடவையின் விறைப்போடு கூடிய கொசுவத்தை மடக்கிக் கால்களுக்கிடையே செருகிக் கொண்டு குனிந்து நின்று குழம்பைத் துழாவிக் கொண்டிருந்த ரஞ்சிதத்தின் கைகளில் கலகலக்கும் கண்ணாடி வளையல்களிலும், கழுத்தில் தொங்கிய மஞ்சள் சரட்டிலும், மஞ்சள் பூசிய கன்னக் கதுப்பிலும், நெற்றியில் ஜொலித்த குங்குமப் பொட்டின் ஜிகினாத் தூளிலும் அடுப்பில் கனன்ற தீ ஜீவாலை – நாற்புறமும் சுழன்று நௌ¤ந்து குழம்புச் சட்டியின் அடிப்பாகத்தை நக்கி நிமிர்ந்த தீ நாக்குகளின் செவ்வொளி – படர்ந்து பட்டுப் பிரகாசித்தது.
அவள் அடுப்பை, கனன்று எரியும் கங்குகளைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தாள். அவள் கண்களில் கங்குகளின் பிம்பம் பிரதிபலித்தது. அவள் முகத்தில் புதிய, இதுவரை அவன் காணாத, அனுபவிக்காத ஒரு அழகு, ஒரு தேஜஸ், ஒரு மயக்கம், ஒரு லாகிரி… என்னவோ தோன்றியது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு அவளருகே குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்தான் மருதை. அவன் இதழ்க்கடையில் சிரிப்பு சுழித்தது. கீழுதட்டை அமுக்கிப் பற்களால் கடித்தவாறு, புருவங்களை உயர்த்தி, முகத்தைச் சாய்த்து ஒரு கோணல் பார்வையோடு பெருமூச்செறிந்தான்.
“ஏ குட்டி, கொஞ்சம் நெருப்பு எடு.” ஒரு பீடையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு கேட்டான்.
“ஐய… கூப்பிடறதைப் பாரு… குட்டியாமில்லே, குட்டி” என்று முனகிக் கொண்டே தீ பற்றிய சுள்ளி ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள். சுள்ளியை வாங்கும்போது அவள் கையையும் சேர்த்துப் பற்றிக் கொண்ட மருதமுத்து, அவள் கரங்களில் அடுக்கியிருந்த கண்ணாடி வளையல்களோடு விளையாடிக் கொண்டே கொஞ்சுகின்ற குரலில்,
“கண்ணாலம் கண்ணாலமின்னு கண்ணாலம் கட்டியாச்சு, இப்ப என்ன சொல்லுவியாம்…” என்று குரலைத் தாழ்த்தி அவள் காதருகே குனிந்து ரகசியமாக என்னவோ கூறினான். அதைத் தொடர்ந்து கண்ணாடி வளையல்களோடு அவள் சிரிப்பும் சேர்ந்து கலகலக்க, “கையை வுடு மச்சான்… அடுப்பிலே கொழம்பு கொதிக்குது” என்று சிணுங்கிக் கொண்டே அவன் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டே ரஞ்சிதம் முன்றானையால் முகத்தை மூடி உள்ளூரச் சிரித்துக் கொண்டாள். அப்படி அவன் என்னதான் கேட்டானோ? அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.
“ஊஹீம், சொன்னாத்தான்…”
“இனிமே என்னை என்னா கேக்கறது?…” என்று சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பி அடுப்பைக் கவனிக்க முனைந்தாள் ரஞ்சிதம். அவள் முதுகில் என்னமோ நமைத்தது, உடல் முழுவதும் சிலிர்த்தது.
சோறு சமைத்துக் குழம்பு காய்ச்சிப் புருஷனுக்கு விருந்து படைத்துவிட்டுத் தானும் சாப்பிட உட்கார்ந்தாள் – எல்லாம் நடுத்தெருவில்தான்!
“ரஞ்சி, நான் பார்க்கிலே அந்த மூலை பெஞ்சியிலே படுத்திருக்கேன்” என்று மற்றவர்கள் காதில் விழாதபடி சொல்லிவிட்டுச் சென்றான் மருதமுத்து.
சோறும் குழம்பும் நன்றாகத்தான் இருந்தது என்றாலும் ரஞ்சிதத்திற்கு சோறு கொள்ளவில்லை.
***** ***** *****மணி பத்துக்கு மேலாகிவிட்டது. பார்க்கிலுள்ள மூலை பெஞ்சில் மருதமுத்து புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். பெஞ்சுக்குக் கீழே கிழிந்த பாயும் பழைய போர்வையும் கிடந்தன. அவன் விரல்களுக்கிடையே பீடி நெருப்புக் கனிந்து கொண்டிருந்தது. இன்னும் தெருவில் சந்தடி அடங்கவில்லை.
ரஞ்சிதம் தயங்கித் தயங்கி மௌ¢ள மௌ¢ள அசைந்து பார்க்குக்குள் நுழைந்தாள். அவனருகே தலைமாட்டில் அவனுக்குத் தெரியாமல் வந்து நின்றாள். தன் பின்னால் அவள் வந்து நிற்பதை அறிந்தும் அறியாதவன் போல் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான் மருதமுத்து. தான் தூங்கிவிட்டதாக அவள் எண்ணிக் கொள்ளட்டும் என்று லேசாகக் குறட்டை விட்டான். ஆனால் அவன் கையில் புகைந்து கொண்டிருந்த பீடித்துண்டு அவனை அவளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டது. அவளுக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு மௌனமாய் நின்றிருந்தாள். அவளுக்குக் கழுத்து நரம்புகளில் உள்ளூர என்னவோ உரசிக் கிளுகிளுத்து ஓடி உடல் முழுவதும் பரவுவது போல் இருந்தது. அவனுக்கும் அங்கு நிலவிய மௌனம் சிரிப்பை மூட்டியது; அவன் அடக்கிப் பார்த்தான்; அவன் முகத்தில் சிரிப்பின் ரேகைகள் ஓடிப் பாய்ந்து களுக்கென்று குரலும் வெடித்துவிட்டது. அவளும் சிரித்தாள். இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் காரணமின்றியோ காரணத்தோடோ விழுந்து விழுந்து சிரித்தனர். சிரித்து ஓய்ந்த பின் ரஞ்சிதம் பெஞ்சின் மறுகோடியில் நாணிக்கோணி உட்கார்ந்தாள். “ரஞ்சி, வெத்தலை பாக்கு வெச்சிருக்கியா? குடு!” அவள் வெற்றிலை மடித்துக் கொடுத்தாள். மருதமுத்து வெற்றிலையைச் சுவாரஸ்யமாக மென்று கொண்டே அவளருகில் உட்கார்ந்து கொண்டான்…
நல்ல நிலவு…
நிலா வெளிச்சம் அந்தக் காதலர்களுக்கு இன்பமளிக்க வில்லை; இடைஞ்சலாய் இருந்தது…
பெஞ்சின்மீது அமர்ந்திருந்த ரஞ்சிதத்தின் முகத்தில் ஓங்கி வளர்ந்த அரசமரக் கிளைகளின் ஊடே பாய்ந்து வந்த நிலவின் ஒளிக் கதிர்கள் விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளியில் அவள் விழிகள் மின்னின. வெற்றிலைக் காவி படிந்த உதடுகளில் ஊறிப் படர்ந்த வெற்றிலைச் சாற்றின் மினுமினுப்பு மருதமுத்துவின் உதடுகளை என்னவோ செய்தது. அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு அவளையே பார்த்தான். அவள் கழுத்திலே கிடந்த கருவ மணியும் மஞ்சள் கயிறும் முறுக்கிக் கொண்டு மார்பின் நடுவே தடுமாறி நெகிழ்ந்து கிடந்தது. நழுவிப் போன மேலாக்கினூடே, ரவிக்கையில்லாத – கருங்காலிக் கடைசல் போன்ற தேகத்தின் வனப்பு மறைந்தும் மறையாமலும் மருதமுத்துவை மயக்கிற்று.
“ரஞ்சி!”
அவள் பெருமூச்சு விட்டாள்.
விம்மி மேலெழுந்து அவள் நெஞ்சம் புடைத்ததனால் நிலை குலைந்த மருதமுத்து அவளை – அவளுடைய வெற்றுடலை மார்புறத் தழுவிக் கொண்டான்.
“வுடு மச்சான்” என்று திமிறிக் கொண்டு தன்னைச் சரி செய்துகொண்டு நகர்ந்து உட்கார்ந்தாள் ரஞ்சி.
எதிரிலிருக்கும் ‘முஸ்லிம் ரெஸ்டாரண்ட்’ இன்னும் மூடப்படாததை அப்பொழுதுதான் கவனித்தான் மருதமுத்து.
“சீச்சீ… இந்தப் பார்க் ரொம்ப ‘நாஸ்டி’யாப் போச்சு” என்று ஒரு வெள்ளை வேஷ்டிக்காரன் இவர்களைப் பார்த்தவாறே தம்மருகில் வந்தவரிடம் சொல்லிக் கொண்டே நடந்தான். மருதமுத்துவின் உடல் நாணிக் கூசியது – ரஞ்சிதம் பரிதாபகரமாக விழித்தாள்.
“நம்ம ஊரிலேயே கண்ணாலம் கட்டிக்கிட்டிருந்தா?” என்று சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் ரஞ்சியின் குரல் அடைத்தது.
அவனும் பெருமூச்சு விட்டான்.
“கஞ்சியில்லாட்டியும் நமக்குன்னு ஒரு குடிசையாச்சும் இருக்குமில்லே. பட்டினியோட ஒருத்தருக்கும் தெரியாம கவுரவமா படுத்துக் கெடக்கலாமில்லே… சீச்சீ! இது என்ன பொழைப்பு? தெருவிலே கண்ணாலம் கட்டிக்கிணு, தெருவிலே புள்ளை பெத்துக்கினு, தெருவிலே செத்தும் போறது” என்று சலிப்புடன், வெறுப்புடன், துயரத்துடன், ஏமாற்றத்துடன், ஏக்கத்துடன் முனகிக் கொண்டாள் ரஞ்சி. அவன் மௌனமாய் இருந்தான்.
சற்று நேரம் கழித்து ஒரு பெருமூச்சுடன் சொன்னான்:
“என்னா பண்றது ரஞ்சி?… அவுங்க அவுங்க தலையெழுத்துப்படிதா நடக்கும். ஊர்லே ஒலகத்திலே எவ்வளவோ பேரு கண்ணாலம் கட்டிக்கிறாங்க. பங்களா என்னா! காரு என்னா! அதிலாட்டிப் போனாலும் ஒரு சின்ன வீடு, ஒரு பஞ்சு மெத்தை – அதாவது இருக்கும். எல்லாத்துக்கும் குடுத்து வைக்கணும். நம்ம விதி இப்படி” என்று வருத்தத்தோடு புலம்பினான். “என்னா மச்சான், இதுக்கா நீ கவலைப்படறே? நீ இருக்கிற வரைக்கும் எனக்கு ஒரு குறையும் இல்லே; காரும் பங்களாவும் வெச்சிருக்கிறவங்க கதையெல்லாம் தெரியாது போலிருக்கு. ஆம்படையான் பெண்டாட்டி விசயம் கச்சேரி வரைக்கும் சிரிக்குதே… நம்ம மாதிரி அவுங்களுக்கு ஒருத்தர் மேலே ஒருத்தருக்கு ஆசையிருக்குமா…?”
‘இனிக்கும் இன்ப இரவே நீ வா வா…” என்று ஹோட்டல் ரேடியோ விரகத்தால் உருகிக் கொண்டிருந்தது!
ஜன சந்தடி அடங்கிவிட்டது. ஹோட்டலில்கூட ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை.
மணி பன்னிரண்டு அடித்தது.
பிளாட்பாரத்தில் வாழும் மனிதர்களெல்லாம் உறங்கிக் கொண்டிருந்தனர். பனி மூட்டம் அவர்களின் மீது கவிந்து கொண்டிருந்தது. விறைக்கும் குளிரில் அழுக்குக் கந்தல்களினுள் அந்த ஜீவன்கள் முடங்கிக் கிடந்தன. பச்சைக் குழந்தைகள் தாயின் மார்பினுள்ளே மண்டிக் காந்தும் வெப்ப சுகத்தில் பம்மிக் கொண்டன. அவர்கள் தலைமாட்டில் சொறி நாய்களூம், கிழட்டு மாடுகளூம் அரைத் தூக்கத்துடன் காவல் காத்தன.
பார்க்கில் நிசப்தம் நிலவியது; மருதமுத்து பெஞ்சியிலிருந்து எழுந்து செடி மறைவில் விரித்திருந்த பழம்பாயில் படுத்துப் புரண்டு கொண்டிருந்த ரஞ்சிதத்தின் அருகே சென்று அமர்ந்தான்.
“ரஞ்சி… தூங்கிட்டியா?”
“இல்லே…”
“ஒனக்குக் குளிருதா?”
“உம்.”
இருவரும் மொடமொடக்கும் அவளுடைய புதிய சிவப்புப் புடவையால் போர்த்திக் கொண்டார்கள்.
போர்த்தியிருந்த புடவை மௌ¢ள மௌ¢ள அசைந்தது.
“மச்… சான்…” அழுவதுபோல் திணறியவாறே முனகினாள் ரஞ்சிதம்.
திடீரென அந்தத் தெருவிலிருந்து ஒரே வெளிச்சம் அவர்கள்மீது பாய்ந்தது!
“ஐயோ!…” என்று பதறினாள் ரஞ்சி.
“காருதான்… போயிடும்…”
அவன் தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் ரஞ்சிதம்.
கார் சென்ற பிறகு, உலகத்தையே, தங்களையே, மறந்திருந்த அவர்களின் அருகே காலடி ஓசைகளூம் பேச்சுக் குரலும், சிரிப்பொலியும் கேட்டன.
மினர்வா தியேட்டரில் இரண்டாவது காட்சி முடிவடைந்து கும்பல் வீதியில் பெருகி வந்து கொண்டிருந்தது.
மருதமுத்து எழுந்து சென்று பெஞ்சின் மேல் படுத்துக் கொண்டான்.
ரஞ்சிதத்திற்கு அழுகையே வந்துவிட்டது!
மருதமுத்துவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. யார் மீது ஆத்திரப்படுவது?…
கும்பலில் ஒரு பகுதி முஸ்லிம் ரெஸ்டாரண்டிற்குள் படையெடுத்தது. வெகுநேரம் வரை சந்தடி அடங்கவில்லை.
மணி ஒன்று அடித்தது.
முஸ்லிம் ரெஸ்டாரெண்டில் ஆளரவமே இல்லை. பார்க் அருகே ஒரு ரிக்ஷாக்காரன் நின்றிருந்தான். அவனருகே ஒரு மஸ்லின் ஜிப்பாக்காரன்… “அப்புறம் என்ன சொல்றே?”
“வா சாமி… நல்ல ஸ்டூடன்ஸீங்கதான்; பிராமின்ஸ் சார்… வண்டியிலே ஏறு சார்… போவும்போது பேசிக்குவோம்.”
மஸ்லின் ஜிப்பாக்காரனை ஏற்றிக் கொண்டு நகர்ந்து, பிராட்வேயிலிருந்து பிரியும் ஒரு சிறிய சந்தில் நுழைந்து விரைந்து மறைந்தது ரிக்ஷா.
“தூ… இதுவும் ஒரு பிழைப்பா? கஸ்டப்பட்டு வண்டி வலிக்கிற அந்தக் ‘கயிதை’க்கு ஏன் இந்தப் பேமானிப் புத்தி?” என்று காறி உமிழ்ந்தான் மருதமுத்து.
“என்ன மச்சான் திட்டறே?”
“ஊரும் ஒலகமும் இருக்கறதைப் பார்த்தா திட்டாமெ எப்படி இருக்கிறது? இன்னம் ஒனக்குத் தூக்கம் வரல்லியா… உம்… எப்படி வரும்” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான் மருதமுத்து.
நிலவு மேகத்தில் மறைந்தது.
ஒளி மிக்க அந்த பூர்ணிமை இரவும் இருண்டது. முஸ்லிம் ரெஸ்டாரெண்டும் மூடப்பட்டது. மனித சந்தடியே அற்றுப் போயிற்று.
ஒரே அமைதி!
பார்க்கினுள் நெடிது வளர்ந்திருந்த அரசமரக் கிளைகளில் காகங்கள் சலசலத்தன; விடிந்து விட்டது போன்ற பிரமை போலும்… சில காகங்கள் கரைந்தன. வெளிறிய இருளின் பிடிப்பில் ஊமைத்தனம் போல் நட்சத்திர ஒளி ஜாடை காட்டிற்று. நாய் ஒன்று எழுந்து நின்று உடலை வளைத்து முறித்துச் சடசடத்து உதறிக் கொண்டு அலுப்புத் தீர்ந்ததுபோல் எங்கோ நோக்கி வேகமாக ஓடியது. மணி இரண்டு அடித்தது.
“ரஞ்சி…”
“…”
“ரஞ்சி…”
“உம்…”
பெஞ்சு காலியாயிருந்தது.
செடி மறைவில் இலையோ இருளோ அசைந்தது.
“டக்… டக… டக்.”
முதலில் அந்த ஓசையை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
“டக் டக்… டக் டக்…” ஓசை அவர்களைச் சமீபிக்கவே அவர்கள் சலனமின்றி ஒன்றிக் கிடந்தனர்.
“ஏய், யாரது? எழுந்து வாம்மே” என்ற போலீஸ்காரனின் முரட்டுக் குரல், வலுக்கட்டாயமாக – மிருகத்தனமான – மனித உணர்ச்சிகளிலிருந்து, மனித நாகரிகத்தின் புதை குழிக்கு – அவளிடமிருந்து அவனைப் பிய்த்தெறிந்தது. அவன் உடல் பதை பதைக்க உதடுகள் துடிதுடிக்க எழுந்து வந்தான். அவள் செடி மறைவில் நின்று தனது புடவையைச் சுற்றிக் கொண்டாள்.
“வெளியே வாம்மே” என்று போலீஸ்காரன் அசூயையுடன் உறுமினான்.
“பயம்மா இருக்கே மச்சான்…” என்று அந்தப் பட்டிக்காட்டு யுவதி பரிதாபகரமாகத் தன் கை பிடித்த கணவனிடம் குழறினாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“பயப்படாதே வா, ரஞ்சி” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, பார்க்கின் இரும்புக் கிராதியைத் தாண்டிக் குதித்து வெளியே வந்தான் மருதமுத்து. விளக்குக் கம்பத்தடியில் போலீஸ்காரன் நின்றிருந்தான்.
“யார்ரா நீ?” என்று சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதிவிட்டான் போலீஸ்காரன்.
“வந்து வந்து கூடைக்காரன், சாமி…”
“ஏய், இப்படி வெளிச்சத்துக்கு வாம்மே” என்று அவளைக் கூப்பிட்டான் போலீஸ்காரன். அவள் பயந்து நடுங்கிய வண்ணம் விளக்கு வெளிச்சத்தில் வந்து நின்றாள். நெற்றித் திலகம் கலைந்து, கூந்தல் அவிழ்ந்து, சிகையில் சூடிய கதம்பம் சிதைந்து சிதறிக் கிடந்தது.
“ஏம்மே, இங்கதான் இடமா? ஒம் பேரு என்னாம்மே?” என்று பாக்கெட்டிலிருந்த சிறு நோட்டுப் புத்தகத்தையும், பென்சிலையும் கையிலெடுத்தான் போலீஸ்காரன். அவள் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன்,
“ரஞ்சிதம், சாமி” என்றாள்.
“சார்… சார்…” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான் மருதமுத்து.
“நீ ஒண்ணும் பயப்படாதே! ‘இவதான் என்னைக் கூப்பிட்டா’ன்னு ஸ்டேஷனுக்கு வந்து ரிப்போர்ட்டு குடுத்துடு. ஒன்னே விட்டுடுவோம்” என்றான் போலீஸ்காரன்.
ரஞ்சிதத்திற்கு விஷயம் விளங்கி விட்டது.
“நாங்க புருஷன், பெஞ்சாதி சாமி…” என்று பதறினாள் ரஞ்சிதம். போலீஸ்காரன் சிரித்தான். அவள் சொன்னதை அவன் நம்பவில்லை.
“சத்தியமாத்தான் சாமி… இந்தப் புள்ளையார் சாட்சியா நாங்க புருஷன் பெஞ்சாதிங்க சாமி. இதோ பாருங்க” என்று அவள் கழுத்தில் கிடந்த கயிற்றை வெளியே இழுத்துக் காண்பித்தான் மருதை.
சட்டத்தின் வேலிக்குள் நிற்கும் அந்தப் போலீஸ்காரனால் தலையை நிமிர்த்தி அந்த மஞ்சள் கயிற்றைக் காண முடியவில்லை.
அவன் சட்டம் ‘இருட்டைத் துருவி திருட்டைக் கண்டுபிடி’ என்றுதான் கற்றுக் கொடுத்திருக்கிறது. மனசைத் துருவி உணர்ச்சியைப் பார் என்று சொல்லிக் கொடுக்கவில்லை.
அவன் கண்டுபிடித்தது குற்றம். குற்றவாளியைக் கைது செய்ய வேண்டியது சட்டம். சட்டத்தின் வாரிசு போலீஸ்காரன்! அவன் ஒழுக்கத்தின் பிரதிநிதியோ உண்மையின் தூதுவனோ அல்ல.
“உம், நட நட… அதெல்லாம் ஸ்டேஷனிலே பேசிக்கலாம்” என்று அவளைத் தள்ளினான்.
“ஐயா… ஐயா…” என்ற அந்தக் காதல் ‘குற்றவாளி’ – ரஞ்சிதம் கெஞ்சினாள். தன் கணவனின் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். அவன் தலையைக் குனிந்த வண்ணம் போலீஸ்காரனுடன் நடந்து கொண்டிருந்தான். அவளும் அவர்களைத் தொடர்ந்தாள்.
ஊரே அடங்கிய அந்த அமைதியான இரவில் அந்த நகரத்தின் பெரிய வீதியில் சட்டத்தின் ஹிருதயத் துடிப்பு போல் ஜீவனுடன் கம்பீரமாக போலீஸ்காரனின் பூட்ஸ்களின் சப்தம் டக் டக் என்று ஒலித்தது. ரஞ்சிதத்திற்குத் தன் ஹிருதயத்தில் யாரோ மிதிப்பதுபோல் ‘பக் பக்’ என்று நெஞ்சு துடித்தது.
எதன் மீதோ மிதித்து நசுக்கி நடந்து செல்லும் சட்டத்தின் காலடியோசை…
அதோ, ‘டக்… டாக்… டாக்… டக்…”
(எழுதப்பட்ட காலம்: 1957)
நூறு சதவீதம் உண்மை……
What A heart touching story sir?