டைட்டில் நல்லா இருக்குல்ல…. ? என்னதான் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி ஆயிரம் எழுதினாலும், காவல்துறை அதிகாரிகளைப் பற்றி எழுதும் போது இருக்கும் இன்பம் இருக்கிறதே…. அது அலாதியானது.
சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான கமிஷனர் கண்ணாயிரத்திற்குத் தான் இந்தக் கண்டனப் பதிவு.
இந்தியா ஒரு ஜனநாயக நாடுதான் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். தமிழகமும் அதில் ஒரு அங்கம் தானே.. ?
டாக்டர்.பினாயக் சென் மீதான அயோக்கியத்தனமான ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டதை கண்டித்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு நாளேடுகள் இந்தத் தீர்ப்பை கண்டித்து தலையங்கம் எழுதுகின்றன.
இந்தக் கண்டனக் குரல்களின் ஒரு பகுதியாக 31.12.2010 அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் என்ற முறையில் கண்ணாயிரத்திடம் அனுமதி கடிதம் வழங்கப் பட்டது.
இந்த அனுமதியை மறுத்து கண்ணாயிரம் எழுதியுள்ள பதில் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நீதிமன்றத் தீர்ப்பையும், நீதிமன்றத்தின் ஆணையை கண்டிப்பதும், சட்டத்திற்கு எதிரானதாகும். அது நீதிமன்ற அவமதிப்பாகும்.
மேலும் டாக்டர் பினாயக் சென்னின் தண்டனையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, எவ்வித பொது நலனும் இல்லாததாகும்.
எனவே கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி மறுக்கப் படுகிறது“
மீண்டும் மீண்டும், நண்பர்களும் ஆர்வலர்களும் வார்த்தைகளில் கவனம் தேவை என்று சொல்லுவதால் காரம் சற்று குறைக்கப் படுகிறது.
நீதிமன்றத் தீர்ப்பை கண்டிப்பது சட்ட விரோதம் என்று சொல்லுகிறாரே கண்ணாயிரம்… …. இதைக் கண்டித்து தலையங்கம் தீட்டிய இந்து நாளேட்டிடம் இந்த ம…………. சொல்ல வேண்டியதுதானே….
நீதித்துறை மீது குற்றம் சொல்லுவது சட்ட விரோதமானது என்று சொல்லும் கண்ணாயிரம் நீரா ராடியா உரையாடலில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி 9 கோடி லஞ்சம் வாங்கினார் என்று வருகிறதே… நீரா ராடியாவிடம் போய்க் கேட்க வேண்டியதுதானே….
ஒரு எம்.பியாக இருக்கும் வசந்தி ஸ்டான்லி, பொய்யான ஆவணங்களை கொடுத்து நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று உள்ளார் என்று புகார் கொடுத்து 3 மாதம் ஆகிறதே…. வசந்தி ஸ்டான்லி செய்தது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா…. ….. அந்தப் புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்து கிழித்து விட்டார் கையாலாகாத கண்ணாயிரம் ?
ஒரு நபரைக் கைது செய்யும் போது என்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு என்ற வழக்கில் பல விதிமுறைகளை சொல்லியுள்ளதே….. அந்த விதிமுறைகள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வைக்கப் பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளதே. இதைக் கடைபிடிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும் என்று தீர்ப்பு உள்ளதே….. இந்த அறிவிப்பு பலகைகள் சென்னை மாநகரின் எத்தனை காவல் நிலையங்களில் உள்ளன ? இந்த கண்ணாயிரம் தினந்தோறும் நீதிமன்ற அவமதிப்புச் செயலில் ஈடுபடவில்லையா ?
கண்ணாயிரத்தின் இந்த அனுமதி மறுப்பை சவுக்கு வன்மையாக கண்டிக்கிறது.
அனுமதி மறுப்பை கண்டித்து, சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா, பத்திரிக்கையாளர் ஞானி உள்ளிட்டோர் தங்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.
கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த சமூக ஆர்வலர்கள், வாயில் கருப்புத் துணியை கட்டி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஜாபர் சேட்டை அண்டிப் பிழைக்கும் கண்ணாயிரத்திற்கு சவுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, ஜாபர் சேட் அணையப் போகும் விளக்கு என்பதையும் கண்ணாயிரத்திற்கு சுட்டிக் காட்ட விரும்புகிறது.