ஒட்டுமொத்த சி.பி.ஐ. அதிகாரிகளில், திறமையும் அனுபவமும் மிக்க 247 பேர்களைத் தேர்ந்தெடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்கும் பணியில் இறக்கி இருக்கிறார், அதன் இயக்குநர் ஏ.பி.சிங்! பங்குச் சந்தை மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தா வழக்கை விசாரித்த அதே ஏ.பி.சிங்!
பொருளாதார குற்றங்களை நுணுக்கமாக ஆராய்ந்து வெளிக்கொண்டு வருவதில் திறமையானவர் என்ப தால், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இவரை மிகவும் பிடிக்கும். சி.பி.ஐ-யின் இயக்குநர் பதவி காலியானதும், ஐ.பி.எஸ். சீனியர் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவ… ஏ.பி.சிங் பெயரை டிக் செய்தவர் பிரதமரே. கடந்த டிசம்பர் 1-ம் தேதி பதவியேற்ற ஏ.பி.சிங், ஸ்பெக்ட்ரம் விசாரணையில்தான் அதிக முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.
வடநாட்டைச் சேர்ந்த எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஒருவர்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தலைமை விசாரணை அதிகாரி. இவர்தான் எஃப்.ஐ.ஆர். (ஆர்.சி. 45/2010, டெல்லி ஆன்ட்டி கரப்ஷன் பிராஞ்ச், சி.பி.ஐ.) தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்தார். இவருக்குக் கீழ், இந்தியா முழுதும் வழக்கு சம்பந்தமாக விசாரிக்க, நூற்றுக்கணக்கான அதிகாரிகள் செயல்படுகின்றனர். இவர்களுக்குத் தேவையான தகவல்களை அந்தந்த மண்டலத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் சேகரித்துக் கொடுக்கும். சென்னை மண்டலத்தின் இணை இயக்குநர் அசோக் குமாரின் நேரடிப் பார்வையில், தமிழகத்தின் பல ஊர்களில் நடந்த சி.பி.ஐ. ரெய்டுகளை 42 பேர் நடத்தினர். இவர்களுடன் சி.பி.ஐ. பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஃபீல்ட் பயிற்சிக்காக வந்த 17 பேர்களும் இணைந்துகொண்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை எப்போது?
ரெய்டு முடிந்ததும், ஆ.ராசா, நீரா ராடியா உள்ளிட்ட சிலருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி, நேரடி விசாரணையில் இறங்கியது. ”ரெய்டில் சிக்கிய ஆவணங்களே ஆ.ராசா, நீரா ராடியா, ஆர்.கே.சந்தோலியா, ஸ்ரீவத்சவா ஆகியோரைக் கைது செய்து, அடுத்த கட்ட விசாரணை நடத்தும் அளவுக்குப் போதுமானதாக உள்ளது!” என்று சி.பி.ஐ. அதிகாரிகள் மத்தியில் டெல்லியில் பேசப்படுகிறது.
இந்த விவகாரத்தின் காரணகர்த்தாவான சுப்பிர மணியன் சுவாமியோ, ”டிசம்பர் 31-க்குள் ராசாவைக் கைது செய்து, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 2ஜி அலைவரிசை உரிமங்களை அதற்குள் கேன்சல் செய்ய வேண்டும். மேலும், தற்போதைய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில்சிபலையும் இந்தத் துறையிலிருந்து மாற்ற வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் சி.பி.ஐ-யின் இடைக்கால விசாரணை அறிக்கை, 2011 ஜனவரிக்குள் தாக்கல் ஆகும் எனத் தெரிகிறது. முழு அறிக்கையை பிப்ரவரி 10-ம் தேதி தாக்கல் செய்யச் சொன்னது சுப்ரீம் கோர்ட்.
சி.பி.ஐ. சம்மனும் ஆ.ராசாவும்!
தனக்கு வந்த சம்மனை பெற்றுக்கொண்டு, டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்துக்கு ஆ.ராசா கிளம்பினார். அப்போது நிருபர்களிடம், ”நான் சி.பி.ஐ-யைக் கண்டு பயப்பட மாட்டேன். நானும் ஒரு வக்கீல். சட்டத்தை மதிப் பவன். விசாரணைக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். மற்றபடி, இந்த வழக்கு விசாரணையைத் தவிர்க்க முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்குப் போக மாட்டேன்!’’ என்றார்.
24-ம் தேதி ஒன்பது மணி நேரம், 25-ம் தேதி ஐந்து மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆஜராகிக் கேள்விகளுக்குப் பதில் அளித்தார் ஆ.ராசா.
டெல்லி சி.பி.ஐ-யினர் சிலர் நம்மிடம், ”ஆ.ராசாவின் டெல்லி வீடுகளில் நாங்கள் ரெய் டுக்குப் போனபோது, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த சில அதிகாரிகளும் வந்தனர். காரணம், சிக்கும் ஆவணங்கள் ஏதாவது தமிழில் இருந்தால், புரிந்துகொள்ளத்தான். எதிர்பார்த்ததுபோலவே தமிழில் எழுதிய ஒரு டைரி சிக்கியது. லேப்-டாப், கம்ப்யூட்டரில் தமிழில் நிறைய விவரங்கள் இருந்தன. இந்தத் தகவல்களை எல்லாம் ஆராய்ந்து எடுத்தவர் திருச்சி ஏரியா அதிகாரி ஒருவர்தான்.
இந்தியாவில் பல இடங்களில் நடந்த ரெய்டுகளில் கிடைத்த ஆவணங்கள், அரசுப் பதிவேடுகளில் உள்ள ஆவணங்கள்… இவை இரண்டின் அடிப்படையில்தான் பெரும்பாலான கேள்விகள் தயாரித்தோம். மொத்தம் 417 கேள்விகள் வந்தன. இவற்றை இயக்குநர் ஏ.பி.சிங் படித்துப் பார்த்து சில திருத்தங்களைச் சொன்னார். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஆ.ராசா எங்களுக்கு விளக்கியாக வேண்டும்.
ஒரே நாளில் இவற்றுக்குப் பதில் தர அவரால் முடியாது. இதுவரை இரண்டு நாட்கள் ஆஜராகி இருக்கிறார். இன்னும் சில நாட்கள் அவர் ஆஜராக வேண்டியிருக்கும். எங்களது கணக்கின்படி 417 கேள்விகளுக்கு பதில் சொல்ல ஒன்பது நாட்கள் அவருக்குத் தேவைப்படும்!” என்று சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
ஆ.ராசாவுக்கு சவால்?
டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் அனுதாபிகள் சிலரிடம் பேசியபோது,
”2ஜி அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக விதிமுறை களைப் பின்பற்றித் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது, தொலைத் தொடர்பு அதிகாரிகள்தான். துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசாவுக்கும் இதற்கும் அதிகத் தொடர்பு இல்லை. உயர் மட்ட அதிகாரிகளிடம்தான் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகளைக் கேட்க வேண்டும். ஆனால், ஹவாலா முறையில் ஏராளமான பணம் கைமாறிய விவகாரம்தான் ஆ.ராசாவுக்கு சவாலாக எழுந்து நிற்கிறது. ‘ஆம் – இல்லை’ என்கிற டைப்பில் கேள்விகள் இருந்தாலும், ‘இல்லை’ என்று சில கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட முடியாது. அவற்றின் கிளை கேள்விகளாக விரிபவற்றுக்கு விரிவான விளக்கம் தெரிவித்தாக வேண்டும். அது மட்டும் இல்லாமல், ராசாவுக்கு நெருக்கமானவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரின் சொத்து விவரங்கள் குறித்து எல்லாம் ராசாவுக்கு முழுதாகத் தெரிய வாய்ப்பு இல்லை. அவரவர் சொந்த முயற்சியில் வாங்கியதை எல்லாம்கூட ராசாவுடன் முடிச்சுப் போட்டுக் கேட்டு சி.பி.ஐ. டார்ச்சர் கொடுப்பதே, உறுதியைக் குலைக்கும் ஒருவிதமான அணுகுமுறைதான்!
ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 கேள்விகளுக்கு, தீவிரமாக யோசித்து கவனமாகப் பதில் அளித் தாலே, ஒரு நார்மல் மனிதருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிடும். ‘ஞாபகம் இல்லை’ என்று சொன்னால், அதே விஷயத்தையே வேறு சில கேள்விகளைக் கேட்டு முடித்தபின், திடீரென்று வேறு வார்த்தைகளில் கேட்டு சோதிக்கிறார்களாம். பணம் கைமாறிய விஷயங்களைச் சொல்லி, புதுப் புது நபர்களின் பெயர்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்போது, ராசா முகம் சுளிக்கிறார். அதே சமயம், இந்தக் கேள்விகளை நினைவில் வைத்திருந்து… வெளியில் வந்ததும் டெல்லியில் உள்ள பிரபல வக்கீல்களிடம் சொல்லி இவற்றுக்கு என்ன பதில் தருவது என்று ராசா ஆலோசனையும் நடத்தியிருக்கிறார். நினைவில் உள்ள தகவல்களை வைத்துக்கொண்டு ராசா அளித்து வரும் பதில்களை வைத்தே அவரை மடக்கி உள்ளே தள்ளிவிடுவார்களோ என்கிற பீதி எங்களுக்கும் ராசாவுக்கும் இருக்கிறது!” என்கின்றனர் டென்ஷன் கொப்பளிக்க.
தி.மு.க. ஆ.ராசாவை கை கழுவுகிறது?
‘விரைவில் திகார் ஜெயிலில் ஆ.ராசா அடைக்கப் படுவார்’ என்கிற பேச்சு அதிகாரிகள் மத்தியில் பரவ விடப்படுகிறது. எல்லா விசாரணைகளும் முடிந்து சி.பி.ஐ. தரப்பில் கோர்ட்டில் ‘ராசாவை குற்றவாளி’ என்று பிரகடனப்படுத்தினால், கட்சியைவிட்டு ராசாவை நீக்க தி.மு.க. தரப்பில் தயார் என்றே தெரிகிறது. ”சட்டத்தையும் அதிகாரத்தையும் நீங்கள் தானே வைத்திருக்கிறீர்கள்? முதலில் இந்த விஷயத்தில் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று உறுதியாகச் சொல்லுங்கள். அதன் பிறகு, ராசா மீது நடவடிக்கை எடுப்பதைப் பரிசீலிக்கிறோம். குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது என்ற நிலையில் நாங்கள் அவரைக் கட்சியைவிட்டு எல்லாம் நீக்க முடியாது. அரசியலில் யார் மீதுதான் குற்றச்சாட்டுகள் இல்லை?’’ என்று தி.மு.க. தரப்பில் டெல்லி காங்கிரஸ் மேலிடத்துக்குத் தகவல் அனுப்பி உள்ளனர். காரணம், ”காங்கிரஸுக்கும் இந்த விவகாரத்தில் கொக்கிபோட முடியும் என்பதால் அவசரப்பட்டு ராசாவை குற்றவாளியாக கோர்ட் டுக்குக் கொண்டு செல்ல மாட்டார்கள்!” என்று நம்புகிறார்களாம்.
தி.மு.க-வினர் சிலர் நம்மிடம், ”தேர்தல் கூட்டணி வரும் என்கிற சூழ்நிலையைக் கருத்தில்கொண்டுதான் ராசா தனது சொந்த இமேஜ் பற்றிகூட கவலைப்படாமல், கட்சி மேலிடம் சொல்வதைக் கேட்டு வருகிறார். சி.பி.ஐ. விசாரணைக்கும் முழு அளவில் ஒத்துழைக்கிறார். ஒருவேளை, கூட்டணி இல்லை என்று தெரிய வந்தால், காங்கிரஸ் வி.வி.ஐ.பி-க்கள் பலரின் பெயர்கள் அடுத்தடுத்து மீடியாக்கள் மத்தியில் எடுத்துவிடப்படும்…” என்று அசரடிக்கிறார்கள்!
நன்றி ஜுனியர் விகடன்