டெசோ அமைப்பின் சார்பாக செவ்வாயன்று ஈழத் தமிழரின் உரிக்காகவும், இலங்கையை போர்க்குற்றத்துக்காக தண்டிப்பதற்காகவும், நடைபெறும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து கருணாநிதியின் கடிதம்..
டெசோ தலைவர் கருணாநிதி வேண்டுகோள்… 11.03.2013
ஈழத் தமிழர் இன்னல் தீரவும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக்குழுவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை வலிமையான திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று கோரியும், “டெசோ” அமைப்பின் சார்பில் 12-3-2013 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
நம் அழைப்பினை ஏற்றுத் தாமாகவே முன் வந்து வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இசைவு தந்த வண்ணம் உள்ள செடீநுதி, நமக்கு ஊக்கம் தருவதாக உள்ளது.
நான் ஏற்கனவே என் வேண்டுகோள் அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தபடி, நம் போராட்டம் அன்பு வழியிலும், அறவழியிலும் நடைபெறுவதாக இருந்திட வேண்டும். ஒரு சிறு வன்முறைக்கும் உடன்பிறப்புகள் இடம் தந்து விடக் கூடாது. பொது மக்களுக்கோ, தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கோ எந்த இடையூறும் இன்றி நம் அறப்போர் நடந்திட வேண்டும்.
இன எதிரிகள், சமூக விரோதிகள் இடையில் புகுந்து கலவரம் விளைத்திட முனையக் கூடும். அது குறித்தும் மிகுந்த கவனத்தோடு இருந்திட வேண்டும்.
ஈழ மக்களுக்காகத் தமிழகமே தன் வேலைகளை நிறுத்தி, நாடு நிலைகுத்தி நின்று விட்டதென்னும் செய்தியை, உடன்பிறப்பே, நாளை நீ கொண்டு வர வேண்டும்.
அன்புடன்
மு.கருணாநிதி
பிப்ரவரி 2009ல் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது, பெண்களும், குழந்தைகளும், கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தபோது, அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்பை சட்டவிரோதமாக அறிவித்து, கருணாநிதி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு….
செய்தி வெளியீடு எண் 77 நாள் 03.02.2009
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பெயரால் 4ம் தேதியன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புக் குறித்து அந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்துகின்ற கட்சிகளுக்கு தலைமைச் செயலாளர் அன்று அனுப்பியுள்ள கடிதம் வருமாறு :-
04.02.2009 அன்று புதன்கிழமை அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்காக என்று தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடத்த தங்கள் கட்சியின் பெயரால் அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். எந்த நோக்கத்திற்காக முழு அடைப்பு அறிவிக்கப்பட்டாலும் அதனை நடத்தக் கூடா என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி; அது தொடர்பாக இப்போதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதே உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிவீர்கள். இந்த விபரங்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது. இப்போது நீங்கள் நடத்துவதாக அழைப்பு விடுத்திருக்கும் முழு அடைப்பு என்பதன் நோக்கம் நல்ல நோக்கத்தை முன்னிட்டு என்று இருந்தாலும் – உச்சநீதிமன்றம் முழு அடைப்பு நடத்துவதையே சட்டமீறல் என்ற பொருளில் தடுத்து நிறுத்தியிருப்பதாலும் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடியாதிருக்கும் நிலையில் நீங்கள் அறிவித்துள்ள 4ம்தேதி முழு அடைப்பு சட்டவிரோதமானது என்று எச்சரிக்கப்படுகிறது.
வெளியீடு : இயக்குநர், செய்தி, மக்கள் தொடர்புத் துறை.