புகழேந்தி தங்கராஜ்
இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு மாதிரி ஒரு நயவஞ்சக நாட்டாமையை உலகில் எங்கே தேடினாலும் நீங்கள் பார்க்கமுடியாது. பக்கத்து வீட்டுப் பிரச்சினையில் தலையிடவே மாட்டார்களாம், இந்த கண்ணியமான விஷக்கன்னிகள். பக்கத்து வீட்டுக்காரன் தன் மனைவியை அடித்தே கொன்றாலும், கதவை மூடிக்கொள்வார்களாம், சங்கு ஊதுகிற சத்தம் கேட்டபிறகுதான் கதவைத் திறப்பார்களாம். இந்த அளவுக்கு நாகரிகம் காக்கிற நபும்சகர்கள் இந்தப் பூவுலகில் வேறெங்காவது பிறப்பெடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா நீங்கள்!
இலங்கையில் என்ன நடந்தாலும் அது உள்நாட்டுப் பிரச்சினை – என்று மன்மோகன் சிங்கும், பிரணாப் முகர்ஜியும், அந்தோணியும், சிதம்பரமும், சல்மான் குர்ஷீத்தும் நாடாளுமன்றத்தில் வாய் கிழிய வசனம் பேசினார்கள், பேசுகிறார்கள். அதே நாடாளுமன்றத்தில், அவர்கள் அத்தனைபேரும் இருக்கும்போதே, ‘விடுதலைப் புலிகளின் கடற்படையை அழித்தது இந்தியக் கடற்படைதான்’ என்று குற்றஞ்சாட்டுகிறார் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. களிமண்ணில் செய்த கொழுக்கட்டைகள் மாதிரி, உட்கார்ந்திருக்கிறது காங்கிரஸ் கோஷ்டி.
யஷ்வந்த் பொய் சொல்கிறார்…
இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிடவே மாட்டோம்…
விடுதலைப் புலிகளின் கடற்படையை அழிப்பதற்கு இந்தியப் படையைப் பயன்படுத்த, இந்தியப் படையென்ன இலங்கையின் கூலிப்படையா….
என்றெல்லாம் கேட்டு கதர்ச் சட்டைகள் கொதித்து எழுந்திருக்கவேண்டாமா? துர்நாற்றம் குடலைப் புரட்டும் நிலையிலும், சாக்கடைக்குப் பக்கத்தில் இருக்கிற டீக்கடையில் உட்கார்ந்து பட்டர் பிஸ்கெட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்கள் உடலில் ரத்தம் ஓடுகிறதா… அல்லது வேறு ஏதாவது ஓடுகிறதா?
எங்கள் தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்றுகுவித்த இலங்கை, அதற்காக ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுத்த 21 நாடுகள், எப்படிக் கொல்வதென்று திட்டம் வகுத்துக் கொடுத்த திருட்டுப் புருஷன் இந்தியா, கொன்று முடிக்கும் வரை உலகின் கவனத்தை அந்த இனப்படுகொலை எட்டிவிடாதபடி பார்த்துக்கொண்ட ஐ.நா. சபை, இனப்படுகொலை முடியும்வரை தமிழகம் பொங்கியெழுந்துவிடாதபடி பார்த்துக்கொண்ட கருணாநிதி – இந்த ஐந்து படைகள்தான், ஒன்றரை லட்சம் தமிழரைக் கொன்ற ஐந்தாம்படை.
இன்று இலங்கையைக் காப்பாற்ற முயல்கிறது இந்தியா… இந்தியாவை ஆளும் காங்கிரஸைக் காப்பாற்ற முயல்கிறார் கருணாநிதி… கருணாநிதியைக் காப்பாற்ற முயல்கிறார்கள் திருமாவளவனும் சுப.வீரபாண்டியனும்! நான் என்னுடைய முன்னாள் நண்பர்களைப் பார்த்துக் கேட்கிறேன்…. இனப்படுகொலைக்குத் துணைபோவதற்காகவே… அதை மூடி மறைப்பதற்காகவே உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனையில் போய் திருவாரூர்த் தேர் படுத்துக் கொண்டதை மறந்தே விட்டீர்களா?
‘ராமச்சந்திராவில் 35 நாட்கள்’ என்கிற அந்தத் திரைப்படம் தானே இந்த வசனகர்த்தாவின் பிற்காலத் திரைப்படங்களில் 35 நாள் ஓடிய ஒரே திரைப்படம்! அது ஒரு திட்டமிட்ட நாடகம் – என்று சுற்றிவளைக்காமல் நான் குற்றஞ்சாட்டுகிறேன். மரண வளையத்துக்குள் தமிழ் உறவுகள் அடைக்கப்பட்டபோது, மாஜி முதல்வர் திட்டமிட்டே மருத்துவ மனைக்குள்போய் ஒளிந்துகொண்டார் என்று திட்டவட்டமாகப் புகார் கூறுகிறேன். தமிழினத்துக்குக் கருணாநிதியை விட்டால் வேறு நாதியில்லை – என்று இன்று வசனம் பேசும் நண்பர்களிடம் என்னுடைய இந்த நேரடிக் குற்றச்சாட்டுக்கு பதில் இருக்கிறதா?
இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துங்கள் – என்கிற கோரிக்கையுடன் 2009 தொடக்கத்தில் தமிழக வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து ஒரு கடையடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்களே… திருமாவுக்கு நினைவிருக்கிறதா? அந்தப் போராட்டத்தை ஒடுக்க கருணாநிதி தலைமையில் இருந்த அரசு முயன்றதை திருமா மறந்துவிட்டாரா? நல்ல நோக்கத்துடன் வெள்ளையன் அறிவித்த அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த கெட்ட நோக்கத்துடன் கருணாநிதியின் காவல்துறை அவரைக் கைது செய்ததே… மறுக்க முடியுமா தோழர் திருமாவால்?
இனப்படுகொலை நடந்தசமயத்தில் இலங்கையையும் இந்தியாவையும் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தை நசுக்குவீர்கள், 4 ஆண்டு கழித்து, செய்த துரோகத்தின் நிழலிலிருந்து விடுபடுவதற்காக நீங்களே ஒரு கடையடைப்பு நடத்துவீர்கள் என்றால், நீங்கள் யாருடைய பினாமி? சுனாமி என்று நான் நினைத்த தோழர்களெல்லாம் இப்படி பினாமி ஆகிவிட்ட வேதனையில் தான் கேட்கிறேன் இந்தக் கேள்வியை!
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் – என்கிறது கருணாநிதியின் அறிவிப்பு. எந்த மத்திய அரசுக்கு இவர்கள் அழுத்தம் கொடுக்க முயல்கிறார்கள்? எந்த மத்திய அரசில் தி.மு.க. அமைச்சர்கள் இருக்கிறார்களோ, அதே மத்திய அரசுக்கா? இப்படி ஒரு கேலிக்கூத்து இனிமேலும் எதற்கு?
இதற்கு வேறு உள்நோக்கம் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுகிறது எனக்கு! லயோலா கல்லூரி மாணவத் தம்பிகளின் உண்ணாவிரதப் போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும், தமிழகமெங்கும் 120 கல்லூரிகளில் உண்ணாவிரதப்போர் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்படியொரு எழுச்சி சமீபத்தில் ஏற்பட்டதில்லை. மாணவர்கள் இப்படியெல்லாம் வியூகம் வகுப்பது டெசோவுக்கும், டெசோவை வழிநடத்தும் மத்திய அரசுக்கும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மாணவர்களால் எழுச்சி ஏற்படும் என்பதை அறிந்தே, நிச்சயமாகத் தோல்வியடையக்கூடிய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து, ஈழப் பிரச்சினைக்குத் தமிழ்நாட்டில் ஆதரவு இல்லாதது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க டெசோ முயல்கிறதா – என்ற ஐயம் எழுகிறது இப்போது.
மார்ச் 12 பொதுவேலைநிறுத்தம் அரைவேக்காட்டுப் போராட்டமாக அரங்கேறியிருக்கிறது. 2009ல் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்தார்கள் வணிகர்கள். இப்போதோ, கடைகளை மூடுங்கள் என்று அந்த வணிகர்களைக் கட்டாயப்படுத்த கடைவீதிகளில் ஊர்வலம் நடத்துகிறது தி.மு.க.
ஒருவேளை டெசோ நடத்திய போதுவேலை நிறுத்தம் தோல்வி அடைந்திருந்தால், அது டெசோவின் அரசியல் உள்நோக்கத்துக்குக் கிடைத்த தோல்வியே தவிர, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இங்கே எழுந்திருக்கிற எழுச்சிக்குக் கிடைத்த தோல்வி அல்ல! இதை, ஈழத் தமிழ் உறவுகளும் புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்களும் உணர்ந்து கொள்ளவேண்டும். எனக்கென்னவோ, டெசோவில் கோதபாய ராஜபட்சேவையும் சேர்த்துக் கொண்டால், அது பரிபூரணமான பரிணாமம் பெறும் என்று தோன்றுகிறது. (முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்கள், இனமான ஆசிரியரோடு கலந்துபேசி இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்கவேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.)
மத்திய அரசுக்கு அழுத்தம் தரவே போராட்டம் – என்று தானே அறிவித்தார்கள்! கடைகளை மூடவைப்பதன்மூலம் மட்டுமே அந்த அழுத்தத்தைத் தந்துவிடமுடியும் என்று நினைத்தார்களா? சமீபகாலமாக ‘உங்களுடைய கோரிக்கைகள் சுலபமாக நிறைவேறக் கூடியவையாக இருக்கவேண்டும்’ என்று போகிற இடமெல்லாம் மாணவர்களுக்குப் புத்தி புகட்டும் தோழர் திருமா, கடைகளை மூடவைப்பது மட்டும்தான் எளிதாகச் சாதிக்கக் கூடியது – என்கிற அரிய ஆலோசனையை டெசோ கூட்டத்தின் தொடக்கத்திலேயே தெரிவித்துவிட்டாரா… தெரியவில்லை! (பேரன்புக்குரிய தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே! உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிப்பதாயிருந்தால், உங்கள் கோரிக்கைகள் என்ன என்று தோழர் திருமாவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். தட்டிவிடுங்கள். எந்தெந்தத் தீர்மானம் எளிதாக நிறைவேறும் என்பதை – ஈழப்பிரச்சினையில் வன்னியரசைப் போல 100 மடங்கு அக்கறை கொண்ட தோழர் ரவிக்குமார் போன்றோர்மூலம் திருமா உங்களுக்குத் தெரியப்படுத்துவார் என்பதை இதன்மூலம் உங்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்!)
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மத்திய அரசின் அலுவலகங்கள் இருக்கின்றன. சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் என்று எக்கச்சக்கமான மத்திய அரசு வளாகங்கள் சென்னைக்குள் இருக்கின்றன. தென்னக ரயில்வே அலுவலகம், ரயில் பெட்டித் தொழிற்சாலை, இந்தியன் ஆயில் கார்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் திரண்டு முற்றுகையிட்டுப் போராடுவதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கமுடியுமா…. காய்கறிக் கடைகளையும் மளிகைக்கடைகளையும் மூடும்படி வற்புறுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கமுடியுமா…. என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு திருமாவையும் சுப.வீயையும் கோபாலபுரம் கொண்டுபோயிருப்பது கொடுமையானது. ஒருவேளை, ‘இலக்கை எளிமையாக்கு, இளிச்சவாயர்களைத் தாக்கு’ – என்கிற திருமாவின் நவீன பார்முலாவை டெசோ கடைப்பிடிக்கிறதா… திருமாவுக்கே வெளிச்சம்!
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க நினைத்ததால்தான், 2009 ஜனவரி 29 அன்று, தீக்குளிப்பதற்கான களமாக சென்னை சாஸ்திரி பவனைத் தேர்ந்தெடுத்தான் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார். பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வழிவந்த தோழர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒவ்வோராண்டும் ஜனவரி 29 அன்று, அதே சாஸ்திரி பவன் முன்தான் போராடுகிறார்கள், தங்கை இசைமொழியின் தலைமையிலும் வேலுமணி தலைமையிலும்! மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கும் நாம் தமிழர் தோழர்கள் ஆவல் கணேசன் தலைமையில் பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை முன் தான் போராடச் செல்கிறார்கள்.
இப்படியெல்லாம் இடங்கள் இருப்பது டெசோ நண்பர்களுக்குத் தெரியவே தெரியாதா? அல்லது அறிதுயிலில் ஆழ்ந்திருக்கிறார்களா? கருஞ்சட்டைத் தமிழர்களும் எழுச்சித் தமிழர்களும் இதற்கு அறிக்கை மூலம் விளக்கம் சொல்லவேண்டிய அவசியம் கூட இல்லை. வீரமணியிடம் விளக்கினால், அவர் ஒரு போஸ்டராகவே போட்டு ஒட்டிவிடுவார்! (ஆசிரியர் எழுதிய, ‘போஸ்டர் ஒட்டுங்கள்… வண்டியை ஓட்டுங்கள்…’ பகுத்தறிவு நூலை ஒருமுறை படிச்சிப் பாருங்க பிரதர்ஸ்!)
தமிழருக்கு நீதி கிடைக்கப் போராடும்போதுகூட சேர்ந்து நிற்காவிட்டால் எப்படி – என்பது மூத்த தி.மு.க. தோழர் ஒருவரின் கேள்வி. ராஜபட்சேவுடன் சேர்ந்து நின்று கொன்ற உங்களுடன் மற்றவர்கள் எப்படி சேர்ந்து நிற்க முடியும்? உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் மான அவமானமெல்லாம் இருக்கவே கூடாது என்று நீங்கள் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
அன்று இனப்படுகொலையைத் தடுக்க நடந்த கடையடைப்பை ஒடுக்க முயல்வீர்கள்… ஒன்றரை லட்சம் பேரின் உடல்கள் புல்டோசரால் தோண்டிப் புதைக்கப்பட்ட பிறகு அவர்களுக்காக இன்று ஒரு கடையடைப்பை நீங்களே நடத்துவீர்கள்…. இப்போது அடைக்காதவர்களைத் தமிழின விரோதிகள் என்பீர்கள்! அப்படியானால், அன்று அவர்களை அடைக்கவிடாமல் தடுத்த நீங்கள் யார்?
உங்கள் அகராதியில் ‘இனப்படுகொலை’ என்கிற வார்த்தையே இருப்பதாகத் தெரியவேயில்லையே! போர்க்குற்றம் – என்கிற வார்த்தையைத் தவிர வசனகர்த்தாவுக்குப் பிடித்த வேறு வார்த்தை எது? உலகே – ‘இனப்படுகொலை’ என்று சொன்னாலும், மனித உரிமைமீறல், போர்க்குற்றம் – என்றுதானே பேசுகிறது கோபாலபுரம்! இலங்கை விரும்பும் வார்த்தையை இந்தியா திணிக்கிறது, இந்தத் திணிப்பை டெசோ ஏற்கிறது – என்பதைத் தவிர வேறென்ன நடக்கிறது? இப்படி மத்திய அரசு கொடுக்கும் அழுத்தங்களை எல்லாம் ஏற்று ஆட்சிக் கட்டிலிலே ஒட்டிக்கொண்டிருக்கும் நீங்கள் எப்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பீர்கள்?
எதை மூடி மறைக்க இன்றுவரை நீங்கள் முயல்கிறீர்களோ, அந்த இனப்படுகொலையை, சேனல் 4 என்கிற ஒரு பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறது. முதல் முதலாக அப்படியொரு ஆதாரம் வெளியானபோது, கண்களைக் கட்டி போராளிகள் சுடப்படும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து – ‘பழைய படம் மாதிரி தெரிகிறது’ என்று தன்னுடைய மேதாவிலாசத்தைப் பதிவு செய்த புகைப்படத் தொழில்நுட்ப முதுநிலை ஆராய்ச்சியாளராயிற்றே உங்கள் தலைவர்! அந்தப் படத்தைப் பற்றி கோதபாய ராஜபட்சே தெரிவித்த கருத்தும், உங்கள் தலைவர் தெரிவித்த கருத்தும், அவர்கள் இருவரும் புகைப்படக் கலை அறிஞர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியதே… அதை மறந்துவிட்டோமென்று நினைக்கிறீர்களா?
இப்போது, பொதுவேலை நிறுத்தத்துக்கான சுவரொட்டியில் ஒருபுறம் முத்தமிழறிஞரின் படத்தையும், மறுபுறம் சேனல் 4 வெளியிட்ட பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படத்தையும் வெட்கமேயில்லாமல் வெளியிட்டிருக்கிறீர்களே… இதற்கு என்ன அர்த்தம்… முன்பு துப்பியதை இப்போது திருப்பி எடுத்து விழுங்கிவிட்டீர்கள் என்றா! பரவாயில்லை… பாலச்சந்திரன் படத்துடன் தன்படம் போட்டு வியாபாரம் செய்து அரசியல் வியாபாரம் செய்கிற உங்கள் தலைவரை – தமிழினத்தின் தந்தை – என்றோ, ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தின் சந்தை – என்றோ, உங்களுக்குப் பிடித்தமான விதத்தில் கூச்சமேயில்லாமல் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்.. எங்களுக்கு ஆட்சேபனை இல்லை! பிரபாகரன் என்கிற ஓர் உன்னதமான வீரனின் படத்தைப் போட்டு பல்பொடி வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒருவர் அருள்தந்தை என்றே அழைக்கப்பட்டதை நாங்கள் பொருட்படுத்தினோமா என்ன!
நன்றி தமிழக அரசியல்