பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட ஆதாரங்ளை சேனல் 4 வெளியிட்ட நாள் முதலாகவே தமிழகம் கொதிக்கத் தொடங்கியது. இந்த கொதிநிலைக்கு வடிவம் கொடுத்து போராட்டத்தைத் தொடங்கியவர்கள் லயோலா கல்லூரி மாணவர்கள்.
திலீபன், பிரிட்டோ, ஷாஜிபாய், ஆண்டனி, மணிகண்டன், சண்முகப்ரியன், ரமேஷ், லியோ ஸ்டாலின், பால் கென்னட் ஆகிய எட்டுபேர், தொடங்கிய அந்தப் போராட்டம், மயங்கிக் கிடந்த மனசாட்சிகளை உலுக்கியது. லயோலா கல்லூரி மாணவர்களின் அந்தப் போராட்டம், மத்திய அரசை உலுக்கியதோ இல்லையோ, தமிழகத்தில் டெசோ நாடகக் கம்பெனி வைத்து நடத்தும், டெசோ குழுவினரை அச்சுறுத்தியது. ஈழத்தமிழர் பிரச்சினைகளைக் கையில் எடுத்து அதன் மூலமாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து, இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கலாம் என்று, பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த டெசோ நாடகக் குழுவினர், மாணவர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெற்றால், தங்கள் நாடகக் குழுவை இழுத்து மூட வேண்டும் என்று கலக்கமடைந்தனர்.
டெசோ நாடகக்குழுவின் முன்னணி நடிகர்களான தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த மாணவர்ளைச் சந்தித்து போராட்டத்தைக் குலைக்கும் அத்தனை வேலைகளிலும் ஈடுபட்டனர். சிறிது காலம், சிபிஐ விசாரணை, கனிமொழியோடு மோதல் என்று தன் நாடகக்குழுவிலிருந்து விலகியிருந்த போலிப் பாதிரி ஜெகத்கஸ்பர் களத்தில் இறங்கினார். சுப.வீரபாண்டியன், ஜெகத்.கஸ்பர், தொல்.திருமாவளவன், கனிமொழி ஆகியோரின் திட்டமிட்ட சதியால் முழு வீச்சோடு தொடங்கிய போராட்டம், அவசர கதியில் முடிக்கப்பட்டது.
டெசோ நாடகக் குழுவினர் மாணவர் போராட்டத்தை முடக்கி விட்டதாக இறுமாப்பில் இருந்தார்கள். இனி ஈழப் பிரச்சினை நமக்கு மட்டுமே உரியது என்று ஊடகங்களில் வாய்கிழிய பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் அக்கினிக் குஞ்சு என்பதை மிகத் தாமதமாகத்தான் உணர்ந்தார்கள் டெசோ நாடகக் குழுவினர். அந்த மாணவர்கள் தொடங்கி வைத்த பொறி, காட்டை வெந்து தணிய வைக்கும் வல்லமை படைத்தது என்பது தமிழகம் முழுக்க மாணவர்களிடையே பரவிய போராட்டங்களின் மூலம் உலகுக்கு உணர்த்தப்பட்டது.
தமிழகமெங்கும் மாணவ சமுதாயம் கொதித்தெழுந்தது. உண்ணாவிரதம், மறியல், என்று பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. இந்த எழுச்சி, 2008 இறுதியில் “போரை நிறுத்து” என்ற ஒற்றைக் கோரிக்கையோடு எழுந்த போராட்டங்களை ஒத்திருந்தது. ஜனவரியில் முத்துக்குமார் ஏற்படுத்திய எழுச்சிக்கு நிகரானதாக இருந்தது. 2008-2009 போராட்டங்களைப் போல அல்லாமல், தற்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் தெளிவான கோரிக்கை இல்லாமல் ஒரு குழப்ப நிலையில் இருந்தது. அமெரிக்கா முன்னெடுக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், அந்தத் தீர்மானம், இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதால், இந்தியாவே ஒரு புதிய தீர்மானத்தை எடுத்து வர வேண்டும் என்று ஒரு தரப்பும் கருத்துக்களை முன்வைக்க, மாணவ சமுதாயம் சற்றே குழம்பியிருந்தது என்னவோ உண்மை. நாளடைவில், போர்க்குற்றத்துக்காக இலங்கையை தண்டிக்க வேண்டும் என்று அந்த கோரிக்கைகள் தெளிவான திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கின.
படிப்பினைகள் மற்றும் சமாதானக் குழு (Lessons Learnt and Reconciliation Commission) நடத்திய விசாரணை அறிக்கையையும், அதன் பரிந்துரைகளையும் அமல்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானம், இலங்கை அரசுக்கு உதவி செய்யவே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கொலைகாரனையே நீ கொலை செய்தாயா என்று விசாரணை நடத்தச் சொல்வதற்கு ஒப்பானதே இது. இலங்கை மீதான போர்க்குற்றங்களை ஒரு பாரபட்சமற்ற சர்வதேச சமூகம் விசாரிக்க வேண்டும், அந்தத் தீர்மானத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்பதே சரியான கோரிக்கையாக இருக்க முடியும். தற்போது இந்த கோரிக்கைகள் வலுப்பெற்று ஒரு திசையை நோக்கி பயணிக்கின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டங்களை சீர்குலைக்க திமுக தலைவரும், அவரது டெசொ நாடகக் குழுவினரும், முழு வீச்சில் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். மாணவர்கள் தெளிவாக, அரசியல் தலைவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொண்டாலும், இந்த மாணவர் எழுச்சியை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள்.
2008 மற்றும் 2009ல் நடந்த போராட்டங்களை பின்னுக்குத் தள்ளி, முடக்கி சீர்குலைத்த சதித்திட்டங்களில், டெல்லியில் உள்ள மலையாளி மற்றும் வட இந்திய அதிகாரிகளின் பங்கு மிகப் பெரியது. எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன் என்று அந்த அதிகாரிகளின் பட்டியல் மிக நீண்டது.
தற்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தையும் சீர்குலைப்பதற்கென்று, மத்திய உளவுத்துறை மிகத் தீவிரமாக களமிறங்கியிருக்கிறது. இப்போராட்டத்தை ஒவ்வொரு தளத்திலும், முடக்கவும், சீர்குலைக்கவும் மத்திய உளவுத்துறை முயற்சிகள் எடுத்து வருகிறது. மாணவர் போராட்டம் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்ததும், தலைமைச் செயலகத்தில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரி ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.
அந்த அறிக்கையில், மாணவர் போராட்டங்களை தொடர விடுவது, அரசுக்கு நல்லதல்ல, தீவிரமான சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், இந்தப் போராட்டத்தை தொடர விடாமல் உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று அறிக்கை அளித்துள்ளார். மேலும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தால் அகில இந்திய அளவில் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்றும், தமிழக கல்லூரி மாணவர்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டால் கூட, அது ஈழத் தமிழ் மக்களுக்காக நடந்த தற்கொலை என்று திரித்து விடுவார்கள், இது போலத் தொடர் தற்கொலைகள் நடக்க பெரும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அது தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்றும் அறிக்கை அளித்தார்.
ஜெயலலிதா அரசை தொடர்ந்து முட்டாள் அரசு என்று விமர்சித்து வருவதற்கு இதுதான் காரணம். அரசியல்வாதிகளை விட, கட்சிக் காரர்களை விட, ஜெயலலிதா அதிகாரிகளையே நம்புவார். படித்த அதிகாரிகளின் வஞ்சகத்தை சரியாக உணராதவர் ஜெயலலிதா. இதன் காரணமாகவே, தமிழக உளவுத்துறை ஐஜி, அம்ரேஷ் பூஜாரியின் அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா. பூஜாரியின் அறிக்கையை ஏற்று, உடனடியாக கல்லூரிகளை மூட உத்தரவிட்டார். முதலில் கலை அறிவியல் கல்லூரிகள், அதைத் தொடர்ந்து சட்டக் கல்லூரிகள் என்றும் இறுதியாக பொறியியல் கல்லூரிகள் என்றும் அனைத்துக் கல்லூரிகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டார்.
இது வரை நடந்துள்ள மாணவர்களின் போராட்டம் வன்முறைச் சம்பவங்கள் இல்லாமல்தான் நடைபெற்றுள்ளது. பெரும்பாலான மாணவர்கள், உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி போன்ற போராட்டங்களையே கையாண்டார்கள். இது வரை நடந்த மாணவர் போராட்டங்களில் எந்த இடத்திலும் ஜெயலலிதா விமர்சிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் நடைபெறும் இந்தப் போராட்டங்களின் வீச்சால் பாதிக்கப்படப் போவது நிச்சயம் காங்கிரஸ் மற்றும் திமுக மட்டுமே. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை, மிகப்பெரிய துரோகிகளாகவே பார்த்து வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் வலுப்பெற வலுப்பெற, இது அந்த இரு கட்சிகளின் மீது கடும் வெறுப்பையும் கோபத்தையும் உண்டு பண்ணும். தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக காங்கிரஸ் மீதான இந்த வெறுப்பும் கோபமும், நிச்சயமாக அதிமுகவுக்கு சாதகமாகவே அமையும். சட்டம் ஒழுங்கு சீர்கெடாத வகையில் இந்த போராட்டத்தை தன்வசப்படுத்தி, தனக்கு ஆதாயம் தரும் வகையில் ஜெயலலிதா மாற்றியிருக்க வேண்டும். ட்விட்டரிலும், முகநூலிலும் This is atrocious… Students should only read and not agitate…. Tamil Nadu should not dictate Indian foreign policy என்றெல்லாம் கருத்து கூறும் கருத்து கந்தசாமிகள், பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வெற்றி தேடித் தரப்போவதில்லை. மாறாக, இன்று சிங்கள அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்று பரவலாக உருவாகியிருக்கும் கருத்தாக்கத்தை, வாக்குகளாக மாற்ற ஜெயலலிதா அனைத்து முயற்சிகளையும் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதிகாரிகளை நம்பிய ஜெயலலிதா, ஒரு அற்புதமான வாய்ப்பை கோட்டை விட்டார்.
தமிழக அரசின் இப்படிப்பட்ட தவறான முடிவுக்கு காரணமான அந்த காவல்துறை தமிழக அரசின் உளவுத்துறை ஐ.ஜி அம்ரேஷ் பூஜாரி. யார் இந்த அம்ரேஷ் பூஜாரி ? ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த பார்ப்பனர். 1991ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். பார்ப்பனியத்தின் உச்சமான அகம்பாவம் முழுவதையும் தன் தலையில் சேர்த்து வைத்துத் திரியும் தலைக்கனம் பிடித்த தறுக்கன்தான் இந்த பூஜாரி.
தலைக்கனம் பிடித்த தறுக்கன்
,ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மத்திய உளவுத்துறையில் இருந்தவர். மீண்டும் மத்திய உளவுத்துறை பணிக்கு செல்ல வேண்டும் என்ற கனவு உள்ளவர். வட இந்திய அதிகாரிகளுக்கே உரிய அத்தனை லாபிகளையும் கற்றுத் தேர்ந்தவர்.
இவர் 2002ம் ஆண்டு முதல் மத்திய உளவுத்துறையில் (Intelligence Bureau) பணி புரிந்தார். அத்துறையில் Chief Immigration Officer மற்றும் Foreign Regional Registration Officerஆக பணியாற்றினார். பின்னாளில், மத்திய உளவுத்துறையின் தென்னிந்திய இணை இயக்குநராகவும் பணியாற்றினார்.
மத்திய உளவுத்துறையில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து, இவரை மாநில உளவுத்துறையின் ஐஜியாக நியமித்தார் ஜெயலலிதா. ஒரு அதிகாரி, தான் பணியாற்றும் அரசுக்கு விசுவாசமாக இருத்தல் வேண்டும். தற்போது மாநில அரசில் பணியாற்றும் பூஜாரி, ஜெயலலிதாவுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால், இவர் மத்திய உளவுத்துறையோடு உள்ள நெருக்கத்தால், மத்திய அரசுக்கு விசுவாசமாகத்தான் இன்று வரை பணியாற்றி வருகிறார்.
ஹ்யுண்டாய் நிறுவனம், கார் உற்பத்தியை சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கியதில் இருந்தே திருட்டுத்தனம்தான். 1996ல் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டது. 1998ல் இந்தத் தொழிற்சாலையின் சான்ட்ரோ கார் சந்தைக்கு வந்தது. இந்தக் கார் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு காருக்கும் திமுக தலைமைக்கு 2 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று அப்போது ஒரு பேச்சு இருந்தது. இந்த ஹ்யுண்டாய் கார் நிறுவனம், இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கையில், உற்பத்தி விலையை விட குறைந்த வகையில் விலை நிர்ணயம் செய்து, இதன் மூலம் பெருமளவில் சுங்கவரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்தது. இணைப்பு. 2008ம் ஆண்டு கணக்குப்படி, ஹ்யுண்டாய் நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டது. ஆனால், ஹ்யுண்டாய் நிறுவனத்துக்கு இருந்த செல்வாக்கு காரணமாக இந்த வரி ஏய்ப்பு விசாரிக்கப்படவேயில்லை.
இந்த ஹ்யுண்டாய் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளில் பெரும்பாலானோர், கொரியர்கள். இந்தியர்களை, அசெம்ப்ளி லைனில் நட், போல்ட் முடுக்குவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் இந்த நிறுவனம், அதிகாரிகள் அளவில் கொரியர்களை மட்டுமே நியமித்திருந்தது. எல்லா நாடுகளிலும், வேலை நிமித்தம் “வொர்க் பர்மிட்டுகள்” எடுக்க அதிக அளவில் பணம் செலுத்த வேண்டும். இந்தியாவிலும், வெளிநாட்டினருக்கு, இது போன்ற விசாக்கள் வழங்கப்படும். இந்த விசாக்கள் இரண்டு வகைப் படும். ஒரு விசா “‘B’ Visa” என்று அழைக்கப்படுகிறது. மற்றொரு விசா ‘E’ Visa” என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க வருபவர்கள், தொழில்நுட்ப நிபுணராக வருபவர்கள், இந்திய தொழிலதிபர்களோடு கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட வருபவர்கள், தொழில் கண்காட்சி நடத்த வருபவர்கள், தொழில் பேச்சுவார்த்தை நடத்த வருபவர்கள், தொழிற்சாலை கட்டுமானத்தை மேற்பார்வை செய்ய வருபவர்கள், போன்றவர்களுக்கு “பி” விசா வழங்கப்படும். இதற்கான கட்டணம் குறைவு. வேலை பார்ப்பதற்காக வருபவர்களுக்கு “ஈ” விசா மட்டுமே வழங்கப்படும். இதற்கு கட்டணம் அதிகம்.
அம்ரேஷ் பூஜாரி, தலைமை இம்மிகிரேஷன் அதிகாரியாக சென்னையில் பணியாற்றியபோது, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியாற்ற வந்த 600க்கும் மேற்பட்ட ஹ்யுண்டாய் கொரிய நாட்டு ஊழியர்களுக்கு, பி விசா வழங்கி, அவர்களை இங்கேயே பணியாற்ற விட்டு, அவர்களுக்கு பெருமளவில் கட்டணத்தை சேமித்துக் கொடுத்தார் அம்ரேஷ் பூஜாரி. இதற்கு கைமாறாக ஒரு பெரும் தொகை அவருக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகையில் அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 கோடி மதிப்பிலான ஒரு வீட்டை பினாமி பெயரில் வாங்கியுள்ளார். அந்த வீட்டின் முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இம்மிக்ரேஷன் ஊழியர்கள் அந்த வீட்டின் newsavukku@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும். உரிய விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்படும். ஹ்யுண்டாய் நிறுவனம், சென்னை மாநகர காவல்துறைக்கு 100 ஹ்யுண்டாய் கார்களை இலவசமாக கொடுத்ததெல்லாம் லஞ்சத்தின் ஒரு பகுதியே.
சென்னை மத்திய உளவுப்பிரிவில் Chief Immigration Officerஆகவும், Foreign Regional Registration Officerஆகவும் பணியாற்றியபோது, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரியோடு அம்ரேஷ் பூஜாரிக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது என்று கூறுகிறார்கள், மத்திய உளவுத்துறை அதிகாரிகள். இலங்கைத் துணைத்தூதரக அதிகாரிகள், தரகு வேலை செய்வதில் எப்படிப்பட்ட சமர்த்தர்கள் என்பதை, தமிழகமே அறியும். அந்தத் தூதரக அதிகாரிகளோடு நெருக்கமாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதை உங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.
தலைமை இம்மிக்ரேஷன் அதிகாரியாக பணியாற்றிய பூஜாரி லஞ்சம் வாங்கும் பாணியே அலாதியானது என்கிறார்கள். சின்ன லெவலில், யாரிடமும் பணம் வாங்க மாட்டார். தனக்குக் கீழே பணிபுரியும் அதிகாரிகளிடம், மிகவும் கண்டிப்பான அதிகாரி போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்வார்.
விமான நிலையத்தைப் பொறுத்தவரை, வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு இம்மிக்ரேஷன் சோதனை என்பது கட்டாயமானது. இது விமான பணியாட்களுக்கும், விமானிகளுக்கும், பயணிகளுக்கும் பொறுந்தும். எந்த விமானமாக இருந்தாலும், அந்த விமானம் கிளம்பும் அரை மணி நேரத்துக்கு முன்னதாக இம்மிக்ரேஷன் சோதனையை முழுமையாக முடித்து விட வேண்டும். விமான ஓட்டிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக இம்மிக்ரேஷன் முடித்து விட வேண்டும் என்பது விதி. ஆனால் நடைமுறையில், இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற இயலாது என்பதால், கடைசி 10 நிமிடங்கள் வரை, பயணிகளையும், விமானிகளையும் அனுமதிப்பார்கள்.
திடீரென்று ஒரு நாள் அதிரடி சோதனை என்று நேரில் வருவார் பூஜாரி. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் என்றால் அந்த விமானத்தின் இம்மிக்ரேஷன் சோதனை முடிந்து விட்டதா என்று சரிபார்ப்பார். கடைசி நிமிடம் வரை இம்மிக்ரேஷன் சோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்த பூஜாரி, அந்த விமானம் கிளம்பக் கூடாது என்று உத்தரவிடுவார். விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் கிளம்பத் தாமதமானால், லட்சக்கணக்கில் தண்டக் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் விமான நிறுவன நிர்வாகிகள், கதறிக் கொண்டு பூஜாரியை அணுகுவார்கள். பூஜாரியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததும், அதிரடி சோதனைகளை கைவிடுவார். இதே போல எந்த விமான நிறுவனம், இவரைக் கவனிக்கத் தவறுகிறதோ, அந்த நிறுவனத்தின் விமானத்தை அதிரடி சோதனைக்கு உள்ளாக்குவார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், மண்டியிட்டு, பணிந்து பூஜாரிக்கு தேவையான பூஜைகளைச் செய்ததும், அவர்களுக்கு வேண்டிய வரத்தை அளிப்பார் அம்ரேஷ்.
பூஜாரி தலைமை இம்மிக்ரேஷன் அதிகாரியாக பணியாற்றியபோது, அவருக்குக் கீழே பணியாற்றியவர்களை வைத்து, இரண்டு சிறப்பு பிரிவுகளை உருவாக்கி வைத்திருந்தார். சிறப்புப் பிரிவுகள் என்றால், அது அலுவல் ரீதியான சிறப்புப் பிரிவுகள் அல்ல. பூஜாரியின் சிறப்புப் பிரிவுகள்.
ஸ்ரீபதி மற்றும் அய்யப்பன் ஆகியோர் ஒரு சிறப்புப் பிரிவு. இந்த அய்யப்பன், சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிக் கொண்டிருந்தவர். மற்றொரு சிறப்புப் பிரிவு, கதிர்வேல் மற்றும் கல்யாணசுந்தரம். இந்த கல்யாண சுந்தரம், தற்போது சென்னை மாநகரக் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில், (Intelligence Services) சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
சென்னைக்கு வரும் வெளிநாட்டவர்கள் அத்தனை பேருக்கும் முழுமையான விசா இருக்கும் என்று சொல்ல இயலாது. சென்னையில் தங்கியிருக்கும் சில வெளிநாட்டவர்களிடம் விசா காலாவதி ஆகியிருக்கும் அல்லது உரிய விசா இல்லாமல் இருக்கும். சிலர், இந்தியாவுக்கே வரமுடியாத அளவுக்கு Deport செய்யப்பட்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்படியாவது இந்தியாவுக்குள் நுழைந்து, சென்னையில் திருட்டுத்தனமாக தங்கியிருப்பார்கள். இது போன்றவர்களின் முகவரிகளைத் தேடியெடுத்து, அவர்களைக் கண்டுபிடிப்பதே இந்த இரண்டு சிறப்புப் படைகளின் வேலை. இப்படி கண்டுபிடிக்கப்படுபவர்களை, அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு அறிக்கையோடு ஒப்படைப்பதுதான், இம்மிக்ரேஷன் அதிகாரிகளின் வேலை. காவல்நிலையத்தில் அவர்கள் மீது, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பார்கள்.
ஆனால் இந்த சட்டபூர்வமான வழிமுறையை பூஜாரியின் சிறப்புப் படை பின்பற்றாது. இருப்பதிலேயே பெரும் பணத்தோடு, சட்டவிரோதமாக சென்னையில் தங்கியிருக்கும் பணக்கார வெளிநாட்டினரைக் கண்டு பிடித்து, நேராக இம்மிக்ரேஷன் அலுவலகத்துக்கு தூக்கி வருவார்கள். வசமாக ஒரு தொகையை வசூல் செய்த பிறகு, எந்த வழக்கும் இல்லாமல் விட்டு விடுவார்கள். இதுதான் பூஜாரியின் பிரத்யேகமான வசூல் முறை….
இப்படிப்பட்ட வசூல் ராஜா ஐபிஎஸ்ஸை தமிழகத்திலேயே மிகவும் முக்கியமான உளவுத்துறை ஐஜியாக நியமித்திருந்தால், இவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
பூஜாரியின் அகம்பாவத்துக்கும், ஆணவத்துக்கும் மத்திய உளவுத்துறையில் ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறுகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இரவு முழுவதும் வெளிநாட்டு விமானங்கள் கிளம்பியபடி இருக்கும். ஒவ்வொரு ஷிப்டுக்கும் 6 இம்மிக்ரேஷன் அதிகாரிகள் பணியில் இருக்க வேண்டும். மூன்று உதவி இம்மிக்ரேஷன் அதிகாரிகள், இரண்டு இம்மிக்ரேஷன் அதிகாரிகள் மற்றும் ஒரு துணை தலைமை இம்மிக்ரேஷன் அதிகாரி ஆகியோர் எப்போதும் பணியில் இருக்க வேண்டும். இரவு முழுவதும் விழிக்க வேண்டும் என்பதால், இரண்டு அதிகாரிகள் பல நேரங்களில் சுழற்சி முறையில் தூங்கி விட்டு மற்றவர்களை பார்த்துக்கொள்ளச் சொல்வார்கள். இது விமான நிலைய இம்மிக்ரேஷனில் வழக்கமான ஒன்று.
ஒரு நாள் பூஜாரி நள்ளிரவில் திடீரென்று சோதனைக்கு வருகிறார். அப்போது பணியில் இருக்க வேண்டிய இருவர் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார். நேராக அந்த நபர் உறங்கிய அறைக்குச் சென்று, போர்வையோடு உறங்கிக் கொண்டிருந்த அதிகாரியை தன் ஷு காலாலேயே தாறுமாறாக மிதித்துள்ளார். மிதி வாங்கிய நபரோ, சஸ்பெண்ட் செய்யாமல் மிதியோடு விட்டாரோ என்று துடைத்துக் கொண்டு சென்றுள்ளார். ஒரு ஊழியர் இது போன்ற தவறுகளில் ஈடுபடுகையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் ஒரு அதிகாரி செய்ய வேண்டியது. அதை விடுத்து விட்டு ரவுடியைப் போல நடந்து கொள்வது, அந்த நபரின் இழிவான மனநிலையையே காட்டுகிறது.
இப்படிப்பட்டவர்தான் அம்ரேஷ் பூஜாரி. பூஜாரி போன்ற அதிகாரிகளை நம்பும் ஜெயலலிதாவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. சில காலம் முன்பு வரை, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியின் பரிந்துரையின் அடிப்படையிலேயே மற்றொரு ஒரிஸ்ஸா அதிகாரியான அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டார். தேபேந்திரநாத் சாரங்கி போன்ற திருடன் யாரைப் பரிந்துரைப்பார் ? மற்றொரு திருடனைத்தானே ? தேபேந்திரநாத் சாரங்கியை தலைமைச் செயலகத்தை விட்டு விரட்டியடித்த ஜெயலலிதா, அவர் பரிந்துரைத்த நபரையும் அல்லவா விரட்டியிருக்க வேண்டும் ?
தற்போது உளவுத்துறையின் டிஜிபியாக உள்ள ராமானுஜம் போன்ற உளவு வேலையில் சிறந்த அதிகாரியை தமிழகம் பார்த்தது இல்லை. அவர் எப்படி இது போன்ற மோசமான தவறுகளை அனுமதிக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. எல்லோரையும் நம்பி ஏமாறும் ஜெயலலிதாவுக்கு, அம்ரேஷ் பூஜாரி போன்ற திருடர்களைப் பற்றி விளக்கிச் சொல்லி, உரிய அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு ராமானுஜத்திற்கு நிச்சயமாக இருக்கிறது.
புத்த பிக்குகள் மீது நடந்த தாக்குதலின் பின்னணியிலும் மத்திய உளவுத்துறையே இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. புத்த பிக்குகள் வருகை தரும் விபரத்தை உணர்ச்சி வசப்படக்கூடிய தமிழ் அமைப்புகளிடம் தெரிவித்து, அந்த தாக்குதல் நடப்பதற்கு ஏதுவான ஒரு சூழலை உருவாக்கி, இதனால் அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியும், மாணவர் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வரும் ஊடகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தவும் மத்திய உளவுத்துறை தொடர்ந்து கையாண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமானுஜத்தின் அனுபவத்துக்கு, இது போன்ற சூழல்களை எப்படிக் கையாள வேண்டும் என்று நன்கு தெரியும். உரிய முறையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புவோம்.
1965க்குப் பிறகு, தமிழகத்தில் மாணவ சமுதாயம் வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்திருக்கிறது. கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாலும், போராட்டம் ஓயாமல் தொடர்ந்த வண்ணம் இருப்பது மிக மிக மகிழ்ச்சிகரமான ஒரு விஷயம். இந்தப் போராட்டம் சரியான திசையில் இல்லை…. மாணவர்களுக்கு போதுமான அரசியல் அறிவு இல்லை என்றெல்லாம் எழும் விமர்சனங்கள் புறந்தள்ளப்பட வேண்டியன. தாமதமாகவேனும் கிளர்ந்தெழுந்துள்ள மாணவச் செல்வங்கள், ஒவ்வொரு அரசியல் கட்சியையும் வெட்கப்பட வைத்துள்ளனர். எருமை மாட்டின் மீது மழை பெய்தது போலவே எப்போதும் இருக்கும் கருணாநிதியையே, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற வைத்திருக்கும் இந்த மாணவச் செல்வங்களின் போராட்டம் மகத்தானது. .
அக்கினிக் குஞ்சான இந்த மாணவர்களின் போராட்டங்களால் வெந்து தணியட்டும் காடு….