“ஆர் யூ மிஸ் அகிலா.. ?”
“ஆமாம் சார் நான் அகிலாதான் பேசறேன்.. “
“நான் சன் டிவிலேர்ந்து வெற்றி வேந்தன் பேசறேன். இப்போ சன் டிவில ரெக்ரூட்மென்ட் நடக்குது. நான் ராஜ் டிவியில உங்க நியூசை ரெகுலரா வாட்ச் பண்ணிட்டு இருக்கேன். உங்க ரெஸ்யூமை இமெயில் பண்ணுங்க.”
சட்டென்று ஒரு நிமிடம் அகிலாவுக்கு எதுவுமே புரியவில்லை. தமிழ் இலக்கியம் படித்து விட்டு, என்ன செய்வது என்று யோசித்து, யோசித்து, செய்தி வாசிப்பாளராகச் சென்றால் என்ன என்று மீடியாவில் கால் பதித்தவள்தான் அகிலா. நாட்கள்தான் எப்படி உருண்டோடி விட்டன !! எந்த ஒரு உட்கட்டமைப்பு வசதியும் இல்லாமல் எதற்காக ஆரம்பித்தோம் என்பதே தெரியாமல் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு சேனலில் செய்தி வாசிப்பாளராகத்தான் ஊடகத்தில் கால் பதித்தாள். சாதாரண நடுத்தர வர்க்கம். அந்த மாதாந்திர சம்பளத்தை நம்பித்தான் குடும்பமே இருக்கிறது. அந்த உருப்படாத சேனலில் பணியாற்றியபோதே, ராஜ் டிவியில் கிடைத்த வேலைதான் அவளைத் தான் ஒரு செய்தி வாசிப்பாளர் என்றே உணர வைத்தது. இரவு நேரங்களில் மட்டுமல்லாது பகல் நேரத்திலும், ஏசு அழைக்கும் ஜெபப் பிரசங்கங்களையும், அதிருஷ்டக் கல் வியாபாரிகளையும் மட்டுமே நம்பி நடக்கும் சேனல்களில் ஒளிபரப்பாகும் செய்திகளை யார்தான் பார்ப்பார்கள். கஷ்டப்பட்டு நாம் வாசிக்கும் செய்திகளை யாருமே பார்ப்பதில்லை என்ற வருத்தம் அகிலாவுக்கு இருக்கத்தான் செய்தது.
யாருமே பார்க்காத செய்திகளை வாசித்துக் கொண்டிருந்து, யாரோ சிலர் பார்க்கும் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்த அகிலாவுக்கு, எல்லோரும் பார்க்கும் செய்திகளை வாசிக்கும் வேலை என்று அழைத்தால் எப்படி இருக்கும்… ? சட்டென்ற தலைகால் புரியவில்லைதான்… “உடனே அனுப்பறேன் சார்“ என்று கூறி விட்டு, இன்னும் அரை மணி நேரத்தில் உள்ள புல்லட்டினைக் கூட மறந்து விட்டு, அவசர அவசரமாக ரெஸ்யூமை கம்ப்யூட்டரில் தேடி எடுத்து சரிபார்த்து உடனடியாக சன் டிவி மெயிலுக்கு அனுப்பினாள். அனுப்பி விட்டாலும், கவனம் டெலிப்ராம்ப்டரில் செல்லாமல் எப்போது செல்பேசி ஒலிக்கும் என்பதிலேயே இருந்தது.
மறுநாளே செல்பேசி ஒலிக்கத்தான் செய்தது. “மேடம் நாங்க சன் டிவி ஹெச் ஆர்லேர்ந்து பேசறோம்… நாளைக்கு காலையில 10 மணிக்கு உங்களுக்கு இன்டர்வ்யூ மேடம். வந்துடுங்க…“
பிரம்மாண்டமான அந்தக் கட்டிடம் பயமுறுத்தியது. செக்யூரிட்டி க்ளியரன்ஸ் போன்றவைகள் முடித்து ரிசெப்ஷனில் இருந்த அந்த லிப்ஸ்டிக் பூசிய பெண்ணிடம் இன்டர்வ்யூ என்று சொன்னதும், “வெயிட் பண்ணுங்க” என்று எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அருகில் இருந்த சோபாவில் கைகாட்டி அமரச் சொன்னாள்.
சற்று நேரத்தில் வெள்ளைச் சீருடை அணிந்த ஒரு சிப்பந்தி மேடம் ”உள்ளே போங்க” என்றார்.
ஏற்கனவே 3 ஆண்டுகள் வேலை பார்த்த அனுபவம் இருந்தாலும் சற்று பதட்டமாகத்தான் இருந்தது.
”உக்காரும்மா…”
அவர்தான் சன் டிவியின் செய்தி ஆசிரியர். சன் டிவி ராஜா என்ற பெயரைக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. ராஜ் டிவியில் இருந்து வரும்போதே அங்கயா போற… அந்த ஆளு மோசமானவன்னு சொன்னாங்களே… பொம்பளை விஷயத்துல ரொம்ப மோசமாச்சே என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
“எவ்வளவு நாளா ராஜ் டிவியில இருக்கம்மா ?”
“சார் ஒன்றரை வருஷமா இருக்கேன் சார்.. “
“வெற்றி நல்லா நியூஸ் படிக்கறேன்னு சொன்னான்… பட் ராஜ் டிவி வேற.. சன் வேற… சன் ஈஸ் ஆல்வேஸ் நம்பர் ஒன். அங்க வேலை பாக்கற மாதிரி கேஷுவலா வேலை பாக்க முடியாது… சின்ன தப்பைக் கூட பொறுத்துக்க மாட்டோம்“
“நான் கரெக்டா பண்ணுவேன் சார்.. ராஜ் டிவியில கூட ஒரு கம்ப்ளெயின்ட்ஸ் கிடையாது சார்.“
“என்ன படிச்சிருக்கீங்க. “
“பி.ஏ தமிழ் சார். “
“ம்ம்.. குட்.. அங்க ரிசைன் பண்ணிட்டீங்களா ? “
“இல்ல சார்.. ஆர்டர் வாங்கிட்டு ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன் சார்.“
“இந்த சேனல்தான் தமிழ்லயே நம்பர் ஒன். இங்க வேலை செய்யறது உங்களுக்குத்தான் பெருமை.. அதை மனசுல வச்சுக்கங்க. பி.ஏவைப் பாத்து ஆர்டர் வாங்கிக்கங்க. “
“தேங்க்யூ சோ மச் சார்…“
“ம். ஓ.கே. “
வேலை புதிய அனுபவமாகத்தான் இருந்தது. நியூஸ் ரீடர் மற்றும் ப்ரொட்யூசர் என்று அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கிடைத்தது. தொடக்க காலத்தில் இருந்த பதற்றம் நாளாக நாளாக சரியாகி விட்டது.
மூன்று மாதங்கள் போனதே தெரியவில்லை. ஆறு மாதம் ஒழுங்காக வேலைசெய்தால்தான் கன்பர்மேஷன். எப்படியாவது கன்பர்மேஷன் வாங்கி விட வேண்டும் என்ற தீர்மானத்தில் எந்த வேலை கொடுத்தாலும்
ராஜா சக பணியாளர்களைத் திட்டுவதைப் பார்த்தாலே வயிறு கலங்கும். இப்படி மரியாதை இல்லாமல் திட்டுகிறாரே என்று சற்று எரிச்சலாக இருந்தாலும், திட்டு வாங்கிய அத்தனை பேரும் வாயைத் திறக்காமல் அமைதியாக இருந்தது, எடிட்டர் எத்தனை சக்தி வாய்ந்தவர் என்று புரிய வைத்தது. அந்த மூன்று மாதங்களில் நன்றாக பழகியிருந்த சுகந்தியிடம் நேரடியாகவே கேட்டேன்.
“ஏம்பா… எடிட்டர் எல்லாரையும் இப்படித் திட்றாரே.. யாருமே எதுத்துப் பேச மாட்டாங்களா ? “
“எதுத்தப் பேசிட்டு…. அடுத்து எங்கப் போவ… நடக்கறது இவனுங்க கவர்மென்ட் தெரியும்ல.. இவனுங்களப் பகைச்சுக்கிட்டு எங்கயும் போயி வேலை பாக்க முடியாது. அப்புறம் என்ன பண்ணுவ ?“
“என்ன சொல்ற.. ஒருத்தர் கூடவா பேச மாட்டாங்க…“
“எப்படி பேச முடியும்.. ? இவன் சேர்மேன் கிட்ட நேரடியா பேசுவான்.. அந்த ஆளுக்குத் தெரிஞ்சா அன்னைக்கே சீட்டைக் கிழிச்சுடுவான். இவன் சேர்மேனுக்கு ரொம்ப க்ளோஸ்.“
“என்ன ரகசியம் பேசறீங்க… நானும் தெரிஞ்சுக்கலாமா“ என்று கேட்டபடியே வெற்றி வேந்தன் வந்தான்.
“ரகசியம்லாம் ஒண்ணும் இல்ல சார்“
“அப்புறம்… அகிலா… ஜாப் எப்படி போயிட்டிருக்கு… செட் ஆயிடுச்சா.. “
“நீங்கதானே சார் ஷெட்யூலே போட்றீங்க… உங்களுக்குத் தெரியாதா“
“தெரியும் தெரியும்… பட்… நீங்க என்ன ஃபீல் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கனும்ல….“
அவன் பார்வை என் மார்பின் மீது படர்ந்தது. சட்டென்று எழுந்தேன்.
சட்டென்று சங்கடப்பட்டவன், “நீங்க கன்ட்டின்யூ பண்ணுங்க.. எனக்கு வேலை இருக்கு“ என்று நகர்ந்தான்.
“சரியான ஜொள்ளுபா இவன்… இவன்கிட்ட ஜாக்ரதையா இரு… கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம மாரப்பாத்துத்தான் பேசுவான்… பேப்பர் குடுக்கும்போது கையப் புடிப்பான்…“
“சப்புனு அறைய வேண்டியதுதான.. “ என்றாள் அகிலா..
“என்ன பேசற… இவன் யாருன்னு தெரியுமா தெரியாதா ?“
“இவந்தான் என்ன ஃபோன் பண்ணி இன்டர்வ்யூவுக்குக் கூப்பிட்டான். நமக்கெல்லாம் ஷெட்யூல் போட்றவன்“
“அது மட்டும் இல்ல.. இவன்தான் எடிட்டருக்கு ஆள் புடிச்சு குடுக்கறவன். “
“ஆள் புடிச்சுன்னா…“
“உனக்கு ஒண்ணும் புரியாது… எடிட்டர் எந்தப் பொண்ணு மேல கண்ணு வக்கிறாரோ, அந்தப் பொண்ணை வழிக்கு கொண்டு வந்து எடிட்டர் மடி மேல விழ வக்கிற வரைக்கும் விட மாட்டான்.“
“நம்பவே முடியல.. இப்படில்லாமா பண்ணுவாங்க.. “
“இதை விட ஏராளமான கதைங்க இருக்கு… உனக்கு இவனுங்களப் பத்தி தெரியாது. ரெண்டும் மோசமான பொறுக்கிங்க“
“என்கிட்ட அந்த மாதிரி இது வரை நடந்துக்கல.. ஆனா நம்பவே முடியல.. “
“ரொம்ப நாள் சந்தோஷமா இருந்துடாத… உன் பக்கம் அவனுங்க பார்வை எப்போ திரும்புதுன்னு தெரியல“ என்றாள் சுகந்தி.
சுகந்தி சொன்னது திகிலை ஏற்படுத்தியது.
ஒரே வாரத்தில் என் பயம் உண்மையாகியது. “மேடம் எடிட்டர் கூப்ட்றார்“ என்ற குரல் கேட்டதும் பயத்தோடே எழுந்து சென்றேன். உள்ளே செல்லும் முன்பாகவே உடையை அனிச்சையாக சரி செய்து கொண்டேன். ஆண்கள் பாத்ரூமில் நுழைவது போன்ற படபடப்பு ஏற்பட்டது.
“வாம்மா… உக்காரு. எப்படி போகுது வேலையெல்லாம்… ?“
“நல்லாப் போகுது சார்.“
“வீடு எங்க உனக்கு… ? அரும்பாக்கம் சார். மேரேஜ் ஆயிடுச்சா… ?“
“டைவோர்ஸி சார்.. “
“என்ன ஆச்சு….“
“அத மறக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் சார்… கேக்காதீங்க.. “
“ஓ.கே… ஓ.கே.. கொழந்தைங்க இருக்கா…“
“ஒரு பையன் சார்…. ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்ட் படிக்கறான் சார்.. “
“பையன யார் பாத்துக்கறா ? “
“அம்மா பாத்துக்கறாங்க சார்.. “
“அம்மா வேலை பாக்கறாங்களா… ? “
“இல்ல சார்.. வீட்லதான் இருக்காங்க…“
“நீங்க ஒருத்தர்தான் எர்னிங்கா ? “
“ஆமாம் சார்…“
“நல்லா வேலை பாருங்க. சீக்கிரம் கன்ஃபர்மேஷன் போட்டுட்றேன். தென் சேலரி இன்க்ரீஸ் ஆகும். எந்த ஹெல்ப்னாலும் என்கிட்ட கேளுங்க. போன் பண்ணுங்க… என் போன் நம்பர் உங்ககிட்ட இருக்கா.. “
“இல்ல சார்“
“எழுதிக்கங்க“ என்று அவர் போன் நம்பரைக் கொடுத்தார்.
“எந்த நேரம் வேணாலும் போன் பண்ணுங்க. தயங்க வேணாம்“
“ஓகே சார்.. “
“ஏதாவது டவுட்னா என்கிட்ட கேளுங்க.. “
“சரி சார்…“
“ஒரு வார்த்தைக்கு மேல பேச மாட்டீங்களா… ? “
“அப்டில்லாம் இல்ல சார்“
“சரி போயிட்டு வாங்க“
ஏதோ தவறு நடக்கிறது என்பது மட்டும் அவளுக்கு நன்றாக உறைத்தது. ‘ச்சே அப்படியெல்லாம் இருக்காது… அவர் சாதாரணமா ஒரு அக்கறையில கூட கேட்ருக்கலாம். நம்பதான் எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோடவே பாக்கறோம்’
அன்று இரவே எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார். “உன் நிலைமை இவ்வளவு கஷ்டமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. உனக்கு எது வேண்டுமானாலும் என்னிடம் கேள். தயக்கப்படாதே. உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்“ என்று தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார். எனக்கு பதில் எதுவும் அனுப்பத் தோன்றவில்லை.
அந்த வாரத்தில் இருந்த வேலைப் பளுவில் எடிட்டரைப் பற்றிய சிந்தனை மறைந்திருந்தது. புதிதாக தொடங்கப்பட்ட புதிய தலைமுறை சேனல், எங்கள் சேனலுக்குள் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. அது வரை எந்த ரிப்போர்டரின் முகத்தையும் ஒரு ஃப்ரேமில் கூட காட்டாத எங்கள் சேனல், ரிப்போர்டர்களை நேரலை கொடுக்க வைத்தது. பரபரப்புச் செய்திகளை உடனடியாக டிக்கரில் போட வேண்டும் என்றார்கள்.
நேராக என் சீட்டுக்கே வந்த ராஜா, அகிலா, சீக்கிரம் தமிழ் டைப் அடிக்க கத்துக்கம்மா.. ஃப்ளாஷ் நியூஸெல்லாம் நீதான் கொடுக்கணும்“ என்று என்னிடம் புதிய பொறுப்பையும் ஒப்படைத்தார். ஒரே வாரத்தில் தமிழ் டைப் அடிக்கக் கற்றுக் கொண்டேன்.
புதிய தலைமுறைச் சேனல் ஏற்கனவே டென்ஷன் பேர்விழியான எடிட்டர் ராஜாவை மேலும் டென்ஷன் ஏற்றியிருந்தது. எப்போதும் புதிய தலைமுறை சேனலையே பார்த்து பார்த்து தினந்தோறும் பல்வேறு மாற்றங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நாள், அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்தது என்று புதிய தலைமுறையில் ஃப்ளாஷ் ஓடியது. 15 நிமிடங்களில் நேரலையில் புதிய தலைமுறை செய்தியாளர் பேசினார்.
வெளியே வந்த எடிட்டர் “மவுன்ட் ரோட்ல எந்த யூனிட் இருக்கு.“ “சிவராமன் அறிவாலயத்துல இருக்கார் சார். “
“உடனே ஜெமினி ப்ரிட்ஜ்க்கு யூனிட்டோட போகச் சொல்லு. என்ன ஆச்சுன்னு உடனே எனக்கு தகவல் சொல்லுங்க“
ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ரிப்போர்டரால் போக்குவரத்து நெருக்கடியால் அந்த இடத்துக்கு போக முடியவில்லை.
மாலை ஐந்து மணிக்கு சிவராமன் அலுவலகம் வந்தார். அவர் வந்ததை கேபினுக்குள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராஜா வெளியே வந்தார்.
“புதிய தலைமுறையில 10 நிமிஷத்துல லைவ் பண்றான்.. நீ என்னடா புடுங்கிட்டா இருந்த… போக வேண்டியதுதானே… அறிவாலயத்துலேர்ந்து எவ்வளவு தூரம்டா ஜெமினி…?“
“சார்… ட்ராஃபிக்….“
“என்னடா ட்ராஃபிக்…“
அவர் போட்ட சத்தத்தில் மொத்த அலுவலகமும் அமைதியாகி அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. சிவராமன் காதலிக்கும் பெண், அந்த ஹாலிலேயே இருந்தாள். தலையைக் குனிந்த சிவராமனின் கண்கள், அவள் பார்க்கிறாளே என்று அவமானத்தில் அவளை நோக்கிச் சென்றது. அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்றதும் இன்னும் கூனிக்குறுகினான்.
சிவராமன் அவளைப் பார்த்ததை பார்த்த ராஜா இன்னும் சத்தத்தை அதிகப்படுத்தினார்.
“உன்னை எல்லாம் வெத்தலை பாக்கு வச்சா வேலைக்கு கூப்டாங்க..? எங்க இருந்துயா வர்றீங்க..? அவனால போக முடிஞ்சது உன்னால ஏண்டா போக முடியல… ? “
“சார் விபத்து நடந்தப்போ அவங்க யூனிட் அந்த இடம் வழியா போயிக்கிட்டு இருந்துச்சு சார்.. “
“எதுத்தாடா பேசற… போயி அவன் மூத்தரத்த குடிடா… நொண்டிச் சாக்கு சொல்லிக்கிட்டு இருக்க… உன்னை எல்லாம் மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு ஊருக்கே பேக் பண்ணி அனுப்பிடுவேன்.. பார்க்கறியா..? இதோட நீ எந்த டி.வி.லயும் வேல பாக்க முடியாது.. அப்பிடியே பொடி நடையா ஊருக்கு பொட்டிய கட்ட வேண்டியது தான்..“
அவன் கூனிக்குறுகிப் போனான். கண்களில் கண்ணீர் தளும்பியது. காதலிக்கும் பெண்ணின் முன்னால் அந்த அவமானத்தை தாங்க முடியாமல் நெளிந்தான்.
அதிர்ந்து போனேன்… ‘இப்படிப் பேசுகிறானே…. என்ன மனிதன் இவன் ?’
அன்று மாலை அந்த மாதத்துக்கான நியூஸ் ரீடிங் ஷெட்யூல் வந்தது. எனக்கு அந்த மாதம் முழுவதும் மார்னிங் ஷிப்ட். ஏற்கனவே இரண்டு நாட்கள் மட்டும் மார்னிங் ஷிப்டில் நியூஸ் வாசித்திருக்கிறேன். மார்னிங் ஷிப்டுக்கு இன்னொரு பெயர் சித்திரவதை.
காலை 6 மணிக்கு முதல் நியூஸ் லைவ் புல்லட்டின். அன்று இரவு முழுக்க, மாநிலம் முழுவதும் உள்ள செய்தியாளர்கள் எடுத்த இரவுச் செய்திகளை தொகுத்துப் படிக்க வேண்டும். நைட் ஷிப்டில் உள்ளவர்கள் செய்தியை தொகுத்து வைத்திருப்பார்கள். 5.30க்கெல்லாம் மேக்கப் போட்டுக் கொண்டு தயாராக இருக்க வேண்டும்.
அந்த இரண்டு நாட்களும், தாமதமில்லாமல் வரவேண்டுமே என்று, காலை 3 மணிக்கு எழுந்து 4 மணிக்கெல்லாம் நைட் ஷிப்ட் பஸ்ஸைப் பிடித்தால்தான் 5.15க்கு ஆபிசுக்கு வர முடியும். இரண்டு நாட்களுக்கே எனக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது.
கிருத்திகா காந்தி என்பவர் நியூஸ் ப்ரொட்யூசராக இருந்தார். அவர் புரிந்து கொள்வார் என்று தோன்றியது.
“மேடம்… அடுத்த மாசம் ஷெட்யூல்ல எனக்கு மாசம் பூரா மார்னிங் ஷிப்ட் போட்ருக்காங்க மேடம்.. என் வீடு அரும்பாக்கம் மேடம். காலைல எந்திரிச்சு 5 மணிக்கெல்லாம் வர்றது கஷ்டமா இருக்கு மேடம். “
“அகிலா… இது என் டிசெஷன் இல்லம்மா… எடிட்டர் சொன்னார் நான் போட்டேன். அவ்வளவுதான். இந்த மாசம் பண்ணு… அப்புறம் பாக்கலாம்“
அந்த மாதம் முழுக்க நரகத்தை அனுபவித்தேன். காலை 3 மணிக்கு எழுந்தது சித்திரவதையாக இருந்தது. தூக்கம் கண்ணை சொக்கினாலும் செய்தி வாசிக்கையில் பளிச்சென்று இல்லையென்றால், இதையெல்லாம் காரணம் காட்டி ஷெட்யூலில் பெயரை சேர்க்காமல் விட்டு விடுவார்களே என்ற பயம் உறுத்தியது. பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு மாதத்தை ஓட்டினேன். மாத இறுதி வந்ததும் ஷெட்யூல் போடுவதற்கு முன்பாகவே கிருத்திகா மேடத்தை பார்த்து சொல்லி விட வேண்டும் என்று நினைத்தேன்.
“மேடம்.. வர்ற மாசம், ரெகுலர் ஷிப்ட் போடுங்க மேடம்… சார்கிட்ட சொல்லுங்க மேடம்…“
“கண்டிப்பா சொல்றேன் அகிலா…“ என்று அவர் சொன்ன வார்த்தை போலியாகவே ஒலித்தது. நினைத்தது போலவே அடுத்த மாதம் முழுக்கவும் மார்னிங் ஷிப்ட். மீண்டும் காலை 3 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதை நினைத்தாலே அழுகை வந்தது. நேராக கிருத்திகாவை சென்று சந்தித்தேன்.
“மேடம்… என்ன மேடம்… திரும்ப மார்னிங் ஷிப்ட் போட்ருக்கீங்க…“
“நான் என்ன அகிலா பண்றது… ? எடிட்டர் பேச்சை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது.. உனக்கு இன்னும் கன்பர்மேஷன் வர்லம்மா.. அது வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும். “
சீட்டுக்கு வந்து சத்தம் வராமல் அழுதேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“என்ன ஆச்சு அகிலா… வொய் ஆர் யு க்ரையிங்“ என்று கேட்டபடியே என் டேபிளில் வந்து அமர்ந்தார் வெற்றி வேந்தன்.
“என்ன சார் திரும்பவும் மார்னிங் ஷிப்ட் போட்ருக்கீங்க… ? எப்படி சார் இன்னும் ஒரு மாசம் முழுக்க 3 மணிக்கு எந்திரிச்சு வர்றது.. என் பையன் கிட்ட ஒழுங்கா பேசியே ஒரு மாசம் ஆச்சு சார்…“
“உன் பெர்பார்மன்ஸ் சரியில்லை அகிலா.. அதான் மார்னிங் ஷிப்ட் போட்ருக்கேன்…“
‘என்ன இவன் கிறுக்குத்தனமாக பேசுகிறான். ஏற்கனவே பெர்பார்மன்ஸ் சரியில்லாத ஆளை, தூங்கக் கூட விடாமல் வேலை செய்ய வைத்தால் மீண்டும் பெர்பார்மன்ஸ் குறையத்தானே செய்யும்… ?’
“எல்லார்கிட்டயும் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்க அகிலா… நம்ப எடிட்டர் ரொம்ப நல்ல டைப். நல்லா ஹெல்ப் பண்ணுவார்.. பாத்து அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கங்க…“
“சார் நான் யார் பிரச்சினைக்கும் போறதில்லை சார்.. எல்லார்கிட்டயும் அட்ஜஸ்ட் பண்ணிதான் சார் நடந்துக்கறேன். “
“அட என்ன அகிலா… உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னே தெரியல… சரி விடு… அடுத்த ஷெட்யூல்ல சரி பண்ணிக்கலாம்.. இந்த ஒரு மாசத்துக்கு மார்னிங் ஷிப்ட் பாத்துடு.“
இனி காலை 4 மணிக்கு அரும்பாக்கத்திலிருந்து கிளம்பி வர முடியாது என்பது புரிந்தது. மந்தைவெளியில் அலுவலகம் அருகிலேயே ஹாஸ்டல் பார்த்துத் தங்கினேன்.
அத்தனை நெருக்கடிகளுக்கிடையிலும், வீடியோ எடிட்டிங் செக்ஷனில் வேலை பார்த்த கிருஷ்ணனின் நட்பு ஆறுதலாக இருந்தது. அவனும் மார்னிங் ஷிப்ட். அவனையும் ராஜா பல முறை மரியாதைக் குறைவாக திட்டியிருக்கிறார். நான் காலையில் கிளம்பி வந்து கஷ்டத்தோடு வேலை செய்வதைப் பார்த்து விட்டு, நேரில் வந்து பல முறை ஆறுதல் சொல்லியிருக்கிறான். சட்டம் படித்திருந்தாலும், வழக்கறிஞராகப் பிடிக்காமல் மீடியாவில்தான் வேலை செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறான். மாலை நேரங்களில் காபி ஷாப்பில் அமர்ந்து ராஜாவை திட்டித் திட்டியே எங்கள் காதல் வளர்ந்தது. ராஜாவை திட்டுவதில் எங்கள் இருவருக்கும் அப்படி ஒரு இன்பம். சமயத்தில் கிருஷ்ணன் கெட்டவார்த்தையில் ராஜாவைத் திட்டும்போது அவனைத் தடுக்கக் கூடத் தோன்றவில்லை. அத்தனை திட்டுக்களுக்கும் உரியவனல்லவா அவன்.
அரசல் புரசலாக எங்கள் காதல் விவகாரம் அலுவலகத்துக்குள் தெரிய ஆரம்பித்தது. இந்தச் செய்தி பரவிய மறுநாளே கிருஷ்ணனுக்கு ஷிப்டை மாற்றினார்கள். வழக்கமாக மாதத்துக்கு நடுவில் யாராவது லீவ் போட்டால் ஒழிய ஷிப்டை மாற்றுவது வழக்கம் கிடையாது. திடீரென்று அவனுக்கு செகன்ட் ஷிப்ட் போட்டது வழக்கமாக காபிஷாப்பில் சந்திக்கும் எங்களின் ஒரே இன்பத்துக்கும் வேட்டு வைத்தது. தனிமையில் சந்தித்தபோது அழுதேன். அவன்தான் என்னைத் தேற்றினான்.
மூன்றாவது மாதமும் எனக்கு தொடர்ந்து மார்னிங் ஷிப்ட் என்று ஷெட்யூல் வந்தபோது என் கண்கள் கிருஷ்ணனுக்கு என்ன ஷிப்ட் என்றுதான் தேடின. அவனுக்கு செகன்ட் ஷிப்ட். நேராக எழுந்து கிருத்திகா அறைக்குச் சென்றேன்.
“மேடம்…. இவ்வளவு கஷ்டம்னு சொல்லியும் ஏன் மேடம் எனக்கு மட்டும் தொடர்ந்து மார்னிங் ஷிப்ட் போட்றீங்க… என்ன பாவம் பண்ணேன் உங்களுக்கு …. நான் கஷ்டப்பட்றதுல உங்களுக்கு என்ன மேடம் அவ்வளவு சந்தோஷம்…“
“அகிலா… இந்த ஷெட்யூலெல்லாம் நான் முடிவு பண்றது கிடையாதும்மா… உனக்கு பல முறை சொல்லியருக்கேன்… நான் பண்றதுக்கு இதுல எதுவுமே கிடையாது. என்கிட்ட வந்து சண்டை போட்டு பிரயோஜனம் இல்ல…“
முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்கினேன்… கிருத்திகா ரூமை விட்டு வெளியே வந்ததும் எதிரே வெற்றி வந்தான்.
“சார்… போன மாசமே நான் மார்னிங் ஷிப்ட் பாக்கறது எவ்வளவு கஷ்டம்னு உங்கக்கிட்ட சொன்னேன்ல சார்… ஏன் சார் இப்படி பண்றீங்க…“
“என்ன அகிலா … சத்தமெல்லாம் ஓவரா இருக்கு… உங்களுக்கு இன்னும் கன்ஃபர்மேஷன் கூட ஆகல ஞாபகம் இருக்கா இல்லையா.. “ என்று அவன் சொன்னதும், எதிர்காலமும் வயிறும் ஒரே நேரத்தில் உறுத்தின.
சட்டென்று தளர்ந்தேன். “சார் சத்தமெல்லாம் போடல சார்… என் கஷ்டத்தைத்தானே சார் சொன்னேன். “
“உனக்கு இன்னும் எத்தனை வாட்டி சொல்றதுன்னு தெரியல… சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிற… பை த வே… நீ கோபப்படும்போது ரொம்ப அழகா இருக்க.. “
அந்த நேரத்தில் அவன் அழகாக இருக்கிறாய் என்று சொன்னது ஆபாசமாக தொனித்தது. மனம் நொந்து பேசுகிறேன், இந்த நேரத்தில் அழகாக இருக்கிறாய் என்கிறானே… இடியட்.
“இங்கப் பார் அகிலா… லைப்ன்றதே அட்ஜஸ்ட்மென்ட்தான். நம்ப எல்லாருமே ஒரு அட்ஜஸ்ட்மென்ட்லதானே லைஃபையே ஓட்றோம் ? உனக்கு மட்டும் என்ன பிரச்சினை… சன் டிவியில வேலை செய்யறதுன்றது ஒரு பெரிய கவுரவம். அதை இழந்துடாத.. எடிட்டர் நான் என்ன சொன்னாலும் கேப்பாரு… கொஞ்சம் நீக்கு போக்கா நடந்துக்கிட்டன்னா எங்கயோ போயிடுவ.. “ என்று அவன் தன் கண்ணாடியை சரி செய்து கொண்டே அலட்சியமாகப் பேசினான்.
முதன் முறையாக கணவனைப் பிரிந்தது தவறோ என்று யோசித்தேன்… ஒரு பெண் தனியாளாக வாழவே முடியாதா… வல்லூறுகளைப் போல சுற்றுகிறார்களே… காறி அவன் முகத்தில் துப்பி, அதன் எச்சில் அவன் கண்ணாடியில் பட்டு வழிவது போல கற்பனை வந்தது. அவன் பேச்சு குமட்டலை ஏற்படுத்தியது.
“சார்.. நான் எடிட்டரைப் பாக்கறேன் சார்“ என்றேன். இவனைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி விடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
அவன் முகத்தில் அதிர்ச்சியை எதிர்ப்பார்த்த நான்தான் அதிர்ச்சியடைந்தேன். அவனுடைய அலட்சிய சிரிப்பு ‘போயி சொல்லுடி.. உன்னால என்ன ஒண்ணும் பண்ண முடியாது’ என்ற நக்கல் தெரிந்தது. அவனின் அலட்சிய சிரிப்பு என்னை மேலும் எரிச்சலூட்டியது.
கோபம் குறையாமல் எடிட்டரின் அறைக்குள் நுழைந்தேன். கண்கணில் கண்ணீர், வெள்ளத்தில் நிரம்பிய அணை போல தளும்பியது. நெஞ்சு படபடத்தது.
“சார்… வெற்றி வேந்தன் தப்புத் தப்பா பேசறார் சார்…“ என்று சொல்லிக் கொண்டே உடைந்தேன்.
“அகிலா… அழாதம்மா… என்ன ஆச்சு… என்ன ப்ராப்ளம்…“
கர்ச்சீப்பை வேறு எடுத்து வரவில்லை. துப்பட்டாவில் கண்களைத் துடைத்துக் கொண்டு “சார் ரொம்ப மோசமா பேசறார் சார் வெற்றி… தப்புத்தப்பா பேசறார் சார்.. வேணும்னே எனக்கு மார்னிங் ஷிப்ட் போட்டுக்கிட்டே இருக்கார் சார்.. இது மூணாவது மாசம் சார்.“
“மூணாவது மாசமா மார்னிங் ஷிப்டா ? ஏன் உனக்கு மட்டும்… ? யார் போட்டது…. ? “
“வெற்றிதான் சார்…“
“நான் பாத்துக்கறேன்.. இப்போ மாத்த முடியாது. ஏற்கனவே எல்லாருக்கும் ஷெட்யூல் அனுப்பியாச்சு.. நெக்ஸ்ட் மன்த் சேஞ் பண்ணிட்றேன்.. டோன்ட் ஒர்ரி. “
மனதில் இருந்த பாரம் இறங்கியது போல இருந்தது. “ரொம்ப தேங்ஸ் சார்“.
“தேங்ஸெல்லாம் இருக்கட்டும். போன் பண்ணச் சொன்னா போனும் பண்ண மாட்ற.. ஒரு எஸ்எம்எஸ் கூட அனுப்ப மாட்ற…“
எனக்கு அடுத்த மாதம் ஷிப்ட் மாறுகிறது என்ற மகிழ்ச்சியில் அவர் சொன்னது உறைக்கவேயில்லை. அவசரமாக நன்றி சொல்லி விட்டு வெளியேறினேன்.
ஒவ்வொரு மாதமும் ஷெட்யூலை அப்ரூவ் செய்வதே ராஜாதான் என்பது அவளுக்கு எப்படித் தெரியும் ?
வெற்றியைப் பற்றிச் சொன்ன புகாரை அவர் கண்டுகொள்ளாதது சற்றே ஏமாற்றமாக இருந்தது. அது சரி.. நான் இப்போதான் வேலைக்குச் சேர்ந்தேன். வெற்றி ரொம்ப நாளாக இருக்கிறான்… நேற்று வந்தவள் சொல்லி அந்தப் புகாரை அப்படியே எடுத்துக் கொள்வார்களா என்ன ?
சொன்னது போலவே அடுத்த மாதம் ஜெனரல் ஷிப்ட் போட்டார்கள். ஹாஸ்டலை காலி செய்து விட்டு மீண்டும் வீட்டுக்குப் போனது புதிதாக பல் முளைத்த குழந்தை கன்னத்தைக் கடித்தது போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆறு மாதங்கள் முடியும் நாளை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தேன். கிருத்திகா மேடத்தைச் சென்று பார்த்தேன்.
“மேடம்… சிக்ஸ் மன்த்ஸ் முடிஞ்சுடுச்சு மேடம். கன்ஃபர்மேஷன் லெட்டர் எப்போ தருவாங்க…“
“இன்னும் ஒன் வீக்ல வந்துடும்மா.. “
லெட்டர் கிடைத்ததும் கிருஷ்ணனுக்கு லூயி பிலிப் பேன்ட் சர்ட் வாங்கித் தர வேண்டும். எனக்காகவே காத்துக் கிடக்கிறான். சுகந்திக்கு ட்ரீட் தர வேண்டும் என்றெல்லாம் அகிலா கண்ட கனவு, கனவாகவே போனது.
என் சீட்டுக்கு வந்தான் வெற்றி வேந்தன். “அகிலா… உங்க பெர்பார்மன்ஸ் சரியில்ல… உங்க ப்ரொபேஷன் மூணு மாசத்துக்கு எக்ஸ்டென்ட் பண்ணச் சொல்லி ஹெச் ஆருக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கேன். ஒழுங்க பெர்பார்ம் பண்ணுங்க“ என்று சொல்லி விட்டு என் முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்கக் காத்திருந்தது போல என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
என் உணர்ச்சிகளை வெளிக்காட்டக் கூடாது என்று எவ்வளவோ முயற்சித்தும் கண்ணீர் சட்டென்று என்னை மீறி வழிந்தது. டக்கென்று குனிந்து கொண்டேன். யாரிடம் முறையிடுவது என்று புரியவில்லை. இது வரை ஒரு முறை கூட, செய்தி வாசிக்கையில் தடுமாறியதில்லை. இரண்டு மூன்று முறை உச்சரிப்பில் கோட்டை விட்ட செய்தி வாசிப்பாளர்களைக் கூட, தாமதமின்றி கன்ஃபர்ம் செய்திருப்பது எனக்கே தெரியும்… லீவ் போட்டு விட்டு வீட்டுக்கு சென்று கதறி அழுதேன்… எனக்கு வேறு வழியே இல்லை என்ற யதார்த்தம் உறைத்தது. சுகந்திக்கு போன் செய்தேன்.
“கொஞ்சம் பல்லக் கடிச்சிக்கிட்டு ஓட்டு அகிலா… இன்னும் மூணு மாசம்தானே. ஓடிடும். “
“இல்ல சுகந்தி. ரிசைன் பண்ணிடலாம்னு நெனைக்கறேன். “
“லூசு மாதிரி பேசாத.. வேலையை விட்டுட்டு என்ன பண்ணுவ ? “
“இந்தப் பொறுக்கிப் பசங்க உன் மேல கண்ணு வச்சுட்டானுங்க… சமாளிச்சுதான் ஆகணும்.“
“எடிட்டர் அப்படி இல்ல சுகந்தி… இந்த வெற்றி பொறுக்கிதான் இப்படி பண்றான்.. “
“அகிலா.. உனக்கு எடிட்டரைப் பத்தித் தெரியாது. இவன விட அவன் பொறுக்கி. அவன்தான் எல்லாத்துக்கும் காரணம்.. “
“இல்ல சுகந்தி. அவரு என்கிட்ட டீசன்டாத்தான் நடந்துக்கிறார்… எதுவும் தப்பாப் பேசுனது கிடையாது.“
“நீ சரியான லூசு… அவன் ஒண்ணாம் நம்பர் ரோக். எட்டாவதுதான் படிச்சிருக்கான்.. பெரிய டாஷ் மாதிரி பேசுவான். அவனைப் போயி டீசன்டுன்னு சொல்றியே.. அதுதான் பெரிய ஜோக். அழாம வேலைக்கு கௌம்பி வர்றதப் பாரு.“
புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் பார்த்து செய்தி வாசிக்கும் அனைவருக்கும் புத்தம் புதிய உடைகளோடுதான் செய்தி வாசிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. உடைகளை வழங்கவென்று ஒவ்வொரு நாளும் ஒரு துணிக்கடையோடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. பெண்களுக்கு ஒவ்வொரு ப்யூட்டி பார்லர் ஒவ்வொரு நாளும் ஸ்பான்சர் செய்து, மேக்கப் கிட் கொடுத்தார்கள்.
செய்தி வாசிக்கும் மகிழ்ச்சியோடு புதிய உடைகளை அணிந்து பார்த்து நன்றாக இருக்கிறதா என்று கேட்டார்கள். ஆண்கள் அப்படிக் கேட்கவில்லை. ஆண்களுக்கு மட்டும் ஏன் மற்ற ஆண்களிடம் என் உடை நன்றாக இருக்கிறதா என்று கேட்கத் தோன்ற மாட்டேன்கிறது… அது மட்டுமில்லாமல் சன் டிவியில் யார் ஆண் செய்தி வாசிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஓரிருவரைத் தவிர எல்லோரும் பெண்கள்தானே…
எனக்கான உடையும் மேக்கப் கிட்டும் வரவேயில்லை.
“மேடம்.. ஸ்பான்சர் ஆர்ட்டிக்கிள்ஸ் வரவேயில்லை மேடம்.. எல்லாருக்கும் வந்துடுச்சு. “
“வெற்றிதான்மா இதுக்கு இன்சார்ஜ்.. அவர்கிட்ட கேளு“ என்பதோடு நிறுத்திக் கொண்டார் கிருத்திகா.
அந்தப் பொறுக்கியிடம் கேட்பதற்கு சும்மாவே இருக்கலாம். எவ்வளவு அல்பமாக நடந்து கொள்கிறான்.
தீபாவளி நெருங்கியது. அனைவருக்கும் இன்சென்டீவ் போட்டார்கள். இன்சென்டீவை எடுத்து சர்ப்ரைஸாக அவனுக்கு இந்த முறையாவது பேன்ட் ஷர்ட் எடுத்துக் கொடுக்க வேண்டும். ஒன்பது மாசமும் முடியப்போகிறது. கன்பர்மேஷனும் வந்து விடும்.
அன்று மாலையில் ஏடிஎம்மில் செக் பண்ணியதில் இன்சென்டீவ் வரவில்லை என்பது தெரிந்தது. ‘மற்றவர்களுக்கெல்லாம் வந்து விட்டது என்றார்களே… சரி… ஏதாவது அக்கவுன்டிங் டிலேவாக இருக்கும். நாளை பார்த்துக் கொள்ளலாம். நாளை முதல் வேலையாக ஹெச் ஆரில் கேட்க வேண்டும்’
மறுநாள் காலை முதலே எல்லோரும் தனித்தனியாக ரகசியம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஏதோ நடக்கிறது என்று புரிந்தாலும், நியூசுக்கு நேரமாகி விட்டதால் செய்தி வாசிக்க தயாரானேன். லைவ் முடிந்ததும் வெளியே வந்து நேராக சுகந்தியிடம் போனேன். “என்னடி எல்லாரும் குசுகுசுன்னு பேசிக்கிட்டிருக்காங்க… ? “
“எல்லாம் உன் எதிரி மேட்டர்தான்…. இரு வர்றேன்“ என்று சிஸ்டம் முன்னால் உட்கார்து அவள் மெயிலை திறந்தாள். பத்து அட்டாச்மென்ட் இருந்தது.
பத்தும் புகைப்படங்கள். பத்துப் படங்களிலும் வெற்றி வேந்தன், மற்ற செய்தி வாசிப்பாளர்களோடு நெருக்கமாக கட்டி அணைத்தபடியும், தோளில் கை போட்டபடியும், முத்தமிட முயற்சி செய்தபடியும் இருந்த போட்டோக்கள். வாயடைத்துப்போனேன். “என்னடி இது… ? “
“இதுல ஆச்சர்யப்பட என்னடி இருக்கு ? அவன்தான் எவ்வளவு பெரிய பொறுக்கின்னு சொன்னேனே.. இதெல்லாம் மேக்கப் ரூம்ல எடுத்தது. “
“அதெல்லாம் சரி.. இதை எதுக்குடி போட்டோ எடுத்து வச்சுக்கறான்.. “
“ஆம்பளைக்கு எத்தனை பொம்பளையோட படுத்தோம்னு காட்றது ஆம்பளைத்தனத்தோட அடையாளம்டி… நெறய்ய பேராட படுத்தான்னா அவன் காதல் இளவரசன்.. பெரிய ஆம்பளை. இதையே பொண்ணு செஞ்சா தேவிடியான்னு சொல்லுவாங்க… இந்தப் பொறுக்கி இந்த போட்டோவையெல்லாம் எடுத்துட்டுப் போயி அவன் ஃப்ரென்ட்ஸுகிட்ட பீத்திப்பான். அவன் ஃப்ரென்ட்ஸ் அவன மாதிரிதானே இருப்பாங்க.. மச்சான் உனக்கு மச்சம்டானு அவனை உசுப்பேத்துவாங்க… இவன் இன்னும் எடுத்துக்கிட்டே இருப்பான்.. “
“இப்போ என்னடி ஆகும்… அவனை வேலையை விட்டு தூக்கிடுவாங்களா.. ? “
“நீ வேற… அவனையாவது தூக்கறதாவது.. இந்த போட்டோவாவது துணியோட இருக்கு. துணியே இல்லாம போட்டோ ரிலீஸ் ஆனாக் கூட, அந்த எடிட்டர் பொறுக்கி அவனை மாத்த மாட்டான் பாரு. “
“இல்ல ஏதாவது ஆக்ஷன் எடுப்பாங்கடி.. “
“நீ எப்பவுமே லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா…“
”நீ வேணா பாரேன்… அவனை வேலைய விட்டே தூக்கப் போறாங்க“
“பாக்கலாம்… பாக்கலாம்.. “
சுகந்தி சரியாகத்தான் சொன்னாள் என்பது மறுநாளே தெரிந்தது. வெற்றி வேந்தனை சீஃப் ரிப்போர்டராக பதவி உயர்வு அளித்து திருச்சிக்கு மாற்றினார்கள். அந்த போட்டோக்களில் சிக்கிய இரு பெண்கள் ராஜினாமா செய்தார்கள். ஒருத்தி எதுவுமே நடக்காதது போல தன் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்தாள். இப்படி ஒரு அயோக்கியத்தனத்தை செய்திருக்கிறான் அவனுக்கு பதவி உயர்வு கொடுக்கிறார்களே…
‘சரி.. அவன் கதை நமக்கு எதற்கு. நம்ப கதையைப் பாப்போம். இன்சென்டீவ் என்னாச்சுன்னு நேரா ஹெச் ஆர்ல போயிக் கேட்டுடுவோம்.’ என்று முடிவு செய்து நேராக ஹெச்ஆர் சென்றேன்.
அங்கே இன்சார்ஜாக இருந்தவரிடம் சென்று கேட்டதுமே, அகிலாவா… உன் இன்சென்டீவை எடிட்டர் ஹோல்ட் பண்ணி வைக்கச் சொல்லியிருக்கார்மா.. “ என்றார்.
“ஏன் சார்… ? “
“எனக்கு எப்படிம்மா தெரியும்.. ? “ என்று அவர் மீண்டும் கம்ப்யூட்டரில் தலையை நுழைத்துக் கொண்டார்.
கோபம் வந்தது. சுகந்தி சொன்னது நினைவுக்கு வந்தது. கதவைத் தட்டாமலேயே உள்ளே நுழைந்தேன்.
“சார் ஏன் சார் என் இன்சென்டீவை நிறுத்தி வைக்கச் சொன்னீங்க… ? “
“உக்காரும்மா… நான் எப்போ நிறுத்தி வைக்கச் சொன்னேன்… ஹெச் ஆர்ல தப்பா சொல்லிருப்பாங்க. நான் அந்த மாதிரி எந்த உத்தரவும் போடல. நான் ஏன்மா உன் இன்சென்டீவை நிறுத்தி வைக்கச் சொல்லப்போறேன் ? “
“இல்ல சார் ஹெச் ஆர்ல நீங்கதான் நிறுத்தி வைக்கச் சொன்னதா சொன்னாங்க. அவங்க தப்பா சொல்லியிருப்பாங்கம்மா. நான் பாத்துக்கறேன். நீ கவலைப் படாமப் போ..
“எனக்கு எந்த பிரச்சினையும் இல்லம்மா.. நீதான் பொழைக்கத்தெரியாத பொண்ணா இருக்க. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புரிஞ்சுக்கவே மாட்ற..“ லேசாக உறைத்தது. சுகந்தி ஆரம்பம் முதலே சொல்லி வந்தது உண்மைதான்.
“வர்றேன் சார்.. “ என்று வேறு எதுவுமே சொல்லாமல் கிளம்பினேன்.
“போன் பண்ணும்மா.. போன் பண்ணச் சொன்னா பண்ணவே மாட்ற…“
“பண்றேன் சார்“ என்று சொல்லி விட்டு வெளியேறினேன்.
“சுகந்தி நீ சொன்னது கரெக்ட்தான். இவனும் பொறுக்கிதான். இன்னைக்கு பொறுக்கித்தனத்தை காமிச்சுட்டான். “
“நான்தான் அப்போலேர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கேன். நீதான் நம்பவேயில்ல.. இப்போப் பாத்தியா.. என்ன பண்ணான் “
சொன்னேன். “தெரியும்பா எனக்கு.. உனக்கு தொடர்ந்து மார்னிங் ஷிப்ட் போட்டதே அதுக்குதான். அப்போதான் வழிக்கு வருவன்னுதான். நீதான் புரிஞ்சுக்கல.. எடிட்டர் பெரிய டாஷுன்னு சொல்லிட்டு இருந்த.. “
“இவனுக்கு குடும்பம் குட்டியெல்லாம் இல்லையா… ஏன் இப்படி பண்றான்.. “
“ஏன் இல்ல… இவன் பொண்டாட்டி பேரு ஜெயலலிதா… அவ செக்ரட்டேரியட்ல பிஆர்ஓவா இருக்கா. பொண்ணு ராமச்சந்திராவுல மெடிசின் படிக்கிறா…“
“இவன் பொண்ணையும் பொண்டாட்டியையும் இப்படி யாராவது கூப்பிட்டா அப்போ என்னடி பண்ணுவான்.. “
“கூப்பிட மாட்டாங்கன்ற தைரியம்தான். தனக்குன்னு வந்தாத்தானே அதுக்கான வலி தெரியும். “
வீட்டுக்கு சென்று போனும் பண்ணவில்லை எஸ்எம்எஸ்சும் அனுப்பவில்லை. எரிச்சலாக இருந்தது.
ஒரு வாரத்துக்கு என்னைக் கூப்பிடவேயில்லை. இன்சென்டீவ் அப்படியே இழுத்துக் கொண்டிருந்தது. இன்னும் கைக்கு வரவில்லை.
அதற்குள் அலுவலகம் முழுக்க நான் திருச்சிக்கு மாற்றல் கேட்டிருப்பதாக தகவல் பரவியது. அனைவரும் வந்து ஏன் மாற்றல் வாங்கிக் கொண்டு போகிறாய் என்று துக்கம் விசாரித்தார்கள்.
நேராக கிருத்திகா அறைக்குச் சென்றேன். “மேடம் என்னை திருச்சிக்கு மாத்தப் போறீங்களா…“
“நான் ஏம்மா மாத்தறேன்.. நீதான் திருச்சிக்கு போறேன்னு வில்லிங்னெஸ் குடுத்துருக்கறதா எடிட்டர் சொன்னாரு.. “
“நான் ஏம் மேடம் குடுக்கறேன். எல்லாரும் வெளியூர்லேர்ந்து சென்னைக்கு வந்து வேலை செய்வாங்க.. நான் ஏன் சென்னையிலேர்ந்து வெளியூர் போகணும்.. அதுவும் இல்லாம ரிப்போர்டரத்தானே மாத்துவாங்க. நான் நியூஸ் ரீடர் மேடம். “
“எனக்குத் தெரியலம்மா. எடிட்டர்தான் சொன்னார். அப்புறம் நீ ஃப்ரீலான்சரா, நியூஸ் ஸ்லாட் இருந்தா வந்து படிக்கற மாதிரி மாத்திக்கறேன்னு சொன்னதாவும் அவர்தான் சொன்னார். “
என் எரிச்சல் உச்சத்தை அடைந்தது. இன்று ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் மறுவேலை. என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.
“சார். என் கன்பர்மேஷன் லெட்டர் என்ன சார் ஆச்சு ? வரும்மா… ஏன் அவசரப்பட்ற.. “
“எத்தனை நாள் சார் வெயிட் பண்றது ? “
“இங்க பாரும்மா.. கன்பர்மேஷன் லெட்டர் என்கிட்டதான் இருக்கு. இன்னைக்குதான் அப்ரூவலுக்கு வந்துச்சு… இந்தா“
அந்த கன்பர்மேஷன் லெட்டர் எனக்கு சந்தோஷம் கொடுக்கவில்லை.
“இன்சென்டீவ் சார்.. “
“எல்லாம் சரியாயிடும்.. நான் உனக்கு எல்லாம் பண்றதுக்கு ரெடின்னு சொல்றேன்.. நீதான் எதையுமே காதுல வாங்க மாட்ற.. அட்லீஸ்ட் ஒரு போனாவது பண்ணுவன்னு பாத்தா பண்ணவே மாட்ற… நான் என்னதான் பண்றது சொல்லு ? “
“போன் பண்றேன் சார். “
மாலை சொன்னது போலவே போனில் பேசினேன். கவனமாக ரெக்கார்டரை ஆன் செய்தேன்.
“சார் இந்த இன்சென்டீவ் க்ரெடிட் ஆயிடுமா சார் ?“
“இல்லம்மா ரெண்டு நாள் ஆகும். அதை நீ மொதல்லே முடிச்சுருக்கணும். கன்பர்ம் ஆனதுக்குத்தான் கையெழுத்து போட்ருக்கேன். ரெண்டு நாள் ஆகும். “
“நீ ரொம்ப மக்கா இருக்க,, உனக்கு ஏற்கனவே கெடச்சுருக்கணும். நீ எப்போப் பாத்தாலும் இவன் திட்றான் சண்டை போட்றான்னு சொல்லிக்கிட்டு இருக்க. “
“கன்பர்ம் பண்ணிட்டீங்கள்ள சார்.. “
“அதெல்லாம் பண்ணிட்டேன். வேற.. மத்த உன்னோட கோரிக்கைகளெல்லாம் படிப்படியா நிறைவேற்றப்படும். இப்போ நல்லாருக்கு உன்னோட மேக்கப்… நல்லா ஜம்முனு இருக்கு. நல்லா அழகா சின்னப்பொண்ணு மாதிரி இருக்கு.“
“தேங்கக்யூ சார்“
“வேற என்ன.. ? “
“வேற ஒன்னும் இல்ல சார்“
“வேற அப்புறம் என்ன ? “
“ஒன்னும் இல்ல சார்“
“இதுக்கு ட்ரீட் ஒன்னும் கெடையாதா“
“ம்ம்… தீபாவளி வாழ்த்துக்கள் சார்…“
“ம்ம் நன்றி“
பேசி முடித்ததும் கிருஷ்ணனிடம் போட்டுக் காண்பித்தேன். பொறுமையாக இருப்போம். மீண்டும் பிரச்சினை செய்தால் என்ன செய்வதென்று யோசிப்போம் என்றான்.
பத்து நாட்கள் கடந்தும் இன்சென்டீவ் வரவேயில்லை. ஆனால் எனக்கு தொடர்ந்து எஸ்எம்எஸ்கள் வந்தபடியே இருந்தன. குட்மார்னிங்.. இந்த பொறுக்கி குட்மார்னிங் சொல்லாவிட்டால் விடியாதா.. தினமும் ஏதாவது மெசேஜ்கள் வந்துகொண்டிருந்தன. நான் எதற்கும் பதில் அனுப்பவில்லை.
பத்து நாட்கள் கழித்து மீண்டும் ராஜாவை சந்தித்தேன்.
“சார் இன்னும் இன்சென்டீவ் போடல சார். “
“வரும்மா அதுவா வரும்.. போயி ஒழுங்கா வேலையப் பாரு.“
“சார் ரெண்டு நாள்ல வந்துடும்னு சொன்னீங்க. வரும்னா வரும்மா.. என்ன ஓவரா கத்தற… என்ன நெனச்சுக்கிட்டு இருக்கற உன் மனசுல.. எப்போப் பாத்தாலும் சண்டை போட்டுக்கிட்டு.. வேலை செய்ய வந்தியா சண்டை போட வந்தியா ? உன்னை மாதிரி பல பேரை பாத்துருக்கேம்மா… கடைசில வேலையை ரிசைன் பண்ணிட்டுத்தான் போவாங்க.. இந்த ஓவரா சவுண்ட் குடுக்கற வேலையெல்லாம் வச்சுக்காத“
அவன் பேசிய தோரணை எழுந்து வந்து அடித்து விடுவானோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. பயத்தோடே வெளியேறினேன்.
இரண்டு நாட்கள் கழித்து மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. ராஜா நேராக கிருத்திகா கேபினுக்குச் சென்று எல்லோருக்கும் கேட்கும்படி கத்தினார்.
“அகிலாவுக்கு மார்னிங் ஷிப்ட்தானே போடச் சொல்லியிருந்தேன்… யாரைக் கேட்டு மாத்தினீங்க… இல்ல சார் கன்டினியூஸா மார்னிங்…. என்று முடிப்பதற்குள், “இங்க நான் எடிட்டரா நீங்க எடிட்டரா ? “ என்று கத்தினார்.
அந்தக் கத்தல் என் காதில் விழ வேண்டும் என்பதற்காகத்தான் என்பது புரிந்தது. மீண்டும் மார்னிங் ஷிப்டா…. ஆண்டவா…. என்ன செய்யப்போகிறேன்..
ராஜா கத்திக் கொண்டிருக்கும்போதே, ஷிப்டுக்காக கிருஷ்ணன் உள்ளே நுழைந்தான். “யோவ் என்னய்யா எடிட் பண்ணிருக்க அந்த வீடியோவ… ? உன் மொகரை மாதிரியே இருக்கு… வேற வேலை வெட்டியே இல்லையாய்யா உனக்கு… ஊருக்குள்ள வேல வெட்டி கிடைக்காதவன் எல்லாம் இங்க வந்துட்டாங்க.. எங்கயாவது போக வேண்டியது தானே.. உனக்கு எல்லாம் மனசாட்சி இருக்கா யா..? செய்யற வேலய கொஞ்சமாவது மனசாட்சியோட செய்..”
கிருஷ்ணன் அழும் நிலைக்கு வந்தான். அகிலா ஒரு முடிவுக்கு வந்தாள். ‘என்னை இழிவுபடுத்தினான். மறைமுகமாக படுக்க அழைத்தான். என் நிதியாதாரங்களை முடக்கினான். சிறுமைப்பட வைத்தான். அவனிடம் கெஞ்ச வைத்தான். அத்தனையும் பொறுத்துக் கொண்டேன். என்னைக் காதலிக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக…….. அகிலா ஒரு முடிவெடுத்தாள்.