தமிழ்நாட்டின் மிக மிகச் சிறந்த புலனாய்வு நிருபர் யாரென்றால் அது சன் டிவியின் ராம செல்வராஜ்தான். இவரைப்போல ஒரு அப்பாடக்கர் நிருபரை பார்க்கவே முடியாது. தனக்குத் தெரியாத விஷயங்கள் உலகில் எதுவுமே இல்லை என்பது போலப் பேசுவார்.
சென்னை நகரில் நடக்கும் அனைத்து பெரிய குற்றங்களிலும் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று இவர் கொடுக்கும் வர்ணனை இருக்கிறதே…. அப்பப்பா… அப்படி ஒரு வர்ணனை. சம்பவம் நடக்கையில் பக்கத்தில் இருந்து நேராகப் பார்த்தது போலவே வர்ணிப்பார். ஒரு சம்பவத்தை நேரடியாகப் பார்த்தது போலவே அப்படியே வர்ணிப்பது ஒரு செய்தியாளரின் திறமைதான். ஆனால் நடக்காத பொய்யை அப்படியே வர்ணிப்பது… ? அதற்குப் பெயர் அயோக்கியத்தனம். ராம.செல்வராஜ் இது போல பல குற்ற நிகழ்வுகளில் காவல்துறைக்கு ஆதரவாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் பல முறை செய்தி வழங்கியிருக்கிறார். வேளச்சேரி என்கவுன்டரில் 5 பேரை, காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஒரு உதாரணம். ஆனால் செல்வராஜ் செய்ததிலேயே மிகப்பெரிய அயோக்கியத்தனம், கூடங்குளம் போராட்ட சமயத்தில்தான்.
ஏதோ ஒரு காரணத்துக்காக கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கி, எப்படியாவது அணு உலையை திறந்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஜெயலலிதா செயல்பட்டு வந்த சமயம். கூடங்குளத்தில் அப்போது நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர் முகிலன், தோழர் சதீஷ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு ஆகியோரை காவல்துறையினர் பயங்கரமான நக்சலைட்டுகள் என்று செய்தியை பரப்பினார்கள். இந்தச் செய்தியை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்கு மத்திய உளவுத்துறை பயன்படுத்திய ஊடகம் சன் டிவி மற்றும் தினமலர்.
காவல்துறையின் தூண்டுதல் காரணமாக, ஒரு செய்தியை மிகைப்படுத்திச் சொல்வதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் இல்லாத ஒரு பொய்யை உண்மையாக சித்தரிப்பதை மன்னிக்கவே முடியாது. அதற்குப் பெயர் அயோக்கியத்தனம்.
கூடங்குளம் விவகாரத்தில் நடந்தது பச்சைப் பொய். தோழர் முகிலன் மற்றும் தோழர் சதீஷ் ஆகியோர் இதற்கு முன்னால் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து கைதானவர்கள் என்பது உண்மையே. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக, இவர்கள் வெளிப்படையான முறையில் செயல்பட்டு வருகிறார்கள். பொதுப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். சமூகத்தை நேசிப்பவர்களான இவர்கள், கூடங்குளம் விவகாரத்தில் அம்மக்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்துவது இயல்பே. அப்படி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து நடந்து வந்த போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, கூடங்குளம் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல் என்ற செய்தி காவல்துறையால் பரப்பப்படுகிறது.
தோழர் சதீஷ்
சதீஷ் கைது செய்யப்பட்டபோது அந்தச் செய்தியை சன்டிவிக்காக வெளியிட்ட ராம.செல்வராஜ் என்ன சொன்னார் தெரியுமா ? “கூடங்குளம் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் சதீஷ் என்ற நக்லைட்டை கைது செய்துள்ளனர். கூடங்குளம் அணு உலையை தகர்ப்பதற்காக நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகிறார்கள். பெருவாரியான மக்கள் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ந்து இந்தப் போராட்டங்களை நடத்துவது நக்சலைட்டுகள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது. நக்சலைட்டுகள் ஊடுருவல் குறித்து எங்களுக்கு நீண்ட நாட்களாகவே தகவல் இருந்து வந்தது. இந்நிலையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தோம். அந்தக் கண்காணிப்பின் விளைவாகவே சதீஷ், முகிலன் மற்றும் வன்னி அரசு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்” என்று செய்தி அளித்தார் ராம.செல்வராஜ்.
இந்தத் தகவலை ராம.செல்வராஜுக்கு வழங்கியது ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்கக் கூடும். காவல்துறையினர் இது போல ஆயிரம் தகவல்களைத் தருவார்கள். அதில் உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும். ஒரு பத்திரிக்கையாளரின் பணி, காவல்துறையினர் அளிக்கும் தகவல்களில் உள்ள உண்மைத் தன்மையை விசாரித்த பிறகு அத்தகவலை மக்களுக்கு வழங்குவதே. சதீஷைப் பற்றி எங்கே விசாரிப்பது என்பது எனக்குத் தெரியாது என்று ராம.செல்வராஜ் சொல்லுவாரேயானால், அவர் பத்திரிக்கையாளராக இருக்க லாயக்கே இல்லை. ஏதாவது மளிகைக் கடையில் பொட்டலம் கட்டச் செல்லலாம். ஆனால், சதீஷைப் பற்றி எங்கே விசாரிப்பது என்று தெரிந்தும், அவ்வாறு விசாரிக்காமல் காவல்துறை சொன்னதை மட்டும் வெளியிட்டால் அது தெரிந்தே செய்த அயோக்கியத்தனமா இல்லையா ?
ராம.செல்வராஜ் இப்படி தெரிந்தே ஒரு அயோக்கியத்தனத்தை அந்தக் கைது விவகாரத்தில் செய்தார். சதீஷ் ஒரு பயங்கரமான நக்சலைட் என்று செய்தி வெளியிட்ட சன் டிவி, சதீஷின் புகைப்படத்தை காண்பித்தது. கூடங்குளம் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் என்ற செய்தி வெளியிட்ட ஒரு வாரத்துக்கு முன்பாக வெளியிடப்பட்ட நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டம் குறித்து, சவுக்கு இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் போடப்பட்டிருந்த சதீஷின் புகைப்படம், சன் டிவி செய்தி வாசிக்கையில் பயன்படுத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் என்பது சவுக்கு தளத்திலேயே உள்ளது. தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியை, புலனாய்வுப் புலி ராம.செல்வராஜுக்கு நன்கு தெரியும். சதீஷ் யார், அவர் தற்போது மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ளாரா என்பதை விசாரிக்க எத்தனை நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள் ?
சவுக்கு தளத்தில் வெளியான சதீஷ் புகைப்படம்
ஆனால் அவ்வாறு விசாரிக்காமல், விசாரிக்க எவ்வித முயற்சியும் எடுக்காமல், வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபரை, நக்சலைட் என்று கூசாமல் பொய்யை உண்மை போலவே அரங்கேற்றிய ராம.செல்வராஜ் ஒரு பத்திரிக்கையாளரா ?
இந்த யோக்கிய சிகாமணி செய்த சட்டவிரோத காரியம் என்னவென்று பார்ப்போமா ?
சன் டிவியின் தலைமை செய்தியாசிரியர் ராஜா பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார் என்பதை சவுக்கு வாசர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிவீர்கள். இந்த ராஜாவை, சனிக்கிழமையன்று காலை, புலனாய்வுப் புலி ராம.செல்வராஜ் மற்றும் சன் டிவி நிலைய வித்வான் மகாலட்சுமி ஆகியோர் சிறையில் சந்தித்துள்ளனர். புழல் சிறையைப் பொறுத்தவரை, வாரநாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள் கைதிகளை சந்திக்கலாம். சனிக்கிழமையைப் பொறுத்தவரை வழக்கறிஞர்கள் மட்டுமே சந்திக்க முடியும். மகாலட்சுமியைப் பொறுத்தவரை அவர் சன் டிவியில் பகுதி நேர நிகழ்ச்சி வழங்கினாலும், பதிவு பெற்ற வழக்கறிஞர். நீதிமன்றங்களில் பணியாற்றுபவர். ஆனால் ராம.செல்வராஜ் சட்டம் படித்துள்ளார். வழக்கறிஞர் அல்ல.
சட்டம் படிப்பதற்கும், வழக்கறிஞராக இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. ஒருவர் சட்டம் படித்து விட்டதாலேயே வழக்கறிஞராகிவிட முடியாது. சட்டம் முடித்து, அந்தந்த மாநில வழக்கறிஞர் சங்கத்தில் (Bar Council) பதிவு செய்தால் மட்டுமே வழக்கறிஞராக முடியும். அப்படி வழக்கறிஞராக பதிவு செய்த பிறகு, நிரந்தரமான வேறு வேலைகளுக்கு போகக் கூடாது. அப்படி வேலைக்குச் சென்றால், அந்த வேலையில் இருக்கும் வரை, தங்களின் வழக்கறிஞர் பதிவை தற்காலிகமாக ரத்து செய்த பிறகுதான் வேலைக்குப் போக இயலும். எளிமையாக, சவுக்கு வாசகர்கள் கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொள்ளும் வகையில் சொல்லுவதென்றால், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த வாதப்புலி வண்டுமுருகன் சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பணியில் இருக்க வேண்டும். இப்படி நியமிக்கப்பட்டதும் வண்டு முருகன், தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டும். நான் இது போன்ற ஒரு பதவியில் நியமிக்கப்பட்டுள்ளேன், அல்லது ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன். ஆகையால் எனது வழக்கறிஞர் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என்று கடிதம் அளித்தன் அடிப்படையில் அவரின் பதிவை பார் கவுன்சில் தற்காலிகமாக ரத்து செய்யும். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக் காலம் முடிவடைந்ததும், மீண்டும் பதிவை புதுப்பித்து வழக்கறிஞராக தொழில் செய்யலாம்.
ராம.செல்வராஜ் சன் டிவியின் க்ரைம் பீட் பார்க்கும் செய்தியாளர். முழு நேர ஊழியர். இவர் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. அப்படியே செய்திருந்தாலும் முழு நேர ஊழியராக இருப்பதால், அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தநிலையில் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே உள்ள சலுகையான சனிக்கிழமை கைதிகளை பார்க்கும் சலுகையை அனுபவித்துள்ளார். சனிக்கிழமை கைதிகளை பார்க்க விரும்பும் வழக்கறிஞர்கள் பார்க் கவுன்சில் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். அப்படிக் காண்பித்த பிறகே, கைதிகளைப் பார்க்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருக்கையில் புலனாய்வுப் புலி ராம.செல்வராஜ் எப்படி சிறைக்குள் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார் ?
இதற்குக் காரணம், கல்லாப்பெட்டி கருப்பண்ணன் என்று கைதிகளால் அன்போடு அழைக்கப்படும் புழல் சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணன். சனிக்கிழமை அன்று ராம.செல்வராஜும், மகாலட்சுமியும் ராஜாவைப் பார்ப்பதற்கு முன் நேராக கல்லாப்பெட்டி கருப்பண்ணன் அறைக்குச் சென்றுள்ளனர். அவர் அறைக்குச் சென்று விவாதித்த பிறகு, கீழே இறங்கி ராஜாவைப் பார்த்துள்ளனர். இந்த கல்லாப்பெட்டி கருப்பண்ணன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன. இது தவிரவும், சிறையில் சமைப்பதற்கான வரும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கள்ளத்தனமாக ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், இந்த கருப்பண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய “சரிபாதி கேட்கும் திரிபாதி” கண்டும் காணாமலும் இருக்கிறார். இவரும் சிலிண்டர் விற்பனையில் பங்குதாரரா என்பது குறித்து நமக்கு தவல்கள் இல்லை. ராம.செல்வராஜ் சனிக்கிழமை புழல் சிறை சென்று ராஜாவை பார்த்த வீடியோ பதிவுகள் சிறையில் இன்னும் இருக்கும். திரிபாதி அவற்றை வாங்கிப் பார்த்துவிட்டு உடனே நடவடிக்கை எடுக்க முடியும். பார்ப்போம் செய்கிறாரா என்று.
ராம.செல்வராஜும், மற்றொரு வழக்கறிஞரான மகாலட்சுமியும், நாள் தவறாமல், ராஜாவை புழல் சிறையில் சந்தித்து வருகின்றனர். ராம.செல்வராஜ் குறித்து பார்த்து விட்டோம். யார் இந்த மகாலட்சுமி ?
மகாலட்சுமி ராஜகோபால். இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். சன் டிவியின் நிலைய வித்வான் வழக்கறிஞர். அப்படியென்றால், சன் நியூஸ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் வரும் ஆலோசனை நேரம் நிகழ்ச்சியில் உள்ளுர் சட்டம் முதல் சர்வதேச சட்டம் வரை விலாவாரியாக அலசுவார். தற்போது அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, இவர் செய்தி வாசிப்பாளராக, சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசித்து வருகிறார்.
வழக்கறிஞர் மகாலட்சுமி
தற்போது, சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர்கள், மற்றும் முன்னாள் செய்தி ஆசிரியர் ராஜா மீதான புகாரில் அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்கக் கூடியவர்களிடம், “போலீசார் உங்களை ஏதாவது கேட்டால் எனக்குத் தெரியாது என்று சொல்லுங்கள். நாளைக்கு கோர்ட்டு, கேசு என்று அலைய வேண்டி வரும்… நான் வக்கீல், எத்தனையோ பேரை நானே குறுக்கு விசாரணை செய்திருக்கிறேன். சமயங்களில் குறுக்கு விசாரணை ஒரு வாரம் கூட தோடர்ந்து நடைபெறும்” என்று பேசி வருகிறார். ஒரு வழக்கின் புலன் விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில், சாட்சிகளிடம் இது போலப் பேசுவது, இந்திய தண்டனைச் சட்டம் 202 மற்றும் 203 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டிக்கக் கூடிய குற்ம் என்பது சட்டம் படித்த மகாலட்சுமிக்கு எப்படித் தெரியாமல் போனது.
இது தவிரவும், இவ்வாறு சாட்சிகளைக் கலைக்கும் பணியில் ஈடுபடுவதால் இவரை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 109ன் கீழ், ராஜாவுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, இதே வழக்கில் குற்றவாளியாகவும் சேர்க்க முடியும்.
வழக்கறிஞர் என்று சனிக்கிழமை அன்று புழல் சிறையில் கைதியைப் பார்த்த குற்றத்துக்காக ராம.செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்ய, இந்திய தண்டனைச் சட்டத்தில் வழி உண்டு. இது தவிரவும், சன் டிவியின் முழு நேர ஊழியராக உள்ள ஒருவரை சனிக்கிழமை அன்று கைதியைப் பார்க்க அனுமதித்ததோடு, அவரை சந்தித்து அரை மணி நேரம் விவாதித்து, ஒரு சட்டவிரோத நடவடிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்த குற்றத்துக்காக கல்லாப்பெட்டி கருப்பண்ணன் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உளவுத்துறை டிஜிபியான ராமானுஜத்தைத் தவிர ஒரு அதிகாரி கூட ஜெயலலிதாவுக்கு உண்மையாக செயல்படுவதாகத் தெரியவில்லை. ராமானுஜம் அவர்கள்தான் முன்முயற்சி எடுத்து இந்தத் தகவல்களை ஜெயலலிதாவின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ராஜாவின் மீதான வழக்கை உடைத்து, ராஜாவை மீண்டும் சன்டிவியின் செய்தி ஆசிரியராக நியமிப்பதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சாட்சிகளும் மிரட்டப்பட்டு வருகிறார்கள். ராமானுஜம் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவோம்.