அன்பார்ந்த தோழர்களே…. அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2011ம் ஆண்டைப் பற்றி பார்க்கும் முன், 2010ஐப் பற்றி சிறிது பார்ப்போம்.
2010 சவுக்குக்கு மிக மிக முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு தான் பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் சவுக்கைத் தேடி வந்த ஆண்டு.
கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். சவுதி அரேபியாவில், பிரான்சில், கனடாவில், லண்டனில், அமேரிக்காவில், இலங்கையில், புதுதில்லியில், சென்னையில் உள்ள நம் அனைவரையும் இணைக்கும் நூல் எது ?
சவுக்கை பாராட்டினாலும், அன்போடு திட்டினாலும், கோபமாக கடிந்து கொண்டாலும், வெறுப்பை உமிழ்ந்தாலும், நம்மிடையே ஒரு பிணைப்பு இருந்து கொண்டே இருக்கிறது என்று தானே பொருள் ?
நம் அனைவரையும் இணைக்கும் அந்தப் பிணைப்பு எது ?
வேறு எதுவும் இல்லை. நம் அனைவருக்கும் நாம் வாழும் சமூகத்தின் மீதும் மக்களின் மீதும் இருக்கும் அன்பு, அக்கறை, நேசம், காதல். நாம் அனைவரும் மக்களை நேசிப்பதால் தான் ஒரே தளத்தில் இணைகிறோம்.
மக்களின் மீதான இந்த நேசமே நம்மை இணைக்கிறது. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பார்வையையும், அணுகுமுறையையும் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு துன்பம் நேரும் போது, அதை எதிர்ப்பதிலும், எதிர் நடவடிக்கைகளை எடுப்பதிலும் உள்ள வழிமுறைகளில் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நமது குறிகோள் ஒன்று தானே ?
சவுக்கு என்ற தளம் உருவாகி, இது போல எழுதுவதை நீங்கள் செய்ய முடியாதா என்ன ? உங்களில் ஒவ்வொருவரும் செய்யலாம். ஆனால், ஒவ்வொருவருக்கும் இருக்கும் பணிச்சுமைகள், பிரத்யேக சூழல்கள், இது போல முயற்சி எடுக்க ஏதுவான வாய்ப்புகளை அமைய விடாமல் தடுத்து விட்டது என்றே சவுக்கு எண்ணுகிறது.
அதனால் என்ன ? உங்களின் குரலாக, மக்களின் குரலாகத் தானே சவுக்கு ஒலித்து வருகிறது .. … ? இது நம் அனைவரின் குரலல்லவா ? ஆதிக்க சக்திகளின், அடக்கியாள நினைக்கும் சக்திகளின் அகங்காரத்தை ஆட்டிப் படைக்கும் குரலல்லவா ? இது ஒரு இயக்கமல்லவா ? ஒரு வலுவான மாற்று ஊடகத்தையல்லவா நாம் உருவாக்கியிருக்கிறோம்.. … ?
தேர்தல் நெருங்க நெருங்க, ஊடகங்களின் சூழல் தமிழகத்தில் மாறிக் கொண்டிருக்கிறது. கருணாநிதி நினைத்தாலும் இனி கருணாநிதிக்கோ, திமுகவுக்கோ எதிரான செய்திகளை தடுக்க முடியாது. அதனால், நமது பணி நிறைவடைந்து விட்டதா என்றால் இல்லை.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் சவுக்கு தளம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதில் மாற்று எண்ணம் கொண்டிருக்க மாட்டீர்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், இந்தப் புதிய ஆண்டில், மேன்மேலும் பல்வேறு பிரத்யேக செய்திகளோடு, புதிய பகுதிகளோடு, சவுக்கு தளத்தை, எனது அன்பு உறவுகளின் உறுதுணையோடு செழுமைப் படுத்தி, தொடர்ந்து நமது பணியை செய்வோம் என்பதை சவுக்கு வாசகர்களுக்கு இந்த புத்தாண்டின் செய்தியாக சவுக்கு வழங்குகிறது.
2011ல் மேலும் தொடர்ந்து பணியாற்றுவோம், மேலும் சிறப்பாக பணியாற்றுவோம் என்பதை விட, இந்தப் புத்தாண்டில் நாம் எடுக்கும் உறுதி மொழி வேறு என்னவாக இருக்க முடியும் ?
புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே…. … ….