IPL 2013 கிரிக்கெட் சீசனில் (ஏப்ரல் 3 முதல் மே 26 வரை) இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சீனிவாசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கை வீரர்கள் யுவன் குலசேகராவை ரூ.50 லட்சத்துக்கும் அகிலா தனஞ்ஜெயாவை ரூ.10 லட்சத்துக்கும். கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி தனது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரிரா ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது.
தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கும் ஐபிஎல் அணிகளில் சிங்கள வீரர்கள் இருந்தால் பரவாயில்லை. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழ்நாட்டில் தொழில் செய்து, தமிழன் பணத்தில் பிழைப்பு நடத்தும் சீனிவாசனும், கலாநிதி மாறனும் சிங்களர்களை தங்கள் அணிகளின் முக்கிய வீரர்களாகச் சேர்த்துள்ளனர்.
சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் சிங்கள வீ‘ரர்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதையடுத்து, சிங்கள வீரர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெறாது என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், ஐபிஎல் நிர்வாகமும் முடிவெடுத்துள்ளன.
ஜெயலலிதா மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை தமிழர் படுகொலை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட விஷயங்களால் தமிழக மக்கள் கடும் கொந்தளித்துள்ளனர். தமிழர்களின் இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இலங்கை வீரர்கள் பங்கேற்கும் போட்டியை நடத்த அனுமதிக்க கூடாது. இந்த போட்டியில் வீரர்கள் மட்டுமல்லாது அம்பயர்கள், அதிகாரிகள் யாரும் பங்கேற்க கூடாது. என்று தெரிவித்துள்ளார்.
இப்படி தமிழக மக்கள் உறுதியாக உள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உரிமையாளர்களாக இருக்கும் ஐபிஎல் அணிகளில் மட்டும் சிங்களர்களை அனுமதிப்பது எப்படிப் பொருத்தமாக இருக்கும் ? தமிழ் மக்களைக் கொன்றுகுவித்த சிங்கள ராணுவத்தின் அதிகாரி அஜந்தா மென்டிஸ் என்ற நபர் பூனே வாரியர்ஸ் அணியின் முக்கிய வீரராக உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் அணிகளின் வீரர்கள், பூனே வாரியர்ஸ் அணியோடு விளையாடாமலேயே போய் விடுவார்களா ? அப்படி பூனே வாரியர்ஸ் அணியில் உள்ள ராணுவ அதிகாரியோடு விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் தமிழகத்தில் விளையாடவில்லை என்பதற்காக மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியுமா ?
இப்படி, கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டு விளையாடும் இந்த ஐபிஎல் போட்டிகள் நடக்காமல் போனால் வானம் இடிந்து விழுந்து விடுமா அல்லது, நடந்தால் இந்தியர்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைத்து விடுமா ?
லாப நோக்கோ அல்லது சிங்கள பாசமோ இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தாலேயே சிங்கள வீரர்களை தங்கள் அணிகளுக்காக கலாநிதி மாறனும், சீனிவாசனும் வாங்கியிருக்கக் கூடும். அப்படிப்பட்ட லாபநோக்கோடு சிங்களனிடம் நட்பு பாராட்டும் சீனிவாசனும், கலாநிதிமாறனும் தமிழ்நாட்டில் ஏன் இருக்க வேண்டும் ? இலங்கைக்கே சென்று விடலாமே !!!
கலாநிதி மாறனும், இந்தியா சிமின்ட்ஸ் சீனிவாசனும், தங்கள் அணிகளில் இருந்து சிங்கள வீர்ர்களை உடனடியாக நீக்க வேண்டும். அல்லது சிங்களர்கள்தான் முக்கியமென்று கருதினால், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்.