டாக்டர் கருணாநிதி! அவருடைய வயது 70! அமைதியும் அடக்கமும் நிறைந்தவர் ! மருத்துவத் துறை பேராசிரியராக அரசுப் பணியிலே நீண்ட காலம் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர் ! தனியார் மருத்துவ மனை ஒன்றில்அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் “தினத்தந்தி” நாளிதழின் உரிமையாளரான திரு, சிவந்தி ஆதித்தனின் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பாவம் ! என் பெயரைப் பெற்றுள்ள காரணத்தாலோ என்னவோ 27-3-2013 அன்று அ.தி.மு.க. அரசின் காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு, அன்று இரவு முழுவதும் காவல் துறையினரின் “கண்காணிப்பில்” லாக்கப்”பில் கழித்திருக்கிறார்.
அவர் செய்த குற்றம் என்ன ?
டாக்டர் கருணாநிதி மீது சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி என்பவர் புகார் கொடுத்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா அந்த மருத்துவமனைக்கு வருவது பற்றிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்ற போது, டாக்டர் அவரைத் திட்டியதாகவும், தள்ளியதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருக்கிறார். உடனடியாக அதிமுக அரசின் காவல் துறை டாக்டர் கருணாநிதி மீது; அரசுப்பணியில் தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும் போது, அதிகாரியை அடித்துக் காயப்படுத்துதல்; அரசு அதிகாரி மீது பலமாகத் தாக்குதல்; தடுத்து நிறுத்துதல்; பணியாற்ற விடாமல் குறுக்கீடு செய்தல் போன்ற கடுமையான இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, அந்த மருத்துவர் கருணாநிதியை 18வது மெட்ரோபலிடன் நீதிபதி திரு. ஆனந்தவேலுஅவர்கள் முன்னால் ஆஜர் செய்து, புழல் சிறைச்சாலையிலே கொண்டு போய்அடைத்திருக்கிறார்கள்.
70 வயதான ஒரு மூத்த மருத்துவருக்கு அ.தி.மு.க. ஆட்சியில் என்ன கதி தெரிகிறதா ? அதுவும் ஜெயலலிதா, மருத்துவ மனைக்குச் சென்று சிவந்திஆதித்தன் உடல்நிலையைப் பார்த்து விட்டு வந்த அன்றிரவே இவ்வளவும் நடைபெற்றிருக்கின்றது. திருச்சியில் ராமஜெயமும், மதுரையில் பொட்டு சுரேஷும் படுகொலை செய்யப்பட்டு மாதங்கள் எத்தனை ஆகிறது ? அவர்களைக் கொன்ற குற்றவாளிகளைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. அரசின் காவல் துறைக்குஇயலவில்லை. ஆனால் வயதான ஒரு மூத்த மருத்துவர் மீது இந்த அளவிற்குத்தீவிரமாக இரவோடு இரவாக கைது செய்து புழல் சிறையிலே அடைக்கும் அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன? யாரையாவது கொலை செய்துவிட்டாரா? கொள்ளை அடித்து விட்டாரா ? அல்லது யாரையாவது கடத்தித்தான் சென்றுவிட்டாரா ? அவர் செய்த குற்றம் எல்லாம், முதலமைச்சர் அந்த மருத்துவ மனைக்கு வருவதற்கு முன்பு, அந்தக் குறிப்பிட்ட சப் இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி என்பவர்,மருத்துவ மனைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க வந்த போது, டாக்டர்கருணாநிதி, தீவிரச் சிகிச்சைப் பிரிவிலே (ஐ.சி.யு.) உள்ள சிவந்தி ஆதித்தன்அறைக்குள் “பூட்ஸ்” அணிந்த கால்களுடன் உள்ளே செல்ல வேண்டாம் என்றுஅந்தக் காவல் துறை அதிகாரியிடம் கூறியது தான் குற்றமாம்!
அதற்காகத்தான் இரவோடு இரவாக அந்த வயதான மருத்துவர் கைது செய்யப்பட்டு, நீதிபதியின்முன்னால் உடனடியாகக் கொண்டு போய் ரிமாண்ட் செய்து, அன்றிரவே அவசர அவசரமாக புழல் சிறையிலே அடைத்திருக்கிறார்களாம். என்ன கொடுமைஇது ? தமிழ்நாட்டிலே என்ன நடக்கிறது? “இம்” என்றால் சிறைவாசம், “ஏன்”என்றால் வனவாசமா ? இது தான் அ.தி.மு.க. ஆட்சி சட்டம் ஒழுங்கைப்பாதுகாக்கும் இலட்சணமா ? ஒரு மூத்த மருத்துவர் மீது இந்த அளவிற்குக்கடுமையாக காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கையை வன்மையாகக்கண்டிக்கின்றேன். இதுவே கழக ஆட்சியிலே நடைபெற்றிருக்குமானால்,”காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் பதவியை விட்டு விலகவேண்டும்” என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்திருப்பார்! ஆனால் நான்அப்படியெல்லாம் கூற விரும்பவில்லை. தவறுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அந்த மருத்துவர் டாக்டர் கருணாநிதி அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கினை உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டுமென்றும் அ.தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
நீ ஒரு நடுநிலையாராக நடிக்கவாவது கற்றுக்கொள் ……