யார் இந்த பொறுக்கி. ஈழப் பிரச்சினை குறித்து, தமிழகமெங்கும் வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்திய மாணவச் செல்வங்கள்தான் பொறுக்கி. இப்படி இவர்களை பொறுக்கிகள் என்று அழைப்பது யார் தெரியுமா. இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் தரகரான சுப்ரமணிய சுவாமிதான். பொது நல வழக்குகள் தொடர்ந்து, அதன் மூலம் புகழடைந்து அதை வைத்தே இந்தியப் பிரதமர் ஆகலாம் என்ற கனவோடு இருப்பவர்.
ஈழப் பிரச்சினை முடிந்து போன பிரச்சினையாகி, இனி இது வியாபாரம் ஆகாது என்ற நிலையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் ஈழ விவகாரத்தையும் சிங்கள ஆட்சியாளர்களின் போர்க்குற்றங்களையும் கைவிட்ட நிலையில், மாணவர்களே அப்போராட்டங்களைக் கையில் எடுத்து ஈழ விவகாரம் தமிழகத்தில் மீண்டும் பற்றி எரியத்தக்க பிரச்சினையாக்கினார்கள். மாணவர்களின் இந்தப் போராட்டமே விக்ரமாதித்தனைப் பிடித்த வேதாளம் போல, காங்கிரஸின் தோளில் ஏறிச் சவாரி செய்து கொண்டிருந்த திமுகவை கூட்டணியிலிருந்து விலக வைத்தது.
இந்த மாணவச் செல்வங்களைத்தான் பொறுக்கிகள் என்கிறார் சுப்ரமணிய சுவாமி.
ட்விட்டர் தொடங்கப்பட்டதிலிருந்தே அந்த ட்விட்டரை தனது களமாகப் பயன்படுத்தி வருகிறார் சுப்ரமணியன் சுவாமி.
ட்விட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்கள், மனிதனது ஈகோவை குளிர்விக்கக் கூடிய தன்மை படைத்தன. நமக்குள் இருக்கும் நார்சிஸ்ட் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் தன்மை உடையன. ஃபேஸ் புக்கில் ஒரு நிலைச்செய்தியிட்டு, அதற்கு 50 பேர் லைக் போடுவதும், 20 பேர் பகிர்வதும், அளப்பறியா மகிழ்வைக் கொடுக்கும் தன்மை படைத்தன. இதே போல ட்விட்டரில், நாம் எழுதுவதை ரீட்வீட் செய்யப்படுவதும், பிடித்தமானதாக அறிவிப்பதும்,பெரும் மகிழ்வை அளிக்கும் தன்மை படைத்தன. ஒரு நாளைக்கு மூன்று பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, பலரும் வாயாரப் புகழ்வதை கருணாநிதி ரசித்து வந்தது போல, இந்த லைக்குகளும், ரீட்வீட்டுகளும் ஒரு சாதாரண மனிதனை தன்னைத் தானே ரசிக்க வைத்து ஒரு போதைக்கு அடிமையாக்கும். சாதாரண மனிதர்களுக்கே இந்த சின்ன விஷயங்கள் பெருமகிழ்ச்சியைத் தருகையில், சுப்ரமணிய சுவாமி போன்ற போலி ஈகோ பிடித்த மனிதர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. சிகரெட் பிடிப்பதைப் போலவே தொடக்கத்தில் ஒரு த்ரில்லைக் கொடுக்கும் இந்த சமூக வலைத்தளங்கள், நாளடைவில் பழக்கமாக மாறி, ஒரு கட்டத்தில் இது இல்லாவிட்டால், மனச்சிதைவு ஏற்படும் அளவுக்கு மோசமான போதையாக உருமாறுகின்றன. இப்படி மனச்சிதைவு அடைந்த ஒரு ட்விட்டர் அடிமையாக உருவாகியிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. ஐபிஎல்லில் வரும் சியர் லீடர்களைப் போல இவருக்கென்று ஒரு விசிறிக் கூட்டம் இருக்கிறது. சுவாமி, காலையில் பல் விளக்கினேன் என்று சொன்னால், சுவாமி பல் விளக்கியது இந்தியாவே பல் விளக்கியது போல, சுவாமி அவர் பல்லை விளக்கவில்லை, இந்தியாவையே விளக்கியிருக்கிறார் என்று பரபரப்பாக அவர் ட்வீட்களை ரீட்வீட் செய்ய ஒரு கூட்டம் ட்விட்டரில் இதே வேலையாக அலைந்து வருகிறது.
2004 மக்களவைத் தேர்தலில் மதுரையிலிருந்து போட்டியிட்ட சுப்ரமணியன் சுவாமி பெற்ற மொத்த வாக்குகள் 12,000. ஆனால் ட்விட்டரில் அவரைப் பின்பற்றுவர்களின் எண்ணிக்கை 1,54,196
தனக்குப் பிடிக்காத மனிதர்களைக் குறி வைத்து, மோசமான ட்வீட் போடுவதும், தமிழர்களை, குறிப்பாக தமிழின உணர்வாளர்களை இழிவாகப் பேசுவதும் சுவாமியின் வழக்கம். பிடிக்காத எதிரிகளைக் கூட நாகரீகமாக விமர்சிப்பதே பண்பாடு. ஆனால் சோனியா காந்தியை தடாகை என்று வர்ணிப்பதும், அவரின் உடல் நலக்குறைவைக் கொண்டாடுவதும், அவருக்கு கேன்சர் வியாதி என்று செய்தி வெளியிடுவதும், சுவாமியின் வழக்கம்.
யார் இந்த சுப்ரமணியன் சுவாமி… ?
சீத்தாராம் சுப்ரமணியன் மற்றும் பத்மாவதி சுப்ரமணியன் என்ற தம்பதியினருக்கு பிறந்தவர்தான் இந்த சுப்ரமணியன் சுவாமி. கேரளாவைச் சேர்ந்த ஐயர் குடும்பம் சுவாமியின் குடும்பம். இவரது குடும்பத்தினரின் பூர்வீகம், மதுரை மாவட்டம் சோழவந்தான்.
டெல்லியில் உள்ள இந்துக் கல்லூரியில் இளங்கலை கணக்கு படித்து விட்டு, இந்திய புள்ளியியல் கல்லூரியில் முதுகலைப் படித்த சுவாமி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெருகிறார். இதுதான் சுப்ரமணியன் சுவாமியின் பெயருக்கு முன்னால் உள்ள டாக்டர் பட்டம். இவரைப் பலர் வழக்கறிஞர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி வழக்கறிஞர் அல்ல. படிப்பு முடிந்ததும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் உதவுப் பொருளாதார ஆலோசகராக பணியாற்றுகிறார் சுவாமி. பிறகு சில காலம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார்.
1964ம் ஆண்டு முதல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முழு நேர பொருளாதாரப் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
பின்னாளில் இந்தியா திரும்பிய சுவாமி டெல்லி ஐஐடியில் பேராசிரியராக கணிதம் கற்பிக்கிறார். பின்னாளில் ஐஐடியிலிருந்து இந்திரா காந்தியால் பணி நீக்கம் செய்யப்படுகிறார். பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகே சுவாமியின் அரசியல் நுழைவு நடக்கிறது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சர்வோதய இயக்கத்திலிருந்துதான் தன் அரசியல் வாழ்வை தொடங்குகிறார் சுவாமி. பாரதீய ஜனதா கட்சியின் முந்தைய வடிவான ஜன சங்க் மூலமாக ராஜ்ய சபை உறுப்பினராகிறார் சுவாமி.
இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுவாமி அமெரிக்காவுக்கு தப்பிச் செல்கிறார். அப்படி அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று தங்கியிருந்தபோதுதான், சுவாமி அமெரிக்க உளவு நிறுவனத்தின் ஏஜென்டாகிறார் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, சுவாமி மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்த நிலையில், இந்தியா வந்து பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் தப்பிச் சென்றது சுவாமியை புகழடைய வைத்தது. பின்னர் 1990ல் சந்திரசேகர் அரசில் வணிகம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்தார் சுவாமி.
அமைச்சராக இருந்தபொழுதிலிருந்தே சுவாமியின் அரசியல் தரகு வேலைகள் தொடங்கி விட்டன. சுவாமியை விட மிகப்பெரிய ப்ரோக்கரான சந்திரா சுவாமி, சுப்ரமணியன் சுவாமியின் நெருங்கிய நண்பர் மற்றும் கூட்டாளி என்பது குறிப்பிடத் தக்கது. சந்திரா சுவாமி, சுப்ரமணியன் சுவாமி மற்றும் நரசிம்மராவ் ஆகியோரின் கூட்டணி, ராஜீவ் கொலையில் வகித்த பங்கு இன்று வரை விசாரிக்கப்படாமலேயே உள்ளது.
சிபிஐ குற்றவாளி சந்திரா சுவாமியுடன் சுப்ரமணியன் சுவாமி
சுப்ரமணியன் சுவாமிக்கு சரியான எதிரியாக அமைந்தவர் ஜெயலலிதாதான். டெல்லியில் நடந்த ஒரு தேனீர் விருந்தின் மூலம், அதிமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணி ஏற்படுத்தி ஒரே ஓட்டில் பாஜக அரசைக் கவிழ்த்தார் சுப்ரமணியன் சுவாமி. அப்போது சுப்ரமணியன் சுவாமியை பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, 1991 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் சுப்ரமணியன் சுவாமியை கதற வைத்தார். 1995ல் வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வதேச பறையா என்று சொன்னதற்காக, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து,சுப்ரமணியன் சுவாமியை அஞ்சி ஓடவைத்தார் ஜெயலலிதா. சுப்ரமணியன் சுவாமியை ஜெயலலிதா எந்த அளவுக்கு வெறுத்தார் என்றால், 1995ல் சுப்ரமணியன் சுவாமி சென்னை உயர்நீதிமன்றம் வந்த பொழுது, அதிமுக மகளிர் அணியினர் அவரை நோக்கி புடவையைத் தூக்கிக் காண்பித்தனர் என்கிறது இந்தியா டுடே கட்டுரை. Jayalalithaa detested him so much that AIADMK women’s wing volunteers, who gathered in large numbers, welcomed him at the High Court by raising their skirts.
இந்தியாவை நேசிக்கிறேன், இந்திய தேசியம் எனது உயிர்மூச்சு என்றெல்லாம் அறிவித்துக் கொள்ளும் சுவாமி, உண்மையில் ஒரு தேசவிரோதி. இந்தியா என்பது, பல்வேறு மதம் மற்றும் மொழி பேசும் மக்களைக் கொண்ட, ஒரு பன்முகத் தன்மை படைத்த நாடு என்பதை மறந்து, இந்தியாவை இந்துக்களின் நாடு என்று பறைசாற்றி அதன் மூலம் சிறுபான்மையினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்துவது சுவாமிக்கு வழக்கமான ஒன்று. மும்பையிலிருந்து வெளிவரும் டிஎன்ஏ என்ற நாளிதழில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒழிப்பது எப்படி என்ற விஷத்தைக் கக்கும் கட்டுரையை எழுதினார் சுவாமி. இணைப்பு
Implement the uniform civil code, make learning of Sanskrit and singing of Vande Mataram mandatory, and declare India a Hindu Rashtra in which non-Hindus can vote only if they proudly acknowledge that their ancestors were Hindus. Rename India Hindustan as a nation of Hindus and those whose ancestors were Hindus.
அந்தக் கட்டுரையிலிருந்து உதாரணத்துக்கு ஒன்றே ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டத்தை அமல்படுத்த வேண்டும். சமஸ்கிருதம் கற்றுக் கொள்வது மற்றும் வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். இது இந்துக்களின் தேசம், எங்கள் மூதாதையர்கள் இந்துக்கள் என்று ஒப்புக் கொள்ளும் இந்து அல்லாதவர்கள் மட்டுமே (முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்கள் மற்றும் இதர மதத்தினர்) வாக்களிக்க அனுமதிக்கப் படவேண்டும். இந்தியாவின் பெயரை இந்துஸ்தான் என்று மாற்றவேண்டும். இது அக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
இப்படிப்பட்ட விஷம் தோய்ந்த கட்டுரை எழுதியதற்காக சுப்ரமணியன் சுவாமியை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் விரிவுரையாற்ற அனுமதி மறுத்தது.
சுப்ரமணியன் சுவாமி நடத்தி வரும் கட்சியின் பெயர் ஜனதா கட்சி. இந்தக் கட்சியில் அவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவையும் தவிர வேறு யாரும் உறுப்பினராக இருப்பதாக எந்தத் தகவலும் விக்கிபீடியாவில் கூட இல்லை. சுவாமியின் மனைவி ரோக்சனா சுவாமி கூட அக்கட்சியில் உறுப்பினராக இருப்பதாகத் தெரியவில்லை. இந்த இரு நபர் கட்சியை வைத்துக் கொண்டு சுவாமி செய்யும் அளப்பறை இருக்கிறதே…. அப்பப்பா..அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதும், இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்பதும் இவர் அவ்வப்போது உளறும் உளறல்கள்.
பொதுநல வழக்கு ஆர்வலர் என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டாலும் சுப்ரமணியன் சுவாமியின் வழக்குகளில் 99 சதவிகித வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை. உதாரணத்துக்கு
சுவாமி நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு ஹம்ஷிபுரா கலவரம் குறித்த வழக்கு. 1987ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் ஹம்சிப்புராவில் நடந்த கலவரத்தில் 42 இஸ்லாமிய இளைஞர்களை ஒரு வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர் அவர்களைச் சுட்டுக் கொன்று, அவர்கள் பிணங்களை ஆற்றில் வீசி எறிந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் உத்தரப்பிரதேசம் காஸியாபாத் நீதிமன்றத்திலிருந்து டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அந்த வழக்கு விசாரணை மிக மிக தாமதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில் 25 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் மீண்டும் புலன் விசாரணை நடத்தி ப.சிதம்பரத்துக்கு அந்த கலவரத்தில் இருந்த பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார் சுவாமி.இணைப்பு
சுவாமி அந்த மனுவைத் தாக்கல் செய்ததன் ஒரே நோக்கம், 42 இஸ்லாமிய இளைஞர்களை சுட்டுக் கொன்ற காவல்துறையினரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே.
இதே போல, காலங்காலமாக, பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு, அரசுக் கட்டுப்பாட்டில் எடுத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தார் சுப்ரமணியன் சுவாமி. இந்து சனாதன தர்மத்தை நிலை நிறுத்தி, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை அழித்து ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே சுவாமியின் பிரதான நோக்கம்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே சுவாமி பொது நல வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகிறார். சுப்ரமணியன் சுவாமி இப்படிப்பட்ட வழக்குகளைத் தொடுப்பதால், இந்தியாவின் ஜனநாயகத்தையே இவர்தான் காப்பாற்றுகிறார் என்பது போன்ற ஒரு பிம்பம், சுவாமியின் சியர் லீடர்களால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. வெளியிலிருந்து சுவாமியைப் பார்ப்பவர்களும், இந்த பிம்பத்தை நம்பி வருகிறார்கள். ஒரு நல்ல புலனாய்வுப் பத்திரிக்கையாளர் நேர்மையாக தன் பணியைச் செய்து வந்தாலே, இது போன்ற தகவல்கள் தானாக வந்து சேரும். சவுக்கு தளத்தை நடத்தும் ஒரு சாதாரண நபருக்கே இது போன்ற தகவல்கள் வந்து சேர்கையில், 40 ஆண்டுகாலமாக இந்தியாவின் அரசியல் தரகராக உள்ள ஒரு நபருக்கு ஆதாரங்கள் வந்து சேர்வது ஒன்றும் வியக்கத்தக்கதல்ல. இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும், பார்ப்பனர்கள் இன்னும் இந்தியாவின் பெரும்பாலான அதிகார மையங்களில் இருந்து வருகிறார்கள். அந்நியன் அம்பி போல, பார்ப்பனர்கள் மட்டுமே நேர்மையானவர்கள்,ஊழலுக்கு எதிராகப் போராடுவார்கள் என்ற மாயை நிலவி வருகிறது.இந்த மாயையையின் பகுதியாகவே, சுவாமியிடம், அதிகார மையத்தில் உள்ள பார்ப்பனர்கள் ஆதாரங்களைக் கொண்டு சேர்க்கிறார்கள். அந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு சுவாமி சில நேர்வுகளில் வழக்கு தொடுப்பதும், சில நேர்வுகளில் பணம் சம்பாதிப்பதுமான பணிகளைச் செய்து வருகிறார்.
உலகம் முழுக்க பல்வேறு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் சுப்ரமணியன் சுவாமிக்கு பணம் எங்கிருந்து வருகிறது, அவர் செலவுகளுக்கு யார் பணம் தருகிறார், அவர் என்ன வேலை செய்கிறார் என்ற விபரங்கள் மர்மமாகவே உள்ளன. 24 மணி நேரமும் அவருக்கு வழங்கப்படும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள், விடுதலைப் புலிகளால் அவர் உயிருக்கு ஆபத்து என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டது என்று சிங்கள அரசே அறிவித்துள்ள நிலையில், இன்னமும் எதற்காக சுவாமிக்கு பாதுகாப்பு என்பதை சுவாமிதான் விளக்க வேண்டும். தேசத்தை நேசிக்கும் மிகப்பெரிய தேசபக்தனாக தன்னை அறிவித்துக் கொள்ளும் சுவாமி, தேசத்துக்கு செலவு ஏற்படுத்தும் இந்த பாதுகாப்பை வேண்டாம் என்று ஏன் இது வரை அறிவிக்கவில்லை? மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிக்கும் ஒரு நபர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும்?
சுவாமியால் கடுமையான விமர்சனத்துக்கும் துவேஷத்துக்கும் உள்ளாகி வரும் இஸ்லாமிய இயக்கங்கள், சுவாமி மற்றும் இதர வெட்டித் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் கருப்புப் பூனை பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்க வேண்டும்.
ஈழப் போராட்டம் 2009ல் உச்சகட்டத்தில் இருந்தபோதுதான் சுவாமி தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், போராட்டக் குழுவினரை கேவலமாக விமர்சித்தும் வந்தார். அந்தச் சூழலில்தான், சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அப்படி போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த ஒரு நாளில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுவாமி வருகை தரும் விவகாரம் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களுக்குத் தெரிய வந்தது. நீதிபதி சந்துரு மற்றும் நீதிபதி மிஸ்ரா அமர்வின் முன்பு வாதாடுவதற்காக அமர்ந்திருந்த சுவாமி இருந்த நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் நுழைந்தார்கள். பார்ப்பன வெறியனே வெளியேறு, தமிழின விரோதியே வெளியேறு என்று முழக்கமிட்டபடி நுழைந்த வழக்கறிஞர்களைப் பார்த்து சுவாமி புன்முறுவல் புரிந்தார். அவர் புன்முறுவல் புரிந்தது, முழக்கமிட்டுக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை மேலும் எரிச்சலாக்கியது. ஒரு வழக்கறிஞர் சுவாமியின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். தன் வாழ்நாளில் வலி என்றால் என்னவென்றே அறிந்திராத சுவாமி முகத்தில் அதிர்ச்சி…இந்தியாவின் அடுத்த பிரதமராக வேண்டிய நபரை இப்படி அடிக்கிறார்களே என்ற அதிர்ச்சி தெரிந்தது. ஒரு வழக்கறிஞர் சுவாமியின் பாதுகாவலர்கள் உள்ளே நுழைய முடியாத வகையில் கதவை உட்புறமாக தாளிட்டார். ஒரு வழக்கறிஞர் தன் கையோடு கொண்டு வந்திருந்த முட்டைகளை எடுத்து சர் சர் என்று சுவாமியை நோக்கி வீசினார். முட்டைகள் சுவாமியின் முகத்தில் பட்டு உடைந்தன. நீதிபதிகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். நீதிபதி சந்துரு, போதும் நிறுத்துங்கள் என்று கத்தியதை யாரும் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. தொடர்ந்து முட்டைகள் தீரும் வரை வீசினர். முட்டைகள் தீர்ந்ததும் முழக்கமிட்டபடி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினர்.
சுவாமியைப் பார்த்து நீதிபதிகள், “ஆர் யூ ஆல்ரைட்” என்று கேட்டனர். சுவாமி, நீங்களே பார்த்தீர்கள் அல்லவா என்ன நடந்ததென்று…என்று கூறினார். நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்தனர் நீதிபதிகள். மறுநாள் சுப்ரமணியன் சுவாமி மீது முட்டை அடித்த வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பார்ப்பனர்களால் தமிழகமே நாசமாகிப்போனது என்று எதற்கெடுத்தாலும் பார்ப்பனர்களைக் குறை கூறும் கருணாநிதி சுப்ரமணியன் சுவாமியை வழக்கறிஞர்கள் தாக்கிவிட்டார்கள் என்றதும் துடித்தார் கதறினார், வேதனைப்பட்டார், அழுதார். தனது காவல்துறையை முடுக்கி விட்டு உடனடியாக சம்பவத்துக்கு காரணமான வழக்கறிஞர்களை எப்படியாவது கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். நீதிமன்றத்துக்குள் நுழைந்து வழக்கறிஞர்களை கைது செய்ய காவல்துறைக்கு எந்தத் தடையும் இல்லை என்று அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக இருந்த, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் முக்கோபாத்யாயா காவல்துறை ஆணையருக்கு அனுமதி அளித்தார் என்று கூறப்படுகிறது.
இதற்குப் பிறகுதான் வழக்கறிஞர்கள் மீதான கொடுந்தாக்குதல் 19 பிப்ரவரி 2009 அன்று அரங்கேறியது. அதற்குப் பின்பு வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி சென்னை உயர்நீதிமன்றம் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டதும், அதன் பின் அவ்வழக்கு உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டதும் வரலாறு. இந்நிலையில் சிங்கள அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையில் விவாதத்துக்கு வருவதை ஒட்டி தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் தொடங்கியது முதல் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக விஷத்தை ட்விட்டரில் கக்கி வருகிறார் சுவாமி.
உச்சநீதிமன்றத்தில் பிரதமர் முதல் முக்கிய தலைவர்கள் வரை அனைவர் மீதும் வழக்கு தொடுத்து, இந்தியாவிலேயே மிக முக்கிய நபராக தன்னைக் காண்பித்துக் கொள்வதால், இவரின் ட்வீட்டுகளுக்கு நேரடியாக யாரும் பதிலளிப்பதில்லை. மேலும் தமிழ் ட்வீட்டர்கள் தமிழில் உரையாடுவதால், அவை குறித்து சுவாமி ஏளனமாக எனக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர்கள் தமிழில் ட்வீட் செய்கிறார்கள் என்று ஏளனமாக ட்வீட் செய்தார். மைலாப்பூரில் பிறந்த ஒரு ஐயர் தமிழ் தெரியாது என்று சொல்லிக் கொள்வதை பெருமையாகக் கருதுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இதைத் தவிர்த்து விடுதலைப் புலிகளையும், புலி ஆதரவாளர்களையும் எலிகள் என்று ட்விட்டரில் அழைப்பதை சுவாமி வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இனத்துக்காக போர்க்களத்தில் வீரச்சமர் புரியும் புலிகள் எலிகள் என்றால், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களோடு எங்கே சென்றாலும் வலம் வரும் சுவாமி மாவீரரா ?
இப்படி தமிழினத்துக்கு எதிராக தொடர்ந்து ட்வீட்டுகள் செய்து கொண்டிருந்த சுவாமிக்கு உரிய முறையில் பதிலடி ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டது. அவரின் வண்டவாளங்கள் ட்வீட்டர் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டன. எந்தக் கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாத சுவாமி, ட்வீட் செய்தவரை ட்ராகுலா என்று அழைத்து மகிழ்ந்து கொண்டார். ட்விட்டரில் வழக்கமாக சொம்புகளை மட்டுமே சந்தித்து வந்த சுவாமிக்கு முதன் முதலாக அவரோடு நேரடியாக மோதும் ஒருவரைச் சந்தித்ததும் சற்று கலக்கமாகத்தான் இருந்திருக்கும். ஒரிரு நாட்களுக்குப் பிறகு ப்ளாக் செய்தார். இவர் ப்ளாக் செய்த தகவல் ட்விட்டரிலேயே அறிவிக்கப்பட்டதும் மற்ற ட்வீட்டர்கள், ஏன் ப்ளாக் செய்தாய் கோழையே என்று சுவாமியை ட்விட்டரில் கேள்வி கேட்கத் தொடங்கினர். இப்படியான கேள்விகள் அவரது மாவீரன் இமேஜுக்கு இழுக்கு என்பதால், இரண்டு நாட்கள் கழித்து சுவாமி அன்பிளாக் செய்தார்.
சுவாமியின் விஷமத்தனம் மற்றும் முட்டாள்த்தனம் என்னவென்றால், தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்களை தொடர்ந்து அனுமதிக்கும் ஒரே காரணத்துக்காக, ஜெயலலிதா அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்ப்படுத்த வேண்டும் என்பது. எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு, ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்வது சிரமமான காரியம். அதுவும் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சிச் சூழலில், இயலவே இயலாத காரியம். இந்த விபரங்களை சுவாமி அறியாதவர் அல்ல. ஆனால் மீண்டும் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதையே வலியுறுத்துவதால் சுவாமியின் சியர் லீடர்கள் அகமகிழ்வதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. இப்படி மீண்டும் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி என்று ட்வீட் செய்வதைப் பார்த்த ஜெயலலிதா சுவாமி மீது ஏதாவது ஒரு வழக்கு தொடுத்து, அதன் மூலம் மீண்டும் புகழ் பெறலாம் என்ற உத்தேசத்திலும் இது போல ட்வீட் செய்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
பொதுநல வழக்குகளையும், இதர வழக்குகளையும், நீதிமன்றங்களில் தொடர்ந்து அதன் மூலம் புகழடைந்து இந்தியப் பிரதமராகும் கனவில் இருக்கும் சுப்ரமணியன் சுவாமியின் கனவை முதன் முதலாக தகர்த்து, சுவாமி என்ற புழுவை அனலில் வாட்டியிருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர்.
கடந்த வாரம் கேரள மீனவர்களைக் கொன்ற இத்தாலிய மாலுமிகளை கைது செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இத்தாலிய மீனவர்கள் திரும்ப வந்து விட்டபடியால், சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையைத் தொடங்குவது குறித்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்த வேளையில் சுப்ரமணியன் சுவாமி எழுந்தார். நான் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறேன் என்றார்.
“யார் நீங்கள் ? “ என்றார் தலைமை நீதிபதி. “நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறேன்“ என்றார் சுவாமி. “நான் உங்களை யார் என்று கேட்டேன்“ என்றார் நீதிபதி. தொடர்ந்து நீதிபதி “நீங்கள் வழக்கறிஞர் இல்லை. இங்கே ஆஜராக உங்களுக்கு உரிமை இல்லை. வாதாடவும் உரிமை இல்லை. சாலையில் செல்லும் ஒரு நபர் இங்கே வந்து நான் வாதாட வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தால் என்ன நடக்கும். இதற்கு முன்பு நீங்கள் இப்படிச் செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்“
சுவாமி அதற்கு பதிலளிக்கும் முன்பாகவே “நீங்கள் எதற்காக முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறீர்கள்.. இங்கே அமர உங்களுக்கு உரிமை இல்லை. இந்த நாற்காலிகள் வழக்கறிஞர்களுக்கானது. வழக்கு தொடுப்பவர்களுக்கானது அல்ல. உங்களுக்கு இங்கே உட்கார உரிமை இல்லை“ என்றார் நீதிபதி.
“நீதிமன்றம் நான் இருப்பதை விரும்பவில்லை என்றால் நான் வெளியேறுகிறேன்“ என்றார் சுவாமி.
“நீங்கள் நீதிமன்றத்துக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் இந்த நாற்காலிகளில் உட்கார உங்களுக்கு உரிமை இல்லை என்றுதான் சொல்கிறேன்“ என்றார் நீதிபதி.
சுவாமி, இங்கே ஒரு ரகசியக் கூட்டு உள்ளது (Collusion) என்றார்.
கடும் கோபமடைந்த நீதிபதி, என்ன பேசுகிறோம் என்ற எச்சரிக்கையோடு பேசுங்கள்… ரகசியக் கூட்டு என்றால் என்ன ? “ என்றார்.
இங்கே என்றால் இங்கே இல்லை. வெளியே… மத்திய அரசு இத்தாலி அரசுக்கு இத்தாலிய மாலுமிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று உறுதி மொழி அளித்துள்ளது என்று லூசுத்தனமாக பேசி விட்டு வெளியேறினார் சுவாமி.
இத்தாலிய மாலுமிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று இந்திய அரசு அளித்த உறுதிமொழி வெளிப்படையாகவே அளிக்கப்பட்டது. அதற்கான காரணம், இத்தாலிய மாலுமிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் மரண தண்டனை கொடுக்க வழியில்லை. இதில் என்ன ரகசியக் கூட்டோ, பொரியலோ இருக்கிறது.. ?
தலைமை நீதிபதியின் இந்தக் கருத்தை இந்தியாவில் உள்ள அத்தனை நீதிமன்றங்களும், நீதிபதிகளும் பின்பற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள எந்த உயர்நீதிமன்றத்திலும், சாதாரணமாக வழக்கு தொடுக்கும் ஒருவரை, வழக்கறிஞர்கள் நாற்காலியில் அமர அனுமதிப்பது இல்லை. அப்படி இருக்கையில் சுப்ரமணியன் சுவாமிக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை… சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி சுப்ரமணியன் சுவாமி எந்த வழக்குக்காக வந்தாலும் வழக்கறிஞர் நாற்காலியில் அமர அனுமதிக்கப் படமாட்டார். இதை வழக்கறிஞர்கள் உறுதி செய்வார்கள்.
சுவாமி போன்ற அரசியல் தரகர்களைக் கண்டு பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். ப.சிதம்பரம் சுவாமியைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருக்கையிலேயே மிக மிக எளிதாக, சுவாமிக்கான 24 மணி நேர பாதுகாப்பை விலக்கிக் கொண்டிருக்க முடியும். ஆனால் சிதம்பரத்தின் ஊழல்கள் அவரை சுவாமியைப் பார்த்து அஞ்ச வைக்கிறது. சிதம்பரத்தைப் போலவே பல்வேறு ஊழல் அரசியல்வாதிகளும் சுவாமியைப் பார்த்து அஞ்சுகிறார்கள். இந்த அரசியல்வாதிகள் ஒரு நேர்மையான நபரைப் பார்த்து அஞ்சினால் மகிழலாம். ஆனால் இவர்கள் அஞ்சுவது, ஒரு ப்ளாக்மெயில் பேர்விழியிடம்.
ராம் ஜெத்மலானி சட்டத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக சுவாமியின் மனைவி ரோக்ஷனாவை நியமிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. சுப்ரமணியன் சுவாமியின் மனைவி என்பதால் அனைத்து மட்டங்களிலும் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு சட்டத்துறை அமைச்சரை அடைகிறது. ரோக்ஷனா சுவாமி வழக்கறிஞராகி 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் ஆகியிருந்தது. நீதிபதியாக குறைந்தது 10 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற தகுதியை நூலளவில்தான் பூர்த்தி செய்திருந்தார் ஆனால் 12 ஆண்டுகள், 15 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றும் பெண் வழக்கறிஞர்கள் டெல்லி நீதிமன்றத்திலேயே இருந்தனர். இந்த காரணத்தால் ராம் ஜெத்மலானி சுவாமியின் மனைவி நீதிபதியாவதை நிராகரித்தார். சட்ட அமைச்சர் நிராகரித்ததை அப்போதைய குடியரசுத் தலைவர் அப்படியே ஏற்றுக் கொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக, குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் மீதும், அவர் மகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார் சுவாமி.
சுவாமி யார் என்பதை, சுவாமியோடு சங் பரிவாரத்தில் இருக்கும் ஒருவர் சொன்னதைக் கூறி இக்கட்டுரையை முடிப்பது பொருத்தமாக இருக்கும்.
நோய்ப்பிடித்த பூச்சி (Diseased insect) என்ற தலைப்பில் ராம் ஜெத்மலானி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி. இணைப்பு
This country has suffered many a misfortune but none greater than the vice and persistence in our public life of a despicable character called Subramanian Swamy. He has been a life of character assassination, malicious mendacity and sordid blackmail of any one who happens to cross his path. No body has been able to deflect him from his criminal course of conduct because few have the inclination to take on this vicious viper and expose him for what he really is.
இந்த தேசம் பல துன்பங்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் சுப்ரமணியன் சுவாமி என்ற நபர் நம் சமூகத்தில் இருப்பதைப் போன்ற ஒரு துன்பத்தை சந்தித்ததேயில்லை. அவர் வழியில் யார் குறுக்கிட்டாலும் அவர்களின் ஆளுமையை நாசம் செய்து, குரூர எண்ணத்தோடு ப்ளாக் மெயிலில் ஈடுபடும் ஒரு வாழ்க்கை சுப்ரமணியன் சுவாமியின் வாழ்க்கை. இந்த விஷப்பாம்பை அடக்க யாருமே முயலாத காரணத்தால் சுவாமியின் அவர் செல்லும் குற்றப்பாதையிலிருந்து அவரை மாற்ற முடியவில்லை.
Most good men have no stomach for controversies and fights at the Swamy level. To make mean attacks on those who in good faith have helped him in life is his speciality. And behind all his evil is one fostering frustration that he has not become the Prime Minister of India!
சுவாமியின் தரத்துக்கு கீழிறங்கி அவரோடு சண்டை போட யாரும் தயாராக இல்லை. அவருக்கு நெருக்கடியான நேரத்தில் உதவி செய்தவர்கள் மீது மோசமான தாக்குதலை தொடுப்பது சுப்ரமணியன் சுவாமியின் சிறப்பம்சம். சுவாமியின் இப்படிப்பட்ட வெறுப்பான நடவடிக்கைகளுக்குப் பின்னால் இந்தியாவின் பிரதமர் ஆக முடியவில்லையே என்ற விரக்தி உள்ளது.
True, democracy must take in its stride even dangerous megalomaniacs like him, but equally the people must know what they are dealing with. This diseased insect cannot be disinfected. He has to be crushed and carefully incinerated. It is not enough to throw him into the gutter. That is his natural habitat. There he will grow and flourish.
ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்றதொரு கோமாளிகளையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றாலும், சுவாமி என்ற நபர் யார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நோய்வாய்ப்பட்ட பூச்சியை கிருமி நீக்கம் செய்ய முடியாது. அந்தப் பூச்சி நசுக்கப்பட்டு அழிக்கப்படவேண்டும். இந்தப் பூச்சியை சாக்கடையில் எறிய முடியாது…. ஏனெனில் அது வசிக்கும் இடமே அதுதான். அந்த இடம் அந்தப் பூச்சியின் இயல்பான வாழ்விடம்.
Savukku,
you twitted like ‘really Tamils are obsessed by their race’ .what a comedy this is the greatest joke I seen. Malayalis ,telugus even kanndiga are race I accepted it. but, Tamils are spilted into various castes. This is bitter reality. In Tamil Nadu, Brahmins continouly insulted that’s why what’s wrong with this.Even, in central government , all MPs came as unit fight for common issue never seen. what about kaveri issue hahaha