இந்திய அணு சக்தித் துறையின் புகழ் பெற்ற விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இந்திய அணு சக்தித் துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனாக இருந்து ஓய்வுபெற்றவர். இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைத் தீவிரமாக எதிர்த்தவர். அவரிடம் பேசியதில் இருந்து…
”அணு சக்திக்கோ, அணு உலைகளுக்கோ நான் எதிரானவன் அல்ல. அணு சக்தி என்பது சிறந்த தொழில்நுட்பம். அதே நேரம் ஆபத்தான தொழில்நுட்பமும்கூட. அதை யாருக்காக எந்த மக்களுக்காகப் பயன்படுத்துகிறோமோ… அந்த மக்கள் மீது அக்கறையும், அன்பும்கொண்ட விஞ்ஞானிகளால் மட்டுமே அதை வெற்றிகரமாக நிறுவ முடியும். ஊழலும் லஞ்சமும் மலிந்துவிட்ட இன்றையச் சூழலில் இவர்களால் வெற்றிகரமாக ஓர் அணு உலையை அமைக்க முடியாது.”
”உலகின் மிகச் சிறந்த உயர் தொழில்நுட்பத் தரத்தில் கூடங்குளம் அணு உலை உள்ளதாக ரஷ்ய, இந்திய அதிகாரிகள் கூறுகிறார்களே?”
”ரஷ்யா இதுவரை உலகெங்கிலும் அமைத்த 20 அணு உலைகளைப் போலவே கூடங்குளத்திலும் அமைத்தது என்றால், அது பிரச்னை இல்லை. ஆனால், கூடங்குளம் அணு உலை தரம் குறைந்த பொருட்களால் கட்டப்பட்டது என்ற சந்தேகம் மக்களுக்கு மட்டுமல்ல… எனக்கும் இருக்கிறது. அணு உலைக்கு உதிரிப் பாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களைச் சார்ந்த இருவரை, ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்திருக்கிறார்கள். அப்படி கைதானவர்களுக்கும் அணு உலை நிர்மாணத்துக்கும் தொடர்பு உண்டா என்பதைத் தெளிவுபடுத்தும் பொறுப்பு அணு உலை நிர்வாகத்துக்கு உண்டு. கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் தரமானவை என்று ரஷ்ய நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. உண்மையிலேயே இந்தக் கட்டுமானத்தில் பிரச்னை இருந்தால், அதற்கு ரஷ்ய நிறுவனம் பொறுப்பேற்காது. இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலையில் அதற்கான பொறுப்பைக் கட்டிவிடுவார்கள். நாளை ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், யார் பொறுப்பு ஏற்பார்கள்?”
”சுப.உதயகுமாரன் அரசியல் உள்நோக்கத்துடன் மக்களைத் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்படுகிறதே?”
”கூடங்குளம் அணு உலை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அந்த மக்கள் போராடி வருகிறார்கள். இன்று, மிகச் சிறந்த முறையில் உதயகுமாரன் அந்த மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறார். ஊழலில் ஊறித் திளைக்கும் இந்திய அரசியல்வாதிகள், உதயகுமாரன் மீது குற்றம் சுமத்துவது வேடிக்கையாக இருக்கிறது.”
”சோதனை ஓட்டங்கள் முடிந்து, மின் உற்பத்தி இந்த மாதம் தொடங்கும் என்று கூடங்குளம் அணு உலை இயக்குநர் சுந்தர் கூறியிருக்கிறாரே?”
”அணுத் தொழில்நுட்பங்களைக் கையாளும் விஞ்ஞானிகள் அரசியல்வாதிகளின் முடிவுகளுக்கு தலையாட்டுபவர்களாக இருக்கக் கூடாது. அரசின் கருத்துக்களுக்கு ஜால்ரா அடிக்கிற நபர்கள்தான் இன்றைக்கு அணு உலையின் உயர் பதவிகளுக்கு வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் உலகெங்கிலும் அணு சக்திக்கு எதிராக மக்களிடம் மாறுபட்ட கருத்துக்களும் அச்சமும் உருவாகி இருக்கிறது. அதைப் போக்க வேண்டியது அரசின் கடமை. அணு உலையைத் திறந்தால் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு சரியாகும் என்பது பொய் பிரசாரம். கூடங்குளத்தில் இருந்து வெறும் 300 மெகாவாட் மின்சாரம்தான் தமிழகத்துக்குக் கிடைக்கும். இதைவிடக் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழிகள் உள்ளன. மின் தேவையைக் காரணம் காட்டி அவசரமாக அணு உலையைத் திறக்காதீர்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளைக்கொண்டு, அதன் தரத்தைப் பரிசோதித்த பிறகு ஒரு முடிவுக்கு வரலாம். அதுவரை பொறுத்திருங்கள்.”
– டி.அருள் எழிலன்,
படம்: ஆ.முத்துக்குமார்
நன்றி ஜுனியர் விகடன்.