கலங்கரை விளக்கு என்றதும் எம்ஜிஆரின் பழைய திரைப்படம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது வேறு கலங்கரை விளக்கம். கலங்கரை விளக்கம் என்பது, நடுக்கடலில் உள்ள கப்பல்களுக்கு கரை மற்றும் ஆபத்தான பாறைகள் போன்றவற்றை அடையாளம் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டது.
எகிப்து நாட்டில் கிமு 280ல் கட்டப்பட்ட அலெக்சாண்ட்ரியா கலங்கரை விளக்கே மிகவும் பழமையானதாக அறியப்படுகிறது. 377 முதல் 443 அடி உயரத்தில் எகிப்தில் கட்டப்பட்ட அந்தக் கலங்கரை விளக்கே பல நூற்றாண்டுகளுக்கு மனிதன் கட்டிய மிக உயரமாக கட்டிடமாக அறியப்படுகிறது. அதன் பிறகு, சீனர்களும், ஐரோப்பியர்களும் இந்த கலங்கரை விளக்கு தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கியதோடு பல்வேறு முன்னேற்றங்களையும் ஏற்படுத்தினர்.
இன்று இந்தியாவுக்கே கலங்கரை விளக்காகத் திகழ்வது இடிந்தகரை. இந்தியாவின் தென்கோடியில், கடலின் கரையில் அமைந்துள்ள இந்த இடிந்தகரை, மக்கள் சக்தி மற்றும் வாழ்வியழ் முறைக்கான கலங்கரை விளக்காகத் திகழ்கிறது.
இடிந்தகரை மக்களின் போராட்டம் இன்று 600 நாட்களைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது போன்றதொரு போராட்டம் நடந்ததில்லை. பெரும்பாலான போராட்டங்கள் அரசையும் ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து நடக்கும். அரசை எதிர்த்து நடக்கும் போராட்டங்களுக்கு அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கும். கிடைத்த ஆதரவை வைத்து அந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அக்டோபர் 2008ல் தொடங்கி மே 2009ல் முடிவடைந்த “ஈழத்தில் போரை நிறுத்து” என்ற ஒரே முழக்கத்தோடு நடந்த ஈழ ஆதரவு போராட்டம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். போரை நிறுத்து என்ற ஒற்றை முழக்கத்தோடு தமிழகமெங்கும் நடைபெற்ற அந்த போராட்டங்கள் தமிழினத்தின் ப்ரூட்டஸ் கருணாநிதி மற்றும் பெண் முசோலினி அந்தோனியோ மொய்னோவின் அதிகாரத்தாலும், அடக்குமுறையாலும் முழுமையாக ஒடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டங்களும், முத்துக்குமார் உள்ளிட்டோரின் உயிர்த் தியாகங்களும் எவ்வித பயனும் இன்றி வீணாய்ப்போனது.
ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் கம்யூனிஸ்டுகள், பரந்து பட்ட நடுத்தர வர்க்கம், படித்த அறிவுஜீவிகள், ஊடகங்கள் என்று அத்தனை பேரையும் எதிர்த்து ஒரு போராட்டம். சமூகத்தில் அத்தனை தளங்களிலும் எதிர்ப்பை சந்திக்கும் ஒரு போராட்டம் 600 நாட்களைக் கடந்து தொடர்ந்து நடைபெறுவது ஆய்வுக்குரிய விஷயம். ஒரு கைக்கூலியின் கதை என்ற கட்டுரையில் இப்போராட்டத்தை வழி நடத்தும் உதயக்குமாரைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது. இந்தப் போராட்டம். சந்தித்த எதிர்ப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. எதிர்ப்புகளைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் முதுகில் குத்தும் வகையில் செய்யப்பட்ட பொய்ப்பிரச்சாரங்களே மிகவும் வேதனையை ஏற்படுத்தியவை.
கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்ற குற்றச்சாட்டு, பெரும்பாலானோரால் அள்ளி வீசப்பட்டது. நாராயணசாமி போன்ற மனவளர்ச்சி குன்றியவர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறினால் உதாசீனப்படுத்தலாம். ஆனால் ஒரு நாட்டின் பிரதமராகவும், தன்னை நேர்மையானவன் என்றும் பிரகடனப்படுத்திக் கொள்ளும் மன்மோகன் சிங் போன்றவர்கள் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் இடிந்தகரை போராட்டங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்று கூறிய குற்றச்சாட்டுகள், எந்த அளவுக்கு இடிந்தகரை மக்களை இழிவுபடுத்த அரசு முனைப்பு காட்டியது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஒரு நாட்டின் பிரதமருக்கு ஒரு சாதாரண குடிமகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினால் என்ன ஆகும் என்று தெரியும். மத்திய உளவுத்துறை, மாநில உளவுத்துறை காவல்துறை, என்று அத்தனை துறைகளையும் முடுக்கிவிட்டு, நோட்டீஸ் அனுப்பிய நபரை உரித்த கோழி போல தொங்க விட்டு விடுவார்கள். ஆனால், வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கினார் என்று மன்மோகன் சிங் கூறிய குற்றச்சாட்டுக்காக தோழர் உதயக்குமார் மன்மோகன் சிங்குக்கு மன்னிப்பு கேள் என்று நோட்டீஸ் அனுப்பினார். இணைப்பு
மன்மோகன் சிங்கின் கட்டுப்பாட்டில், மத்திய உளவுத்துறை (Intelligence Bureau) மத்திய புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation), வருவாய்ப் புலனாய்வுத் துறை (Directorate of Revenue Intelligence), அமலாக்கத் துறை (Enforcement Directorate), நிதிப் நுண்ணறிவுப் பிரிவு (Financial Intelligence Unit) நேரடி வரிவிதிப்புத் துறை (Central Board of Direct Taxes), ஆய்வு மற்றும் பகுப்பாய்வுத் துறை (Research and Analysis Wing) என்று பல்வேறு புலனாய்வுத் துறைகள் உள்ளன. இந்த அத்தனை துறைகளுக்கும் வானளாவிய அதிகாரம் உண்டு. இந்தத் துறைகள் உதயக்குமாரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினால், உதயக்குமார் 12 வயதில் எந்த மரத்தின் அருகில் சிறுநீர் கழித்தார் என்பது வரை விசாரிக்க முடியும். ஆனால், இன்று வரை உதயக்குமார் வெளிநாட்டில் பணம் வாங்கினார் என்பதற்கான ஒரு சிறு துறும்பைக் கூட மன்மோகனால் காட்ட முடியவில்லை. ஏழை விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுத்து, தன் வாழ்வையே அர்ப்பணித்து வரும் ஒரு நபரைப் பற்றி ஆதாரமில்லாமல் அபாண்டமாக புகார் கூறியதற்காக மன்மோகன் சிங் வெட்கப்படவேண்டும். உதயக்குமார் மன்மோகன் சிங்கைப் போல, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி தன் கண்ணெதிரே கொள்ளையடிக்கப் பட்ட போது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, கொள்ளையடித்த நபரை, இவர் என் மதிப்பு மிக்க சக ஊழியர் (A.Raja is my esteemed colleague) என்று கூறியவர் அல்ல… ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் கோடி மதிப்பிலான நிலக்கரி ஊழல் நடந்தபோது அதை மூடி மறைக்க முயற்சித்தவரல்ல…. விளிம்புநிலை மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நபரைப்பற்றிய பொய்க் குற்றச்சாட்டுகளை மன்மோகன் சிங்கே கூறுகிறார் என்றால், இடிந்தகரை மக்களையும், உதயக்குமாரையும் எப்படியாவது இழிவு படுத்த வேண்டும் என்பதில் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் அரசும் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வெகுஜன மக்கள் போராட்டங்களுக்கு எப்போதும் துணை நிற்க வேண்டிய கம்யூனிஸ்டுகள், ரஷ்யா உருவாக்கிய அணு உலை என்ற ஒரே காரணத்துக்காக கண்ணை மூடிக்கொண்டு கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கிறார்கள். மக்கள் போராட்டத்தை புரிந்து கொண்டு, அதற்கு ஆதரவு தராதவன் எப்படி கம்யூனிஸ்டாக இருக்க முடியும் ? கூடங்குளத்தில் அணுக்கசிவு ஏற்பட்டால், அது கேரளாவையும் பாதிக்கும் என்பதை உணர்ந்த அடுத்த நிமிடமே, இந்த அணு உலைக்கு கேரள கம்யூனிஸ்டுகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், இங்கே உள்ள கம்யூனிஸ்டுகளோ, ஜெய்தாப்பூரில் இயங்கும் அணு உலையை எதிர்ப்போம், கூடங்குளம் அணு உலையை அணைப்போம் என்று மக்கள் விரோத நிலைபாட்டை எடுத்திருக்கிறார்கள்.
காங்கிரஸை தீவிரமாக எதிர்த்து வரும் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள், கூடங்குளம் அணு உலையை திறக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியை விட, மிகத் தீவிரமாக உள்ளன. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தைக்குச் சென்ற உதயக்குமார் உள்ளிட்ட தோழர்களை தாக்கும் அளவுக்கு சங் பரிவார் அமைப்புகள் தீவிரமாக உள்ளன.
தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்த தோழர்கள் உதயக்குமார், புஷ்பராயன் உள்ளிட்டோரை திருட்டுத்தனமாக உணவு உண்கிறார்கள் என்று சற்றும் மனசாட்சியின்றி எழுதியது தினமலர். சன் டிவி ஆசிரியர் ராஜா பாலியல் புகாரில் கைதான செய்தியை ஒரு வரி கூட வெளியிடாத அயோக்கியப் பத்திரிக்கைதான் தினமலர். காவல்துறை மற்றும் ஆளும் வர்க்கத்தின் காலை நக்கிப் பிழைப்பு நடத்துவதையே வாடிக்கையாகக் கொண்ட தினமலர் இடிந்தகரை மக்களின் போராட்டங்களை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் கொச்சைப் படுத்தியது. புஷ்பராயன், மற்றும் தோழர் உதயக்குமார் ஆகியோரின் தொலைபேசி எண்களை முதல்பக்கத்தில் வெளியிட்டு, அவருக்கு மிரட்டல் அழைப்புகள் வர ஏற்பாடு செய்த அளவுக்கு தினமலர், கீழிறங்கியது.
சன் டிவியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஒரு பொறுக்கியை செய்தி ஆசிரியராக வைத்து, அந்தப் பொறுக்கியை போற்றி பாதுகாத்து வரும் சன் டிவிக்கு எவ்விதமான நிலைபாடு இருக்கும் என்பதைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. கோடிக்கணக்கில் பணம் இருந்தும், அந்தப் பணத்தை செலவு செய்யாமல், அரசு தொலைபேசியை திருட்டுத்தனமாக பயன்படுத்திய கேடி சகோதரர்கள் நடத்தும் தொலைக்காட்சியிடம் என்ன நேர்மையை எதிர்ப்பார்க்க முடியும் ?
கூடங்குளம் அணு உலை குடியிருப்பில் கேபிள் தொலைக்காட்சி நடத்தும் அறிவுக்கரசுதான் சன் செய்திகளின் நெல்லைச் செய்தியாளர். அணு உலை மூடப்பட்டால் அவர் தொழில் பாதிக்கப்படும் அல்லவா ? இதனால் இடிந்தகரை மக்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் அத்தனை காரியங்களிலும் அறிவரசு ஈடுபட்டார். காவல்துறையினர் வீசும் எலும்புகளுக்காக அம்மக்களின் போராட்டங்களை எந்த அளவுக்கு சிறுமைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு சிறுமைப்படுத்தினார் அறிவரசு. அவரும், தமிழகத்தின் சிறந்த புலனாய்வுப் பத்திரிக்கையாளரான ராம செல்வராஜும் இணைந்து, கூடங்குளம் போராட்டத்துக்குள் நக்சலைட்டுகள் ஊடுருவல் என்று நடத்திய பொய்ப்பிரச்சாரம் இடிந்தகரை மக்களின் போராட்டத்தை பொதுமக்கள் மத்தியில் ஆபத்தான போராட்டம் என்று எண்ண வைத்தது.
கிறித்துவ தேவாலயம் மூலமாக அமெரிக்காவிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இடிந்தகரை மக்களுக்கு லட்சக்கணக்கில் பணம் குவிகிறது என்று ஒருபுறம் பிரச்சாரம் நடந்தது. மத்திய உளவுத்துறை (Intelligene Bureau) இந்த விஷமப் பிரச்சாரங்களை முழு வீச்சில் கட்டவிழ்த்து விட்டது.
கூடங்குளம் போராட்டத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத சோன்டேக் ரீய்னர் ஹெர்மென் என்ற ஜெர்மானிய ஹிப்பியை போராட்டத்தில் ஊடுருவியிருக்கிறார் என்று பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி நாடு கடத்தியது மத்திய உளவுத்துறை.
இந்த அத்தனை துரோகங்களையும் கடந்து, மிகப்பெரிய துரோகத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா. இடைத்தேர்தல் முடியும் வரை, கூடங்குளம் அணு உலை திறக்கப்படாது என்று அறிவித்து, அந்த மக்களின் கவலையை நான் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறிய உங்களில் ஒருத்தி, இடைத்தேர்தல் முடிந்ததும் தன் காவல்துறையை விட்டு, போராடிய மக்களை மிருகத்தனமாக தாக்கினார். ஊருக்குள் புகுந்த காவல்துறை, பெண்களையும், குழந்தைகளையும் கடுமையாக தாக்கினர். 144 தடைச்சட்டம் தொடர்ந்து பிரகடனப்படுத்தப் பட்டது. அத்தியாவசியப் பொருட்களான பால், தண்ணீர் போன்றவை கூட தடை செய்யப்பட்டன. இந்த கடுமையான நெருக்கடி நிலையை எதிர்த்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தால், நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த அரசுக்கு எல்லா உரிமையும் உண்டு, 144 தடைச் சட்டத்தை எதிர்க்க வேண்டுமானால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரை அணுகவும் என்று ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை அளித்தார், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இக்பால். இக்பாலின் நேர்மையைப் பற்றி இந்த ஆங்கிலக் கட்டுரையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இப்படி எல்லா புறத்திலும் எதிர்ப்பு… எங்கு திரும்பினாலும் துரோகம்… ஆனால் இந்த எல்லா துரோகங்களையும் கடந்து இந்தப் போராட்டம் 600 நாட்களைத் தாண்டியிருக்கிறது.
சமீபத்தில் இடிந்தகரை சென்றபோதுதான் இடிந்தகரை மக்களின் போராட்டத்தின் ஆளுமை குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. அம்மக்களை இந்த எதிர்ப்புகள் சோர்வடையச் செய்யவில்லை. அம்மக்களை இந்தத் துரோகம் துவண்டுபோகச் செய்யவில்லை. அம்மக்களை எந்தத் துரோகங்களும் துவளச் செய்ய முடியாது. எந்த எதிர்ப்புகளும், சோர்வடைய வைக்காது.
வரலாற்றில் பெரும் வெற்றியை அடைந்த எல்லா போராட்டங்களிலும் ஈடுபடும் மக்கள் அத்தனை பேரும், எதற்காகப் போராடுகிறோம், யாருக்காக போராடுகிறோம், யாரை எதிர்த்து போராடுகிறோம், தற்போதைய செயல்திட்டம் என்ன… நீண்டகால செயல்திட்டம் என்ன என்ற புரிதல்களோடு போராடுவார்கள் அல்லது ஒன்று கூடுவார்கள் என்று சொல்லமுடியாது. யூதர்களுக்கு எதிராக ஜெர்மானியர்களை ஒன்றிணைத்த ஹிட்லர், யூதர்களுக்கு எதிராக கண்மூடித்தனமான வெறியைத் தூண்டி விட்டார். திராவிட இயக்கத்தின் தந்தையான பெரியார், தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் பார்ப்பனர்கள் என்ற மாயையைத் தோற்றுவித்தார். பார்ப்பனர்களை எதிர்க்க ஒன்று கூடிய அனைத்து சாதி இந்துக்களும், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை வசதியாக கைவிட்டு, தீவிர பார்ப்பன எதிர்ப்பில் ஈடுபட்டு பார்ப்பனர்களின் இடத்தில் தாங்கள் அமர்ந்து கொண்டு, தலித்துகளை ஒடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார், கடவுள் என்ற பிம்பம் கட்டுடைக்கப்பட வேண்டியது என்பதை அவரின் பிரதான சீடர் கருணாநிதியும் அண்ணா துரையுமே கைவிட்டார்கள்.
ஆனால், இடிந்தகரையில் உள்ள குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, அத்தனை பேரும், எதற்காக போராடுகிறோம், யாருக்காக போராடுகிறோம் என்பதில் மிக மிக தெளிவாக இருக்கிறார்கள். சாதாரணமாக எளிய தோற்றம் உள்ள அம்மக்கள், பெரிய பெரிய விஞ்ஞானிகளையே குழப்பும் அணு விஞ்ஞானத்தை எளிதாகப் பேசுகிறார்கள். இந்த அணு உலை எங்கள் வாழ்வை சீரழிக்கும், இந்த அணு உலை எங்கள் சந்ததிகளை அழிக்கும். இந்த அணு உலை எங்களுக்கானது அல்ல. இந்த அணு உலை ஒருபோதும் வரக்கூடாது. இந்த அணு உலையை எங்கள் அனைவரின் உயிரைக் கொடுத்தும் எதிர்ப்போம் என்பதில் சின்னஞ்சிறிய குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை மிக மிக தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள்.
இப்படி ஒரு பெரிய கூட்டத்துக்கு, எதற்காகப் போராடுகிறோம் என்ற அறிவை ஊட்டி, அவர்களை புரிந்து கொள்ள வைத்து, அவர்களை 600 நாட்களைக் கடந்த போராட வைத்திருப்பது, தோழர் உதயக்குமார் மற்றும் தோழர் புஷ்பராயன் உள்ளிட்ட தோழர்களின் சாதனையே. அத்தனை மக்களும், தெளிந்த அறிவோடு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது வியப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகிறது. இடிந்தகரை கடற்கரையில் இரவு நடந்து சென்றபோது, இரவு உறக்கத்துக்காக அம்மக்கள் கடற்கரையில் படுத்திருந்தார்கள்.
அப்போது அவர்ளுக்குள் பேசிக்கொண்டிருந்த இரண்டு வயதானவர்கள், ரொம்பவும் சாதாரணமாக, முன்னாள் அணுசக்திக் கழகத் தலைவர் கோபாலகிருஷ்ணன் முதல் நாள் கேரளாவில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அளித்த பேட்டியைப் பற்றி விவாதித்துக் கொண்டே படுத்திருந்ததைக் கண்டபோது, மிக மிக வியப்பாக இருந்தது. அவர்களுள் ஒருவர் “அணு சக்திக் கழகத் தலைவரா இருந்தவரே சொன்னாலும் அரசாங்கம் கேக்க மாட்டுதே… அவரு என்ன தெரியாமயா சொல்லுவாரு… இவனுங்க பண்ற அயோக்கியத்தனம் எல்லாமே அவருக்குத் தெரியுமே…” என்றார். மற்றொருவர்.. “அவரு அங்கயே வேலை பாத்தவரு இல்ல…. அவருக்குத் தெரியாதா” என்கிறார்.
ஒரு பத்து வயதுப் பெண்குழந்தை, கடற்கரையில் படுத்தவாக்கில், தன் மொபைல் போனில், -கூடங்குளச் செய்திகளின் அப்டேட்டுகளை பார்த்துக் கொண்டிருந்தாள். கூடங்குளம் அணு உலை தொடர்பாக எந்த ஊடகத்தில் ஒரு மூலையில் செய்தி வந்தாலும், உதயக்குமாருக்கு முன்பாக அந்த மக்களுக்குத் தெரிகிறது.
இது வரை உதயக்குமார் மற்றும் புஷ்பராயன் மீது 400க்கும் மேற்பட்ட வழக்குகளை தமிழக காவல்துறை பதிவு செய்துள்ளது. அவர்களும், மற்ற சிலரும் தேடப்படும் குற்றவாளிகள். ஆனால், அவர்களை கைது செய்ய காவல்துறை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஊருக்குள் காலடி எடுத்து வைக்க மாட்டார்கள் என்று தெரிந்தது. தமிழக காவல்துறையின் மிருகத்தனம் பிரசித்தி பெற்றது. அப்படி இருக்கையில் ஏன் இன்னும் ஊருக்குள் புகுந்து இத்தோழர்களை கைது செய்யவில்லை என்று கேட்டதற்கு, அம்மக்கள் எவ்வித அலட்டலுமின்றி, மிக மிக இயல்பாக அண்ணனைக் கைது செய்ய ஊருக்குள் வந்தால், ”கொறஞ்சது அம்பது பொணமாவது விழும்… எங்க உயிரைக் குடுத்தாவது அண்ணனைக் காப்பாத்துவோம்… எங்க பொணத்து மேல நடந்து போயிதான் அண்ணனைக் கைது பண்ணணும்” என்கிறார்கள். அவர்களின் இந்த உறுதி தீர்மானமாக உணர்ச்சி வயப்பட்டு சொல்வது போல இல்லை. இன்னைக்கு ராத்திரி வீட்ல மீன் கொழம்பு என்பதை எப்படி சாதாரணமாகச் சொல்வார்களோ, அப்படிச் சொல்கிறார்கள். அந்த உறுதி, அவர்களின் வாழ்க்கை முறையாக மாறி விட்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு அறிவூட்டி, புரிய வைத்து, போராட்டத்தில் தொய்வு ஏற்படாமல், மக்களுக்கு சோர்வு ஏற்படாமல் 600 நாட்களைக் கடந்து தொடர்ந்து இப்போராட்டத்தை நடத்தி வரும் தோழர் உதயக்குமார் மற்றும் புஷ்பராயன் உள்ளிட்ட தோழர்களின் பணி மகத்தானது. இடிந்தகரை மக்களின் போராட்டம், இந்தியாவில் உள்ள சமூக விஞ்ஞானிகளாலும் (நாராயணசாமி அல்ல. அவர் அணு விஞ்ஞானி) அரசியல் ஆய்வாளர்களாலும், ஆராய்ச்சி செய்யத்தக்கது. கிட்டத்தட்ட நாம் இத்தனை நாள் சந்தித்து வந்த போராட்டங்கள் குறித்த வரலாற்றுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிறது இடிந்தகரை மக்களின் போராட்டம். அப்பகுதி மக்கள் இன்று எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்றால், உலகின் சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான அணு விஞ்ஞானி நாராயணசாமி சொல்வதைக் கேட்டு நாளை உதயக்குமார் அணு உலை வேண்டும் என்று சொன்னால், அது உதயக்குமார் என்றும் பார்க்காமல், அவரைக் கட்டி நடுக்கடலில் போட்டு விடுவார்கள். அப்படி இருக்கிறது அந்த மக்களின் உறுதி. தோழர் உதயக்குமார் மற்றும் புஷ்பராயன் உள்ளிட்டோர், காற்றின் போக்கை மாற்றி படகை வழிநடத்தும் ஒரு பாய்மரத்தின் பணியை மட்டுமே செய்து வருகிறார்கள். அந்த போராட்டம் உதயக்குமாரின் போராட்டம் அல்ல.. இடிந்தகரை மக்களின் போராட்டம்.
இடிந்தகரை போராட்டத்தில் கிறித்துவ தேவாலயம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதை உணர முடிந்தது. தேவாலயம், அம்மக்களை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்கிறது. எந்த ஒரு மதமும் மக்களுக்கு நன்மை பயத்தால், அம்மதத்தோடு நமக்கு விரோதமில்லை. அம்மக்களை ஒருங்கிணைத்து அணு உலைக்கு எதிராக போராட வைக்க, எந்த மதம் பயன்பட்டாலும் அதை நாம் வரவேற்போம். ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த ஒரு மசூதியை இடிக்க மதம் பயன்படுகையில், அழிவை ஏற்படுத்தும் அணு உலையை இடித்துத் தகர்க்க மதம் பயன்பட்டால் அதை சவுக்கு முழு மனதோடு வரவேற்கும்.
600 நாட்களைக் கடந்து இந்தப் போரட்டம் நடந்து வரும் நிலையில் தேர்தல் நெருங்குகிறது. நீண்ட நாட்களாக நடந்து வரும் இந்தப் போராட்டம் சாதித்திருக்கும் மிக முக்கியமான விஷயம், இடிந்தகரை மக்களின் அணு உலைக்கு எதிரான போராட்டத்தி நியாயம் உள்ளது என்பதை பெரும்பாலான மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினாலும் தமிழகத்தில் மின்வெட்டு தீராது என்பதையும், அணு உலை மின்சாரத்துக்கானது இல்லை என்பதையும் பெரும்பாலானோர் உணர்ந்துள்ளனர். அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, .குறைந்தது மூன்று பாராளுமன்றத் தொகுதிகளிலாவது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தப் பகுதி முழுக்க, இடிந்தகரை மக்களுக்கான ஆதரவு இருப்பதை உணர முடிகிறது. இதை அரசியல்வாதிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். இதை உணர்ந்ததால்தான், என்றைக்கும் இல்லாத கரிசனத்தை காட்டுகிறார்கள்.
கூடங்குளம் அணு உலையை ஏன் இன்னும் திறக்கவில்லை… திறந்தால் மின் வெட்டு தீருமே என்று பேசி, ஜெயலலிதாவை காவல்துறையை விட்டுத் தூண்டி விட்ட கருணாநிதி இன்று அவர் சார்பில், கே.எஸ்.ராதாகிருஷ்ணனை அனுப்பி உதயக்குமாரோடு பேச வைக்கிறார். தலைவர் கலைஞர் இடிந்தகரை மக்களுக்காக கண்ணீர் விடுகிறார். அவரின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு…. என்ன சொல்ல வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவர் செய்யக் காத்திருக்கிறார் என்கிறார். இடிந்தகரை போராட்டத்தைப் பற்றி வாயே திறக்காத காதல் டாக்டர் ராமதாஸ், உதயக்குமாரோடு பேசி போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். அரசியல் கட்சிகளை பயம் பீடித்திருப்பதை இது காட்டுகிறது.
இந்த நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்டு, அரசியல் அறுவடை செய்ய வேண்டியவர் ஜெயலலிதாதான். பிரதமர் கனவோடு இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியும் எவ்வளவு முக்கியம் என்பது நன்றாகத் தெரியும். காலங்காலமாக இடிந்தகரை மக்களுக்கு துரோகம் இழைத்த கருணாநிதியை விட காவல்துறையை விட்டு அம்மக்களை தாக்கிய உங்களது அறிவற்ற செயலால் அம்மக்கள் உங்கள் மீதுதான் கோபமாக இருக்கிறார்கள். அம்மக்களின் கோபத்தைத் தணிப்பதும், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதும் உங்களின் பிரதமர் கனவை அணுக்கமாக்கும். கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மையானதே. உங்கள் நெருங்கிய நண்பரான ஹிலாரி க்ளின்டன், ரஷ்ய அணு உலை நாசமாகப் போனால் மகிழ்வார். உங்களை அமெரிக்காவுக்கு அழைப்பார். நாளை நீங்கள் பிரதமரானால், அமெரிக்கா உங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கும்.
இந்த அணு உலையை முழுமையாக எதிர்ப்பதன் மூலம் உங்களின் குல எதிரி கருணாநிதியை தனிமைப்படுத்த முடியும். தேவையில்லாமல் கொள்கை பேசி உங்களை எரிச்சலூட்டும் இடதுசாரிகளை அம்பலப்படுத்த முடியும். மிகச் சிறந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் என்று உங்களை வரலாறு பதிவு செய்யும். தொடக்கத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரித்து விட்டு, பின்னாளில் கருணாநிதி ஆதரிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக நுண்ணுயிர்கள் பாதிக்கும் என்று கூறி, அத்திட்டத்தை எதிர்த்தீர்கள். அதே போல இந்தத் திட்டத்தையும் முழு மூச்சாக எதிர்த்தீர்கள் என்றால் சவுக்கு உங்களுக்கு “அணு உலையை அழித்த அன்னை” என்ற பட்டத்தை வழங்கும். பூவுலகு இதழில் உங்கள் படத்தைப் போட்டு கவர் ஸ்டோரி வெளியிடப்படும்.
அரசியல் ரீதியாகவும் இந்த உலையை எதிர்ப்பது உங்களுக்கு பெரும் நன்மை பயக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும் ஜெயலலிதா அவர்களே. சமீப காலமாக ஈழ விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில், உங்களின் நிலைபாடு, மக்களின் மனவோட்டத்தை புரிந்ததாக உள்ளது. கருணாநிதி 60 ஆண்டுகளாக செய்யத் தவறியதை ஒரே நாளில் செய்து நற்பெயர் பெற்று விட்டீர்கள். அதே போல இந்த விஷயத்திலும் செய்வீர்கள் என்று நம்புகிறோம். காவல்துறையினர் தாக்கிய வலி, இன்னும் மறையாத நிலையில், உங்களைத் தோற்கடிப்பதற்காக, கருணாநிதிக்கு வாக்களிக்க மக்கள் தயங்கமாட்டார்கள் என்பதையும் மனதில் வையுங்கள்.
அன்பார்ந்த வாசகர்களே… நாம் வாழும் காலத்தில் இடிந்தகரை மக்களின் போராட்டம் போன்ற போராட்டம் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடியது. கோடை விடுமுறைக்கு வெளியூர்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கக் கூடிய உறவுகளே… இந்தக் கோடை விடுமுறைக்கு இடிந்தகரை செல்லுங்கள். குடும்பத்தோடு செல்லுங்கள். இடிந்தகரை மக்கள் போராட்டம் நடத்துவதில் மட்டுமல்ல… விருந்தோம்பலிலும் சிறந்தவர்கள். இடிந்தகரை நீங்கள் ஒவ்வொருவரும் அவசியம் செல்ல வேண்டிய இடம். குடும்பத்தொடு செல்லுங்கள்…. கூட்டமாகச் செல்லுங்கள்.
இடிந்தகரை பயணத்தை சாத்தியப்படுத்திய தோழர் வீரப்பன் அன்பழகனுக்கும், உதவி செய்த இடிந்தகரை தோழர்களுக்கும் அன்பு நன்றிகள்.