யானைக்கும் அடிசறுக்கும் என்பது பழமொழி. அப்படி அடி சறுக்கிய யானையின் கதைதான் இது. சங்காராம் ஜாங்கிட். யார் இந்த ஜாங்கிட் ? இது குறித்து விபரமாக அறிந்து கொள்ள ஜெகஜ்ஜாலக் கில்லாடி ஜாங்கிட் என்ற கட்டுரையை படித்துவிட்டு, மேலே தொடருங்கள்.
பொதுவாக காவல்துறையில் வட இந்திய அதிகாரிகளைப் பற்றி பொதுவாக ஒன்று கூறுவார்கள். வடநாட்டிலிருந்து ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று வரும்போது ஒரு சூட்கேஸோடு வருவார்கள். போகும் போது, பெரும் சொத்துக்கு அதிபதிகளாக இருப்பார்கள் என்று. அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஜாங்கிட்டுக்கு முழுக்க முழுக்க பொறுந்தும். பணியில் சேர்ந்தது முதல் ரியல் எஸ்டேட் தொழிலில் முழு நேரமும், காவல்துறை அதிகாரியாக பகுதி நேரமும் பணியாற்றியவர்தான் ஜாங்கிட். இது குறித்து விரிவாக பழைய கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்ததால், மேலும் விரித்துரைக்க வேண்டியதில்லை.
தற்போது ஜாங்கிட்டுக்கு அடி சறுக்கியதற்கான காரணமும் ரியல் எஸ்டேட்தான். காதற்ற ஊசியும் வாராதுகண் கடைவழிக்கே என்ற பட்டினத்தார் வாக்கை ஜாங்கிட் படித்ததாகத் தெரியவில்லை. ஜாங்கிட் என்ற அதிகாரியைப் போல தொடக்க காலத்தில் நற்பெயர் வாங்கியவர் எவரும் இல்லை. மிகச் சிறந்த சட்டம் ஒழுங்கு அதிகாரியாக பெயரெடுத்தவர். ரவுடிகளை ஒடுக்கி, இவர் சென்ற இடத்திலெல்லாம் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கும் என்று பெயரெடுத்தவர்.
ஆனால் இவரது அசல் முகம், மதுரையில் முதன் முதலில் வெளிப்பட்டது. காவலர்களுக்கும், தலைமைக் காவலர்களுக்கும் என்று அறிவித்து ஒரு வீட்டு வசதித் திட்டத்தை தொடங்கினார். ஆனால் அந்தத் திட்டத்தில் பெரும்பாலும் பயன்பெற்றவர்கள் அதிகாரிகளே.. அன்று தொடங்கிய ஜாங்கிட்டின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அதன் பிறகு ஓய்வே இல்லை. தமிழகத்தில் பல இடங்களில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி விட்டு, இறுதியாக அவர் போட்ட லே அவுட்தான் மணப்பாக்கம் உயர் அதிகாரிகளுக்கான வீட்டு வசதித் திட்டம். பல்வேறு உயர் உயர் அதிகாரிகள் அந்த வீட்டு வசதித் திட்டத்தில் பயனடைந்தார்கள். ஒரு சில பத்திரிக்கையாளர்கள் உட்பட.
ஜாங்கிட்டின் பலம் மற்றும் பலவீனம் என்னவென்றால், அவரைப் பற்றி தப்பித் தவறிக் கூட தவறான பத்திரிக்கை செய்திகள் வந்துவிடாதபடி பார்த்துக் கொள்வார். இதற்காக எந்த விதமான நடவடிக்கைகளில் வேண்டுமானாலும் இறங்குவார். இந்த நடவடிக்கைகள் பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை வழங்குவது, அவர்கள் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவம் மற்றும் கலை கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதிலிருந்து, பத்திரிக்கையாளர்களின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வதில் ஜாங்கிட்டைப் போன்ற நிபுணரைப் பார்க்கவே முடியாது. அதையும் மீறி இவரைப் பற்றி தவறாக செய்திகள் ஏதாவது ஒரு பத்திரிக்கையில் வந்து விட்டால், அந்த பத்திரிக்கை மீது வழக்கு போட்டு, அதன் ஆசிரியர்களையும், நிருபர்களையும் நீதிமன்றத்துக்கு அலைக்கழித்து, ஒரு வழி செய்யாமல் விட மாட்டார்.
இதுதான் ஜாங்கிட் பற்றிய பின்னணி. கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி தெரிவித்தார். இந்த செய்தி தினமணி நாளேட்டைத் தவிர வேறு எந்த நாளேடுகளிலும் வரவில்லை.
எந்த நாளேடுகளிலும் வராத காரணத்தினாலேயே சவுக்கில் அச்செய்தி குறித்து விரிவாக எழுதவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வியாழனன்று சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான ஆணையை பிறப்பித்தது. வியாழனன்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததுமே தன் சுற்றுப்பயணத்தை ஜாங்கிட் ஒரு புறம் தொடங்குகிறார். எங்கே சுற்றுப்பயணம் என்றால், சென்னையில் உள்ள ஒவ்வொரு பத்திரிக்கை அலுவலகமாகச் சென்று, என்னைப் பற்றிய செய்திகளை வெளியிடாதீர்கள் என்ற கோரிக்கை சுற்றுப்பயணம் அது. ஜாங்கிட் ஒருவரே எல்லா பத்திரிக்கை அலுவலகத்துக்கும் செல்ல முடியாது அல்லவா ? அதனால் அவர் சார்பாக, அவரின் தொண்டர் அடிப்பொடிகளாக இருக்கும் சில பத்திரிக்கையாளர்களும், காவல்துறை ஆய்வாளர்களும் சென்னை நகரில் இருக்கும் முக்கிய பத்திரிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, இச்செய்தியை வெளியிடாதீர்கள், அப்படி மீறி வெளியிட்டால், வழக்கைச் சந்திக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.
இதையெல்லாம் மீறித்தான் தினமணி நாளேடு செய்தி வெளியிட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது வடநெமிலி என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் பொதுமக்கள் நெடு நாட்களாக பயன்படுத்தி வரும் சொத்தாக 9.60 ஏக்கர் நிலம், இரண்டு பொதுக்கிணறுகள், இரண்டு கோயில்கள் ஆகியன உள்ளன. இவற்றை அந்த ஊர் பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
திடீரென்று 2007ம் ஆண்டில் சந்திரசேகரன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவர் ஊர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அந்த இடத்தை வேலி போட்டு அடைக்கின்றனர். என்னடா இது என்று ஊர் மக்கள் அவர்களிடம் சென்று விசாரித்ததில், அந்த இடத்தை அவர்கள் வாங்கி விட்டதாகக் கூறுகின்றனர். இத்தனை நாட்களாக இல்லாமல் திடீரென்று எப்படி வாங்கினீர்கள் என்று கேட்டால், 1953ம் ஆண்டு ராஜாமணி நாடார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற ஏலத்தில் 12 சொத்துக்களை வாங்கினார் என்றும் அந்த சொத்துக்களில் ஒன்று இந்த சொத்து என்றும், அவரின் வாரிசுகளிடமிருந்து இச்சொத்தை வாங்கியிருக்கிறோம் என்றும் கூறுகின்றனர்.
ஊர் மக்களுக்கு அதிர்ச்சி. உண்மையே அதுதானோ… நாம்தான் இன்னொருவர் சொத்தை பயன்படுத்தி வந்திருக்கிறோமோ என்று சந்தேகப்பட்டு எதற்கும் இருக்கட்டும் என்று ஆவணங்களை பரிசீலிக்கிறார்கள். ஆவணங்களை பரிசீலித்தால் ராஜாமணி நாடார் வாங்கியதாக சொல்லப்படும் சொத்துக்களில் வடநெமிலி இடம் இல்லவே இல்லை. ஊர் பொதுமக்கள் பயன்படுத்திய அந்த இடத்தின் உண்மையான உரிமையாளர் தம்பிரான் என்பவர். அந்த தம்பிரான் ராமானுஜதாசர் மற்றும் 8 பேர் பெயரில் அந்த நிலத்தை ஊர் மக்கள் பயன்பாட்டுக்காக எழுதி வைத்ததும் தெரிய வருகிறது. இதையடுத்து யார் இந்த திருட்டு வேலையைச் செய்தது என்று விசாரித்தால், அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர்தான் இந்த நிலத்தை ரவிச்சந்திரனுக்கும், சந்திரசேகரனுக்கும் வாங்கித் தருகிறார் என்ற விபரம் கிராம மக்களுக்குத் தெரிய வந்ததும், பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள். ஊர்ப்பஞ்சாயத்து முன்னிலையில் குமார் விசாரிக்கப்பட்டதும், அந்த நிலத்தை வாங்கியது ரவிச்சந்திரனும் சந்திரசேகரனும் அல்ல… அவர்கள் பினாமிகள். அவர்கள் பெயரில் அந்த நிலத்தை வாங்கியது ஐஏஎஸ் அதிகாரியான ப்ரதீப் யாதவ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரியான ஜாங்கிட் என்று வாக்குமூலம் அளிக்கிறார். அவரது வாக்குமூலத்தை அப்படியே எழுத்துபூர்வமாக பதிவு செய்து கிராமத்தினர் அனைவரும் கையெழுத்திடுகின்றனர்.
இதையடுத்து ஜூலை 2007ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்ற பொதுநல ஆர்வலர் பொதுநல வழக்கு தாக்கல் செய்கிறார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம, மாவட்ட ஆட்சியர் இந்தப் புகார்களை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடிக்கிறது.
இந்த விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடும் நேரம், யார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரியுமா ? ப்ரதீப் யாதவ். ப்ரதீப் யாதவுக்கு இந்த நிலம் குறித்த விபரங்களெல்லாம் எப்படித் தெரிய வருகின்றன தெரியுமா ? ப்ரதீப் யாதல் நீண்ட நாட்களாக, பத்திரப் பதிவுத் துறையின் துறைத் தலைவராக (Inspector General of Registraiton) இருந்தார். அப்போதுதான் இவருக்கு இது ழுறித்த விபரங்கள் தெரிய வருகின்றன.
தான் ஒரு நேர்மையான அதிகாரி போல காண்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த விசாரணையை வேறு அதிகாரி நடத்த வேண்டும் என்று இவரே பரிந்துரைக்கிறார். இதற்கு நடுவே ஜாங்கிட்டும், ப்ரதீப் யாதவும் சேர்ந்து, இந்த விசாரணை நடைபெறாமல் தடுக்க என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்கிறார்கள். ஜாங்கிட் மீது அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதும், அரசு, ஜாங்கிட் மீது ஒரு விசாரணைக்கு உத்தரவிடுகிறது. 2008ல் நடைபெற்ற அந்த விசாரணையை சந்திரபாசு என்ற ஒரு நேர்மையான அதிகாரி நடத்தினார். நல்ல அதிகாரியிடம் விசாரணை செல்கிறதே.. அவர் எப்படியும் உண்மையைக் கண்டுபிடித்து விடுவார் என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், அந்த அதிகாரியால் எந்த ஆதாரத்தையும் எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சாட்சிகளை மிரட்டி வைத்திருந்தார் ஜாங்கிட்.
2006ல் லத்திக்கா சரண் சென்னை மாநகர ஆணையராக இருந்தபோது, ஜாங்கிட் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். லத்திகா சரண் பெயருக்குத்தான் ஆணையராக இருந்தாரேயொழிய, உண்மையான ஆணையராக செயல்பட்டவர் ஜாங்கிட்தான். ஜாங்கிட்டின் செல்வாக்கு எப்போது கூடியது தெரியுமா ? 2006ம் ஆண்டு சென்னை நகரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களின்போதுதான். திமுக ரவுடிகள் சென்னை மாநகரெங்கும் ரவுடித்தனத்தை கட்டவிழ்த்து விட்டனர். திமுக ரவுடிகளின் அராஜகத்துக்கு முழுமையான போலீஸ் பாதுகாப்பை வழங்கியதன் மூலம் திமுகவுக்கு மிக மிக நெருக்கமான அதிகாரியாக மாறினார். என்னதான் கூடுதல் ஆணையராக இருந்து, அதிகாரம் செலுத்தினாலும், காட்டில் சிங்கம்தானே ராஜா. ஜாங்கிட் சிங்கம் அல்லவே. அதனால் ஜாங்கிட்டுக்காகவே சென்னை நகரை இரண்டாகப் பிரித்து, புறநகர் என்ற ஒரு தனிப்பிரிவை உருவாக்கி, அந்தப் புறநகரின் ஆணையராக ஜாங்கிட்டை நியமித்து அழகு பார்த்தார் கருணாநிதி. புறநகர் ஆணையராக இருந்த ஜாங்கிட்டை எத்தனையோ அதிகாரிகள் தலைகீழாக நின்று டக்கரடித்துப் பார்த்தும் அகற்ற முடியவில்லை. அந்த வேலையை செய்தது தேர்தல் ஆணையம். தேர்தல் அறிவிக்கப்பட்டதும், ஜாபர் சேட்டுக்கு மாற்றல் உத்தரவு வரும் என்று எல்லோரும் காத்திருந்த நேரத்தில், முதல் மாற்றல் உத்தரவு வந்தது ஜாங்கிட்டுக்குத்தான். போலீஸ் ரெக்ரூட் ஸ்கூல் என்று இல்லாத ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டார் ஜாங்கிட்.
2002ம் ஆண்டிலேயே ஜாங்கிட் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏராளமான புகார்கள் வரும். அந்தப் புகார்களை தனது செல்வாக்கு காரணமாக இழுத்து மூடுவார் ஜாங்கிட். 2002ல் ஜார்ஜ் லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராக இருந்தபோது, ஜாங்கிட் மீது வந்த ஒரு புகாரின் மீது விசாரணை நடத்த உத்தரவிடுகிறார் ஜார்ஜ். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் தென் சரக எஸ்.பியாக இருந்த திருஞானம் என்ற அதிகாரி, விசாரணையைத் தொடங்குகிறார். அப்போது அதே துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் அஷோக் குமார். இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜாங்கிடும் இவரும் மிக மிக நெருக்கம். திருஞானத்தை அழைத்து ஜாங்கிட் மீதான புகாரை விசாரிக்கக் கூடாது என்று கடும் நெருக்கடியளிக்கிறார் அஷோக் குமார். ஜார்ஜிடம் பணியாற்றிக் கொண்டு எப்படி விசாரிக்காமல் இருப்பது ? ஒரு கட்டத்தில் அஷோக் குமாரை சந்திப்பதையே தவிர்த்தார் திருஞானம். அன்றே ஜாங்கிட் சிக்கியிருக்க வேண்டியது. ஆனால் காலம் அவருக்காக காத்திருந்தது.
சரி கதைக்கு வருவோம். வடநெமிலி நில அபகரிப்பு தொடர்பாக நடைபெற்ற அனைத்து விசாரணைகளையும், ப்ரதீப் யாதவ், ஜாங்கிட் ஜோடி வெற்றிகரமாக முறியடித்த நிலையில், புதிய ஆட்சி வருகிறது. புதிய ஆட்சியில், ஜாங்கிட் கன்னியாக்குமரி போக்குவரத்துக் கழக கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். ப்ரதீப் யாதவ், அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது செயலராக நியமிக்கப்படுகிறார். பின்னர், மத்திய உள்துறையில் இயக்குநராகிறார். கன்னியாக்குமரியில் இருந்தாலும் ஜாங்கிட்டின் செல்வாக்கு குறையாத வகையிலேயே இருந்தார்.
இந்நிலையில் புதிய ஆட்சி அமைந்ததும் 2011 ஆகஸ்ட் முதல் வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் வடநெமிலி கிராம மக்கள் சார்பாக சொக்கலிங்கம் என்பவர் புகார் அளிக்கிறார். ஜாங்கிட்டை மீறி, காஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விடுவார்களா என்ன ? தன் செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கு பதிவு செய்ய விடாமல் தடுக்கிறார்.
இந்த நிலையில்தான் தான் அளித்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் சொக்கலிங்கம். இந்த வழக்கை ஜாங்கிட்டும், ப்ரதீப் யாதவும் எந்த அளவுக்கு இழுத்தடிக்க முடியுமோ, அந்த அளவுக்கு இழுத்தடிக்கிறார்கள்.இதன் நடுவே ஜாங்கிட் மற்றும் ப்ரதீப் யாதவின் பினாமிகளான சந்திரசேகர் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் சார்பில் தங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. ஜாங்கிட்டின் பினாமி சந்திரசேகர் பால் வியாபாரம் செய்யும் ஒரு சாதாரண நபர். அவருக்காக இந்த வழக்கில் வாதாடியது யார் தெரியுமா ? ஜெயலலிதாவின் வழக்கறிஞரான பி.குமார். மற்றொரு பினாமியான ரவிச்சந்திரன் சார்பாக ஆஜரானது ரமேஷ் என்ற மற்றொரு மூத்த வழக்கறிஞர்.
இந்த வழக்கு முதலில் நீதியரசர் ஆறுமுகசாமியிடம் விசாரணைக்கு வருகிறது. அத்தனை பேரையும் ஏதாவது ஒரு வழியில் கவிழ்க்கும் ஜாங்கிட், நீதிபதியை மட்டும் விட்டு வைப்பாரா என்ன ? இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த நீதிபதி ஆறுமுகசாமிக்கும் கடுமையான நெருக்கடியை அளிக்கிறார் ஜாங்கிட். ஒரு கட்டத்தில் இந்த வழக்கு தீர்ப்பு வழங்கும் நிலையை எட்டுகிறது. அப்போது ஜாங்கிட் சார்பாக ஒரு வழக்கறிஞர் திடீரென்று எழுந்து, இந்த வழக்கில் ஜாங்கிட்டையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நீதிபதி ஆறுமுகசாமி எக்கேடாவது கெட்டுப் போங்கள் என்று வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறார்.
வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வருகிறது. விசாரணை நடந்து கொண்டிருக்கையில் ப்ரதீப் யாதவ் தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்கிறார். இந்த வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்க முடியுமோ, அப்படியெல்லாம் இழுத்தடித்தனர்.
இதனிடையே, ப்ரதீப் யாதவ் டெல்லியிலிருந்து காய் நகர்த்தினார். எப்படியாவது இந்த வழக்கை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்று தனது வட இந்திய லாபி முலமாக தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்தார்.
இப்படி ஜவ்வு மாதிரி இவ்வழக்கு இழுத்துக் கொண்டே சென்றபோதுதான், திடீரென்று இவ்வழக்கில் ஆஜரான அரசுத் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி, ஜாங்கிட் மற்றும் ப்ரதீப் யாதவ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் தெரிவித்ததும், எந்த கடிதத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்று மனுதாரர் சார்பில் கேட்கப்பட்டதும், அந்த விபரங்கள் தன்னிடம் இல்லை, ஆனால் தனது கருத்துறையை பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியதை அடுத்து, நீதிபதி கிருபாகரன், இந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்தார்.
அரசுத் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி திடீரென்று நீதிமன்றத்தின் முன்பு ஆஜராகி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சொன்னதன் பின்னணியிலும் ஒரு சதி இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அது என்னவென்றால், மனுதாரர் சொக்கலிங்கம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வந்தால், ப்ரதீப் யாதவ் மற்றும் ஜாங்கிட் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வேளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் இருவரும் கைது செய்யப்படுவார்கள். இதைத் தவிர்ப்பதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை என்று அறிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தக் கருத்தை முற்றிலும் உதாசீனப்படுத்தவும் முடியவில்லை. ஏனென்றால் லஞ்ச ஒழிப்புத் துறையின் வரலாறு அப்படிப்பட்டது. ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளான உயர் அதிகாரிகளை காப்பாற்றுவதில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நிகரே கிடையாது. ஆனால் நம்பிக்கைதானே வாழ்க்கை.
இப்போது ஒரு கிளைக்கதை. லஞ்ச ஒழிப்புத் துறையில் ஜெயஸ்ரீ என்று ஒரு மேலாளர் இருக்கிறார். இந்த ஜெயஸ்ரீ பற்றி நாமும் பெற்றோம் ஒரு கோடி கட்டுரையில் கூடுதல் தகவல்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் உதவி மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஜுனியர் விகடன் இதழ் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் செய்தது. நடக்க முடியாத மாற்றுத் திறனாளி ஒருவர், அப்போது அமைச்சராக இருந்த ஒருவர், சம்பந்தம் இல்லாத ஒருவர் ஆகிய மூன்று பேர் பெயரில் ஓட்டுநர் உரிமம் பெற்றனர். யாருக்கு ஓட்டுநர் உரிமம் என்பதே தெரியாமல், ஒரு மாற்றுத் திறனாளிக்கு கொடுக்கிறோம் என்பது கூட தெரியாமல், பணத்தை வாங்கி பையில் போட்டுக் கொண்டு லைசென்ஸ் வழங்கினர் போக்குவரத்துத் துறையினர். இந்த விவகாரத்தை பதிப்பிபதற்கு முன்பாக, ஒரு சமூகக் கடமையோடு ஜுனியர் விகடன் குழுவினர் லஞ்ச ஒழிப்புத் துறையில் அப்போது எஸ்.பியாக இருந்த மஞ்சுநாதாவிடம் சென்று புகார் அளிக்கின்றனர். மஞ்சுநாதா எளிமையான அதிகாரி. இயல்பாக அனைவரையும் நம்புவார். யாரையும் சந்தேகப்படமாட்டார். ஜெயஸ்ரீயின் குணநலன்கள் தெரியாமலும், விஷயத்தின் தீவிரத்தன்மை தெரியாமலும், அப்போது, அந்த சப்ஜெக்டுக்கு பொறுப்பாக இருந்த ஜெயஸ்ரீயை அழைத்து, இது மிக மிக அவசரம். இது தொடர்பாக நாளை மறுநாள் ஜுனியர் விகடன் இதழில் கட்டுரை வந்து விடும். அதற்கு முன்னதாக நாம் விசாரணையைத் தொடங்கி விட வேண்டும். அதற்காக இது குறித்து ஒரு அறிக்கையை தயார் செய்து அரசுக்கு அனுப்ப வேண்டும் எனறு அந்தக் கோப்பை அளிக்கிறார். அப்போது மணி 5. அந்தக் கோப்பை வாங்கிய ஜெயஸ்ரீ, சார் நேரமாகி விட்டது. நான் இந்தக் கோப்பை வீட்டுக்கு எடுத்துச் சென்று, அறிக்கை தயார் செய்து நாளை வருகிறேன் என்கிறார். மஞ்சுநாதா அப்படியே செய்யுங்கள் என்கிறார். வீட்டுக்கு சென்ற ஜெயஸ்ரீ, அந்தக் கோப்பை அப்படியே நகல் எடுத்து தனது எதிர் ஃப்ளாட்டில் இருக்கும் ராணி என்பவரிடம் கொடுக்கிறார். எதற்காக லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசியக் கோப்பை ராணியிடம் கொடுக்க வேண்டும் என்று ஆச்சர்யப்படுகிறீர்களா ? அந்த ராணி போக்குவரத்துத் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார். நடக்க முடியாத மாற்றுத் திறனாளிக்கு கொடுக்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தில் கையெழுத்திட்டது அந்த ராணிதான். அந்த ராணி வேறு யாரும் அல்ல…. ஜெயஸ்ரீயின் சொந்த சகோதரி.
ரகசியக் கோப்பை மொத்தமாக நகலெடுத்து ராணியிடம் கொடுத்த ஜெயஸ்ரீ ஒன்றுமே தெரியாதது போல மறுநாள் மஞ்சுநாதாவிடம் அந்த அறிக்கையை கொடுக்கிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை தொடங்குவதற்குள், போக்குவரத்துத் துறையினர் அந்தக்கோப்பில் இருந்த விபரங்களை வைத்து, ஒரு புகாரைத் தயார் செய்தனர். யாரோ மூன்று பேர் போலி விபரங்களை அளித்து, அவர்களை ஏமாற்றி லைசென்ஸ் வாங்கி விட்டார்கள் என்று சென்னை மாநகரக் காவல்துறையில் புகார் அளித்து ஸ்டிங் ஆபரேஷன் செய்தவர் மீதே வழக்கு பதிவு செய்ய வைத்தனர்.
இந்த விபரம் நீண்ட நாட்கள் கழித்தே மஞ்சுநாதாவுக்கு தெரிந்தது. இதைச் செய்த ஜெயஸ்ரீ எந்த பாதிப்பும் இன்றி கூடுதல் மேலாளராகவும், மேலாளராகவும் பதவி உயர்வு பெற்றார். லஞ்ச ஒழிப்புத்துறைக்கென்று ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டது. அந்த மென்பொருள் நிறுவனம், தற்போது உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவின் கூடுதல் டிஜிபியாக இருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு தெரிந்த நிறுவனம். அந்த மென்பொருளுக்காக அதைத் தயாரித்த நிறுவனத்துக்கு 5 லட்ச ரூபாய் தொகை ஒதுக்கப்பட்டது. 4.50 லட்சம் வழங்கி விட்ட நிலையில், அந்த மென்பொருள் சரியாக வேலை செய்யவில்லை. மீதம் உள்ள 50 ஆயிரம் பணத்தைக் கேட்டு, அந்த மென்பொருள் நிறுவனம் கடிதம் எழுதியது. அப்போது அந்த மென்பொருள் சரியாக வேலை செய்கிறது என்று சான்றளித்தால்தான் பணத்தை பட்டுவாடா செய்யமுடியும். அந்த மென்பொருள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஒரு ஊழியரிடம் அந்த மென்பொருள் சரியாக வேலை செய்கிறது என்று சான்று கேட்கப்படுகிறது. அந்த ஊழியர், மென்பொருள் வேலை செய்யவில்லை. சான்றளிக்க இயலாது என்று மறுத்து விடுகிறார். (அந்த ஊழியர் யார் தெரியுமா… சவுக்கு தளத்தை நடத்தும் தறுதலைப்பயல்தான்). ராதாகிருஷ்ணன் தொலைபேசியில் ஜெயஸ்ரீயிடம் பேசியதும், அந்த மென்பொருள் சிறப்பாக வேலை செய்கிறது என்று சான்றளித்தார் ஜெயஸ்ரீ. அந்த நிறுவனத்துக்கு எஞ்சியிருந்த 50 ஆயிரம் ரூபாயும் பட்டுவாடா செய்யப்பட்டது.
இது தவிரவும், லஞ்ச ஒழிப்புத்துறையின் ரகசியப் பிரிவுக்கே தலைவர் என்பதால், ஜெயஸ்ரீயின் பார்வைக்கு வராமல் எந்தக் கோப்பும் நகராது. இதனால் பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகள் ஜெயஸ்ரீயோடு எந்த நேரத்திலும் தொடர்பில் இருப்பார்கள். எந்த அதிகாரி மீது வழக்கு போடப்பட்டுள்ளது… அந்த வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு தவியாய்த் தவிப்பார்கள். இந்த அதிகாரிகளுக்கு, தாராளமாக தகவல்களை தருவார் ஜெயஸ்ரீ.
இதனால் உயர் அதிகாரிகளுக்கு ஜெயஸ்ரீ மீது தனி மரியாதை உண்டு. சரி. இப்போது எதற்காக ஜெயஸ்ரீயின் கதை என்கிறீர்களா ? இந்த ஜெயஸ்ரீ கடந்த மார்ச் 31 அன்று 58 வயது நிறைவடைந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், உலகத்தில் யாருமே இல்லாத அப்பாடக்கர் என்று அவருக்கு ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த பணி நீட்டிப்புக்கு முன்னின்று நடவடிக்கை எடுத்தவர், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராக உள்ள வெங்கட்ராமன். இவர் ஒரு நேர்மையான அதிகாரி. ஆனால் எதற்காக ஜெயஸ்ரீ போன்ற ஒரு நேர்மையற்ற நபருக்கு, அதுவும் ரகசியப்பிரிவு மேலாளராக உள்ள நபருக்கு பணி நீட்டிப்பு பெற்றுத் தருகிறார் ? ஜெயஸ்ரீயின் பணி நீட்டிப்பால் அடுத்து மேலாளராக வேண்டிய சொர்ணா என்ற நபரின் பதவி உயர்வு பறிபோயுள்ளது. கூடுதல் மேலாளராக வேண்டிய கனகா என்பவரின் பதவி உயர்வு பறியோயுள்ளது. உதவி மேலாளராக வேண்டிய விஜயகுமார் என்பவரின் பதவி உயர்வு பறிபோயுள்ளது. ஜெயஸ்ரீ பணியிலிருந்து ஓய்வு பெற்றால் வானம் இடிந்து விழுந்து விடுமா என்ன ?
ஆனால் எதற்காக இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்றால், கூடுதல் டிஜிபியாக உள்ள அஷோக் குமாரின் நெருக்கடியே காரணம். அஷோக் குமார் கொடுத்த நெருக்கடி காரணமாக, நேர்மையான அதிகாரியான வெங்கட்ராமன், ஒரு நேர்மையற்ற செயலுக்கு துணைபோயுள்ளார். ஜெயஸ்ரீ போன்ற ஒரு நம்பத்தகாத நபருக்கு நான்கு பேரின் பதவி உயர்வை பறித்து பணி நீட்டிப்பு பெற்றுத் தந்துள்ளார்.
ஜாங்கிட் மீதான விசாரணையிலும், அஷோக் குமார், வெங்கட்ராமனுக்கு நெருக்கடி தருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஜாங்கிட்டைக் காப்பாற்றுவதற்காக அஷோக் குமார், எந்த எல்லைக்கும் செல்வார்.
ஆனால் வெங்கட்ராமன் போன்ற அதிகாரிகள் ஜாங்கிட் விவகாரத்தில் இந்த அழுத்தங்களுக்கு அசையாமல், தங்கள் மனசாட்சிப் படி பணியாற்ற வேண்டும். ஜாங்கிட் மீதான விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். வழக்கமாக லஞ்ச ஒழிப்புத்துறையில் செய்வார்களே…. போதுமான ஆதாரங்கள் இல்லாததால் மேல் நடவடிக்கை கைவிடப்படுகிறது என்று… அதுபோல இந்த விவகாரத்தில் செயல்படாமல், நேர்மையாக விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். எத்தனை ஆண்டுகாலம் நேர்மையாக இருந்தாலும், ஒரே ஒரு நேர்மையற்ற செயல், பல ஆண்டுகளாக கட்டிக்காத்த நற்பெயரை அழித்து விடும் என்பது வெங்கட்ராமன் போன்ற அதிகாரிகளுக்கு தெரியாதது அல்ல.
இரண்டு மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை, அதுவும் ஒரு கூடுதல் டிஜிபி மீதும், மத்திய உள்துறையில் இயக்குநர் மீதும் விசாரணை என்ற செய்தி உதாசீனப்படுத்தக் கூடிய செய்தி அல்ல. பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. இந்தச் செய்தியை தினமணியைத் தவிர்த்து, எந்த நாளேடுகளும் வெளியிடவில்லை. இந்த செய்தி வெளிவராமல் போனதற்கு டார்க் ரூம் காரணமா அல்லது பத்திரிக்கை ஆசிரியர்கள் காரணமா என்ற ஆராய்ச்சிக்குள் போக விரும்பவில்லை. இச்செய்தியை வெளியிடாமல் இருக்கக் காரணமாக இருந்த அத்தனை பத்திரிக்கையாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், முதலாளிகளுக்கும் சவுக்கின் கடும் கண்டனங்கள்.
இந்தச் செய்தியை வெளியிட்ட உயர்நீதிமன்ற தினமணி செய்தியாளருக்கும், தினமணி நாளிதழுக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
தன்னைப் புகழும் செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும், தன்னை விமர்சித்தோ குறை கூறியோ ஒரு செய்தி கூட வெளியிடப்படக் கூடாது என்றும், தன் மீதான புகார்கள் என்றுமே விசாரிக்கப்படக் கூடாது என்ற முயற்சியிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ஜாங்கிட் என்ற யானைக்கு ஏற்பட்ட சறுக்கல் இது. ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறித்தானே ஆக வேண்டும் ?