யார் இந்த டாஸ்மாக் தமிழ் ? வெளியூரில் இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவன். சென்னை நகரில் தலைமைச் செயலகம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை செய்கிறான். படிக்கவில்லையே தவிர அபார ஞாபக சக்தி அவனுக்கு. லாவகமாக கஸ்டமர்களின் தேவை அறிந்து சர்வீஸ் செய்வதில் அவனுக்கு நிகரே கிடையாது. சமீப காலமாக டாஸ்மாக் பார்களின் புதிதாக முளைத்துள்ள ஏ.சி பார்களில் சப்ளை செய்வதுதான் அவனது வேலை.
வரும் கஸ்டமர்களுக்கு என்ன ப்ராண்ட் பிடிக்கும், எவ்வளவு சாப்பிடுவார்கள் என்பது பழக்கத்தின் காரணமாக தெரிந்து, கஸ்டமர்கள் வந்து அமர்ந்தவுடன் அவர்களைக் கேட்காமலேயே ஆர்டர் செய்வது பல கஸ்டமர்களுக்கு பிடிக்கும். நேரடியாக வந்து தமிழ் எங்கே என்றுதான் கேட்பார்கள். “எங்கப்பா போயிட்ட” என்று கஸ்டமர் ஒருவர் கேட்டதற்கு, தமிழ்நாட்டில் தமிழ்தான் இல்லை என்று பாரதிதாசன் அன்றைக்கே சொல்லியிருக்கிறார் என்று பதில் சொல்லி அசத்துவான். இது போல துருதுருவெனப் பேசுவதால் இவனைப் பிடிக்காதவர்களே இல்லை எனலாம்.
இவனை எல்லோருக்கும் பிடிக்கும் என்றால் இவனுக்குப் பிடித்தது என்ன தெரியுமா ? மது அருந்தி விட்டு தலைமைச் செயலகத்திலும், சமூகத்தின் முக்கிய மனிதர்களின் அலுவலகங்களிலும், வீடுகளிலும், ட்ரைவர்களாகவும், வேலைக்காரர்களாகவும் பணியாற்றுபவர்கள் தங்கள் முதலாளிகளைப் பற்றி கேவலமாக பேசுவதைக் கேட்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.
டாஸ்மாக் தமிழ் தங்கியிருப்பது, திருவெல்லிக்கேணியில் உள்ள ஒரு பேச்சிலர் விடுதியில். அவனோடு விடுதியில் தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் பத்திரிக்கையாளர்கள். பத்திரிக்கை துறையில் பணியாற்றுகிறார்களே தவிர, அவர்களுக்கெல்லாம் தெரியாத அத்தனை தகவல்களும் டாஸ்மாக் தமிழுக்குத் தெரியும். பத்திரிக்கை துறையில் வேலை பார்த்தாலும், நமக்கெல்லாம் தெரியாத விவரங்களெல்லாம் இவனுக்குத் தெரிகிறதே என்று அவன் நண்பர்களுக்கெல்லாம் தமிழ் மீது பொறாமையும் உண்டு…. வியப்பும் உண்டு.
தினந்தோறும் டாஸ்மாக் கடை பத்து மணிக்கு அடைத்ததும், தமிழ் அறைக்கு வருவதற்கு இரவு 11 மணி ஆகி விடும். 11 மணி ஆனாலும், தமிழ் வருகைக்காக அவனது நண்பர்களெல்லாம் காத்துக் கிடப்பார்கள். பின்ன காத்துக் கிடக்காமல்… ? அவனை வைத்துதான் பத்திரிக்கையில் பணியாற்றும் அவனது ரூம் மேட்டுகள் தங்கள் பத்திரிக்கை பணியையே செய்கிறார்கள். அவன் ஒரு நாள் வராவிட்டால் மறுநாள் அலுவலகத்துக்கு என்ன செய்தி கொடுப்பது ?
டாஸ்மாக் கடைக்கு ஏது விடுமுறை ? நாளிதழ்களுக்கு விடுமுறை விடும் நாளன்று கூட டாஸ்மாக் கடைக்கு விடுமுறை கிடையாதே… அதனால் செய்திகளுக்குப் பஞ்சம் இல்லை. அதை வெளியிட பத்திரிக்கைகளுக்குத்தான் பஞ்சம்.
அன்றும் அதே போலத்தான் காத்திருந்தனர்.
“வாய்யா தமிழ்… வேலையெல்லாம் முடிஞ்சுதா ?” என்றவர் பெயர் கணேசன். ஒரு நாளிதழில் வேலை பார்க்கிறார்.
“முடிஞ்சுதுண்ணே… எல்லாம் சாப்டீங்களா ? “
“எல்லாம் சாப்டோம். நீ அங்கயே சாப்பிட்ருப்ப. சொல்லு இன்னைக்கு என்ன டாப் நியூஸ் ? “ என்றவர் பெயர் ரத்தினவேல். அவர் ஒரு ஜானி ஜான் கான் சாலையில் உள்ள ஒரு வாரமிருமுறை இதழில் பணியாற்றுகிறார்.
“வழக்கமா வர்ற நம்ப கஸ்டமருங்க எல்லாம் வந்திருந்தாங்க. அவங்கள்லாம் டெய்லி குடிக்கிற கோஷ்டிங்கல்ல…. அவங்க என்ன சொந்த காசு போட்டா குடிக்கறாங்க…“
“குடி கதையை விடு.. மேட்டருக்கு வா…“ என்றவர் பெயர் பீமராஜன். அவர் அண்ணா சாலையில் உள்ள ஒரு வாரமிருமுறை இதழில் இருப்பவர்.
“வழக்கமாக வர்ற திமுக காரர் வந்தார். இன்னைக்கு அவர் செம போதை. ரொம்ப சோகமா இருந்தார்“
“ஏன் என்ன சோகம் அவருக்கு.. கட்சி நல்லாத்தானே இருக்கு.. ? அவங்க தலைவருதான் தெனமும் ஒரு அறிக்கை, பேட்டின்னு கலக்கறாரே.. பத்தாததுக்கு ஊரான் கட்சியைப் பத்தியெல்லாம் கவலைப்படறாரே… ? “ என்றவர் வடிவேலு. அவர் புரசைவாக்கத்தில் உள்ள மற்றொரு வாரமிருமுறை இதழின் செய்தியாளர்.
“இல்ல வடிவேலு… தலைவருக்கு கவலைப்படறதுக்கு மேட்டரா இல்ல ? பசங்க ரெண்டு பேரும் கன்னாபின்னான்னு அடிச்சுக்கறாங்க. பொண்ணு எப்படியாவது முன்னேறி வரும்னு பாத்தா, எப்பப் பாத்தாலும் அண்ணன் கிட்ட சொல்லுங்கப்பான்னு அவரையே சுத்திக்கிட்டு நிக்கிது. வருத்தம் இருக்காதா அவருக்கு. “
“அதுவும் சர்தான்“ என்றார் வடிவேலு.
“ஆனா இப்போ அவரு கவலைப்படறதுக்கு காரணம் அது இல்ல. “
“இப்போ என்னப்பா லேட்டஸ்ட் கவலை ? “ என்றார் கணேசன்,
“அவரு மனைவி தயாளு டெல்லியில மே 6ம் தேதி சாட்சி சொல்லனும். டெல்லி வெயில் மே மாசம் எப்படி இருக்கும்னு சொல்லனுமா ?. வெயிலைக் கூட சமாளிச்சுடலாம். ஆனா சாட்சி எப்படி சொல்றதுன்னுதான் தலைவர் ரொம்ப குழப்பத்துல இருக்காறாம். கலைஞர் டிவியில 60 சதவிகித ஷேர் வச்சுருந்தது தயாளு அம்மாதான். அந்த அம்மா நான்தான் டிவியைப் பாத்துக்கிட்டேன்னு சொன்னா அந்த அம்மா மாட்டிக்கும். எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொன்னா மூணாந்தாரத்து மகள் மாட்டிக்கும். என்னதான் பண்ணுவாரு தலைவரு ? “
“அவர் பாடு கொஞ்சம் கஷ்டம்தான்பா“ என்ற ரத்னவேல் “வேற கட்சி பத்தி நியூஸ் இல்லையாப்பா ? “ என்றார்.
“ஏன் இல்லாம… நம்ப வாசன்தான் ரொம்ப டென்ஷன்ல இருக்காராம். அடுத்து என்ன செய்யறதுன்னே புரியலையாம்“
“ஏன் அவருக்கு என்ன… மந்திரியாத்தானே இருக்கார் ?“ என்றார் பீமராஜன்.
“மந்திரியா இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பார்.. ஒரு நல்ல அரசியல்வாதி அடுத்தது என்னன்னு யோசிச்சுக்கிட்டே இருக்க வேணாமா ? டெல்லியில ஒரு பக்கம் ராகுல் காந்தி கடும் நெருக்கடி கொடுக்கறாராம். இன்னொரு பக்கம் ப.சிதம்பரம் நெருக்கடி கொடுக்கறாராம். பேசாம வெளியில போயிடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கார். “
“அவரைத்தான் பிரதமர் கூப்புட்டு பேசி சமாதானப்படுத்திட்டாரே.. “
“பிரதமர் சமாதானப்படுத்திட்டாலும், அமைதியா இருக்கறதுக்கு வாசன் என்ன மன்மோகன் சிங்கா… அது மட்டும் இல்லாம சமீபத்துல நடந்த மாணவர் காங்கிரஸ் தேர்தல்ல வாசன் அணி பெரும்பான்மையா ஜெயிச்சுருக்காம். இதனால அவங்களோட ஆதரவாளருங்க வாங்கண்ணே தனிக்கட்சி ஆரம்பிப்போம்… நமக்கு இங்க மரியாதை இல்லன்னு அவரை உசுப்பேத்திக்கிட்டு இருக்காங்க. “
“போலீஸ் தகவல் எதுவும் இருக்கா ? “ என்றார் கணேசன். அவர் அந்த நாளிதழில் க்ரைம் பீட் பார்ப்பவர். அவருக்கு எப்போதும் போலீஸ் மீதுதான் கவனமெல்லாம்.
“ஏன் இல்லாம ? ஹோம் செக்ரட்டரி ட்ரைவரும், அவர் வீட்ல வேலை செய்யற கான்ஸ்டபிளும் நம்ப கஸ்டமராச்சே.. எப்படி இல்லாம இருக்கும் ?
வீரப்பனை சுட்டோம்னு ஜெயலலிதா கவர்மென்ட்ல பதவி உயர்வு வாங்குனாங்க தெரியுமா ? “
“ஆமாம்பா.. ஒரு ஸ்டேஜ் ப்ரொமோஷன், 3 லட்ச ரூபாய் பணம், ரெண்டு க்ரவுன்டு வீடு இதெல்லாம் அந்த அம்மா குடுத்துச்சே…“
“ஆங்.. அதேதான். அதுல பதவி உயர்வு வாங்குனவங்கல்லாம் பல பதவிகள்ல இருந்தாங்க. கான்ஸ்டபிள், சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், டிஎஸ்பின்னு இருந்தாங்க. வீரப்பன் அதிரடிப்படையில சப் இன்ஸ்பெக்டரா இருந்தவங்க இன்ஸ்பெக்டராயிடுவாங்க. இன்ஸ்பெக்டரா இருந்தவங்க டிஎஸ்பியா ஆயிடுவாங்க, டிஎஸ்பியா இருந்தவங்க கூடுதல் எஸ்.பியா ஆயிடுவாங்க. “
“யோவ் இது பழைய கதையா.. இதப்போய் ஒரு நியூஸ்னு சொல்ற..? என்று அலுத்துக் கொண்டார் கணேசன்.
“இருண்னே.. இதுல பெரிய நியூஸ் இருக்குண்ணே“ என்றபடி தொடர்ந்தான் டாஸ்மாக்.
“அப்படி ப்ரொமோஷன் வாங்குனவங்களுக்கு, அடுத்த பதவி உயர்வு, அவங்களோட வேலையில சேந்தவங்களுக்கு எப்போ வருதோ அப்போதான் வரும். உதாரணத்துக்கு 1999ல 10 பேர் வேலையில சப் இன்ஸ்பெக்டரா சேர்றாங்க. அதுல ஒருத்தர்க்கு வீரப்பன் அதிரடிப்படையில இருந்ததுனால இன்ஸ்பெக்டர் பதவி கிடைக்குது. அவருக்கு அடுத்த பதவி உயர்வு, அவரோட வேலையில சேந்தாங்கள்ல 10 பேர். அவங்களுக்கு எப்போ டிஎஸ்பி பதவி உயர்வு வருதோ, அப்போதான் அவருக்கும் பதவி உயர்வு.
“இது நியாயம்தானே… இதுல என்ன பிரச்சினை ? “ என்றார் கணேசன்.
“2006ல திமுக வந்ததும், வீரப்பன் அதிரடிப்படையில இருந்தவங்களுக்கு அடுத்தடுத்த பதவி உயர்வு கிடையாதுன்னு ஒரு அரசாணை போட்டாங்க. வீரப்பன் டீம் அதை எதிர்த்து நீதிமன்றம் போனாங்க. நீதிமன்றம், அரசாங்கம் போட்ட உத்தரவு சரிதான்னு சொல்லிடுச்சு. அப்புறம் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்துலையே மேல்முறையீடு செஞ்சாங்க. அந்த மேல்முறையீடு நிலுவையில இருக்கும்போது புது கவர்மன்ட் வந்துடுச்சு..“
“புது கவர்மென்ட் வந்துடுச்சுன்னா வீரப்பன் டீமுக்கு கொண்டாட்டமா போயிடுமே.. ? “
“அப்படித்தாண்ணே ஆயிடுச்சு… எப்போ புது கவர்மென்ட் வந்தாலும், நீதிபதிங்க ஆளுங்கட்சிக்கு மாறிடுவாங்க. அரசாங்கத்துக்கு எதிரா எதுவுமே செய்ய மாட்டாங்க. அப்படித்தான் புது கவர்மென்ட் வந்ததும், எலிப்பி தர்மாராவ்னு ஒரு நீதிபதி இருக்கார்ல… வீரப்பன் டீமுக்கு அடுத்தடுத்த பதவி உயர்வு கிடையாதுன்னு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிச்சாரு. ஒரு தீர்ப்புக்கு தடை விதிச்சா உடனே அந்த உத்தரவே செல்லாதுன்னு அர்த்தம் கிடையாது. வழக்கு முடியற வரை காத்திருக்கனும். ஆனா, அரசாங்கம் என்ன பண்ணுச்சு, இதுக்கு முன்னாடி வண்டு முருகன்னு ஒரு வக்கீல் அரசு தலைமை வழக்கறிஞரா இருந்தாரு. அவர் கிட்ட ஒரு ஒபினியன் வாங்கி, புது அரசாணை வெளியிட்டாங்க. “
“அப்படி பண்ணலாமா ? அதுக்கு சட்டத்துல எடம் இருக்கா ? “ என்று சந்தேகம் கேட்டார் ரத்னவேல்.
“அரசுத் தலைமை வழக்கறிஞர் வண்டுமுருகனே சொல்லிட்டார்.. அவரை மீறி யார் கேக்கறது. அப்புறம் அந்த வழக்கு திரும்ப நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் நீதிபதி துரைசாமி முன்னாடி விசாரணைக்கு வந்துச்சு. அவங்களாவது நியாயமா ஒரு தீர்ப்பு சொல்லுவாங்கன்னு பாத்தா, அவங்க கட்டப்பஞ்சாயத்து பண்ற மாதிரி, சமாதானமா போங்க.. ரெண்டு தரப்புக்கும் ப்ரொமோஷன் குடுங்கன்னு வற்புறுத்துனாங்க. “
“இதுக்கு வீரப்பன் டீமுக்கு எதிர் டீம் ஒத்துக்கிட்டாங்களா ? “ என்றார் பீமராஜன்.
“எப்படிய்யா ஒத்துக்குவாங்க… வீரப்பனை புடிக்கப் போறேன்னு சப்பாத்தி சுட்டவன், தோசை சுட்டவனெல்லாம் ப்ரொமோஷன் வாங்குனா அப்புறம் கஷ்டப்பட்டு முதல் ரேங்க் வந்தவனுக்கு என்ன மரியாதை. அவங்க ஒத்துக்கவே மாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னாங்க. அந்த நீதிபதியும் என்னன்னவோ பண்ணிப் பாத்தாங்களாம். ஒண்ணும் நடக்கல. “
“ஒரு நீதிபதியே இப்படி சமாதானம் பேசலாமா ? “ என்றார் ரத்னவேல்.
“இல்ல பாஸ்.. இப்போ முதலமைச்சரோட பாதுகாப்பு அதிகாரியா வீரபெருமாள், பெருமாள்சாமின்னு ரெண்டு பேர் இருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் வீரப்பன் டீம். வீரப்பனை டிவியில கூட பாத்துருக்க மாட்டாங்க. ஆனா, ரெண்டு பேரும் அதிரடிப்படையில வேலை பாத்தாங்கன்னு அவங்களுக்கு ஒரு ஸ்டேஜ் பதவி உயர்வு கொடுத்துட்டாங்க. இவங்க இவங்களுக்கு முன்னாடி இருக்க 1979 பேட்ச்சுக்கு மேல தங்கள வைக்கணும்னு கேக்கறாங்களாம். “
“ரொம்ப போங்கா இருக்கே…“
“போங்குதான். என்ன பண்றது ? முதல்வர் பாதுகாப்பு அதிகாரின்னா அத்தனை அதிகாரியும் அலர்றாங்களே… இந்த விசாரணை நடந்துக்கிட்டு இருக்கும்போதே, நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் மதுரை நீதிமன்றத்துக்குப் போயிட்டாங்க. அதுக்கப்புறம் இந்த வழக்கு நீதிபதி பானுமதி மற்றும் ரவிச்சந்திர பாபு முன்னாடி வந்துச்சு. அப்போ, வீரப்பன் டீமுக்கு மொதல் ப்ரொமோஷன் குடுத்ததே தப்புன்னு தெளிவா தீர்ப்பு எழுதிட்டாங்க. “
“அப்புறம் என்ன… எல்லாம்தான் முடிஞ்சுச்சே… இனிமே பிரச்சினை இல்லைதானே.. “ என்றார் ரத்னவேல்.
“பிரச்சினை பண்ற ரெண்டு பேரும் முதல்வர் பாதுகாப்பு அதிகாரிகளாச்சே.. இவங்க ரெண்டு பேரும் பண்ற தொந்தரவால, 1979 பேட்ச் அதிகாரிகளுக்கு கூடுதல் எஸ்பி பதவி உயர்வு இன்னும் குடுக்கல. அந்த பேட்ச்ல இன்னும் இருக்கறதே 100 பேர்தான். இவங்களும் மாசம் பத்து பேர் ரிட்டையர் ஆகிட்டு இருக்காங்க… ஆனா அந்த ரெண்டு பெருமாள்களும், அவங்கள ரெண்டு பேருக்காக யாருக்குமே ப்ரொமோஷன் கிடைக்கக் கூடாதுன்னு அடம் பிடிக்கறாங்க… இதனால, எல்லாரும் ரொம்ப மன வருத்தத்துல இருக்காங்க பாஸ்“
“சரி.. டிஜிபி நல்ல அதிகாரியாச்சே…“ என்றார் கணேசன்.
“அண்ணே அதுதான்ணே யாருக்குமே புரியலை.. டிஜிபி நல்ல அதிகாரி. அவரு கூட நமக்கு உதவ மாட்றாரேன்னு 1979 பேட்ச் அதிகாரிங்க மன வருத்தத்துல இருக்காங்க. அவரு நெனச்சா ஒரே நாள்ல ஆர்டர் வந்துடும்னு சொல்றாங்க.. “
“வேற போலீஸ் நியூஸ் இல்லையா ? “
“இருக்குண்ணே…. தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை எப்படியாவது சந்திச்சுடனும்னு கூடுதல் டிஜிபி ஜாங்கிட் துடியா துடிக்கறாராம்… உங்களுக்கு தினமணி ஆசிரியரை தெரிஞ்சா அவருக்கு அறிமுகப்படுத்துங்களேன். “
“எனக்கு எங்க பேப்பர் எடிட்டரையே தெரியாது… ஏம்பா கிண்டல் பண்ற.. சரி எதுக்கு பாக்கணும்றாரு ? “
“அவர் மேல லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தணும்னு சென்னை உயர்நீதிமன்றம் போன வாரம் உத்தரவு போட்டுச்சுன்ணே. இந்த செய்தி எந்தப் பத்திரிக்கையிலயும் வரக்கூடாதுன்னு ஜாங்கிட் தலைகீழா நின்னு வேலைபாத்தாரு.. எல்லாப் பத்திரிக்கையிலயும் நிறுத்திட்டாரு… ஆனா தினமணியில செய்தி வந்துடுச்சு. இதனால எப்படியாவது தினமணியையும் நம்ப வழிக்கு கொண்டு வரணும்னு துடிக்கறாரு. “
“எங்க பத்திரிக்கையில செய்தி வந்துடுச்சே…“ என்றார் பீமராஜன்.
“அதுக்கும் வேலை பாத்துட்டாருல்ல…. இன்னும் ரெண்டு வாரத்துல உங்க பத்திரிக்கையில மறுப்போ, இல்லன்னா இவரைப் பத்திப் புகழ்ந்து செய்தியோ வர்றதுக்கு வேலை பாத்துட்டாரே….“
“என்ன வேலை பாத்தார்“ என்று ஆர்வமாக கேட்டார் அண்ணா சாலை வாரமிருமுறை இதழில் வேலை பார்க்கும் பீமராஜன்.
“உங்க அலுவலகத்துல கண்ணன்னு ஒருத்தர் இருக்காராம். அவரை போன வாரம் தி.நகர்ல இருக்கற அக்கார்ட்னு ஒரு ஹோட்டல்ல வச்சு பேசிருக்கார் ஜாங்கிட். என்ன பேசினாங்கன்னு நம்ப பார்க்கு வர்றவருக்கு தெரியல. ஆனா, ஜாங்கிட் என்ன பேசுவார்னுதான் ஊருக்கே தெரியுமே.. “
“அது ஊருக்கே தெரிஞ்ச விஷயம்தானே… நமக்கு ஹெல்ப் பண்ணுது… நம்ப எனிமிஸ் நம்பள பத்தி தப்பா நியூஸ் தருது. அதப் போடாதீங்க.. உங்களுக்கு எல்லா ஹெல்ப்பும் பண்ணுதுன்னு சொல்லுவார்.. வேற என்ன சொல்லுவார். “ என்றார் பீமராஜன்.
“ஆமா… என்னப்பா உங்க பத்திரிக்கையில கலைஞர் டிவிக்கு 90 கோடி அபராதம்.. பழிவாங்கும் காங்கிரஸ்னு கவர் ஸ்டோரி வச்சுருக்கீங்க“ என்று ரத்னவேலைப் பார்த்துக் கேட்டான் தமிழ்.
“ஏம்பா… கூட்டுக்களவாணிங்க வேற எப்படி எழுதுவாங்க… எங்க இணை ஆசிரியர் காமராஜ் வீட்லயே ரெய்ட் நடந்துச்சே 2ஜி சம்பந்தமா.. அவரெல்லாம் 2ஜி வழக்குல பார்ட்னர். 2ஜி ஊழல் பணத்துல உருவான கலைஞர் டிவிக்கு அபராதம் விதிச்சா அவருக்கு கோபம் வராதா ? அதான் கவர் ஸ்டோரி வச்சுட்டார். சரி…. கோர்ட் நியூஸ் ஏதாவது இருக்கா ?“ என்றார் ரத்னவேல்.
“ஏன் இல்லாம ? ஹை கோர்ட்ல ரொம்ப ரொம்ப முக்கியமான வக்கீல் நம்ப ரெகுலர் கஸ்டமர் பாஸ். அவருக்குத் தெரியாம ஹை கோர்ட்ல எதுவுமே நடக்காது. “
“அப்போ சொல்லுய்யா என்ன நியூஸ்னு… பிகு பண்ணிக்காத.. “ என்று தமிழை சீண்டினார் பீமராஜன்.
“இப்போ ஹைகோர்ட்ல ஹாட் டாபிக் நீதிபதிகள் நியமனம்தான். இந்த வருஷம் டிசம்பர்ல மொத்த காலியிடம் 20 ஆகுது. அதுல 15 பதவிகள் வக்கீல்களுக்குத்தான். இதனால, நீதிபதியாகனும்னு ஆசைப்பட்ற வக்கீலெல்லாம் தங்களுக்கு தெரிஞ்ச அத்தனை லாபியிலயும் முட்டி மோதறாங்க.
இப்போ இருக்கற தலைமை நீதிபதி அகர்வால், பொறுப்பு தலைமை நீதிபதியா இருக்கறதால, அவரால யாரையும் நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்ய முடியாதுன்னு விதி இருந்தாலும், உச்ச நீதிமன்றத்துல இரண்டாவது மூத்த நீதிபதியா இருக்கற சதாசிவம்தான் எல்லாத்தையும் முடிவு பண்றாராம்.
மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தியின் மகள் வைகை சென்னை உயர்நீதிமன்றத்தில முக்கியமான வழக்கறிஞர். அவங்க வைத்தியநாதன்னு ஒரு வழக்கறிஞரை நீதிபதியாக்கனும்னு பரிந்துரை பண்ணியிருக்காங்களாம். நீதிபதி சதாசிவம் அவங்க சொன்னா தட்டமாட்டாராம். சதாசிவத்துக்கிட்டயே நேரடியா வைகை பேசிட்டதாகவும், அவங்க பரிந்துரைபடி வைத்தியநாதனை எப்படியாவது நீதிபதியா ஆக்கிடனும்னு சதாசிவம் இப்போ இருக்கற தலைமை நீதிபதி அகர்வால்கிட்ட சொல்லிட்டதாகவும் உயர்நீதிமன்றத்துல பரபரப்பா பேச்சு இருக்கு பாஸ். ஆனா இந்த வைத்தியநாதனை நீதிபதியாக்கறதுக்கு வழக்கறிஞர் மத்தியில பலத்த எதிர்ப்பு இருக்கு.
இந்தியாவுல எந்த நீதிமன்றத்துலயும் இல்லாதபடி, முதல் முறையா சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்துல ஒரு தீர்மானம் கொண்டு வர்றதுக்கு முயற்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க. வழக்கறிஞர் சங்கத்துல இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தாங்கன்னா, அது பெரிய சிக்கலை உருவாக்கும்னு பேசிக்கறாங்க.
இதுக்கு நடுவுல சில வழக்கறிஞர்கள் நீதிபதிகள் நியமனத்துல வெளிப்படைத்தன்மை வேணும்னு நோட்டீஸ் போட்டு உயர்நீதிமன்றம் முழுக்க விநியோகிச்சுருக்காங்க. இது வேற சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு.
ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில எம்.எஸ் சீட்டுக்கு லஞ்சம் கேட்டு வாங்கின துணைப்பதிவாளர் சுப்ரமணியனை மூணு வருஷத்துக்கு முன்னாடி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில ஸ்டிங் ஆப்ரேஷன் பண்ணி பிடிச்சாங்க. இதைத் தொடர்ந்து சிபிஐ அந்த விஷயத்துல எப்ஐஆர் போட்டு விசாரணை பண்ணாங்க. இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்துல நடந்துக்கிட்டு இருக்கு.
இதுல சிக்காம இருக்கறதுக்கு ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியோட வேந்தர் வெங்கடாச்சலம் இது வரைக்கும் 20 கோடி ரூபாய் செலவு பண்ணியிருக்கார். “
“எந்த வெங்கடாச்சலம்பா… சமீபத்துல சிபிஐ ஃபாரின் கார் இறக்குமதி பண்றதுல முறைகேடுன்னு இவர் வீட்லேர்ந்து 5 காரை பறிமுதல் பண்ணாங்களே… அந்த வெங்கடாசலமா ? “ என்று சந்தேகம் எழுப்பினார் கணேசன்.
“அவரேதான்ணே… அந்த வெங்கடாச்சலம் இந்த வழக்கோட விசாரணை நடந்தா நாளைக்கு எப்படியிருந்தாலும் சிக்கல்னு, சிபிஐ நீதிமன்றத்தோட நீதிபதி பரமராஜுக்கு எப்படியாவது லஞ்சம் குடுக்க முயற்சி பண்ணியிருக்காங்க. ஆனா அவர் இதுக்கெல்லாம் மசியாம அந்த வழக்குலேர்ந்து சுப்ரமணியனை விடுவிக்க மறுத்துட்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்துல மனு போட்ருக்காங்க.
இந்த மனு திங்கட்கிழமை நீதிபதி பழனிவேல் முன்னாடி விசாரணைக்கு வருது. என்ன ஆகப்போகுதுன்னு தெரியல… “
“சரிப்பா மணி ஒன்றரை ஆகுது. எனக்கு தூக்கம் வருது நான் கௌம்பறேன்“ என்றார் கணேசன்.
“அண்ணே கடைசியா ஒரு செய்தியை கேட்டுட்டு போங்கண்ணே. சென்னை எழும்பூர்ல தில்லையாடி வள்ளியம்மை எதிரில எத்திராஜ் காலேஜ் போறதுக்கு ஒரு ரோடு போகுதுல்ல.. ?
அந்த ரோடு தொடங்கற எடத்துல, ரேடிஸன்னு ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆரம்பிச்சுருக்காங்க. இந்த ஹோட்டல்ல இருக்கற பார்க்கிங் வசதி போக, அந்த ரோடு எதிரில கூவம் நதிக்கரையில பார்க்கிங் வசதி ஏற்பாடு செஞ்சிருக்காங்க. “
“ஏம்பா.. பார்க்கிங் எடம் இல்லாதவன் எதுக்காக ஹோட்டல் ஆரம்பிக்கறான்.. “
“மேயர் சைதை துரைசாமி இருக்கும்போது பணக்கார ஹோட்டல்களுக்கெல்லாம் என்ன கவலை… ? ஒரு பெரிய அமவுன்ட வாங்கிக்கிட்டு கூவம் நதிக்கரையில கரையை பலப்படுத்தி பார்க்கிங் வசதியெல்லாம் தடபுடலா செஞ்சு கொடுத்துருக்கார். இந்த ஆளு மேல ஏகப்பட்ட குற்றச்சாட்டெல்லாம் வந்து கூட ஜெயலலிதா ஏன் இந்த ஆளை இன்னும் மேயரா வச்சுருக்காங்கன்றது தான் யாருக்குமே புரியலை“
“சரி போலாம்ணே… நேரமாச்சு. எனக்கு காலைல 11 மணிக்குதான் ட்யுட்டி. நீங்கள்லாம் சீக்கிரம் போகணும்ல.. “ என்று எழுந்தான் தமிழ்.
அனைவரும் எழுந்து கலைந்தனர்.