பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சியினர் தெரிவித்த கருத்துகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பதிலுரை – 29.4.2013
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
25.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கும், மரக்காணம் காலனியை சேர்ந்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்து மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள். இது குறித்து விரிவான பதிலினை இந்த மாமன்றத்திற்கு நான் அளிக்க விரும்புகிறேன்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், 25.4.2013 அன்று, வன்னியர் சங்கம் அதாவது பாட்டாளி மக்கள் கட்சி,”சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா” ஒன்றை நடத்த அறிவித்திருந்தது. இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருந்திரளாக உறுப்பினர்கள் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தது. இதில் பங்கேற்கும்படி வன்னியர் சங்கத்தின் சார்பாக, தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. “வங்க கடலா, வன்னிய கடலா, ஒரு கோடி வன்னியர்கள் சித்திரை பெருவிழாவிற்கு அலைகடலென திரண்டு வாரீர்” எனவும், “கடல் நீரை அள்ள முடியாது, வன்னியரை வெல்ல முடியாது” எனவும், “நாங்க உறைய விட்டு வாள் எடுத்தா இரத்த ருசி காட்டி வைக்கும் வழக்கம் எங்க குல வழக்கமடா” எனவும், “சோழர் வம்சம் இது சோறு போடும் வம்சம் இது, எதிரிகள் யாரும் வந்தால் கூறு போடும் வம்சம் இது” எனவும் சுவரொட்டிகள் வாயிலாக விளம்பரங்கள் செய்யப்பட்டன.
இவ்விழாவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவர் மற்றும் பத்திரிகையாளர் திரு. வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை 16.4.2013 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அம்மனு மீது காவல் துறையினர் 19.4.2013 க்குள் விழா அமைப்பாளர்களுக்கு விளக்கம் கோரும் குறிப்பாணை ஒன்றை சார்வு செய்து, அதற்கு அளிக்கப்படும் பதில் விளக்கத்தின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குவது குறித்துத் தீர்மானிக்குமாறு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தது.
இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மேற்படி விழா அமைப்பாளர்களுக்கு இவ்விழா நடக்கும் போது இரு சமுதாயத்தினர் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதையும்; குறிப்பாக கடந்த 2000 மற்றும் 2010ம் ஆண்டு இவ்விழாவின் போது நடந்த கலவரத்தை சுட்டிக் காட்டியும்; இவ்விழாவிற்கு வந்த தொண்டர்கள் வாயிலாக விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதையும்; இவ்விழாவில் தலைவர்கள் பேசும் போது சாதி உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசி இருந்ததையும்; அப்பேச்சுக்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இரு சமுதாயத்தினர் இடையே மனக் கசப்பை ஏற்படுத்தியதையும்; இவ்விழா சம்பந்தமாக காவல் துறையினர் அளித்த நிபந்தனைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதையும்; கால அவகாசத்தை மீறி இவ்விழாவை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதையும்; இதற்கு முன்பு இவ்விழாக்களின் போது நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதையும்; விழாவின் போது அதிகப்படியான கூட்டத்தை கூட்டுவதற்கு போதிய முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாததையும்; ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேர கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் இன்னலுக்கு ஆளானதையும்; மேற்படி விழா நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் கடற்கரை ஒழுங்கு முறைப் பகுதி, அதாவது Coastal Regulatory Zone என்பதால், அதற்குரிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறையினர் இடமிருந்து முன் அனுமதி பெறாததையும்; விழா நடக்கும் இடம், தொல்லியல் துறை பராமரித்து வரும் கடற்கரைக் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளதையும்; அத்துறையினர் இடமிருந்து அனுமதி பெறாததையும் விவரமாகக் குறிப்பிட்டு, விழாவிற்கு ஏன் அனுமதி மறுக்கக் கூடாது என கேட்டு இதற்கான விளக்கத்தை அளிக்குமாறு விழாவிற்கு அனுமதி கோரியிருந்த திரு. திருக்கச்சூர் ஆறுமுகம் அவர்களுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.
இதற்கான பதில் கடிதம், திரு. திருக்கச்சூர் ஆறுமுகத்திடமிருந்து காஞ்சிபுரம் காவல் துறையினரால் 18.4.2013 அன்று பெறப்பட்டது. அக்கடிதத்தில், இவ்விழாவினால் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாது எனவும்; திரு. ஜெ.குரு உள்ளிட்ட தலைவர்கள் எவரும் சட்டம் மற்றும் ஓழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், பிற சமூகத்தினர் இடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டார்கள் எனவும்; திட்டமிட்டபடி நிகழ்ச்சியைத் துவக்கி,
காவல் துறையினர் குறிப்பிடும் நேரத்திற்கு முன்பாக எந்த விதமான கால தாமதமும் இன்றி நிகழ்ச்சி முடித்துக் கொள்ளப்படும் எனவும்; இந்த விழாவின் மூலம் எந்த விதமான சாதி பிரச்சனை மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விழாவில் கலந்து கொள்பவர்களால் ஏற்படாது எனவும்; விழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும்; போக்குவரத்து பாதிக்காத வகையில் பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர அவசியக் காரியங்களுக்கு சென்று வர வழி அமைத்து தரப்படும் எனவும்; விழா நடத்தும் பகுதி முழுவதும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் சுத்தம் செய்து தரப்படும் எனவும்; காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும்; காவல் துறையினர் வழிகாட்டுதல்படி அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் விழா நடத்தப்படும் என்றும் திரு. திருக்கச்சூர் ஆறுமுகம் அந்தக் கடிதத்தில் உறுதியளித்து இருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு சென்னையில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட போது, அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையும், அதை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு, இதனை காவல் துறையினர் பரிசீலித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்திட அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன்.
14.4.2013 அன்று “மக்கள் ஒற்றுமைப் பேரணி” என்ற பெயரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை சென்னையில் கொண்டாடும் வகையில், எழும்பூரில் ஊர்வலம் மேற்கொள்ளவும், மற்றும் அன்றைய தினம் மாலை மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவினை பரிசீலனை செய்த காவல் துறை, இந்தப் பேரணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்ததன் அடிப்படையில், இந்தப் பேரணியினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதன் அடிப்படையிலும், தர்மபுரி நத்தம் காலனியில் நடந்த சம்பவங்களை அடுத்து வட மாவட்டங்களில் சாதி ரீதியாக இருந்து வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தது.
காவல் துறையின் மறுப்பினைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடுமாறு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊர்வலத்திற்கும் பொதுக் கூட்டத்திற்கும் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து காவல் துறையினர்
செய்த மேல்முறையீட்டை 13.4.2013 அன்று நிராகரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, எந்த நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று நிர்ணயித்தும் உத்தரவிட்டது.
இது போன்ற கூட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்படாத இனங்களில், சம்பந்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றுள்ள நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, வன்னியர் சங்கத்தினருக்கு 25.4.2013 அன்று மேற்படி விழா நடத்துவதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியது.
1) விழாவின் போதோ அல்லது அதற்கு முந்தைய கூட்டங்களிலோ வன்முறையைத் தூண்டும் விதமாகவோ அல்லது பிற வகுப்பினர் மனம் புண்படும்படியாகவோ எவரும் பேசக் கூடாது.
2) விழாவின் போது வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்பவோ, வன்முறையை தூண்டும் விதமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வரவோ கூடாது.
3) மாநாட்டிற்கு வருபவர்கள் திறந்த வகை வாகனங்களை பயன்படுத்தக் கூடாது.
4) வாகனங்களின் மேல்கூரையின் மேல் அமர்ந்து வரக்கூடாது. வாகனங்களில் வருபவர்கள் வரும் வழிகளில் கோஷங்கள் எழுப்பக் கூடாது. வாகனங்களில் ஒலி பெருக்கிகள், அதாவது ளயீநயமநசள கட்டாயமாக பொருத்தி வரக் கூடாது.
5) பிரச்சினைக்குரிய பேச்சுகளை பேசும் பேச்சாளர்களை பேச அழைக்கக் கூடாது.
6) விழா நடக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடவசதிகள், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் வரும் தொண்டர்களின் இதர வசதிகள் குறித்து விழா அமைப்பாளர்கள் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், விழா முடிந்தவுடன் அந்த இடம் சுற்றுப்புற சூழல் பாதிப்பின்றி சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
7) வாகனங்கள் நிறுத்துமிடங்களில் தகுந்த விளக்கு வசதிகள், தற்காலிக பாதுகாப்புத் தடைகள், ஒலிபெருக்கி வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
8) மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட புராதன சின்னங்களுக்கு சேதம் விளைவிக்கும் எந்த செயலையும் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் செய்யக் கூடாது.
9) விழா தொடர்பான கடநஒ போர்டுகளை காவல் துறையினரின் அனுமதியுடன் பிரச்சனை இல்லாத இடங்களில் அமைத்து, கட்சி தொண்டர்களை நியமித்து அவற்றிற்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
10) விழா சம்பந்தமாக பிற மாவட்டங்களில் இருந்து வரும் ஒவ்வொரு வாகனமும் அதில் வரும் தொண்டர்கள் பற்றிய விவரங்களை ஒரு நாள் முன்பு, அதாவது 24.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.
11) ஒலி பெருக்கிகள் நிகழ்ச்சி நடத்தும் பகுதிகளில் மட்டுமே அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். பெட்டி வடிவ ஒலி பெருக்கியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
12) ஜோதி எடுத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வருவதற்கு அனுமதியில்லை.
13) விழாவானது 25.4.2013 அன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அன்று இரவு பத்து மணிக்குள் கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும்.
14) பொது சொத்துக்களுக்கோ, இதர சொத்துக்களுக்கோ ஏதேனும் சேதம் ஏற்பட்டால் விழா அமைப்பாளர்களே முழு பொறுப்பாளர்கள். அதற்குரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். இது தவிர சட்டப்படியாக எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கைக்கும் கட்டுப்பட வேண்டும்.
15) சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினரால் அவ்வப்போது வழங்கப்படும் அனைத்து அறிவுரைகளையும் ஏற்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
16) மேற்கூறிய நிபந்தனைகளை மீறினால் அதற்கு விழா அமைப்பாளர்களே முழு பொறுப்பாளர்கள்.
இந்த நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை திரு. திருக்கச்சூர் ஆறுமுகம் 19.4.2013 அன்று ஒப்புதல் கையொப்பமிட்டுப் பெற்றுக் கொண்டுள்ளார்.
மேலும், 20.4.2013 அன்று, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இவ்விழா அமைப்பாளர்களை அழைத்து, ஒரு கூட்டம் நடத்தி, அதில் விழா எப்படி
நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த உறுதி மொழியையும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தினையும் அமைப்பாளர்களான திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் சிலரிடமிருந்து பெற்றுள்ளார்.
மேலும், இச்சங்கத்தின் தலைவர்கள் காவல் துறை இயக்குநர் மற்றும் காவல் துறை கூடுதல் இயக்குநர் – சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆகியோரை நேரில் சந்தித்து காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடித்து விழாவின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என உத்தரவாதம் அளித்தனர்.
காவல் துறையில் உள்ள சுமார் 90 ஆயிரம் காவல் ஆளிநர்களை வைத்து எப்பொழுதும் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர முக்கிய பணிகளுக்கு உண்டான காவலர்கள் போக மீதமுள்ள காவலர்களை கொண்டு, ஒரே நேரத்தில் அடிக்கடி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது சிரமமான காரியமாகும்.
கடந்த 25.4.2013 அன்று மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடைபெற்றது மட்டுமல்லாமல், மாநிலத்தில், திருவண்ணாமலையில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடிய நிகழ்ச்சிக்கும், மதுரையில் சுமார் ஐந்து லட்சம் பேர் பங்கேற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சிக்கும், சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கும், பெருமளவில் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது.
இருப்பினும், சித்திரை முழு நிலவு விழாவையொட்டி ஏற்படக்கூடிய சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மாமல்லபுரத்தில், 25.4.2013 அன்று, காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில், மூன்று காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 47 காவல் ஆய்வாளர்கள், 99 காவல் உதவி ஆய்வாளர்கள், 935 இதர காவல் ஆளிநர்கள், 10 சிறப்பு காவல் படை நிறுமங்கள் மற்றும் ஆயுதப்படை பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என மொத்தம் 1,910 பேர் விழா பாதுகாப்பு அலுவல்களை மேற்கொள்ளுதல், விழாவின் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், விழாவிற்கு வரும் வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கச் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இத்துடன், இந்த விழாவிற்கு வரும் வாகனங்கள் வரும் சாலைகளிலும், பிரச்சனைக்குரிய பகுதிகளிலும், குறிப்பாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 2,724 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர். வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வந்தார்.
சித்திரை விழாவை முன்னிட்டு, 25.4.2013 அன்று பிற்பகல், வன்னியர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் பிரதான சாலைகளில் மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காவல் துறையினர் அனைத்து சாலைகளிலும் தக்க பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்நிலையில் அன்று பிற்பகல் 1.30 மணியளவில், புதுச்சேரியில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் தொண்டர்கள் வந்து கொண்டிருந்த போது, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கடையம் தெரு காலனி பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் மரம் ஒன்றின் கீழ் வாகனத்தை நிறுத்தி சுமார் 30 பேர் உணவருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அதில் சிலர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அக்காலனியைச் சேர்ந்த சிலர் ஏற்கெனவே தகராறு நடந்த இடத்தில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்க, வாகனத்தில் வந்தவர்கள் அவர்களை அடித்து துரத்தியுள்ளனர். அவர்கள் காலனிக்கு சென்று தகவல் தெரிவித்ததின் பேரில், அக்காலனியைச் சேர்ந்த சுமார் 200 பேர் மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு வந்து சாலையில் கற்களையும், கட்டைகளையும் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
மரக்காணத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததையடுத்து, மரக்காணத்திற்கு மேல் மாமல்லபுரம் நோக்கி பாட்டாளி மக்கள் கட்சியினர் வாகனங்கள் சென்றால் வழியில் உள்ள காலனிகளில் பிரச்சனை ஏற்படும் என ஆதி திராவிட இனத்தவர் தெரிவித்தனர். மாற்று வழியில் செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியதை கேட்காமல் விழாவிற்கு வந்தவர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி, வாகனங்களில் இருந்து இறங்க ஆரம்பித்தனர்.
இதனால், அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கும், காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்களில் வந்தவர்கள் காலனிக்குள் சென்று எட்டு குடிசை வீடுகள் மற்றும் மாட்டுக் கொட்டகை ஆகியவற்றிற்கு தீ வைத்ததுடன், அவ்வழியே வந்த மூன்று அரசு பேருந்துகள், ஒரு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் தீயிட்டு கொளுத்தினர்.
இது பற்றி தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, “வருண்” வாகன உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். காவல் துறையினர் அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறியும் அதற்கு செவி மடுக்காமல், அவர்கள் தொடர்ந்து கற்களை வீசியதால் பணியில் இருந்த காவல் ஆளிநர்கள் மூன்று பேர் காயமுற்றனர். சம்பவம் குறித்து அறிந்தவுடன், அங்கு விரைந்த விழுப்புரம்
காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தையும் கல் வீசி தாக்கியுள்ளனர். அந்தக் கூட்டத்தை கலைந்து செல்லும்படி பல முறை எச்சரித்தும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து கற்கள் வீசி தாக்கியதால், காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி அக்கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர்.
அதன் பின்னரும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால், மேலும் கலவரம் பரவாமல் தடுக்கவும், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுவதைத் தடுக்கவும், காவல் துறையினர் உரிய எச்சரிக்கைக்கு பின்பு லேசான பலப்பிரயோகம் செய்த போதும், கலைந்து செல்லாமல் தொடர்ந்து பாட்டாளி
மக்கள் கட்சியினர், வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி, காவல் துறையினர் உரிய எச்சரிக்கைக்கு பின்னர், துப்பாக்கியால் வானத்தை நோக்கி மூன்று ரவுண்டுகள் சுட்டும், ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
மேலும், விழாவிற்கு சென்றவர்கள் அனுமந்தை சுங்கச் சாவடியில் தகராறு செய்து, கண்ணாடிகள், கேமரா, ஏணி, அறிவிப்பு விளக்குகள், பூந்தொட்டிகள், கம்பி வேலி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர். சுங்கச் சாவடி ஊழியர்களும் தாக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு பகுதியில் ஒரு கடையையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், மாமல்லபுரத்தில் காவல் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை வாகனம் ஒன்றையும் சேதப்படுத்தினர்.
விழாவிற்கு சென்றவர்கள் பல்வேறு இடங்களில் ஆறு அரசு பேருந்துகள், மூன்று காவல் வாகனங்கள் உள்ளிட்ட 11 வாகனங்களை கல் வீசி சேதப்படுத்தினர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தவிர, இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு இடங்களில் கல் வீச்சில் ஈடுபட்டதால், பல வாகனங்கள் சேதம் அடைந்தன. ஆனால் இது குறித்து வாகன உரிமையாளர்கள் புகார்கள் எதையும் இதுவரை அளிக்கவில்லை.
இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் பயணம் செய்த வாகனங்களின் பதிவு எண்களை காவல் துறையினர் பின்னர் ஆய்வு செய்து சரிபார்த்த போது, சில வேன்களின் பதிவு எண்கள் போலியானவை எனத் தெரிய வந்துள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு எண்களை சில வேன்களுக்கு போலியாக பயன்படுத்தி உள்ளனர். எனவே, வேண்டுமென்றே சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை எற்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.
மேலும், இவ்விழாவினால், கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேரங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், வெளியூர் செல்லும் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். மேலும் அவசர கால சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நோயாளிகள் அல்லலுற்றனர்.
விழா முடித்து திரும்பிச் சென்றவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டு இரண்டு மணி நேரம் போக்குவரத்தை தடை செய்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மேலும், மரக்காணம் அருகில் தீ வைப்பு, வாகனங்கள் மீது தாக்குதல் ஆகிய சம்பவங்கள் நடந்த போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 300 வாகனங்கள் புதுச்சேரி நோக்கி திருப்பி அனுப்பப்பட்டன. அந்த இடத்தில் கழிக்குப்பம் என்ற ஊரை ஒட்டிய சாலையின் ஒரு பக்கத்தில் தலையில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒரு நபரின் உடல் கிடந்தது. வாகனத்தின் மேலிருந்து விழுந்தோ அல்லது வாகனம் மோதியோ மரணம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் அந்த பிரேதத்தில் இருந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் 304(B)-ன்கீழ் வாகன விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் நடைபெற்ற விசாரணையில், இறந்தவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு. செல்வராஜ் என்று தெரிய வந்துள்ளது. இந்த மரணம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஐயமும் கருத்தில் கொள்ளப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.
மற்றொரு சம்பவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. விவேக் என்பவரும் வாகன விபத்தில் இறந்துள்ளார். மரக்காணத்தில் பிரச்சனை உருவாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகனங்கள் புதுச்சேரி நோக்கி
திருப்பிச் சென்ற போது, ஒரு வாகனத்தில் விவேக் என்பவர் ஏற முயன்ற போது, கவனக் குறைவாக ஓட்டி வரப்பட்ட தனியார் பேருந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதன் காரணமாக அந்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக அவரது உறவினர் திரு. பிரசன்னா
கொடுத்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 (B)-ன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்றவர்கள் மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்ட போதும், காவல் துறையினர் மிகுந்த பொறுமையுடன், பொதுமக்கள் நலன் கருதி அச்சம்பவங்களை கையாண்டதோடு, காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் யாரும் காயம் அடையவில்லை.
இவ்விழா அமைப்பாளர்கள், விழா சம்பந்தமாக காவல் துறையினர் விதித்த நிபந்தனைகளை தவறாமல் கடைபிடிப்பதாக எழுத்து மூலமாகவும், உயர் அதிகாரிகளிடம் நேரடியாகவும் உத்தரவாதம் அளித்துவிட்டு, அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அந்த நிபந்தனைகளை கடைபிடிக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. வழக்கம் போல பெரும்பாலான நிபந்தனைகளை மீறியதோடு, சட்ட மீறல்களிலும் ஈடுபட்டனர். உதாரணமாக கீழ்கண்ட நிபந்தனைகள் விழா அமைப்பாளர்களால் மீறப்பட்டுள்ளன.
விழாவில் பங்கேற்ற தலைவர்கள், விழாவை முடிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து கூட்டத்தை தொடர்ந்து 11.35 மணி வரை நடத்தினர்.
இவ்விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் குடி போதையில் இருந்ததோடு, ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
விழாவிற்கு சென்றவர்கள் மரக்காணம் உள்ளிட்ட பல இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதோடு, பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் பலத்த சேதத்தை விளைவித்தனர்.
மேலும், மாமல்லபுரம் அருகே குழிப்பாந் தண்டலம், அம்மாள் நகர், பூஞ்சேரி, நந்தி மாநகர், காரணை மற்றும் சில இடங்களில் சாலையோரத்தில் இருந்த மற்றொரு கட்சியினரின் கொடி கம்பங்களை உடைத்தும், தேசிய தலைவர் படங்களின் முகத்தில் சாயம் பூசியும், சாதி மோதலை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்தவர்கள் திறந்த வாகனங்களிலும் சரக்கு வாகனங்களிலும், வாகனங்களின் மேற்கூரையில் ஏறி நடனம் ஆடியும், ஆபாசமான வார்த்தைகளை பேசியும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர்.
விழா முடிந்தவுடன் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அப்பகுதி முழுவதையும் சுத்தம் செய்து தரவில்லை.
புராதன சின்னமான கடற்கரை கோவில் மேல் ஏறி அதில் அவர்கள் கட்சி கொடியை கட்டி புராதன சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டனர்.
இது சம்பந்தமாக தொல்லியல் கண்காணிப்பாளர் இடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில், Lakhs of people have swarmed inside the monument damaging the fencing, lawn, garden and climbed the historical shore temple and hoisted flags and are sitting on the monument as per the reports received from our officials at 6 p.m. today. They have been subjected to virtual harassment by the local groups and public and have gained forceful entry into the monuments “The monument has been exposed to vandalism and destruction என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்து மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக விழா அமைப்பாளர்கள் உறுதி அளித்திருந்த போதும், இவ்விழாவில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. ராமதாஸ் பேசும் போது, “”11 ½ மணிக்குப் பேசறேன் – போடு வழக்க. அதெல்லாம் நமக்குக் கவல கிடையாது” என்று கூறியுள்ளார்.
பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய ராமதாஸ் அவர்கள் மீது ‘வழக்குப் போடுங்கள்’ என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டு, நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்.
இளைஞர் பெருவிழா என்று நடத்தப்பட்ட இந்த விழாவிற்கான விளம்பர சுவரொட்டிகளில் சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இளைஞர்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறும் திரு. ராமதாஸ், சந்தன மரக் கடத்தல் வீரப்பனை இளைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இல்லையென்றால் எதற்காக சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படம் சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டது?
தமிழ்நாட்டில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் திரு. ராமதாஸ், முன்னின்று நடத்திய இந்த விழாவில், பெரும்பாலான இளைஞர்கள் மது குடித்து விட்டுதான் வந்து இருந்தார்கள். இப்படித்தான், திரு. ராமதாஸ் இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறாரா?
கடந்த 28.4.2000 அன்று நடந்த விழாவில் பங்கேற்றவர்கள், மாமல்லபுரம், புதுப்பட்டினம், வாயலூர் காலனி ஆகிய இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளனர். 26.4.2002 அன்று நடைபெற்ற விழாவின் போதும், மரக்காணத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 28.4.2010 அன்று நடந்த விழாவின் போது பூஞ்சேரி, வாயலூர் காலனி ஆகிய இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதே போன்று 5.5.2012 அன்று நடந்த விழாவின் போது வன்னியர் சங்கத்தின் தலைவர் சாதி உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 17.8.2008 அன்று சென்னையில் நடைபெற்ற வெள்ளி விழா மாநாட்டிற்கு வந்த போது, புதுப்பட்டினம், கல்பாக்கம் ஆகிய இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. மேலும், 14.4.2010 அன்று, மறைமலை நகரில் நடந்த அம்பேத்கரின் 119-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வந்த இக்கட்சியின் தொண்டர்கள் மறைமலை நகர், மாமண்டூர், வேடந்தாங்கல் ஆகிய இடங்களில் சச்சரவுகளில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.
பொதுவாக, பல்வேறு அரசியல் மற்றும் சாதி ரீதியான அமைப்புகள் சில காரணங்களுக்காக தங்கள் பலத்தை காட்டும் விதத்தில், ஊர்வலம், பொதுக்கூட்டம், மாநாடு, நினைவு தின நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தும் போது, அந்நிகழ்ச்சிகளுக்கு பெருமளவில் வாகனங்களில் வந்து செல்பவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட சாலை வழியே வந்து செல்லும் போது, காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் திறந்த வாகனங்களில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொள்ளும் போதும், வழி நெடுக சாலையோர உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறுகளில் ஈடுபடும் போதும், மாற்று கட்சி மற்றும் பிற அமைப்புகளின் கொடி மற்றும் அடையாள சின்னங்களைச் சேதப்படுத்தும் போதும், அவர்களை கட்டுப்படுத்துவது என்பது காவல் துறையினருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. அதிகமான எண்ணிக்கையில் வாகனங்களில் செல்லும் போது, காவல் துறையினரின் அறிவுரைகளுக்கு அவர்கள் செவி சாய்ப்பதில்லை.
இது போன்ற விழாக்களுக்கு காவல் துறையினர் அனுமதி தர மறுத்தால், விழா அமைப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி, அங்கே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடக்க மாட்டோம், காவல் துறையினருக்கு கட்டுப்படுவோம், அமைதிக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என பல்வேறு உத்தரவாதங்களை உயர் நீதிமன்றம் முன்பு அளிக்கின்றனர். உயர் நீதிமன்றமும், இவர்களின் உத்தரவாதங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய பின்னணியை புரிந்து கொள்ளாமல், கடந்த காலங்களில் இது போன்ற விழா எப்படி நடத்தப்பட்டது என்பதை பார்க்காமல், சில நிபந்தனைகளின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், விழா நடைபெறும் போது சென்னை உயர் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் இவர்கள் கடைபிடிப்பதில்லை. இதுவே, இது போன்ற கூட்டங்களின் போது பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிறது.
மேலும், அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போது, காவல் துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து தடுக்கின்றனர். இது போன்ற சமயங்களில் ஒரு தரப்பினர், காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக குறை கூறுவதும், மற்றொரு தரப்பினர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறை கூறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த அரசு, ஒரு போதும் வன்முறைகளை சகித்துக் கொள்ளாது. தங்கள் சுய லாபத்திற்காக அப்பாவி பொதுமக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தூண்டிவிட்டு வன்முறைச் செயல்களுக்கு காரணமாக இருப்பவர்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவித கருணையும் இன்றி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு
ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இவ்வரசு தயங்காது எனவும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சம்பவங்கள் தொடர்பாக, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதுவரையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் குற்றவாளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மரக்காணத்தில், இரண்டு நாட்கள் முகாமிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, சுமூகநிலை ஏற்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பால் ஆகியவை வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த
9 நபர்களின் கூரை வீடுகள் முழுவதுமாகவும், ஒரு நபரின் கூரைவீடு பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மாட்டுக் கொட்டகை, பெட்டிக் கடை, வைக்கோல் போர் என
7 நபர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இதர வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் குடிசை வீடு மற்றும் இருவரின் கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்.
இதுவன்றி, கூரை வீடுகளை இழந்த அனைவருக்கும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும். இந்தச் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பேர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25,000 ரூபாயும், புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று இல்லங்கள் திரும்பியுள்ள 17 நபர்களுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.