தமிழகத்தைப் பொறுத்தவரை, சாதீய மோதல்கள் என்பது என்பது நீறுபூத்த நெருப்பாகவே எப்போதும் இருந்து வருகிறது. ஆதிக்க சாதியினருக்கும் தலித்துகளுக்கும் இடையே மோதல் வெடிக்க ஒரு சிறு பொறி போதுமானதாக இருந்து வருகிறது. மக்களிடையே ஆழமாக ஊறிய சாதிய உணர்வு எத்தனை தலைமுறை மாறினாலும் மேலும் மேலும் வளர்ந்து வருகிறதே தவிர, சற்றும் குறைந்தபாடில்லை. நாகரீக வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ, இந்த சாதி உணர்வை தணிக்கத் தவறிய நிலையில் சாதிய மோதல்கள் நடைபெறாமல் தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஆளும் கட்சிக்கே இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே இந்த சாதிய உணர்வுகளையும், மோதல்களையும் தங்கள் சுய ஆதாயத்துக்காக தொடர்ந்து பயன்படுத்தியே வந்திருக்கின்றன.
தென்மாவட்டங்களைப் போல கடுமையான சாதி மோதல்கள் வட தமிழகத்தில் இல்லை என்றாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சியும், பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியும், தலித் வன்னியர் இடையேயான மோதல்களை கூர்மைப்படுத்தின. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி, தலித் மக்கள் அணிதிரள ஒரு களமாக அமைந்தது. இதுநாள் வரை தாக்கப்படும் இடத்தில் இருந்த தலித்துகள், திருப்பித் தாக்கும் நிலையை எடுத்ததால், தலித்துகள் வன்னியர்கள் இடையேயான மோதல்கள் அதிகரித்தன.
ஒரு கட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் கைகோர்த்ததையடுத்து, இரு சமூகத்தினரிடையேயான மோதல்கள் தணிந்தன. ராமதாஸை வைத்து அம்பேத்கர் சிலைகளைத் திருமாவளவன் திறக்க வைத்ததும், ராமதாஸுக்கு அம்பேத்கர் சுடர் கொடுத்ததும், இருவரும் ஈழம் தொடர்பான போராட்டங்களில் ஒன்றாகக் கலந்து கொண்டதும், இரு சமூகத்தினரிடையே முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வில்லையென்றாலும், மோதல் இல்லாத நிலையை உருவாக்கியது. இந்த உறவு தேர்தல் களத்திலும் தொடர்ந்ததால், சாதீய மோதல்கள் கவலைகொள்ளும் அளவுக்கு ஏற்படவில்லை.
2004 பாராளுமன்றத் தேர்தலில், திமுகவோடு கூட்டு சேர்ந்து 6 எம்.பி.பதவிகளைப் பெற்ற டாக்டர் ராமதாஸூக்கு பதவியும் அதிகாரமும், தனது தகுதியை மீறி கர்வம் கொள்ள வைத்தது. டெல்லியில் அதிகாரத்தில் பங்கு, மாநிலத்தில் மைனாரிட்டியாக அமைந்த திமுக அரசு, பாட்டாளி மக்கள் கட்சியின் 18 எம்.எல்.ஏக்கள் ஆகியவை ராமதாஸுக்கு “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்ற மமதையை அழித்தது. 2006 திமுக ஆட்சிக்காலத்தில், நாள்தோறும், திமுக ஆட்சிக்கு தொல்லை கொடுப்பதையே வேலையாக வைத்திருந்தார் ராமதாஸ். அவ்வப்போது கருணாநிதி அரசை குறைசொல்வது, ஆட்சிக்கு மார்க் போட்டு பெயில் மார்க் போடுவது என்ற விமர்சனங்களில் ஒரு ஆட்சியையோ, கட்சியையோ நியாயமான முறையில் விமர்சனம் செய்வது என்பதைத் தாண்டி, நான் இல்லாவிட்டால் இந்த ஆட்சியே இல்லை… இந்த ஆளை தினந்தோறும் எரிச்சலூட்ட வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியே அதிகமாக இருந்தது.
தன்னோடு கூட்டணி வைத்துவிட்டு, ஒவ்வொரு தேர்தலின்போதும், மாறி மாறி கூட்டணி வைத்ததை தமிழக மக்கள் வெறுத்தார்களோ இல்லையோ, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மிகக் கடுமையாக வெறுத்தார்கள். அரசியலில் கூட்டணி அமைப்பதையும், கட்சி, தலைவர்கள் மற்றும் அவர்கள் பலத்தை அனுமானிப்பதில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே திறமையானவர்கள். எப்போதாவது ஏற்படும் சறுக்கலைத் தவிர்த்து, இருவருமே பல நேரங்களில் சரியான முடிவுகளையே எடுக்கிறார்கள். அந்த வகையில், ராமதாஸை நீண்ட நாட்களாகவே கவனித்து வந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருமே ராமதாஸ் அழிக்கப்படவேண்டிய சக்தி என்ற முடிவுக்கு வந்தார்கள்.
இந்த முடிவுகளின் தாக்கம் 2009 பாராளுமன்றத் தேர்தல் மற்றம் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. மக்கள் பார்வையில் வலுவான கூட்டணி என்று காண்பித்துக் கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களை தோற்கடிக்க இரண்டு கட்சிகளாலும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவு 2009 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி மண்ணைக் கவ்வியது.
2011 சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலை தொடர்ந்தது. தொடர்ந்து திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து வந்த ராமதாஸ், திமுக கூட்டணியில் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார். 30 இடங்களில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 18 எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை மிரட்டிக் கொண்டிருந்த ராமதாஸுக்கு இந்த படுதோல்வி மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. தன் மகனுக்கு ஒரு ராஜ்யசபை எம்.பி சீட்டைக் கூட பெற்றுத் தர முடியாத ஒரு அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ராமதாஸின் வெற்றி என்ன தெரியுமா ? மாறி வரும் அரசியல் தட்பவெட்பங்களை நுட்பமாகக் கண்டறிந்து அதற்கேற்றார்போல அரசியல் கூட்டணிகளை அமைப்பது. இவரது இந்த யுக்தி 2009 வரை வெற்றியையே பெற்றுத் தந்தது. அரசியலில், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காவிட்டால் காலத்தால் கரை ஒதுக்கப்படுவார்கள். அப்படி உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தவர்தான் ராமதாஸ். தேர்தல் அரசியலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்று வந்துவிட்டாலே கொள்கை கோட்பாடுகள் பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. வெற்றி பெற்றவன் சொன்னதே வேதம். இது போன்ற தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருந்த மருத்துவர் ராமதாஸின் செல்வாக்கை குறைக்க வேண்டும், ஒடுக்க வேண்டும் என்று இரண்டு திராவிடக் கட்சிகளுமே முடிவெடுத்தன.
2011 தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு ராமதாஸுக்கு தொடர்ந்து சறுக்கல் ஏற்பட்டது. மத்தியிலும் அதிகாரத்தை இழந்ததால், மாநிலத்திலும் அதிகாரம் இல்லாமல் நிலை தடுமாறினார் ராமதாஸ். அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர வேறு எந்த அரசியல் செயல்பாடுகளும் இல்லாமல் முடங்கிப்போன நிலையில்தான் வாராது வந்த வரப்பிரசாதமாக அமைந்தது தருமபுரி கலவரம். தருமபுரி கலவரம் குறித்த கட்டுரைகளின் இணைப்புகள் தர்மபுரி வன்முறை : மாறும் அரசியல் முகங்கள் (2) தருமபுரி : தலித் மக்களை சூறையாடிய வன்னிய சாதி வெறி (3) அவள் பெயர் அம்பிகா.
தருமபுரி கலவரம், ராமதாஸுக்கு ஒரு புதிய ஆயுதத்தை அளித்தது. சமுதாயத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் ஆபத்தான ஆயுதமான சாதி வெறியைத் தூண்டும் ஆயுதத்தை கையில் எடுத்தார் ராமதாஸ். அரசியல் ரீதியாக இது தனக்கு மிகப்பெரிய ஆதரவையும் பலத்தையும் உருவாக்கும் என்று டாக்டர் ராமதாஸ் போட்ட கணக்கே அவரது சாதி வெறியை உருவாக்கும் தொடர் நடவடிக்கைகள்.
தலித் இளைஞர்கள் மற்ற சாதிப் பெண்களோடு காதல் வயப்படுவதும், அவர்கள் பெற்றோர்கள் சம்மதிக்காத காரணத்தால் அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொள்வதும், காலம் காலமாக தமிழகத்தில் நடந்து வருபவை. அவற்றுள் சில திருமணங்கள் முறிவில் முடிவதும் நடந்தே வருகிறது. கல்லூரியில் படிக்கும் இளம்பருவத்தினர் காதல் வயப்படுகையில் அவர்கள் சாதி பார்ப்பதில்லை. அவர்களுக்கு அந்த வயதில் உள்ள ஈர்ப்பு, சாதி, பொருளாதாரம் போன்ற எதைப்பற்றியும் சிந்திக்க வைப்பதில்லை. இது போன்ற திருமணங்களால், தலித் அல்லாத சாதியைச் சேர்ந்த ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர்கள், கடுமையாக கோபமடைகிறார்கள் என்பதும் உண்மையே. “எந்த சாதியா இருந்தாலும் பண்ணி வச்சுருப்போம். போயும் போயும் இந்த ஈன சாதிக்காரனப் போயி கட்டிக்கிட்டு வந்து நிக்கிறாளே“ என்ற வசனம் இயல்பாக கேட்கக் கூடிய வசனம். தலித் அல்லாத சாதியில் உள்ள பெற்றோர்களின் இந்த உணர்வு ஒட்டு மொத்த தலித் அல்லாத சாதிகளை இணைக்க உதவும் என்று கருதினார் ராமதாஸ்.
இதை முன்னெடுத்துச் செல்லும் விதமாக, அனைத்து சாதியினர் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தினார். அந்த கூட்டமைப்பில் தலித்துகளுக்கு இடமில்லை என்றார். ஏன் தலித்துகளுக்கு இடமில்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியதற்கு, இதை விளக்கிச் சொல்ல வேண்டுமா என்று வெளிப்படையாகவே பேசினார். தொடக்கத்தில், இந்தக் கூட்டமைப்பில் பங்கு கொண்டு சிக்கிக் கொண்ட இஸ்லாமிய அமைப்புகள், அவசர அவசரமாக கழற்றிக் கொண்டன. காதல் டாக்டர்
தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் நடத்தி தலித்துகளுக்கு எதிராக பேசினார் ராமதாஸ். தமிழகமெங்கும் ராமதாஸ் நடத்திய கூட்டணியில், சாதிக்கட்சித் தலைவர்கள் பங்கு கொண்டார்கள். தேவர், கவுண்டர், பிள்ளைமார், வேளாளர்கள், முதலியார்கள், நாயக்கர்கள், செட்டியார்கள், என்று பெரும்பாலான சாதித் தலைவர்கள் பங்கு பெற்றார்கள். ஆனால், இந்த ஆதிக்க சாதிகளுக்குள் இருந்த உள் முரண்கள், தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் இருந்த முரண் காரணமாக பெரிதாகாது என்று ராமதாஸ் தப்பு கணக்குப் போட்டார். தேவர் சாதியின் சார்பாக ராமதாஸின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பி.டி.அரசகுமார், ராமதாஸ் முன்னிலையிலேயே தேவர் சாதி வன்னியர் சாதியை விட உயர்ந்தது என்று பேசினார். மேலும், வன்னியர்களைப் போல, தேவர் சாதியினருக்கு பறையர்கள் எதிரிகளல்ல. தேவர் சாதியினரோடு காலம் காலமாக மோதி வருவது பள்ளர்களே. தென் மாவட்டங்களில், முக்குலத்தோர், பள்ளர்கள் இடையே காதல் திருமணங்கள் கூட அரிதாகவே இருக்கிறது. இதனால், ராமதாஸின் காதல் நாடகம் குறித்த பேச்சுக்கள் மற்ற சாதியினரிடையே பெரிய அளவில் எடுபடவில்லை. மேலும், அவர்களுக்கு இடையேயான உள் முரண்கள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. தமிழகமெங்கும் ராமதாஸ் நடத்திய கலந்துரையாடல் கூட்டங்களுக்கும் பெரிய அளவில் ஆதரவு இல்லை.
தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், இதன் அடிப்படையில் சாதித் தலைவர்களை ஒருங்கிணைக்கலாம் என்றும் ராமதாஸ் எடுத்த முயற்சிகள் தோல்வியையே தழுவின. ஆனால் ராமதாஸ் புலிவாலைப் பிடித்தது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அனைத்து சமுதாயத் தலைவர்கள் என்ற .கூட்டணியைத் தொடங்கினால் ஒவ்வொரு தலைவரும் திருவாத்தான்களாக இருக்கிறார்களே என்று ராமதாஸே வியந்துபோனார். அவர்களை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு மலைப்பு ஏற்பட்டது என்னவோ உண்மை. ஏனென்றால் ஒவ்வொரு சாதிக்கும் குறைந்தது 5 முதல் ஆறு சங்கங்கள் இருந்தன. அத்தனை சங்கங்கள் இருந்ததன் காரணமே அந்தச் சங்கத் தலைவர்களின் சுயநலம்தான். நான்தான் தலைவராக வேண்டும் என்று தனித்தனித்தனியாக சங்கம் தொடங்கும் நபர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படிப்பட்ட தலைவர்களை அழைத்து அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஏற்படுத்தினால் அது விளங்குமா ? தான் ஒரு பெரிய தவறைச் செய்து விட்டோம் என்பதை ராமதாஸ் தாமதமாகத்தான் உணர்ந்தார். தன்னோடு அனைத்து சமுதாயக் கூட்டமைப்பில் வந்து இணைந்த சாதிச் சங்கத் தலைவர்கள், அந்தந்த சாதிகளின் பிரதிநிதிகள் அல்ல என்பதையும் ராமதாஸ் தாமதமாகவே உணர்ந்தார்.
ஆனால் இதற்குள் விஷயம் கைமீறிப் போய் விட்டது. காதல் திருமணங்களுக்கு எதிரான ராமதாஸின் நிலைபாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இடது சாரிகள் உள்ளிட்ட நடுநிலையாளர்கள் வெளிப்படையாகவே பாட்டாளி மக்கள் கட்சியையும், ராமதாஸையும் கண்டித்தனர். இளைஞர்கள் மத்தியில் ராமதாஸின் காதல் எதிர்ப்பு நிலைபாடு நகைப்புக்குள்ளானது. பெரும்பாலான வன்னியர்களே ராமதாஸுக்கு கிறுக்கு பிடித்து விட்டதா என்று வருத்தப்பட்டனர். ஆனால் புலிவாலைப் பிடித்த ராமதாஸ் அதை எப்படி விடுவது என்று தெரியாமல் தொடர்ந்து அந்தப் பாதையிலேயே பயணிக்கத் தொடங்கினார்.
அது அழிவுப்பாதை என்பதை ஒரு பழுத்த அரசியல்வாதியான ராமதாஸ் உணரத்தவறினார். அந்த அழிவுப்பாதை மரக்காணத்தில் ஒரு மோசமான கலவரம் உருவாகக் காரணமாக இருந்து, இன்று சிறை செல்லும் அளவுக்கு அவரை இட்டுச் சென்றிருக்கிறது. சித்திரை விழா அன்று, காவல்துறையினர் மிகச் சிறப்பாக பணியாற்றியதால், பெரும் கலவரம் தடுக்கப்பட்டள்ளது. தலித் மக்கள் பெரும்பாலாக குடியிருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் கலவரம் பரவும் அபாயம் இருந்தும், காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கை, குறிப்பாக வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணப்பனின் திறமையான காவல் நிர்வாகத்தால் தடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சற்றே அலட்சியமாக இருந்திருந்தால், பெரும் கலவரம் மூண்டு, உயிரிழப்புகள் நேரிட்டிருக்கும். அந்த உயிரிழப்புகள் ராமதாஸ் மீது தீராத பழியை ஏற்படுத்தியிருக்கும். அந்த வகையில் ராமதாஸ் காவல்துறையினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
அனைத்து சமுதாயத் தலைவர்களின் கூட்டமைப்பு எதிர்ப்பார்த்த வெற்றியைத் தராததால், வருடா வருடம் பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு விழாவை சிறப்பாக கொண்டாடி மற்ற கட்சிகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும், பாராளுமன்றத் தேர்தலில் தன்னோடு கூட்டணி வைப்பதற்காக திராவிடக் கட்சிகள் கெஞ்ச வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் ராமதாஸ்.
வடநெமிலி நில விவகாரம் தொடர்பாக ப்ரதீப் யாதவ் ஐஏஎஸ் மற்றும் ஜாங்கிட் ஐபிஎஸ் மீது நில அபகரிப்புப் புகார் எழுந்து, அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த நில அபகரிப்பில் நிலத்தை பறிகொடுத்த கிராம மக்கள் அனைவரும் மிகுந்த ஏழை வன்னியர்கள். மத்திய உள்துறையில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் ப்ரதீப் யாதவ். இந்த ப்ரதீப் யாதவ் மூலமாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தொடர்பு கொள்ளப்பட்டு, சித்திரை முழு நிலவு விழாவுக்கு அகிலேஷை சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ள வைப்பதென்று ஏற்பாடானது. இதற்கு கைமாறாக ப்ரதீப் யாதவ் மீதான வழக்கை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெற வேண்டும் என்பதே திரைமறைவு ஒப்பந்தம். முதலில் வருகிறேன் என்று ஒப்புக் கொண்டார் அகிலேஷ் யாதவ். அதன் அடிப்படையில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இறுதி நேரத்தில், விழாவுக்கு வர இயலாது. ஆனால் அதற்கு முன்பாக வருகிறேன் என்று தெரிவித்தார். ஆனால் அகிலேஷ் தமிழகம் வந்ததன் உண்மையான நோக்கம், ஜெயலலிதாவை சந்தித்து, நாளைய மூன்றாவது அணிக்கு ஒரு அடித்தளம் அமைப்பதே. ஆனால் சென்னை வந்த அகிலேஷ் பாட்டாளி மக்கள் கட்சியோடு இணைந்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு திரும்பச் சென்று விட்டார்.
உத்தரப்பிரதேசம் போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் தமிழகத்தில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டால் அதற்கு கிடைக்கும் ஊடக கவனம் (Media attention) சிறப்பானதாக இருக்கும். ஆனால், இன்று பலவீனமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தனியாக நடத்தும் மாநாட்டுக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு ஊடக கவனம் இருக்காது என்பதை ராமதாஸ் நன்றாக உணர்ந்தே இருந்தார். பிறகு ஊடக கவனத்தை சித்திரைப் பெருவிழா மீது எப்படித் திருப்புவது ?
அதற்காக ராமதாஸ் கையாண்ட மலிவான உத்தியே சாதி வெறி மற்றும் வன்முறை. ராமதாஸின் அரசியல் பலம் குறையக் குறைய அவர் மிக மிக பதற்றமானார் என்பதை அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பில் காண முடிந்தது. ராமதாஸின் வழக்கம் மற்றும் பாணி என்னவென்றால், அவர் ஒரு பக்குவமடைந்த அரசியல்வாதி போல பேசுவார். காடுவெட்டி குரு, சகட்டுமேனிக்கு கழிசடை அரசியல்வாதி போல பேசுவார். ராமதாஸ் அதைக் கண்டும் காணாமல் இருப்பார். ஆனால் தருமபுரி கலவரத்துக்குப் பின் ராமதாஸ் வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசத் தொடங்கினார். ஒரு மனிதனின் மறுபக்கம் அவன் பலவீனத்தில் வெளிப்படும். அப்படிப்பட்ட ராமதாஸின் மறுபக்கம், அவர் பலமிழந்து, வலுவிழந்து இருக்கும் சூழலில் பகிரங்கமாக வெளிப்பட்டது.
சித்திரைப் பெருவிழாவில் ராமதாஸ் எப்படிப் பேசினார் என்பதை ஜுனியர் விகடன் வெளியிட்டுள்ளது.
“இந்த முறை போலீஸை குறிவைத்தார் ராமதாஸ். ”ஒரு சமுதாயத்தினரால் மற்ற சமுதாயத்தினருக்குப் பாதுகாப்பு இல்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இதையெல்லாம் நாங்கள் பேசினால், சாதியைப் பற்றி பேசாதீர்கள் என்று சொல்கின்றனர். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல. அவர்களோடு இணைந்து நெருக்கமாக வாழவே விரும்புகிறோம். அவர்களைப் பார்த்து மற்ற சமுதாயங்கள் அஞ்சக்கூடிய அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம், காவல் துறைதான். நீங்கள் சரியான நடவடிக்கை எடுக்கிறீர்களா? அல்லது, தவறு செய்கிறவர்களை எங்களையே தண்டிக்கச் சொல்கிறீர்களா?” என்று பேசிக்கொண்டே போன ராமதாஸ், அச்சில் ஏற்றமுடியாத சில வார்த்தைகளை உச்சரித்துவிட்டு, ”உங்களுக்குத் திராணி இல்லையா? தெம்பு இல்லையா? நீங்கள் ஏன் அவர்களைப் பார்த்து பயப்படுறீங்க? எங்க சாதிப் பெண்களை எல்லாம் அவன் கூட்டிக்கிட்டுப் போவான். நாங்க பேசாம இருக்கணுமா? நீயும் (போலீஸ்!) நடவடிக்கை எடுக்க மாட்டே… நீயும் அவங்களை உள்ளே தள்ள மாட்டே… அது சம்பந்தமாக கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை குண்டாஸ்ல போட மாட்டே… அப்புறம் என்ன நாடு இது? குரு சொல்வதைப்போல் நான் கண் சிமிட்டினால் போதும்… ஒரு இடத்தில்கூட அவர்கள் உள்ளே நுழைய முடியாது. இதுவரை நான் இப்படிப் பேசினது இல்லை. ஆனால், இந்த போலீஸ் நடந்துகொள்வதைப் பார்க்கும்போது இப்படித் தோணுது. போலீஸில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதவர்கள் அனைவரும் எங்கள் கட்சி… ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
எனக்கு ஏன் பாதுகாப்பு அதிகம் கொடுக்கிறீர்கள்? யாரால் அச்சுறுத்தல்? காடுவெட்டி குருவுக்குப் பாதுகாப்பு கொடுக்க மறுக்கிறீர்கள். அன்புமணி நல்லவர் என்று சொல்லி அவருக்கும் பாதுகாப்பு இல்லை. உங்க மந்திரிக்கு எல்லாம் பாதுகாப்பு. அவர்கள் எல்லாம் கெட்டவர்களா?” என்றபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. “
தருமபுரி மற்றும் வட தமிழகத்தின் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு விஷயம், வன்னியர்கள் மிக மிக பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது. கவுண்டர், முதலியார், செட்டியார், பிள்ளைமார் போன்ற சாதி இந்துக்களைப் போல வன்னியர் சமூகம் முன்னேறிய சமூகம் கிடையாது. மிக மிக சாதாரணமான சமூகமே வன்னியர் சமூகம். அதனால்தான் அந்த சமூகத்துக்கும், தலித் சமூகத்துக்கும் பெரிய அளவில் மோதல்கள் இல்லாமல் இருந்தது. அந்த பிற்பட்ட சமூகத்துக்கு ஒரு பெரிய பலத்தை உருவாக்கித் தந்தவர் மருத்துவர் ராமதாஸ். எண்பதுகளில் இட ஒதுக்கீடு வேண்டி ராமதாஸ் நடத்திய மிகப்பெரிய போராட்டமே பாட்டாளி மக்கள் கட்சியை பெரும் பலம் உள்ள அரசியல் சக்தியாக உருவாக வைத்தது. பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணிக்காக, கருணாநிதியும், ஜெயலலிதாவும், தைலாபுரத் தோட்டத்தின் கதவுகள் திறக்காதா என்று காத்திருந்தனர். அந்த அளவுக் வன்னியர்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தந்தார் ராமதாஸ்.
ராமதாஸ் தொடங்கிய பொங்கு தமிழ் அறக்கட்டளை, அலை ஓசை செய்தித்தாள், மக்கள் தொலைக்காட்சி போன்றவைகள் அற்புதமான மாற்று முயற்சிகள். தமிழ் மொழிக்கு அருமையான பங்களிப்பை செய்தவை. ராமதாஸின் தமிழார்வத்தையும், தமிழ் மொழியின் மீதான நேசத்தையும் ஒப்பிட்டால் கருணாநிதியை விட ஒரு படி மேல் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மாற்று நிதி நிலை அறிக்கை வெளியிடும் ராமதாஸின் முயற்சிகள் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கடைபிடிக்க வேண்டியவை.
அப்படிப்பட்ட ராமதாஸ் பி.டி.அரசக்குமார், மணிகண்டன் போன்ற அல்லு சில்லுகளோடா கைகோர்ப்பது ? பி.டி.அரசக்குமார் போன்ற நபர்களெல்லாம் ராமதாஸோடு சேர்ந்து அரசியல் செய்யும் அளவுக்கு ஆளுமை படைத்தவர்களா ? என்ன செய்கிறோம் என்று தெரியாமல், மிக மிக மோசமான புதைகுழியில் விழுந்தார் ராமதாஸ்.
தான் பேசும் பேச்சுக்களும், தான் எடுக்கும் நடவடிக்கைகளும், வன்னியர் மற்றும் தலித்துகளுக்கிடையே மிக மிக மோசமான பகையை உருவாக்கும் என்பது ராமதாஸுக்கு தெரியாதது அல்ல. அப்படி ஒரு பகை உருவாக வேண்டும் என்பதைத் தெரிந்தே செய்தார் ராமதாஸ். சம்பந்தமே இல்லாமல், ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும், திருமாவளவனை வம்புக்கு இழுத்தார். திருமாவளவன்தான் எல்லா கலவரத்துக்கும் காரணம் என்றார். ஆனால், ஆச்சர்யப்படும் வகையில், ராமதாஸோடு பல வயது குறைந்தவரான திருமாவளவன், மிக மிக பக்குவமாக செயல்பட்டார். “ராமதாஸுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தில் உள்ள இடதுசாரிகளும், பெரியாரிஸ்டுகளும், பகுத்தறிவாளர்களும் ராமதாஸுக்கு பதில் சொல்ல வேண்டும். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்களை, அனைத்து ஆதிக்க சாதியினரும் ஒன்று கூடி எதிர்த்தால் சமூகம் என்ன ஆகும் ? ஒரு ஊரில் உள்ள அத்தனை சாதியினரும் சேர்ந்து தலித்துகளை தாக்கத் தொடங்கினால் தலித்துகள் எங்கே போவார்கள் ? “ என்று ஒரு மூத்த அரசியல்வாதி போல ரியாக்ட் செய்தார். மேலும் அவர், “ராமதாஸ் எங்களுக்கு எதிரி அல்ல. ராமாஸை வைத்து பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளைத் திறந்து வைத்தவன் நான். ராமதாஸுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. எதற்காக எங்களை இப்படி இழிவு படுத்திப் பேசுகிறார், எதற்காக எங்களை எதிரிகளாகப் பார்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை“ என்றார். திருமாவளவனின் இந்தப் பேச்சு, அவரை பக்குவப்பட்ட அரசியல்வாதியாக காண்பித்த அதே நேரம், ராமதாஸை பக்குவமிழந்த இரண்டாம் தர அரசியல்வாதியாகவும் அடையாளப்படுத்தியது.
ராமதாஸ் போன்றவர்கள், ஒரு சிறந்த அரசியல் தலைவராக உருவாகியிருக்க வேண்டியவர்கள். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று சக்தியாக உருவாகியிருக்க வேண்டியவர்கள். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இடது சாரிகள் மற்றும் தலித் அமைப்புகள் போன்றவைகள் கைகோர்த்திருந்தால், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு வலுவான மாற்றை தமிழகத்தில் உருவாகியிருக்க முடியும்.
ஆனால் அப்படி உருவாகியிருக்க வேண்டிய ராமதாஸ், இப்படிச் சீரழிந்து, வெளிப்படையாக சாதிக் கலவரத்தைத் தூண்டும் அளவுக்கு இறங்கிப் போனது மிக மிக வருத்தமளிக்கிறது. ராமதாஸ் மீது கோபம் வருவதற்கு மாறாக, அவரின் இந்த வீழ்ச்சி வேதனையையே அளிக்கிறது.
செவ்வாயன்று கைது செய்யப்பட்ட ராமதாஸ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழக சிறைகளிலேயே கொடுமையான சிறை, திருச்சி சிறை. ராதாஸ் அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, மருத்துவர் ராமதாஸ் அவர்களை சென்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு சவுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. மிக மிக மோசமான சமூக விரோத செயலை செய்திருக்கிறார் ராமதாஸ். வெளிப்படையாக சாதி வெறியையும், வன்முறையையும் தூண்டும் ராமதாஸ் அவர்களை மன்னிப்பதற்கில்லை. இனி அவர், அரசியலில் இருந்து ஓய்வுபெற்று தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும் என்று சவுக்கு கேட்டுக் கொள்கிறது.
அன்பார்ந்த ராமதாஸ் அவர்களே…. உங்களின் நடவடிக்கைகள் கோபத்தை ஏற்படுத்தவில்லை. உங்கள் மீது எங்களுக்கு வன்மம் இல்லை. ஆனால், இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டீர்களே என்று வருந்தவே செய்கிறோம். சிறை உங்களுக்கு மன அமைதியை தந்து நல்வழிப்படுத்தட்டும்.