ராஜகோபால் அண்ணன் கண்ணுல அம்மாவப் பாத்து என்ன பூரிப்பு பாருங்களேன்..
தமிழக டிஜிபி ராமானுஜத்தை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக பேச இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் உள்துறைச் செயலாளர் ராஜகோபாலன் ஆகியோர் பூங்கொத்து அளித்தனர்.
இவர்களை அடுத்து, தமிழக டிஜிபி ராமானுஜம் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து அளித்தார். உயர் அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து அளிக்கையில் 90 டிகிரி அளவுக்கு குனிந்து பூங்கொத்து அளிக்க வேண்டும் என்ற மரபை ராமானுஜம் மீறி விட்டார் என்ற அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுக அரசில் அனைத்து அதிகாரிகளும் அடிமைகள் போல செயல்பட்டு வரும் நிலையில், டிஜிபி ராமானுஜம் தன்னை ஒரு அதிகாரியாக நினைத்துக் கொண்டு, அதிகாரி போலவே செயல்பட்டு வருகிறார். இது தங்களுக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது என்று பல அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் குமுறுகின்றனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உயர் அதிகாரி கூறுகையில், பொது இடங்களில் பூங்கொத்து அளிக்கையில் 90 டிகிரி அளவுக்கு வளைந்து கொடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் முதல்வரைச் சந்திக்கையில், முதல்வர் கால் அருகே பூங்கொத்தை வைத்து விட்டு, அந்தப் பூங்கொத்திலிருந்து ஒரு பூவை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் என்பது அனைத்து அதிகாரிகளும், கடைபிடித்து வரும் விதி. இந்த விதியை மீறி, ராமானுஜம் ஒரு அதிகாரி போல செயல்பட்டு, மற்ற அதிகாரிகளுக்கெல்லாம் தீராத அவமானத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இதனால் முதல்வர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் மத்தியில் பலத்த கோரிக்கை எழுந்துள்ளது.