இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். மே தினமான இன்று, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு கருப்பு தினம் என்றார். எங்கள் தொண்டர்கள் இரண்டு பேர் இறந்ததற்கு நீதி வேண்டி போராட்டம் நடத்திய மருத்துவர் ராமதாஸை தமிழக அரசு கைது செய்துள்ளது.
அடங்க மறு, திருப்பி அடி, என்று முழக்கமிடும் கட்சியினர் வீதிகளில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கையில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய மருத்துவர் அய்யாவை கைது செய்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் முதலமைச்சர் படித்த அறிக்கையில் 90 சதவிகிதம் பொய். அது காவல்துறை தயாரித்துக் கொடுத்த அறிக்கை. பாட்டாளி மக்கள் கட்சியை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு அறிக்கை சட்டப்பேரவையில் படிக்கப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றே பாட்டாளி மக்கள் கட்சி குறிவைத்துத் தாக்கப்படுகிறது.
மரக்காணத்தில் நடந்த வன்முறைக்கு முழுக்க முழுக்க காரணம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரே. மரக்காணம் கலவரத்தில் இறந்துபோன செல்வராஜ் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கை 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
சித்திரைப் பெருவிழா மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஒரு விழா. அந்த விழாவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமலும், பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமலுமே, இதர கட்சிகள் பாமகவை விமர்சிக்கின்றன, குறை கூறுகின்றன.
இன்று பாட்டாளி மக்கள் கட்சியை குறை கூறும் எந்தக் கட்சியும், இடது சாரிகள் உள்ளிட்ட எந்த கட்சியும் விசாரணை வேண்டும் என்று கேட்கவில்லை. ஏன் விசாரணை கேட்கவில்லை என்றால், இறந்து போனது இரண்டு வன்னியர்கள் என்பதாலேயே. காடுவெட்டி குருவை ஒரு பழைய வழக்கில் கைது செய்துள்ளார்கள். அவர் காணாமல் போன குற்றவாளி என்று கூறியிருக்கிறார்கள். இதிலிருந்தே இது உள்நோக்கமாக போடப்பட்ட வழக்கு என்பது தெரிகிறது.
மரக்காணம் பகுதியிலே ஜெயபாலன் என்பவர் கோழிப்பண்ணை வைத்திருக்கிறார். அவர் கோழிப்பண்ணை எரிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதைப்பற்றி எந்த ஊடகமும் எழுதவில்லை. ஆனால் தலித்களின் குடிசை வீடுகள் எரிக்கப்பட்டது பற்றி எல்லா ஊடகங்களும் எழுதுகின்றன. இப்போதெல்லாம் தலித்துகள் தாங்களாகவே வீடுகளை எரித்து விட்டு நஷ்ட ஈடு கேட்கின்றனர். இது ஃபேஷனாகிப் போய் விட்டது.
காடுவெட்டி குரு பேசியது தவறுதான். அதற்காக அவர் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திப்போம். காவல்துறையினரின் விதியை மீறி, இரவு தாமதமாக பேசுவது பெரிய குற்றமல்ல.. ஐபிஎல் மேட்சுகள் இரவு நேரம் கடந்து நடப்பதில்லையா ? இது ஒன்றும் பெரிய குற்றமல்ல. இதற்காக வழக்கு போட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம்.
மகாபலிபுரம் கோயில் சேதப்படுத்தப்பட்டதாக இந்திய தொல்லியல் துறை அளித்த அறிக்கை முழுக்க முழுக்க பொய்யானது. கோயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
தருமபுரி கலவரம் பற்றி விசாரிக்க உண்மை அறியும் குழுவை கலைஞர் அனுப்பினாரே… மரக்காணம் பற்றி விசாரிக்க ஏன் அனுப்பவில்லை ? தருமபுரி சம்பவம் குறித்து டெல்லியிலிருந்து, ஜப்பானிலிருந்து என்று பல்வேறு பேர் சென்று விசாரித்தார்கள். ஏன் மரக்காணம் குறித்து விசாரிக்க யாருமே செல்லவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியினர் போலி நம்பர் ப்ளேட்டுகளைப் பயன்படுத்தினார்கள் என்று முதல்வர் சட்டப்பேரவையில் பேசியதற்கு ஆதாரங்களை வெளியிடட்டும்.
வீரப்பன் படத்தை வைத்து பேனர்கள் வைப்பது ஒன்றும் தவறில்லை. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்து பேனர்கள் வைப்பதில்லையோ அது போலத்தான் இதுவும்.
வன்னியர்கள் தொடர்ந்து திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். இதை நாங்கள் அறவழியில் போராடி சந்திப்போம். நடந்த கலவரத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோருகிறோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் இவ்வாறு பேசினார் அன்புமணி ராமதாஸ்.