“எல்லோருக்கும் வணக்கம்“ என்றபடியே உள்ளே மொட்டை மாடிக்குள் நுழைந்தான் தமிழ்.
“வணக்கம் தமிழ் உக்காருப்பா. நம்ப ஐட்டம் கொண்டு வந்தியா“ என்றார் கணேசன்.
“இந்தாங்கண்ணே“ என்று ரமோனாவ் வோட்கா பாட்டிலை எடுத்து அளித்தான்.
“சரக்கெல்லாம் இருக்கட்டும்.. மொதல்ல நியூஸை சொல்லுய்யா.. நாளைக்கு இஷ்யூ டேட்“ என்று கோபப்பட்டான் வடிவேலு.
“இரு மாமா… இப்போத்தானே வந்துருக்கேன்.. “ என்று கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டான் தமிழ்.
“டேய்… கடுப்பக் கௌப்பாதடா“ என்றான் பீமராஜன்….
“கூல் கைஸ்… லெஸ் டென்ஷன் மோர் நியூஸ்…“ என்று விட்டு தொடங்கினான். தமிழ்.
“மொதல்ல திமுக நியூஸ்தான். கழக உடன்பிறப்பு ஒருத்தர் வந்து கலைஞரோட திறமையை அப்படியே சிலாகிச்சு பேசுனாரு. “
“அவர் பன்திறன் வித்தகர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.. எந்தத் திறமையை சிலாகிச்சு பேசுனாரு“ என்றான் ரத்னவேல்.
“அவர் குடும்பத்தை காப்பாத்தற திறமையைப் பத்தித்தான். கனிமொழியை எப்படி கவனமா காப்பாத்துனாரு பாத்தியான்னு பெருமை பட்டார். எப்படி காப்பாத்துனாருன்னு கேட்டேன். விலாவரியா சொன்னார். சினியுக் பிலிம்ஸ் நிறுவனம்தான் ஷாஹீத் பல்வாவோட பினாமி கம்பெனி. அந்தக் கம்பெனிக்கிட்ட இருந்துதான் 200 கோடியை கலைஞர் டிவிக்காக லஞ்சமா கனிமொழி பெற்றார்னு சிபிஐ வழக்கு. போன வாரம் இந்த வழக்குல சாட்சி சொன்ன கலைஞர் டிவியோட பொது மேலாளர் ராஜேந்திரன் கனிமொழி 20.06.2007 அன்னைக்கே ராஜினாமா பண்ணிட்டார். ஆனா 200 கோடி சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கிட்ட வாங்கணும்னு எடுத்த முடிவு 13.02.2009 அன்னைக்கு நடந்த கலைஞர் டிவி போர்டு மீட்டிங்ல எடுக்கப்பட்டது. அந்த மீட்டிங்ல கலந்துகிட்டது தயாளு அம்மாளும், சரத் குமாரும்தான். கனிமொழி ராஜினாமா பண்ணதுக்குப் பிறகு கலைஞர் டிவி ப்ரோக்ராம்ஸ் கூட பாக்கறது கெடையாதுன்ற ரேஞ்சுக்கு சாட்சி சொல்லியிருக்கார். 13.02.2009 அன்னைக்கு நடந்த போர்டு மீட்டிங் மினிட்ஸ்ல தயாளு அம்மாதான் கையெழுத்து போட்ருக்காங்கன்னும் சொல்லிருக்காரு“
“இதுல என்னய்யா சாமர்த்தியம் இருக்கு ? பொண்ணுக்கு பதிலா பொண்டாட்டி மாட்டப்போவுது“ என்றார் கணேசன்.
“கொஞ்சம் பொருண்ணே…. கனிமொழி இந்த வழக்குல குற்றவாளி. ஆனா தயாளு அம்மா சாட்சி. கனிமொழி மேல ஆதாரங்கள் இல்லாத காரணத்தால அவர் மீதான வழக்குலேர்ந்து விடுதலை வாங்கிடுவாங்க. அதே நேரத்துல தயாளு அம்மா இந்த வழக்குல சாட்சி கூட சொல்லப்போறது இல்ல. அவங்களுக்கு ஞாபக மறதியை உருவாக்குர அல்ஸைமெர்ஸ் வியாதி இருக்குன்னு டெல்லியில மனு தாக்கல் பண்ணிடுவாங்க. இதுக்கு சிபிஐயும் சப்போர்ட் பண்ணும். மொத்த குடும்பத்தையும் காப்பாத்தியாச்சா.. இது சாமர்த்தியம் இல்லையா ? “
“ஏம்பா… அப்போ ராஜா கதி ? “ என்றான் வடிவேலு.
“என்ன மாமா நீ…. கருணாநிதி குடும்பத்தை விட்டுக் குடுத்ததா வரலாறே கிடையாதே… குடும்பம்னு வர்றப்போ… ராசாவவது.. ராணியாவது… கனிமொழி ஜாமீன் மனு விசாரணையப்போ ஜெத்மலானி என்ன ஆர்க்யூ பண்ணார்னு மறந்துட்டியா ? எல்லாத்தையும் பண்ணது ராஜாதான்னு ஆர்க்யூ பண்ணாரே ஞாபகம் இல்லையா… ? “ என்று விட்டு அடுத்த செய்திக்குத் தாவினான்.
“ஜெயா டிவியில மன்னார்குடி மாபியாவின் பிரதிநிதியா இருந்தவங்க பேரு அனுராதா. டிசம்பர் 2011ல மன்னார்குடி மாபியா வெளியேற்றப்பட்ட பிறகு, அனுராதாவும் வெளில போயிட்டாங்க. அதுக்குப் பிறகு மன்னார்குடியோட கட்டுப்பாடு ஜெயா டிவியில சுத்தமா இல்லை. அனுராதா வெளில போன பிறகுதான் செக்ல கையெழுத்து போட்ற பொறுப்பு ஜெயலலிதாவோட செயலாளரா இருக்கற பூங்குன்றன்கிட்ட வந்தது. போன வாரம், திடீர்னு பூங்குன்றனுக்கு இருந்த அதிகாரத்தை பறிச்சுட்டு அந்த அதிகாரம் சசிகலாவுக்கு குடுத்துருக்காங்க.“
“இப்போ ஏம்பா இந்த மாற்றம் ? “
“அண்ணே… சசிகலாவோட கை மீண்டும் ஓங்குதுன்றதத்தான் இது காட்டுது. மீண்டும் சின்னம்மாவின் ஆட்சி…“
“ஜெயா டிவி ஊழியர்கள் மத்தியில எப்பவுமே ஒரு நிலையில்லாத பதற்றம் இருக்கும். அதிமுகல யார் பதவியில இருக்காங்க… யார் அதிகாரத்தோட இருக்காங்கன்றது யாருக்குமே தெரியாது.. அதே மாதிரிதான் ஜெயா டிவியிலயும். அதுவா ஒரு போக்குல போயிக்கிட்டு இருக்கும். கே.பி.சுனிலோட அதிகாரத்தையெல்லாம் பறிச்ச பிறகு, ரபி பெர்னார்டை தலைமை அதிகாரியா போட்டாங்க… ரபி பெர்நார்ட் வந்த பிறகு எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருக்கு.. ரபி பெர்நார்ட், நேமாலஜி… கோமாலஜி, ரியல் எஸ்டேட் இந்த ப்ரோக்ராமையெல்லாம் ஜெயா ப்ளஸ்லேர்ந்து நிறுத்தனும்னு முடிவு எடுத்துருக்காராம்..
இப்போ ஜெயா டிவி ஊழியர்கள் மத்தியில பரபரப்பு பேச்சு என்னன்னா… 300 பேரை ஆட்குறைப்பு பண்ணணும்னு ஜெயலலிதா முடிவெடுத்துருக்கறதா பேசிக்கிட்டு இருக்காங்க..
ஜெயலலிதா நிச்சயமா இப்படி சொல்லியிருக்க மாட்டாங்க.. ஜெயா டிவியில வந்த லாபம்னு கொடுத்த பணத்தை அப்படியே சேனல்ல முதலீடு பண்ணுங்கன்னு சொன்னவங்க.. எப்படி ஆட்குறைப்பு நடவடிக்கையில எறங்குவாங்க… யாரோ இந்த மாதிரி செய்தியை ஜெயா டிவி முழுக்க பரப்பியிருக்கறதா சொல்றாங்க…“
“காங்கிரஸ் நியூஸ் இல்லையா மாப்ளை ? “ என்றான் ரத்னவேல்..
“ஏன் இல்லாம… காங்கிரஸ் கதைதான் ஊர் பூரா நாறுதே.. பவன் குமார் பன்ஸால் அமைச்சரோட தலையை காவு வாங்காமல் விடமாட்டேன்னு பிஜேபி ஒத்தக் கால்ல நிக்குது… ஆனா காங்கிரஸ் எரும மாட்டு மேல மழ பெஞ்சமாதிரியே இருக்குது… எந்த அமைச்சரும் ராஜினாமா செய்ய மாட்டாங்கன்னு உறுதியா சொல்லிட்டாங்க“
“எப்படி மாமா ராஜினாமா செய்வாங்க.. முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு ? “ என்றான் பீமராஜன்.
“நீ சொன்ன மாதிரி எருமை மாடு மாதிரியே ஆயிட்டாங்க மாமா…. வாசனோட வலது கரம் யுவராஜாவை காலி பண்ண மாதிரி, சிதம்பரத்தோட வலது கரத்தையும் காலி பண்ண வேலை நடக்குது மாமா“ என்று நிறுத்தினான் தமிழ்.
“அவருக்கு யாருப்பா ரைட் ஹேன்ட் ? “ என்று கேட்டுக் கொண்டே அடுத்த ரவுன்ட் வோட்காவை எடுத்து வாயில் கொஞ்சம் ஊற்றிக் கொண்டு, ஊறுகாயை ஒரு விரலில் எடுத்து சுவைத்தார் கணேசன்.
“செல்வப்பெருந்தகை அண்ணே… யுவராஜாவை மட்டும் சஸ்பெண்ட் பண்ணீங்கள்ல…. செல்வப்பெருந்தகை யோக்கியதையைப் பாருங்கன்னு, செல்வப் பெருந்தகையோட பழைய வரலாறை எடுத்து ராகுல்கிட்ட புகாரா அனுப்பியிருக்காங்களாம். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்குல செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருக்குன்னு விரிவா ஒரு அறிக்கையை அனுப்பியிருக்காங்க… ராகுல் காந்தியும் ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை வைச்சு, இதை விசாரிக்கிறாராம்…“
“காங்கிரஸ் கட்சியில இதெல்லாம் நடக்காம இருந்தாத்தானே ஆச்சர்யம்“ என்றான் வடிவேலு.
“ஆமாம்டா.. அது காங்கிரஸ் கட்சியில் கலாச்சாரம் அல்லவா ? “ என்று விட்டு தொடர்ந்தான் தமிழ்.
“டாக்டர் ராமதாஸை போட்டு ஜெயலலிதா பொரட்டி எடுக்கறதுக்கு ரெண்டு காரணம் சொல்றாங்க. சித்திரை முழு நிலவு விழா நடந்த அன்னைக்கு ஜெயலலிதாவோட கார் சிறுதாவூர் போயிருக்கு. அப்படிப் போகும்போது, குடி போதையில இருந்த பாமக தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவைப் பாத்து ஆபாச சைகை காமிச்சுருக்காங்க… இது ஒரு காரணம். ரெண்டாவது காரணம், அந்த அம்மாவோட கான்வாய்ல கடைசி வாகனம் ஒரு 20 வினாடி தாமதமா வந்துருக்கு. அந்த வாகனத்தை வழி மறிச்ச பாமக தொண்டர்கள், கொடி கம்பத்தை எடுத்து அந்த வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியிருக்காங்க. ஏற்கனவே கான்வாயை விட்டுட்டதால அந்த வாகனத்துல இருந்த போலீஸ் காரங்க கௌம்பிப் போயி உளவுத்துறைக்கு தகவல் சொல்லியிருக்காங்க.. இது சி.எம். கவனத்துக்கு போனதும்தான் வேகமான நடவடிக்கைகள்னு சொல்றாங்க..“
“அந்த ஆளுக்கு வேணும்டா இதெல்லாம். “ என்றான் ரத்னவேல்.
“ராமதாஸோட சிக்கல் என்னன்னா…. எந்த அரசியல் கட்சியும் அந்த ஆளு கௌப்பி விடுற ஜாதிப் பிரச்சனையை விரும்பல… எந்த அரசியல் கட்சியும் இதை விரும்பாததாலத்தான் அவர் எடுத்த முடிவுக்கு பெரிய அளவுல ஆதரவு இல்ல… இப்போ ராமதாஸ் எடத்தை புடிக்கறதுக்கு பி.டி அரசக்குமார்னு ஒருத்தர் கௌம்பியிருக்காரு.. “
“அது யாருடா அது புது டிக்கெட்டு ? “
“இந்த ஆளோட பழைய பேரு பி.டி.குமார். அரசக்குமார்னு பேரு மாத்துனா சி.எம் ஆயிடுவன்னு யாரோ ஒரு ஜோசியக்காரன் சொன்னான்னு மாத்திக்கிட்டாரு. அந்த ஆளு ஒன்னாம் நம்பர் ஃப்ராடு. அந்த ஆளுக்கு வேலையே கவர்மென்ட் வேலை வாங்கித் தர்றேன்.. லோன் வாங்கித் தர்றேன்னு ஏமாத்தறதுதான். 2001ம் வருஷம் ஜனவரி மாசம்.. தேனாம்பேட்டையில இருக்கற ரேமண்ட்ஸ் துணிக்கடைக்கு போறாரு பி.டி.குமார். அந்த வருஷம் நடந்த தேர்தல்ல கருணாநிதி வெறும் ஜாதிக் கட்சியோட மட்டும் கூட்டணி வைச்சாரு. அப்போ பி.டி.குமார் தீவுத்திடல்ல ஒரு ஊர்வலம் நடத்திட்டு, நானும் பெரிய தலைவர்னு காமிச்சுக்கிட்டாரு.. ரேமன்ட்ஸ் கடையில 60 ஆயிரத்துக்கு துணி எடுத்தாரு. எடுத்துட்டு 10 ஆயிரம் கொடுத்துட்டு, கொஞ்சம் துணியை கையில எடுத்துட்டு, மீதித் துணியை அதே கடையில இருக்கற டைலரிங் செக்சன்ல குடுத்து அளவு குடுத்துட்டு போயிட்டாரு.
ஒரு வாரம் கழிச்சு துணி ரெடியாயிடுச்சுன்னு போன் பண்ணிச் சொன்னா, ஆபீஸ்ல வந்து வச்சுடுங்கன்னு சொன்னாரு. ஆபீஸ்க்கு போனா, அண்ணன் வெளியில போயிருக்காரு… வச்சுட்டுப் போகச் சொல்றாருன்னு சொன்னாங்க. அதோட எப்போ போன் பண்ணாலும், அண்ணன் வெளியில போயிருக்காருன்னு ஏமாத்தறதே வேலையாப் போச்சு.
அந்த கடையோட ஒனர் ஒரு மார்வாடி. நேரா ஒரு நாள் சொல்லாம கொள்ளாம பி.டி.குமார் ஆபீஸ்கே போயிட்டாரு… போனதும் குமார்கிட்ட பணத்தை கேட்டாரு-
உடனே குமாரு, டேபிள்ல ரெண்டு மூணு பத்திரிக்கையை எடுத்து போட்டாரு… பாத்தீங்களா… நான் பத்திரிக்கை நடத்தறேன்… உங்க கடையில வரி சரியா கட்டறதில்லன்னு தகவல் வந்துருக்கு… நான் அதப்பத்தி எழுதப்போறேன்னு சொன்னார்.. உடனே மார்வாடிக்கு பயம் வந்துடுச்சு.. 50 ஆயிரம் போன போயிட்டுப் போகுதுன்னு அப்படியே கௌம்பிட்டார்.
இப்படிப்பட்ட ஃப்ராடுதான் இந்த பி.டி.குமார். இவரு இப்போ ராமதாஸ்க்கு ஆதரவா அனைத்து சமுதாயக் கூட்டமைப்புன்னு தொடங்கி ப்ரெஸ் மீட்டுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு… இந்தத் தகவல் அறிஞ்ச உளவுத்துறை, இவர் மேல இதுக்கு முன்னாடி இருக்கற மோசடிப் புகார்களையெல்லாம் தேடி எடுத்துக்கிட்டு இருக்காங்க…. வாலை ஆட்டுனார்னா ஒட்ட கட் பண்ணிட்றதுன்ற முடிவுல இருக்காங்க.. “
“காவல்துறை செய்தி என்னப்பா ? “ என்றார் கணேசன்… அப்போது மூன்றாவது ரவுன்டில் இருந்தார்.
“இந்த வாரமும் ஜாங்கிட் பத்திதாண்ணே…. தன் மேல அரசு போட்டுருக்கற லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை எப்படியாவது ஊத்தி மூடணும்னு ரொம்ப மெனக்கிட்றார்….“
“ஆமாப்பா தினமணில கூட மீசை முனுசாமி அண்ணாச்சி இது பத்தி செய்தி போட்ருந்தாரு… ஆமா அதுல மூன்றெழுத்து ஜா அதிகாரி, நான்கெழுத்து ஜா அதிகாரி, ஐந்தெழுத்து ஜா அதிகாரின்னு போட்ருந்துச்சே… யாருப்பா அது“
“மூன்றெழுத்து ஜா அதிகாரி ஜார்ஜ். நான்கெழுத்து ஜா அதிகாரி ஜாங்கிட். ஐந்தெழுத்து அதிகாரி ஜாபர் சேட். ஜாங்கிட்தான் போன வாரம் லஞ்ச ஒழிப்புத் துறையில இருக்கற உயர் அதிகாரியைப் போய் சந்திச்சுருக்காரு. தன் மீதான புகார்களெல்லாம் பொய்ப்புகார். அதனால விசாரணையில தனக்கு உதவி செய்யணும்னு சொல்லியிருக்கார்…. இவரு நேராப்போனது இல்லாம, நேர்மையான அதிகாரியா அறியப்பட்ற இன்னொரு அதிகாரியும், ஜாங்கிட்டுக்காக ரெக்கமண்ட் பண்ணிக்கிட்டு இருக்கார்.. “
“அது யாருப்பா அது ? “
“டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால்.. இவரு ரொம்ப நல்ல அதிகாரி… ஆனா ஜாங்கிட்டுக்காக பரிஞ்சு பேசறார். பாவம் ஹெல்ப் பண்ணுங்கன்னு லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர் வெங்கட்ராமன்கிட்ட பேசியிருக்காராம்.. “
“ஜாங்கிட் போட்ட மணப்பாக்கம் லே அவுட்ல வீட்டு மனை வாங்கியிருக்காரு… அது மட்டுமில்லாம ஜாங்கிட்டுக்கு பக்கத்து வீடு… அப்புறம் பேச மாட்டாரா ? “
“கண்டிப்பா பேசுவார். நம்ப ஏற்கனவே பேசிக்கிட்டு இருந்த மாதிரி 1979 பேட்ச் அதிகாரிகளுக்கு கூடுதல் எஸ்.பி பதவி உயர்வு கெடைக்கிற மாதிரி தெரியலை. பதவி உயர்வு வராததுக்கு டிஜிபி ராமானுஜம்தான் காரணமா யார் காரணம்னே புரியாம பொலம்பிக்கிட்டு இருக்காங்க. அவங்க நெலைமைதான் இப்படின்னா, 2009 பேட்ச் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளும் பதவி உயர்வு வராமல் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க.. “
“நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனைபா “ என்றார் கணேசன்.
“அண்ணே அவங்களோட அப்பாயின்ட் ஆனவங்கள்லாம் மத்த மாநிலத்துல ரெண்டு வருஷம் முன்னாடியே எஸ்.பி ஆயிட்டாங்க. ஆனா இவங்களுக்கு மட்டும் இன்னும் பதவி உயர்வு குடுக்கலை. என்ன காரணம், எங்க தாமதமாகுதுன்றது யாருக்குமே புரியலை…“
“கோர்ட் நியூஸ் இருக்கா மச்சான்… ? “ என்றான் பீமராஜன்.
“ஏகப்பட்ட நியூஸ் இருக்கு மச்சான்.. ஹைகோர்ட்ல பரபரப்பா பேசப்படுறது ஜட்ஜ் லிஸ்ட்தான். இந்த வருஷ கடைசிக்குள்ள 20 காலியிடம் ஏற்படுது. இப்போவே நெறய்ய காலியிடம் இருக்கு. அதுக்கு 15 பேரை பரிந்துரை பண்ணி சுப்ரீம் கோர்டுக்கு லிஸ்ட் போயிருக்குன்றதுதான் பரபரப்பான பேச்சு…. “
“யாரு மச்சான் அந்த 15 பேரு ? “
புஷ்பா, கோமதிநாயகம், வேலுமணி, தங்கசிவம், முனீர் ஷெரீப், ரவிக்குமார் பால், பரமசிவம், வி.பி.ராஜேந்திரன், வைத்தியநாதன், பி.என்.பிரகாஷ், ஜெயக்குமார், அருண்குமார், வி.எஸ்.ரவி, கலையரசன், கல்யாணசுந்தரம். இதுல வி.எஸ்.ரவி மற்றும் கலையரசன் மாவட்ட நீதிபதியா இருந்து பதவி உயர்வுல வர்றவங்க.. மற்றவங்க எல்லாம் வழக்கறிஞர்கள். இதுல வைத்தியநாதன்ன்றவரு பத்தி போன வாரமே சொல்லியிருந்தேன். இப்போ வழக்கறிஞர்கள் போர்க்கொடி புடிக்கறது பி.என்.பிரகாஷ்க்கு எதிரா….
இந்த பி.என்.பிரகாஷ் நல்ல வழக்கறிஞர், சட்டம் தெரிஞ்சவர். ஆனா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்ன்றதுதான் இவர் மேல இருக்கற புகார். பல போலீஸ் அதிகாரிகளுக்கு இவர்தான் வக்கீல். வேளச்சேரி என்கவுன்டர்ல கூட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இவர்தான் வாதாடினார். இதெல்லாம் வெளியில தெரிஞ்ச செய்தி. தெரியாத செய்தி என்னன்னா இவர் ஜெயலலிதாவுக்காக பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்துல வக்காலத்து பைல் பண்ணியிருக்கார்.
நரேந்திர மோடிக்கு ரொம்பவும் பழக்கம் இவர். ஈஷா மையத்துக்கும் இவர்தான் வழக்கறிஞர். ஆர்எஸ்எஸ் உறுப்பினரா இருக்கற இவரை மாதிரி ஆளுங்களை எப்படி நீதிபதியாக்கலாம்னு ஒரு க்ரூப் வக்கீலுங்க மனு குடுக்கப் போறாங்க. இப்போ தமிழக அரசோட சட்டத்துறை செயலாளரா இருக்கற டாக்டர் ஜெயச்சந்திரன் இவருக்கு நெருங்கிய நண்பர். ரெண்டு பேரும் ஒண்ணா வேலை பாத்துருக்காங்களாம்.“
“அதிமுக வக்கீலுங்க யார் பெயரும பரிந்துரை செய்யப்படலையா ? “ என்றான் வடிவேலு.
“கோமதி நாயகம் தானே கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரா இருக்கார்… அவரு அதிமுக கேன்டிடேட்தான்.. ஆனா அரவிந்த் பாண்டியன், தம்பிதுரையெல்லாம் ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தாங்க.. ஆனா அவங்க பேர் டெல்லிக்கு போகல…“
“தம்பிதுரை மேல ஒரு ஜாமீன் மேட்டர்ல தப்புப் பண்ணிட்டதா புகார் இருக்கே அவரை எப்படி ஜட்ஜ் ஆக்குவாங்க ? “
“அதெல்லாம் உண்மைதான்.. ஆனா ஆசை யாரை விட்டது.. “ என்று தொடர்ந்தான் தமிழ். ஏற்கனவே மீன் கொழம்பு ஒழுங்கா வைக்கலன்னு அலுவலக உதவியாளரை சஸ்பென்ட் பண்ணிய நடுவர் மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு… அந்த அம்மா மேல நடவடிக்கை எடுத்தும் ஊழியர்களை பழிவாங்கற வேலையை எந்த நீதித்துறை நடுவரும் விடற மாதிரி தெரியலை.
திருவள்ளுர் மாவட்டம் பள்ளிப்பட்டுல முன்சீபா இருந்தவங்க பேரு உமா மகேஸ்வரி. வழக்கமாவே அவங்க கீழே வேலை செய்யற ஊழியர்களை மரியாதைக் குறைவா பேசறது வழக்கம்தான்… அவங்க வீட்டுல அலுவலக உதவியாளரா இருந்த ராஜுன்றவரை போன வாரம் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க. சஸ்பென்ட் பண்றதுக்கு சொன்ன காரணம்தான் கொடுமை… ஞாயிற்றுக்கிழமை வீட்டு வேலை செய்யறதுக்கு வராததால சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க. இந்த ராஜுவுக்கு ஒரு மாசத்துல பதவி உயர்வு வர வேண்டியது… அதிகாரம் கையில கெடச்சா அதை உதவி பண்ண பயன்படுத்தலன்னாலும், உபத்திரவம் பண்றதுக்கு பயன்படுத்தாமயாவது இருக்கலாம்ல ? “
“ மீடியா நியூஸ் இல்லையா ? “ என்றான் ரத்னவேல்.
“புதிய தலைமுறை தொலைக்காட்சியில உச்சக்கட்ட குழப்பம் நடந்துக்கிட்டு இருக்கு. இது பத்தி விரிவா அடுத்த வாரம் சொல்றேன். தூங்கப் போலாமா… மணி 3 ஆயிடுச்சு“ என்றான் தமிழ்.
அதற்குள் சரக்கை முடித்து விட்டு ஒரு மோன நிலையில் இருந்த கணேசனும் அதை ஆமோதித்தார்.