அரசுப் பணியில் அதிகாரிகளாக சேரும் தொடக்க காலத்தில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் பெரும்பாலானோர் சேர்கிறார்கள். சேரும்போதே பல கோடிகளை ஆட்டையைப் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு சேர்பவர்கள் விதிவிலக்குகள். ஆனால் அரசு இயந்திரம் என்ற அமைப்பு உங்களை நேர்மையற்றவர்களாகவும், ஊழல் பேர்விழிகளாகவும் மாற்றும் வல்லமை படைத்தது. அரசு இயந்திரம் என்ற அமைப்பு வழங்கும் வசதிகளும், வாய்ப்புகளும் மிக மிக அதிகமான போதை தரக்கூடியன. தண்ணீருக்குள் நீந்தும் மீன் எப்போது தண்ணீர் குடிக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாதோ, அது போல அரசு ஊழியன் எப்போது பணம் திருடுகிறான் என்பதை கண்டுபிடிக்க முடியாது என்று கூறுகிறது அர்த்தசாஸ்திரம்.
அது போல எந்தச் சிக்கல்களிலும் சிக்காமல் ஒரு அரசு அதிகாரி கோடிகளைக் குவிக்கும் சூழலே இன்று நிலவுகிறது. நேர்மையான அதிகாரியைப் பார்த்து இந்த சமூகம் சிரிக்கிறது. எள்ளி நகையாடுகிறது. “பிழைக்கத் தெரியாதவன்” என்ற பட்டத்தைக் கட்டுகிறது. திருட்டு வழியில் கோடிகளைக் குவித்து சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் அதிகாரிகளுக்கு “திறமைசாலி” என்று அங்கீகாரம் வழங்குகிறது. இப்படி இருக்கையில் எதற்காக ஒரு அதிகாரி நேர்மையாக இருக்க வேண்டும் ? ஒரு அதிகாரி நேர்மையாக வாழ்ந்து அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அவன் குடும்பத்தினர் கூட ஒத்துழைக்க மாட்டார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் என்று யாருமே நேர்மையானவர்களை விரும்புவதில்லை. “இவ்வளவு பெரிய போஸ்ட்ல இருந்து என்ன பிரயோஜனம்… இதக் கூட செஞ்சு தர முடியாதா ?” என்று அலுத்துக் கொள்வார்கள். உறவினர்கள் கேட்கிறார்களே என்று, பெற்றோர் கேட்கிறார்களே என்று, மனைவி கேட்கிறாளே என்று, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என்று மெல்ல மெல்ல ஊழல் சுழலில் சிக்கி சீரழியும் அதிகாரிகள் இங்கே ஏராளம். எப்போது ஊழல் பேர்விழியாக மாறினோம் என்பதே தெரியாமல் ஊழல்வாதிகளாக மாறி அருட்பெருஞ்சோதியில் கலந்து விடும் அதிகாரிகளே அதிகம்.
முடியாது நான் நேர்மையாகத்தான் இருப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் அதிகாரிகள் அரிதிலும் அரிது. அந்த அதிகாரிகள் சந்திக்கும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பணியாற்றும் துறையில் உள்ள அத்தனைபேரும் வெறுப்பார்கள். “இவனும் திங்க மாட்றான்… மத்தவனையும் திங்க விடமாட்றான்… பெரிய மகாத்மா காந்தின்னு இவனுக்கு மனசுல நெனைப்பு..” என்று உங்களோடு பணியாற்றுபவர்களும், உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களும் நேர்மையான அதிகாரியைத் தூற்றுவார்கள். வெறுப்பார்கள். இவ்வளவு சிரமத்துக்கு இடையே ஒரு அதிகாரி எதற்காகத்தான் நேர்மையாக இருக்க வேண்டும் ? மனம்போன போக்கில் உலகத்தோடு ஒட்டி ஒழுகிச் செல்லலாம் என்று ஏன் முடிவெடுக்கக் கூடாது ?
ஆனால் அரிதிலும், அரிதான சில அரசு அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். யார் எப்படிப் போனாலும் எனக்குக் கவலையில்லை. நான் இப்படித்தான் இருப்பேன்.. நான் பிழைக்கத் தெரியாதவனாகவோ, ஏமாந்தவனாகவோ, உலகத்தோடு ஒட்டி ஒழுகத்தெரியாமல், பல கற்றும் கல்லாதவனாகவோ இருந்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகளே, இந்த தளம் நடத்துவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் உந்துதலாக இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு அதிகாரியைப் பற்றித்தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.
தியாகராஜன். சென்னைதான் அவருக்கு சொந்த ஊர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறார். பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள சத்யமூர்த்தி உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்து விட்டு, சென்னை நந்தனம் கலைக்கல்லூரியில் பொருளாதாரமும் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலும் படிக்கிறார்.
1974ம் ஆண்டு ஜுன் மாதத்தில் MMTC (Metals and Minerals Trading Corporation) என்று அழைக்கப்படும் உலோகம் மற்றும் கனிம வர்த்தக நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக சேர்கிறார். 1963ம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்எம்டிசி நிறுவனம் இந்தியாவின் அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை கவனித்துக் கொள்ளும் பொதுத்துறை நிறுவனமாக இருந்தது. 1991 வரை, இந்த நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதிக்கான ஏகபோகமாகவே செயல்பட்டு வந்தது. 1991ல் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை செயற்பாட்டுக்கு வந்தபிறகு, இந்நிறுவனத்தின் பணிகள் குறைகின்றன. 1991க்கு முன்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பேலன்ஸ் ஷீட்டும் எம்எம்டிசி நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டும் ஏறக்குறைய சரிசமமாக இருந்த அளவுக்கு இந்நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது.
இந்த நிறுவனத்தில் சேர்ந்த தியாகராஜன், நிறுவனத்தோடு சேர்ந்து தானும் வளர்கிறார். தனது கல்வித் தகுதிகளை வளர்த்துக் கொண்டு படிப்படியாக எம்எம்டிசி நிறுவனத்தில் பதவி உயர்வு பெறுகிறார். . 1984ம் ஆண்டு இளநிலை உதவியாளராக இருந்தவர் அதிகாரியாக பதவி உயர்வு பெறுகிறார். தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு சிறந்த தொழிற்சங்கத் தலைவராகவும் உருவாகிறார். எம்எம்டிசி அதிகாரிகள் சங்கத்தில் அகில இந்தியத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்
1997ம் ஆண்டு எஸ்.என்.மாலிக் என்பவர் எம்எம்டிசி நிறுவனம் 400 கோடி நஷ்டத்தை சந்திப்பதற்கு காரணமாக இருந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. இந்த முடிவை எதிர்த்து அப்போது தொழிற்சங்கத் தலைவராக இருந்த தியாகராஜன், அகில இந்திய அளவில் தொழிலாளர்களை ஒன்றிணைத்து, கருப்பு தினம் அனுசரித்து மாலிக்குக்கு கிடைக்கவிருந்த பணி நீட்டிப்பை தடுத்து நிறுத்தினார்.
தற்போது ரயில்வே போர்டு உறுப்பினர் பதவி பெறுவதற்காக 10 கோடி லஞ்சம் கொடுக்க முயன்று, 90 லட்சம் முன்பணமாக கொடுத்து சிக்கிய விவகாரம், முக்கியப் பதவிக்கான நியமனங்களில் நடைபெறும் பேரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் காலம் காலமாக இந்த நியமனங்கள் பணம் மற்றும் அரசியல் அதிகாரத்தின்படியே நடந்து வந்துள்ளது. எம்எம்டிசி நிறுவனத்தின் நியமனங்களும் கோடிக்கணக்கான பணம் மற்றும் செல்வாக்கு அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. எந்தப் பதவியில் யார் இருந்தால் வளைந்து கொடுப்பார்கள் என்பதை ஆராய்ந்த பிறகே முக்கியப் பதவிகளுக்கு நியமனங்கள் நடைபெறுகின்றன.
தற்போது ஊழலுக்கு எதிராக உரத்த குரல் கொடுத்து வரும் பிஜேபி ஆட்சிக் காலத்தில்தான் ஊழல் புகாருக்கு ஆளாகியிருந்த எஸ்.டி.கபூர் என்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கினார் அப்போதைய வர்த்தகத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி. இந்த பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு மத்திய கண்காணிப்பு ஆணையம் கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து ஈராக் நாட்டுக்கு கோதுமை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது. கோதுமைக்கு பதிலாக கச்சா எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம். எம்.எம்.டிசி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கோதுமை ஏற்றுமதி செய்கிறேன் என்று ஒரு நபர் வருகிறார். அந்த நபரை அனுப்பியது, அப்போது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன். டெல்லியில் விவசாய எம்.எம்.டிசியின் விவசாய விளைபொருட்கள் துறையின் பொது மேலாளராக இருந்த தியாகராஜன், இந்த ஏற்றுமதியால் எம்.எம்.டி.சி நிறுவனத்துக்கு பெரிய அளவில் லாபம் வரப்போவதில்லை. ஆகையால் தேவையற்ற முறையில் நாம் இந்த ஏற்றுமதியில் ஈடுபடவேண்டாம் என்று கூறுகிறார். அவர் ஆலோசனைப்படி, எம்எம்டிசி நிறுவனம் அந்த ஏற்றுமதியில் ஈடுபடவில்லை. பின்னாளில் Food For Oil Scam என்று ஐக்கிய நாடுகள் சபை நியமித்த பால் வோல்க்கர் கமிட்டியின் அறிக்கையில் எம்.எம்.டிசி நிறுவனத்தின் பெயர் இல்லாமல் தவிர்க்கப்பட்டது அப்போது எடுக்கப்பட்ட முடிவால்தான்.
எண்பதுகளின் இடையில் எம்எம்டிசி நிறுவனம் தங்க இறக்குமதியில் பெரிய அளவில் ஈடுபடத் தொடங்குகிறது. பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், பல கோடிகளை இந்நிறுவனம் எளிதாக முதலீடு செய்ய இயலும் என்பதால், மிக எளிதாகவே தனக்கென்று ஒரு சந்தையை அமைத்துக் கொள்கிறது எம்.எம்.டிசி நிறுவனம். எம்.எம்.டிசி நிறுவனத்திலேயே தங்க இறக்குமதி தொடர்பான பதவிக்கு எப்பொழுதுமே போட்டி அதிகம்.
சென்னையில் பொது மேலாளராக தியாகராஜன் பணியாற்றியபோது அவருக்கு உயர் அதிகாரியாக இருந்தவர் குருசாமி. தியாகராஜன் அங்கே பொதுமேலாளராக இருந்ததால், தங்கம் தொடர்பான வேலைகள் அவரிடம் கொடுக்க வேண்டுமே என்பதற்காக எம்.எம்.டிசியின் பெல்லாரி அலுவலகத்தில் பொதுமேலாளராக இருந்த ராமச்சந்திரன் என்பவரை சென்னைக்கு மாற்றி அவரை தங்கம் தொடர்பான பணிகளைக் கவனிக்கும் பொது மேலாளராக நியமிக்கிறார் குருசாமி. ராமச்சந்திரனின் நியமனமே தன்னை தங்கம் தொடர்பான பொறுப்புகளைக் கவனிக்க விடாமல் தடுக்க வேண்டுமே என்பதற்காகத்தான் என்பது தியாகராஜனுக்குத் தெரிந்தாலும், அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 30 ஜுலை 2008 அன்று பணி ஓய்வு பெற்றதும், அது வரை சென்னை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் மீண்டும் பெங்களுருக்கே அனுப்பப்படுகிறார். ஓய்வு பெற்ற குருசாமி, சுரானா கார்ப்பரேஷன் என்ற மார்வாடியின் நிறுவனத்தில் இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இதன் பின்னணியில் இருந்த சதித்திட்டம் எதுவும் அப்போது தியாகராஜனுக்கு தெரிந்திருக்கவில்லை.
பதவி உயர்வில் தியாகராஜன், கொல்கத்தா எம்எம்டிசி அலுவலகத்துக்கு தலைமைப் பொதுமேலாளராக நியமிக்கப்படுகிறார். அந்தப் பதவியின் பொறுப்பேற்கலாம் என்று காத்திருந்தால் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய அதிகாரி விடுவிக்கப்படாமல் அந்தப் பதவியிலேயே தொடர்கிறார். ஏன் தாமதம் பொறுப்பை ஒப்படையுங்கள் என்று கேட்டால், டெல்லியிருந்து உத்தரவு வரவில்லை என்று காத்திருப்புக்கு காரணம் சொல்கிறார். தியாகராஜனும் காத்திருக்கிறார். ஒரு மாதம், இரண்டு மாதம் என்று ஐந்து மாதங்கள் கடந்து விடுகின்றன. பொறுமை இழந்த தியாகராஜன் எம்.எம்.டிசி நிறுவனத்தின் சேர்மேனுக்கு தகவல் சொல்கிறார். ஐந்து மாதங்களாக எந்த வேலையும் இல்லாமல் அமர்ந்திருக்கிறேன். மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறேன். எனக்கு என்னதான் வேலை என்று சொல்லுங்கள் என்கிறார். உடனடியாக பொறுப்புகளை ஒப்படைக்கும்படி, தலைமை அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
புதிதாக பொறுப்பேற்ற தியாகராஜன், எம்.எம்.டிசி நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்குகள் உள்ளிட்டவற்றை பார்வையிட முடிவு செய்து, கொல்கத்தா துறைமுகத்தில் உள்ள எம்எம்டிசி கிடங்கைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி தனக்குக் கீழ் உள்ள அதிகாரியைப் பணிக்கிறார். துறைமுகத்துக்குள் நுழைந்து கிடங்குகளைப் பார்வையிடுவதென்றால் துறைமுக அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இரண்டு நாட்களாகின்றன, மூன்று நாட்களாகின்றன. தியாகராஜனுக்கு கிடங்குகளைச் சுற்றிப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. என்னவென்று தனக்குக் கீழ் உள்ள அதிகாரியிடம் விசாரித்தால் ஏதோ சாக்கு போக்கு சொல்கிறார். நாளைக்குள் துறைமுக அனுமதிச் சீட்டு வரவில்லையென்றால், இதற்குப் பொறுப்பான அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கடுமையாகச் சொன்னதும், மறுநாள் அனுமதி கிடைக்கிறது.
கொல்கத்தா துறைமுகத்தில் உள்ள எம்.எம்.டிசி கிடங்கைப் பார்வையிடச் சென்ற தியாகராஜனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தக் கிடங்கில், இருப்பில் இருக்க வேண்டிய ஒரு லட்சம் டன் வாசனைப் பொருட்கள் / தானியங்கள் (Pulses) இல்லை. அந்த சரக்கின் மொத்த மதிப்பு 120 கோடி. கிடங்கைப் பார்வையிட்ட தியாகராஜன், உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு விரிவான அறிக்கையை அனுப்புகிறார். தலைமை அலுவலகம் அதிர்ச்சிக்குள்ளாகி இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறது. அந்தச் சரக்குகளுக்கு உரிய தொகையை செலுத்த வேண்டிய இரண்டு சப்ளையர்கள், உடனடியாக 120 கோடியை எம்.எம்.டிசிக்கு செலுத்துகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தியாகராஜன், சென்னை எம்.எம்.டிசி அலுவலகத்துக்கு தலைமைப் பொதுமேலாளராக நியமிக்கப்படுகிறார். எந்த சென்னை அலுவலகத்தில் இவர் தங்கம் தொடர்பான வேலைகளைக் கவனிக்கக் கூடாது என்று ஒதுக்கப்பட்டாரோ, அந்த நிறுவனத்தின் மொத்த பொறுப்புக்களுக்கும் தலைவராக நியமிக்கப்படுகிறார். ஜுலை 2011ல் சென்னை அலுவலகத்துக்குப் பொறுப்பேற்றதும் அவருக்கு ஒரு அனாமதேய கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்தில் தங்க வியாபாரத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உடனடியாக தனக்குக் கீழ் பணியாற்றும் நிதிப் பொது மேலாளரை அழைத்த தியாகராஜன், என்ன நடக்கிறது என்று விசாரிக்கிறார். விசாரித்தால் 116 கோடி ரூபாய் வெளிநாட்டு தங்க சப்ளையருக்கு முன்தொகையாக கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார். 116 கோடி ரூபாய் முன்பணமாக எப்படிக் கொடுக்க முடியும்… தலைமை அலுவலகத்தின் அனுமதி இல்லாமல் கொடுப்பதற்கு விதிகளிலேயே இடமில்லாதபோது, எப்படி இது நடந்தது என்று வியப்படைந்த தியாகராஜன், தனது நிதி பொது மேலாளரிடம் ஒரு மாதத்துக்குள் எங்கே தவறு, என்ன தவறு என்பதை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஒரு மாதம் கடந்தால் நான் நேரடியாக விசாரிக்கத் தொடங்குவேன் என்று கடுமையாகக் கூறுகிறார். ஒரு மாதம் கடந்தும் எந்த விபரமும் அவருக்கு வழங்கப்படாததால், நேரடியாக விசாரணையைத் தொடங்குகிறார்.
விசாரணையைத் தொடங்கினால் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போலிருக்கிறது. எம்.எம்.டி.சி நிறுவனத்தோடு பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் சிவ் சஹாய் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இரண்டும், எம்எம்டிசி நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பாக்கி வைத்திருப்பது தெரிய வருகிறது. மேலும் தீவிரமாக விசாரணை நடத்தியதில், இதற்கு முன்பு இருந்த தலைமைப் பொது மேலாளர் குருசாமியின் ஒத்துழைப்போடு, எம்.எம்.டிசியின் நிதியைப் பயன்படுத்தி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி சூதாடி, லாபம் ஈட்டலாம் என்று திட்டமிட்டதும், ரூபாயின் மதிப்பு திடீரென்று உயர்ந்ததால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதும், இந்த நஷ்டத்தை யார் ஏற்பது என்று சிவ் சஹாய் மற்றும் சுரானா நிறுவனங்கள் தவிர்த்ததும் இரண்டு நிறுவனத்திடமும், இத்தொகையை வசூலிக்காமல், எம்.எம்.டிசிக்கு நஷ்ட கணக்கு எழுதப்பட்டிருப்பதையும் தியாகராஜன் கண்டுபிடிக்கிறார்.
தில்லி தலைமை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக சந்தேகம் இருப்பதால், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எழுதுகிறார். இதையடுத்து டெல்லியிலிருந்து வந்த General Manager (Bullion) விசாரித்து விட்டு எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று அறிக்கை அளிக்கிறார். மீண்டும் ஒரு General Manager (Audit) வருகிறார். அவரும் ஆல் ஈஸ் வெல் என்கிறார். அவரையடுத்து வந்த General Manager (Bullion Accounts) கணக்கு வழக்குகள் கண்ணாடி போலத் தெளிவாக இருக்கின்றன என்கிறார். இந்த நேரத்தில்தான், எம்.எம்.டி.சி நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை பங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் செபிக்கு அனுப்பவேண்டி வருகிறது. அதை அனுப்பவேண்டிய எம்.எம்.டி.சியின் ஆடிட்டர், இந்த ஊழல் குறித்தும் செபிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கிறார்.
இதற்கிடையே, ஊழல் தொடர்பாக மேலும் சில ஆதாரங்களை கண்டறிந்த தியாகராஜன், 2 ஜனவரி 2012 அன்று மீண்டும் ஒரு அறிக்கையை புதுதில்லிக்கு அனுப்புகிறார். இந்த இரண்டாவது அறிக்கைக்குப் பிறகே தலைமை அலுவலகம், இது குறித்து விசாரிப்பதற்கென்று வெங்கட்ரங்கா என்ற பிரத்யேகமான ஒரு ஆடிட்டரை அனுப்புகிறது. ஆடிட்டரின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, சிபிஐ வழக்கு பதிவு செய்து புலனாய்வை தொடங்குகிறது.
கைது செய்யப்பட்ட குருமூர்த்தி
இந்த வழக்கு குறித்தும் இதில் பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கம் குறித்தும் சவுக்கில் “ஓபனிங் நல்லாத்தான் இருக்கு ஆனா ஃபினிஷிங் ?” மற்றும் சுரானாஸ் கோல்ட் ஆகிய இரண்டு கட்டுரைகளிலும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. சிபிஐ பதிவு செய்துள்ள இந்த முதல் தகவல் அறிக்கையில் புகார்தாரர் யார் தெரியுமா ? எம்.எம்.டிசி நிறுவனத்தின் சென்னை அலுவலக தலைமைப் பொது மேலாளர் தியாகராஜன்தான்.
இவர் சமீபத்தில் 39 வருட அரசுப் பணிக்குப் பின் ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நாள் அன்று, இவர் அறை வாசலில், பழைய பிய்ந்த செருப்புகள் இருந்தன. யாருடைய செருப்புகள் இவை என்று விசாரித்தால், அந்த அலுவலகத்தின் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் (Sweeper) அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்திருக்கின்றனர் என்று கூறினார்கள். சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் எதற்காக ஒரு தலைமைப் பொதுமேலாளரை வாழ்த்த நேரில் வரவேண்டும் என்று விசாரித்தால், 10 வருடங்களுக்கு முன், துணைப் பொது மேலாளராக சென்னை அலுவலகத்தில் தியாகராஜன் பணியாற்றியபோது, எம்.எம்.டி.சியின் அனைத்து சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கும், காலை முதல் அவர்கள் அலுவலகம் விட்டு செல்லும் வரை, கேன்டீனில் அனைத்தும் இலவசம் என்று உத்தரவிட்டார். எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் பதவி உயர்வு வரும், ஏராளமான சம்பளம் வாங்குகிறேன். ஆனால் 30 ஆண்டுகளாக பெருக்குவதையும் சுத்தம் செய்வதையும் தவிர இவர்களுக்கு எந்த பதவி உயர்வும் கிடையாது. இவர்களிடம் சுத்திகரிப்புப் பணியைத் தவிர்த்து, தபால் எடுத்துச் செல்வது, வங்கிக்குச் செல்வது என்று ஏராளமான வேலைகளை அலுவலகத்தில் வாங்குகிறார்கள். இவர்களுக்கு என்னால் வழங்க முடிந்த குறைந்தபட்ச சலுகை இதுதான் என்றார்.
இப்படி ஏழை உழைப்பாளி மக்களுக்கு சலுகை வழங்கிய அதே தியாகராஜன்தான், விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து, ஒரு நாள் உணவுக்காக எம்.எம்.டிசியின் கணக்கில் 1500 ரூபாயை கணக்கெழுதும் அதிகாரிகளின் கொள்ளையை தடுத்து நிறுத்தினார். ஒரு நாளைக்கு சாப்பிடுவதற்கு 1500 ரூபாய் எப்படி ஆகும் என்று அதற்கு தடை விதித்தார். இதேபோல தனியார் டாக்சிகளை வாடகைக்கு எம்.எம்.டி.சி பணிக்காக வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்ற விதியைப் பயன்படுத்தி சொந்த வேலைக்காகவும், குடும்பத்தினர் ஊர் சுற்றுவதற்காகவும் டாக்சிக்களை அமர்த்தி, அந்தத் தொகையை எம்.எம்.டிசியிடம் இருந்து திரும்பப் பெறும் வழக்கத்தையும் ஒழித்துக் கட்டினார்.
நிறைவாகத்தான் பணியாற்றியிருக்கிறார். இவ்வளவு சிறப்பாக பணியாற்றியவருக்கு குறைந்தது ஒரு சிறப்பான விழா நடத்தி, அவரை வாழ்த்தி ?? அனுப்பியிருக்க வேண்டும் அல்லவா ? செய்யவில்லை.
என்ன நடந்தது தெரியுமா ? ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் இவர் பணியில் குறைபாடு இருந்தது என்ற காரணத்தினால் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது. என்ன குற்றம் புரிந்தார் என்றால், நிதிப் பரிவர்த்தனைகளை சரி வர மேற்பார்வை செய்யவில்லை என்பதே அது.
நிதிப்பரிவத்தனைகள் சரியாக நடக்கவில்லை என்பதை கண்டுபிடித்ததே இவர்தானே…. இவர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில்தானே இன்று சிபிஐ விசாரணை நடந்து வருகிறது ? இவர் புகாரில்தானே சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது ? அப்படி இருக்கையில் நிதிப் பரிவர்த்தனைகளை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என்பது எந்த விதத்தில் நியாயமாகும் ? இவருக்கு அளிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் யாரை சாட்சியாக போட்டிருக்கிறார்கள் தெரியுமா ? சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக காட்டப்பட்டிருக்கும் முன்னாள் எம்.எம்.டிசி அதிகாரிகள் குருசாமி மற்றும் குருமூர்த்தி. சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது என்பதால், சிபிஐயிடம் இருந்து தியாகராஜனை ஓய்வு பெற அனுமதிக்கலாமா, நடைபெற்று வரும் விசாரணையில் தியாகராஜன் மீது ஏதாவது குற்றச்சாட்டுகள் உள்ளனவா என்று தலைமை அலுவலகத்தில் கேட்கிறார்கள். சிபிஐ தனது அறிக்கையை ஒரு மாதத்துக்கு முன்பே அனுப்பி, தியாகராஜன் மீது எவ்விதமான குற்றச்சாட்டும் இல்லை என்று அறிக்கை அளிக்கிறது. இதற்குப் பிறகும் துறை நடவடிக்கை என்றால் ?
சரி என்னதான் நடந்திருக்கும்… ஓய்வு பெறும் நாள் அன்று துறை நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை என்ன ? அதுவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் ?
இந்த இடத்தில்தான் 400 கிலோ தங்கத்தைப் பறிகொடுத்த சுரானா நிறுவனம் வருகிறது. நல்லா ஸ்மூததா போயிக்கிட்டிருந்த பிசினெஸ்ஸை இந்த ஆள் கெடுத்து விட்டார். இவரைப்போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பார்த்து மற்ற அதிகாரிகளும் கெட்டுப்போய், அவர்களும் நேர்மையாக நடந்து கொள்ளத் தொடங்கினால், நாட்டுக்கே கேடு,, இது பெரிய ஆபத்தில் சென்று முடியும் என்பதால், தியாகராஜன் போன்ற அதிகாரிகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்…. தியாகராஜனின் மீதான நடவடிக்கை மற்ற அதிகாரிகளுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர்.
அதன் அடிப்படையில் அவர்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இவரை எப்படியாவது சிக்கலில் இழுத்து விட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். எம்.எம்.டி.சியின் தலைவர், அந்தத் துறையின் கண்காணிப்பு அதிகாரியிடம், தியாகராஜன் மீது துறை நடவடிக்கை எடுக்க அறிக்கை அளிக்கும்படி கேட்கிறார். அவர், சிபிஐ இவர் மீது நடவடிக்கை எடுக்க அதாரங்கள் இல்லை என்று அறிக்கை அளித்துள்ள நிலையில், விசாரணை நடத்தாமல் என்னால் எந்த அறிக்கையும் வழங்க இயலாது. மேலும் நாளை ஓய்வு பெற உள்ளவருக்கு எதிராக இப்போது அறிக்கை அளிக்க இயலாது என்று கூறி விடுகிறார்.
வேறு வழியின்றி, கண்காணிப்பு அதிகாரியின் அறிக்கை ஏதுமில்லாமல், சிபிஐ-ன் அறிக்கை ஏதுமில்லாமல், எந்தவிதமான உருப்படியான விசாரணையும் நடத்தாமல், தான்தோன்றித் தனமான ஒரு குற்றச்சாட்டு அறிக்கையை வழங்கியிருக்கிறார் எம்.எம்.டிசி தலைவர். இந்த நடவடிக்கை வரிஏய்ப்பு செய்து, ஊழல் அதிகாரிகளை வளர்த்தெடுக்கும் ஒரு மார்வாடியின் செல்வாக்கால் என்பது எத்தனை வேதனையான விஷயம் ?
ஓய்வு பெற்ற அன்று எம்.எம்.டி.சி தலைவர் தேசி-க்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார் தியாகராஜன்.
அன்பார்ந்த திரு தேசி…
இந்த நிறுவனத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு பதவிகள் வகித்து 38 வருடங்கள், 9 மாதங்கள் சேவை செய்த பிறகு இன்று மதியம் ஓய்வு பெறுகிறேன். எனது பணிக்காலத்தில் இந்த நிறுவனத்துக்காக எப்படி எனது வேர்வையையும், ரத்தத்தையும் அளித்து உழைத்திருக்கிறேன் என்பது இந்நிறுவனத்தில் உள்ளவர்களுக்குத் தெரியும். நீங்கள் நேற்று அனுப்பிய அடிப்படை ஆதாரம் இல்லாத ஒரு மொட்டையான குற்றப்பத்திரிக்கையை நேற்று வேதனையோடு பெற்றேன். என்னிடம் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட குறிப்பாணைக்கு நான் அனுப்பிய விளக்கம் 13 மாதங்களாக உங்களிடம் உறங்கிக் கொண்டு இருக்கிறது. நீங்கள் நினைத்திருந்தால், அந்த விசாரணையை எப்போதோ முடித்திருக்கலாம். சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறை சென்று, இன்று ஜாமீனில் உலவிக்கொண்டிருக்கும் நபர்களை என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சாட்சிகளாகப் போட்டிருக்கிறீர்கள் என்பது வியப்பை அளிக்கிறது. இதன் உள்நோக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது.
இந்த நிறுவனம் தொடர்பான வழக்குகளுக்கான ஆவணங்களை சேகரிப்பதற்காக 44 நபர்களை நியமித்து, அவர்கள் இரவு பகலாக, தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட தொழிற்சாலை ஊழியர்கள் போல பணியாற்றி வருகிறார்கள் என்பது நீங்கள் அறியாததல்ல. இப்படி பணியாற்றும் ஊழியர்களை பணி மாறுதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என்று மிரட்டி வருகிறீர்கள். உங்களின் இந்த நடவடிக்கைகள் ஊழல் பேர்விழிகளின் நலனுக்காகவேயன்றி, இந்நிறுவனத்தின் நலனுக்கானது அல்ல.
நீங்களும் ஒரு நாள் ஓய்வு பெறுவீர்கள் தேசி அவர்களே. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். சத்தியமே வெல்லும்.
அன்புடன்
தியாகராஜன்.
தியாகராஜன்
இதுதான் நேர்மைக்கு கொடுக்கும் விலை.
தனக்கு வரவேண்டிய ஓய்வு காலப் பணப்பயன்கள் தியாகராஜனுக்கு நிறுத்தப்பட்டிருக்கலாம். பிழைக்கத் தெரியாத மனிதன் என்று அவர் சக தோழர்கள் அவரை எள்ளி நகையாடலாம். நண்பர்கள் இகழலாம். இவரைப்போன்ற நபர்களைப் பற்றித்தான் அய்யன் வள்ளுவர் எழுதியிருக்கிறார்.
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.