“நாங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி!” என்று சொல்வார் டாக்டர் ராமதாஸ். ”எந்தக் கூட்டணி வெற்றிபெறப்போவதாகத் தெரிகிறதோ, அந்தக் கூட்டணியில் போய்ச் சேர்ந்துகொள்வார் அவர்!” என்று எதிர்க் கட்சிகள் கிண்டல் அடிப்பார்கள். இப்போது எந்தக் கட்சியுடனும் சேர முடியாத நிலையில், சாதிக் கூட்டணியைக் கையில் எடுத்துவிட்டார் ராமதாஸ். அது வெற்றிக் கூட்டணியா என்பது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும்.
‘திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை… தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று கடந்த ஓர் ஆண்டு காலமாக ஊர் ஊராகப் போய்ச் சொல்லிவந்தார்ராமதாஸ்.
‘எங்களைப் போலத் தைரியமாகத் தனித்து நிற்கக்கூடிய துணிச்சல் எந்தக் கட்சிக்கு இருக்கிறது?’ என்றும் கேட்டார் அவர். எவர் தயவும் இல்லாமல் தனித்து நின்று, ஓர் அரசியல் கட்சி தனது சொந்த செல்வாக்கை நிரூபித்துக் காட்ட முயற்சிப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான். அந்த அடிப்படையில் ராமதாஸின் அறிவிப்புக்கு முக்கியத்துவம் கிடைத்தது. இத்தகைய கூட்டங்களில் எல்லாம் திடீரென வன்னியர்கள் வாழ்க்கை பற்றி அதிகம் கவலைப்பட ஆரம்பித்தார் ராமதாஸ்.
அதாவது, வன்னியர் பெரும்பான்மை உள்ள தொகுதிகளைக் குறிவைத்து இறங்கி, ஒன்றிரண்டு தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதே ராமதாஸின் இலக்காக இருந்தது.சாதியைக் குறிவைத்துதான் ராமதாஸ் தன்னு டைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த சாதி அங்கீகாரத்தை வைத்து அவரால் பண்ருட்டி ராமச்சந்திரனை மட்டும்தான்எம்.எல்.ஏ. ஆக்க முடிந்தது. அதன் பிறகுதான் கூட்டணிகளுக்குள் நுழைந்தார். நாடாளுமன்றத் துக்கும் சட்டமன்றத்துக்கும் ஏராளமான ஆட் களை அவரால் அனுப்பிவைக்க முடிந்தது. இப்போது மீண்டும் சாதியை நம்ப ஆரம்பித்து உள்ளார். ஆனாலும், அவர் தனித்தே நிற்பார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில், ராமதாஸின் ஜாதகம் அப்படி!
அரசியலுக்கு நுழைந்ததும் ஐந்து வாக்குறுதிகளை ராமதாஸ் கொடுத்தார்.
1. ”நான் எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்த ஒரு பதவியையும் வகிக்க மாட்டேன்
.2. சங்கத்தின் பொதுக் கூட்டங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் எனது சொந்தச் செலவில்தான் வந்துபோவேன். ஒரு காலகட்டத்தில் என்னிடம் காசு இல்லாமல்போனால், நான் ஓய்வு எடுத்துக்கொள்வேனேஒழிய, ஒருபோதும் மற்றவர் செலவில் வந்துபோக மாட்டேன்.
3. எனது வாழ்நாளில் நான் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். எனது கால் செருப்புகூட சட்ட மன்றத்துக்குள்ளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் நுழையாது.
4. எனது வாரிசுகளோ, எனது சந்ததியினரோ, யாரும் எந்தக் காலத்திலும் சங்கத்திலோ (வன்னியர்) அல்லது கட்சியிலோ, எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள்
.5. எனக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி, சுவிஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் என் பெயரில் போடுவதாகப் பேரம் பேசினாலும் சரி, இந்த ராமதாஸ் விலை போக மாட்டான் – இது சத்தியம். என் தாய் மீது சத்தியம். இதையெல்லாம் உங்கள் டைரியில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள். என் தாய் மீது செய்து கொடுத்த இந்த சத்தியத்தை மீறி நான் நடந்தால், என்னை நடுரோட்டில் நிறுத்திவைத்துச் சவுக்கால் அடியுங்கள்.”இப்படியெல்லாம் பேசிவிட்டுத்தான் கட்சி ஆரம்பித்தார் ராமதாஸ்.
அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் அவர். அவரது மகன் அன்புமணி, இளைஞர் அணித் தலைவர். ஆக, ராமதாஸும் பதவிக்கு வந்தார். அவரது வாரிசும் பதவிக்கு வந்தார்.இன்னொரு வாக்குறுதியையும் ராமதாஸ் அப்போது கொடுத்தார். ‘இந்தச் சாதியில் பிறந்தவர்கள், நமது சங்கத்து உறுப்பினர்கள், அரசியல் கட்சியில் இருக்கிற வன்னியர்களோடு ஒட்டோ உறவோ வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று சொன்னார். இவரே கட்சி ஆரம்பித்தார். அரசியல் கட்சிகளில் இருக்கிற வன்னியர்களோடு மட்டும்அல்ல; அந்நியர்களோடும் உறவு வைத்துக்கொண்டார்.
”கலைஞர் கருணாநிதிதான் நமது சமுதாயத்தின் முதல் எதிரி. அவர் பெரியண்ணன் மாதிரி நடந்துகொள்வார். அவரோடு கூட்டணி அமைத்தால், வேட்டியை உருவிவிடுவார்” என்று சொன்ன ராமதாஸ்தான், கருணாநிதியிடம் கல்யாணப் பத்திரிகை கொடுத்துவிட்டு, கூட்டணிக் கையெழுத்து போட்டுவிட்டு வந்தார். ”நான் மதிக்கத் தகுந்த சிறந்த தலைவர் எம்.பி.சுப்பிரமணியன். அவரே என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறுகிறார். நான் ஜெயலலிதாவிடம் பல கோடி ரூபாய் வாங்கிவிட்டதாகவும் ரகசிய உடன்பாடு செய்துகொண்டதாகவும் எனது உறவினரிடம் கூறி இருக்கிறார். நான் இப்படிச் செய்வேனா? இப்படிச் செய்வது பெற்ற தாயோடும் மகளோடும் உடலுறவு வைத்துக்கொள்வதைவிட மோசமானது. அந்தக் கேவலமான செயலை இந்த உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் வரை இந்த ராமதாஸ் செய்ய மாட்டான்” என்று சொல்லிக்கொண்டே வந்தவர், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.
அயனாவரம் பகுதியில் நடந்த பல்லவர் விழாவில்தான் அந்தக் காட்சி. அடுத்த சில மாதங்களில் போயஸ் தோட்டத்தை நோக்கிப் போனது அவரது கார். இப்போதுகூட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனை மிகமிக மோசமாக அர்ச்சனை செய்துவரும் ராமதாஸ், அவரை என்னவெல்லாம் புகழ்ந்து பேசினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது, அன்றாட அரசியல் நிலைப் பாடுகளுக்கு ஏற்ப அரசியல் கட்சித் தலைவர்களைத் தரம் குறைந்து தாக்கு வதும் கூட்டணி சேர்ந்ததும் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டாடுவதும் ராமதாஸின் வாடிக்கை.தலித்களைத் தாக்கினால் வன்னியர்கள் வாக்குகளை அள்ளலாம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் அவர் இறங்கி இருப்பதால்தான், தர்மபுரி தொடங்கி மரக்காணம் வரைக்கும் கொந்தளிப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள் ளன. இந்தப் பிரச்னை ஏதோ ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் தலித்களுக்கும் நடப்பதாகப் பூதாகாரப்படுத்திக் காட்டுவதே அரசியல் உள் நோக்கம் கொண்டது. தன்னுடைய கட்சி, தேர்தல் நலனுக்காக ஒட்டுமொத்த சமூக மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புலம்பிக்கொண்டு இருக்கிறார் ராமதாஸ். நாளையே ஏதாவது ஒரு கூட்டணி அவருக்கு அமைந்துவிட்டால், சாதி விவகாரத்தைத் தூரத் தூக்கிப் போட்டுவிடுவார்.
இதனை உணர்ந்ததால்தான், கருணாநிதி மென்மை யாகவும், ஜெயலலிதா வன்மையாகவும், ராமதாஸ் பிரச்னையைக் கையாள்கிறார்கள்.ஜெயலலிதாவைவிட கருணாநிதியைத்தான் ஒருமையிலும் சாதிகுறித்தும் விமர்சன அம்புகள் ராமதாஸ் தரப்பில் இருந்து அதிகம்வரும். மாமல்லபுரம் மேடையும் அப்படித்தான் அமைந்தது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்தபோது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று அக்னி முகம் காட்டிய கருணாநிதி, இப்போது அமைதியானவராக, ‘நாவடக்கம் தேவை’ என்று மட்டும் அருள்பாலிக்கிறார். ‘பா.ம.க-வினரை விடுதலை செய்யுங்கள்’ என்று ஆலோசனை சொல்கிறார். யாரோடு கூட்டணி சேருவது என்ற குழப்பத்தில் இருக்கும் கருணாநிதி, ராமதாஸை ஏன் அதில் விட்டுவிடுவானேன் என்ற ஆசையில் கடிதோச்சி மெள்ள எறிகிறார். திருமாவளவனைக் கூடவே வைத்துக்கொண்டு, ராமதாஸ் கைதுக்கும் கண்ணீர் வடிக்கும் தந்திர அரசியலுக்குள் தேர்தல் மட்டும்தான் காரணமாக இருக்க முடியும்.
‘ராமதாஸுக்குப் பழைய செல்வாக்கு எதுவும் இல்லை. மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி தோல்வி யைத் தீர்மானிக்கும் கட்சியாக பா.ம.க. இருக்கிறது!’ என்று ஜெயலலிதாவுக்கு போலீஸ் அறிக்கை சொல்கிறது. அதனால்தான் ஓங்கி அடிக்க ஆரம் பித்தார் ஜெயலலிதா.ஜெயலலிதா கழற்றிவிட்டார். கருணாநிதி ஊசலாட்டமாக இருக்கிறார். ராமதாஸ், சாதியை நம்புகிறார். இவை அரசியல் ஆதாயமாக மட்டும் இருந்தால் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆனால், அப்பாவி மக்களின் நிம்மதியைக் குலைத்து, ரத்தம் உறையவைக்கும் நடவடிக்கைகளாக இருப்பதுதான் பயங்கரம். அனைவரின் நம்பிக்கையைப் பெற்று அரசியல் நடத்த ராமதாஸ் முயற்சிக்கட்டும்… அச்சுறுத்துவதன் மூலமாக அல்ல!
நன்றி ஆனந்த விகடன்