”ரஷ்யர்கள் தயாரிச்ச அணு உலை மட்டும் வேணாம்கறீங்க… அவங்க ஊர் வோட்கா மட்டும் வேணுமா ? என்னண்ணே நியாயம் இது ?” என்று கேட்டபடியே கணேசனுக்கு ரமோனாவ் வோட்கா பாட்டிலை எடுத்து வைத்தான் தமிழ்.
”சரவணபவன் சாப்பாடு நல்லாருக்குன்றதுக்காக அந்த ஹோட்டல் ஓனர் பண்ற கொலையை ஏத்துக்க முடியுமா ? என்னப்பா பேசற ? ” என்றபடியே வாஞ்சையோடு வோட்கா பாட்டிலை கையிலெடுத்தார் கணேசன்.
”என்னண்ணே இப்படி மடக்கிட்டீங்க ? ” என்று சிரித்துக் கொண்டே அமர்ந்தான் தமிழ். மொட்டை மாடியில் விரித்து வைத்திருந்த பெட்ஷீட்டில் அமர்ந்தான். ரத்னவேல் தன் மொபைலில் எஃப்எம் பாட்டு வைத்திருந்தான். “அவனுக்கென்ன தூங்கிவிட்டான்….. அகப்பட்டவன்… நானல்லவா ? ” என்று டிஎம்எஸ் பாடிக்கொண்டிருந்தார்.
”உண்மையிலேயே வசமா அகப்பட்டுட்டார்” என்றான் தமிழ்.
”யாரை சொல்ற மாமா ? ” என்றான் ரத்னவேல்.
”மருத்துவர் அய்யாதான்.. 12 நாள் ஜெயில் அவரை படாதபாடு படுத்திடுச்சி.. இன்னைக்கு ஜெயில்லேர்ந்து வெளியில வந்தப்போ அவர் முகத்தப் பாத்தியா.. வெயில் தாங்காம உடம்பே கன்னிப் போயிடுச்சு. ”
”அவர்தானே மச்சான் ‘போடு வழக்க சந்திக்கறேன்னு’ சொன்னார் ? ” என்றான் பீமராஜன்.
”சொன்னாருதான்… இப்படியெல்லாம் நடக்கும்னு அவரு நெனைக்கலையே… தடையை மீறி கைதாவோம். தமிழ்நாடு பூரா வன்முறையை கட்டவிழ்த்து விடுவோம். அரசாங்கம் பயந்து போயி ரெண்டு நாள்ல விடுதலை பண்ணிடும்னு கணக்குப் போட்டார். ஆனா ஜெயலலிதாகிட்ட இதெல்லாம் நடக்குமா ? ”
”இப்போ என்ன ஆயிடுச்சுங்கிற ? ” என்றான் பீமராஜன்.
”மச்சான்.. டாக்டர் போட்ட கணக்கே வேற… தன்னோட கைது எண்பதுகளில் நடந்த வன்னியர் போராட்டம் மாதிரி ஒரு எழுச்சியை ஏற்படுத்தும். அந்த எழுச்சியைப் பார்த்து பயந்து போகும் இரண்டு திராவிடக் கட்சிகளும் நம்பகிட்ட கூட்டணி வைக்கச் சொல்லி கெஞ்சும். அதைப் பயன்படுத்திக்கிட்டு பழையபடி கிங்மேக்கர் ஆகலாம்னு நெனைச்சார். அதுக்காகத்தான், கூட இருந்தவங்க அறிவுரையெல்லாம் உதாசீனப்படுத்திட்டு, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஆனா அம்மா டாக்டர் மேல கொலைவெறியில இருந்தாங்க. கைதான பிறகு, ராமதாஸோட பினாமியா இருக்கற சுப்பராயலுன்ற நபர்கிட்ட, கைதான பிறகு தெனமும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுற மாதிரி வன்முறைச் சம்பவங்கள் ஏற்படனும்னு சொல்லியருக்கார். சுப்பராயலு வெளி மாநிலங்கள்லேர்ந்தெல்லாம் ஆட்களை இறக்கி இரவு நேர பேருந்து பயணத்தையே ஆபத்தானதா செஞ்சார். இந்த விபரமெல்லாம் உளவுத்துறை மூலமா ஜெயலலிதாவுக்கு போனதும், அந்தம்மா கொலைவெறியாயிடுச்சு… பழைய கேசையெல்லாம் போடுங்கன்னு உத்தரவு போட்டதும்தான் 2004-ல் ரஜினி ரசிகர்களை அடிச்ச கேஸ்ல கைது பண்ணாங்க.
இதுக்கு நடுவுல சிறையில இருந்த ராமதாஸால வெயிலைத் தாங்க முடியல”
”அவர்தான் பாட்டாளி, விவசாயின்னு தன்னைப் பத்தி பெருமையா பேசிக்குவாரே மாமா ? ”
”எந்த விவசாயி 80 லட்ச ரூபா கார்ல போறான்.. போடா நீ வேற…. 24 மணி நேரமும் ஏ.சியில இருந்து பழக்கப்பட்ட டாக்டருக்கு கொளுத்துற வெயில்ல கட்டாந்தரையில படுக்க வெச்சா எப்படி இருக்கும் ? கதறிட்டார். அவருக்குன்னு ரெண்டு மின்விசிறி குடுத்தும், வெயில் தாங்க முடியலை. அதனாலதான் திருச்சி ஜெயில்லேர்ந்து வெளியில வந்ததும், அடக்குமுறையை சந்திப்பேன்னு பேசுவார்னு பாத்தா, கட்டாந்தரையில் ஈரத்துண்டை போட்டு படுத்தேன்னு சொன்னார். ஜெயில்ல கட்டாந்தரையில படுக்க வைக்காம, இலவம்பஞ்சு மெத்தையா தருவாங்க”
”சரி இன்னும் கொஞ்ச நாள் டாக்டரை உள்ள வைப்பாங்கன்னு எதிர்ப்பார்த்தேன். ஆனா அதுக்குள்ள விட்டுட்டாங்க ? ” என்று கேட்டான் வடிவேலு.
”இன்னும் கொஞ்ச நாள் வச்சுருப்பாங்க.. ஆனா உளவுத்துறை மூலமா ராமதாஸோட உடல்நலத்தை விசாரிச்சதுல, வெயில் தாங்காம அவருக்கு ஏதாவது ஆயிடும்னு அறிக்கை குடுத்தாங்க. அதுக்குப் பிறகுதான் விடுதலை கிடைச்சுது. சனிக்கிழமை இரவு சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கார் ராமதாஸ்.”
”அப்போ இனிமே எந்த நடவடிக்கையும் இருக்காதா ? ”
”யார் சொன்னது இருக்காதுன்னு ? ராமதாஸோட அஸ்திவாரத்தையே ஆட்டி வைக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க அரசுத் தரப்புல. ஒரு பக்கம் ராமதாசும், அன்புமணியும் வெளியில வந்தாலும், இன்னொரு பக்கம் பாமக நிர்வாகிகள் ஒவ்வொருத்தரா குண்டர் சட்டத்துலயும் தேசியப் பாதுகாப்பு சட்டத்துலயும் உள்ள போயிக்கிட்டே இருக்காங்க. கவனிச்சியா இல்லையா ?
காடுவெட்டி குரு மேல எவ்வளவு வேகமா தேசியப்பாதுகாப்பு சட்டம் பாஞ்சதுன்னு பாத்தியா ? இதோட முடியப்போறதில்ல. தமிழகத்தில் ராமதாஸ் கைதுக்குப் பிறகு நடந்த வன்முறைச் சம்பவங்கள் அத்தனைக்கும் காரணம் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருன்னு காரணம் காட்டி, வன்னியர் சங்கத்துக்கும் அரசு தடை விதிக்கப் போகுது. தடை விதிச்சா, அந்த சங்கத்தோடு சொத்துக்கள் முடக்கப்படும். வன்னியர் சங்க நிர்வாகிகள் முக்கியமானவங்க கைது செய்யப்படுவாங்க. பாட்டாளி மக்கள் கட்சியோட பலமே வன்னியர் சங்கம்தான். வன்னியர் சங்கத்தை முடக்கினா ராமதாஸோட ப்யூசை பிடுங்கின மாதிரிதான். ”
முதல் ரவுண்டை ஊறுகாய் துணையோடு முடித்திருந்த கணேசன் ”தமிழு, தேர்தல்ல யாரு கூட கூட்டணி வைப்பார் மருத்துவர் ? ”
”கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிச்சாலும் தேர்தல்ல திமுகவோடோ அதிமுகவோடோ கூட்டணி வைக்க மாட்டேன்னு வீராப்பா இன்னைக்கு பேட்டி குடுத்துருக்காரு. ஆனா, திமுக பக்கம் போறதுக்கான வாய்ப்பு பிரகாசமா இருக்கு. ”
”என்னப்பா சொல்ற ? திருமாவளவன் மாதிரி கருணாநிதிக்கு விசுவசமான அடிமை கிடைக்க மாட்டார்ன்ற அளவுக்கு கருணாநிதியோட அவ்வளவு அயோக்கியத்தனத்துக்கும் துணை போயிட்டு இருக்காரு. இனி திருமாவளவனும், ராமதாஸும் ஒரு கூட்டணியில இருக்கவே முடியாதுன்ற அளவுக்கு நிலைமை மாறிடுச்சு. அப்படி இருக்கறப்போ எப்படி திமுக கூட்டணியில ராமதாஸ் வருவார்ன்று சொல்ற ? ”
”திருமாவளவன் மேல கருணாநிதி ஏகத்துக்கும் கடுப்புல இருக்காருண்ணே.. ராமதாஸ் விஷயத்துல, ரெண்டு மூணு வாட்டி, ஜெயலலிதாவோட நடவடிக்கைகளை பாராட்டி திருமாவளவன் பேசுனதும், அறிக்கை விடறதும் தமிழினத் தலைவருக்கு சுத்தமா பிடிக்கல. இதனாலத்தான் திருமாவளவன் கூட்டுன சமூக அமைதிக்கான மக்கள் ஒற்றுமை மாநாட்டுக்கு பெரியார் திடலை குடுக்க வேணாம்னு வீரமணிக்கிட்ட சொல்லியிருக்கார். ஆனா கடைசி நேரத்துல மறுத்தா நல்லா இருக்காதுன்னு வீரமணி ஏதோ சாக்கு சொல்லி தவிர்த்துட்டார்.
இந்த கோவத்துலதான், டெசோ அமைப்பு சார்பா கச்சத்தீவை மீட்பது தொடர்பா வழக்கு தொடுக்கறதா அறிவிக்கப்பட்ட முடிவை மீறி, தன் பெயர்லயே வழக்கு தொடுத்திருக்காரு.”
”இவ்வளவு அல்பமா இருக்காரேப்பா… !!! ”
”என்னண்ணே பண்றது.. ? இது அரசியல். எல்லாம் நடக்கும். திருமாவளவனும், அதிமுக பக்கம் போறதுன்ற முடிவுக்கு வந்துருக்கறதா சொல்றாங்க. அதிமுக தரப்புல 2 சீட் தர்றதுக்கு ஓ.கே சொல்லியிருக்காங்க போல இருக்கு. அதனால அவரும் அந்த மூட்லதான் இருக்காரு.”
”விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில திருமா கூடவே கருணாநிதி தன்னோட ஏஜென்டை வச்சுருக்காரே… அவரு என்னப்பா சொல்றாரு ? ”
”யாரு ரவிக்குமாரைத்தானே கேக்கறீங்க.. ? அவரு சமீப காலமா கலைஞர் முன்னைப் போல இல்ல… ரொம்ப மோசம்னு பேசிக்கிட்டு வர்றாரு…”
”என்ன ஆச்சு… திமுக ஆதரவு நிலைப்பாட்ல இருந்து மாறிட்டாரா ? ” என்று வியப்படைந்தார் கணேசன்.
”இல்லண்ணே கட்சிக்குள்ளலேய என்ன சந்தேகப்பட்றாங்கன்னா… இப்படிச் சொன்னா திருமா என்ன ரியாக்சன் குடுக்கறாருன்னு பாத்து, கருணாநிதிக்கிட்ட சொல்றதுக்காக இப்படி வார்த்தையை விடுவாரு. இவரு எப்பவுமே கலைஞர் விசுவாசின்னு சொல்றாங்க
அது மட்டுமில்லாம ஆளுங்கட்சியும் கவனமாத்தான் காய்களை நகர்த்துது. வன்னியர் ஓட்டுக்கள் பிரிஞ்சு போகும்ங்ற விஷயம் ஜெயலலிதாவுக்கு தெரியாம இல்ல. இதனால ராமதாஸ் கிட்ட இருந்து பிரிஞ்சு வந்து தனிக் கட்சி ஆரம்பிச்சிருக்கிற வேல்முருகன்கிட்ட பேச்சுவார்த்தை தொடங்கிடுச்சு.
வேல்முருகன், இரட்டை இலை சின்னத்துல போட்டியிட்டா வன்னியர்கள் அவருக்கு ஓட்டு போட மாட்டாங்களா என்ன ?”
“ராமதாஸ் கதையை மொத்தமா முடிச்சுடுவாங்க போலருக்கே ? “ என்றான் வடிவேலு.
“அவர் கதை முடிஞ்ச கதை மச்சான். “
“ஆளுங்கட்சி நியூஸ் சொல்லு மச்சான்.. திமுக பத்தி எங்க பத்திரிக்கைக்கு கவலையே இல்ல.. ஆளுங்கட்சி பத்தி நியூஸ் இருந்தா குடு. “ என்றான் ஜானி ஜான் கான் சாலையில் வேலை பார்க்கும் ரத்னவேல்.
“ஆளுங்கட்சியில செய்திக்கா பஞ்சம். ஆளுங்கட்சியில இருக்கறவங்க மேலயும் செய்தி போடறதுக்கு இப்படி யோசிக்கறீங்களே… சைதை துரைசாமி பத்தி எழுதுவீங்களா ? எப்படியாவது முதல்வரை பாத்துடனும்னு முதல்வர் தலைமைச் செயலகத்துக்கு வரும்போதெல்லாம் ரோட்ல பிச்சை எடுக்கற மாதிரியே போய் நிக்கறாரு. மனு குடுக்கறவனுங்கதான் இப்படி நிக்கறாங்கன்னா, மேயரா இருந்துக்கிட்டு போய் நிக்கறாரு. போன வாரம் ஒரு நாள் அந்தம்மா வண்டிய நிறுத்தி “ஏன் இப்படி நிக்கறீங்க… போய் கார்ப்பரேஷன் வேலையப் பாருங்கன்னு சத்தம் போட்ருக்கு. ஆனா இவரு ஊரு பூரா, அம்மா என்னை அன்பா விசாரிச்சாங்க. வேலையெல்லாம் எப்படிப் போகுதுன்னு கேட்டாங்கன்னு பொய் சொல்லிக்கிட்டு திரியறாரு.
இவரும் கலைராஜனும் சேந்து தியாகராய நகர் பகுதியில அனுமதி இல்லாம கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பது தொடர்பா உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவைத் தொடர்ந்து அங்க இருக்க கடை அதிபர்கள் கிட்ட 12 கோடி ரூபாய் வசூல் பண்ணியிருக்காங்க. தி.நகர்ல ஆம்னி பஸ்களை அனுமதிச்சதுலையும் இந்த ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கு. இந்த நியூஸை போடுவீங்களா உங்க பத்திரிக்கையில ? “
“நான் எங்க, எடிட்டர்கிட்ட கேட்டுப் பாக்கறேன். “ என்று பம்மினான் ரத்னவேல்.
“மச்சான் இந்த நியூஸ் உங்க பத்திரிக்கையில வராது மச்சான். நான் சொல்றேன். ஏன்னா உங்க பத்திரிக்கை அலுவலக கட்டிடமே அனுமதி இல்லாம கட்டுனது. போய் மீசைக்காரரை கேளு. அனுமதி வாங்கிட்டு கட்டுனாரா இல்லையான்னு.. நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமேன்னு அட்டையில போட்டுக்கறதோட சரி. உங்க பவுசு தெரியாதா. சும்மா இருடா “
“அவனை விடு. தலைமைச் செயலக செய்தி இருக்கா ? “என்றான் பீமராஜன்.
“நான் வேலை செய்யறதே அதுக்குப் பக்கத்துல இருக்கற பார்லதானே.. அது இல்லாம இருக்குமா ? “ என்றவாறு கணேசனைப் பார்த்தான். அவர் க்வார்டர் வோட்காவை முடிக்கும் தருவாயில் இருந்தார்.
“இந்த வாரம் தலைமைச் செயலக அரசியல்வாதிகள் பத்தியும் செய்தி கிடையாது. தலைமைச் செயலக அதிகாரிகள் பத்தியும் செய்திகள் கிடையாது “
“வேற யாரைப்பத்திடா… ? “ என்று ஆர்வத்தோடு கேட்டான் பீமராஜன்.
“ரமேஷ்னு ஒருத்தரைப் பத்தி. அடிக்கடி நம்ப கஸ்டமருங்க இந்த ரமேஷ்ன்ற பேரை உச்சரிப்பாங்க. சரி… யாராவது அதிகாரியா இருப்பாருன்னு நெனச்சுக்கிட்டு இருந்தா இவரு பத்திரிக்கையாளர். “
“பத்திரிக்கையாளரா ? “ என்று வியப்படைந்தான் பீமராஜன்.
“ஆமாம் மச்சான். அதுவும் சாதாரண பத்திரிக்கை இல்ல. ஊர்ல இருக்கற அவ்வளவு பேரையும் குறை சொல்ற துக்ளக் பத்திக்கையில இருக்கறவர். அவரு பேரே துக்ளக் ரமேஷ். “
“என்ன பண்றாராம் அவரு… ? “
“என்ன பண்ணலைன்னு கேளு. இந்த ரமேஷுக்கு வேலை என்னன்னா, ஜெயலலிதா தலைமைச் செயலகத்துக்கு வரும்போதெல்லாம் மந்திரிங்களோட சேர்ந்து வழியில நிக்க வேண்டியது. என்னைக்காவது ஒரு முறை அந்த அம்மா, இவரை பக்கத்துல கூப்புட்டு, என்ன ரமேஷ் எப்படி இருக்கீங்கன்னு கேப்பாங்க. அவ்வளவுதான். இதைப் பயன்படுத்திக்கிட்டு இவர் நடத்தற வசூல் இருக்குதே… சொல்லி மாளாது. அதிமுகலதான் என்னைக்கு யார் மந்திரின்றதே நிச்சயமில்லையா. இந்த ஆளைப்பாத்து அப்படி பயப்படுவாங்க மந்திரிங்க.
துக்ளக் ரமேஷ்
கண்ட நேரத்துக்கு மந்திரி அறைக்குள்ள நுழையறது, அங்க இருக்கற பி.ஏக்களை மிரட்றது, மந்திரிங்கக்கிட்ட சொல்லி வேண்டியவங்களுக்கு ட்ரான்ஸ்பர் கேக்கறது, ட்ரான்ஸ்பர் வாங்கிக் குடுத்துட்டு அதை வைச்சு வசூல் பண்றதுன்னு இவரு அட்டகாசம் தாங்க முடியலை.
இப்போ பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குதா.. எந்தெந்த துறையோட மானியக் கோரிக்கை வருதோ.. அந்தந்தத் துறையோட அமைச்சரைப் பாத்து 20 முதல் 50 ஆயிரம் வரை வசூல் பண்ணிக்கிட்டு இருக்காரு. அமைச்சருங்களும், இவரு முதல்வருக்கு நெருக்கமானவர்.. ஏதாவது போட்டுக் குடுத்துடுவாரோன்னு கேக்கறதை குடுக்கறாங்க.
இப்படி மாமூல் வசூல் பண்றது இல்லாம, விளம்பர ஏஜென்சி நடத்தற மாதிரி, பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் தர்ற உரிமையையும் இவரே யாரையும் கேக்காம எடுத்துக்கறாரு. மந்திரிங்க நாளிதழ் விளம்பரம் கொடுக்கும்போது, இவரே அதை வாங்கி பத்திரிக்கைக்கு குடுத்து, கமிஷன் வாங்கிக்கறாரு.. “
“என்னப்பா இவ்வளவு கேவலமானவரா இருக்காரு.. ? “ என்றார் கடைசி ரவுண்டில் இருந்த கணேசன்.
“இது பரவாயில்லண்ணே… போன வாரம் காவல்துறை மானியக் கோரிக்கை நடந்துச்சு. அப்போ சத்யாலயா ராமகிருஷ்ணன்னு ஒரு பத்திரிக்கையாளர் லாபியில உக்காந்திருந்தாரு. அவரைப் பாத்த முதலமைச்சர் அவரை அழைச்சு எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களான்னு ஒரு 10 நிமிஷம் பேசியிருக்காங்க. இது துக்ளக் ரமேஷுக்கு புடிக்கலை. முதல்வர்கிட்ட பேசற ஒரே பத்திரிக்கையாளர் நம்பதான். இந்த ஆளு எப்படிப் பேசலாம்னு பொறாமையில… சட்டசபை செயலர்கிட்ட போயி, லாபியில எதுக்கு பத்திரிக்கையாளர்களை உக்கார அனுமதிக்கறீங்கன்னு புகார் சொல்லி, சபை நடந்துக்கிட்டு இருக்கும்போதே, அவைக் காவலர்களை விட்டு அழைச்சு அவரை வெளியேத்தியிருக்காரு.. “
“ஏம்பா… இவரோட பத்திரிக்கை ஆசிரியர் சோ… வாய் கிழிய பேசுவாரே… ஆனா இப்படிப்பட்ட ஊழல் பேர்விழியை வச்சுருக்காரே…. ? என்றார் கணேசன்.
“வாய் கிழிய பேசற சோவுக்கு ஏத்த ஜால்ராவா இருக்கறதாலதான் இந்த மாதிரி ஆளை அனுமதிச்சுக்கிட்டு இருக்காரு. ஆனா இவரை நம்பி பணம் குடுக்கறாங்க பார் மந்திரிங்க.. அவங்களைச் சொல்லணும்.“
“ராஜ்யசபா எம்.பி. பதவி நெறய்ய பேருக்கு முடிஞ்சுதே.. அடுத்து யாருக்கு அதிமுகவுல சீட் கிடைக்கும் ? “ என்று கேட்டுக் கொண்டே பீர் பாட்டிலை திறந்தான் வடிவேலு.
“அதிமுகவுல மைத்ரேயனுக்கு இரண்டாவது வாய்ப்பு உறுதி. முன்னாள் டிஜிபி அலெக்சாண்டரும், இன்னொரு முன்னாள் டிஜிபி நட்ராஜும் எப்படியாவது ராஜ்ய சபா எம்.பி ஆயிடலாம்ன்ற கனவுல இருக்காங்க. ரெண்டு பேருமே, எனக்கு கண்டிப்பா சீட் கிடைக்கும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. “
“கெடைக்குமா என்ன ? “என்று தமிழைப் பார்த்து சந்தேகத்தோடு கேட்டான் வடிவேலு.
“ஆசைப்படுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா என்ன ? “ என்று சொல்லிவிட்டு, தொடர்ந்தான் தமிழ்.
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் பலத்த மாற்றங்கள் இருக்கும். பல தலைகள் உருளும்னு சொல்றாங்க.
அடுத்து காவல்துறை செய்திகள். உளவுத்துறையில இருக்கற நம்ப கஸ்டமர் பல தகவல்களை சொன்னார். சென்னை மாநகர உளவுத்துறை சரிவர மேற்பார்வை செய்யப்படறதில்லையாம். சென்னை நகரம் முழுக்க உளவுத்தகவல்களை சேகரிக்க வேண்டிய காவலர்களும் தலைமைக் காவலர்களும், ஃபீல்டுக்கே போறதில்லையாம். பெரும்பாலான தகவல்களை போன்லயே கேட்டு சொல்லிட்டு கமிஷனர் ஆபீஸே கதின்னு கெடக்கறாங்களாம். கமிஷனர் ஆபீஸ்ல வர்ற புகார்கள் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துல அவர்கள் தலையிட்டு வர்றாங்க. இதையெல்லாம் மேற்பார்வை செய்ய வேண்டிய ஜார்ஜ், உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜுவை முழுமையா நம்பிக்கிட்டு இருக்காரு. ஆனா, அவரு ஜார்ஜைப் பத்தியே உளவு பாத்து, ஜாங்கிட் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காரு.. “
“ஏம்பா… இவரு ஜார்ஜுக்கும், ஜாங்கிட்டுக்கும் ஆகாது. நமக்கு நம்பிக்கையான ஆளுன்னுதானே ஜார்ஜ், வரதராஜுவை திருநெல்வேலியில இருந்து கொண்டு வந்தார் ? நீ என்ன தலைகீழா சொல்ற ? “
“கொண்டு வந்தார்தான். ஆனா, வரதராஜுவுக்கு ஜாங்கிட்கிட்ட இருக்கற விசுவாசம் இன்னும் அப்படியே இருக்கு. ரெண்டு பேரும் ரொம்ப நாள் புறநகர்ல வேல பாத்துருக்காங்கள்ல ?
“ஆமா எப்போ பாத்தாலும் ஜாங்கிட் பத்தியே தகவல் சொல்றியே… ஏன் உன் கஸ்டமருக்கு மத்த அதிகாரிங்களப் பத்தி தெரியாதா ? “என்றான் பீமராஜன்.
“கஸ்டமர் எல்லாத்தைப் பத்தியும்தான் சொல்றாரு.. ஆனா இவரைப் பத்தி எழுதத்தான் எந்த பத்திரிக்கையும் தயாரா இல்லையே.. அதனாலத்தான் நீங்களாவது எழுதுவீங்கன்னு உங்கக்கிட்ட சொல்றேன். ஜாங்கிட்டைப் பத்தி எந்தத் தகவலும் எந்தப் பத்திரிக்கையிலும் வரமாட்டேங்குதே…
இப்போ பாருங்க போன வாரம், மு.க.ஸ்டாலின், ஜாங்கிட்டை சந்திச்சு பேசியிருக்காரு. “
“அவரு எதுக்குடா ஜாங்கிட்டை சந்திக்கிறாரு.. ? “
“அவரும் ஜாங்கிட்டும் எவ்வளவு நெருக்கம்னு வெளி உலகத்துக்கு தெரியாது. ஸ்டாலினோட பினாமி ராஜா சங்கரும், ஜாங்கிட்டும் ரொம்ப ரொம்ப நெருக்கம். ஜாங்கிட்டோட ஏராளமான பணம் ராஜா சங்கர் மூலமா வெளிநாடுகள்லயும், இங்கயே ராஜா சங்கரோட தொழில்கள்ளயும் முதலீடு செய்யப்பட்டிருக்கு. எப்படி அந்த தொடர்பு விட்டுப் போகும் ? “
“பிசினெஸ் பார்ட்னர்ஸ்னு சொல்லு. சரி இப்போ எதுக்கு சந்திச்சாங்க ? “
“ஸ்டாலின் ஜாங்கிட்கிட்ட, தன்னோட பையன் பேர்ல இருக்கற கார் இறக்குமதி வழக்கிலேர்ந்து எப்படியாவது உதயநிதியை காப்பாத்தனும்னு சொல்லியிருக்காரு. ஜாங்கிட்டும், ஒண்ணும் கவலைப் படாதீங்க. சிபிஐயில சென்னையிலயும், டெல்லியிலயும் எனக்கு நெறய்ய அதிகாரிகளைத் தெரியும். என்னை மீறி ஒன்னும் நடக்காது. உங்க வழக்கறிஞர் இது சம்பந்தமா கோர்ட்ல ஏதாவது பேப்பர் தாக்கல் பண்றதுக்கு முன்னாடி, என்னை கன்சல்ட் பண்ணச் சொல்லுங்க. சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரும் எனக்கு நல்லா பழக்கம்னு சொல்லியிருக்காரு. “
“சிபிஐயில இவரு சொன்னா கேப்பாங்களா என்ன ? “
“ஏம்ப்பா.. அப்படி சொல்லிக்க வேண்டியதுதான்.. சிபிஐயில வேலை பாக்கற அதிகாரிங்க இவருக்கு ஜுனியர் அதிகாரிங்க. காலையில பத்து மணிக்கு போயி பாத்துட்டு, ஒரு பத்து நிமிஷம் மொக்கை போட்டுட்டு, வெளியில வந்து, ஸ்டாலினுக்கு போன் பண்ணி எல்லாத்தையும் பேசிட்டேன். ஒண்ணும் கவலைப்படாதீங்கன்னு சொன்னா ஸ்டாலினுக்கு என்ன தெரியும் ? “
“அப்புறம்.. அடுத்து “ என்று கேட்டு விட்டு காலி பாட்டிலை பார்த்தார் கணேசன்.
“என்னண்ணே…. சரக்கு பத்தலையா.. ? “
“ஆமாம்பா.. ஒரு ஹாஃப் வாங்கிட்டு வந்துருக்கலாம்… சப்புனு இருக்கு “ என்று அலுத்துக் கொண்டார்.
“இருங்க வர்றேன் “ என்று சொல்லி விட்டு மொட்டை மாடியில் இருந்து இறங்கிய தமிழ் சிறிது நேரத்தில் இன்னொரு க்வார்டர் ரமானோவோடு வந்தான்.
“சூப்பர்பா நீ…. ரொம்ப நன்றிப்பா “ என்றவாறு வாஞ்சையோடு ஒரு குழந்தையை வாங்குவது போல அதை வாங்கி மடியில் வைத்துக் கொண்ட கணேசன், சரி அடுத்த மேட்டருக்கு வாப்பா “ என்றார்.
“ராமஜெயம் கொலை வழக்கை தமிழக அரசே, சிபிஐக்கு மாத்தி உத்தரவு போடப்போகுதாம்ணே… சிபி.சிஐடிக்கு மாத்தி ஒரு வருஷமா எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால, முதல்வருக்கு, திமுகவிலயே உள்ளவங்க போலீசோட சேந்து இந்த வழக்கை ஒழுங்கா விசாரிக்க விடாம தடுக்கறாங்கன்னு நெனைக்கறாங்க. அதனால அந்த வழக்கை சிபிஐக்கு மாத்தி உத்தரவு போடலாமான்ற யோசனையில இருக்காங்க
இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கையாள்வதில உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரிக்கும், டிஜிபி ராமானுஜத்துக்கும் முட்டிக்கொண்டு இருக்கறதாவும் சொன்னாரு நம்ப ஆளு. “
“அவ்வளவுதானா போலீஸ் நியூஸ் “ என்னறான் பீமராஜன்.
“சேஷசாய் மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையரா இருந்தப்போ பல வழக்குகள்ல வசூல் வேட்டை நடத்தியிருக்காரு. ஆனா சொன்னபடி அவரால பல விஷயங்களை செஞ்சு குடுக்க முடியலை. அவருக்கிட்ட பணம் குடுத்து ஏமாந்தவங்க அவரை இப்போ தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்காங்களாம் “
“திமுக செய்தி ? “ என்றான் ரத்தினவேல்.
“கருணாநிதி ஆ.ராசாவைக் கூப்பிட்டு, உடன்பிறப்பே… கொஞ்ச நாளைக்கு மன்மோகன் சிங்கையும், சிதம்பரத்தையும் விமர்சிக்கறதை நிறுத்தி வையி… தயாளு அம்மாள் சாட்சி சொல்ல வரவேண்டியதில்லைன்னு போட்ட மனுவில சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு குடுக்கற வரைக்கும் வாயைத் தொறக்காத உடன்பிறப்பேன்னு சொல்லியிருக்காரு. “
“உன் வக்கீல் கஸ்டமர் வந்தாரா ? “ என்று தமிழ் வாயைப் பார்த்தான் வடிவேலு.
“வந்தாரு வந்தாரு.. நீதிபதிகள் தேர்வு பத்திதான் ரொம்ப பரபரப்பா வழக்கறிஞர்கள் மத்தியில விவாதம் ஓடிக்கிட்டு இருக்கு.”
”அதான் போன வாரமே யார் யாரெல்லாம் நீதிபதிகளாகப் போறாங்கன்னு சொன்னியே.. அதுல ஏதாவது மாற்றம் இருக்கா ? ”
”அந்த லிஸ்ட்ல மாற்றம் இல்ல. ஆனா அந்த லிஸ்ட்ல இருக்கற ஆளுங்க பத்திதான் ஒவ்வொரு செய்தியா கசிஞ்சுக்கிட்டு இருக்கு.
முனிருத்தீன் ஷெரீஃப் னு ஒருத்தர் பேரு பரிந்துரை செய்யப்பட்டிருக்கு. அவருக்கு முஸ்லீம் அடிப்படைவாதிகளோட நெருக்கமான தொடர்பு இருக்குனு சொல்றாங்க. சவுதி அரேபியாவுல இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க்னு ஒரு வங்கி இருக்கு. அந்த வங்கி சவுதியில இஸ்லாமிய அடிப்படைவாதிகளால நடத்தப்பட்ற வங்கி. அந்த வங்கியோட தென்னிந்தியாவோட உறுப்பினரா இருக்கார். இந்திய தேசிய லீக் கட்சியில நிர்வாகியா இருக்கறார். முஸ்லீம்கள்ல பல பேர், இந்திய சட்டத்தை ஏத்துக்காம இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் படிதான் நடக்கனும்னு சொல்றாங்க. ஷரியத் சட்டத்தின்படி, சென்னையிலேயே ஷரியத் நீதிமன்றங்கள் ரகசியமா நடந்துக்கிட்டு இருக்கு. சென்னை அண்ணா சாலையில புகாரி ஹோட்டல் எதிரில் இப்படி ஒரு ஷரியத் கோர்ட் நடக்கறது வழக்கம். இந்த நீதிமன்றம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்ல நடக்கும். அந்த ஷரியத் கோர்ட்ல இந்த முனிருத்தீன் ஷெரிப் உறுப்பினரா இருக்கார். தமிழ்நாடு முஸ்லீம் சர்வீசஸ் அமைப்புன்னு ஒரு அமைப்பு இருக்கு. இந்த அமைப்பும் ஒரு அடிப்படைவாத அமைப்புதான். இந்த அமைப்போட பொதுச் செயலாளராவும் இருக்கார் முனிர் ஷெரிப்.
இந்திய ஜனநாயக முஸ்லீம் கட்சின்னு ஒரு கட்சியை அக்ரம் கான்னு ஒரு நபர் நடத்திக்கிட்டு இருக்கார். அந்த அக்ரம் கான் சென்னை நகரத்துல கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம் எல்லாம் பண்றவர். இவர் மேல கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில இருக்கு. இந்த அக்ரம் கானோட கட்சியிலயும் முனிர் ஷெரிப் உறுப்பினரா இருந்துருக்கார். இதைத் தவிர்த்து இன்னும் பல தகவல்களை மத்திய உளவுத்துறை இவரைப் பத்தி சேகரிச்சிருக்கு. அதனால இவர் நீதிபதியாகறது சந்தேகம்தான்னு சொல்றாங்க.”
”மீதி பேரெல்லாம் ஓக்கேவா தமிழ் ? ” என்றான் பீமராஜன்.
”இருக்கற பேர்லயே சிறந்தவர் தங்கசிவம் தான்”
”ஏன் அவர் நல்ல வக்கீலா ? ”
”ஆமா.. நல்ல வக்கீல்தான். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்பான வழக்குகள்ல மட்டும்தான் ஆஜராவார். அவருக்கு முழு நேரத் தொழிலே ரியல் எஸ்டேட்தான். கிழக்குக் கடற்கரைச் சாலையில நீச்சல் குளத்தோடு கூடிய ஒரு பங்களா வெச்சுருக்கார். அந்த பங்களாவுல, முக்கிய பிரமுகர்களை கவனிக்கறதுதான் இவரோட வேலை. ”
”ஏம்பா… இதை விட நீதிபதியாகறதுக்கு வேற என்ன தகுதி வேணும் ? ”
”அட கம்முனு இருங்கண்ணே. கிண்டல் பண்ணிக்கிட்டு. பல நீதிபதிகளுக்கு இவர் ப்ரோக்கராவும் செயல்பட்டிருக்கார்னு தகவல் சொல்றாங்க. இந்த தங்கசிவத்தோடு நெருங்கிய நண்பர், சைதாப்பேட்டையில் இருக்கறார் அவர் பேசு கிருஷ்ணன். அவர் நாகர்கோயில் மாவட்டத்தைச் சேர்ந்தவரு. இந்த கிருஷ்ணன், சைதை துரைசாமியோட ஆளு. சைதை துரைசாமியோட நல்லவங்க சகவாசம் வைக்க முடியுமா ?”
”இப்படிப்பட்ட நபரை எதுக்காக பரிந்துரை பண்ணாங்க.. யார் பரிந்துரை பண்ணாங்க ? ”
”தலைமை நீதிபதி கூட இப்போ முதல் டிவிஷன் பென்ச்ல இருக்கற நீதிபதி பால் வசந்தகுமார்தான் இவரை பரிந்துரை பண்ணியிருக்கார். இதுல கொடுமை என்னன்னா, பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள்லயே இவர்தான் சின்ன வயசு 46 வயசு. வழக்கமா சென்னை உயர்நீதிமன்றத்துல 50 வயசுக்கு முன்னாடி யாரையும் நீதிபதியாக்கற வழக்கம் கிடையாது. ஆனா இவர் 46 வயசுலயே பரிந்துரை செய்யப்பட்டிருக்கார். இப்போ நீதிபதியானா நிச்சயமா உச்சநீதிமன்ற நீதிபதியாவார்.”
”நீதிபதி பால் வசந்தகுமார் நல்ல நீதிபதியாச்சே.. அவர் எதுக்காக இப்படிப்பட்ட ஒரு நபரை பரிந்துரை பண்றார் ? ”
நீதிபதி பால் வசந்த குமார்.
”என்னண்ணே புரியாத மாதிரி கேக்கறீங்க… ? தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது இல்லையா ? உயர்நீதிமன்றத்துல கேலக்சின்னு ஒரு அமைப்பு இருக்கு. இந்த அமைப்பு நாடார்களுக்கான அமைப்பு. நாடார் சமூகத்தைச் சேர்ந்தவங்க அத்தனை பேரோட நலன்களையும் இந்த அமைப்பு கவனிச்சுக்கும். நீதிபதி பால் வசந்தகுமாரும் கேலக்சி மெம்பர். தங்கசிவமும் கேலக்சி மெம்பர். ”
”இதுக்காகவா தங்கசிவத்தை நீதிபதியாக்கனும் ? ”
”தங்கசிவம் எப்படிப்பட்ட நபர்னு சென்னை உயர்நீதிமன்றம் முழுக்க தெரியும். இந்த விஷயம் நீதிபதி பால் வசந்தகுமாருக்கு மட்டும் தெரியாமப் போயிடுமா என்ன ? உயர்நீதிமன்றத்துல பேசிக்கிற விஷயம் என்னன்னா, நீதிபதி பால் வசந்தகுமாரோட மகள் மருத்துவக் கல்லூரியில படிக்கிது. பல்கலைக்கழகம் கொண்டு வந்த திருத்தங்களின்படி, நீதிபதியோட மகள் உரிய மதிப்பெண்களைப் பெறலை. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்துல அந்தப் பெண்ணும், வேறு சில மாணவர்களும் வழக்கு தொடர்ந்தாங்க. அந்த வழக்கு நீதிபதி ராமசுப்ரமணியத்தக்கிட்ட வந்துருக்கணும். ஆனா, அந்த வழக்கு நிதிபதி ஜோதிமணிக்கிட்ட விசாரணைக்கு வர்ற மாதிரி ஏற்பாட பண்ணதா சொல்றாங்க. ”
”அவரும் நீதிபதிதானே… அவர் விசாரிச்சா என்ன ? ”
”நீதிபதி ஜோதிமணியும் கேலக்சி உறுப்பினர். அதுதான் அதுல சிறப்பு. அது மட்டுமில்ல. அந்த வழக்குல, நீதிபதி பால் வசந்த குமாரின் மகளுக்கு தங்கசிவம்தான் வழக்கறிஞர். ”
”சரி.. இதையெல்லாம் உளவுத்துறை விசாரிக்காதா ? இதையெல்லாம் விசாரிச்ச உளவுத்துறை அதிகாரிங்க பேசிக்கிட்ட விஷயத்தைக் கேட்டுட்டுத்தானேண்ணே உங்ககிட்ட சொன்னேன். நான் பார்ல வேலை செய்யறேன். எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் ? ”
”தம்பி.. எனக்கு கொஞ்சம் அதிகமாயிடுச்சு.. நான் போகட்டுமா.. ? ”என்றார் கணேசன்.
”வாங்கண்ணே எல்லாருமே போலாம்… ரொம்ப லேட்டாயிடுச்சு…” என்று அனைவரும் உறங்கச் சென்றனர்.
Why now a days no டாஸ்மாக் தமிழ் ?