“மின்வெட்டு நாளில் இன்று மின்சாரம் போல வந்தாயே…..“ என்று பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“வாய்யா வா…. என்ன லவ் மூட்ல இருக்கற போலருக்கு ? “
“எனக்கு ஏது லவ்வு ஜவ்வெல்லாம்…. ? நைட் 11 மணி வரைக்கும் பார்ல மல்லுக்கட்டிட்டு வெளியில வரும்போது எந்த ஃபிகர் எனக்காக உக்காந்திருப்பா…. ? வாரத்துல ஏழு நாளும் வேலை. நானா பாத்து லீவ் எடுத்தாத்தான் உண்டு. வயித்தெரிச்சலை கௌப்பாதீங்கப்பா…. நான் என்ன உங்களை மாதிரி பத்திரிக்கை ஆபீஸ்லயா வேலை பாக்கறேன்.. பொண்ணுங்களை துரத்தி துரத்தி தொல்லை பண்ணி, செருப்பால அடிக்கற வரை தொந்தரவு பண்ணி, கம்ப்ளெயின்ட் குடுத்து, அரெஸ்ட் ஆயி அப்புறமும் வேலை பாக்கறதுக்கு ? “
“என்னய்யா வந்ததும் வராததுமா டென்ஷன் ஆகற… சன்டிவி ராஜாவத்தான் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களே… இன்னும் வேலைபாக்கறான்னு சொல்ற ?“ என்றார் கணேசன்.
“சஸ்பென்ட் செஞ்சா என்ன ? வீட்ல உக்காந்துக்கிட்டே வேலை பாக்கறான். எல்லாம் போன்ல நடக்குதுன்ணே…“
“ஏம்ப்பா கேடி ப்ரதர்ஸ் பத்தி உனக்குத் தெரியாதா… அவனுங்களுக்கு ஏதுப்பா சூடு சொரணையெல்லாம். உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணுனவனுங்கதானே… திமுக காசுல சன் டிவி ஆரம்பிச்சுட்டு, அந்த திமுகவுக்கு எதிராவே வேலை பாத்ததில்லையா இவனுங்க ? அழகிரியை ரவுடின்னு நியூஸ் போட்டுட்டு, அந்த அழகிரி கூட பல்லை இளிச்சுக்கிட்டு நிக்கலையா இவனுங்க ? இவனுங்களைப் பத்தி ஏம்பா பேசி டைம் வேஸ்ட் பண்ற ? “
“இல்லன்ணே… கேப்டன் டிவியிலயும் இதே மாதிரி ஒரு பஞ்சாயத்து. அங்க வேலை பாக்கற பொண்ணுக்கிட்ட அரவிந்த்னு ஒரு எடிட்டர் ராஜா மாதிரியே எஸ்எம்எஸ் அனுப்பறது, லவ் பண்றேன்னு சொல்றதுன்னு திரிஞ்சுக்கிட்டு இருந்திருக்கார். அந்தப் பொண்ணு இந்த வேலை என்கிட்ட வச்சுக்கிட்டன்னா செருப்பு பிஞ்சுடும்னு சொல்லிடுச்சு.
ஆனாலும் நம்ப அரவிந்த் விடல. தொடர்ந்து அந்தப் பொண்ணுக்கு தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருந்துருக்கார். ஒரு கட்டத்துல அந்தப் பொண்ணு தன் வழிக்கு வரலன்னதும், அந்தப் பொண்ணை எப்போப்பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்கறது. ஒழுங்கா வேலை செய்யலன்னு சொல்றது. கம்ப்யூட்டர் முன்னாடி அந்தப் பொண்ணு உக்காந்துருந்தா, ஆபீஸ் செலவுல பேஸ்புக் பாக்கறியான்னு திட்றதுன்னு தொடர்ந்து தொந்தரவு பண்ணியிருக்கார். ஒரு கட்டத்துல பொறுக்க முடியாம அந்தப் பொண்ணு, நேரா சுதீஷ்கிட்டயே விஷயத்தை கொண்டு போயிடுச்சு. விசாரணை நடத்தி உண்மை என்னன்னு கண்டு பிடிச்சதும், உடனே அந்த ஆளை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அவன் மனுஷன்.
ஆனா, பெரிய கேடி கலாநிதி, சன் டிவி ராஜா விஷயத்துல இன்னும் விசாரணைன்னு மாவாட்டிக்கிட்டு இருக்கார். இது வரைக்கும் உருப்படியா ஒரு நடவடிக்கை எடுக்கல. அதான் கோபம்.“ என்று சொல்லி விட்டு டாஸ்மாக் தமிழ் அவனே வோட்கா பாட்டிலை திறந்து கணேசனிடம் கொடுத்தான்.
“மச்சான் அண்ணனுக்கு வாங்கிட்டு வந்துட்ட… எங்களுக்கு பீர் எங்க ?“ என்றான் பீமராஜன்.
“கீழ ஃப்ரீஸர்ல வச்சுருக்கேன் மச்சான். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துட்டு வா “ என்று காலை நீட்டி அமர்ந்தான் தமிழ்.
“சொல்லு மாமா என்னென்ன தகவல் கெடச்சுது ? “ என்று ஆர்வமாகக் கேட்டான் வடிவேலு
“இப்போதைக்கு எப்படியாவது கனிமொழியை எம்.பியாக்கிடனும்ன்றதுல கருணாநிதி குறியா இருக்கறார்.“
“கனிமொழி கடலூர் இல்ல தூத்துக்குடியில போட்டியிடப்போறாங்கன்னு திமுக வட்டாரத்துல பேச்சு அடிபடுதே“ என்று உள்ளே புகுந்தான் பீமராஜன்.
“தேர்தல் அடுத்த வருஷமா, இந்த வருஷமான்னு தெளிவாத் தெரியலை மச்சான். ஆனா, எம்.பின்ற அந்தஸ்து, கனிமொழி 2ஜி வழக்குலேர்ந்து வெளியில வர்றதுக்கும், குடும்பத்துக்குள்ள சண்டையைத் தவிர்க்கறதுக்கும் உதவும்னு நம்பறார் கலைஞர். கனிமொழி இப்போ எம்.பியா இருக்கறதால, கட்சியில பதவி வேணும்னு ரொம்ப வலியுறுத்தல. ஆனா, எம்.பி பதவி போயிடுச்சுன்னா, சிஐடி காலனியில தலைவர் காலே வைக்க முடியாது. காகிதப்பூ கதாநாயகி கலைஞரை ஒரு வழி பண்ணிடுவார். இதையும் மனசுல வச்சு ரொம்ப யோசிக்கிறார். “
“சரி ராஜ்யசபா எம்.பியாக்கறதுக்கு திமுகவுக்கு 34 எம்எல்ஏ வேணுமே.. அது இப்போ இல்லையே… ? “ என்றான் வடிவேலு.
“தம்பி விஜயகாந்தின் கட்சியை ஜெயலலிதா அழிக்கப்பார்க்கிறார்னு கூட்டத்துல பேசுனாரே ஞாபகம் இல்லையா ? விஜயகாந்த் கட்சி அழியறத, எல்லாரையும் விட அதிகம் விரும்பறவர் கலைஞர்தான். அவர் திடீர்னு கேப்டன் மேல பாசத்தோடு இப்படிப் பேசறது, உள்குத்தோடதான்னு உங்களுக்கு புரியலையா ? “
“சரி… மகள் பாசத்தை விட மச்சான் பாசம் பெரிசில்லையா தமிழ் ? மச்சானை எம்.பியாக்கலன்னா கேப்டன் வீட்ல நிம்மதியா சோறு சாப்பிட முடியுமா ? “ என்று தன் பங்குக்கு வரலாற்று சிறப்பு மிக்க சந்தேகத்தை எழுப்பினான் ரத்னவேல்.
“மகளை எம்.பியாக்கலன்னா கலைஞருக்கு சிஐடி காலனியில சோறு இல்ல. மச்சானை எம்.பியாக்கலன்னா கேப்டனுக்கு வீட்ல சோறு இல்ல… என்னதான் பாஸ் பண்றது ? “
“சரி உதயநிதி ஏன் ஹம்மர் காரை திடீர்னு சரண்டர் பண்ணாரு ? “ என்று அவன் சந்தேகத்தை கிளப்பினான் பீமராஜன்.
“சிபிஐ அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டுக்கு போயி, இந்த காரை கைப்பற்றுனப்போ, தாம் தூம்னு குதிச்சாங்க. அதுக்குப் பிறகு, தொடர்ந்து உதயநிதியை சிபிஐ விசாரிக்கும்னு தெரிஞ்சு, ஸ்டாலின் ரொம்பவே பயந்து போயிட்டாரு. தன் மகனுக்கு ஏதாவது ஆயிடாம அவரை காப்பாத்துங்கன்னு, உயர் உயர் அதிகாரி ஜாங்கிட்கிட்ட பேசுனதைப் பத்தி நாம ஏற்கனவே விவாதிச்சிருக்கோம். இனிமேலும் இந்தக் கரை வெச்சுருந்தா, சிக்கல்னு முடிவு பண்ணி காரை ஒப்படைக்கறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. கருணாநிதியை விட தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதில் ஸ்டாலின் விஞ்சி நிற்கிறார். “
“சூப்பர் டைட்டில் மாமா… குடும்பத்தை காப்பாற்றுவதில் விஞ்சி நிற்பது கலைஞரா ஸ்டாலினா ன்ற தலைப்புல பட்டிமன்றம் வச்சா சூப்பரா இருக்கும்“ என்றான்
“ஒரு அணிக்கு தலைவர் சுப.வீரபாண்டியன். மற்றொரு அணிக்கு தலைவர் குஞ்சாமணி“ என்றான் தமிழ்.
“நடுவர் யாரு ? “ என்றார் இரண்டாவது ரவுண்டை முடித்திருந்த கணேசன்.
“நடுவர் வேற யாருன்ணே… திமுக நிலைய வித்வான் லியோனிதான். “
“சரி.. அதிமுகவுல என்ன நடக்குதுன்னு சொல்லுப்பா“ என்றார் கணேசன்.
“மச்சான் அண்ணன் ரெண்டு ரவுண்டு முடிச்சுட்டாரு.. இந்நேரம் பீர் கூலிங் ஆயிருக்கும். கீழ போயி எடுத்துட்டு வா“ என்று பீமராஜனை பார்த்து சொல்லி விட்டு, தொடர்ந்தான் தமிழ்.
“சட்டசபை கூட்டத்தொடர் முடிஞ்சுடுச்சு. இனி எப்போ வேணாலும் அமைச்சரவை மாற்றம்னு எங்கப் பாத்தாலும் கிலி பிடிச்சு அலையறாங்க. அப்புறம் நாம போனவாட்டி துக்ளக் ரமேஷ்னு ஒரு பத்திரிக்கையாளரைப் பத்தி பேசுனோம் இல்லையா.. இந்தத் தகவல் ஒரு சில அமைச்சர்கள் காதுக்கு போயிருக்கு. அவங்க அந்த ரமேஷ் பத்தி மேலும் விவாதிச்சுருக்காங்கன்னு அவங்க பி.ஏ சொன்னார். அவர் நெறய்ய தகவலை சொல்லுவார்“
“சரி என்ன சொன்னாருன்னு சொல்லுய்யா.. “ என்றார் பொறுமை இழந்த கணேசன்.
“அண்ணே தெனமும், இந்த ரமேஷுக்கு விலை உயர்ந்த ஸ்காட்ச் பாட்டில் ஒன்னு குடுத்துடனுமாம். ஸ்காட்ச் வாங்கித் தந்தா நமக்கு வேண்டியதை பெரிய எடத்துல சொல்லுவாருன்னு பல அதிகாரிங்க இந்த ஆளு கேக்கறத வாங்கித் தர்றாங்க. சென்னை மாநகரத்தோட கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், சிறைத்துறை கூடுதல் டிஜிபி திரிபாதியெல்லாம் ரமேஷுக்கு நெருக்கமான நண்பர்கள். இதையெல்லாம் விட முக்கியமா, மாசா மாசம், ரமேஷுக்கு சம்பளம் மாதிரி மாமூல் குடுக்கறது யார் தெரியுமா ? அண்ணன் சைதை துரைசாமிதான்.
எப்போதும் பணத்தின் மேலதான் ரமேஷுக்கு. இப்போ அதிமுக ஆட்சியில மட்டும் ரமேஷ் வசூல் ராஜாவா இல்ல… கடந்த ஆட்சியில உயர்கல்வித்துறை அமைச்சரா இருந்த பொன்முடிகிட்ட இவர் வசூல் செஞ்ச தொகை மட்டும் பல லட்சங்கள் இருக்கும்னு சொல்றாங்க. பொன்முடியைத் தவிர்த்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கிட்டயும் ஏகப்பட்ட தொகையை வசூல் செஞ்சதா ஐ.பெரியசாமி பி.ஏ ராஜா அடிக்கடி சொல்லுவாராம் பாஸ். “
“இவரை அதிமுக ஆட்சியோட காமராஜ்னு சொல்லலாமா தமிழ் ? “ என்று ஒரு முக்கிய சந்தேகத்தை எழுப்பினான் வடிவேலு.
“காமராஜை யார் கூடவாவது ஒப்பிட முடியுமா மச்சான்.. அவருக்கு நிகர் அவர் மட்டுமே. இந்த மாதிரி மாமூல் வாங்கறது, ஓசியில சரக்கு வாங்கறதெல்லாம் சாதாரண ஆளுங்க செய்யறதுப்பா. காமராஜோட ரேஞ்சே வேற. சாதிக் பாட்சா மட்டும சாகாம இருந்திருந்தா, காமராஜ் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆயிருப்பார்… என்ன பண்றது.. சரி விஷயத்துக்கு வர்றேன் மச்சான்.
இந்த துக்ளக் ரமேஷுக்கு நெருக்கமான நண்பரா இருந்தவரு மணிச்சுடர் ராமதாஸ். இவரை, ஆற்காடு வீராசாமியோட அடிமைன்னு சொன்னா அது மிகையாகாது. ஆற்காடு வீராசாமிக்காகவே, கடந்த ஆட்சியில எதிரொலின்னு ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சு நடத்தினார். அந்த எதிரொலி பத்திரிக்கையோட மொழி, சரோஜா தேவியை விட மோசமா இருக்கும். ஜெயலலிதாவை அவ்வளவு தரம்தாழ்ந்து, மோசமா விமர்சிச்சு எழுதுவாங்க. அந்தப் பத்திரிக்கை நடத்திக்கிட்டிருந்த மணிச்சுடர் ராமதாஸுக்கு, சென்னை தூர்தர்ஷன்ல வேலை பாத்த மாதிரி பென்ஷன் வாங்கித்தந்தது, நம்ப ரமேஷ்தான்.
ஜெயலலிதாவோடு பேசிக்கொண்டிருக்கும் துக்ளக் ரமேஷ்
அது மட்டும் இல்லாம, மணிச்சுடர் ராமதாஸோட மகள் இளவரசிக்கு, செய்தி விளம்பரத்துறையில ஒரு பதவி வாங்கிக் கொடுத்திருக்கார் ரமேஷ். அந்த இளவரசி, செய்தி ஒளிபரப்புத் துறை சார்பா, வணிகவரித்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியா இருக்காங்க. “
“வேலை வாங்கித் தர்றது நல்ல விஷயம்தானே தமிழ் ? “ என்றார் கணேசன்.
“வேலை வாங்கித் தர்றது நல்ல விஷயம்தான்.. ஆனா யாருக்கு வாங்கித் தர்றோம்னு இருக்குல்ல.. ? ஜெயலலிதாவை விமர்சனம் செய்ய எல்லாருக்கும் உரிமை இருக்கு. ஆனா எதிரொலி பத்திரிக்கை எழுதியதையெல்லாம் எழுத்து வகையிலயே சேத்துக்க முடியாது. அப்படி தரக்குறைவா ஜெயலலிதாவை விமர்சனம் செய்த ஒரு நபரோட மகளுக்கு வேலை வாங்கித் தர்றதை எப்படிண்ணே ஏத்துக்க முடியும் ? “
“இவன் இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா ? “
“அது மட்டும் இல்லன்ணே. இவன் வேலை செய்யற பத்திரிக்கையான துக்ளக் ஆசிரியர் “சோ”[வுக்கு வேணும்னு சொல்லி, பல காவல்துறை உயர் அதிகாரிகள்ட சொல்லி, பர்மா பஜார்லேர்ந்து ஸ்காட்ச் பாட்டிலும் வாங்கியிருக்கார் ரமேஷ். “
“சரி இந்த வார ஜாங்கிட் செய்தி சொல்லு மச்சான்.. “ என்று தமிழைப் பார்த்து கண்ணடித்தான் பீமராஜன்.
“அது எப்படி நான் வாராவாரம் ஜாங்கிட் செய்தி சொல்லுவேன்னு நெனைக்கிற“
“அந்த ஆளு என்ன பண்ணாலும் உனக்குதானே மச்சான் மொதல்ல தெரியுது ? சும்மா நடிக்காத. சொல்லு “
“ஜாங்கிட் தொழில் அதிபர் ஆகலாம்னு முடிவு பண்ணியிருக்கார் மச்சான்“
“என்ன மச்சான் சொல்ற.. ? அவர் காவல்துறை உயர் அதிகாரிதானே… என்ன திடீர்னு தொழில் அதிபர் ஆயிட்டாருன்ற ? “
“அவர் மகன் சவாய் ஜாங்கிட் பேர்ல ஒரு கம்பெனி ஆரம்பிக்கறதுக்கு ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில இருக்கார். “
“அவரு எதுக்கு மச்சான் மகன் பேர்ல கம்பெனி ஆரம்பிக்கிறார் ? “
“சம்பாதிச்ச லஞ்சப்பணத்தையெல்லாம் வெள்ளையாக்க வேணாமா ? அதுக்குத்தான் ஆரம்பிக்கிறார். அவருகிட்ட எப்படிப்பாத்தாலும் 500 கோடியாவது இருக்கும்றதுதான் காவல்துறை வட்டாரத்துல இருக்கற பேச்சு“
“அவருக்கிட்ட அவ்வளவு இருக்குமா ? “ என்ற வியப்போடு கேட்டான் வடிவேலு.
“அவரை யாருன்னு நெனைச்ச… ? சமீபத்துல சிபிஐ வெளிநாட்டு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பா விசாரணை நடத்தினாங்க தெரியுமா ? அந்த விசாரணையில பல முக்கிய பிரமுகர்களோட கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதுல பறிமுதல் செய்யப்பட்ட கார் ஸ்டாலினோட பினாமி, ராஜா சங்கரோடது. அந்த ராஜா சங்கரோட கார் பறிமுதல் செய்யப்பட்டதும் துடிச்சார் பாருங்க ஜாங்கிட்… வேலையே போயிருந்தா கூட அப்படித் துடிச்சிருக்க மாட்டார். அப்படி துடிதுடிச்சுப் போயிட்டார். அவருக்கும் ராஜா சங்கருக்கும் ஏகப்பட்ட பண பரிவர்த்தனைகள் இருக்கு. பல பேருக்கு இது தெரியாது. “
“சரி…. இவ்வளவு மோசமான ஆளா இருந்தும் இவரு மேல இந்த ஆட்சில கூட எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன் ? “ என்று தன் சந்தேகத்தை சபைக்கு கொண்டு வந்தான் ரத்னவேல்.
“ஜாங்கிட்டுக்கு ஆள் இல்லாத இடமே இல்லை மச்சான். இப்போ நடக்கற கவர்மென்ட்ல கூட, ஜாங்கிட்டுக்கு அத்தனை தகவலையும் சொல்றதுக்கு ஆளு இருக்கு. ஜாங்கிட்டை ஒரு ஜெகஜ்ஜாலக் கில்லாடின்னு சும்மா சொல்லலை. “
“இந்த கவர்மென்ட்ல யாருப்பா இவருக்கு ஆளு ? “ என்று ஆச்சர்யப்பட்டான் ரத்னவேல்.
“முதலமைச்சரோட செயலாளரா இருக்காரே ராம் மோகனராவ். அவரோட மகள் கல்யாணம் சமீபத்துல திருப்பதியில நடந்துச்சு. உங்க பத்திரிக்கையிலதான் அதைப்பத்தி கவர் ஸ்டோரியே பண்ணாங்க. அந்த திருமணத்துக்குப் பிறகு ரிசெப்ஷன், போன வாரம் தாஜ் ஹோட்டல்ல நடந்துச்சு. அந்த ரிசெப்ஷனுக்கு மொத்தம் 60 லட்ச ரூபாய் செலவாயிருக்கு. மொத்த செலவையும் ஏத்துக்கிட்டது ஜாங்கிட். இவரை மீறி எப்படிப்பா ஜாங்கிட் மேல நடவடிக்கை எடுத்துடுவாங்க ? ஜாங்கிட்டுக்கு எதிரா உளவுத்துறையில என்ன அறிக்கை வருது, ஜாங்கிட் மேல வந்த புகார்களை எப்படி மூடுவது, ஜாங்கிட்டைப் பத்தி தலைமைச் செயலகத்தில் நடக்கும் உயர் அதிகாரிகள் கூட்டத்துல என்ன பேசுவாங்கன்னு எல்லாத் தகவலையும் சொல்றாருப்பா ராம் மோகன ராவ். அதுக்கு கைமாறுதான், திருமண வரவேற்பு செலவு. “
ராம் மோகன ராவ் ஐஏஎஸ்
“இந்த ஆளைப் போயி ஜெயலலிதா எப்படிப்பா நம்பறாங்க ? “
“இந்த ராம் மோகன ராவ் மேல, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு 2002ம் ஆண்டில் உத்தரவிட்டதும் இதே ஜெயலலிதாதான். இன்னைக்கு முதலமைச்சரோட செயலாளரா நியமிச்சு அழகு பாக்கறதும் இதே ஜெயலலிதாதான். “
“சரி அண்ணன் சைதையார் எப்படி இருக்காரு… ? அந்த அம்மா இவரு மேல கோவமா இருக்கறதா சொன்னியே… இப்போ எப்படி மச்சான் இருக்காரு ? “என்று அடுத்த மேட்டருக்கு தாவினான் வடிவேலு.
“இன்னும் இந்த அம்மாவுக்கு சைதையின் திருவிளையாடல்கள் முழுமையாத் தெரியல. அதிமுக விருகம்பாக்கம் பகுதி செயலாளரா இருப்பவர் வி.என்.ரவி. இவங்க அண்ணன் விருகை வி.என்.கண்ணன். இந்த கண்ணன், தமிழ்த்திருநாடு நிலம், வீடு, மனைத் தரகர்கள் நலச்சங்கம்னு ஒரு சங்கம் வைச்சுருக்கார். இந்த ஆளுக்கு சென்னை நகரத்துல, வழக்குல சிக்குன சொத்துக்கள், வில்லங்கத்துல இருக்கற சொத்துக்கள் பத்துன எல்லா விபரங்களும் தெரியும். சைதை துரைசாமியோட முழு நேர வேலையே நில அபகரிப்புன்றதுனால, இவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நெருக்கமா ஆயிடுச்சு. இந்த கண்ணன், கடந்த ஆட்சியில ஸ்டாலினோட ரொம்ப நெருக்கமா இருந்தவர். ஆட்சி மாறுனதும், அதிமுக பக்கம் வந்துட்டார். இந்தக் கண்ணன், ரவி மற்றும் சைதை துரைசாமியோட கூட்டணிதான் சென்னை மற்றும் புறநகர்ல பல சொத்துக்களை ஆட்டையப் போடுது. இந்த விபரம் நமக்கே தெரியும்போது, ஒரு மாநிலத்தோட முதலமைச்சரா இருக்கற ஜெயலலிதாவுக்குத் தெரியாதா ? ஆனா அந்த அம்மா ஏன் கம்முனு இருக்குன்னு யாருக்கும் புரியலை “
“வேற போலீஸ் செய்தி இல்லையா மாமா ? “ என்று இரண்டாவது பீரை வாயை வைத்து உடைத்து விட்டுக் கேட்டான் வடிவேலு.
“லஞ்ச ஒழிப்புத் துறையில அடுத்த லே அவுட் போட ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு முன்னாடி போட்ட லே அவட்டுக்கு விஜிலென்ஸ் நகர்னு பேர் வச்சு, அதுல அத்தனை ப்ளாட்டுகளும் வித்து தீந்த பிறகு, இப்போ தாம்பரம் தாண்டி இருக்கற சோமங்கலத்துல அடுத்த லே அவுட் போடப்போறாங்க.
இந்த லே அவுட்டுக்கான திட்டத்தை இணைந்து செய்வது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜி.சம்பந்தம்“
“டிஎஸ்பியும் கூடுதல் டிஜிபியும் எப்படி கூட்டணி வைப்பாங்க ? “ என்று சந்தேகத்தை எழுப்பினான் பீமராஜன்.
“மச்சான். இந்த சம்பந்தம் இருக்கறாரே… 1987ல் உதவி ஆய்வாளரா வேலைக்கு சேந்தவரு. 1998ல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தார். இவரை ஒரு சின்ன ஜாங்கிட்னே சொல்லலாம். 24 மணி நேரமும் ரியல் எஸ்டேட்தான் இவருக்கு வேலை. லஞ்ச ஒழிப்புத் துறையில வேலை செஞ்ச இந்த 15 வருஷத்துல ஒரே ஒரு ரிப்போர்ட் கூட உருப்படியா தந்துருக்க மாட்டாரு. இப்போக் கூட ஒரு அறிக்கை தயார் பண்ணுங்கன்னு சொன்னா இவருக்கு சுத்தமா தெரியாது. ஆனா ரியல் எஸ்டேட் சம்பந்தமா என்ன கேட்டாலும் பதில் சொல்லுவார்.
இவருக்கு ஒரு பொலிரோ ஜீப். அரசாங்க செலவுல டீசல். ட்ரைவர் எல்லாம் உண்டு. ஆனா, முக்கியமான விஷயம் என்னன்னா பெங்களுர்ல நடக்கற சொத்துக்குவிப்பு வழக்குக்கு இவர்தான் புலனாய்வு அதிகாரி. இவர்தான் அதிமுக ஆட்சி வந்ததும், மீண்டும் புலன் விசாரணை நடத்தனும்னு வழக்கறிஞர் இல்லாமயே நேரடியா நீதிமன்றத்துல மனு தாக்கல் செய்தது. ஏற்கனவே எந்த வேலையும் பாக்காம ரியல் எஸ்டேட் பண்ணுவாரு. இப்போ ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கோட புலனாய்வு அதிகாரியா….. இவரை இனிமே யாரு கேக்கறது ? “
“இந்த மாதிரி அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத் துறையில இருந்தா லஞ்சத்தை நல்லா ஒழிக்கலாம்“ என்று கூறி விட்டு, தன் பீர் பாட்டிலில் இருந்த கடைசி மடக்கை குடித்து முடித்தான் பீமராஜன்.
“வேற என்ன முக்கியமான மேட்டர் இருக்கு மாமா ? “ என்றான் ஏப்பம் விட்டவாறே…
“பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பலர் கடுமையான வருத்தத்துல இருக்காங்க மச்சான். “
“ஏன்.. அவங்கதான் 2016ல ஆட்சியைப் பிடிக்கப்போறாங்களே…“
“அவங்க சொன்னது ஆட்சியை இல்ல மச்சான். ஆச்சி மசாலாவை.. ஏண்டா அவங்கதான் தமாஷ் பண்றாங்கன்னா நீ வேற.. நான் சொல்ல வந்த விஷயம் என்னன்னா யாரை கைது பண்ணிட்டாங்கன்னு பஸ்ஸை எரிக்கறது, கலவரம் பண்றதுன்னு செஞ்சாங்களோ, அவங்க ரெண்டு பேரும் வெளியில வந்துட்டாங்க. ஆனா, அவங்க சொன்னாங்கன்னு இதையெல்லாம் செஞ்ச நாங்க மாட்டிக்கிட்டோம். இப்போ காப்பாத்தக் கூட ஆளு இல்லன்னு பொலம்பறாங்க மச்சான்.“
“அய்யா காப்பாத்த மாட்டாரா மச்சான்“ என்று கேட்டு நக்கலாக சிரித்தான் ரத்னவேல்,
“ராமதாஸ் நடத்திய இந்த அட்டூழியங்கள் அவருக்கு வன்னிய மக்கள் மத்தியில இருக்கற ஆதரவை முற்றிலுமா அழிக்கப்போகுது பாரு மச்சான்.
தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின்படி தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவங்க இதற்கான மேல்முறையீட்டு அமர்வு முன்னாடி முறையீடு செய்யலாம். இதுக்கே எப்படியும் ஒரு மாசம் ஆயிடும். அதுக்குப் பிறகு, உயர்நீதிமன்றத்துல இந்த தடுப்புக் காவலை ரத்து பண்ணச் சொல்லி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யணும். பெரிய வக்கீலுங்க இந்த மனுத் தாக்கல் செய்யறதுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கேப்பாங்க. எப்படிப்பாத்தாலும் குறைஞ்சது 25 ஆயிரமாவது ஆகும். அதுவும், பாலத்துக்கு வெடிகுண்டு வச்சது, டாஸ்மாக் கடை மேல பெட்ரோல் குண்டு வீசுனது, பஸ்ஸை எரிச்சது இது மாதிரி விஷயத்துக்காக போடப்பட்ட தடுப்புக் காவல் ஆணைகளை சாதாரணமா நீதிமன்றம் ரத்து பண்றது இல்லை.
கோடை விடுமுறை முடிஞ்சு, ஆட்கொணர்வு மனு வழக்குகளை விசாரிக்க, நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் தனபாலன் வர்றதா சொல்லப்படுது. இந்த நீதிபதிகள், இந்த வன்முறைச் சம்பவங்களை சாதாரணமா எடுத்துக்க மாட்டாங்க. அப்படி தடுப்புக் காவல் ஆணையை நீதிமன்றம் உறுதி செஞ்சுடுச்சுன்னா, உச்சநீதிமன்றம்தான். உச்சநீதிமன்றம் போறதுக்கு எப்படிப் பாத்தாலும் 5 லட்ச ரூபாய் ஆகும். அது சாதாரண பாட்டாளி மக்கள் கட்சித்தொண்டர்களால் முடியவே முடியாத காரியம்.
இதைத் தவிர்த்து, இப்படி தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவங்களோட குடும்பங்கள் படற அவஸ்தை சொல்லி மாளாது. குடும்பத்தின் வருமானம் நின்று போகும். வழக்கு செலவுகளுக்காக கடன் வாங்கணும். வாரா வாரம் சிறையில இருக்கறவங்களப் போய் பாக்கணும். பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துடும். எல்லா வன்னிய குடும்பமும் ராமதாஸ் மாதிரி கோடீஸ்வரக் குடும்பமா என்ன ?
இதுதான் மருத்துவர் அய்யா வன்னிய சமுதாயத்துக்குப் பண்ணியிருக்கற சேவை.“
“பாவம் மச்சான் அவங்க“ என்று பரிதாபப்பட்டான் பீமராஜன்.
“இல்லை மச்சான் பாவம் பாக்காத. ராமதாஸ் கைதுன்னு பாலத்துக்கு குண்டு வச்சாங்களே… ஒழுங்கா வைக்கத் தெரியாம வச்சாங்க. அதனால பெரிய சேதம் இல்லை. ஒரு வேளை ஒழுங்கா வெடிச்சு, அந்த நேரத்துல அது மேல ஒரு பஸ் போயிருந்தா என்ன ஆயிருக்கும்னு யோசிச்சுப் பாரு… செத்துப் போறதுல வன்னிய மக்களும் இருந்திருப்பாங்கள்ல… வன்னியக் குழந்தைகளும் இருந்திருக்கலாம்ல.. இதெல்லாம் லைட்டா எடுத்துக்கக் கூடாது மச்சான். ஒரு முறை தடுப்புக் காவல்ல இருந்துட்டு வந்தாத்தான் அடுத்த முறை செய்ய மாட்டாங்க. நீ வேணா பாரேன்.. இந்த வாட்டி தடுப்புக் காவலில் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவங்க, அடுத்தவாட்டி ராமதாஸை கைது பண்ணா, ஆதரிச்சு போஸ்டர் ஒட்டுவாங்க. அந்த அளவுக்கு அவங்க படாத பாடு படப்போறாங்க பாறேன். “
“சரி கோர்ட் நியூஸ் என்னப்பா ? நீதிபதிகள் நியமனம் எந்த அளவுல இருக்கு ? “ என்ற கணேசன் தனது வோட்காவை முடித்து விட்டு ஆனந்தமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.
“நம்ப இதுக்கு முன்னாடியே டிஸ்கஸ் பண்ணோம் ஞாபகம் இருக்காண்ணே. தங்கசிவம்ன்ற கேரக்டர்….“
“யாருப்பா ஞாபகம் இல்லையே ? “
“அதான்ணே… நீதிபதி பால் வசந்தகுமார் பரிந்துரையில நீதிபதியாகப் போறார்னு. அவரோட முழு நேர வேலையே ரியல் எஸ்டேட் மற்றும் ப்ரோக்கர்னு சொன்னேன் ஞாபகம் இல்லையா ? “
“ஆமாம்பா.. சொல்லு.. “
“அவர் மேல அடுக்கடுக்கா புகார்கள் குவியுதுன்ணே. நீதிபதியாகப் போறவங்க தங்களைப் பத்தின விபரங்களைக் குடுக்கும்போது எந்த விபரத்தையும் மறைக்காம எல்லா விபரத்தையும் குடுக்கணும். தான் தாக்கல் செஞ்ச வழக்கு உயர்நீதிமன்றத்துல நிலுவையில இருக்குன்ற விபரத்தை தன்னோட பயோடேட்டாவுல குடுக்காம மறைச்சிருக்கார். இந்த ஒரே காரணத்தை வச்சு தங்க சிவம் நீதிபதியாகக் கூடாதுன்னு முடிவெடுக்கனும். ஆனா நீதிபதி பால் வசந்தகுமார், தங்கசிவத்தை எப்படியாவது மை லார்டா ஆக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு நிக்கறார். என்ன பண்றது ? “
“என்னய்யா வழக்கு அது… ? “ என்று சிகரெட் புகையை வானத்தை நோக்கி ஊதியவாறு கேட்டார் கணேசன்.
“அண்ணே அந்த வழக்கு ரொம்ப சுவையானதுன்ணே. இந்த தங்கசிவம் ஃப்ராடுன்னு நிரூபிக்கறதுக்கு இது ஒண்ணே போதும்“
“மொத்த டீடியிலையும் குடு … . “
“சிப்காட் அமைக்கக் கூடிய தொழில் பூங்காவுக்காக, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வல்லம் வடகல் பகுதியில 1780 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் கையகம் பண்ணாங்க. அதுல வல்லம்-பி கிராமத்துல சர்வே நம்பர் 275/1ல் 3.25 ஏக்கர் நிலமும் சர்வே நம்பர் 275/2ல் 1.54 ஏக்கர் நிலமும் இருக்கு. இந்த ரெண்டு நெலமும் பாபுஜி மனைவி வாசுகி பேர்ல இருக்கு.
அரசாங்கம் இந்த ரெண்டு நெலத்தோட சேத்து ஆயிரக்கணக்கான நிலங்ககை கையகம் பண்ணாங்க. கையகம் பண்ணிட்டு அரசாங்கம் 2 மார்ச் 2012 அன்னைக்கு இதற்கான உத்தரவை கெசட்டில் வெளியிட்டாங்க. கெசட்டில் ஒரு நில கையம் செய்யப்பட்டதுன்னு உத்தரவு வந்தா, அதுக்குப் பிறகு அந்த நெலத்தை யாருக்கும் விக்க முடியாது. இந்த நேரத்துலதான் நம்ப தங்கசிவம் பிக்சர்ல வர்றார்.
அந்த நில உரிமையாளர் வாசுகி தங்கசிவம் பேருக்கும் ரங்கநாயகின்றவர் பேருக்கும் பவர் பத்திரம் எழுதி வாங்கறார். பவர் எழுதி வாங்கிட்டு, அரசாங்கம் இந்த நெலத்தை கையம் பண்ணியது தவறுன்னு வழக்கு தாக்கல் செய்யறார். ரங்கநாயகி பேர்ல இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்படுது.
வழக்கமா அரசாங்கம் எந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துனாலும் நீதிமன்றங்கள் அதில தலையிடாது. நஷ்ட ஈடாக கொடுக்கப்படும் தொகை கூடவோ குறைவோ… அதில் மட்டுமே நீதிமன்றம் தலையிடும்.
ஆனால், தங்கசிவமும், ரங்கநாயகியும் தொடர்ந்த வழக்குல, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் போன மாசம் 14ம் தேதி அரசாங்கம் நிலம் கையகம் எடுத்த ஆணையை ரத்து செய்து உத்தரவு போட்டிருக்கார்.”
”நீதிபதி வெங்கட்ராமனா இப்படி செஞ்சார்… ? நம்பவே முடியலையே…”
”உண்மை பல நேரங்களில் கசப்பாக இருப்பதோடு, ஜீரணிக்க முடியாமலும் இருக்கு என்னண்ணே பண்றது. போன மாசத்தோட நீதிபதி வெங்கட்ராமன் ஓய்வு பெற்றுட்டார். அவரு கதைய விடுங்க. தங்கசிவம் மேட்டருக்கு வாங்க… அரசாங்கம் கையகப்படுத்துன நிலத்துக்கு பவர் பத்திரம் வாங்குறது பெரிய மோசடி. அப்படி பவர் பத்திரம் வாங்கின நிலத்துக்காக, நீதிமன்றத்துல வழக்கு தொடுத்தது இன்னும் பெரிய மோசடி. இதுல, அரசு வழக்கறிஞர், சிப்காட் வழக்கறிஞர் நர்மதா சம்பத், நீதிபதி, எல்லாரும் சேந்து ஐஞ்சு ஏக்கர் நிலத்தை தங்கசிவம் அபேஸ் பண்ண உதவி பண்ணியிருக்காங்க.
சிப்காட் கையகம் பண்ணிய நிலத்துக்குப் பக்கத்துல இருக்கற ஐஞ்சு ஏக்கர் நெலத்தோட மதிப்பு எத்தனை கோடி உயர்ந்துருக்கும்னு நீங்களே புரிஞ்சுக்கங்கண்ணே. இப்படி நிலத்தோட மதிப்பை உயர்த்தி எத்தனை கோடி ரூபாய் லாபம் பாத்துருப்பார்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்கண்ணே..”
”ஆமாம்பா.. இப்படிப்பட்ட மோசடிப் பேர்விழியைப் போயி நீதிபதியாக்கறாங்களே… என்னப்பா அநியாயம் இது ? ” என்று மிகவும் வருத்தத்தோடு கேட்டார் கணேசன்.
”இப்படிப்பட்ட மோசடிப்பேர்விழியை நீதிபதியாக்கனும்னு பரிந்துரை செஞ்ச உயர்நீதிமன்ற நீதிபதி பால்வசந்த குமாரை என்ன சொல்றதுன்னு சொல்லுங்க… இதுல கொடுமை என்னன்னா, நீதிபதி பால்வசந்த குமாரையெல்லாம் உயர்நீதிமன்ற வட்டாரத்துல நேர்மையான நீதிபதின்னு வேற சொல்றாங்க…. ”
நீதிபதி பால் வசந்தகுமார் மற்றும் நீதிபதி வெங்கட்ராமன். நடுவில் தூங்கும் சிங்கம் நீதிபதி கர்ணன்.
”அவ்வளவுதானா மச்சான் கோர்ட் நியூஸ்… ? ”
”சூப்பர் நியூஸ் வச்சுருக்கேன் மாமா…. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருக்காங்களே… அவங்க தீர்ப்புகள் வழங்கும்போது பாரபட்சமில்லாம வழங்குவாங்கன்னுதானே எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்காங்க…. ? ”
”ஆமாம் மச்சான். இன்னும் நெறய்ய பேரு அப்படித்தான் நெனச்சுக்கிட்டு இருக்காங்க… அப்படி இல்லையா ? ”
”ஆனா அப்படியெல்லாம் இல்லை. குறிப்பா ஒரு வருடத்துல பணியிலேர்ந்து ஓய்வு பெற இருக்கற நீதிபதிகள் குடுக்கற தீர்ப்பை நம்பவே முடியாது. ”
2009 லேர்ந்து 2013 வரைக்கும், ஓய்வு பெற்ற நீதிபதிகள் எத்தனை போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்காங்க தெரியுமா ? நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், 5 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி குலசேகரன் 2 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி பி.முருகேசன் 3 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி பெரிய கருப்பையா 7 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி சொக்கலிங்கம் 3 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். நீதிபதி ஜோதிமணி 4 போஸ்டுக்கு அப்ளை பண்ணியிருக்கார். “
”தம்பி.. இவங்க இந்த மாதிரி போஸ்டுக்கு அப்ளை பண்றதுல என்னப்பா தப்பு ? ஓய்வு பெற்ற பிறகு ஏதாவது வேலைக்கு போயி சுறுசுறுப்பா இருக்கறது நல்லதுதானே ? ” என்று வெள்ளந்தியாக கேட்டார் கணேசன்.
”இதையேதான்ணே இந்தத் தகவலை சொன்ன வக்கீல் கிட்ட கேட்டேன். அவர் என்ன சொல்றார்னா இந்த நீதிபதிகள் வெறுமனே அப்ளை பண்ணிட்டு இருக்க மாட்டாங்க. யாரைப் பிடிச்சா இந்த போஸ்டு கிடைக்கும்னு பாத்து அவங்கக் கிட்ட பேசுவாங்க. எப்படியாவது இந்த போஸ்ட் வாங்கிக் குடுங்க. இல்லன்னா நான் ‘சேகர் செத்துருவான்’னு பேசுவாங்க. இவங்க பேசுற ப்ரோக்கர்களும், எப்படியாவது அய்யாவுக்கு இந்தப் போஸ்டை வாங்கித் தந்துட்றேன்னு சொல்லுவாங்க. ”
”சரி அதுல என்ன தப்பு… ? ”
”என்னண்ணே இப்படி உலகம் புரியாமயே இருக்கீங்க. புரியலையா இல்லை மப்பு ஜாஸ்தியாயிடுச்சா…. ? ”
”உலகத்துல எதுவுமே இலவசம் இல்லன்ணே இப்படி செஞ்சு குடுக்குற ப்ரோக்கர் சும்மாவா செஞ்சு குடுப்பான். சார்… போஸ்டை நான் வாங்கித் தந்துட்றேன். எனக்கு இந்த வழக்குல இப்படித் தீர்ப்பு குடுங்க. அந்த வழக்குல இப்படி தீர்ப்பு குடுங்கன்னு சொல்லுவாங்க. ப்ரோக்கருங்க சொல்றபடி தீர்ப்பு குடுக்கலன்னா போஸ்ட் எப்படி கிடைக்கும் ? ஓய்வு பெற்ற பிறகு கெடைக்கப் போற போஸ்டுக்காக இவங்க எழுதற தீர்ப்பு எப்படி நியாயமானதா இருக்கும் ? ”
”என்னய்யா இது… இந்த நீதிபதிகளையெல்லாம் கடவுள் மாதிரி நெனைச்சு மக்கள் நீதிமன்றத்தை நம்பியிருக்காங்களே…. இவங்க இவ்வளவு மோசமா இருக்காங்களே… ? ”
”இதுல இருக்கறதுலேயே சிறப்பு நீதிபதி ஜோதிமணி. கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கை விசாரிச்சிக்கிட்டு இருக்கார். அந்த வழக்கில் ஒரு பார்ட்டி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர். பசுமைத் தீர்ப்பாய நீதிபதியாகனும்னா மத்திய அரசுச் செயலர்கிட்டதான் விண்ணப்பிக்கனும். இவர் கூடங்குளம் வழக்கை விசாரிச்சுக்கிட்டே பசுமைத் தீர்ப்பாய நீதிபதி பதவி வேணும்னு விண்ணப்பிச்சார். விண்ணப்பத்தை ஒரு பக்கம் அனுப்பிட்டு, இன்னொரு பக்கம் கூடங்குளம் வழக்குல தீர்ப்பு வழங்கினார்.
வழக்கை தள்ளுபடி செய்யறேன்னு சொன்னாக் கூட பரவாயில்ல. கூடங்குளம் அணு உலையில விபத்து நடக்க வாய்ப்பே இல்லன்னு தீர்ப்பு எழுதினார். அப்படி எழுதினது மட்டுமில்லாம, அவர் தீர்ப்பில் எழுதியிருந்ததுதான் சிறப்பான விஷயம்.”
”டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மிக மிக உறுதியாக இயற்கை சீற்றங்கள் இயற்கையின் செயல், இது போன்ற இயற்கைச் சீற்றங்களைக் கண்டு மனித இனம் அஞ்சினால், மனித இனம் வளர்ந்திருக்கவே முடியாதுன்னு சொல்லிட்டு, கூடங்குளம் அணு உலை திட்டம் கடவுளின் திட்டம்னு அப்துல் கலாம் சொன்னதை முக்கியமா கோடிட்டுக் காட்டியிருக்கார்”
”அப்துல் கலாம் என்ன அணு விஞ்ஞானியா.. அவர் ஒரு ராக்கெட் சயின்டிஸ்ட். அணு உலையைப் பத்தி அந்த ஆளுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு மற்ற அணு விஞ்ஞானிகள் சொல்றாங்களே.. நீதிபதி ஜோதிமணி ஏன் குடுத்த காசுக்கு மேல கூவறாரு… ” என்றான் ரத்னவேல்.
”போடா லூசு… அணு உலை பாதுகாப்பானதில்லைனு தீர்ப்பு குடுத்திருந்தா இன்னைக்கு நீதிபதி ஜோதிமணி டெல்லி பசுமைத் தீர்ப்பாய நீதிபதியா அமர்ந்திருக்க முடியுமா ? அணு உலை பாதுகாப்பானதா இல்லை. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படலைன்னா அதிகபட்சம் என்ன நடந்துருக்கும் ? இடிந்தகரையில நீதியரசர் ஜோதி மணி வாழ்கன்னு பேசியிருப்பாங்க. உதயக்குமார், “ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் நீதிபதி ஜோதிமணின்னு” புதிய தலைமுறையில பேட்டி குடுத்துருப்பாரு. இதை வச்சுக்கிட்டு செகப்பு வௌக்கு கார்ல போக முடியுமா, இல்ல பெரிய தொழில் நிறுவனங்கள்கிட்டயிருந்து கட்டிங்தான் வாங்க முடியுமா ? ”
”ஏம்ப்பா நல்லவங்களே ஒருத்தர் கூட இல்லையாப்பா…”
”ஒரு சில விதிவிலக்குகளும் இருக்கத்தான்ணே செய்யுது. நீதிபதி சந்துருகிட்ட அவர் யார்கிட்டயும் கேட்காமலேயே கணினி மேல் முறையீட்டுத் தீர்ப்பாய நீதிபதியாகும்படி ஆஃபர் பண்ணாங்க. தன்னோட சுயகவுரவத்துக்கு எந்த விதத்துலயும் குறை நேராமல் கிடைச்ச அந்த பதவியைக் கூட வேணாம்னு சொல்லிட்டாரு நீதிபதி சந்துரு.”
”நல்லவங்களும் இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா அவங்க சிறுபான்மையினர் என்பதுதான் வேதனை. ”
”இல்லன்ணே. அவர்கள் சிறுபான்மையினர் இல்லை. அரிய ஜீவராசிகள்”
”சரி கௌம்பலாமாப்பா… நேரம் ஆயிடுச்சு…”
”வாங்க எல்லாரும் போவோம்” என்று சொல்லிவிட்டு மொட்டை மாடியை காலி செய்தனர்.