“ஹாய் மச்சான் இந்தாங்க… சில் போறதுக்கு முன்னாடி ஸ்டார்ட் பண்ணுங்க” என்று மூன்று பேரிடமும் குளிர்ந்த பீர்களை எடுத்து நீட்டினான்.
“அண்ணே ரமோனாவ் கிடைக்கல… பகார்டி இருக்கு. இதுவும் சூப்பரா இருக்கும். இந்தாங்க“ என்று கணேசனிடம் அவர் ஐட்டத்தைக் கொடுத்தான்.
“நீ சாப்படலையாப்பா ? “ என்று வாஞ்சையுடன் கேட்டார் கணேசன்.
“வேண்டான்ணே.. நாள் பூரா இந்த ஸ்மெல்லயே இருந்து மூஞ்சுல அடிச்ச மாதிரி இருக்கு. இந்த வேலைய விட்ட பிறகுதான் சாப்படணும். “
“சரி.. நாங்க சாப்ட்றோம். நீ மேட்டரை ஆரம்பி. நல்ல மேட்டரா தேருச்சான்னு சொல்லு.“
“கனிமொழி…..“
“நிறுத்துப்பா… கனிமொழியெல்லாம் வேணாம். மொதல்ல ஐபிஎல் மேட்டருக்கு வா. அதுதான் இப்போதைக்கு ஹாட்“ என்றார் கணேசன்.
“இந்த வாரம் பார்க்கு வந்தவங்கல்ளாம் ஃபிக்சிங் பத்திதான் பேசிக்கிட்டு இருந்தாங்கன்ணே.. பெரும்பாலும் என்.சீனிவாசன் பத்திதான் பேச்சு. “
“அந்த ஆளு பெரிய திருடனாச்சே…!!!“
“ஆமான்ணே… அந்த ஆளோட வரலாறே திருட்டுத்தனம்தான். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமே இந்த ஆளுக்கு முழுக்க சொந்தமானதில்ல.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தோட பங்குகள்ல ஒரு பாதி, சீனிவாசன்கிட்டயும், அவர் தம்பி ராமச்சந்திரன்கிட்டயும் இருந்துச்சு. இன்னொரு பாதி சன்மார் குழுமத்தோட என்.சங்கர் மற்றும் என்.குமார்கிட்ட இருந்துச்சு. இந்த இரண்டு குழுவும் சேந்து இந்தியா சிமென்ட்ஸை நடத்திக்கிட்டு வந்தாங்க. நடுவுல இந்த ரெண்டு க்ரூப்புக்கும் தகராறு வந்து, நிதி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தை நடத்தற பொறுப்பை ஏத்துக்கிட்டு, 10 வருஷம் இந்தியா சிமென்ட்ஸை நிதி நிறுவனங்கள் நடத்துச்சு.
1989ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும், முரசொலி மாறன் தலையிட்டு, கம்பெனியை நடத்தற முழுப் பொறுப்பையும் சீனிவாசன்கிட்ட குடுக்க வச்சாங்க. சீனிவாசன்கிட்ட பொறுப்பு வந்ததும், ஆந்திராவோட கோரமண்டல் ஃபெர்ட்டிலைசர்ஸ், விசாகா சிமென்ட்ஸ்னு ரெண்டு கம்பெனிகளையும் வாங்கிப் போட்டார் சீனிவாசன். இதுக்கு அடுத்து இன்னொரு பொதுத்துறை நிறுவனமான சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவையிம் வாங்கிப் போட்டார். இந்த பொதுத்துறை நிறுவனத்தை வாங்க முயற்சி எடுத்த அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தை முரசொலி மாறன் மூலமா பின்வாங்க வச்சார் சீனிவாசன்.
இதுக்குப் பிறகு ஆந்திரா அரசோட பொதுத்துறை நிறுவனமான ஆந்திரா தொழில் வளர்ச்சிக் கழகமும், ராசி சிமென்ட்ஸும் சேர்ந்து 1982ல் ராசி சிமென்ட்ஸ்னு ஒரு நிறுவனத்தை தொடங்குனாங்க. இந்த நிறுவனம் 1983-84ல் இந்தியாவிலேயே லாபகரமான நிறுவனமா தேர்ந்தெடுக்கப்பட்டுச்சு. ஆனா 1998ல் ராசி சிமென்ட்ஸை சீனிவாசன் மோசடி பண்ணி வாங்கினார். ராசி சிமென்ட்சோட முதலாளி பி.வி.ராஜுவுக்கு இந்த நிறுவனத்தை விற்பனை செய்யறதுல உடன்பாடே இல்ல. அவர் 20 வருஷமா உழைச்சு உருவாக்கின இந்த நிறுவனத்தை விற்பனை செய்யறதுக்கு அவருக்கு மனசே இல்லை. ஆனா, அப்போ மத்தியில அமைச்சரா இருந்த முரசொலி மாறனோட உதவியால ஆந்திரா தொழில் வளர்ச்சிக் கழகத்தோடு மொத்த பங்குகளையும் வாங்கிட்டார் சீனிவாசன். பி.வி ராஜுவோட குடும்பத்துல இருந்த இன்னொருத்தருக்கு பணம் கொடுத்து அவர் பங்குகளையும் வாங்கிட்டார் சீனி.
இப்படி அடாவடியா ராசி சிமென்ட்ஸ் நிறுவனத்தை சீனிவாசன் வாங்கினதுக்கு எதிரா அரசு தலையிடனும்னு அப்போ முதலமைச்சரா இருந்த சந்திரபாபு நாயுடுகிட்ட, தொழில் அதிபர்கள் மனு கொடுத்தாங்க.
வட இந்தியாவில பிரபலமா இருக்கற அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனம், தென்னிந்தியாவில கால் பதிக்கணும்னு நெனச்சு, முயற்சி எடுத்தாங்க. அப்படி முயற்சி எடுத்தப்ப, வட இந்தியாவில தயாராகிற சிமென்டை தென்னிந்தியாவுக்கு சாலை வழியா எடுத்து வர்றத விட, கடல் வழியா எடுத்து வந்தா லாபம்னு முடிவு பண்ணாங்க. அம்புஜா சிமென்ட்ஸ் தென்னிந்தியாவுக்கு வந்தா, தன்னோட வருமானம் பாதிக்கப்படும்னு, சில சுற்றுச் சூழல் அமைப்புகளை வைச்சு நீதிமன்றத்துல வழக்கு தொடுத்து, அதை தடுத்து நிறுத்துனதா சொல்றாங்க.
சீனிவாசனோட வளர்ச்சியில ஒவ்வொரு கட்டத்துலயும் கருணாநிதி இருக்கறார்.”
“கருணாநிதியும் மாறனும் சீனிக்கு அவ்வளவு க்ளோசா… ? என்று வியந்தான் வடிவேலு.
“அட நீ வேற மச்சான்… 2002 ஏப்ரல்ல அப்போ முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா, என்.சீனிவாசன், முரசொலி மாறனோட பினாமின்னு வெளிப்படையா குற்றம் சாட்டுனாங்க“
“என்ன மச்சான் புதுக்கதை சொல்ற.. ? “ என்றான் ரத்னவேல்.
“கதை இல்லடா… வரலாற்றுச் சுவடு. இது சட்டப்பேரவை குறிப்புகள்ல இன்னைக்கும் இருக்கு. அரசுக்கு சொந்தமான 77.70 ஏக்கர் நிலத்துல காஸ்மாபாலிடன் க்ளப்போட கோல்ஃப் கோர்ஸ் நடந்துக்கிட்டு இருந்துச்சு. இந்த நிலத்தை காஸ்மோபாலிட்டன் கிளப்பே மீண்டும் குடுக்கனும்னு கேட்டாங்க. ஆனா 1996-1998ல் முதலமைச்சரா இருந்த கருணாநிதி என் சீனிவாசன் தொடங்கிய புதிய அமைப்புக்கு இதை கொடுத்தாரு. “
“அவரு என்ன அமைப்பு தொடங்குனாரு ? “ என்று இடைபுகுந்தான் ரத்னவேல்.
“தமிழ்நாடு கோல்ஃப் பெடரேஷன்னு ஒரு அமைப்பை சீனிவாசன் புதுசா தொடங்குனாரு. இந்த அமைப்புக்கு 99 வருஷத்துக்கு அந்த 77 ஏக்கர் நிலத்தை லீசுக்கு கொடுக்கணும்னு கேட்டாரு. ஆனா காஸ்மோபாலிட்டன் கிளப் தங்களுக்கு மீண்டும் இந்த லீஸை கொடுக்கனும்னு கேட்டாங்க. கருணாநிதி, ஒரு சமரச உத்தரவா, ரெண்டு பேருக்கும் சேத்து 30 வருஷ லீசுக்கு அந்த 77 ஏக்கர் நிலத்தை வழங்கி உத்தரவு போட்டாரு. இதிலேர்ந்தே தெரியலலையா முரசொலி மாறன் சீனிவாசனோட பினாமின்னு சொன்னாங்க ஜெயலலிதா.”
“திமுகவுல அந்த ஆளுக்கு அவ்வளவு செல்வாக்கா மச்சான் ? “ என்று வினவினான் ரத்னவேல்.
“எப்போப் பாத்தாலும், பார்ப்பன சதி… ஆரிய சதின்னு பேசறதுதான் கருணாநிதிக்கு வேலை. ஆனா தொழில் கூட்டணிலேர்ந்து எல்லா கூட்டணியும் பார்ப்பனர்களோடுதான்.
இது மட்டுமில்லாம சீனிவாசன் ஆந்திர முதல்வரா இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியோட நெருக்கமா இருந்து பல கோடி சம்பாதிச்சுருக்காரு… ராஜசேகர ரெட்டியோட மகன் ஜெகன் மோகன் ரெட்டியோட கார்மெல் ஏசியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்துல 5 கோடி முதலீடு செய்துருக்கார். அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவங்க ஒரு பங்கு 10 ரூபாய்க்கு வாங்கனப்போ, சீனிவாசன் ஒரு பங்கு 252 ரூபாய்க்கு வாங்கியிருக்கார்.
இதே போல சாக்ஷி டிவி நடத்துற ஜெகதி பப்ளிகேஷன்ஸ்ல 40 கோடி முதலீடு பண்ணியிருக்கார். ஜெகதி பப்ளிகேஷன்ஸ் செயல்படத் தொடங்கறதுக்கு முன்னாடியே ஒரு பங்கு 350 ரூபாய்க்கு சீனிவாசன் வாங்கியிருக்கார். இப்படி இவர் பண்ணிய முதலீடுகளுக்கு கைமாறா, சீனிவாசனோட சிமென்ட் கம்பெனிக்கு கடப்பா மாவட்டத்துல இருக்கற நிலத்தோட லீஸை புதுப்பிச்சு குடுத்தார் ராஜசேகர ரெட்டி. சீனிவாசனோட சிமென்ட் கம்பெனிக்காக கக்னா நதியிலேர்ந்து ஒரு நாளைக்கு மூணு லட்சம் கேலன் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்ததை மாத்தி ஒரு நாளைக்கு 10 லட்சம் காலன் தண்ணீர் எடுத்துக்கலாம்னு ஒரே நாள்ல உத்தரவு போட்டார் ராஜசேகர ரெட்டி.
சென்னை சூப்பர் கிங்ஸ் டீமை தொடங்குனதுல பெரிய லாபம் சீனிவாசனோட இந்தியா சிமென்ட்ஸ்க்குதான். இந்த டீமைத் தொடங்கி இந்த ஆளு நடத்தின முறைகேடுகளைப் பத்தி பத்திரிக்கைகள்ல விரிவா வந்துருக்கு படிச்சிருப்பீங்கள்ல.. ”
”படிச்சோம் மச்சான். ஐபிஎல் பத்தி வர்ற ஒவ்வொரு செய்தியும் தலை சுத்த வைக்குது. எப்படியெல்லாம் ஏமாத்தியிருக்கானுங்க… ? ” என்று எரிச்சல் பட்டான் பீமராஜன்.
”இந்த ஐபிஎல் வெளையாட்டே, கருப்புப் பணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கவனுங்களுக்காக தொடங்கப்பட்டது. கருப்புப் பணம் வச்சுருக்கவனுங்க எப்படி நேர்மையா நடப்பானுங்க… ? அந்த விளையாட்டு ஒழுங்கா நடக்குதா, நடக்கலையான்னு யாரும் கவனிக்கக் கூடாதுன்றதுக்காகத்தான், பெண்களையும் ஆட விட்றாங்க…”
”சரிப்பா.. அடுத்த மேட்டருக்கு வா…” என்றார் முதல் ரவுண்டை முடித்திருந்த கணேசன்.
”அநேகமா திருமாவளவனை கழற்றி விடறதுன்னு முடிவெடுத்துட்டாரு கருணாநிதி”
”பொண்ணை ராஜ்யசபா எம்.பியாக்கனும்னா ?”
”அப்புறம்… கருணாநிதியை பொறுத்தவரை குடும்பத்துக்கு பிறகுதானே கட்சி, கொள்கையெல்லாம். அப்போல்லோ மருத்துவமனையில இருக்கற ராமதாஸை சந்திச்ச கனிமொழி, பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏக்களை தனக்கே வாக்களிக்கனும்னு கேட்ருக்காங்க. அவரும் சரின்னு ஒத்துக்கிட்டாராம். ”
”பாமக எம்எல்ஏக்கள் மட்டும் கனிமொழியை எம்.பியாக்க போதுமா என்ன ? ”
”மொதல்ல இருக்கறதை புடிச்சு வைப்போம். மத்ததெல்லாம் தானா வந்து விழும்னு நெனைக்கறார்”
”சரி திருமா என்ன நெனைக்கறார் ? ”
”முதுகில குத்தப்பட்டதா உணர்றார். இத்தனை நாள் கருணாநிதியோட அத்தனை தவறுகளுக்கும் நாம சிலுவை சுமந்தோம். ஆனா, தன் மகளுக்காக, இப்படி முதுகுல குத்தறாரேன்னு நெனைக்கறார். ”
”அரசியல்ல விசுவாசம்ன்ற வார்த்தைக்கு ஏதுப்பா இடம் ? ”
”அதெல்லாம் அவருக்கு தெரியாதா என்ன ? தெரியும். ஆனா, அதிமுகவுல, 2 சீட் குடுப்பாங்களான்ற கவலை மட்டும்தான் அவருக்கு இருக்கு. இந்த நேரத்துலயே வெளியில போனா, அதிமுக அணியைத் தவிர வேறு வழி இல்லை. அதனால, போனா பேச்சுவார்த்தை நடத்தறதுக்கு லிவரேஜ் இல்லாம போயிடும்னு நெனைக்கறார். ”
”சரி.. திருமாவளவன் வந்தா தலித் ஓட்டுக்கள் கிடைக்கும்னு அந்த அம்மா நெனைக்க மாட்டாங்களா ? ”
”அது அவங்களுக்கும் தெரியும். மொதல்ல திருமாவளவனை வெளியில அனுப்பட்டும்னு வெயிட் பண்றாங்க.”
”சரி.. மருத்துவர் அய்யா எப்படி இருக்கார் ? ” என்று கவலையோடு கேட்டான் ரத்னவேல்.
”அவருக்கென்ன… அறுவை சிகிச்சை முடிஞ்சு ஓய்வெடுத்துக்கிட்டு இருக்கார். இனிமேதான் அவருக்கு சோதனையே ஆரம்பிக்கப்போகுது. ஏற்கனவே நான் சொன்னேன்ல.. வழக்குகளை சரியா கவனிக்காததுனால வன்னியர்கள் அவர் மேல அதிருப்தியா இருக்காங்கன்னு ? ”
”ஆமாம்.. ”
”திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வன்னியர் சங்க உறுப்பினர்கள் இனி மருத்துவரை ஆதரிப்பதில்லைனு முடிவெடுத்திருக்காங்களாம். எண்பதுகள்ல நடந்த வன்னியர் சங்க போராட்டத்துல கைதான டாக்டர் பு.த.இளங்கோவன், பு.த.அருள்மொழியெல்லாம் இவ்வளவு ஆர்ப்பாட்டமா பண்ணாங்க.. இவரு மட்டும் ஏன் இல்லாத நடிப்பு நடிக்கறார்னு அவங்கள்லாம் கோவமா இருக்காங்க. அனேகமா, வழக்குகள்ல சிக்கியிருக்குற வன்னியர்களுக்கு அய்யா உதவி செய்யலன்னா, அவரோட அடிப்படையே ஆட்டம் கண்டுடும். ”
”சரி… ஹோம் செக்ரட்டரியை ஏன் மாத்தனாங்கன்னு சொல்லு மச்சான்”
”உங்க பத்திரிக்கையில கவர்ஸ்டோரி வச்சுருக்கற மாதிரி, சசிகலா தூண்டுதலால ராஜகோபாலை மாத்தலடா..
சசிகலாவோட கை தோட்டத்துல ஓங்கியிருந்தாலும், அதிகாரிகளை நியமனம் செய்யற அளவுக்கு இன்னும் உயரலை. ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியிலேர்ந்து சசிகலா இன்னும் மீளலை. சகிகலாவுக்கு பழைய அதிகாரம் வந்துச்சுன்னா எதுக்காக அவர் தம்பியை சமீபத்துல புது வழக்குல கைது செஞ்சாங்க.. ?
ஆக அது காரணம் இல்லை. டிஜிபி ராமானுஜத்துக்கும், ராஜகோபாலுக்கும் பெரிய பனிப்போர் நடந்துக்கிட்டு இருந்துச்சு. ராமானுஜம் எந்த ப்ரொபோசல் அனுப்பினாலும் அதை திருப்பி அனுப்பறது. ராமானுஜம் அனுப்பற அறிக்கைகளில் தப்பு கண்டுபிடிக்கறது.. இதே மாதிரி பல மாதங்களா நடந்துக்கிட்டு இருந்துச்சு.
இது இல்லாம எந்த போலீஸ் அதிகாரியையும் மதிக்கறதே இல்ல. யாரு பாக்க வந்தாலும் மணிக்கணக்கா காக்க வைக்கறது. இழுத்தடிக்கறது. தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களை வேவு பாக்கறது, மரியாதை இல்லாம நடத்தறது. செக்ரட்டேரியட்ல இந்த ஆளை லூசுன்னுதான் சொல்றாங்க. தொடர்ந்து இந்த ஆளு மேல புகார்கள் போனதாலதான் மாத்துனதா சொல்றாங்க. அத்தோடு சேர்ந்து, அதிகாரிகள் பதவி உயர்வை தாமதம் செஞ்சதும் ஒரு காரணம்னு சொல்றாங்க. ”
”சரி புது ஹோம் செக்ரட்டரி எப்படி ? ”
”நல்ல அதிகாரின்னுதான் எல்லாரும் சொல்றாங்க… இவரு திருநெல்வேலியில கலெக்டரா வேலை பாத்தப்போ அங்கே ஜாங்கிட்டும் எஸ்.பியா வேலை பாத்துருக்கார். அதனால, ஜாங்கிட் இவரு எனக்கு நெருக்கம்னு சொல்லிக்கிட்டு இருக்கார். ஆனா, நிரஞ்சன் மார்டி ஜாங்கிட்டுக்கு நெருக்கமெல்லாம் கிடையாது. ஓரளவுக்கு நியாயமான அதிகாரியும் கூடன்னு சொல்றாங்க.
”சரி வேற போலீஸ் நியூஸ் இருக்கா ? ”
”மண்டியிடாத மானம், வீழ்ந்து விடாத வீரம்…”
”என்னடா நாம் தமிழர் கட்சியில சேந்துட்டியா… ? ”
”இல்ல மச்சான்.. ஒரு காவல் துறை அதிகாரி, மண்டி போட்டு மன்னிப்பு கேட்ட கதையை சொல்ல வந்தேன்…”
சேஷசாயி
”யாருடா அது ? ” என்ற- ஆர்வமாக கேட்டான் வடிவேலு.
”சேஷசாயி. இவரு, மத்தியக் குற்றப்பிரிவுல இருந்தப்போ, ஒரு புகார்ல ஹெவியா அமவுன்ட் வாங்கிட்டாரு. இதப்பத்தி ராமானுஜம் அறிக்கை அனுப்பிட்டாரு. சி.எம்க்கு தகவல் தெரிஞ்சு சட்டைய கழட்ட போறாங்கன்னு பயந்து, நேராப் போயி மண்டி போட்டு மன்னிப்பு கேட்டாராம். ஏற்கனவே பொண்ணுக்கு மெடிக்கல் சீட் கேக்கறதுக்காக போனப்போ, அய்யங்காருன்னு தெரியனும்னு, மீசையை எடுத்தவரு இவரு. ”
”இவ்வளவு கேவலமாவா இருப்பாங்க ? ” ச்சை என்று அலுத்துக் கொண்டான் ரத்னவேல்.
”இதைவிட கேவலமாவெல்லாம் இருக்காங்க. இதெல்லாம் சாதாரணம் பாஸ். ”
”சரி அடுத்த மேட்டருக்கு வா…” என்று அவசரப்பட்டான் ரத்னவேல். அவன் தன் பீரை முடித்திருந்தான்.
”கீழ ஃப்ரிஜ்ல இன்னும் மூணு பீர் இருக்கு எடுத்துட்டு வா” என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான் தமிழ்.
”ஒரு மீசையை புகழ்ந்தா இன்னொரு மீசைக்கு ஆக மாட்டேங்குது”
”யாருப்பா ரெண்டு மீசை ? ”
”புகழப்பட்ட மீசை பொன்.மாணிக்கவேல். சேலத்துல பொன்.மாணிக்கவேல் எஸ்.பியா இருந்தப்போ ஒரு கொலை வழக்குல நல்லா விசாரிச்சாருன்னு அந்த வழக்கு மேல் முறையீட்டப்போ, சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டுச்சு. இதே வழக்கு உச்சநீதிமன்றம் போனப்போ, உச்சநீதிமன்றத்திலும், நாங்களும் உயர்நீதிமன்றத்தின் பாராட்டுதல்களை ஆமோதிக்கிறோம்னு எழுதிட்டாங்க… பொன்.மாணிக்கவேலுக்கும், ஜாங்கிட்டுக்கும் ஏழாம் பொறுத்தம்ன்றது ஊருக்கே தெரியும்..
உச்சநீதிமன்றம் பாராட்டுச்சுன்ற விபரம் தெரிஞ்சதுமே செம காண்டாயிட்டாராம் ஜாங்கிட்”
”ஆனா, பொன்.மாணிக்கவேலை நேரா போயி ஜாங்கிட்டோ பாத்திருக்காருல்லயா ? ” என்றான் ரத்னவேல் தன் இரண்டாவது பீரை திறந்து கொண்டே.
”பொன்.மாணிக்கவேலை சுத்தமா ஜாங்கிட்டுக்கு பிடிக்காது. எப்படியாவது பொன்.மாணிக்கவேலை ஒழிச்சு கட்டனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காரு. ஆனா, பொன்.மாணிக்கவேல் உளவுத்துறை டிஐஜியா இருந்தப்போ, இவரே நேராப் போயி பொன்.மாணிக்கவேலை சந்திச்சாரு. ஆல் தி பெஸ்ட் சொன்னாரு. ”
”கொஞ்சம் கூட கூச்சமே இருக்காதா ? ”
”அதான் ஜாங்கிட்….”
”பத்திரிக்கையாளர்களை போலீஸ் தாக்கிட்டாங்களாமே.. என்ன மச்சான் விஷயம் அது…” என்றான் பீமராஜன்.
”விஜய்னு ஒரு சினிமா பைனான்சியர் துப்பாக்கிய வைச்சுக்கிட்டு சுட்டுடுவேன்… சுட்டுடுவேன்னு மெரட்டிக்கிட்டு இருந்தாரு. அந்த சம்பவத்தை படம் பிடிக்கப் போன புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதும் போலீஸ் தடியடி நடத்துனாங்க…”
”வழக்கமா பத்திரிக்கையாளர்களை போலீஸ் அடிக்க மாட்டாங்களே… ? ”
”உத்தரவு வராமயா அடிப்பாங்க… கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் பவனீஸ்வரி தலைமையிலதான் இந்த ஆபரேஷன் நடந்துச்சு…. ஒரு போலீஸ் ஆபரேஷன் எப்படிப் பண்ணக் கூடாதோ, அப்படி நடந்துச்சு இந்த ஆபரேஷன்.. எல்லாத்தையும் போட்டு சொதப்பி, கடைசியில லத்தி சார்ஜ் வரைக்கும் வந்துச்சு…
பவனீஸ்வரி
இந்த பவனீஸ்வரிக்கு சட்டம் ஒழுங்கு பிரிவுல எப்படி வேலை பாக்கறதுன்னு சுத்தமா தெரியல. சில மாசத்துக்கு முன்னாடி, தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஒரு போராட்டம் நடத்துனப்போ, தேவையே இல்லாம, ஒரு லத்தி சார்ஜுக்கு உத்தரவு குடுத்து இதே மாதிரி சொதப்புனவங்கதான் இந்த அம்மா…”
”இந்த மாதிரி அதிகாரியெல்லாம் ஏன் வச்சுருக்காரு ஜார்ஜ் ? ”
”அவர் மேலயே சி.எம். ரொம்ப கோவமா இருக்காங்க…. ”
”அவர் சி.எம்க்கு ரொம்ப நெருங்கிய அதிகாரியாச்சே…”
”ஜெயலலிதாவுக்கு சசிகலாவைத் தவிர யாருமே நெருக்கமா இருக்க முடியாது மச்சான்.. எந்த அதிகாரியையும் அந்த அம்மா நம்பாது… இந்த அதிகாரிங்களுக்கெல்லாம் மனசுல நெனப்பு.. நம்பதான் சிஎம்முக்கு க்ளோஸ்னு… எம்.ஜி.ஆர் பீரியட்லேர்ந்து எத்தனை அதிகாரிகளை இந்த அம்மா பாத்துருக்கும்… இவனுங்க போட்ற கூழைக்கும்புடுலயே தெரியாது…. எப்படிப்பட்டவங்கன்னு ?
யாசின் மாலிக் சென்னை வந்ததை சென்னை மாநகர காவல்துறை முன்கூட்டியே தகவல் சொல்லாம கோட்டை விட்டுடுச்சுன்னு ஒரு கோபம். சென்னையில போக்குவரத்து சரியா பராமரிக்கப்படலன்னும் நெனைக்கறாங்க. இது போக, டிஜிபி அனுப்புன அறிக்கையிலயும், சென்னை மாநகர காவல்துறை மேல பல புகார்கள் சொல்லப்பட்டு இருக்கு. இதையெல்லாம் சேத்து கடுமையான கோவத்துல இருக்காங்க. சமீபத்துல கூட, சிஎம்மை ஜார்ஜ் சந்திச்சப்போ செம டோஸ் விட்ருக்காங்க… எப்போ வேணாலும் மாறுதல் வரும்னு சொல்றாங்க…”
”ஜார்ஜ் போயிட்டார்னா.. வரதராஜு…. ? ”
”நீ வேறடா… ஆடிக்காத்துல ஆடி காரே பறக்குது…”
”அவருக்கு மட்டும்தான் மாறுதல் இருக்குமா… ? ”
”உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரிக்கும் மாறுதல் வரலாம்னு சொல்றாங்க மச்சான். அவருக்கும் டிஜிபிக்கும் உறவு சரியில்லாம இருக்கு.
”உளவுத்துறைக்குள்ளயே சிக்கலா ? ”
”என்ன பண்றது… பிஜேபி அலுவலகம் கமலாலயத்தை சில முஸ்லீம் அடிப்படைவாதிகள் நோட்டம் பாத்துருக்கறதா உளவுத்துறைக்கு தகவல் வந்துருக்கு. இதை மத்திய உள்துறை மாநில உள்துறைக்கு அனுப்பி வச்சுருக்காங்க. பெங்களுரு பிஜேபி அலுவலகம் தாக்கப்பட்டது போல, இங்கயும் ஏதாவது திட்டம் போடுறாங்களான்னு உளவுத்துறை தீவிரமா கண்காணிச்சுக்கிட்டு இருக்காங்க. ”
“அப்புறம் வேற என்ன போலீஸ் நியூஸ் தம்பி ?” என்று கடைசி ரவுண்டை கவிழ்த்துக் கொண்டே கேட்டார் கணேசன்.
“இணை ஆணையர் சண்முகவேலோட மகனுக்கு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில ஆர்த்தோ மருத்துவ முதுகலை சீட் குடுத்துருக்காங்க. “
“என்னப்பா சொல்ற… ? அந்த சீட் ஒரு கோடி ரூபா போகுமே ? “
“போகும்தான். இந்த ஆளு சி.எம்மை பாத்து நான் ஒரு கழக விசுவாசி. மஃப்டியில இருக்கும்போது அதிமுக கரை வேட்டிதான் கட்டுவேன். உள் பனியர் கூட கருப்பு, சிவப்பு வெள்ளையிலதான் போட்ருக்கேன்னு சொல்லியிருக்கார். அந்த அம்மாவும் போனாப் போகுதுன்னு, அவங்க கோட்டாவுல பி.ஜி சீட் ஒதுக்கியிருக்காங்க.
ஆனா, தன்னை ஒரு அதிமுக அதிகாரின்னு யாரும் சொல்லிடக் கூடாதுன்னு, சண்முகவேல் வெளியில எல்லார்கிட்டயும், எனக்கு ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாச்சலம்தான் சீட் குடுத்தார்னு சொல்லிக்கிட்டு இருக்கார். “
“அப்போ அவர் அதிமுக அதிகாரி இல்லையா… ? “
“1995லயே தன்னோட தம்பியை மின்சார வாரிய உதவிப் பொறியாளரா ஆக்கினார். அம்மாதான் வாங்கிக் குடுத்தாங்க. ஆனா, திமுக ஆட்சி முழுக்க நல்ல பதவியில இருந்தார். அதுதான் சண்முகவேலோட சாமர்த்தியம். “
”சரிடா.. கோர்ட் நியூஸ் என்ன இருக்கு… ? ”
“போன வாரம் பூரா கோர்ட்ல சன் டிவி மகாலட்சுமி பத்திதான் பேச்சு… மகாலட்சுமியோட தம்பி மனைவி குடுத்த கம்ப்ளெயின்டுல மகாலட்சுமி, அவங்க அம்மா, தம்பி மூணு பேர் மேலயும் எப்ஐஆர் போட்டுட்டாங்க. இந்த எப்ஐஆரையே போட விடாம, வழக்கறிஞர்கள் தடா சந்திரசேகர், பால் கனகராஜ் ரொம்ப முயற்சி பண்ணாங்க. ஆனா, காவல்துறையில ப்ராம்ப்டா எப்ஐஆர் போட்டுட்டாங்க.
மகாலட்சுமியோட அம்மா ஜான்சி ராணி, தம்பி சதீஷ் குமார் ஆகிய ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. மகாலட்சுமிக்கு மட்டும் உயர்நீதிமன்றம் ஜாமீன் குடுத்துடுச்சு. ஆனா, கைதான அம்மாவையும், தம்பியையும் ஜெயிலுக்கு அனுப்பாம, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தோட முன்னாள் தலைவர் பால் கனகராஜ் 100 வக்கீல்களைக் கூட்டிக்கிட்டு எக்மோர் நீதிமன்றத்துக்குப் போயி, நீதிபதியை மிரட்டி ஜெயிலுக்கே போக விடாம ஜாமீன் வாங்கிட்டாங்க…..”
”அடப்பாவிகளா…. இப்படியெல்லாம் நீதிபதியை மிரட்டி ஜாமீன் வாங்க முடியுமா ? ” என்று வாயைப் பிளந்தான் வடிவேலு
”ஏன் மச்சான் முடியாது ? 100 வக்கீல்களை கூட்டிக்கிட்டு எக்மோர் கோர்டுக்கு போயி நீதிபதியை இங்க அங்க நகர விடாம, உங்களுக்குத் தெரியாத சட்டம் இல்ல மைலார்ட்னு பேசுனா குடுக்காம வேற என்ன செய்வாங்க… நீதிபதி வெளியே போகனும் இல்லயா ? ”
”சரி 100 வக்கீல்கள் ஏன் போனாங்க ? ”
”நீதிமன்றத்துக்கு கோடை கால விடுமுறை இது.. வக்கீல்களுக்கு வருமானம் இல்லை. இன்னைக்கு ஒரு நாள் போயி கோர்ட்ல நின்னா, ஆளுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம், பிரியாணி பாக்கெட் தர்றதா சொன்னதும் 100 பேரும் கௌம்பிட்டாங்க…. மகாலட்சுமிக்கு எங்கேர்ந்துதான் பணம் வந்துச்சுன் தெரியலை.. அன்னைக்கு மட்டும் 5 லட்ச ரூபாய் செலவு பண்ணியிருக்காங்க.. ”
”சரி பால் கனகராஜ் ஏன் இப்படி மகாலட்சுமிக்கு சப்போர்ட் பண்றாரு.. ? ”
”பால் கனகராஜ் இதுக்கு முன்னாடி என்ன பண்ணியிருக்கார்.. என்ன பண்ணிக்கிட்டு இருக்கார்ன்ற விபரங்களையெல்லாம், உயர்நீதிமன்றத்துல ஒரு கோஷ்டி சேகரிச்சிக்கிட்டு இருக்காங்க. வக்கீல் சங்க தேர்தல் ஆகஸ்ட் மாசம் வருது… அப்போ மொத்த டீடியிலையும் எடுத்து விடுவாங்கன்னு சொல்றாங்க…”
”சரி.. பெண்கள் பாதிக்கப்பட்ட இந்த மாதிரி விவகாரங்கள்ல ஒரு பெண்ணா இருந்துக்கிட்டு எதுக்காக நீதிபதி வாசுகி ஜாமீன் கொடுத்தாங்க ? ”
”பெண்ணா இருந்தா நல்ல நீதிபதியா இருப்பாங்கன்னு யார் சொன்னது உனக்கு ? வாசுகி நீதிபதியா இருக்கவே தகுதியில்லாதவங்க.. ”
”என்னப்பா இப்படி சொல்ற ? ”
நீதிபதி வாசுகி
”நான் சம்பவத்தை சொல்றேன். நீயே சொல்லு. வெள்ளிக்கிழமை வாசுகி ஜாமீன் நீதிமன்றத்துல அமர்ந்திருந்தாங்க. அன்னைக்கு மட்டும் 1500 ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழக்குகள். எல்லா வழக்குகளையும் முடிக்க நேரம் இருக்காதுன்றதுக்காக, ஐடெம் நம்பர் 721லேர்ந்து 951 வரைக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 420ல பதிவு செஞ்ச அத்தனை வழக்குகள்லயும் ஜுன் 3ம் தேதி வரைக்கும் கைது செய்யக்கூடாதுன்னு ஒரு ப்ளான்கெட் உத்தரவு போட்ருக்காங்க. ”
”மச்சான்… 1500 வழக்குகளை எப்படி ஒரே நாள்ல முடிக்க முடியும் ? அதான் அப்படி உத்தரவு போட்ருக்காங்க.. ” என்று வாசுகிக்காக வக்காலத்து வாங்கினான் பீமராஜன்.
”என்னடா லூசு மாதிரி பேசுற… ? அதுக்காக 230 வழக்குகள்ல மொத்தமா ஜாமீன் குடுக்கறதா…. ? இதுதான் நீதி வழங்குற லட்சணமா ? உலகத்துல எங்கயாவது இந்த மாதிரி ஜாமீன் குடுக்கறத கேள்விப்பட்டிருக்கியா ? வழக்குகள் அதிகம் இருந்தா, மீதம் உள்ள வழக்குகள் நாளை விசாரிக்கிறேன்னு, சனிக்கிழமை விசாரிக்கிறது. அவங்க உயர்நீதிமன்ற நீதிபதி. என்னைக்கு வேணாலும் வழக்கை விசாரிக்கலாம். அதை விட்டுட்டு இப்படியா தீர்ப்பு குடுக்கறது… ? அவங்க ஜாமீன் குடுத்ததுல சஞ்சய் குமார் பாஃப்னான்ற ஒரு ஐபிஎல் சூதாட்ட புக்கி ஒருத்தன் இருக்கான் தெரியுமா ? இந்த அம்மாவையெல்லாம், மை லார்ட்னு கூப்புடுறாங்க பாரு.. தலையெழுத்து..
இது மட்டும் இல்ல… லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சாதகமாவும் உத்தரவு பிறப்பிச்சிருக்காங்க நீதிபதி வாசுகி. கோயம்பத்தூர்ல இருக்கற ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மேல சிபிஐ வழக்கு பதிவு பண்ணாங்க. எந்தவிதமான உட்கட்டமைப்பு வசதியும் இல்லாம 2011-2012ம் ஆண்டுக்கு மாணவர் சேர்க்கை நடத்தியிருக்காங்க. அகில இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுத்து இந்த அனுமதியை வாங்கியிருக்காங்க. இதுக்காக அந்தக் கல்லூரியின் நிர்வாகி சவுந்தரராஜ் முன் ஜாமன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குலயும் வாசுகி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவுல ஜாமீன் வழங்க என்ன காரணம்னு சொல்லியிருக்கார் தெரியுமா ?
அவருக்கு 77 வயசு ஆயிடுச்சு. அதனால அவர் வயசை கருத்தில் கொண்டும், அவரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அவசியமில்லைன்றதுனால ஜாமீன் வழங்குகிறேன்னு சொல்லியிருக்கார். கஸ்டடியில வச்சு விசாரிக்கனுமா, விசாரிக்க வேணாமான்றத முடிவு பண்ண இவங்க யாரு ? அதை முடிவு பண்ண வேண்டியது புலனாய்வு அதிகாரியா இல்லையா ? இது நீதிமன்றத்தின் அதிகாரத்தை மீறிய செயல் மட்டுமில்ல… அயோக்கியத்தனமான செயல். லஞ்சம் குடுத்து, அனுமதி வாங்குவானுங்க. அப்படி வாங்குன சீட்களுக்கு கோடிக்கணக்குல வசூல் பண்ணுவானுங்க… இப்படிப்பட்ட காலேஜ்ல படிச்சுட்டு வர்ற பல் டாக்டருங்க பல் கூசுதுன்னு போனா, பத்து பல்லை புடுங்குவானுங்க…
இப்படிப்பட்ட அயோக்கியனுகளை காப்பாத்துற இந்த நீதிபதி வாசுகி இந்த அயோக்கியர்களுக்கு கொஞ்சமும் சளைச்சவங்க இல்லை.”
”சரி.. டென்ஷன் ஆகாதப்பா தமிழு… அடுத்த மேட்டருக்கு வா.. ”
”ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த வழக்கறிஞரும் சேந்து, கொடைக்கானல்ல பெரிய சொகுசு பங்களா கட்டியிருக்காங்க. ”
”இதுல என்னப்பா தப்பு இருக்கு. நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இணைஞ்சு வேலை செஞ்சாத்தானே நல்ல நீதிபரிபாலனம் செய்ய முடியும் ? ”
”கிழிச்சாங்க. நிதிபரிபாலனம், நிதி பரிவர்த்தனை, நிதி பங்கீடு வேணா செய்வாங்க. அந்த பங்களாவில, இப்போ சென்னை உயர்நீதிமன்றத்துல இருக்கற பல நீதிபதிகள், குடும்பத்தோடு போய் தங்கி, கோடைக்காலத்தை கழிச்சுட்டு வந்துருக்காங்களாம். ”
”இதுல என்னப்பா தப்பு இருக்கு. நட்பு அடிப்படையில போயிருப்பாங்க. ”
”தப்பு இல்லதான்ணே… இதே மாதிரி நட்பு அடிப்படையில தீர்ப்பும் வழங்குவாங்க. அதான் சிக்கலே. ”
அப்புறம், நாம போன வாரம் நீதிபதியாகப் போறவங்க பட்டியல்ல தங்கசிவம்ன்றவர், பவர் ஆப் அட்டார்னி வாங்கிட்டு அரசு ஆக்ரமிப்”
பண்ண நிலத்துக்காக வழக்கு தொடுத்தார்னு பேசிக்கிட்டு இருந்தோம்ல… ? ”
”ஆமா… ”
”அவர் பவர் ஆப் அட்டார்னியெல்லாம் வாங்கலையாம். அந்த நிலத்தையே 2006ல வாங்கியிருக்கார்னு அவர் தரப்பு வழக்கறிஞர்கள் சொன்னாங்க. ”
”அப்போ அவரு நீதிபதியாகத் தகுதியானவர்தானா ? ”
”அந்த நிலத்துக்கு பவர் ஆப் அட்டார்னி வாங்கலையே தவிர, அவருக்கு முழு நேரத் தொழில் ரியல் எஸ்டேட்தான்றதுல எந்த சந்தேகமும் இல்லை. உயர்நீதிமன்றத்தை ரியல் எஸ்டேட் போட்டு விக்கலாம்னா, அவரை நீதிபதியாக்கலாம்.. ”
”சரி போலாம்பா.. சாப்டுட்டு தூங்கலாம். ”
”இருங்கன்ணே.. ஒரே ஒரு மேட்டர் மட்டும் சொல்லிட்றேன். சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியா உத்தரப்பிரதேச மாநில ஐஏஎஸ் அதிகாரி செந்தில்பாண்டியன் இருக்கிறார். இவர் ஸ்டார் டிவி பாலான்ற நபரை அடிக்கடி சந்திச்சு ரொம்ப நெருக்கமா இருக்கறார். ”
செந்தில் பாண்டியன் ஐஏஎஸ்
”அந்த பாலா ஒரு நிழலான நபராச்சே…. ஜாங்கிட்டுக்கு நெருக்கமானவராச்சே…”
”டக்குனு புடிச்சுட்டீங்க. ஜாங்கிட்டுக்கு நெருக்கமான நபர் எப்படிப்பட்டவரா இருப்பார்னு உங்களுக்கு சொல்ல வேணாம். இந்த பாலா, செந்தில் பாண்டியனோட தனக்கு இருக்கற நெருக்கத்தை பயன்படுத்திக்கிட்டு, சரியான வசூல் வேட்டையில ஈடுபட்டு இருக்கறதா சொல்றாங்க. ”
”சரி.. அவர் ஏன் பாலாவோட நெருக்கமா இருக்கறார் ? ”
”போங்கன்ணே… அதெப்போயி கேட்டுக்கிட்டு…”
”அப்படி சொல்ல முடியாதபடி என்னப்பா விஷயம்.. சரி விடு. போலாம் வா.. ”
காலி பாட்டில்களையும், க்ளாஸ்களையும் எடுத்து ஓரமாக வைத்து விட்டு, அனைவரும் கிளம்பினர்.