ஆங்கில வழியில் பயில்வோர் ஆங்கிலத்தில்தான் உள் தேர்வுகள் எழுதவேண்டுமா, அநீதி, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என ஆளாளுக்கு கொதித்தெழ, அரண்டு போன ஜெயலலிதா அம்முயற்சியைக் கைவிட்டார்.
தமிழார்வலர்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டார் புரட்சித் தலைவி. அடுத்து தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை மேலும் பரவலாக்கும் முயற்சியினைக் கைவிடவேண்டும் என இப்போது வலியுறுத்துகின்றனர். சிபிஎம்மும் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்துவதில் முன்னணியிலிருக்கிறது.
இது எந்த அளவு ஆரோக்கியமான போக்கு? ஆங்கிலத்திற்கு எந்த இடம், தமிழிற்கு எந்த இடம்?
மிகச் சிறு பிராயத்தில் தாய்மொழியைத் தவிர வேறு மொழியைக் கற்பதே தேவையில்லாததொரு சுமை என்று ஓர் ஆய்வு கூறுகிறது. தாய்மொழி மூலம் எதனையும் கற்றுக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது என்றும் கூறப்படுகிறது, ஆறாம் வகுப்புவரை ஆங்கிலம் அநாவசியம் என்று கூட சில வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் யதார்த்தமென்ன? அங்கிங்கெனாதபடி ஆங்கிலம் எங்கும் வியாபித்திருப்பதுதான். தாய்மொழியில் பலவற்றைச் சாதிக்கமுடியும் என்று நிரூபித்த ரஷ்யர்களும், சீனர்களும், ஜப்பானியரும் ஆங்கிலம் பக்கம் திரும்புகின்றனர். ஃபிரான்ஸ் நாட்டைத் தவிர வேறு எங்குமே ஆங்கிலத்திற்கெதிர்ப்பில்லை எனலாம். முஸ்லீம் நாடுகளில் ஆள்வோரும் அவர்களது ஏவலாளர்களும் ஆங்கிலம் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆங்கிலம் முடிவு கட்டிவிடுமோ என்று கூட அஞ்சலாம். ஆனால் அவர்களும் ஆங்கிலத்தை ஏதாவது ஒரு வழியில் அனுமதிக்கவே செய்கின்றனர்.
உலகமயமாக்கலின் ஒரு தவிர்க்கமுடியாத பகுதியே ஆங்கிலமும். உலகமயமாக்கலை எவ்வளவு அனுமதிக்கலாம், கூடாது, என முடிவில்லாமல் வாதிட்டுக்கொண்டேயிருக்கலாம்.
அத்தகைய போக்கின் பல்வேறு சீரழிவுகளை நாம் எங்கும் பார்த்துத்தான் வருகிறோம், அமெரிக்காவிலேயே கூட அதற்கெதிர்ப்பெழுந்திருக்கிறது, அடித்தட்டுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதெல்லாம் உண்மையாயினும் கூட எப்படி காலனீய ஆதிக்கம் இந்தியாவிலும் மற்ற பல நாடுகளிலும் நிலவுடைமை அமைப்பினை, மதத்தரகர்களின் கோரப்பிடியினை அசைத்து அறியாமை நீங்க வழி கோலியதோ அதே போல ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்திற்கு உலகமயமாக்கல் வழிசெய்கிறது என நினைக்கிறேன். அதற்குமப்பால் அது தவிர்க்கமுடியாததென்றும் நினைக்கிறேன்.
எந்த ஒரு நாடும் சமூகமும் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பன்னாட்டு சக்திகளைப் புறந்தள்ளமுடியும் என்று தோன்றவில்லை. அப்படிச் செய்ய முயல்வது தாலிபான்களுக்கும் வழிவகுக்கக்கூடும். அல்லது மேற்குலகை நிராகரிப்பதாகக் கூறிக்கொள்ளும் வடகொரியா வகை ‘கம்யூனிச’த்திற்கு.
பல்லக்கு தூக்கும் அளவு உனக்கு வலுவிருந்தால் போதும் அதை மட்டும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எனக் கொக்கரிக்கும் ஆளும் வர்க்கத்தினையும் அவர்களது ஏவலாளிகளான நடுத்தரவர்க்கத்தினரையும் தீவிரமாக எதிர்கொண்டு பொருளாதார சமூக நீதி கணிசமான அளவு உறுதிப்படுத்தப்படுவதைத் தாண்டி உலகமயமாக்கலை எதிர்ப்பது அபத்தம்.
அதே பார்வையிலிருந்துதான் நான் ஆங்கிலத்திற்கான இடத்தையும் பார்க்கிறேன். வேலைவாய்ப்பினை உறுதி செய்வது மட்டுமல்ல, நம் அறிவினை விசாலப்படுத்திக்கொள்ள ஆங்கிலம் தவிர்க்கவியலாதது.
என்ன இல்லை என் தாய்த்தமிழில் என மைக் பிடித்துக்கொண்டு முழங்கலாம். ழ இருக்கிறதா, வள்ளுவம் என்ன சொல்கிறது தெரியுமா, என்றெல்லாம் அரற்றலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் ஆங்கில ஆதிக்கம் தவிர்க்கவியலாதது. அனைத்து தரப்பினரும் அதில் தேர்ச்சி பெறுவதைத் தடுப்பது ஒன்று அறிவீனம் அல்லது இரட்டை வேடம் போடுவதாகும். கருணாநிதி அப்படிச் செய்யலாம், வைகோ செய்யலாம், ஆனால் ஏன் இடதுசாரிகள் இதற்கு இரையாகின்றனர்?
குறிப்பாக ஆங்கிலவழியில் பயில்வோர் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்படவேண்டும் என்பதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது. அப்புறம் எப்படித்தான் ஆங்கிலம் கற்பதாம்? ஆங்கிலவழியில் படித்தேன் பட்டம் பெற்றேன் என்று சொல்லிவிட்டு அரைகுறை ஆங்கில அறிவுடன் வெளியுலகை சந்திக்கும்போது எத்தனைவித இடர்ப்பாடுகளை அம்மாணவர்கள் சந்திக்கவேண்டியிருக்கும்? தமிழார்வலர்களோ இடதுசாரிகளோ அவர்களுக்கு வேலை வாங்கித்தந்துவிடமுடியுமா? தமிழ்வழியில் பட்டம்பெற்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை என்பதைக்கூட எவரும் உறுதிசெய்யமுடியவில்லை. இப்போதெல்லாம் அரசுப் பணிகள்வேறு அருகி வருகின்றன. இந்நிலையில் தமிழ்வழியில் படித்து இவர்கள் சாதிக்கப்போவது என்ன?
வேலை வாய்ப்பின்றி, பிழைப்பதே பெரும் பாடாகும் அவலத்தை இடதுசாரிகள்கூட சரிவர உணராமல் தமிழ்ஜோதியில் கலப்பது ஆகக்கூடுதலான வேதனை.
நமது வழக்கறிஞர்க்ளைப் பார்க்கும்போது, நீதிமன்றங்களில் அவர்கள் வாதாடும்போது ஆங்கிலப் போதாமையின் கொடுமை நமக்கு உறைக்கும். ஆங்கிலம் தெரிந்த வழக்கறிஞர்களுக்கும் தெரியாதவர்களுக்குமிடையே எவ்வளவு பெரிய இடைவெளி என்பது நீதித்துறையினை அவதானிப்பவர்களுக்கே விளங்கும்.
மனு எப்படி பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டார்? பிராமணரல்லாதோர் வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றார். கல்வி ஆதிக்கசாதியினர்க்கும் மட்டுமே என்றிருந்தது. அவ்வாதிக்கத்தை நிலை நிறுத்துவதில் வடமொழி மிக முக்கிய பங்கு வகித்தது. இன்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் நவீன பிராமணர்களாகிவிட்டனர் என்பதே கசப்பான உண்மை.
இந்த ஆளும்வர்க்க-நடுத்தரவர்க்க கூட்டைத் தகர்த்து சமூகத்தினை ஜனநாயகப்படுத்துவதில் ஆங்கிலத்திற்கு மிக முக்கிய பங்கிருக்கிறது.
ஆனாலும் எவ்வினமும் எச்சமூகமும் தாய்மொழியினை புறக்கணிக்கலாகாது. தாய்மொழி வழியே சிலவற்றைக் கற்றுக்கொள்வது எளிதாக இருக்கும் என்பதால் . தொடக்கக் கல்வி மட்டும் தாய்மொழி வழியில் என்றால் போதுமானது.
அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியிலேயே தொடக்கக்கல்வி என்பதை விதியாக்கவேண்டும். ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகள் முற்றிலுமாக அகற்றப்படவேண்டும். எவருக்கும் விதிவிலக்கில்லை.
மேலும் எந்தவொரு மாணவரும் குறிப்பிடத்தகுந்த அளவு தத்தம் தாய்மொழியில் தேர்ச்சிபெறமுடியாமல் பள்ளிப் படிப்பை முடிக்கமுடியாது என்ற நிலையினையும் உருவாக்கவேண்டும். தாய்மொழி அறிவு, பண்பாட்டுக்கூறுகளை நிராகரித்துவிட்டு பொதுவெளியில் அடியெடுத்துவைக்கமுடியாது என்றாகவேண்டும். அதற்கப்பால் அவரவர் விருப்பம், ஆர்வம், சூழல்.
ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழியிலேயே அனைத்து பள்ளிகளிலும் என்றாகவேண்டும். போதுமான அளவு ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கவேண்டும்.
இல்லை, என்ன விலைகொடுத்தாவது உலகமயமாக்கலையும் ஆங்கிலமயமாவதையும் தடுத்து நிறுத்தவேண்டும், அதுவே புரட்சி என்றால் அதற்கு என்னிடம் விடையில்லை.