தலையைத் தொங்க போட்டபடியே சற்று டல்லாக மொட்டை மாடிக்குள் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“என்ன தம்பி… டல்லா இருக்க…“ என்று அவனைப் பார்த்து பதட்டத்தோடு கேட்டார் கணேசன். “ஒண்ணும் இல்லன்ணே“.
“அட சொல்லுப்பா…“
“நம்ப பேசறத கேக்கற நெறய்ய பேரு திட்றாங்கன்ணே… ஏற்கனவே நாட்டுல எல்லாரும் டாஸ்மாக்கால அடிமையாகி கிடக்குறாங்க. நீங்க வேற குடிச்சுட்டு பேசறீங்களேன்னு நெறய்ய பேர் சொல்றாங்கன்ணே…“
“அட இதுக்காப்பா டல்லா இருக்க… ? நாட்டுல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு போதை. ஒருத்தனுக்கு பண போதை. ஒருத்தனுக்கு சொத்து சேக்கற போதை. ஒருத்தனுக்கு பொம்பளை போதை. எல்லாரும் ஏதோ ஒரு போதைக்கு அடிமையாகித்தானே சுத்திக்கிட்டு இருக்கானுங்க… இந்த போதையால ஊர் ஒலகத்தையே நாசம் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க… நம்ப என்னாப்பா.. ஆளுக்கு ரெண்டு ரவுண்டு போட்டுட்டு நாட்டு நடப்பை பேசறோம்… நீ உன் கஸ்டமர்கள் கிட்ட கெடைக்கிற தகவலை குடுக்கற… அதை விவாதிக்கிறோம்.. அந்தத் தகவலை நாங்க எங்க பத்திரிக்கைக்கு பயன்படுத்திக்கிறோம்.. அவ்வளவுதான். இதுக்குப் போயி நீ ஏம்பா டல்லாகுற.. சரி.. என் ஐட்டம் வாங்கிட்டு வந்தியா இல்லையா ? “
“இல்லன்ணே…“
“டேய் எங்களுக்கு பீரும் வாங்கிட்டு வரலையா ? “ என்று கோபமாக கேட்டான் பீமராஜன்.
“இல்ல மச்சான்.. “
“சரி விடு.. நாளைக்காவது ஒழுங்கா சீன் போடாம வாங்கிட்டு வா. இப்போ மேட்டரை ஆரம்பி“ என்று தன் எரிச்சலையும் வெளிப்படுத்தினான் வடிவேலு.
“ஐபிஎல் மேட்டர் பத்தி நெறய்ய தகவல் சொன்னாரு மச்சான் ஒருத்தர். ஏவிஎம் குடும்பத்துல, குருநாத் மெய்யப்பன் கைதானத பத்தி ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. நமக்கு இருக்கற சொத்தே ஏழு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம். அப்புறம் எதுக்கு இவன் இந்த வேலைய செஞ்சான்னு, அவங்க குடும்பத்து பெரியவர் ஒருத்தர் ரொம்ப வருத்தப்பட்டுருக்கார். “
“வாஸ்தவம்தானே… சினிமா இன்டஸ்ட்ரியில அவங்க ஃபேமிலிக்கு ரொம்ப நல்ல பேராச்சே…“ என்று அதை ஆமோதித்தான் பீமராஜன்.
“குருநாத் சீனிவாசன் பொண்ணு ரூபாவை காதலிக்கிறதா சொன்னதும் அவங்க வீட்ல உள்ளவங்களுக்கு அந்தக் குடும்பத்துல சம்பந்தம் பண்றது பிடிக்கலை. ரூபா மேல கோபம் இல்ல. ஆனா சீனிவாசன் எப்பவுமே திருட்டுத்தனமா வேலை செய்யறவர், இவர் வீட்டுல பொண்ணு எடுக்கறதான்னு தயங்கியிருக்காங்க… ஆனா குருநாத் மணந்தால் மகாதேவின்னு ஒத்தைக் கால்ல நின்னுருக்கார். அதையெல்லாம் இப்போ நெனச்சு ரொம்ப வேதனைப்பட்றாங்க“
“சரி… குருநாத் எப்படி இருக்காராம் கஸ்டடியில.. ? “
“மும்பை போலீசுக்கு கிடைச்ச மிகப்பெரிய தங்க முட்டையிடும் வாத்து குருநாத். ஒரு டீம் முதலாளியே பெட்டிங்கில் ஈடுபட்டது, ஐபிஎல்லில், சென்னை சூப்பர் கிங்ஸ் டீமை ஒழிக்கும் அளவுக்கு வல்லமை படைத்தது. ஒவ்வொரு வருஷமும் ஏலம விடும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்கு மட்டும் முக்கியமான வீரர்களை தக்கவைக்கும் வேலையெல்லாம் இனிமே நடக்காது. குருநாத்தை வச்சு, அவர் மாமனாரை காலி பண்ணும்னு பல லாபிகள் வேலை செய்யுது. குறிப்பா வட இந்திய ஊடகங்கள் சீனிவாசனை ஒழிச்சே தீரணும்னு தீவிரமா இருக்காங்க…“
“அவர் ஒரு தமிழர்ன்றதால இப்படிப் பண்றாங்களா மச்சான் ? “ என்று அப்பாவியாக கேட்டான் ரத்னவேல்.
“ஆமாம்டா.. அவர் இந்தி எதிர்ப்புப் போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், காவிரி போராட்டம்னு தமிழர் நலனுக்காக தன்னோட வாழ்க்கையே அர்ப்பணிச்ச மொழிப்போர் தியாகி… அதனால அவரை வட இந்தியர்கள் ஒதுக்கறாங்களா.. ? ஒரு மோசமான திருட்டுப்பயலை வட இந்திய ஊடகங்கள் ஒழிச்சா என்ன.. தென் ஆப்ரிக்க ஊடகங்கள் ஒழிச்சா என்ன ? சீனிவாசன் ஒழிக்கப்பட வேண்டிய ஆள்.
பிசிசிஐ தலைவர் பதவியை சீனிவாசன் ராஜினாமா பண்றதைத் தவிர வேறு வழியே இல்லை. அந்த அளவுக்கு நெருக்கடி முத்தியிருக்கு“
“அப்போ சிமென்ட் சீனு டவுசர் கழண்டுச்சா… ?
“முழுசா இல்ல.. இந்தியா சிமென்ட்ஸ் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்திச்சுக்கிட்டு வருது. இதனால பங்குதாரர்களுக்கும் இவர் பதில் சொல்ல வேண்டி இருக்கும். சீனுவுக்கு அடுத்த சிக்கல், சிபிஐ வடிவில் வர இருக்கு. ஜெகன் மோகன் ரெட்டி மேல போடப்பட்டிருக்கிற வழக்குல, சிமென்ட் சீனுவை குற்றவாளியா சேக்கறதுக்கு நெறய்ய வாய்ப்புகள் இருக்கறதா பேசிக்கிறாங்க. அதுல குற்றவாளியா சேத்தா, அவர் கைது கூட செய்யப்படலாம். “
“சீனுவுக்கு சிக்கல்தான்னு சொல்லு.. “
“ஜெகன் மோகன் ரெட்டி கேஸ் ஆந்திரா சிபிஐகிட்ட இருக்கு. தமிழ்நாட்டு சிபிஐ தங்கள் பங்குக்கு சீனுவை காய்ச்சுவாங்க. 11 வெளிநாட்டுக் கார் வைச்சிருக்கார் சீனு. இந்த 11 காரும் சட்டவிரோதமா, கார் கடத்தல் செய்யும் அலெக்ஸ் ஜோசப் மூலமா இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த வழக்குலயும் சிமென்ட் சீனுவுக்கு சிக்கல் காத்திருக்கு.“
“என்னப்பா இந்த ஆளை இந்தப் பாடு படுத்தறாங்க ? “ என்று சீனுவுக்காக வருத்தப்பட்டான் ரத்னவேலு.
“என்ன ரத்னவேலு பேசற…. ஊரு உலகமே சேந்து அந்த ஆளை ராஜினாமா பண்ணுன்னு சொல்லுது. அந்த ஆளுக்கு சொந்தமா ஒரு ஐபிஎல் டீம் வேணும்னு, பிசிசிஐ விதிகளையே மாத்தியிருக்காரு. சொந்த மருமகன் சூதாட்டத்துல ஈடுபட்டதா கைது செய்யப்பட்டிருக்காரு. ராஜினாமா பண்ணுய்யான்னா முடியாதுன்னு திமிரா உக்காந்துருக்காரு… இந்த ஆளுக்குப் போய் பாவம் பாக்கறியே..
சிமென்ட் சீனுதான் இப்படின்னா… சீனிவாசன் கூட இருக்கற எல்லாருமே மோசமானவங்களாத்தான் இருக்காங்க“
“அது யாருடா அது ? “
“மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்தான். நேத்து டைம்ஸ் ஆப் இந்தியாவுல ஒரு செய்தி வந்துச்சு. பி.எஸ்.ராமன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தோட துணைத் தலைவர். பிசிசிஐ அமைப்பின் வழக்கறிஞர். இப்போ குருநாத் மெய்யப்பனோட வழக்கறிஞராவும் இருக்கறார்னு செய்தி வந்துச்சு. பார் கவுன்சில் விதிகளின்படி, மூத்த வழக்கறிஞர்களா இருக்கறவங்க, கட்சிக்காரர்களோட நேரடியா பேசக்கூடாது. ஜுனியர் வழக்கறிஞர்கள் மூலமாத்தான் பேசணும்.
இதுக்கு மறுப்பு தெரிவிச்சிருக்கற பி.எஸ்.ராமன், என்னை ஈஷ்வர் நன்கனின்ற மும்பை வழக்கறிஞர்தான் இந்த வழக்குக்காக ஆஜராகுமாறு கேட்டுக்கிட்டார். நன்கனி விமான நிலையத்துலயே இருந்தார். விமான நிலையத்துல அவரோட பேசிட்டு நான் வந்துட்டேன். அவ்வளவுதான்னு சொல்லியிருக்காரு.
ஆனா, குருநாத் மெய்யப்பன் கொடைக்கானல்லேர்ந்து மும்பைக்கு போனதும், மும்பை விமான நிலையத்துலேர்ந்து மும்பை குற்றப்பிரிவுக்கு ராமன் போனதெல்லாம் தொலைக்காட்சியிலயே காண்பிச்சாங்க. எப்படிப் பச்சையா கூசாம பொய் சொல்றாரு பாத்தியா… சிமென்ட் சீனுதான் இப்படி இருக்கார்னா, அவர் வக்கீலு அவருக்கு மேல இருக்கார்… என்ன பண்றது.. இவர் கருணாநிதியோட அரசுல அரசு தலைமை வழக்கறிஞரா இருந்தாரு. அப்போ லாட்டரி அதிபர் மார்ட்டினுக்காக கேரளாவுல போய் ஆஜரானாரு… அதுவும் சர்ச்சையாச்சு…“
“திமுக செய்தியைச் சொல்லு மச்சான்…“ என்று தமிழிடம் வினவினான் பீமராஜன்.
“தலைவரோட பிறந்த நாள் கொண்டாட்டத்தை டெல்லி நீதிமன்றம் கெடுத்துடுச்சு மச்சான்… எல்லாப் பிரச்சினையும் முடிஞ்சுடுச்சு. 2ஜி வழக்குலேர்ந்து மகளை காப்பாத்தியாச்சு, இனி எம்.பியாக்க வேண்டியதுதான் பாக்கின்னு சந்தோஷமா இருந்தாரு. ஆனா அதுல டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி மண்ணை அள்ளிப் போட்டிருக்காரு. “
“ஆமா இவரு கூட நீதிமன்றத்தைக் கண்டிச்சு அறிக்கை விட்டாரே.. என்ன மேட்டர் அது ? “
“2ஜி வழக்குல கனிமொழி மேல இருக்கற ஒரே குற்றச்சாட்டு, ஷாஹீத் பல்வாக்கிட்ட இருந்து 200 கோடி ரூபாயை லஞ்சமா கலைஞர் டிவிக்காக வாங்கினாங்கன்றது. ரெண்டு வாரம் முன்னாடி இந்த வழக்குல சாட்சி சொன்ன கலைஞர் டிவி பொது மேலாளர் ராஜேந்திரன்,
அப்போ கலைஞர் டிவிக்கு 200 கோடி தர்றதுக்காக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. ஒரு ஒப்பந்தம் 24.12.2008 இன்னொரு ஒப்பந்தம் 29.01.2009. இந்த இரண்டு ஒப்பந்தத்துலயும் கையெழுத்து போட்டது அமிர்தம். 200 கோடி வாங்கலாம்னு முடிவெடுத்த மீட்டிங் நடந்தது 13.02.2009. ஆனா கனிமொழி 20.06.2007லயே இயக்குநர் பதவியிலேர்ந்து ராஜினாமா பண்ணிட்டாங்கன்னு சாட்சி சொல்லியிருக்கார். 200 கோடி வாங்கலாம்னு முடிவெடுத்த போர்டு மீட்டிங்குல பங்கேற்றது தயாளு அம்மாள்தான்னு சொல்லியிருக்கார். “
“அப்போ தயாளு அம்மாள் குற்றவாளியால்ல சேக்கப்படணும்… ? “
“இதைத் தவிர்க்கறதுக்காகத்தான் தயாளு அம்மாளுக்கு ஞாபக மறதி. உடம்பு சரியில்லைன்னு ஏகப்பட்ட மருத்துவ சான்றிதழ் கொடுத்தாங்க. நீதிபதிக்கு இந்தக் குடும்பம் எப்படிப்பட்ட டகால்டி குடும்பம்னு தெரியாதா என்ன ? சென்னையிலேர்ந்து டெல்லிக்கு ஏகப்பட்ட விமானங்கள் வருது. அதுல ஏதாவது ஒரு விமானத்தை புடிச்சு சென்னை வாங்க. காலையில 10 மணியிலேர்ந்து மதியம் 2 மணி வரைக்கும் எந்த நேரம் உங்களுக்கு வசதியோ, அப்போ விசாரிக்கறேன்னு உத்தரவு போட்டுட்டார். இதை தலைவர் சுத்தமா எதிர்ப்பாக்கலை. அவர் கூட இருக்கற வக்கீலுங்க, தலைவரே.. அருமையான டாக்டர் சர்டிபிக்கேட் குடுத்துருக்கோம். யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. அம்மாவ விசாரணைக்கு கூப்பிடவே முடியாதுன்று ரொம்ப நம்பிக்கை குடுத்துருக்காங்க. அதான் ரொம்ப நம்பிக்கையா பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகள்ல மூழ்கியிருந்தார். “
“சரி சாட்சியம்தானேப்பா சொல்லணும். சொல்லிட்டு வரட்டுமே….“ என்று விகல்பமாக கேட்டார் கணேசன்.
“அண்ணே… அவங்க சாட்சி சொன்னாலே அவங்க கதை முடிஞ்சுது. ராஜேந்திரன் தன்னோடு சாட்சியத்துல, தயாளு அம்மாள் சன் டிவியில பங்குதாரராவும், இயக்குநராவும் இருந்தாங்க. நவம்பர் 2005ல அவங்க வெளியில வந்தாங்க. 20 வருஷமா அவங்க சன் டிவியில இயக்குநரா இருந்துருக்காங்க. டிவி நடத்துறதுல, தயாளு அம்மாவுக்கு 20 வருட அனுபவம் இருக்கு. நிதி தொடர்பான எல்லா முடிவுகளையும் அமிர்தம்தான் எடுப்பார். அமிர்தத்துக்கு ஆலோசனையும் அறிவுரையும் சொல்றது தயாளு அம்மாள். ஜுலை 2007ல் 37 நாட்களுக்கு டிவியை நடத்தற பொறுப்பை தயாளு அம்மாள் சரத்குமார்கிட்ட குடுத்தாங்க. அந்த 37 நாட்கள் கூட, செக்ல கையெழுத்து போட்ற அதிகாரம் சரத் குமாருக்கு தரப்படலை. 60 சதவிகித பங்குகள் வைச்சுருக்கதால, கலைஞர் டிவியை கட்டுப்படுத்தறது தயாளு அம்மாள்தான். எனக்கு எல்லா உத்தரவுகளையும் பிறப்பிக்கறது தயாளு அம்மாள்தான். கலைஞர் டிவியோட துணை நிறுவனமா அஞ்சுகம் பிலிம்ஸ்னு ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டுச்சு. அந்த நிறுவனத்தோட மொத்த நிர்வாகமும் தயாளு அம்மாள்கிட்டதான் இருந்துச்சு.. இந்த மாதிரி ராஜேந்திரன் சாட்சி சொல்லியிருக்கார்.
இந்த நிலையில தயாளு அம்மாள் அங்க போயி சாட்சி சொன்னா.. என்ன ஆகும்… ? அவங்களை குற்றாளியா சேக்கறத தவிர வேற வழியே இல்லை. அவங்களை சேத்துட்டு கனிமொழி விடுவிக்கப்படுவார். இப்போ கலைஞர் நெலமையை நெனச்சுப் பாருங்க… மொதல் வீடா… ரெண்டாவது வீடா… ? யாரை பலி கொடுக்கறது.. யாரைக் காப்பாத்தறது…. தலைவர் வசமாத்தான் சிக்கியிருக்கார். என்ன நடக்குதுன்னு பாப்போம்.. “
“கேப்டன் எப்படிப்பா இருக்காரு.. ? “
“ரொம்ப நொந்து போயி இருக்காரு.. எப்படியாவது மச்சானை ராஜ்ய சபா எம்.பியாக்கிடலாமான்னு நெனச்சவருக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏவா போறது ரொம்ப கவலையை உண்டு பண்ணியிருக்கு. “
“சோகத்துல ரெண்டு ரவுன்ட் சேத்து போடச் சொல்லு“ என்று சொல்லிவிட்டு சிரித்தான் வடிவேலு.
“அதெல்லாம் கரெக்டா போடுவாரு… ரவுண்ட் போடறது இருக்கட்டும். ரவுண்டு கட்டி அடிக்கறாங்களே அம்மா…. அதனால, தன்னோட எம்.எல்.ஏக்களை ராஜ்ய சபை தேர்தல்ல கனிமொழிக்கு ஆதரவு தர முடிவு எடுக்கற மனநிலையில இருக்காரு. கனிமொழிக்கு ஆதரவு தர்றது, இந்த அம்மாவை கடுமையா கோவப்படுத்தும். என் கட்சி எம்.எல்.ஏக்களை கவுக்கற இந்த அம்மாவை இப்படித்தான் பழி வாங்கணும்னு நெனைக்கிறார். இது பாராளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாவும் இருக்கும்னு சொல்றாங்க. “
“சென்னையில தண்ணிப் பஞ்சம் வருமா மச்சான் ? “ என்று அடுத்த விவகாரத்துக்கு தாவினான் பீமராஜன்.
“இப்போ நெலமை சமாளிக்கிற மாதிரி இருக்கு. வட சென்னையில சில பகுதிகளுக்கு தண்ணீர் குடுக்காம பிரச்சினையாயிருக்கு. மழை சீக்கிரம் வரலன்னா நெலமை ரொம்ப மோசமாயிடும்னு சொல்றாங்க. இப்போ இரண்டு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுது. மழை இல்லன்னா பிரச்சினை வரும். அப்போ அந்தப் பிரச்சினையை வைச்சு பெரிய அளவுல போராட்டம் நடத்தனும்னு திமுக தரப்புல திட்டம் போட்டிருக்காங்க.
சென்னையில தண்ணீர் பஞ்சம்னு தெருவுக்கு தெரு கூட்டம் போடணும்னு ஸ்டாலின் சொல்லியிருக்காரு…“
“திருமாவளவன் கூட்டணியில இருக்காரா இல்லையாப்பா ? “
“அவர் தெளிவா இருக்கார். பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணி உள்ள சேத்தா, ஒரு நிமிஷம் கூட திமுகவுல இருக்க மாட்டேன்னு தெளிவா இருக்கார். திமுகவும் பாமகவும் நெருக்கமாகி வர்றது தெரிஞ்சு போன வாரம், அகில இந்திய மனித உரிமை ஆணையத்துல போயி, தொடர்ந்து தலித்துகளுக்கு எதிரா செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க அதனால பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்யணும், மக்கள் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்கணும்னு புகார் கொடுத்திருக்கார்.
இந்தப் புகார் டெல்லியில குடுக்கப்படுறது வரைக்கும் ரகசியமா வச்சுருந்து அதுக்கப்புறம்தான் ஊடகங்களுக்கு சொன்னாங்க. திமுகவுக்கு தெரிஞ்சா, ராஜ்யசபா தேர்தல் முடிஞ்சதும் இதைப் பண்ணலாம். இப்போதைக்கு பண்ணாதீங்கன்னு கலைஞர் சொல்லிடுவாருன்னு திருமா நெனைச்சுதான் இதை ரகசியமா வச்சுருந்தார். “
“சரி காவல்துறை செய்தியைச் சொல்லு….“ என்றான் ரத்னவேல்.
“மண்டியிடாத மானம்….“ என்று தொடங்கியதுமே குறுக்கிட்டான் ரத்னவேல். என்னடா திருப்பித் திருப்பி அதையே சொல்ற…“
“இல்ல மச்சான் போன வாட்டி சொன்னேன்ல அதே அதிகாரியைப் பத்திதான் இந்த செய்தி.
குற்றப்பரம்பரைச் சட்டத்துல உள்ள சாதியைச் சேர்ந்தவங்களுக்காக அரசாங்கம் சென்னை அருகே உள்ள பம்மல்ல நிலம் ஒதுக்குனாங்க. அந்த நிலம் ஒதுக்கி பல வருஷம் ஆயிடுச்சு. அந்த நிலம் யாருக்கு ஒதுக்கப்பட்டதோ அவங்க 13 வருஷம் கழிச்சுதான் அந்த நிலத்தை விக்க முடியும். அது தவிரவும், அதே சமூகத்தைச் சேர்ந்தவங்கக்கிட்டதான் நிலத்தை விக்க முடியும்.
அந்த நிலத்துல 8 க்ரவுண்ட் நிலத்தை சேஷசாயி தன்னோட தம்பி பேர்ல வாங்கியிருக்காரு. “
“இவரு குற்றப்பரம்பரையில வர மாட்டாரே… இவரு மீசை வைக்காத ஐயங்கார் ஆச்சே… ? “
“அதுதான் விசேஷமே… அப்படி வாங்கின நிலத்தை இப்போ விக்க முயற்சி பண்ணியிருக்காரு. அந்தப் பத்திரப் பதிவு அதிகாரி நிலத்தை பதிவு பண்ண மாட்டேன். இது விதிகளுக்கு முரணானதுன்னு சொல்லிட்டாரு. “
“அப்புறம் ? “
“சேஷசாயி காவல்துறை உயர் அதிகாரி ஆச்சே… விட்டுடுவாரா… ? சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவு அதிகாரிக்கிட்ட லோக்கல் இன்ஸ்பெக்டரை விட்டு பேசச் சொல்லியிருக்காரு. அவரு ஆர்டிஓ சொன்னாத்தான் செய்ய முடியும். இது வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட விவகாரம்னு சொல்லியிருக்காரு. உடனே சேஷசாயி ஆர்டிஓக்கிட்ட பேசவும், ஆர்டிஓ சார் பதிவாளர்கிட்ட பேசியிருக்காரு. சார் பதிவாளரும் ஆர்டிஓவின் வாய் மொழி அறிவுரையின்பேரில், பத்திரம் பதிவு செய்யப்படுகிறதுன்னு எழுதி பதிவு செஞ்சுட்டாரு.. “
“மொத்த டீடியிலையும் குடு.. “
“என்னா டீடியிலு… வித்தவரு பேரு எஸ்.என்.கிருஷ்ண சாய். வாங்குனவரு பேரு ட்டி.செபாஸ்டின். பத்திர எண் 3321.2013. பத்திரம் பதிவு செஞ்ச நாள்13/05/2013. இதுக்கு நடுவுல, இவங்க தம்பி மேல மோசடி புகார் கொடுக்க ஒரு க்ரூப் கௌம்பியிருக்கு…“
“அப்புறம்…“
“டிடி நாயுடு மருத்துவக் கல்லூரி உரிமையாளர் தீனதயாள் நாயுடுவை மோசடி புகார்ல கைது பண்ணியிருக்காங்க… அவர் மேல தொடர்ச்சியா புகார்கள் வந்துக்கிட்டு இருக்கு.. “
“நல்ல விஷயம்தானே… ? “
“நல்ல விஷயம்தான். இந்த ஆளு மேல 4 வருஷமாவே தொடர்ந்து பல புகார்கள் இருக்கு. இந்த ஆளு நடத்தற மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் இல்லாத கல்லூரி. ஆனா பலர் இது தெரியாம 20 லட்சம், 30 லட்சம்னு பணத்தைக் கட்டி ஏமாந்துட்றாங்க.
வடக்கு மண்டல ஐஜியா இருக்கற கண்ணப்பன்கிட்டவே பல புகார்கள் இருக்கு. நேர்மையான அதிகாரின்னு சொல்லிக்கிட்டு இருக்கற கண்ணப்பன், இத்தனை நாளா என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு.. ? இவனை முன்னாடியே புடிச்சு உள்ளப் போட்டுருந்தா அப்பாவி பெற்றோர்கள் ஏமாந்துருக்க மாட்டாங்கள்ல ? இவனை மாதிரி ஆட்களை உள்ளப் போட்றத விட்டுட்டு, சாலை மறியல் பண்றவனையெல்லாம் லத்தியை வச்சு அடிச்சு காலை ஒடைப்பேன்னு மெரட்ற வேலையிலதான் கவனமா இருக்கார்.. “
“சென்னையில நடந்த விபத்து விவகாரம் என்ன மச்சான்.. ? “ என்றான் ரத்னவேல்.
“இரவு நேரத்துல நடந்த அந்த விபத்துல ஒரு குழந்தை செத்து போச்சு. தானாவே வந்து சரண்டர் ஆன குதிரை குமார்ன்ற நபரை கைது பண்ணதோட, வண்டி ஓட்ன எம்பீ டிஸ்டில்லரீஸ் உரிமையாளர் மகன் ஷாஜியோட சேந்து குடிச்ச அன்வர் மற்றும் அனில்ன்ற நபர்களை கைது பண்ணியிருக்காங்க…“
ஷாஜி
“நல்லாத்தானே நடவடிக்கை எடுத்துருக்காங்க… ? “
“வண்டி ஓட்ன ஷாஜியை பொதுமக்களே பிடிச்சுக் குடுத்துருக்காங்க. பொதுமக்கள் பிடிச்சுக் குடுத்த ஷாஜியை, ரவிச்சந்திரன்ற இன்ஸ்பெக்டர் தப்பிக்க விட்டுட்டார். இப்படி தப்பிக்க விடுறதுக்காக ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கார். “
“அவரைத்தான் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களே…. “
“சஸ்பெண்ட் பண்ணியது சரிதான். ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிட்டு ஷாஜியை தப்பிக்க விட்டது, குற்றவாளிக்கு உடந்தையான செயல் மற்றும் தடயத்தை அழிக்கிற செயல் இல்லையா. இது இரண்டுமே தண்டனைக்குரிய குற்றம். அந்த இன்ஸ்பெக்டரை இந்திய தண்டனைச் சட்டம் 109 மற்றும் 201ன் கீழ கைது செஞ்சா, மத்த அதிகாரிகள் இது போல தப்பை செய்வாங்களா ? “
“அப்புறம் ஏன் ஜார்ஜ் இதைப் பண்ணாம அமைதியா இருக்கார் ? “
“நம்பளே மாறப்போறோம்… இதை வேற எதுக்கு பண்ணிக்கிட்டுன்னு இருக்கலாம். அன்னைக்கு நைட் அந்த ஷாஜி தப்பிக்க விடாம இருந்துருந்தா, இன்னைக்கு பல தனிப்படைகள், தமிழ்நாடு, கேரளான்னு ஷாஜியை தேட வேண்டிய அவசியமே இருந்துருக்காது. எத்தனை பேருக்கு இதனால வேலை… ?
ஷாஜியோட முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செஞ்சதும் முக்கியமா சொல்லனும். நீதிபதி சி.டி.செல்வம் திமுக நீதிபதின்னு ஊருக்கே தெரியும். 90 நாள் தலைமறைவா சுத்துன அழகிரியோட மகனுக்கு, இவர்தான் முன்ஜாமீன் மனு குடுத்தது. ஆனா இந்த விவகாரத்துலயும், கிரிக்கெட் சூதாட்டத்துல சம்பந்தப்பட்டிருக்கற ஹோட்டல் ஓனர் விக்ரம் அகர்வால் விவகாரத்துலயும் முன் ஜாமீன் மனுவை தயக்கமில்லாம தள்ளுபடி பண்ணிட்டார். “
“அவ்வளவுதானா காவல்துறை செய்தி ? “
“ஐபிஎல் சூதாட்டத்துல சிக்கயிருக்கற ப்ரசாந்த்ன்ற ப்ரோக்கர் குடுத்த தகவல்கள் பல அதிகாரிகளோட வயித்துல கிலியை ஏற்படுத்தியிருக்கு. யார் யார் சிக்கியிருக்கா ?
சாரங்கன் கீழ்ப்பாக்கம் துணை ஆணையரா இருந்தப்பதான் பெட்டிங் கொடிகட்டிப் பறந்துருக்கு. அப்போ கீழ்ப்பாக்கத்துல இருந்த ப்ரசாந்துக்கு சாரங்கன்தான் எல்லா உதவியையும் செஞ்சுருக்கார். இப்போ சிக்கினதும், சிபி.சிஐடி ஐஜி மஞ்சுநாதாகிட்ட போயி சரணடைஞ்சிருக்கார். எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க சார்னு கேட்ருக்கார்…. “
“அடப்பாவிகளா…. ? “ என்று வாயைப்பிளந்தான் பீமராஜன்.
“என்னடா வாயைப் பிளக்கிற… போலீஸ் ஒத்துழைப்பு இல்லாம எப்படிடா கோடிக்கணக்குல பெட்டிங் நடக்க முடியும் ? ஐபிஎல் தொடங்கியதுலேர்ந்தே பெட்டிங் கொடிகட்டிப் பறந்துக்கிட்டுதான் இருக்கு. இது தவிர ப்ரசாந்த் காவல்துறை அதிகாரிகள் டி.பி.சுந்தரமூர்த்தி, முகம்மது ஷகீல் அக்தர், பழைய கமிஷனர் திரிபாதி, புது கமிஷனர் ஜார்ஜ் எல்லாம் எனக்கு ரொம்ப நெருக்கம்னு சொல்லியிருக்கறதா சொல்றாங்க. “
“அது எப்படி மச்சான் இவ்வளவு பேர் இன்வால்வ் ஆகியிருக்க முடியும் ? “
“இப்போ ஸ்ரீசாந்த் விவகாரம் வெளியில வரலன்னா காவல்துறை இந்த விவகாரத்துல நடவடிக்கை எடுத்துருக்கும்னு நெனைக்கிறயா.. ? தமிழ்நாட்டுல பெட்டிங்கே நடக்காத மாதிரி நடிச்சிருப்பாங்க. மற்ற காவல்துறை அதிகாரிகள் மேல சந்தேகம் இருந்ததாலத்தான், இந்த விஷயத்தையே சிபி.சிஐடிக்கிட்ட ஒப்படைச்சிருக்காங்க.
“பத்திரிக்கை செய்தி ஏதாவது இருக்கா தம்பி ? “ என்றார் கணேசன்.
“சன் டிவி ராஜாவை தந்தி டிவியில கூப்புட்றாங்க. மக்கள் டிவியில கூப்புட்றாங்கன்னு இவராவே செய்தி பரப்பிட்டு இருக்காரு. ஆனா அவரை எங்கயும் கூப்புடலை. வீட்டுலதான் உக்காந்துக்கிட்டு மோட்டுவளையை பாத்துக்கிட்டு இருக்காரு. “
“ஜெயா டிவி எப்படி இருக்குதாம் ? “
“ரபி பெர்நார்ட் நிர்வாகத்துக்கு கீழ ஜெயா டிவி வந்த பிறகு நெறய்யவே மாற்றம் வந்துருக்கு. ஜெயா ப்ளஸ் சேனல்ல வந்துக்கிட்டு இருந்த ஜோசிய நிகழ்ச்சி, ரியல் எஸ்டேட் நிகழ்ச்சியால, மாசத்துக்கு ஒன்றரை கோடி ரூபா வருமானம் வந்துக்கிட்டு இருந்துச்சு. எல்லாத்தையும் ஒரே நாள்ல ஏறக்கட்டிட்டார். நல்ல நிகழ்ச்சிகளா பண்ணுங்கன்னு உற்சாகப்படுத்தறார். ஜெயா டிவி ஆரம்பிச்ச 12 வருஷத்துல மொத முறையா எடிட்டோரியல் மீட்டிங் நடத்தறார். ஜெயா டிவியை சரி பண்ணனும்னு பிபிசிலேர்ந்து ஒரு டீமை வரவச்சு முழுக்க ஆய்வு பண்ண வச்சார்.“
“பரவாயில்லயே… நல்லா பண்றாரே… “
“ஆனா அவரை பண்ண விடாம மூணு மும்மூர்த்திகள் தடுக்கறதா வருத்தப்படுறாங்க. “
“அவர் அம்மா நியமனமாச்சேப்பா.. அவரை யாரு தடுக்கறது.. ? “
“தில்லை, ரமணி, ராஜன் இவங்க மூணு பேர்தான் இப்போ மும்மூர்த்திகள். இதுல ராஜன் வாகனம், ஆட்கள் தேர்வு போன்ற விவகாரத்துக்கு இன்சார்ஜ்.
சி.எம் நிகழ்ச்சிக்கு வேணும்னு 3 புது இன்னோவா கார் வாங்கினாங்க. ஆனா எதுக்கு வாங்கியிருக்காங்கன்னே தெரியாம மூணும் தெண்டத்துக்கு வெயில்ல காஞ்சுக்கிட்டு இருக்கு. “
“அடப்பாவமே.. “
“ஆமான்ணே…. சிஎம் அசைன்மென்டுக்கு எப்பவுமே ரமணிதான் போவாரு. ரமணி, முதலமைச்சரோட எட்டாவது செயலாளர்னே சொல்றாங்க. ரமணி தொடர்ந்து சிஎம் அசைன்மென்டுக்கு போறதுனால, ரமணியைக் கேட்டுதான் எதுவா இருந்தாலும் செய்யனும்னு சொல்லப்படாத உத்தரவு. மூணு வருஷ சர்வீஸ் ஆனவங்க எல்லாரும் சிஎம் அசைன்மென்டுக்கு போகலாம்னு ரபி பெர்நார்ட் சொல்றார். அதுக்காக எல்லாருக்கும் புது யூனிபார்ம் தைக்க உத்தரவு போட்டாங்க. ரமணிக்கும் மூணு உதவி கேமரா மேனுக்கும் முதல் செட் யூனிபார்ம் வந்துச்சு. மத்தவங்களுக்கும் யூனிபார்ம் வந்துச்சுன்னா எல்லாரும் போக ஆரம்பிச்சுடுவாங்கன்னு, மத்தவங்க யாருக்கும் யூனிபார்ம் தைக்கிறதையே ரமணி நிறுத்திட்டார்.
“அப்படியாப்பா பண்ணார் ? “
ரமணி
“ஆமான்ணே… எல்லாருக்கும் யூனிபார்ம் வந்துச்சுன்னா, எல்லாரும் சிஎம் அசைன்மென்டுக்கு போக ஆரம்பிச்சுடுவாங்கள்ல ? அப்புறம் இவர் எப்படி சி.எம்.செக்ரட்டரியா இருக்க முடியும் ?
ரமணியும் துக்ளக் ரமேஷும் நெருங்கிய நண்பர்கள். இவங்க ரெண்டு பேரும்தான் எப்போப் பாத்தாலும் அமைச்சர்களை சந்திக்கறது எல்லா வேலையும் பண்றதுன்னு இருக்காங்க.
“சரி தில்லைதானே நியூஸ் எடிட்டர்… அவருக்கு என்ன வேலை ? “
“அம்மா அறிக்கை வந்தா, அதுல சந்திப்பிழை திருத்தறது… அம்மாவை க்ளோசப்ல காட்டும்போது தலையில முடி நரை தெரியாம கேமரா ஆங்கிள் வைக்கறது…. ? “
“ஆமாம்யா.. அந்த அம்மாவுக்கு 23 வயசு ஆகுது… அதனால நரை தெரியக்கூடாது.. ? “
“அண்ணே இதெல்லாம் அந்த அம்மா சொல்றதே கிடையாது… இவனுங்களே இந்த பில்டப்பையெல்லாம் குடுக்கறது.. அம்மா முகத்துல சுருக்கம் தெரியுது.. லைட்டை கம்மி பண்ணுங்கன்னு சொல்றது… ஆட்சி நடத்தறாங்களா சினிமா ஷுட்டிங் நடத்தறாங்களான்னு தெரியல…
ஜெயா டிவியில இருக்கறதுலேயே வீட்டு வசதி வாரிய வீட்டு ஒதுக்கீடு பண்ண வீட்ல இருக்கற ஒரே ஆள் ரமணிதான். பிஆர்ஓக்கள் அத்தனை பேரும் ரமணியோட கைக்குள்ள. திமுக ஆட்சி நடந்தப்போ, அந்த ஆட்சிக்கு எதிரா ரமணி ஒரே ஒரு சிங்கிள் நியூஸ் கூட பண்ணதுல்ல.. ஒரு இடத்துக்குப் போய் ஒரு ஸ்டோரி பண்ணனும்னா எப்படின்றது ரமணிக்கு சுட்டுப் போட்டாலும் வராது. ஆனா இவருக்கு மாசம் 50 ஆயிரம் சம்பளம். இது போக செய்தி வாசிக்கறதுக்கு ஒவ்வொரு ஷெட்யூலுக்கும் 1500 ரூபாய்.. என்னத்தை சொல்ல…
எல்லா விளம்பரங்களும் அவர் மூலமாத்தான் வரணுமாம். செய்தி விளம்பரத்துறை செயலாளர் ராஜாராம் இவருக்கு ரொம்ப நெருக்கமாம்.“
“சரி இன்னொருத்தர் பேர் சொன்னியே.. அவரு என்ன பண்றாரு ? “
“அந்த ராஜன்றவருக்கு முழு நேர வேலையே ஐபிஎல் மேட்ச் பாக்கறதுதான். எப்போப் பாத்தாலும் மேட்ச் பாத்துக்கிட்டே உக்காந்திருப்பாரு.. “
“மேட்சைப் பாக்கறாரா… சியர் கேர்ள்ஸை பாக்கறாரா ? “
“அது அவருக்குத்தாம்பா தெரியும்… வீட்ல சிலிண்டர் தீந்து போச்சுன்னா ஆபீஸ் கேன்டீன்லேர்ந்து சிலிண்டரை எடுத்துட்டுப் போயிடுறாராம்…“
“அடக்கொடுமையே…. அந்த அம்மாவுக்கு இதெல்லாம் தெரியுமா ? “
“அவங்களுக்கும் ஜெயா டிவிக்கும்தான் சம்பந்தம் இல்லையே.. “ என்று சொல்லி விட்டு வாய் விட்டுச் சிரித்தான் தமிழ்.
அனைவரும் சிரித்தனர். “சரி போலாம்பா.. தூக்கம் வருது.. “
“ஒரே ஒரு செய்தின்ணே…. தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விரைவில் சிக்கல் வரும்….“
“யாருப்பா அது ? “
தூக்கம் வருதுன்னு சொன்னீங்கள்ல….. வாங்க போலாம்….