90 வயது. 90 வயதில் ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும். உண்டு, உறங்கி, எப்போது காடு அழைக்கும் என்று காட்டை எதிர்நோக்கி அந்தக் காலத்தைப் போல வருமா என்று புலம்பியபடி காலம் தள்ள முடியும். சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, பெரும்பாலான நேரம் உறங்கி, விழிக்கும் நேரத்தில் உடல் உபாதைகளைப் பற்றி புலம்பிக் கொண்டே பொழுதைப் போக்க முடியும்.
ஆனால், காலையில் எழுந்ததும் அனைத்து செய்தித்தாள்களையும் படித்து, உதவியாளர் சொல்லும் தகவல்களைக் கேட்டறிந்து, எந்தெந்த செய்திகளை பாராட்ட வேண்டும், எந்தெந்த செய்திகளை மறுக்க வேண்டும் என்று தேவையான குறிப்புகளை உதவியாளருக்கு கொடுத்து, கட்சியில் என்ன நடக்கிறது என்பதைக் கேட்டறிந்து, அறிவாலயம் சென்று, கட்சிக்காரர்களைப் பார்த்து, விபரங்களைக் கேட்டறிந்து, கோபாலபுரம் சென்று, மனைவி தயாளுவின் உடல் நிலையை விசாரித்து, மகன் என்ன செய்கிறான் என்று பார்த்து, மதுரை மகன் இன்று ஏதாவது பஞ்சாயத்து வைத்திருக்கிறானா என்பதை விசாரித்துக் கொண்டு, பத்திரிக்கையாளர்களை சந்தித்து, யாரையாவது தாக்கிப் பேசி, தான் பேசுவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விவாதித்து, தொலைக்காட்சி நிருபர் ஏதாவது மோசமான கேள்விகளைக் கேட்டால், அவரைத் திட்டி, மாலை மீண்டும் கட்சித் தலைவர்களோடு ஜெயலலிதாவையும், அதிமுகவையும் பற்றி விசாரித்தறிந்து, ஜெயலலிதாவை வாயாரத் திட்டி, அடுத்து என்ன அறிக்கை விட வேண்டும் என்பதை கேட்டறிந்து, மாலை செய்தித்தாள்களைப் படித்து, இரவு துணைவியார் வீடு இருக்கும் சிஐடி காலனிக்குப் போய், அவர் வைக்கும் ஒப்பாரியை முழுமையாக கேட்டு, மகளை எப்படி ராஜ்யசபை எம்.பியாக்குவது, எவனை வாங்குவது, எவனைக் கவிழ்ப்பது என்று யோசித்து, மகள் சொல்லும் புகார்களைக் கேட்டு, புதிதாக வந்திருக்கும் தமிழ்த்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி காட்டினால் அதை சென்று பார்த்து, அதற்கு விமர்சனம் எழுதி, இரவு உறங்கச் சென்று, மீண்டும் அதிகாலை எழுந்து, மீண்டும் செய்தித்தாள்களைப் படித்து…. …. …..
இதை உங்களால் 90 வயதில் செய்ய முடியுமா ? நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது அல்லவா ? இதை கருணாநிதி 90 வயதில் செய்து கொண்டிருக்கிறார். இது ஒரு மனிதனால் சாத்தியமா என்பதை நம்ப முடியவில்லை. கருணாநிதி ஒரு விஞ்ஞான அதிசயம்தான்.
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளையை விஞ்ஞானிகள் பரிசோதித்தது போல கருணாநிதியின் மூளையையும் பரிசோதிக்கத் தகுந்ததே. அப்படிப்பட்ட அசாத்திய திறமை வாய்ந்தவர் கருணாநிதி. கருணாநிதியைப் போன்ற மிகச்சிறந்த நிர்வாகியைப் பார்க்கவே முடியாது. கருணாநிதியோடு பணியாற்றிய பெரும்பாலான உயர் அதிகாரிகள் அத்தனை பேரும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் விஷயம், கருணாநிதி ஒரு சிறந்த நிர்வாகி என்பது. சட்டம், நிர்வாகம், உளவு, அரசியல், இலக்கியம் என்று கருணாநிதி ஒரு பன்முகத் திறன் படைத்தவர் என்பதை அவர் எதிரிகளும் ஒப்புக் கொள்ளவே செய்வர். கை ரிக்சாவை ஒழித்தது, இலவச கண் சிகிச்சை முகாம், திருமண உதவித் திட்டம், கிராமப்புரங்களை சீர்திருத்த அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராமங்கள் சுய நிர்ணயம் பெறும் வகையில் நமக்கு நாமே திட்டம், இது தவிரவும் பல்வேறு உட்கட்டுமானப் பணிகள் என்று கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்குச் செய்த சேவைகள் குறிப்பிடத் தக்கவை.
இவையெல்லாவற்றையும் விட, கருணாநிதியிடம் குறிப்பிடத்தகுந்த பாரட்டக் கூடிய ஒரு குணம், அவரது சிறந்த நகைச்சுவை உணர்வு. ஜெயலலிதாவுக்கு இந்த உணர்வு சுட்டுப்போட்டாலும் வராது. கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதா சரியான சிடுமூஞ்சி. ஜெயலலிதா எப்போதாவது சிரித்தார் என்றால் அது அதிசயிக்கத்தக்க சம்பவமாக இருக்கும். நான் நல்ல ஆட்சி தருகிறேன் என்று ஜெயலலிதா தான் பேசுவது நகைச்சுவை என்பதே தெரியாமல் ஜோக் அடித்தால்தான் உண்டு.
ஆனால் கருணாநிதியின் ஒவ்வொரு வார்த்தையிலும் சிலேடையும், நகைச்சுவை உணர்வும் இருக்கும். தர்மசங்கடமான கேள்விகளுக்கு சிலேடையாகவும், நகைச்சுவையாகவும் பதில் கூறி, அந்தக் கேள்வியையே முனை மழுங்கச் செய்வதில் கருணாநிதிக்கு நிகரே கிடையாது.
இவையெல்லாம் கருணாநிதியின் ஒரு முகம். கருணாநிதிக்கு மற்றொரு முகம் இருக்கிறது. அது சகித்துக் கொள்ள முடியாத முகம். தொடக்க காலம் முதலாகவே கருணாநிதி, தான் தன் குடும்பம் என்பதை மனிதில் வைத்தே அத்தனை காரியங்களையும் ஆற்றியிருக்கிறார்.
சுயமரியாதை இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையோடு தன் அரசியல் வாழ்வை தொடங்கிய கருணாநிதி, தன் அக்காள் சண்முக சுந்தரம்மாளின் மகன் மாறனை தன் இளமைக் காலம் தொடங்கியே கூடவே வைத்திருந்தார். முதல் மனைவி பத்மாவதியின் மறைவுக்குப் பிறகு, தயாளு அம்மாளைத் திருமணம் செய்த கருணாநிதிக்கு தயாளு அம்மாள் வழியாக அழகிரி, ஸ்டாலின், தமிழரசு மற்றும் செல்வி என்று நான்கு பிள்ளைகள். அடுத்ததாக வந்து சேர்ந்தார் துணைவியார் தர்மாம்பாள் என்கிற ராசாத்தி அம்மாள். அவர் வழியாக கனிமொழி. இந்தக் குடும்பங்களும், மாறனின் குடும்பங்களின் வளர்ச்சியே திமுக மற்றும் கருணாநிதியின் வளர்ச்சி.
எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக தன் மகனை களமிறக்கி தோல்வி கண்ட கருணாநிதி முத்துவின் மீதான நம்பிக்கையை இழந்தார். 1953ல் பிறந்த ஸ்டாலின், 1969 பாராளுமன்றத் தேர்தலில் முரசொலி மாறனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நெருக்கடி நிலையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததைக் காரணம் காட்டியே அவரை கட்சியின் இளைஞர் அணித் தலைவராக்கினார். 1980ல் இளைஞர் அணித் தலைவரான ஸ்டாலின் இன்று வரை அந்தப் பதவியை விடவில்லை. டெல்லியை கவனித்துக் கொள்ள முரசொலி மாறனும், தமிழகத்தில் தனக்கு அடுத்து மு.க.ஸ்டாலினும், தென் தமிழகத்துக்கு அழகிரியும் என்று மெள்ள மெள்ள, போராட்டத்தில் உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தை தனது குடும்ப நிறுவனமாக மாற்றினார் கருணாநிதி.
தனக்கு போட்டி என்று கருதி எம்.ஜி.ஆரை வெளியேற்றினார், தன் மகனுக்கு போட்டி என்று கருதி வைகோவை வெளியேற்றினார். தனக்கும், தன் குடும்பத்துக்கும் யார் யாரெல்லாம் எதிரி என்று கருதினாரோ, அத்தனை பேரையும் ஒழித்துக் கட்டினார். வி.பி.சிங் அரசாங்கத்தில் மந்திரி பதவி என்ற வாய்ப்பு வந்ததும், அப்போது ராஜ்யசபா எம்.பிக்களாக இருந்த யாரையும் பரிந்துரைக்காமல், முரசொலி மாறனைத்தான் பரிந்துரைத்தார் கருணாநிதி. 2004ல் வாய்ப்பு வந்தபோது முரசொலி மாறனின் வாரிசைத்தான் மந்திரியாக்கினார் கருணாநிதி. கட்சியின் தொழிற்சங்கத்தில் முக்கிய பங்காற்றிய செ.குப்புசாமியை எம்.பியாக்கத் தோன்றிய கருணாநிதிக்கு அவரை அமைச்சராக்கத் தோன்றவில்லை. 2009ல் எம்.பியான அழகிரியை மந்திரியாக்கத் தெரிந்த கருணாநிதிக்கு, கட்சி மற்றும் தமிழகத்தின் குரலாக பாராளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றி வரும் திருச்சி சிவாவை அமைச்சராக்கத் தோன்றவில்லை.
பதவிக்கான போட்டிகள் இவர்கள் குடும்பத்திற்குள்தான் எழுந்தனவே தவிர குடும்ப உறுப்பினர் அல்லாதவர்கள் போட்டியிட முடியவில்லை. அழகிரியின் கோபம் பல பேருந்துகளை எரித்தது. தான் வாரிசாகத் தகுதியில்லை என்று சர்வே வெளியிட்டதற்கு வந்த கோபம் மூன்று உயிர்களை பழிவாங்கியது. ஆட்சி பொறுப்பில் இருந்து இவற்றைக் கண்டித்திருக்க வேண்டிய கருணாநிதி, தன் பிள்ளைகளை மயிலிறகால் வருடிக் கொடுத்தார்.
மாறன்களோடு பகை உருவானபோது, அவர்களுக்குப் போட்டியாக தன் மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழியை டெல்லி பிரதிநிதியாக கட்சியின் மீது திணித்தார். தன்னையோ, தன் குடும்ப உறுப்பினர்களையோ தலைவர்களாக ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்பதை ஏறக்குறைய வெளிப்படையாகவே அறிவித்தார். திமுக என்பது, தனது குடும்ப சொத்து என்பதை பகிரங்கப்படுத்தினார் கருணாநிதி.
குடும்பம் என்ற புதைமணலில் சிக்கிய கருணாநிதி அந்த புதை மணலில் இருந்து வெளிவர முடியாமல், அதற்குள் நின்று கொண்டே கட்சி தொடர்பான அத்தனை முடிவுகளையும் எடுக்கத் தொடங்கினார். அப்போது இடுப்பு வரை அவரை விழுங்கியிருந்த புதை மணல், அவர் சிந்தனையை மழுங்கடித்தது.
சிறிது சிறிதாக கருணாநிதியை விழுங்கிய புதை மணல், 2006ல் அவரை கழுத்து வரை விழுங்கியது. தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கும் ஒருவன் சிந்தனை செய்ய முடியாமல் எப்படித் தடுமாறுவானோ, அது போலவே தடுமாறத் தொடங்கினார் கருணாநிதி. அது வரை, மறைமுகமாக அமைச்சர்கள் மூலமாக வசூலில் ஈடுபட்ட கருணாநிதியின் குடும்பம், நேரடியாகவே வசூலில் இறங்கத் தொடங்கியது. இரண்டாம் தாரத்துக்கும், மூன்றாம் தாரத்துக்கும் இடையே இருந்த போட்டிகளும், மாறன் குடும்பத்தோடு நடந்த போட்டிகளும், வரைமுறை இல்லாமல் கொள்ளையடிக்க வைத்தன. டெல்லியில் ஒரு புறமும் தமிழகத்தில் மறு புறமும், கருணாநிதியின் குடும்பம் அடித்த கொள்ளைகள், சம்பல் பள்ளதாக்கில் அடித்த கொள்ளைகளை விஞ்சின. இந்தக் கொள்ளைகளையெல்லாம் தடுத்திருக்கும் வல்லமை படைத்த கருணாநிதி தன் கட்டுப்பாட்டை இழந்து, சண்டை போடாமல் கொள்ளையடியுங்கள் என்றார்.
சொந்தங்களுக்குள்ளேயே சிக்கல் என்ற நெருக்கடி வந்தபோது, சொந்தங்களை விட குடும்பமே பெரிது என்று முடிவெடுத்தார். பிரிந்த சொந்தங்கள், குடும்பத்தை அச்சுறுத்தியதும், சொந்தங்களுக்கும், குடும்பத்துக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தினார். மூன்று உயிர்கள் பலியான விவகாரத்தை, அது முடிந்து போன விவகாரம் என்று புறந்தள்ளினார். இனித்த இதயத்தை தடவிக் கொண்டும் பனித்த கண்களை துடைத்துக் கொண்டும், மறைந்த உயிர்களை மறந்து போனார். தினகரன் நாளிதழில் நடந்த கொலைகளை கருணாநிதி கையாண்ட விதம், அவர் குடும்பத்துக்காக எத்தனை உயிர்களையும் பலி கொடுக்க தயங்க மாட்டார் என்பதை உணர்த்தியது.
ஒரு சாதாரண திரைப்பட எழுத்தாளராக தன் வாழ்வை தொடங்கிய கருணாநிதியின் குடும்பம், இன்று தென்னிந்தியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக உருவெடுத்திருக்கிறது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் அந்த குடும்பத்தின் பேராசைகள் அவர்களை சட்டத்தின் பிடியிலும் சிக்க வைத்திருக்கிறது. பதவி ஆசையில் மகன் கொலை வழக்கை சந்தித்தார். பண ஆசையில் மகள் சிறை சென்றார். பெரும் பேராசையில் மருமகன்கள் சிறை செல்ல இருக்கின்றனர்.
இவர்களைக் காப்பாற்றும் நெருக்கடியில் இருந்த கருணாநிதி தனது அத்தனை விழுமியங்களையும் இழந்தார். தமிழினத் தலைவர் என்று தொண்டர்கள் வாயாரப் புகழ்வதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்த கருணாநிதி அந்த இனத்தின் படுகொலைக்கு மவுன சாட்சியானார். தமிழ் தமிழ் என்று மொழியால் தன்னை வளர்த்துக் கொண்ட கருணாநிதி, அந்த மொழியை வாழவைக்கும் தமிழர்களின் இனப்படுகொலையைப் பார்த்து வாளாயிருந்தார்.
விஞ்ஞானிகளே வியக்கத்தக்க அசாத்தியமான திறமைகளைக் கொண்ட கருணாநிதியை ஒரு தட்டிலும், தன் குடும்பத்துக்காக அந்தத் திறமைகளை சீரழித்த கருணாநிதியை மறு தட்டிலும் வைத்தால், குடும்பத்துக்காக தன் இனத்தை பலிகொடுத்த கருணாநிதியின் பக்கமே எடை கூடுகிறது.
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுக்கும் திறமைக்கும் ஈடு கிடையாது. அந்த ஐன்ஸ்டீன், தன்னுடைய கண்டுபிடிப்புகளை மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்துவதற்கும், கருணாநிதி தன்னுடைய அசாத்திய திறமைகளை குடும்பத்தை வளர்த்து இனத்தை அழிக்க பயன்படுத்தியதற்கும் வேறுபாடு இல்லை.
இந்த வயதிலும், பிடிவாதமாக நீங்கள் அரசியலில் ஈடுபட்டு, மகனுக்குக் கூட பதவியை விட்டுக் கொடுக்காமல் இருப்பதன் காரணம் நீங்கள் நார்சிஸ்ட் என்பது மட்டுமல்ல. நீங்கள் பதவியில் இல்லாமல் இருந்தால், உங்கள் குடும்பங்கள் அடித்துக் கொண்டு தெருவுக்கு வந்து விடுவார்கள் என்பதும்தான். ஆனாலும் இந்த வயதில் நீங்கள் விடாமல் இந்தப் பதவியைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, உங்கள் பிள்ளைகளே ஏசுகிறார்கள்… உங்களை சபிக்கிறார்கள். உங்களைப் பார்த்ததும், அப்பா என்றும் தலைவர் என்றும் அவர்கள் பாசமாகப் பேசுவது நடிப்பு என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் அதை பாசமென்று நம்ப விரும்புகிறீர்கள். இதனால் அது உங்களுக்கு உண்மையாகத் தோன்றுகிறது.
இத்தனை நாட்களாக நீங்கள் குடும்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பங்களுக்காக பல கோடிகளை சேர்த்து வைத்திருக்கிறீர்கள். இது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டிய காலம். நீங்கள் காலதாமதம் செய்வீர்களேயானால், உங்கள் பிள்ளைகளே உங்களை வெளிப்படையாக வெறுக்க நேரிடும். அந்த நிலை உங்களுக்கு இந்த முதிய வயதில் வரக்கூடாது.
சுயசரிதை என்பது ஒரு மனிதனின் உயில் போன்றது. அந்த உயிலில் பெரும்பாலும் பொய் இருக்காது. ஆனால் உங்களின் நெஞ்சுக்கு நீதி ஆறு பாகங்களும் முக்கால் பகுதி பொய்யைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. யாருடைய நெஞ்சுக்கும் நீதி வழங்காதது உங்கள் சுயசரிதை.
உங்களின் இந்த 90வது பிறந்த நாளில், அரசியலில் இருந்து ஓய்வு பெறுங்கள். ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் செய்த துரோகத்தை தமிழர்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள். அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வு பெறுவது ஒன்றுதான் தமிழினத்துக்கு நீங்கள் செய்யும் ஒரே உதவி.
ஓய்வு பெற்ற பிறகு, உங்கள் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களை எழுதுங்கள். உண்மையை எழுதுங்கள். உங்கள் வாழ்வின் உண்மைகள் உங்களோடு அழிந்து போக வேண்டாம்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.