சித்தர்கள் என்பவர்கள் மரபை உடைத்தவர்கள் என்று தமிழ் வரலாற்றில் அறியப்படுகிறார்கள். ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு வகைப்பட்டவர்.
ஏராளமான சித்தர்கள் இருந்தாலும், அகப்பேய்ச் சித்தர், அழுகணிச் சித்தர், குதம்பைச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கஞ்சமலைச் சித்தர், கடுவெளிச் சித்தர் போன்ற சித்தர்கள் பிரபலமானவர்கள். பட்டினத்தார், சிவவாக்கியர் போன்றோர் தனித்து நிற்பவர்கள்.
உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது ?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே ?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே ?
என்று பாடிய சிவவாக்கியர் போல பல தத்துவார்த்த ரீதியான தர்க்கங்களைப் புரிந்தவர்கள் சித்தர்கள்.
நிற்க. இது கடந்த கால சித்தர்கள் வரலாறு அல்ல. நாம் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும், நாம் எல்லோரும் அதை நினைத்துப் பெருமை படக்கூடிய ஒரு நவீன கால சித்தர் பற்றியதே இந்தக் கட்டுரை. இது ஆராய்ச்சிக் கட்டுரையா…. ஆயாசம் வரவைக்கும் கட்டுரையா என்பது குறித்து 90 கவிஞர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.
இந்த சித்தரின் இயற்பெயர் எஸ். அப்துல் ஹமீது. சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி. இந்த அப்துல் ஹமீது. கவிதை எழுதுதல், இலக்கியம் போன்றவற்றில் இவருக்கு இயல்பாகவே ஈடுபாடு உண்டு. தொடக்க காலத்தில் சிறு சிறு பத்திரிக்கைகளுக்கு இவர் மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் கவிதை எழுதி அனுப்புவது வழக்கம். கவிதைகள் எழுதினாலும் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார். ராணி, குமுதம், போன்ற பத்திரிக்கைகளுக்கு கவிதைகள் எழுதி அனுப்புவார். திருச்சி மாவட்டத்தில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த சிறு பத்திரிக்கைகளில் இவரது கவிதைகள் வெளியிடப்படும். “சுட்டும் விழிச்சுடர்” ”சோலைக் குயில்” போன்ற சிறு பத்திரிக்கைகளில் இவரது கவிதைகள் வெளி வந்து கொண்டிருக்கும்.
சிறு பத்திரிக்கைகளில் வரும் நல்ல கவிதைகளை அடையாளம் காட்டுவது வழக்கம். இப்படி ஒரு நாள் கணையாழி இதழில், மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் ஒன்றை சுஜாதா அறிமுகப்படுத்தி எழுதியதும் அவர் பரவலாக அறிமுகமாகிறார். கணையாழி அறிமுகத்துக்குப் பிறகு, இவர் அந்தப் பகுதியில் மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் பரவலாக பேசப்படுகிறார்.
அப்போது இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட லேனா தமிழ்வாணன், திருச்சி வருகையில் இவரை சந்திக்கிறார். இவரைச் சந்தித்து, மணிமேகலை பிரசுரம் சார்பில் இவரது ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது. இந்த கவிதைத் தொகுப்பும் இவரை பிரபலப்படுத்துகிறது. தமிழ்ச் சூழலில் புகழ் பெற்ற எழுத்தாளர்களோடும் அறிமுகம் கிடைக்கிறது. இளம் எழுத்தாளரான மனுஷ்யபுத்திரனை பலரும் ஊக்கப்படுத்துகிறார்கள். காலச்சுவடு இதழ் குழுவினரோடும் அறிமுகம் கிடைக்கிறது
1994ம் ஆண்டுவாக்கில், காலச்சுவடு இதழில் இணைகிறார். ஆசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டதும் இவரது வீச்சு அதிகமாகிறது. 1997ம் ஆண்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் படிக்கிறார். 1999ல் படிப்பை முடிக்கிறார்.
2000ம் ஆண்டில் “தமிழினி” என்று நவீன இலக்கியத்துக்கான ஒரு மாநாடு நடைபெறுகிறது. உலகெங்கும் உள்ள பல இலக்கியவாதிகள் பங்கு பெறுகின்றனர். அந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. அந்த மாநாட்டின் முகமாக மனுஷ்யபுத்திரன் அறிமுகப்படுத்தப்படுகிறார். மாநாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, வந்திருப்பவர்களோடு உரையாடுவது என்று அவரின் செயல்பாடுகள் அவரை பிரபலப்படுத்துகின்றன. இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவர் சேரன். அவர் ஏற்கனவே மிகப் புகழ்பெற்ற கவிஞர் என்பதால், புலம் பெயர்ந்த தமிழர்கள் அவரோடு சிலாகித்துப் பேசுகிறார்கள். இது மனுஷ்ய புத்திரனுக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது.
இந்த விழாவுக்கு கனிமொழி மற்றும் அவர் கணவன் அரவிந்தன் வருகை தந்திருந்தனர். இந்த விழாவில் அரவிந்தனோடு நல்ல நட்பு ஏற்படுகிறது மனுஷ்யபுத்திரனுக்கு. அவ்வளவு நாள் காலச்சுவட்டின் ஆசிரியராகப் பணியாற்றி, தன்னை வளர்த்துக் கொண்ட மனுஷ்யபுத்திரனுக்கு, நாம் எவ்வளவு பெரிய கவிஞர்… நாம் போய் இன்னொரு இதழில் வேலை பார்ப்பதா…. நாமே ஏன் முதலாளி ஆகக்கூடாது என்ற கனவு வருகிறது… யாருக்குத்தான் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்காது ?
அந்த நேரத்தில் கனிமொழியின் கணவர் அரவிந்தன், இணையத்தில் தமிழ் அறிமுகமாகி வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் தொழில் அதிபர் சிவசங்கரன். மின்அம்பலம் என்ற இணைய இதழை நடத்தி வந்தார். அந்த இணைய இதழில் அரவிந்தன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அரவிந்தனுக்கு அந்த இணைய தளத்தில் வேலையெல்லாம் கிடையாது. சிவசங்கரன் யாராவது முக்கிய அரசில் தலைவர்களைப் பார்க்க வேண்டுமென்றால் அரவிந்தனிடம் சொல்லுவார், அரவிந்தன் உடனே அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தருவார். சாதாரணமாக சிவசங்கரன் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்பதற்கும், கருணாநிதியின் மருமகன் மூலமாக அப்பாயின்ட்மென்ட் கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது அல்லவா ?
இப்படி “சிறப்பாக” மின் அம்பலம் இணைய இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார் அரவிந்தன். இந்த இணைய இதழை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக சுஜாதா கணையாழியில் எழுதும் தொடரை மின் அம்லபத்தில் அறிமுகப்படுத்தி, அந்தத் தளம் பிரபலமாவதற்கு முயற்சி செய்தார். அப்போதெல்லாம் இப்போது போல யூனிகோடு கிடையாது. எதைப் பார்க்க வேண்டும் என்றாலும், தனியோ எழுத்துரு தரவிரக்கம் செய்ய வேண்டும்.
2001 தேர்தல் முடிவுகள் வெளியாகி, நாளை ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கிறார் என்றால், இன்று இரவே அரவிந்தனை வேலையை விட்டு நீக்குகிறார் சிவசங்கரன். அரவிந்தனுக்கு அடுத்து என்ன செய்வது என்று யோசனை.. கவிஞர் மனுஷ்யபுத்திரனோடு இணைந்து பணியாற்றலாமே… இருவரும் இணைந்து ஒரு பதிப்பகம் தொடங்கினால் நமக்கும் ஒரு இலக்கிய புரவலர் என்ற பெயர் கிடைக்கும், மனுஷ்யபுத்திரனுக்கும் உதவி செய்தது போலிருக்கும் என்று யோசித்து, மனுஷ்யபுத்திரனிடம் பேசுகிறார்.
ஏற்கனவே காலச்சுவட்டில், தன்னைப் போன்ற உலகக் கவிஞர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கடும் வருத்தத்தில் இருக்கிறார் மனுஷ். அரவிந்தன் இந்த யோசனையைத் தெரிவித்ததும், என்னால் எந்த முதலீடும் செய்ய முடியாது, நான் ஒரு ஏழைக் கவிஞன் என்று தன் இயலாமையைச் சொல்லுகிறார்.
அரவிந்தன்தான் புரவலராயிற்றே… நான் இருக்கிறேன், முதலீட்டைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.. பதிப்பகத்தை மட்டும் நீங்கள் நடத்துங்கள் என்று கூறுகிறார். கரும்பு தின்ன புத்திரனுக்கு கசக்கவா செய்யும். சரி… நம்மை நம்பி யார் புத்தகம் தருவார்கள் என்று கேட்டதும், சுஜாதா அவர் புத்தகங்களை நம்மிடம் தருவார் என்று அரவிந்தன் உறுதி கூறுகிறார்.
எழுத்தாளர் சுஜாதாவுக்கு, ஆங்கிலத்தில் ஹார்ப்பர் அன்ட் காலின்ஸ், பென்குவின் பதிப்பகங்கள் போல தன்னுடைய புத்தகங்கள் தரமாக வர வேண்டும் என்று தனியாத ஆவல் இருந்தது. அரவிந்தனின் முதலீடும், மனுஷ்யபுத்திரனின் உழைப்பும் அதை சாத்தியப்படுத்தும் என்று நம்பி, தன்னுடைய புத்தகங்களுக்கான உரிமையை உயிர்மை பதிப்பகத்துக்கு வழங்குகிறார். அது வரை பல்வேறு சிறுகதைத் தொகுப்புகளாக இருந்த சுஜாதாவின் கதைகள், மத்யமர் கதைகள், விஞ்ஞானச் சிறுகதைகள், என்று பல்வேறு தொகுப்புகளாக வெளிக்கொணரும் திட்டம் உருவாக்கப்படுகிறது.
ஒரு இனிய நாளில் பதிப்பகம் தொடங்குகிறது. தொடக்க வேலைகளை கவனித்து விட்டு, அரவிந்தன் சிங்கப்பூர் சென்று விடுகிறார். பதிப்பக வேலைகள் தொடங்கும் சமயத்திலேயே மனுஷ்யபுத்திரனுக்கு கனிமொழியின் அறிமுகம் கிடைக்கிறது. இந்தப் பதிப்பகத்தை தானும் இணைந்து தொடங்க வேண்டும் என்பதுதான் கனிமொழியின் விருப்பம். ஆனால், அவர் தாயார் அனுமதிக்கவில்லை. “நான் உன்னை மந்திரியாக்கனும், பெரிய ஆளாக்கனும்னு கனவு கண்டுகிட்டு இருக்கேன்.. போயும் போயும் புக் போட்ற வேலையைப் பாக்கறேன்னு சொல்றியே” என்று கடிந்து கொள்கிறார். கனிமொழியும், அத்திட்டத்தைக் கைவிட்டாலும், மனுஷ்யபுத்திரனை நிறையவே ஊக்கப்படுத்துகிறார். அது பின்னாளில் அவருக்கு பெரிய தலைவலியாக அமையப் போகிறது என்பது அவருக்கு அப்போது தெரியாது.
சிங்கப்பூரிலிருந்து அரவிந்தன் மனுஷ்யபுத்திரனை தொடர்பு கொள்ளும்போதெல்லாம், மனுஷ்யபுத்திரன், நான் ரொம்ப பிசி… அமெரிக்காவுல ஜார்ஜ் புஷ் கூப்புட்றாரு… இங்கிலாந்துல டோனி ப்ளேர் வரச்சொல்றாரு என்ற ரேஞ்சில் பிசியாக காட்டிக் கொள்கிறார். அரவிந்தன் ஒரு கட்டத்தில் கடுப்பாகி இந்தியா திரும்புகிறார். திரும்பி வந்து பார்த்தால், பதிப்பகம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மனுஷ்யபுத்திரன் அரவிந்தனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. என்ன இது என்று அரவிந்தன் கேட்டதும்.. இது என்னுடைய பதிப்பகம்.. தேவையில்லாமல் என்னை வந்து தொந்தரவு செய்யாதீர்கள் என்கிறார். எரிச்சலான அரவிந்தன், என்னுடைய முதலீட்டையாவது கொடுங்கள் என்றதும், என்னால் இப்போது தர முடியாது… கொஞ்ச நாள் கழித்து, புத்தகம் விற்றதும் தருகிறேன் என்கிறார்.
கொஞ்ச நாள் கழித்து கேட்டதும், புத்தகங்கள் விற்கவில்லை… இன்னும் கொஞ்ச நாள் என்கிறார். இன்னும் கொஞ்ச நாள் ஆனதும், அரவிந்தன் சற்று கடிந்து கேட்கிறார். அவ்வளவுதான்…. வெகுண்டெழுந்தார் மனுஷ்யபுத்திரன். என்னைப் பார்த்தா இப்படிக் கேட்கிறாய்… உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கருவி, தான் தர வேண்டிய ஒரு சிறு தொகைக்காக, கனிமொழி தன்னை அறைக்குள் அடைத்து வைத்து, சித்திரவதை செய்கிறார் என்று செய்தி பரப்புகிறார் மனுஷ்யபுத்திரன். அரவிந்தன் அதிர்ந்து போகிறார். கனிமொழியோ, இந்த விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று ஒதுங்கிக் கொள்கிறார்.
அரவிந்தன் கடைசியாக, எழுத்தாளர் சுஜாதாவின் மனைவியை சந்தித்து, தன் மீதும், கனிமொழி மீதும் அபாண்டமாக மனுஷ்யபுத்திரன் பழி சுமத்துவதாக புலம்புகிறார். உங்களுக்கு மனுஷ்யபுத்திரன் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்கிறார் சுஜாதா. பத்து லட்சம் என்று சொன்னதும், ஒரே செக்கில் பத்து லட்ச ரூபாயை வழங்குகிறார் சுஜாதா. மனுஷ்யபுத்திரனிடம் இதை எப்படி வசூல் செய்வது என்று எனக்குத் தெரியும். இனி உங்களுக்கு இதனால் தொந்தரவு வராது என்று கூறிவிடுகிறார். சுஜாதா எப்படி இவ்வளவு தைரியமாக இதைச் சொன்னார் என்றால், அப்போதுதான் சுஜாதாவின் மற்ற நூல்களுக்கான காப்புரிமை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பணத்தை சுஜாதாவின் மனைவிக்கு கொடுத்த மனுஷ் வெளியில் சொன்னது என்ன தெரியுமா… ? எவ்வளவு பணம் வச்சுருக்கறானுங்க… இவனுங்களுக்கு என்ன கேடு… என்கிட்ட போயி பணத்தை திருப்பிக் கேக்கறானுங்க…. போனாப்போகுதுன்னு தூக்கி மூஞ்சிலயே அடிச்சிட்டேன்…. என்று கவரிமான் போலவே பேசியிருக்கிறார்.
இதன் பிறகு, மெள்ள மெள்ள மற்ற பிரபல எழுத்தாளர்களின் நூல்களுக்கான காப்புரிமையை வாங்குகிறார் மனுஷ். உயிர்மை பதிப்பகத்தின் நூல்கள் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் சிறப்பாக விற்கின்றன. ஜெயமோகன், ஒலக எழுத்தாளர் காப்ரியெல் கார்சியா மார்க்குவேஸ்… மன்னிக்கவும் சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் நூல்களுக்கான உரிமை உயிர்மை பதிப்பகத்திற்கு கிடைக்கிறது.
பிரபல எழுத்தாளர்களின் நூல்களுக்கான உரிமையும், உயிர்மை இதழின் பிரபலமும், மனுஷ்யபுத்திரனை அமெரிக்க அதிபர் ரேஞ்சுக்கு சிந்திக்க வைக்கிறது. ச்சை… நாம எப்படிப்பட்ட கவிஞன்… நமக்கு ஈடா யாரு இருக்கா தமிழ்நாட்டுல என்ற தொனியில் பேசவும் தொடங்குகிறார்.
சாரு நிவேதிதா ஜெயமோகன், சுஜாதா போன்ற எழுத்தாளர்களின் நூல்களுக்கு உரிமை வாங்கி புத்தகம் போட்டு விற்பனை செய்ததோடு சரி…. ராயல்டி தொகை என்ற பேச்சையே எடுப்பது கிடையாது. இந்த எழுத்தாளர்களும், சரி மனுஷ்யபுத்திரன் கவிஞராயிற்றே… தந்து விடுவார் என்று காத்துக் கிடந்ததுதான் மிச்சம். மனுஷ் டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதையும் தவிர, இந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள், எழுத்தாளரை அடையாளப்படுத்தாமல், மனுஷ்யபுத்திரனின், உயிர்மை வெளியீடு… என்று அவதார் பட ரிலீஸ் ரேஞ்சுக்கு பேசுகிறார்களே தவிர… எழுத்தாளர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுவும் சிக்கலை உண்டு பண்ணுகிறது.
இறப்பதற்கு முன் தன் நண்பரோடு ஸ்ரீரங்கம் சென்றிருந்த எழுத்தாளர் சுஜாதா, செல்லும் வழியில் தன் நண்பரிடம், இதற்கு முன் என்னுடைய பெரும்பாலான புத்தகங்களின் உரிமை திருமகள் நிலையத்திடம் இருந்தது… அவர்கள் செட்டியார்கள்… செட்டியார்கள் ஏமாற்றுவது குறித்து நான் அறிந்திருக்கிறேன். ஆனால் மனுஷ்யபுத்திரன் கூட ராயல்டி தராமல் ஏமாற்றுகிறாரே… என்று கடுமையா வருத்தப்பட்டிருக்கிறார்.
அவரது நண்பர், நீங்கள் உரிமையை மாற்றி, கிழக்கு பதிப்பகத்துக்கு கொடுங்கள். அவர்கள் சரியாக ராயல்டி தருவார்கள் என்று கூறுகிறார். சுஜாதாவும் சரி என்று முடிவெடுக்கிறார். ஆனால் முதல் புத்தகத்துக்கான உரிமை வழங்கப்படுவதற்குள், சுஜாதா இறந்து விடுகிறார்.
சுஜாதாவின் மனைவி, முதலில் ஐந்து புத்தகங்களுக்கு மட்டும் உரிமையை கிழக்கு பதிப்பகத்துக்கு கொடுக்கிறார். அவர்கள் ஒரே வருடத்தில் விற்பனையான அத்தனை நூல்களுக்கும் ராயல்டியை சரியாகத் தருகிறார்கள். இதைப் பார்த்து சுஜாதாவின் மனைவி அதிர்ந்து போகிறார்… அப்போ இத்தனை நாளா மனுஷ்யபுத்திரன் தன்னை ஏமாற்றித்தான் வந்திருக்கிறார் என்று எரிச்சலாகி, பெரும்பாலான புத்தகங்களுக்கான உரிமையை கிழக்கு பதிப்பகத்துக்கு மாற்றுகிறார்.
இது மட்டுமல்ல… சுஜாதா மறைவுக்குப் பிறகு, கவிஞர் “சுஜாதா விருதுகள்” என்று ஒரு விருதை ஏற்படுத்துகிறார். அந்த விருது வழங்கும் விழாவுக்காக, ஆண்டுதோறும் 70 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை, சுஜாதாவின் மனைவியிடம் வசூல் செய்கிறார் கவிஞர். “ராயல்டியும் தர மாட்டேங்கிறான்… விழா நடத்தனும்னு பணத்தையும் கேக்குறான்” என்று புலம்பியிருக்கிறார் சுஜாதாவின் மனைவி.
ஜெயமோகன் மற்றும் உலக எழுத்தாளரும், இதே காரணங்களுக்காக உரிமையை மாற்றுகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணனின் நூல்கள் மட்டும் இன்னும் உயிர்மை பதிப்பகத்தின் வசமே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், எஸ்.ராமகிருஷ்ணனின் மனைவி, குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை, டுபுக்கு கவிஞரின் அலுவலகம் சென்று, எத்தனை புத்தகம் வித்ததது, எத்தனை மீதம், பில் புக்கை எடுங்கள் என்று கணக்கு வழக்குகளை சரிபார்த்து, பணத்தைக் கையோடு வாங்கிக் கொண்டு வந்து விடுவார். இதனால்தான் எஸ்.ராமகிருஷ்ணனின் உரிமை இன்னும் கவிஞரிடம் உள்ளது.
கவிஞரின் திருவிளையாடல் இத்தோடு நிற்கவில்லை. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடம் புத்தகம் போடுகிறேன் என்று வசூலித்து, ஏமாற்றிய கதைகளும் உண்டு. சுவிட்சர்லாந்தில் நளாயினி தாமரைச்செல்வன் என்ற எழுத்தாளர் இருக்கிறார். அவரின் கவிதைத் தொகுப்பை உயிர்மை சார்பில் புத்தகம் போடுகிறேன் என்று 1.25 லட்ச ரூபாயை வாங்கியிருக்கிறார் கவிஞர். அவர் அட்டையைக் கூட வடிவமைத்து அனுப்பி விட்டார். இன்று புத்தகம் போடுகிறேன்.. நாளை புத்தகம் போடுகிறேன் என்று எப்போது பார்த்தாலும் டபாய்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் புத்தகம் போட்டு ஒரு நகலை அனுப்பியிருக்கிறார். அந்தப் புத்தகத்தைப் பார்த்தால், ஏனோ தானோவென்று ஒழுங்கில்லாமல் போடப்பட்ட புத்தகம் அது. புத்தகம் முழுக்க அச்சுப் பிழைகள். ஒரே கவிதை 7 பக்கத்தில் தவறுதலாக மீண்டும் மீண்டும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நளாயினி நேராக வந்து கவிஞரிடம் கேட்டதும்…. உன் புக் இருக்கு வேணும்னா எடுத்துட்டுப் போ…. அவ்வளவுதான் என்னால பண்ண முடியும் என்று கூறியிருக்கிறார். புத்தகம் போட்ட உடன் நான் சென்னைக்கு வந்திருந்தால், நான் அவனைக் கொலையே செய்திருப்பேன்…. எனக்கு இந்தப் பணம் பெரிதல்ல.. அதை நான் இரண்டே மாதங்களில் சம்பாதித்து விடுவேன்… என்னுடைய முதல் புத்தகத்தை இப்படி அலங்கோலமாக அச்சடித்து என்னை அவமானப்படுத்தி விட்டான் என்று புலம்புகிறார் நளாயினி.
பெர்லின் நகரத்தில் மற்றொரு புலம் பெயர் தமிழர். புத்தகம் போடுவதற்காக அவர் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். எப்போது புத்தகம் கேட்டாலும் ஒழுங்காக பதில் சொல்லாமலேயே இருந்த மனுஷ் ஒரு கட்டத்தில் புத்தகம் அச்சடித்து விட்டேன்.. நீங்கள் கொடுத்த பணத்தில் 30 ஆயிரம் புத்தகத்துக்கு செலவாகி விட்டது. மீதம் 10 ஆயிரம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். சில நாட்கள் கழித்து இந்தியா வந்த அவர், கவிஞரிடம் மீதம் உள்ள பணத்தைக் கேட்டதும், அனைத்தும் செலவாகி விட்டது… நீங்கள்தான் எனக்கு 10 ஆயிரம் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த தமிழர் பெர்லினில், டாக்சி ஓட்டி தன் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
சிங்கப்பூரில் மதி கந்தசாமி என்பவரிடம் 5 புத்தகங்கள் போடுவதாகச் சொல்லி ஒரு கணிசமான தொகையை ஆட்டையைப் போட்டிருக்கிறார் இதே போல லண்டனிலும் ஒருவரை ஏமாற்றிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கோபால் பல்பொடி விற்பது போன்று மோசடி செய்திருக்கிறார் கவிஞர். கவிஞரல்லவா… கவிதைக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைகும் பொய்தான் அழகு என்று முடிவெடுத்து விட்டார் போலும்.
இவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர், வெளியிலேயே சொல்லுவதில்லை. சொன்னால் நமக்குத்தான் அசிங்கம்… இந்த நபரிடம் எப்படி பணத்தை வசூல் செய்வது என்று மனம் வெறுத்து விட்டு விடுகிறார்கள். இதுவே கவிஞருக்கு வசதியாகப் போய் விட்டது. இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தவர்தான் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.
இப்படி பொய் சொல்லுவது, ஏமாற்றுவது இதெல்லாம் கவிஞருக்கு கைவந்த கலை. அருந்ததி ராயின் God of Small Things நாவலை, தமிழில் மொழி பெயர்த்து வெளியிட உயிர்மை பதிப்பகமும், David Godwin Associates என்ற பதிப்பகமும் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. அந்த ஒப்பந்தத்தின்படி 18 மாதங்களில் புத்தகத்தை வெளியிட வேண்டும். அப்படி வெளியிடவில்லையென்றால், ஒப்பந்தம் தானாகவே காலாவதியாகி விடும். கவிஞர், மொழிபெயர்க்கப்பட்ட நூலை சாவகாசமாக, 22 மாதங்கள் கழித்து தயார் செய்கிறார். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 18 மாதங்களுக்குள் நூல் வெளியிடப்படாவிட்டால், ஒப்பந்தம் தானாகவே காலாவதியாகி விடும் என்ற தெளிவான ஷரத்தில் கையெழுத்திட்டது சாட்சாத் நமது கவிஞர்தான்.
ஒப்பந்தத்தின்படியே 18 மாதங்களுக்குள் நூல் வெளிவர வேண்டும். ஆனால் சாவகாசமாக நூலை இரண்டு ஆண்டுகள் கழித்து தயார் செய்து விட்டு, எவ்வளவு சாமர்த்தியமாக, கழிவிரக்கம் கொண்டு கவிஞர் புலம்புகிறார் பாருங்கள்… ?
“கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அவருடைய படைப்பின்மீது உயிரைக் கொடுத்து வேலை செய்த ஒரு எழுத்தாளனின் உழைப்பு குறித்து அருந்ததி ராய்க்கு எந்த மரியாதையும் இல்லை. ஒரு நிறுவனம் பற்றி யாரோ போகிறபோக்கில் சொன்ன ஒரு தகவலைச் சோதித்துப் பார்ப்பதற்குக்கூடஅவருக்கு மனமில்லை. தனக்கு செலுத்தப்பட்ட காப்புரிமை தொகை பற்றி அவருக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. எல்லாவற்றையும்விட அவர் தன்னோடு ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தத்தில் ஈடுபட்ட ஒருவரோடு எந்தக் காரணமும் இன்றி பேசக்கூட மறுத்து விட்டார். நான் சோனியாகாந்தியோடு ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட்டு அதுபோன்ற ஒரு பிரச்சினைவந்திருந்தால் அவரை சந்தித்துப் பேசுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் ஆங்கிலத்தில் ஒரே ஒரு நாவல் எழுதிய எழுத்தாளருக்கு இத்தகைய அதிகாரம் எங்கிருந்து வருகிறது? இவர்தான் அதிகார வர்க்கம் பற்றி, முதலாளித்துவம் பற்றிப் பேசுகிறார். ஆதிவாசிகளுக்காகப் பேசுகிறார்.“
இவர் காலதாமதமாக நூலை வெளியிட்டு விட்டு, அருந்ததி ராயைப் பற்றி எப்படி அவதூறு பேசுகிறார் பார்த்தீர்களா ? அதுவும் அருந்ததி ராய் முதலாளித்துவம் பற்றிப் பேசக்கூடாதாம் ? இது போல தனக்குச் சாதகமாக எல்லா விஷயங்களையும் திரித்து ஆதாயம் தேடுவதில், கவிஞர் வல்லவர். தொடர்புடைய இணைப்பு.
கவிஞர் பாதி சித்தராகி விட்டார். மீதி சித்தராவதற்கான முதல் படி நக்கீரனில் தொடர் எழுதத் தொடங்கியதும் அரங்கேறியது. நக்கீரனில் எதிர்க்குரல் என்ற தொடர் எழுதத் தொடங்கினார். நக்கீரனோடு சகவாசம் வைத்த பிறகு என்ன ஆகும்…. ? அந்த குணம் இவரையும் தொற்றியது என்று சொல்வதை விட, இவருக்குள் எப்போதும் இருந்த குணம் கூர்தீட்டப்பட்டது.
ஆம். கவிஞர் சித்தரவாதற்கான அனைத்து தகுதிகளையும் அடைந்தார். தற்போது உயிர்மை பத்திரிக்கையின் விற்பனை அதள பாதாளத்திற்கு போய் விட்டது. கடந்த திமுக ஆட்சியில் மட்டும் உயிர்மை பதிப்பகத்துக்கு ஒன்றரை கோடி மதிப்பிலான லைப்ரரி ஆர்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் கவிஞருக்கு லாபம் மட்டும் பல லட்சங்கள்.
இனி லைப்ரரி ஆர்டர்கள் கிடைக்காது. முக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கான உரிமை பறிபோய் விட்டது. இனி எதிர்காலம் கேள்விக்குறி…. புத்தகம் போட்டுத் தருகிறேன் என்று வசூல் செய்யலாம் என்றால், உலகம் முழுக்க பேர் நாறி விட்டது… இனி பிழைப்புக்கு என்னதான் செய்வது… இருக்கவே இருக்கிறது அரசியல்.
சரி அரசியலில் கனிமொழி மூலமாக நுழையலாம் என்றால், கனிமொழி கிட்டவே சேர்க்க மாட்டார். எப்படி உள்ளே நுழையலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் இருக்கவே இருக்கிறது நக்கீரன். நக்கீரன் தொடர்புகள் வழியாக, கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி ஆறாம் பாக புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்படுகிறார். அந்த விழாவில் இவர் பேசிய பேச்சு இருக்கிறதே….. அப்பப்பப்பா…. திமுகவில் உள்ள பழைய சொம்புகளான வைரமுத்து, துரை முருகன், போன்றோரே அசந்து போகும் அளவுக்கு சொம்படித்திருக்கிறார். அப்படி என்னதான் சொம்படித்தார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த இணைப்பில் படிக்கலாம்.
ஒரே ஒரு சாம்பிள் “இந்த 90-வது வயதில் உலகத் தமிழர்களின் தமிழ் அடையாளத்தின் மிகப்பெரிய ஆலமரமாக கலைஞர் கிளை பரப்பி நிற்கிறார். இந்த விருட்சத்தின் நிழலில்தான் தமிழர்களின் நிகழ்கால அரசியல் சரித்திரத்தின் ஒவ்வொரு இயக்கமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது”
இதில் சிறப்பம்சமே என்னவென்றால், ஸ்டாலினைப் பற்றி இவர் அடித்த சொம்புதான். “கலைஞர் அரசியலில் உருவாக்கிய இந்த மகத்தான பண்புகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவராக இன்று ஸ்டாலின் உருவாகியிருக்கிறார். அரசியல் நாகரிகம், உள்கட்சி ஜனநாயகம், அரவணைத்துச் செல்லும் தலைமைப் பண்பு, உறுதியான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றால் கலைஞரின் அரசியலை ஸ்டாலின் இன்று அடுத்தகட்டத்திற்கு, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறார்.”
எப்போது ஸ்டாலினைப் பற்றிப் பேசினாலும், “பொம்பளை பொறுக்கி” என்றே சொம்படிச் சித்தர் (இப்போது சித்தராகி விட்டார்) அழைப்பது வழக்கம். ஸ்டாலின் பேச்சை எடுத்தால், சித்தர் “அவன் சரியான மக்கு… எதுக்கும் லாயக்கில்ல“ என்றுதான் கூறுவார். இப்படி தனிப்பட்ட முறையில் கூறி விட்டு, சித்தர் அடித்த சொம்பைப் பார்த்தீர்களா… ?
இதுதான் ஒரு கவிஞர் சொம்படிச் சித்தர் ஆன கதை… எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட டிக்கெட் வாங்கினால், எப்படியும் தேர்தலில் ஜெயித்து விடலாம் என்ற மனப்பால் குடிக்கிறார் சொம்படிச் சித்தர்…. பாவம்… ஆனானப்பட்ட குஷ்புவுக்கே தண்ணி காட்றாங்க….
நம்பிகையோடு இருங்கள் சித்தரே…
விவாதங்களில் தரம் இல்லாமல் பேசும் மனிதர் இவர். 2016 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் இடதுசாரி தோழர்களை நீங்கள் ஜெயலலிதாவிடம் 500 கோடி வாங்கினீர்கள் என்று பொது வெளியில் பேசிய மனிதர் இவர். அது போல விவாதத்தில் மாற்றுக்கருத்துத்தை ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போதே நாகரிகம் இல்லாமல் சத்தமாக சிரிப்பது, அவர்களை பேச விடாமல் கூச்சல் போடுவது என சங்கிகளுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல இந்த மனிதர். திமுகவில் சங்கி அணியாக செயல்படும் அரக்கர் கூட்டத்தை சேர்ந்த நபர். இந்தலிடம் நாம் எதை எதிர்பார்க்க முடியும்.
Gave different perspective about Maanush. This could be real face 9f him. Nice to bring out. Good job !!
சொற்படி சித்தர் கதை அருமை
முதல் புத்தகம் போட நினைக்கும் எழுத்தாளர்களுக்கு It will work as a reference material. It creates awareness to be alert from publishers. As usual you have done good job.