அன்புள்ள திவ்யா…
தமிழ் இலக்கியங்களிலும், உலக இலக்கியத்திலும் பல அமர காதல் கதைகள் உண்டு. அவற்றில் பல இன்று வரை சிலாகித்துப் பேசப்படுகின்றன. ஆனால், உங்களுக்கும் இளவரசனுக்குமான காதல், கண் முன்னே ஒரு பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய காதல். தமிழகத்தின் சமன்பாடுகளை புரட்டிப் போட்ட காதல்.
உங்கள் காதல் மற்றும் திருமணத்தின் விளைவாக தமிழகத்தில் ஏற்பட்ட வன்முறைகளும், அதன் பின் தொடர்ந்து நடந்து வரும் கொந்தளிப்பான சூழல்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டும் எழுதப்படும் உள்ளது.
நீங்கள் உங்கள் கணவர் இளவரசனைக் கைபிடித்த நாள் முதலாகவே, பாட்டாளி மக்கள் கட்சியினர் எப்படித் தொடர்ந்து சாதி வெறியைத் தமிழகம் முழுக்க பரப்பி வந்தார்கள் என்பதையும், இதனால் தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழலையும் நீங்கள் அறிவீர்கள். உங்கள் திருமணத்தைக் காரணமாக வைத்து, காலங்காலமாக தமிழகத்தின் நிகழ்ந்து வரும் காதல் திருமணங்களை ஒரே நாளில் தடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் முனைந்து வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.
திருமணம் முடிந்த பிறகு, உங்கள் பெற்றோர் உள்ளிட்ட வன்னிய மக்கள், எப்படி உங்கள் திருமணத்தை முறிப்பதற்கு தொடர்ந்து முயற்சி எடுத்தார்கள் என்பது மற்ற எல்லோரையும் விட உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு, உங்கள் தாயும், உறவினர்களும், பெற்றோர்களும், உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கொடுத்த அழுத்தங்களை எந்தப் பெண்ணாவது சந்தித்திருப்பாரா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு கடுமையான அழுத்தங்களைச் சந்தித்தீர்கள்.
இந்தத் திருமணத்தை உடைப்பதில் உங்கள் பெற்றோர்களை விட, பாட்டாளி மக்கள் கட்சியினர் பெரும் முனைப்போடு செயல்பட்டார்கள். உங்கள் திருமணத்தை அடிப்படையாக வைத்து, ராமதாஸ் தொடங்கிய காதல் எதிர்ப்பு போராட்டங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லையென்றாலும், சமூகப் பின்னலை சிதைத்தது என்பது உண்மையே. இப்படிப்பட்ட பின்புலத்தில்தான், உங்கள் வாழ்க்கை தொடங்கியது.
திருமணக் கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கும் மற்ற பெண்களைப் போன்ற இனிமையான தொடக்கம் உங்களுக்கு அமையவில்லை. கொடைக்கானலில் தேனிலவு கொண்டாடிவிட்டு, புதுக் கணவன் தோள் மீது மையல் கொண்டு சாயும் வாய்ப்பை உங்களுக்கு காலம் வழங்கவில்லை. ஆனாலும் மிகவும் பிடிப்பாகத்தான் உங்கள் வாழ்வை எதிர்கொண்டீர்கள். தந்தையின் மரணத்துக்கும், கலவரத்துக்கும் நீ காதலித்ததுதான் காரணம் என்றும், தந்தையைக் கொன்று விட்டாயே என்றும் உங்களை உங்கள் சமூகத்தினர் ஏசாத ஏச்சு இல்லை. ஆனாலும், அந்த ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் சமாளித்தே வாழ்ந்து வந்தீர்கள். கணவனுக்கு அரசு வேலை என்ற நம்பிக்கையோடு வாழ்வை துவக்கிய உங்களுக்கு, உங்கள் பெற்றோர் அளித்த புகாரின் காரணமாக உங்கள் கணவர் இளவரசன் மீது பதியப்பட்ட வழக்கும், அதன் விளைவாக பறிபோன காவல்துறை வேலையும், கவலையையும் அச்சத்தையும் கொடுத்திருக்கும்.
ஆனாலும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை நீங்கள் கைவிடவில்லை. இளவரசனுக்கு 21 வயது முடியாத காரணத்தால், உங்களுக்கு நடந்த திருமணம் செல்லாது என்றும், அதனால் இளவரசன் உங்களை கடத்தி வைத்துள்ளார் என்று காவல்துறையிடம் மனு அளித்து, உங்கள் திருமணத்தை செல்லாததாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் முயற்சி எடுத்தனர். குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டத்தின்படி, உரிய வயது இல்லாத ஆணோ, பெண்ணோ, அந்த திருமணத்தை ரத்து செய்ய உரிய நீதிமன்றத்தில் மனு செய்து அந்த திருமணத்தை ரத்து செய்யுமாறு கோரலாம். உங்கள் விவகாரத்தில், இளவரசன்தான் இப்படி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இது தெரியாமலோ, அல்லது தெரிந்தும் வேண்டுமென்றோ, இந்தத் திருமணமே செல்லாது என்று பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இதையும் நீங்கள் புறக்கணித்து மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தீர்கள்.
கடுமையான நெருக்கடியில், தந்தை இறந்த துக்கம் அகல்வதற்கு முன்பாகவே உங்களை நீதிமன்ற நடுவர் முன்னிலையில் நேர்நிறுத்தி உங்களை இளவரசன் கடத்தினாரா என்று கேட்டபோது, நான் விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டு வந்தேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறி, உங்கள் பெற்றோர் முகத்தில் கரி பூசினீர்கள். நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள் என்பதை பாட்டாளி மக்கள் கட்சியனர் உணர்ந்தே இருந்தார்கள். உங்களின் மன உறுதி அவர்களை மலைக்க வைத்தது. ஆனாலும் அவர்கள் தங்கள் நோக்கத்தில் உறுதியாகவே இருந்தார்கள். விடாமல் தொடர்ந்து முயற்சி செய்தபடி இருந்தார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியினரின் கைப்பாவையாகவே உங்கள் தாய் மாறி விட்டார். என்ன காரணத்தினாலோ, பெற்ற மகள் வாழாவெட்டியாக வீட்டுக்கு வந்தாலும் பரவாயில்லை, சாதிப் பெருமையே முக்கியம் என்ற முடிவுக்கு உங்கள் தாய் வந்து விட்டார். பாட்டாளி மக்கள் கட்சியினரை விட, உங்கள் தாய் மிகுந்த சாதி வெறியராக மாறி விட்டிருக்கிறார். இன்று அவரோடு துணை நின்று, உங்கள் திருமணத்தை முறிக்கும் முயற்சியில் முனைப்பாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர், தோளோடு தோள் நிற்கிறார்களே… கூப்பிட்டபோதெல்லாம் ஓடி வந்து உதவி செய்கிறார்களே…. மகள் திருமணம் முறிந்தால் அவள் எதிர்காலம் என்ன என்பதைப் பற்றி உங்கள் தாய் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏழு மாதங்கள் ஒரு தலித் இளைஞனோடு குடும்பம் நடத்திய ஒரு பெண்ணை பெருந்தன்மையோடு எந்த வன்னிய இளைஞன் திருமணம் செய்ய முன்வருவான் என்ற கேள்வியும், அவள் காலம் முழுக்க தனியாகவே வாழ நேரும் வாய்ப்பு உள்ளதே என்ற அச்சமும் உங்கள் தாய்க்கு வந்ததாகவே தெரியவில்லை.
கடந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில், இதே வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூட மிகவும் உறுதியாக இருந்தீர்கள். நீதிபதிகள் முன்னிலையிலேயே உங்கள் தாயின் காலில் விழுந்து, என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் அம்மா என்று கதறினீர்கள். ஆனால் உங்கள் தாயோ, முகத்தைத் திருப்பிக் கொண்டு, உங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தார். நீதிபதிகள் மீண்டும், மீண்டும் நீங்கள் இளவரசனோடு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்டபோது, மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்… ஆனால் என் தாய் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே சொன்னீர்கள். அன்று நீங்கள் கதறியபடி, உங்கள் தாயின் அன்புக்காக கெஞ்சியது, கொடுமையான காட்சியாகவே இருந்தது.
உங்கள் தாய் உங்களை அவரோடு அனுப்ப வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவே முழுக்க பொய்யைக் கொண்டிருந்தது. உங்கள் தாய் தனது மனுவில், இளவரசன் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உங்களை கடத்திச் சென்று விட்டார்.. அவரை மீட்டுக் கொடுங்கள் என்று உங்கள் தாய் கூறியிருந்தார். இது பொய் என்பது வெளிப்படையாகத் தெரிந்திருந்தும், பொய்யான மனுவைத் தாக்கல் செய்த உங்கள் தாய் மீது நீதிமன்றம் பெருந்தன்மையாக நடவடிக்கை எடுக்கவில்லை.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல, தொடர்ந்து கொடுத்த அழுத்தங்கள் உங்களை மனம் மாற வைத்திருக்கலாம். தற்போது நீங்கள் இளவரசனிடமிருந்து பிரிந்து வருகையில் கூட, உங்கள் தாய் பொய்யைக் கூறியே உங்களை வரவழைத்திருக்கிறார். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் சேர்க்கப்போகிறார்கள் என்றுதான் உங்கள் உறவினர் தொலைபேசியில் கூறி உங்களை அழைத்திருக்கிறார். உங்கள் தாயைச் சென்று பார்த்ததும் அது பொய் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஆனாலும் இம்முறை நீங்கள் தாயோடு செல்ல விரும்புகிறேன், இளவரசனோடு பேசக்கூட விரும்பவில்லை என்ற முடிவுக்கு வந்து வீட்டீர்கள். இளவரசனோடு பேசக்கூட விரும்பாத நீங்கள் அவர் மீது எந்தக் குறையையும் சொல்லவில்லை. இளவரசனோடு நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள், மகிழ்ச்சியாக இருந்தீர்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். ஏனெனில், வெளியில் ஒரு முகமூடி அணிந்து கொண்டு உலவும் ஆண், தன் மனைவியிடம் அந்த முகமூடியை கழற்றி விடுவான் என்பது கசக்கும் உண்மை. இளவரசன் உங்களை மகிழ்ச்சியாக வைக்கவில்லை என்றால், நீங்கள் எடுத்த முடிவு சரியானதே… நீங்கள் இளவரசனோடுதான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தவோ, வலியுறுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை. ஆனால், இளவரசன் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருந்து, உங்கள் தாயின் மிரட்டலுக்காக இன்று பிரிந்து போகச் சம்மதித்தீர்களேயென்றால், பெரிய தவறை இழைக்கிறீர்கள் திவ்யா.
உங்களை இளவரசனோடு பிரித்து விட்ட பெருமிதத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வலம் வருகிறார்கள். இனி தலித்துகளோடு நடக்கும் எந்தத் திருமணமும் இப்படித்தான் முடியும் என்று அவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடும். அப்படித்தான் செய்யப்போகிறார்கள். இதுதான் அவர்களின் கடந்த ஆறு மாத கால திட்டம். உங்களின் முடிவை வைத்தே, அவர்கள் தலித் இளைஞர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று மிகப்பெரிய பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடக்கூடும். உங்களிடம் இளவரசன் பணம் கேட்டு மிரட்டினார் என்று அடுத்த பொய்ப்பிரச்சாரத்தையும் கையாளக் கூடும்.
திருமணம் முறிந்தது என்று உறுதியாகத் தெரிந்ததும் அவர்கள் உங்களை கருவேப்பிலை போல தூக்கி எரிந்து விடுவார்கள். அவர்களுக்கு உங்களின் பயன்பாடு முடிந்து விடும். அதற்குப் பிறகு, அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் வன்னியர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளப் போய் விடுவார்கள். அப்போது அவர்களுக்கு திவ்யாவின் தேவை இருக்காது. அடுத்த திவ்யாவைத் தேடிப் போய் விடுவார்கள்.
எல்லாம் முடிந்ததும் உங்கள் எதிர்காலம் உங்கள் முன்னால் பூதாகரமாக அச்சுறுத்தும். அடுத்து என்ன என்ற கேள்வி உங்களை மிரட்டும். இன்று வரிந்து கட்டிக் கொண்டு முன்னணியில் நின்று உங்கள் திருமணத்தை முறிக்க கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்யும் ஒரு பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி கூட, உங்களுக்கு தன் மகனை மணம் செய்து வைக்க முன்வரமாட்டார். நட்டாற்றில் விடப்பட்டு விடுவீர்கள்.
தனியாக ஒரு பெண் இந்தச் சமூகத்தில் வாழ்வது எப்படிப்பட்ட சிக்கல் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கவில்லை. படிப்பையும் முழுமையாக முடிக்காமல், கணவனையும் பிரிந்து உங்களால் தனியாக வாழக்கூடிய தன்னம்பிக்கையும் இருக்கலாம். ஆனால், உங்கள் கணவர் இளவரசன் உங்களை அன்பாக பார்த்துக் கொள்வாரென்றால், எதற்காக இந்த விஷப்பரீட்சை ? வறட்டுப் பிடிவாதத்தால் உங்கள் வாழ்வை வரண்ட பாலைவனமாக்க வேண்டுமா ? உங்கள் தாயின் சாதி வெறிக்காக உங்கள் வாழ்வை அஸ்தமனமாக்க வேண்டுமா ?
தற்போது கடுமையான மன உளைச்சலில் இருப்பீர்கள். அன்று நீதிமன்றத்தில் நீங்கள் அழுததை வைத்துப் பார்க்கையில், உங்கள் தாயின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இதை உங்கள் தாயும் நன்றாகவே உணர்ந்திருப்பார். இதைப் பயன்படுத்தி உங்கள் தாய், நான் செத்து விடுவேன் என்று மிரட்டக் கூடும். உங்கள் முன்பாகவே தற்கொலை செய்து கொள்ள முயலக் கூடும். இந்த மிரட்டலுக்கு பயந்து உங்கள் வாழ்வை புதைகுழியில் தள்ள வேண்டுமா ? அல்லது இளவரசனோடு வாழ்ந்து காட்டி, உங்கள் தாயின் பிடிவாதத்தைக் கரைக்க வேண்டுமா என்ற முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும் திவ்யா. நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் வாழ்வில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. எதிர்காலத்தில் காதலித்து மணம் புரியும் பல இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. சாதித்தளைகளை உடைத்து வாழ்வை எதிர்கொண்ட பெண்ணாக நீங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டுமா…. அல்லது சாதியப் பிடிவாதத்துக்காக, தன்னையே அழித்துக் கொண்ட பெண்ணாக பதிவு செய்யப்பட வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழகமே உங்கள் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இளவரசனும்தான்.
அன்புடன்
சவுக்கு