சைதை துரைசாமி… பெரிய மனிதர் போலவும், புரவலர் போலவும் காண்பித்துக் கொண்டு, அயோக்கியத்தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பற்றி, சவுக்கில் விரிவான கட்டுரைகள் வந்துள்ளன.
தற்போது ஏகலைவன் என்ற அரசியல் வார இதழ், சைதை துரைசாமியின் முகத்திரையை கிழித்து, அவரின் அசல் முகம் என்ன என்பதை அம்பலப்படுத்தும் வகையில் “மனிதநேயத்தின் மர்ம பக்கங்கள்” தொடரை தொடங்கியது. இத்தொடர் குறித்து பரவலாக விளம்பரங்களும் செய்யப்பட்டன.
இந்நிலையில், சைதை துரைசாமியின் அசல் முகம் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், சென்னை சிவில் நீதிமன்றத்தில், இத்தொடர் வெளியிடுவதற்கு தடை பெற்றுள்ளார் சைதை துரைசாமி. சவுக்கில் சைதை துரைசாமி பற்றிய கட்டுரைகள் வெளிவந்தபோதே, அக்கட்டுரையை நீக்க வேண்டும் என்று, சைதை துரைசாமி தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, ஏகலைவன் இதழில் வரும் தொடரையும் நிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறாத சைதை, அந்தத் தொடருக்கு தடையாணை பெற்றுள்ளார். தன்னைப் பற்றி வரும் ஜால்ரா கட்டுரைகளை, தனது மனித நேயம் இணைய தளத்தில் போட்டு பெருமை பட்டுக் கொள்ளும் சைதை துரைசாமி, தன்னை அம்பலப்படுத்தும் தொடர் என்றதும், அலறுகிறார்…. அரற்றுகிறார்… அஞ்சி ஓடி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறார்….
இது குறித்து ஏகலைவன் வார இதழின் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,
“சைதை தரப்பினர் “மனித நேயத்தின் மர்ம பக்கங்கள்” தொடருக்கு தடை பெற்றிருப்பது உண்மைதான். ஆனால், நீதிமன்றத்திலிருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை. தடையை உடைப்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறோம்.
“விரைவில் நீதிமன்றத்தில் அதிசயங்கள் நடக்கும்
அதிமுக தலைமையின் உறக்கம் கலையும்
சிட்டுக்குருவிகள் சிறகுகளை விரிக்கும்
வெட்டுகிளிகள் விமானங்களை தகர்க்கும்-“
என்று கூறி முடித்துக் கொண்டார்.
வாசகர்களுக்காக இதோ அந்தத் தொடரின் முதல் பகுதி…
மனித நேயத்தின் மர்ம பக்கங்கள்
மனித நேய அறக்கட்டளை
அதிகார வர்க்கத்தினரால் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை. பல நூறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் உருவாக்கியுள்ளதாக பெருமை பேசும் நிறுவனம். இதன் நிறுவனர் தற்போதைய சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி. ஜெ.வுக்கு அடுத்த படியாக “லீடர் இமேஜ்” உள்ளவராக ர.ர.க்களை ஊடகங்களின் உதவியுடன் நம்ப வைக்க போராடிக் கொண்டிருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்.
இவருக்கு பல முகங்கள்…..
கிராமத்திலிருந்து ஐ.ஏ.எஸ்.கனவோடு சென்னை புறப்படும் மாணவனுக்கு இவர் ஒரு கடவுள். விபரமறிந்த “பசை” பார்ட்டிகளுக்கு இவர் ஒரு “பவர் புரோக்கர்”. தனக்கு ஜால்ரா அடிக்கும் கூட்டத்துக்கு இவர் ஆபத்பாந்தவன். தன்னை எதிர்க்க துடிப்பவர்களுக்கு ஊடகங்களையும், சில காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தி பதவியை பறிக்கும் எமன்.
இப்படி பன்முகம் கொண்டவராய் மக்களிடத்தில் பரிச்சயம் பெற்றிருக்கும் இவரின் கடந்த காலத்தை திரும்பி பார்த்தால் ஒரு உண்மை தெளிவாக புரியும்.
எத்தகைய மனிதனுக்கும் காக்கிகள் வட்டாரத்திலும், பத்திரிகை உலகிலும் நெருக்கமான நட்பு இருந்தால் எந்த பதவியையும் எளிதாக அடைய முடியும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் தத்துவப்படி, இவரின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ஆர்.எம்.வீ.யுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சைதை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணியை வழிநடத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்.
ஜானகி அணியின் அலுவலகம் இவரின் வீட்டில்தான் இயங்கியது. 1989 தேர்தலில் ஜெ.வின் கை ஓங்க, ஜா. அணி, ஜெ. அணியில் இரண்டற கலக்க 1991&ல் மறுபடியும் புது தெம்போடு அதிமுக ஆட்சியை பிடிக்க, இதனை வெறுத்த துரைசாமி அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர், 1994&ம் ஆண்டு நடந்த மைலாப்பூர் இடைத்தேர்தலின் போது, கட்சியில் இணைந்து ஒரே நேரத்தில் இரு துருவங்களாக இருந்த எஸ்.டி.எஸ் ஆதரவாளராகவும், கண்ணப்பன் ஆதரவாளராகவும் காட்டிக் கொண்டவர்.
1991&94 வரை அரசியல் துறவியாய் இருந்தவர் இரண்டே ஆண்டுகளில் பலம் பெற்று 1996&ல் அ.தி.மு.க. ஆட்சியை இழந்த பிறகு, பல முன்னாள் அமைச்சர்களை ஒன்று திரட்டி ஜெ.வுக்கு எதிராக போட்டி அ.தி.மு.க.வை துவக்கியவர்.
ஜெ.வை முடக்க வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாக கொண்ட சைதையின் தீவிர முயற்சியால் தான் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
1996&ல் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், ஜெ.மீது எப்படிப்பட்ட நடவடிக்கையை துவக்குவது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த வேளையில், முன்னாள் அமைச்சர் மாதவன், நீதியரசர் சம்பந்தம் ஆகியோர் சகிதம் முரசொலி மாறனை சந்தித்த துரைசாமி, தனிகோர்ட் தொடங்கினால் வழக்கை விரைவாக விசாரித்து தண்டனை வழங்கலாம் என சட்ட நுணுக்கங்களை எடுத்து கொடுக்கிறார். அவரின் ஆலோசனைப்படி தொடங்கப்பட்ட தனி கோர்ட்தான் இன்றைக்கு ஜெ.வுக்கு பெரும் தலைவலியாய் இருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வருகிறது.
ஜெ. எதிர்ப்பு பின்னடைவை சந்திக்கவே போட்டி அதிமுகவிலிருந்து விலகி மறுபடியும் அரசியல் துறவியாகிறார் சைதை.
தன்னுடைய புத்திசாலித்தனத்தால், அற்புதமான ஒரு கூட்டணியை உருவாக்கி 2001ல் மறுபடியும் ஆட்சியை பிடித்து இந்தியாவை திரும்பி பார்க்க வைக்கிறார் ஜெயலலிதா.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மறுபடியும் தீவிர கட்சி பணி ஆற்ற ஆசைப்படுகிறார் சைதை. இதற்காக தினமலர் பத்திரிக்கையின் அதிபரை சந்தித்து உதவி கோருகிறார். சைதை கட்சியில் இணைந்தால் தென் சென்னையில் கட்சி அசுர பலம் பெறும் என்ற பொருளில் தினமலரில் செய்தி வெளியாகிறது.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். கட்சியில் இணைய சைதை கட்சி தலைமையை அல்லவா அணுகி இருக்க வேண்டும். ஏன் ஒரு பத்திரிகை அதிபரை அணுகினார்–? அதற்கான பதில் ஜெ.வின் “வீக்னஸ்”.
தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகளை பற்றி முரண்பாடான செய்திகள் வந்தால் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரித்து தவறை திருத்துவது கலைஞரின் பாணி. இதற்கு எதிர்மறையாக, சம்பந்தப்பட்ட செய்தியை உளவுத்துறையிடம் கொடுத்து அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது ஜெ.வின் பாணி. ஜெ.வின் நடவடிக்கை முழுக்க முழுக்க உளவுத்துறை ரிப்போர்டை மையமாக வைத்தே இருக்கும் என்பதால் தினமலர் பத்திரிகையில் செய்தியை வரவழைத்தார் சைதை.
செய்தி, உளவுத்துறைக்கு செல்ல, அங்கு தன்னுடைய ஆதரவு அதிகாரிகளை வைத்து, சாதகமான ரிப் போர்ட் தர செய்கிறார் சைதை. (அந்த நேரத்தில் சைதைக்கு மிகவும் நெருக்கமான அலெக்ஸாண்டர் டிஜிபியாக இருக்கிறார். பின்னாளில் இவர் மனித நேய அறக்கட்டளையில் பணியாற்றியது ஊருக்கே தெரியும்). ரிப்போர்ட்டின் அடிப்படையில் சைதையை கட்சியில் இணைத்து மாவட்ட செயலாளர் பதவியும் தருகிறார் ஜெ.
தன்னை எதிர்ப்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு வாழும் ஒருவரை கட்சியில் இணைத்து, ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர் ஆக்குகிறார் என்றால் உளவுத்துறையின் அறிக்கையை ஜெ. எந்த அளவுக்கு நம்புவார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஜெ.வின் இந்த வீக்னசை தன்னுடைய பலமாக மாற்றி கொண்டு ஊடகங்களின் துணையுடன் இன்றைக்கு ஜெ.வுக்கு பிறகு சைதைதான் என்ற நிலையை அதிகாரிகள் மட்டத்திலும், மக்களின் மனதிலும் ஏற்படுத்த முயல்வதாக கூறப்படுகிறது.
இதற்கு சில பத்திரிகை அதிபர்களும், சில காவல்துறை அதிகாரிகளும், சில வயோதிக வாலிபர்களும் துணை நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை.
2002ல் சைதையில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட சீட் எதிர்பார்க்கும் சைதை, ராதாரவிக்கு சீட் கிடைத்தவுடன் மறுபடியும் ஓதுங்க ஆரம்பிக்கிறார். 2001-2006 ஆட்சியில் பவர்புல்லான மனிதராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சைதையின் ஆரம்ப கால சிஷ்யர் என்பதால் சைதையின் மீது கரிசனம் காட்ட ஆரம்பிக்கிறார்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவு கூற வேண்டும். 1989 சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெ.வை எதிர்த்து ஜானகி அணி சார்பில் களம் இறங்கிய வெண்ணிற ஆடை நிர்மலாவின் தலைமை தேர்தல் குழு பொறுப்பாளராக பொறுப்பு வகித்தவர் ஓ.பி.எஸ்.
அந்த பழைய பாசத்தால் தான் தன்னுடைய மருமகனும் வழக்கறிஞருமான காசிராஜனை சேர்த்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும்படி கேட்டுக் கொள்கிறார் ஓ.பி.எஸ். இவர்களோடு உதவி கலெக்டர் மகன் கார்த்திகேயனும் சேர்ந்து கொள்கிறார்.
காசிராஜனும், கார்த்திகேயனும் மெத்த படித்த மேதா விகள் என்பதால், இவர்களின் மூளையில் உதித்தது தான் “மனித நேயம்”.
மனித நேய அறக்கட்டளை உருவான வரலாறு சுவாரஸ்யமானது. நீங்கள் நம்புவது போல ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்து அவர்களை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக்குவது அவர்களின் இலட்சியமும் அல்ல, குறிக்கோளும் அல்ல.
தமிழகத்தின் தலையெழுத்தை திருத்தி எழுதும் திறன் கொண்ட ஒரு தினசரி பத்திரிகையின் அதிபர். மத்தியில் கோலோச்சும் ஒரு பெண் அமைச்சர் ஆகியோரை பங்கு தாரராக சேர்த்து கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்குடியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சாலையில் 2 ஹெக்டேர் பரப்பளவில் ஆர்.எம்.இசட் மில்லினியா என்ற கட்டிடத்தை கட்டி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார் சைதை. (இதன் கதை தனிக்கதை. அதைப்பற்றிய விபரங்கள் தனி தொடராக பின்னர் வெளிவரும்) இதில் மாத வாடகையாக அவர் பெறும் தொகை ரூ.85 லட்சம். வாடகை மூலம் வருவாய் வந்தால் அதற்கு வரி கட்ட வேண்டுமல்லவா? அந்த வரியிலிருந்து தப்பித்து, வரிவிலக்கு பெறுவதற்காக துவக்கப்பட்டது தான் மனித நேய அறக்கட்டளை. அதற்கான நிதி ஆர்.எம்.இசட் மில்லினியத்தின் வருவாயிலிருந்துதான் வருகிறது.
(தொடரும்)
நன்றி
ஏகலைவன் அரசியல் வார இதழ்.