Article updated.
Check the note at the end.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பணி என்ன… ? கட்சியின் கொள்கைப்படியோ, அல்லது கட்டளைப்படியோ பாராளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும். முக்கியமான விவாதங்களில் பங்கெடுத்துப் பேச வேண்டும். அவர் சார்ந்த மாநிலத்தின் நலன்கள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இதுதான் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பணிகள்.
இதைச் செய்வதற்கு, அந்த உறுப்பினர் படித்தவராக இருந்தால் நலம். படித்தவராக இருந்து சொல்வன்மை படைத்தவராகவும் இருந்தால் இன்னும் நலம். மக்களவை தேர்தலில் இப்படிப்பட்ட தகுதிகள் கொண்டவர்களை தேர்ந்தெடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஆக்குவது என்பது நடைமுறையில் அரசியல்கட்சிகள் கடைப்பிடிக்காத ஒரு விஷயம். ஏனென்றால், காசு, பணம், துட்டு, மணி இல்லாதவர்களை அரசியல் கட்சிகள் சட்டை கூட செய்வதில்லை. இடது சாரிகள் இதற்கு விதிவிலக்கு.
மாநிலங்களவைத் தேர்தலில் இது போன்ற நெருக்கடிகள் இல்லை. தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை வைத்து, திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும், வசதியும் இருந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் கூட, இரு திராவிடக் கட்சிகளும் மோசடித்தனத்தையும், அயோக்கியத்தனத்தையுமே அரங்கேற்றுகின்றன.
தற்போது அதிமுக சார்பாக நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 5 வேட்பாளர்களில் ஒருவர் சரவணன் என்கிற சரவணபெருமாள். இவர் ஊர் புதுக்கோட்டை அல்ல… தூத்துக்குடி. 54 வயதாகும் இந்த சரவணபெருமாள்தான், அதிமுகவின் மாணவர் அணிச் செயலாளர். 54 வயதில் என்ன படிக்கிறார் என்று அதிகப்பிரசங்கித்தனமாக கேள்வி கேட்காதீர்கள். வாழ்க்கையை படிக்கிறார். வாழ்க்கையை தொடர்ந்து படித்து, அதில் தேர்ச்சி பெற்றதன் விளைவாகத்தான் இன்று அதிமுக சார்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எம்.ஏ.பி.எல் படித்தவர் என்று போட்டுக் கொள்ளும் சரவணபெருமாளுக்கு ஒரு பெரிய பின்புலம் உண்டு. இவருக்கு தொழில் கடத்தல். கிட்டத்தட்ட வேலு நாயக்கர் போல… தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள், தங்கம், வெள்ளி, சிகரெட் போன்ற அனைத்துப் பொருட்களையும் கடத்தும் வழக்கம் உள்ளவர்.
இப்படித்தான் 1989ம் ஆண்டில் ஒரு முறை கப்பலில் ரகசியமாக வெள்ளிப் பொருட்களை கடத்தி வருகிறார். அப்படி கடத்தி வந்த வெள்ளிக்கட்டிகளை புன்னக்காயல் என்ற இடத்திலிருந்து முக்கனி என்ற இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கு மாட்டு வண்டியை வாடகைக்கு அமர்த்தி எடுத்துச் செல்கிறார். அவ்வாறு எடுத்துச் செல்கையில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அந்த மாட்டு வண்டிகளை இடைமறித்து சோதனையிடுகிறார்கள்.
சோதனையிட்டால் கடத்தல் பொருட்கள் சிக்கிவிடும் என்று அறிந்த சரவணபெருமாள், தனது ரவுடிப் பரிவாரங்களை அழைத்துக் கொண்டு, சோதனையிட்ட அதிகாரிகளை ரவுண்டு கட்டி அடிக்கிறார். அந்த அதிகாரிகள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி, தங்கள் தலைமை அலுவலகத்துக்கு தகவல் சொல்லுகின்றனர். பின்னர் ஒரு பெரும் போலீஸ் படையோடு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், மாட்டு வண்டியில் இருந்த அனைத்து வெள்ளிக்கட்டிகளும் மாயமானதை கண்டு அதிர்ச்சியாகின்றனர்.
ஒரு பெரும் கஸ்டம்ஸ் அதிகாரிகளின் குழுவே அந்தப் பகுதியில் ஆறு நாட்கள் தேடுதல் வேட்டை நடத்துகிறது. அப்படி நடத்தியதில், 113 வெள்ளிக்கட்டிகள் கண்டு பிடிக்கப்படுகின்றன. அந்த வெள்ளிக்கட்டிகள் 999.0 அளவுக்கு சுத்தமான வெள்ளியாக இருக்கின்றன. 1989ம் ஆண்டில் அந்த வெள்ளிக்கட்டிகளுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் செய்த மதிப்பீடு என்ன தெரியுமா ? 2 கோடியே 50 லட்சம். அந்த வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, சரவணபெருமாள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
அடுத்த வழக்கு 1991ம் ஆண்டு எம்.வி.அல்காரா என்ற கப்பலில் வெள்ளிக்கட்டிகள், சிகரெட்டுகள் போன்றவை கடத்தி வரப்பட்டு, அவையும் சுங்க அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றன. அந்த வெள்ளிக்கட்டிகளின் மதிப்பு 2 கோடியே 36 லட்சம் ரூபாய். சிகரெட் உள்ளிட்ட இதர பொருட்களின் மதிப்பு 1 கோடி ரூபாய் இது தொடர்பாகவும் இவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
தொடர்ந்து கடத்தல் வேலைகளில் ஈடுபட்டதால் சரவணபெருமாள் காபிபோசா சட்டத்தின் கீழ், தடுப்புக் காவலில் அடைக்கப்படுகிறார்.
19.07.1994 அன்று, தூத்துக்குடி மத்திய காவல் நிலைய எல்லைக்குள், முருகானந்தம் என்பவர் ரவுடிக் கும்பலால் படுகொலை செய்யப்படுகிறார். இந்த ரவுடிக் கும்பலை வழிநடத்தி அருகில் இருந்து படுகொலையை அரங்கேற்றியவர். இது தொடர்பாக தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் இவர் மீது குற்ற எண் 546/94 பதிவு செய்யப்படுகிறது. இது தவிரவும் இவர் மீது 1990ம் ஆண்டில் வெடிகுண்டு வீசி ஒருவரைக் கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இப்படி தொடர்ச்சியாக இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் 19.02.1994 அன்று காவல்துறையில் இவரை ரவுடிகள் பட்டியலில் வைக்கின்றனர்.
2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை எதிர்த்து போட்டியிட்டு, தோல்வியடைந்தவர். பின்னர் மீண்டும் தாய்க்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த சரவண பெருமாளுக்குத்தான் தற்போது ராஜ்யசபா எம்.பியாகும் வாய்பை வழங்கியிருக்கிறார் ஜெயலலிதா. ஓ.பன்னீர்செல்வத்தின் பரிந்துரையில்தான் இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா மிகச்சிறந்த நிர்வாகி, அம்மாவைப் போல நிர்வாகத்திறன் கொண்டவர் யாருமே இல்லை என்றெல்லாம் அதிமுக அடிமைகள் தொடர்ந்து புகழ்ந்த வண்ணம் உள்ளார்கள். இதுதான் ஜெயலலிதாவின் நிர்வாக லட்சணம். ராஜ்யசபாவுக்கு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்களில் டாக்டர் மைத்ரேயன் ஏற்கனவே எம்.பியாக இருந்தவர். மற்றவர்களைப் பற்றி உளவுத்துறையிடம் விசாரித்து அறிக்கை அளியுங்கள் என்றால் பத்து நிமிடத்தில் அறிக்கை அளித்து விடுவார்கள். அதுவும், சரவணப்பெருமாள் போன்ற ரவுடிப்பட்டியலில் உள்ள நபரைப் பற்றி தகவல் எடுப்பது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.
ஆனால், அதிமுக வேட்பாளர்களை அறிவித்து விட்டு, இப்போதுதான் ஜெயலலிதா இவர்களைப் பற்றி விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுதான் சிறந்த நிர்வாகியின் லட்சணம்.
சரி.. இப்போது விஷயத்துக்கு வருவோம். இப்படி கடத்தல், கொலை, காபிபோசா போன்ற எல்லா தகுதிகளும் கொண்ட இந்த சரவணப்பெருமாள் சிறந்த எம்.பியா இல்லையா என்பதை நீங்களே கூறுங்கள்.
குறிப்பு : திரு சரவணபெருமாள் அனைத்து வழக்குகளில் இருந்தும் நீதின்மன்றங்களால் விடுவிக்கப்பட்டார். தற்போது, ரத்ததான சேவையில் ஈடுபட்டு வருகிறார்.