வடுகப்பட்டி அவலத்தின் பின்னணியில் மீண்டும் கொதிப்பு, கண்டனம், இக்கொடுமைகளுக்கு தீர்வு என்ன என்பது குறித்தும் அலசல். அனைத்துமே ஓரிரு வாரங்களில் நின்றுவிடும். இதுவும் கடந்து போகும் என்ற ரீதியில் அவரவர் அடுத்த பிரச்சினைகளுக்குத் தாவிவிடுவர். அவலங்கள் தொடரும்.
நம் பங்கிற்கு சவுக்கு தளத்தில். ஏன் இப்பிரச்சினை தொடர்கிறது? ஒரே வரியில் விடை – திராவிட இயக்கம். ஒரு வகையில் பெரியாரும் கூட. இது எளிமைப்படுத்தல் அல்ல. கொச்சைப்படுத்தலும் அல்ல. பாரபட்சமற்ற ஆய்வின் முடிவு அப்படித்தான் இருக்கும்.
தலித்துக்களின் அவலம் தொடர திராவிட இயக்கங்கள் ஒரு முக்கிய காரணி என்ற ரீதியில் ஆங்காங்கே பேசப்பட்டாலும், பொதுவாக முற்போக்காளர்களுக்கு அத்தகைய விளக்கம் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்ற அச்சமிருக்கிறது. தவிரவும் திராவிட இயக்கத்தைக் குறை கூறினால், பெரியாரை விமர்சித்தால் எங்கே மீண்டும் பிராமண/மேல் சாதி ஆதிக்கத்திற்கு வழிகோலுவதாகிவிடுமோ என்ற கவலை.
ஆனால் நோய் புரையோடிவிட்டது. இன்னமும் யதார்த்தங்களை மறுப்பதுதான் மேலும் சீரழிவிற்கு வழிசெய்யும். ஆனால் இது சிலருக்குப் புரியாது. அடிப்படைவாதத்தை வளரவிட்டு, குர் ஆனின் பெயரால் அதை நியாயப்படுத்துவது, பின்னர், பயங்கரவாதம் வெடிக்கும்போது காரணங்களை எங்கெங்கோ முஸ்லீம் ஆர்வலர்கள் தேடுவதில்லையா?,. ஸ்டாலினீயத்தின் எதிர்விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் இன்னமும் அதற்கு வால்பிடித்து சமூகத்திலிருந்து அன்னியப்பட்டு நிற்கின்றன்ரே தோழர்கள். அவ்வரிசையில் இடம்பெறுவோரே திராவிட இயக்கத்தினுட்புகுந்த அவலங்களுக்கு சப்பைக்கட்டு கட்டும் அறிவுஜீவிகள்.
பிரச்சினை தந்தை பெரியாரிடமிருந்தே தொடங்கிவிடுகிறது. தலித்துக்கள் குறித்தான அவர் நிலைப்பாடு ஒன்றும் உறுதியானதல்ல. அவர்களுக்கிழைக்கப்படும் அநீதிகளைக் கடுமையாக சாடினார், அவர்களுக்கு விடுதலையில்லாமல் பார்ப்பனரல்லாத தமிழரின்/சூத்திரரின் விடுதலை உறுதிசெய்யப்படமுடியாது என்றார். இது என்னய்யா மதம் விட்டுவிட்டுப் போங்கள் இஸ்லாத்தைத் தழுவுங்கள் என்று கூடச் சொன்னார்.
அதே நேரம் நாம்-அவர்கள் என்ற பாணியில் பலமுறை பேசியிருக்கிறார். திரவிடனே, அல்லது தமிழனே, அதாவது பார்ப்பனல்லாத, முஸ்லீம் அல்லாத, கிறிஸ்துவன் அல்லாத, ஆதி திராவிடன் அல்லாத திராவிடனே, சூத்திரனே என்று எழுதியிருக்கிறார். தலித்துகளுக்குத் தனி இட ஒதுக்கீடு பார்ப்பனரல்லாதோரை பாதிக்கும் எனக்கூறியிருக்கிறார்.
பிராமண ஆதிக்கம் ஒழிந்ததால் தலித்துக்கள் ஒன்றும் ஆனந்தக்கூத்தாடவில்லை ஓர் எசமான் போய் இன்னொரு எசமான் வந்தான் அவ்வளவுதான். அவர்கள் அச்சத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது கீழவெண்மணி.
அங்கெழுந்தது சாதிப்பிரச்சினை அன்று. விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிலவுடைமையாளர்களுக்குமிடையேயான மோதலாகும். ஆனால் பெரியார் எரித்துக்கொல்லப்பட்ட தலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் கொதித்தெழவில்லை. சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர் பி ராமமூர்த்தி பிராமணர் என்பதையும் சுட்டிக்காட்டி, பிராமணரல்லாத நிலவுடைமையாளர்களுக்கெதிரான சதி அச்சம்பவம் என்றும் கூறியிருக்கிறார்.
கீழவெண்மணியில் நீதி என்பதல்லாமல் திமுக ஆட்சிக்கு ஓர் களங்கம் என்பதாகவே அவர் பார்த்திருக்கிறார். ஏதாவது அவப்பெயர் வந்து ஆட்சி கவிழ்ந்து காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டால் பிராமணர்கள் ஏற்றம் பெறுவர் என்று அவர் அஞ்சியிருக்கவேண்டும்.
எனவே நீதி அவருக்குப் பெரிதாகப் படவில்லை அண்ணாவின் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதே அவர் கவலையாயிருந்திருக்கிறது. அதே நோக்கில்தான் கருணாநிதி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி மெல்ல மெல்ல கட்சியை சீரழித்துக்கொண்டிருந்தபோது அவரை வாரி அணைத்து ’நம்மாள் நீ, கவலைப்படாதே,’ என ஆறுதல் சொன்னார்.
பொதுவாகவே பிராமண ஆதிக்கம் தகர்ந்து, அரசியலதிகாரத்தை நோக்கி இடைநிலை சாதியினர் நகர்ந்தபோது, தலித்துக்கள் மீதான அழுத்தம் கூடுவதைக் கண்டும் காணாமல் இருந்தார் அவர். ஆக தட்டிக்கேட்டிருக்கவேண்டியவர் தயங்க, இடைநிலை சாதியினர் தங்கள் பிடியை இறுக்கத்தொடங்கினர்.
இந்திய அரசியல் சட்டப்படி சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் அரசுப்பணிகளிலும் தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. தேர்தல் அரசியலின் விளைவாய் அவர்களது வாக்குக்களும் தேவைப்பட ஏதோ சில சலுகைகள்,
ஏற்கெனவே பெரியாரின் போராட்டங்களின் விளைவாய் தமிழகத்தில் சாதி அடுக்கின் இறுக்கம் தளர்ந்தது, பிராமணர் ஆதிக்கம் முடிவுக்கு வர கீழிருப்போர் மேலே வரத்தொடங்கினர். இவ்வித ஜனநாயகப்படுத்தலின் காரணமாக தலித்துக்கள் பயன்பெற்றனர் அனைத்தும் உண்மையே.
ஆனால் எத்திசையில் திமுக ஆட்சி பயணித்தது என்பதையே நோக்கவேண்டும். அரசு இயந்திரத்தில் பிராமணர்களின் தாக்கம் குறையத்தொடங்கிய அதே நேரத்தில் சாதியை முன்னிலைப்படுத்தி வசதிகளைப் பெருக்கிக்கொள்ள ஒவ்வொருவரும் முயன்றனர்.
கருணாநிதியும் தன் சாதிக்காரர்களான இசை வேளாளர்களை ஊக்குவித்தார். ஆனால் அவர்கள் எண்ணிக்கை குறைவே. அவர்கள் உடைமை சாதியும் அல்ல. எனவே அரசுப்பணிகளில் ஆங்காங்கே இடம் பிடித்ததைத் தவிர அவர்கள் சொல்லிக்கொள்ளும்படியாகப் பயன்பெறவில்லை.
மாறாக ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்த இடைநிலை சாதியினர் வலுப்பெற்றனர். கட்சியையும் ஆட்சியையும் நடத்துவதில் கருணாநிதி ஒரே முறையினைத் தான் கடைபிடித்தார். நீ என்னவேண்டுமானாலும் செய்து கொள், எனக்கு விசுவாசமாக இரு, கட்டவேண்டிய கப்பத்தைக் கட்டிவிடு, அவ்வளவுதான்.
துக்ளக் நாடகத்தில் சோ கூறுவதைப்போல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் ஒரு குறு நில மன்னராயினர், அதே அளவு அதிகாரத்துடன் மாவட்ட செயலர்கள். இவர்களெல்லாம் தங்களைச் சார்ந்தவர்களின் நலனையே போற்றினர், தத்தம் சமூகத்தின் பல்வேறு காழ்ப்புணர்ச்சிகளை சுவீகரித்துக்கொண்டனர். விளைவு சாதி அடுக்கில் கீழிருந்த் தலித்துக்கள் மேலும் நெருக்கடிக்குள்ளாயினர்.
கருணாநிதி தலித்துக்களுடன் திருமண உறவு வைத்துக்கொண்டார், அவர்களுக்கு சில பதவிகளையும் அளித்தார் என்பதெல்லாமும் சரியே. ஆனால் பொருளாதார ரீதியாகக் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் நிகழவில்லை என்பது மட்டுமல்ல சமூக உறவுகள் மேம்படவே இல்லை. சேரிகள் தொடர்ந்தன, பல்வேறு வழிகளின் தீண்டாமையும்.
இன்னமும் சேரிகள், தனி மயானம், தனிப்பாதை, இரட்டைக் குவளை. இவற்றையெல்லாம் நிலை நிறுத்துவதில் இடைநிலை சாதியினரே முக்கிய பங்கு வகிக்கின்றனர். பிரிட்டிஷார் காலத்தில் வழங்கப்பட்ட நிலங்களெல்லாம் விழுங்கப்பட்டுவிட்டன,
ஆனால் ஆர்வலர்களோ பார்ப்பனீயத்தை சாடிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக நினைக்கின்றனர். அது வசதியாக இருக்கிறது அரசியல் கட்சிகளுக்கு.
இடைநிலை சாதியினரை ஓரளவு ஒடுக்கிவைத்தது எம்.ஜி.ஆர் அரசுதான் அவர் காலத்தில் – இப்போது போலத்தான் – வட்டம் மாவட்டமெல்லாம் ரொம்பவும் தலைக்கொழுத்தாடமுடியாது. ஆட்சியருக்கும், காவல்துறை கண்காணிப்பாளருக்கும் கணிசமான சுதந்திரம் இருந்தது. மேலும் பரம்பரை கர்ணம் பதவியையும் அவர்தான் ஒழித்தார். இவ்வாறாக சில தளங்களில் தலித்துக்களுக்கு ஒருவித பாதுகாப்பு கிடைத்தது.
ஆனால் அதே கட்டத்தில்தான் தலித்துக்கள் பெரிய அளவில் இஸ்லாத்தை தழுவத்தொடங்கினர். உலகின் கவனத்தையே மீனாட்சிபுரம் ஈர்த்தது. மிரண்ட எம்ஜிஆர் மதமாற்றப் பணியில் ஈடுபட்டவர்கள் ஓரிருவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்தார். அதே நேரம் மத மாற்றம் என்றவுடன் அதிகாரிகள் அங்கு ஓடிப்போவார்கள், குறைகளை விசாரிப்பார்கள், பாரதூர மாற்றங்கள் நிகழாவிடினும்.ஏதோ சில உருப்படியாக நடக்கும்.
காங்கிரசிற்கே வாக்களித்து வந்த தலித்துக்கள் வாக்களித்து, பின்னர் எம்ஜிஆர் பக்கம் திரும்பியதற்கு சினிமா மோகம் மட்டும் காரணம் அல்ல.
இன்னுஞ்சொல்லப்போனால் புதிதாக அதிகாரம் கைப்பற்றிய இடைநிலையார் இன்னமும் மூர்க்கமாகவே தலித்துக்களை அவமானப்படுத்தினர்
இந்நிலையிலேயே காங்கிரஸ் காலாவதியானது, எம் ஜி ஆர் கொஞ்சம் அனுதாபத்துடன் இருந்தார், எல்லாமாகச் சேர்ந்து தலித்துக்கள் அஇஅதிமுகவிற்கு வாக்கு வங்கியாயினர்.
(இன்றுங்கூட எஞ்சியிருக்கும் காங்கிரஸ் ஆதரவில் ஒரு பகுதி தலித் பகுதியில் இருக்கிறது. அந்த அளவு அவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மீது நம்பிக்கை.)
ஜெயலலிதா ஆட்சியில் தலித்துகளுக்கு மீண்டும் சிக்கல் அதிருப்தி. காரணம் அனைவருக்கும் தெரிந்ததே – சசிகலா குடும்ப ஆதிக்கம் மேலும் ’ஜெ’யின் அகங்காரமும் ஆணவமும் நாம் இப்போது நினைத்ததை செய்யலாம் என்ற ஓர் எண்ணத்தை தேவரின மக்கள் மத்தியில் விதைத்து அவர்கள் சாதிவெறியை மேலும் தூண்டிவிட்டிருக்கிறது.
இன்னமும் ‘நாடு’ எனப்படும் மதுரை-இராமநாதபுரம் பகுதி கிராமங்களில் அம்பலக்காரர்கள் வைத்ததுதான் சட்டம்.
மேற்குப்பகுதியில் கவுண்டர்களின் அராஜகத்திற்கு அளவே இல்லை. இப்போது பாமக நிறுவனர் இராமதாசும் தன் பங்கிற்கு. இளவரசன் – திவ்யா சோகக் கதை குறித்து சம்பிரதாயத்திற்காகக்கூட எக்கட்சி வேதனை தெரிவித்தது? வன்னியர் வாக்குக்கள் வேண்டுமே. இப்படிப்பட்ட சூழலில்தான் வடுகப்பட்டி சம்பவம்.
சரி என்ன செய்யலாம்? 90களுக்கு முன் அரசியலிலிருந்த தலித் தலைவர்கள் பணத்திற்கும், சொகுசிற்கும் பலியானார்கள், தங்கள் சமூகத்தை பலியிட்டார்கள். தேர்தலில் அவர்கள் பெற்றுத்தரக்கூடிய வாக்குக்களைப் பொறுத்து ஊதியம். இப்போதும் அது போன்ற தரகர்கள் இருக்கவே செய்கின்றனர். ஆனால் திருமாவளவன், கிருஷ்ணசாமி வருகைக்குப் பிறகு அவர்களுக்கும் ஏதோ ஓர் அங்கீகாரம் அளிக்கவேண்டியிருக்கிறது. ’முதலில் மைக் பிடித்து முழங்கிவிட்டு, காசு வாங்கிக்கொண்டு போ,’ என்ற நிலை மாறி அவர்களை மதிக்கவேண்டும் என்ற ஒரு சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் அவ்விருவருமே தங்கள் மக்களைக் கைவிட்டுவிட்டார்கள். இதில் பூசி மெழுக எதுவுமே இல்லை.
1999 தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போலீஸ் அராஜகத்தில் சிலர் உயிரிழக்கின்றனர். பெரும் கொந்தளிப்பு உருவாகிறது. அப்போது நலம் விரும்பிகள் சிலர் தேர்தல்களைப் புறக்கணியுங்கள், நீதி கிடைக்கும்வரை போராடுங்கள் என்று சொன்னோம். அவர் கேட்கவில்லையே சடங்கிற்கு ஏதோ கூறிவிட்டு பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். இப்போது மாஞ்சோலையில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஆதரவு எதுவுமில்லை.
கொடியன்குளத்தின் மூலம்தான் அவர் மாநிலமறிந்த தலைவரானார். பின்னர் அவரது மமதை, மேலும் குளறுபடிகள் இவற்றின் விளைவாய் அம்மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டார். 1998ல் தனித்துப் போட்டியிட்டு பலரையும் அதிரச்செய்யும் அளவு ஏழெட்டு தொகுதிகளில் வாக்குக்கள் பெற்றவர் அடுத்த சில ஆண்டுகளிலேயே செல்லாக்காசாகிப்போனார். திருமாவுடன் கூட்டணி அமையுங்கள் எனப் பலர் வலியுறுத்தியும், கேட்காமல் எல்லோருக்கும் நான் தான் பிரதிநிதி என்று வலம்வந்தார்.
கணிசமான எண்ணிக்கையில் மாநிலம் முழுதும் பல்வேறு தொகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர்களின் ஆதரவைப் பெற்ற விடுதலைச் சிறுத்தைகளே நம் வகைத் தேர்தல் அமைப்பில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தமுடியும் என்ற அடிப்படை அரசியல் தெளிவு கூட அவருக்கு இல்லை.
ஓரிரண்டு தேர்தல்களில் ஒரேயடியாக ஓரங்கட்டப்பட்ட பிறகு, மாயாவதி பாணியில், தேவர்களுடன் எனக்கு சிக்கலில்லை என்றார். யார் நம்புவார்கள்.? இப்போது பழைய பாணி தலித் தலைவர்கள்போன்று ஏதோ சில இடங்கள், குறைந்த பட்ச அங்கீகாரம் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். என்ன அவரது தேவேந்திரகுலவேளாளர்கள் பாதிக்கப்படும்போது குரல் எழுப்புகிறார். மற்றபடி செல்வாக்கு என்பது மிகவும் தேய்ந்துவிட்டது.
இன்னொரு பக்கம் திருமாவளவன் ஓரளவு தன்னை நிலைநிறுத்திக்கொண்டுவிட்டாலும், தமிழ்த் தேசியத்தில் தன்னை அதிகமாகவே இழந்து தலித்துக்களின் சிறப்பு பிரச்சினை என வரும்போது அடக்கியே வாசிக்கிறார். அவரது கட்சியினர் கட்டப் பஞ்சாயத்தில் பெயரெடுத்துவிட்டனர், தலித் மக்களுக்கான போராட்டம் என்பது சடங்கு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. அதிகம் சிரமப்படாமல் வளப்படுத்திக்கொண்டால் போதும் என்ற மனநிலையில்தான் பல விடுதலைச் சிறுத்தைகள் மத்தியில் காணப்படுகிறது.
இரு அமைப்புக்களுக்குமே மிக மிகப் பின் தங்கியிருக்கும் அருந்ததியர் நிலை குறித்து அக்கறையே இல்லை. கட்சியில் கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.
இந்நிலையில் அடுத்து என்ன? வடுகப்பட்டி குறித்துக் கொதித்துப் போன ஓர் தலித் ஆர்வலர் மாயாவதி பாணியில் தலித்துக்களும் பிராமணர்களும் கூட்டணி வைக்கவேண்டுமென்றார்.
நான் கடுமையாக முரண்பட்டேன். ஒன்று அது அறமல்ல. அனைத்துவித ஆதிக்கங்களைப் போல பிராமண ஆதிக்கமும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே அது தகர்ந்தது சரியே. ஆனால் அவ்வாதிக்கம் தவறு என்று பிராமணர்களில் சிலரே நினைக்கின்றனர். இன்னும் சிலருக்கு தங்களைப் பற்றிய அதிக பட்ச மதிப்பீடு இருக்கிறது, ஆளப்பிறந்தவர்கள் தாங்கள் என்ற நினைப்பிருக்கிறது அத்தகைய எண்ணங்களை வலுப்படுத்தும் விதமாக எதுவும் நடந்துவிடக்கூடாது. பொருளாதார ரீதியாகப் பின் தங்கியிருக்கும் பிராமணர்களுக்கு சலுகைகள் அளிக்கலாம் ஆனால் பிராமணீய சிந்தனைகள் சமூகத்தில் மீண்டும் பரவக்கூடாது.
யதார்த்தத்திலும் தலித்-பிராமணர் கூட்டணி பயனெதையும் விளைவிக்காது, உத்திரபிரதேசத்தில் பிராமணர்கள் ஏறத்தாழ 12 சதம். அங்கு பெரியார் இல்லை. திராவிட இயக்கமில்லை. மாறக பாஜக இருக்கிறது. பிராமணர்களின் தாக்கம் கணிசமாக இருக்கிறது. அவர்கள் மத்தியில் ரவுடிகள் கூட பலர் இருக்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில் கூட்டணி பயனளிக்கலாம். தமிழகத்தில் மூன்று சதத்திற்கும் குறைவான பிராமணர்களுடன் கூட்டுவைத்து என்ன சாதிக்க,முடியும்? அடாவடிக்குச் செல்லும் துணிச்சலெல்லாம் இல்லை. தேர்தலெல்லாம் ஒத்துவராது. மேலும் பிராமணர்களிலேயே சாதியத்தை வெறுக்கும் பலர் இருக்கின்றனர்.
இதற்கப்பால் அப்படி ஒரு முயற்சி மேற்கொண்டால் பெரியார் பெயரை அழைத்து, ஆஹா நமக்கெதிரான சதி என கருணாநிதியிலிருந்து இராமதாஸ் வரை கூக்குரலிட்டு இப்போது நாம் காணும் தலித் முன்னேற்றத்தையும் காலி செய்துவிடுவார்கள்.
சரி இச்சகதியிலிருந்து மீள வழி இருக்கிறதா? கண்ணியத்துடன், அனைத்துரிமைகளையும் பெற்ற குடிமக்களாக தலித்துக்கள் வாழமுடியுமா?
வாய்ப்புக்கள் மிகக் குறைவே. ஆனாலும் ஆகப்போவது எதுவுமில்லை என்று முடங்குவதும் தவறு. சமூகத்தின் அனைத்து தரப்பினர் மத்தியிலும் தலித் அவலம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் ஒன்றிணைந்து கிராமம் கிராமமாகப் போய் பிரச்சாரம் செய்யவேண்டும். சேரி நிலை குறித்து ஆய்வு நடத்தி நீதி மன்றங்களில் அறிக்கை சமர்ப்பித்து தீர்வு கோரவேண்டும்.
வீரமுழக்கமில்லை. மீசை முறுக்கவில்லை. இப்படி ஒரு ஆலோசனையா என்றால் இன்றைய சூழலில் இது மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன்.
அத்தகைய அணுகுமுற சாத்தியம் என்பது மட்டுமல்ல மிகத்தேவையானதும் கூட.
கானகன்.